ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Ryanair pilots stage European-wide strike

ரைன்எயர் விமானிகள் ஐரோப்பா-தழுவிய வேலைநிறுத்தத்தில் இறங்கினர்

By Marianne Arens and Robert Stevens
11 August 2018

அயர்லாந்து டப்ளினை மையமாக கொண்ட மலிவு-கட்டண விமானச்சேவை ரைன்எயர் நிறுவனத்தின் விமானிகள், வேலையிட நிலைமைகளை மேம்படுத்த கோரி, அயர்லாந்து, பெல்ஜியம், ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் ஜேர்மனியில் வெள்ளியன்று வேலைநிறுத்தத்தில் இறங்கினர், அதாவது, நிறுவனத்தின் செயல்பாட்டில் உள்ள 2,400 ஐரோப்பிய விமானங்களில் 400 ஐ குறைக்க இது நிறுவனத்தை நிர்பந்திக்கும்.

ஐரோப்பிய விமானச் சேவை தொழில்துறையிலேயே மிகவும் மலிவூதியம் வழங்குவது மற்றும் மிகவும் சுரண்டலான வேலையிட நிலைமைகளை வழங்குவதைச் சுற்றி வணிக உத்தியை வகுத்துள்ள ரைன்எயர், ஒட்டுமொத்த விமானச்சேவை தொழில்துறை எங்கிலும் பல ஆண்டுகளாக கூலிகள் மற்றும் சலுகைகளை வெட்டுவதற்கு முன்மாதிரி வரம்புகளை அமைத்துக் கொடுத்துள்ளது.


பிராங்பேர்ட்டில் ரைன்எயர் விமானிகள்

ரைன்எயர் செயல்பட்டு வரும் 10 இல் ஒன்பது விமான நிலையங்களில் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், ஜேர்மனியில் தரையிறங்கும் மற்றும் புறப்படும் சுமார் 250 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. பெல்ஜியத்தில் தரையிறங்கும் மற்றும் புறப்படும் 104 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், அந்த விமானச் சேவை நிறுவனத்தின் தலைமையகமான அயர்லாந்திலும் மற்றும் ஸ்வீடனிலும் மேலும் 42 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

இந்த வேலைநிறுத்தம் விமானச் சேவை தொழிலாளர்களிடையே பரந்த ஆதரவைக் கண்டது. ஜேர்மனியின் பிராங்க்ஃபேர்ட் விமான நிலையத்தில், “ரைன்எயர் வேலைநிறுத்தமும், சர்வதேச வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியும்" என்ற அறிக்கையை உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்கள் வினியோகித்தனர். அங்கே பல விமான நிலைய தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்திற்கான அவர்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.

“நிச்சயமாக நான் இந்த வேலைநிறுத்தத்தை ஆதரிக்கிறேன்,” என்று ரைன்-மெயின் விமான நிலையத்தில் சரக்கு கையாளும் நிறுவனமான Fraport AG இல் பணியாற்றும் ஜூட்டா தெரிவித்தார். “இது நீண்ட தாமதத்திற்குப் பின் நடக்கிறது! பணியாளர்கள் மனிதநேயத்துடன் நடத்தப்பட வேண்டும்,” என்றார். “எப்போதுமே இலாபத்திற்காக என்றிருக்கக் கூடாது. அனைத்து வேலைகளுக்கும் பின்னால் இருப்பவர்களைக் குறித்தும் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருப்பவர்களைக் குறித்தும் யார் நினைத்து பார்க்கிறார்கள்? முதலாளிமார்களுக்கு நிறைய பணம் சேர்த்து கொண்டே இருக்க வேண்டும், ஆனால் அதுவும் விமானிகள், சிப்பந்திகள் மற்றும் எல்லா பணியாளர்களையும் விலையாக கொடுத்து.”

