ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump cancels secretary of state’s trip to North Korea one day after its announcement

வட கொரியாவிற்கு அமெரிக்க தேசியச் செயலர் விஜயம் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒரே நாளில் ட்ரம்ப் அதை ரத்து செய்தார்

By Ben McGrath 
25 August 2018

வெள்ளியன்று, பியோங்யாங்கின் அணுவாயுத ஒழிப்பில் காணப்படும் மந்தத் தன்மையைக் குறிப்பிட்டு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தேசியச் செயலர் மைக் பொம்பியோ அடுத்த வாரம் வட கொரியாவிற்கு மேற்கொள்ளவிருந்த நான்காவது விஜயத்தை ரத்து செய்தார். பொம்பியோ அவரது விஜயம் பற்றி அறிவித்து பின்னர் ஒரே நாளில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, ட்ரம்ப் நிர்வாகத்தின் முன் கணிக்கவியலாத தன்மையையும், முக்கியமாக சீனாவைக் குறிவைத்து வடகிழக்கு ஆசியப் பகுதியில் பதட்டங்களைத் தொடர்ந்து கடுமையாக அதிகரிக்கச் செய்வதையும் எடுத்துக்காட்டுகிறது.

ட்விட்டரில் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டார்: “கொரிய தீபகற்பப் பகுதியின் அணுவாயுத ஒழிப்பு தொடர்பாக போதுமானளவு முன்னேற்றத்தை நாம் இன்னும் எட்டவில்லை என்றே நான் கருதுகிறேன் என்பதால், இந்த நேரத்தில் வட கொரியாவிற்குச் செல்லவேண்டாமென வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவை நான் கேட்டுள்ளேன்.”

சமீபத்திய வாரங்களில் இந்தப் பிரச்சினை குறித்து வெளிப்படையான முன்னேற்றமில்லாநிலை எட்டப்பட்டுள்ளது என்ற போதிலும், உண்மையில் அணுவாயுத ஒழிப்பு நடவடிக்கைகளை வட கொரியா மேற்கொண்டுள்ளது என்று திங்களன்று ராய்ட்டர்ஸ் பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில் ட்ரம்ப் தெரிவித்தார் என்ற நிலையில், தற்போதைய இந்த நடவடிக்கை அவரது மற்றொரு முகத்தைக் காட்டுவதாகவே உள்ளது. இருப்பினும், அணுவாயுதம் மற்றும் ஏவுகணைச் சோதனைகளை நிறுத்துவதற்கு பியோங்யாங் முன்னரே ஒப்புக்கொண்டு, ஏவுகணைச் சோதனைத் தளம் ஒன்றை அகற்றவும் தொடங்கியுள்ளது என்பதுடன், எஞ்சிய அமெரிக்க துருப்புகளை திருப்பியனுப்பியும் உள்ளது.

ஆனால், பியோங்யாங் அணுவாயுத ஒழிப்பை முற்றிலுமாக மேற்கொள்ளும் வரை, பொருளாதாரத் தடைகளை தளர்த்துவது மற்றும் 1950-1953 கொரியப் போரை முடிவுக்கு கொண்டுவர ஒரு சம்பிரதாயப்பூர்வமான அறிவிப்பை விடுப்பது உள்ளிட்ட பியோங்யாங்கின் கோரிக்கைகளில் எதையும் ஏற்றுக்கொள்ள வாஷிங்டன் மறுத்துவிட்டது. குறுகிய காலத்தில், அதாவது ஆறு முதல் எட்டு மாத காலத்திற்குள் அதன் 60 முதல் 70 சதவிகித அணுவாயுதங்களை ஒப்படைக்குமாறு வட கொரியாவிற்கு அமெரிக்கா அழைப்புவிடுத்துள்ளது. ஜூலையில் பொம்பியோ வட கொரியாவிற்கு விஜயம் செய்திருந்தபோது, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவர் மேற்கொண்ட “குண்டர்கள்-போன்ற” அவரது அணுகுமுறை குறித்து வெளியுறவுத்துறை செயலரை ஸ்ராலினிச ஆட்சி கண்டனம் செய்தது.

பொம்பியோவின் விஜயத்தை ரத்து செய்த அதே டவீட்டுக்களில், வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இடையே வளர்ந்துவரும் வர்த்தகப் போருடன் வட கொரியாவை இணைப்பது குறித்து ட்ரம்ப் சீனாவையும் கண்டித்தார். “கூடுதலாக, சீனாவுடனான எங்களது மிகக் கடுமையான வர்த்தக (உள்ளவாறே) நிலைப்பாட்டினால், அவர்கள் ஒருமுறை நடந்துகொண்டதைப் போல, அணுவாயுத ஒழிப்பு நடைமுறைக்கு இப்போதும் அவர்கள் உதவுகிறார்கள் என்று நான் நம்பமாட்டேன்” என்றும் ட்வீட்டில் அவர் குறிப்பிட்டார்.

