ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Turkish crisis and the threat of world war

துருக்கிய நெருக்கடியும், உலக போர் அச்சுறுத்தலும்

Bill Van Auken
15 August 2018

ஏற்கனவே துருக்கியை ஒரு பொருளாதார உருகுதலுக்குத் தூண்டிவிட்டுள்ள அமெரிக்க பொருளாதார தடையாணைகளை இன்னும் மேற்கொண்டு தீவிரப்படுத்துவதற்கான ஓர் அச்சுறுத்தலை செவ்வாயன்று ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்டது.

வாஷிங்டன் கடந்த வெள்ளியன்று துருக்கிய உருக்கு மற்றும் அலுமினியம் மீதான அமெரிக்க இறக்குமதி வரிகளை முறையே 50 சதவீதம் மற்றும் 20 சதவீதமாக இரட்டிப்பாக்கியது. இந்நடவடிக்கை, ஏற்கனவே பல மாதங்களாக வீழ்ச்சி அடைந்து வரும் துருக்கிய செலாவணி லீராவின் மதிப்பு செங்குத்தாக 20 சதவீதம் வீழ்ச்சி அடைய இட்டுச் சென்றதுடன், துருக்கிய உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரங்களை ஒன்றுமில்லாது ஆக்கி வருகின்ற பணவீக்க தள்ளாட்டத்தைத் தூண்டிவிட்டுள்ளது.

நேட்டோ கூட்டணியில் வேறெந்தவொரு உறுப்பு நாட்டையும் விட துருக்கியில் தான் அதிக அமெரிக்க துருப்புகளைக் கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனைப் பதவியிலிருந்து தூக்கியெறிய முனைந்து கருக்கலைக்கப்பட்ட 2016 ஜூலை இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புச் சதியை ஒழுங்கமைத்தவர்களுடன் உடந்தையாய் இருந்ததாக குற்றச்சாட்டப்பட்டு அந்தாண்டு கைது செய்யப்பட்ட எவங்கேலிய அமெரிக்க மதபோதகர் ஆண்ட்ரூ புரூசன் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டிருப்பது தான், வாஷிங்டனின் சமீபம் வரையிலான இந்த நேட்டோ கூட்டாளி மீதான தண்டிக்கும் வகையிலான தாக்குதலுக்குப் சாக்குபோக்காக உள்ளது.

“நிர்வாகம் இந்த விடயத்தில் முற்றிலும் உறுதியாக நிற்க இருக்கிறது. பாஸ்டர் புரூன்சனை நாட்டிற்குத் திரும்ப கொண்டு வர ஜனாதிபதி 100 சதவீதம் பொறுப்பேற்றுள்ளார், அடுத்த ஒருசில நாட்களில் அல்லது ஒரு சில வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் ராய்டர் செய்தி நிறுவனத்திற்குக் கூறினார்.

புரூன்சன் கதி மீதான பகிரங்கமான கோபம் கிறிஸ்துவ வலது அடித்தளத்திற்கு முறையிடும் ட்ரம்பின் உள்நாட்டு அரசியல் திட்டநிரலுக்குச் சேவையாற்றுகின்ற அதேவேளையில், துருக்கிய பொருளாதாரத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடிகளுக்குக் கொண்டு வருவதற்கான முனைவின் நிஜமான நோக்கங்கள் என்னவென்றால் வர்த்தக போர், பொருளாதார தடையாணைகள் மற்றும் நேரடி இராணுவ மோதல் வழிவகைகள் மூலமாக அதன் எதிரிகள் மற்றும் கூட்டாளிகளாக கூறப்படுபவர்கள் இருதரப்பினரின் முதுகில் அதன் சொந்த நெருக்கடியைச் சுமத்தும் முயற்சியில் தங்கியுள்ளது.

அமெரிக்க மிரட்டல்வாதி ட்ரம்ப், உலகின் ஒவ்வொரு அரசையும் வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்காவை மையமாக கொண்ட பன்னாட்டு பெருநிறுவனங்களின் நலன்களுக்கு அடிபணிய செய்வதற்காக, அச்சுறுத்துவதை முயன்று வருகிறார்.

கடந்த மாதம் துருக்கிய லீராவைக் சரியச் செய்த தடையாணைகள் மட்டுமல்ல, ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜேர்மனி ஆகிய P5+1 உடனான 2015 ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை அமெரிக்க தன்னிச்சையாக கைவிட்டதை அடுத்து ஈரானுக்கு எதிராகவும் புதிய தடையாணைகள் திணிக்கப்பட்டன. இதற்கும் கூடுதலாக ஈரானிய எரிசக்தி ஏற்றுமதிகள் மற்றும் வங்கித்துறை மீதான தண்டிக்கும் வகையிலான தடையாணைகளும் நவம்பரில் இருந்து தொடங்கப்பட உள்ளன.