விமானச் சேவை தொழிலாளர் சக்தி மீதான அழுத்தம் அதிகரித்து கொண்டே செல்கிறது என்று கூறிய ஜூட்டா, “இது வெறுமனே ரைன்எயர் இல் மட்டுமல்ல. அவர்கள் இந்த தரமுறையைக் கீழ்நோக்கி ஒவ்வொருவருக்கும் அழுத்தமளிப்பதை நீங்கள் பார்க்கலாம். 'பேராசை நல்லது' என்ற மனோநிலையை ஒவ்வொரு இடத்திலும் பார்க்க முடிகிறது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

விமான நிலையத்தில் சரக்கு கையாளும் பிரிவில் உள்ள முஸ்தபா கூறுகையில், அவர் "இந்த வேலைநிறுத்தம் மீது மிகப்பெரும் அனுதாபம்" கொண்டிருப்பதாக தெரிவித்தார். இது "அவர்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதற்கு ஒரு தெளிவான அறிகுறி. எப்போதும் இப்படியே போய் கொண்டிருக்க முடியாது.” பிராங்க்ஃபேர்ட் விமான நிலையத்தில், “மிக மிக குறைந்த நபர்களைக் கொண்டு மிக மிக அதிகமான வேலைகள் செய்யப்படுகிறது,” என்று கூறிய முஸ்தபா, “வேலைநிறுத்தம் செய்ய உரிமை உள்ளது ஆகவே எல்லா வேலைகளையும் செய்யும் இவர்களும் தங்களின் கோரிக்கைகளுக்கு அழுத்தமளிக்க முடியும்,” என்று கூறி நிறைவு செய்தார்.

தொழிலாளர்கள் இடையே வேலைநிறுத்த நடவடிக்கைக்கு பரந்த ஆதரவு இருக்கும் நிலையில், அதற்கு முரண்பட்டரீதியில் தொழிற்சங்கங்களோ அந்த வேலைநிறுத்தத்தை வீணடிக்கவும் மற்றும் நிறுவனத்தின் மீது அது எந்த ஆழ்ந்த தாக்கமும் ஏற்படுத்தாதவாறு தடுக்கவும் எல்லாவற்றையும் செய்துள்ளன. இந்த தொழில்துறை நடவடிக்கைக்கு மத்தியிலும், 85 சதவீத விமானங்கள் உரிய நேரத்திற்குப் பறக்க விடப்பட்டதாக ரைன்எயர் அறிவிக்கிறது.

நெதர்லாந்தில் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட, அங்கே தரையிறங்கும் மற்றும் புறப்படும் விமானங்களில் எதுவுமே இரத்து செய்யப்படவில்லை என்று ரைன்எயர் தெரிவித்தது. அந்நிறுவனம் அதிக விமானிகளைப் பயன்படுத்தும் மூன்று நாடுகளான இங்கிலாந்து (880), இத்தாலி (829) மற்றும் ஸ்பெயினின் (859) தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தம் செய்து வரும் சக-தொழிலாளர்களுக்கு ஆதரவாக எந்த நடவடிக்கைக்கும் அழைப்பு விடுக்கவில்லை. இதேபோல, ரைன்எயர் விமானச் சிப்பந்திகளை பிரதிநிதித்துவம் செய்யும் சங்கங்களும் விமானிகளுக்கு ஆதரவாக ஒரு சுண்டுவிரலைக் கூட உயர்த்தவில்லை.

இங்கிலாந்து மற்றும் இத்தாலியில், ரைன்எயர் கடந்த எட்டு மாதங்களில் முறையே பிரிட்டிஷ் ஏர்லைன் விமானிகள் அமைப்பு (BALPA) மற்றும் இத்தாலிய விமானிங்கள் சங்கமான ANPAC உடன் சங்க அங்கீகரிப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்தி கொண்டுள்ளது.

அதன் செயல்பாடுகளில் செலவுகளை அதிகரிக்கும் சங்க உடன்பாடுகளை அது எதிர்பார்க்கவில்லையென குறிப்பிட்ட ரைன்எயர், அதன் செயல்பாடுகளை விரிவாக்கி இலாபத்தை அதிகரிக்கும் திட்டங்களை விவரித்து, கடந்த டிசம்பரில் சங்கங்களை அங்கீகரிக்க உடன்பட்டது. தொழிற்சங்கங்கள் உடனான "பங்காண்மையில்" ரைன்எயர் அதன் சுரண்டலுக்கான தொழிலாளர் நடைமுறைகளைத் தொடரும் என்று கூறிய ரைன்எயர் இன் "தலைமை மக்கள் அதிகாரி" எட் வில்சன், “இது முன்மாதிரியின் முடிவல்ல. இந்த முன்மாதிரி இதே விதத்தில் இங்கே நிலைத்திருக்கும்,” என்றார்.