வேறுவிதமாகக் கூறுவதானால், அமெரிக்கக் கோரிக்கைகளுக்கு அடிபணியச் செய்ய வட கொரியாவிற்கு மேலும் அழுத்தம் கொடுப்பதற்காக மட்டும் இந்தப் பயண ரத்தை ட்ரம்ப் பயன்படுத்தவில்லை, மாறாக, வர்த்தகம் தொடர்பான அமெரிக்க உத்தரவுகளை ஒப்புக்கொள்ளுமாறு பெய்ஜிங்கை நிர்ப்பந்திக்கவும் தான் அவர் அதைச் செய்தார். மேலும், “சீனாவுடனான எங்களது வர்த்தக உறவுக்கு தீர்வு காணப்பட்டவுடன்”, பியோங்யாங்கிற்கு பொம்பியோ மீண்டும் விஜயம் செய்வார் என்றும் ட்ரம்ப் சேர்த்துக் கூறினார்.

ட்ரம்ப் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் ஆகிய இருவரும் நடத்திய அவர்களது ஜூன் 12 சிங்கப்பூர் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் எதிராக வாஷிங்டன் எடுத்த நடவடிக்கைகள், “சமாதான பேச்சு வார்த்தைகள்” எனக் கூறப்பட்டதன் மோசடியான தன்மையை அம்பலப்படுத்துகின்றன.

சீன எல்லையில் அமெரிக்கத் துருப்புக்களை நிலைநிறுத்தி சீனாவிற்கு எதிரான அமெரிக்கப் போர் உந்துதலில் வட கொரியா இணைவதானாலும் சரி, அல்லது முன்னர் ட்ரம்ப் அச்சுறுத்தியபடி, அந்த மிக வறிய நாட்டை அமெரிக்கா “முற்றிலும் அழிக்கும்” என்ற வகையிலும் சரி, ஆரம்பத்தில் இருந்தே ட்ரம்ப்பின் திட்டநிரல் பியோங்யாங்கிற்கு ஒரு இறுதி எச்சரிக்கை விடுப்பதாகவே இருந்தது.

பியோங்யாங் மற்றும் பெய்ஜிங் இடையே ஒரு பிளவை உந்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி இன்னும் முயற்சித்து வருகையில் வெள்ளியன்று, “இதற்கிடையில், தலைவர் கிம் க்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்களையும் மரியாதையையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நான் விரைவில் அவரை சந்திக்கக் காத்திருக்கிறேன்!” என்றும், இந்த வாரத் தொடக்கத்தில் கிம் உடனான இரண்டாவது உச்சிமாநாடு “பெரும்பாலும்” நடைபெறக்கூடும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தது தான் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க-சீன வர்த்தகப் போர் அதிகரிப்பு மற்றும் மிக சமீபத்தில் வாஷிங்டனுக்கு மற்றொரு சீனப் பிரதிநிதிகள் குழு செல்லும் என்ற எதிர்பார்ப்புடன், பேச்சு வார்த்தையில் மேலோங்கி நிற்க ஏதுவாக சீனாவிற்கு எதிராக வட கொரியாவை ட்ரம்ப் பயன்படுத்திக் கொள்கிறார். இருப்பினும், ஏற்கனவேயுள்ள அழுத்தமிக்க சூழலை இன்னும் அதிகரிக்கச் செய்யும் இந்த தந்திரோபாயம் இராணுவ மோதலுக்குத் தான் வழிவகுக்கும். “[வட கொரியாவுடன் வர்த்தகத்தை ஒருங்கிணைத்தல்] என்பது [சீனாவுடனான] ஒட்டுமொத்த உறவுகள் இப்போது மிகவும் மோசமடைந்துள்ளது என்ற உணர்வையே நிச்சயமாக வெளிப்படுத்துகிறது” என்று ப்ரூக்கிங்க்ஸ் நிறுவன மூத்த அலுவலர் டேவிட் டாலர் கூறினார்.

ஜூலையில் 34 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டிருந்த சுங்க வரிக்கு மேலாக வியாழனன்று, சீன சரக்குகள் மீது 16 பில்லியன் டாலர் சுங்க வரியை வாஷிங்டன் சுமத்தியது. ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட நடவடிக்கைகள் மூலம் இரு சுங்க வரி விதிப்புக்களுக்கு பெய்ஜிங் விடையிறுத்தது. ட்ரம்ப் நிர்வாகக் கோரிக்கைகளை பெய்ஜிங் ஏற்க மறுக்குமானால், இன்னும் 200 பில்லியன் டாலர் கூடுதலான சுங்க வரி விதிப்பை அடுத்த மாதம் விரைவில் திணிக்கக்கூடும்.