இதேபோல முன்னாள் ரஷ்ய உளவாளி சேர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவர் மகள் மீது பிரிட்டனில் சாலிஸ்பரி நகரில் நடந்த விஷவாயு தாக்குதல் சம்பவம் சம்பந்தமாக ரஷ்யா மீதும் தடையாணைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த விவகாரத்தில் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ரஷ்ய அரசாங்கம் மறுத்துள்ள நிலையில், அதை நிரூபிக்க எந்த விதத்திலும் எந்த குறிப்பிடத்தக்க ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை. ஈரான் விவகாரம் சம்பந்தமாக, ரஷ்யா இந்தாண்டு இறுதியில் கூடுதல் தடையாணைகளுக்கான சாத்தியக்கூறை முகங்கொடுக்கிறது.

ரஷ்ய பிரதம மந்திரி டிமிட்ரி மெட்வடெவ் கடந்த வெள்ளியன்று குறிப்பிடுகையில், ரஷ்ய வங்கித்துறை நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள முறைகள் "பொருளாதார போர் பிரகடனத்திற்கு நிகரானது" என்பதோடு, “பொருளாதார வழிவகைகள், அரசியல் வழிவகைகள் மற்றும் அவசியமானால் ஏனைய வழிவகைகளைக் கொண்டும் ஒரு விடையிறுப்பு" காட்டப்படும் என்று எச்சரித்தார்.

துருக்கி மீதான தாக்குதல், ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிராக எடுக்கப்பட்டு வருகின்ற அதிகரித்தளவில் ஆக்ரோஷமான அமெரிக்க முறைமைகளுடன் பிணைந்துள்ளன. எர்டோகன் அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கை மத்திய கிழக்கிலும் இன்னும் பரந்தளவில் யூரேஷியாவிலும் அமெரிக்க புவிசார் மூலோபாய நோக்கங்களைக் குறுக்காக வெட்டியுள்ளது.

அங்காரா அதன் தெற்கு எல்லையில் அதன் நலன்களைப் பின்தொடர்வதற்கு அனுமதிக்கும் வகையில், சிரியா சம்பந்தமாக அது ரஷ்யா மற்றும் ஈரான் இரண்டுடனும் ஓர் ஏற்பாட்டை எட்டியுள்ளது. அதே நேரத்தில், எதற்கு எதிராக அங்காரா ஒரு நீடித்த மற்றும் இரத்தந்தோய்ந்த கிளர்ச்சி-தடுப்பு நடவடிக்கையை நடத்தி உள்ளதோ அந்த துருக்கிய குர்திஷ் PKK இன் ஒரு துணை அமைப்பான சிரிய குர்திஷ் YPG இராணுவ போராளிகள் குழுக்களை அமெரிக்கா அதன் பிரதான பினாமி தரைப்படையாக பயன்படுத்தி வருகின்ற நிலையில், அமெரிக்காவுடன் துருக்கி இராணுவ மோதலின் விளம்புக்கு வந்துள்ளது.

இதற்கிடையே, துருக்கிய அரசாங்கம் ரஷ்யாவிடம் இருந்து நவீன S-400 ஏவுகணை அமைப்புமுறையைக் கொள்முதல் செய்யும் திட்டங்களை வெளியிட்டுள்ளது, இவை அடுத்த ஆண்டு வழங்கப்படலாம் என்கின்ற நிலையில், இது நேட்டோ ஏகவுணை-தடுப்பு முறைக்கு எதிராக அமைந்துள்ளது.

இறுதியாக, துருக்கியின் எரிசக்தி இறக்குமதிகளின் பிரதான ஆதாரமாக உள்ள ஈரானுக்கு எதிராக வாஷிங்டன் திணித்து வருகின்ற தன்னிச்சையான தடையாணைகளுக்குக் கட்டுபடும் எந்த எண்ணமும் அதற்கு இல்லை என்பதை அங்காரா சமிக்ஞை செய்துள்ளது. அதேவேளையில், ட்ரம்ப் அவரின் சமீபத்திய ட்வீட் செய்தியில், “ஈரானுடன் வியாபாரம் செய்யும் எவரொருவரும், அமெரிக்காவுடன் வியாபாரம் செய்ய முடியாது,” என்று சமிக்ஞை செய்திருந்தார்.

இத்தகைய இதே சர்வதேச மோதல்கள் தான், குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கிய துருக்கியின் நெருக்கமான உறவுகள், எர்டோகனுக்கு எதிராக தோல்வியடைந்த, ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்த போது தொடங்கப்பட்ட, ஜூலை 2016 இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு அமெரிக்காவும் அத்துடன் ஜேர்மனும் ஆதரவளித்ததற்கான காரணமாக இருந்தது.

மிரட்டல்வாதி ட்ரம்ப் ஏதோவொரு விசித்திரமான தனித்த சம்பவம் இல்லை, மாறாக தனது நலன்களைப் பின்பற்றுவதற்காக உலக வரலாற்று குற்றங்களை நடத்துவதற்குத் தயாரிப்பு செய்து வரும் ஓர் ஒட்டுண்ணித்தனமான அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டுக்களின் திட்டவட்டமான முகமாக விளங்குகிறார்.