ஜனவரியில் முதல் ரைன்எயர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு, BALPA சங்க பொதுச் செயலாளர் பிரைன் ஸ்ட்ரூட்டன் கூறுகையில் சங்கம் நிறுவனத்துடன் நல்லதொரு உறவை எதிர்நோக்குவதாக தெரிவித்தார். “தொழிற்சங்கங்களுடன் முன்னர் ரைன்எயர் க்கு விரோதங்கள் இருந்த நிலையில், இன்றைய உடன்படிக்கை வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. எங்களுக்கும் மற்ற தொழிற்சங்கங்களுக்கும் ரைன்எயர் அங்கீகாரம் வழங்குவதில் அதன் நேர்மை குறித்து ஆரம்பத்தில் எங்களுக்கு ஐயப்பாடு இருந்த போதும், அவர்களுடனான எங்களின் உரையாடல்களும் சந்திப்புகளும், அவர்கள் உண்மையிலேயே ஓர் ஆக்கபூர்வமான தொழிற்சங்க உறவை விரும்புகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டின,” என்றார்.

வேலைநிறுத்தங்கள் நடக்கும் நாடுகளது விமானிகளின் சங்கங்கள், கடைசித் தருணத்தில் கூட திட்டமிட்ட வேலைநிறுத்தத்தை நடக்காதவாறு செய்ய முனைந்தன.

ரைன்எயரின் 50 விமானிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் டச்சு விமானிக்களின் அமைப்பான VNN, விமானச் சேவை நிறுவனத்துடன் ஓர் உடன்படிக்கை எட்டுவதில் தோல்வியடைந்த பின்னர், வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் அது இணைவதாக வியாழனன்று அறிவித்தது. கடைசி நிமிடத்தில் சட்ட நடவடிக்கை எடுத்ததன் மூலமாக ரைன்எயர் எந்தவொரு வேலைநிறுத்தத்தையும் தடுக்க முயன்றது. ரைன்எயரின் இந்நகர்வு அதற்கு ஆச்சரியமளிப்பதாக VNV தெரிவித்தது, ஏனென்றால் அந்த கட்டத்தில் உண்மையில் அது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கவே இல்லை.

ஜேர்மனியில், வேலைநிறுத்தம் எங்கே அவர்களின் கட்டுப்பாட்டை மீறி தீவிரமடைந்து, ரைன்எயர் விமான சிப்பந்திகள் மற்றும் விமான நிலைய பணியாளர்களின், அத்துடன் ஒட்டுமொத்த விமானச் சேவை தொழில்துறை எங்கிலும் ஈர்ப்பு மையமாக மாறிவிடுமோ என்பதே தொழிற்சங்க தலைவர்களின் மிகப்பெரிய அச்சமாக உள்ளது.

ஜேர்மனியில் Vereinigung Cockpit (VC) சங்கம் அங்குள்ள ரைன்எயரின் 10 மையங்களில் எந்த ஒன்றிலும் எந்தவொரு மறியலோ அல்லது போராட்டங்களை ஒழுங்கமைக்கவோ மறுத்தது. அதற்கு பதிலாக, அச்சங்கம் விமான நிலையத்திலிருந்தும் மற்றும் பிற விமானச் சேவைகளில் பணியாற்றும் ரைன்எயர் விமானிகளின் சக தொழிலாளர்களிடமிருந்தும் வெகு தூரத்தில் பிராங்க்ஃபேர்ட் தலைமையகங்களின் கட்டிட கீழ்த்தளத்தில் ஒரு "கூட்டத்தில்" கலந்து கொள்ளுமாறு அதன் அங்கத்தவர்களுக்கு அழைப்புவிடுத்தது.