வட கொரியாவுடனான வர்த்தகத்தை மேலும் குறைப்பதற்கும் அதனை அடிபணியச் செய்யுமாறு அதற்கு நெருக்கடி கொடுப்பதற்கும் கூடுதலாக இலக்கு வைத்து, வாஷிங்டன், சீன மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு எதிராக மூன்று தொகுப்புக்களாக ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை விதித்து சமன் செய்வதன் மூலம் இந்த மாதம் பெய்ஜிங் மீது கூட கூடுதலான அழுத்தத்தை வாஷிங்டன் வைத்தது. செவ்வாயன்று, வட கொரியாவிற்கு எண்ணெய் வழங்கியதாக குற்றம்சாட்டி ரஷ்யக் கப்பல்களை இலக்கு வைத்து வாஷிங்டன் அதற்கு பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. ரஷ்ய நிறுவனங்கள் மீது தொடரப்பட்ட இப்பொருளாதாரத் தடைகள் கடந்த வாரம் சீனா மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்கள் மீதும் தொடரப்பட்டது.

இந்த வர்த்தகப் போர் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத் தடைகள் போன்றவை ட்ரம்ப்பின் “அமெரிக்கா முதல்” என்ற பிற்போக்குத்தன கொள்கையின் பாகமாக இருக்கின்றன, இது, பெய்ஜிங் மற்றும் மாஸ்கோ போன்ற எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், தென் கொரியா உள்ளிட்ட அதன் நீண்ட கால நட்பு நாடுகளுக்கு எதிராகவும் வாஷிங்டனை குழிபறிக்க வைத்தது. கடந்த வாரம், தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், வட கொரியாவின் மிகக் குறைந்த மலிவு உழைப்பு சக்தியைச் சுரண்டுவதற்கும், புதிய வர்த்தகப் பாதைகளைத் திறப்பதற்கும் நோக்கம் கொண்டு, ஒரு விடுதலை நாள் (Liberation Day) உரையில் வட கொரியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்வதற்கு முன்மொழிந்தார்.

வாஷிங்டன் மற்றும் சியோல் இரண்டினது திட்ட நிரல்களுக்கு இடையே வேறுபாடுகள் எப்பொழுதும் இருந்தாலும், சீனா மற்றும் வட கொரியா மீதான ட்ரம்ப்பின் அணுகுமுறை இந்த பிளவுகளை மேலும் மோசமடையச் செய்கிறது. கடந்த வார மூனின் பேச்சும், அத்துடன் செப்டம்பரில் கொரிய நாடுகளுக்குள் நடைபெறவுள்ள மூன்றாவது உச்சி மாநாடு பற்றிய அறிவிப்பும், அமெரிக்காவில் சில கவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொம்பியோ பயண ரத்து குறித்த முடிவு என்பது, வட கொரியா உடனான கூடுதல் திட்டமிடப்பட்ட ஒத்துழைப்பில் தடைகளை ஏற்படுத்துமாறு சியோலை வலியுறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.

தென் கொரியத் திட்டங்கள் நடைமுறைக்கு வருவது என்பது 1950-1953 கொரியப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு முறையான அறிவிப்பை விடுக்கும் தேவையை உருவாக்கக்கூடும், இந்த பாதுகாப்பு உத்திரவாதத்திற்காகத் தான் வட கொரியா தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்தபோதும் ஏனோ அதைச் செய்வதற்கு வாஷிங்டன் மறுத்துவிட்டது.

எந்தவொரு சமாதான உடன்படிக்கையும் இப்பிராந்தியத்தில் அமெரிக்கா கொண்டிருக்கும் பரந்த இலக்குகளை வெட்டக்கூடும். வட கொரியாவிற்கான முன்னாள் முன்னணி அமெரிக்க அரசுத்துறை தூதர் ஜோசப் யூன், கடந்த வாரம் New York Times பத்திரிகையில், “அமெரிக்காவைப் பொறுத்தவரை, போரை முடிவுக்குக் கொண்டுவரும் அறிவிப்பு அல்லது சமாதான அறிவிப்பு அல்லது சமாதான உடன்படிக்கை எதுவானாலும் எப்பொழுதும் ஒரு பரந்த சூழலைக் கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஒரு சமாதான உடன்படிக்கை என்பது, கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க இராணுவம் மற்றும் பாரியளவிலான ஆயுதங்களை தொடர்ந்து வைத்திருக்க அது கட்டளையிடுவது ஏன் என்ற கேள்வியை எழுப்பும், அதன்மூலம் சீனாவிற்கு எதிரான போருக்கு வாஷிங்டன் தயாரிப்பு செய்து வருவதை இன்னும் கூடுதலாக பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.