துருக்கி விடயத்தில், அந்நாட்டின் நெருக்கடியில் சிக்கிய பொருளாதாரத்தை விளிம்பிற்குத் தள்ளுவது அமெரிக்கா மீது நேரடியாக மிகச் சிறிய தாக்கத்தையே கொண்டிருக்கும் என்று வாஷிங்டன் கணக்கிடுகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. துருக்கி அமெரிக்க பண்டங்களுக்கான வெளிநாட்டு சந்தைகளில் 28 வது இடத்தில் உள்ளது, இந்தாண்டின் முதல் பாதியில் அமெரிக்க ஏற்றுமதிகளில் வெறும் 0.6 சதவீதம் மட்டுமே கணக்கில் கொண்டிருந்தது. இந்தாண்டின் முதல் காலாண்டு முடிவில் அமெரிக்க வங்கிகள் துருக்கிய கடனில் வெறும் 38 பில்லியன் டாலர் மட்டுமே கொண்டிருந்தன.

இதற்கு நேரெதிர் விதமாக, ஸ்பானிய, பிரெஞ்சு மற்றும் இத்தாலிய வங்கிகள் முறையே 83.3 பில்லியன் டாலர், 38.4 பில்லியன் டாலர் மற்றும் 17 பில்லியன் டாலரைத் துருக்கிக்குக் கடனாக வழங்கி உள்ளன.

துருக்கிய நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பரவுவதற்கான சாத்தியக்கூறை அமெரிக்க ஏகாதிபத்தியம் வரவேற்காமல் இருக்காது, அது ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு மூலோபாய போட்டியாளராக காண்கிறது. இதற்கிடையே, துருக்கிய லீராவின் சரிவானது எழுச்சி பெற்று வரும் சந்தை பொருளாதாரங்கள் என்றழைக்கபடுபவை எங்கிலும் துணைவிளைவுகளை ஏற்படுத்தி உள்ளது, இந்தியாவில் இருந்து மெக்சிகோ மற்றும் தென் ஆபிரிக்கா வரையில் செலாவணிகள் மறுமதிப்பு பெற்றுள்ளன.

துருக்கி எதிர்கொள்ளும் இதேபோன்ற நிலைமைகளின் கீழ் உலகளாவிய சந்தைகளைச் சமாதானப்படுத்தும் ஒரு முயற்சியில் கடந்த காலத்தில் வாஷிங்டன் தலையீடு செய்திருந்த போதினும்—பொதுவாக இது IMF இன் "மறுகட்டுமான" திட்டங்கள் திணிக்கப்படுவதுடன் இணைந்திருக்கும்—இம்முறையோ வாஷிங்டன் வேண்டுமென்றே இந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்த முனைந்துள்ளதாக சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் குறிப்பு காட்டுகின்றனர்.

பெருமந்தநிலை வெடிப்பதற்கு ஓராண்டு முன்னதாக, 1928 இல் அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கையைப் பகுத்தாராய்ந்து லியோன் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எச்சரித்தார்: “வளர்ச்சிக் காலக்கட்டத்தை விட, நெருக்கடி காலக்கட்டத்தில் தான், அமெரிக்க மேலாதிக்கம் இன்னும் அதிக முழுமையாகவும், இன்னும் அதிக பகிரங்கமாகவும், இன்னும் ஈவிரக்கமின்றியும் செயல்படும். அமெரிக்கா அதன் சிக்கல்கள் மற்றும் குழப்பங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும், அவற்றைக் கடந்து வரவும், இது ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவிலேயே நடந்தாலும் சரி, இது சமாதானமான முறையில் அல்லது போர் மூலமாக நடந்தாலும் சரி, அது ஐரோப்பாவை விலையாக கொடுக்க முனையும்.”

கடந்த உலகளாவிய நிதியியல் நெருக்கடி வெடித்து ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், 2008 சந்தை உருகுதலை உருவாக்கிய இந்த இலாபகர அமைப்புமுறையின் அனைத்து முரண்பாடுகளும் தீவிரமடைந்து மட்டுமே உள்ளன. உலகளாவிய பொருளாதாரத்திற்கும் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான தீர்க்கவியலாத முரண்பாடு, இது கடந்த மூன்று தசாப்தங்களில் பூகோளமயப்பட்ட உற்பத்தியால் பாரியளவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உலகளாவிய வர்த்தக போரால் குணாம்சப்பட்ட, போருக்கு முந்தைய ஒரு புதிய காலக்கட்டத்திற்கும், இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய கூட்டணியின் உடைவுக்கும் மற்றும் இராணுவவாதத்தின் வளர்ச்சிக்கும் உயர்வளித்து வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் பின்பற்றும் ஈவிரக்கமற்ற மற்றும் அழிவுகரமான கொள்கைகள் அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் அளப்பரிய சமூக பதட்டங்கள் மற்றும் வர்க்க போராட்டத்தின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து வருகிறது. இதில் தான், அதிகரித்து வரும் வர்த்தக போர் அச்சுறுத்தல் மற்றும் ஒரு புதிய உலக போருக்குத் தூண்டுதல் அளிக்கும் உலகெங்கிலுமான பல்வேறு இராணுவ மோதல்களுக்கு ஒரே நம்பகமான பதில் தங்கியுள்ளது. தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்டு ஒரு சர்வதேச, சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதே தீர்க்கமான கேள்வியாகும்.