கட்டிடத்தின் கீழ்த்தள கூட்டம் நாடகபாணியில் ஒரு புகைப்பட வாய்ப்பு என்பதை விட வேறொன்றுமாக இருக்கவில்லை, அங்கே சங்க நிர்வாகிகள் அவர்களின் சொந்த அங்கத்தவர்களைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு அவர்களால் ஆனமட்டும் செய்தனர். உலக சோசலிச வலைத் தளத்தின் பிரதிநிதிகள் அங்கிருந்த சங்க அங்கத்தவர்களுக்குத் துண்டறிக்கைகள் வழங்குவதில் இருந்து தடுக்கப்பட்டனர். தொழிலாளர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் பத்திரிகைகளிடம் பேசக் கூடாது, சங்கத்தின் பத்திரிகை தொடர்பு செய்தியாளர் மட்டுமே அதை செய்வார் என்று தொழிற்சங்க பிரதிநிதிகள் மீண்டும் மீண்டும் தொழிலாளர்களுக்குக் கூறியிருந்தனர்.*


பிராங்ஃபேர்ட் Cockpit தலைமையகத்தின் அடித்தளத்தில் "கூட்டம்"

அச்சங்கத்தைப் பொறுத்த வரையில், அக்கூட்டம் வெறுமனே ரைன்எயர் உடன் அதன் "பங்காண்மையை" மீண்டும் வலியுறுத்துவதற்கு ஒரு வழிவகையாக சேவையாற்றியது. Vereinigung Cockpit சங்கத்தின் தலைவர் மார்ட்டீன் லூச்சர், “இந்த தேவையற்ற வேலைநிறுத்தம்,” குறித்து பேசியிருந்த ரைன்எயர் விளம்பரப் பிரிவு தலைவர் கென்னி ஜாகொப்ஸ் கூறியதை மேற்கோளிட்டு காட்டியதுடன், அவர் "இத்துடன் நூறு சதவீதம்" உடன்படுவதாக தெரிவித்தார். இது "கூடி அமர்ந்து ஆக்கபூர்வமாக பேசுவதற்கு" “நிறைய அர்த்தத்தைக் கொண்டுள்ளது,” என்று லூச்சர் தெரிவித்தார்.

ஓர் ஐரோப்பா-தழுவிய வேலைநிறுத்தம் அபிவிருத்தி அடைவதைத் தடுக்க தொழிற்சங்கங்களின் முயற்சிகளை, ரைன்எயர் அதன் தலைமையகத்தைக் கொண்டுள்ள அயர்லாந்திலும் காண முடிந்தது.

அயர்லாந்தை மையமாக கொண்ட ரைன்எயர் விமானிகளில் சிலரைப் பிரதிநிதித்துவம் செய்யும் FORSA சங்கம், தொழில்துறை உறவுகளில் ரைன்எயரின் "அனுபவமின்மையால்" இது ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தது, அதாவது தொழிலாளர் சக்தி மீது போலிஸ் வேலை செய்ய தொழிற்சங்க அதிகாரத்துவம் மீது அதற்கு இன்னும் போதுமானளவில் நம்பிக்கை இல்லை, இது தான் அதன் உறுப்பினர்களின் ஐந்தாவது ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு இட்டுச் சென்றுள்ளது என்றாகிறது. FORSA இன் பாகமாக உள்ள அயர்லாந்து விமானச் சேவை விமானிகளின் அமைப்பு (IALPA) அயர்லாந்தை மையமாக கொண்ட ரைன்எயர் விமானிகளில் சுமார் ஒரு கால்வாசி பேரை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்கிறது—ஏனென்றால் அயர்லாந்தில் அந்நிறுவனம் அதன் செயல்பாடுகளில் பெரும்பான்மையை மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மூலமாக நியமிக்கப்படும் விமானிகளைப் பயன்படுத்தியே செயல்படுத்துகிறது.

மத்தியஸ்தர் Kieran Mulvey இன் கீழ், IALPA அடுத்த வாரம் ரைன்எயர் உடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பேச்சுவார்த்தைகள் நடக்க இருப்பதால், வேலைநிறுத்தங்களுக்கு மேற்கொண்டு எந்த திட்டங்களும் இல்லையென IALPA அறிவித்தது.

அவர்களின் போராட்டத்தைத் தொழிற்சங்கங்கள் நாசப்படுத்துவதை ரைன்எயர் தொழிலாளர்கள் அனுமதிக்கக் கூடாது. அவர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து விரிவாக்க, சுயாதீனமான வேலையிட குழுக்களை அமைக்க வேண்டும். அவர்கள், தொழிற்சங்கங்களின் தேசியவாத குறுகிய மனோபாவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக போராடுவதற்கு, மற்ற எல்லா இடங்களின் மற்றும் எல்லா விமானச் சேவை நிறுவனங்களின் தொழிலாளர்களையும் தொடர்பு கொள்ள வேண்டும்.