ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French police scandal exposes Mélenchon’s ties to the police state

போலிஸ் அரசுடனான மெலொன்சோனின் உறவுகளை பிரெஞ்சு போலிஸ் துஷ்பிரயோகம் அம்பலப்படுத்துகிறது

By Anthony Torres
31 July 2018

ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் உயர்மட்ட உதவியாளர் அலெக்சாண்டர் பெனல்லா போலிஸ் சீருடை அணிந்தவாறு சட்டத்திற்குப் புறம்பாக போராட்டக்காரர்களைத் தாக்கும் ஒரு காணொளி சம்பந்தமான ஒரு துஷ்பிரயோகம் வெளியானதில் இருந்து, அடிபணியா பிரான்சின் (Unsubmissive France - LFI) தலைவர் ஜோன்-லூக் மெலொன்சோன் அவரே அந்த தீங்கிழைத்த போலிஸ்காரரின் செய்தி தொடர்பாளராக ஆகி உள்ளார். போலிஸ் ஒடுக்குமுறை மீது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே நிலவும் கோபத்திற்கு முறையிடுவதில்லை என்பதில் அவர் கவனமாக உள்ளார். அதற்கு பதிலாக அவர் பிரான்சில் வேகமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதும், LFI ஆழ்ந்த தொடர்புகளைக் கொண்டுள்ளதுமான போலிஸ்-அரசு எந்திரத்திற்குள் நிலவும் பதட்டங்களை கையாளுகிறார்.

இரண்டு போராட்டக்காரர்கள் மீதான பெனல்லாவின் தாக்குதலைக் குறித்து அல்ல, மாறாக பெனல்லா சட்டவிரோதமாக கலக போலிஸ் சீருடை அணிய துணிந்தார் என்ற உண்மையையே மெலொன்சோன் இடைவிடாது சாடுகிறார். உள்துறை அமைச்சரின் "வார்த்தையை ஒரேயொரு போலிஸ்காரர் கூட நம்ப முடியாது" என்று குறைகூறும் அவர், “நாம் நாடாளுமன்ற அமைப்புகளின் உள்ளடக்கத்தில் செயலாற்றி வருகிறோம், அதில் எங்களுக்கு உடன்பாடின்மை உள்ளது என்றாலும் நாங்கள் அதற்கு மதிப்பளிக்கிறோம். ஆனால், அவர்கள் அவர்களையே சேதப்படுத்துகிறார்கள் என்றால், அவர்கள் நமக்காக, நமது பணியை தான் செய்து வருகிறார்கள்” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

இந்த பதிவு ஒரு தீவிர எச்சரிக்கையைக் கொண்டுள்ளது. 2017 ஜனாதிபதி தேர்தல்களில் பாரியளவில் மெலொன்சோனுக்கு வாக்களித்த இடதுசாரி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் விருப்பங்களில் இருந்து LFI எந்திரத்தை ஒரு வர்க்க இடைவெளி பிரிக்கிறது. மெலொன்சோனும் அவரது மார்க்சிச-விரோத கட்சியும் போலிஸ் அரசை நோக்கி நோக்குநிலை கொண்டுள்ளது என்பதோடு, தொழிலாள வர்க்க இயக்கத்திற்கு அவை மிகக் குரோதமானவை என்பதை நிரூபிக்கும்.

மெலொன்சோன் மதிப்பிழப்பதைத் தவிர்ப்பதற்காகவும் மற்றும் LFI சமூக போராட்டங்களை நோக்குநிலை பிறழச் செய்து தொடர்ந்து குரல் வளையை நசுக்கட்டும் என்பதற்காகவும், போலிஸ் உடனான LFI இன் தொடர்புகளை பத்திரிகைகள் குறைத்துக்காட்ட முயல்கின்றன. ஆனால், போலிஸ் மற்றும் உளவுத்துறை வட்டாரங்கள் உடனான LFI இன் தொடர்புகள், பத்திரிகைகளில் மிகக் கவனமாக பதியப்பட்ட தொடர்ச்சியான கட்டுரைகளிலேயே நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

Médiapart இல் வெளியான ஒரு கட்டுரையின்படி, “ஒரு நாள் LFI ஆட்சிக்கு வருவதற்காக அதன் விபரக்குறிப்பு தரவுகளை பராமரித்து வருகிறது.” அடிபணியா பிரான்ஸ் இயக்கம் "அரசின் இயங்குமுறைகளை அறிந்த உயர்மட்ட அரசு அதிகாரத்துவவாதிகளையும், LFI பதவி ஏற்றால் வேலைகளைச் செய்து முடிக்கக்கூடிய முக்கிய நபர்களையும்" கணக்கிட்டு வருகிறது. LFI இன் வேலைத்திட்டத்தை விரிவாக்குவதில் பங்களித்தவர்கள் இவர்கள் தான், பின்புலத்திலிருந்து, இவர்கள் தொடர்ந்து குறிப்புகளை வரைந்தளித்து கொடுப்பதுடன், அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குகிறார்கள்.”

ஜனாதிபதி தேர்தல்களில் மெலொன்சோன் வேலைத்திட்டத்தினது இணை-தயாரிப்பாளராக இருந்த Charlotte Girard, உயர்மட்ட அரசு அதிகாரிகள் தான் "மக்கள் சேவையை உணர்ந்தவர்கள்,” என்று கூறி, LFI இன் வேலைத்திட்டத்தை விளங்கப்படுத்துவதில் அவர்கள் வகித்த பாத்திரத்தைப் புகழ்ந்தார்.

பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெறுவதற்காக என்று கூறி, François Pirenne எனும் புனைப்பெயர் கொண்ட ஓர் உயர்மட்ட அதிகாரி LFI உடனான அவரது வேலையைப் பின்வருமாறு விவரித்தார்: “நான் Bernard Pignerol தலைமையிலான குழுவில் இணைந்திருந்தேன், அதற்காக கண்டிப்பாக அந்த வேலைத்திட்டத்தில் தான் செயல்பட வேண்டும் என்பதல்ல. … நான் வழமையாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை எழுதினேன். சான்றாக, ஏப்ரல் 2017 இல் Champs-Elysées வீதியில் ஒரு போலிஸ்காரர் கொல்லப்பட்ட போது, விடையிறுப்பாக சரியான விடயங்களைக் கூறுவதற்காக நான் ஜோன்-லூக் மெலொன்சோனுடன் உடன் சென்றேன்,” என்றார்.

பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் ஒரு நிபுணர் என்ற நிலையில் இருந்த போதிலும், அடிபணியா பிரான்ஸ் க்குள் ஒருங்கிணைந்து இருப்பதில் Pirenne க்கு எந்த தொந்தரவும் இருக்கவில்லை. மெலொன்சோனின் அரசியல் செல்வாக்கு வளர்வது தளபதிகளாலும், உளவுத்துறை தலைவர்கள் மற்றும் போலிஸ் அதிகாரிகளாலும் வரவேற்கப்படும் என்றவர் நம்புவதை Pirenne தெளிவுபடுத்தினார்: “அமைப்புகளுக்குள் பரவச் செய்யக்கூடிய, வல்லுனர்களது கூட்டமைப்பு மற்றும் குடியரசு சார்புடையவர்களிடையே உத்வேகத்தை உருவாக்கக்கூடிய அந்த தருணத்தை நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்.”

போலிஸ் மற்றும் உள்நாட்டு உளவுத்துறை முகமைகளில் உயர்மட்ட பதவிகளில் உள்ள தொழிற்சங்க நிர்வாகிகளின் ஒரு குறிப்பிட்ட அடுக்கையும் மெலோன்சோன் சார்ந்துள்ளார், மெலோன்சோனின் வலைப்பதிவின்படி அவரது பாதுகாப்பு கொள்கைகளை வகுக்க அவர்கள் உதவியிருந்தனர். அவர்களில் உள்ளடங்குபவர்கள்:

• தொழிலாளர் சக்தியின் (FO) நிர்வாக மற்றும் தொழில்நுட்ப நபர்களின் சுதந்திர தேசிய சங்கத்தின் (SNIAPT) பொதுச் செயலாளரும், FO இன் உள்துறை அமைச்சக தொழிற்சங்க கூட்டமைப்பின் (FSMI-FO) ஓர் அங்கத்தவருமான Georges Knecht;

• நீதிபதிகள் சங்கத்தின் தேசிய செயலாளர், Laurence Blisson;

• புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியுடன் தொடர்புபட்ட ஐக்கிய சங்கங்களின் மக்கள் நிதிகளுக்கான தொழிற்சங்கத்தின் முன்னாள் உறுப்பினர், Vincent Drezet;

• ஸ்ராலினிச சங்கமான தொழிலாளர்களுக்கான பொது கூட்டமைப்பினது (CGT) போலிஸ் பிரிவின் தலைவரும் உள்நாட்டு பொது உளவுத்துறை (RG) முகமையின் உறுப்பினருமான Alexandre Langlois, இவருக்காக ஸ்ராலினிச பத்திரிகை L’Humanité "நமது போலிஸ் தோழர்" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையை அர்பணித்திருந்தது.

மெலொன்சோன் 1968 மாணவர் இயக்கத்திற்குப் பிந்தைய காலத்தில் பியர் லம்பேரின் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பில் (OCI) இருந்து வந்தவர், இது சோசலிஸ்ட் கட்சி (PS) உடன் ஒரு கூட்டணியைத் தொடர்வதற்காக 1971 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்டது. சோசலிஸ்ட் கட்சி 1981 தேர்தல்களில் வென்று, ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் கீழ் ஆளும் கட்சியாக ஆனதும், அது சிக்கன கொள்கைகளை ஏற்று, போலிஸ் மற்றும் உளவுத்துறை உடனான அதன் உறவுகளை மேற்கொண்டும் அபிவிருத்தி செய்தது. ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு அண்மித்து 30 ஆண்டுகளுக்குப் பின்னர், LFI இன் உள்ளிருக்கும் அரசியல் சக்திகள் தொழிலாளர்கள் மத்தியில் மதிப்பிழந்துள்ளதுடன், அவை சமூக செலவின குறைப்பு மற்றும் போரை ஆதரிக்கின்றன.

போலிஸ் மற்றும் உளவுத்துறை வட்டாரங்களுடன் மெலொன்சோனின் தற்போதைய நெருக்கமான உறவுகள் இந்த ட்ரொட்ஸ்கிச-விரோத வரலாற்றின் விளைபொருளாகும். LFI ஐ சுற்றியுள்ள போலிஸ் வட்டாரங்கள் சமூக செலவினக் குறைப்பு வெட்டுக்களில் இருந்து இராணுவ மற்றும் போலிஸ் வரவுசெலவு கணக்குகளைப் பேணவும், தொழிலாளர்கள் மற்றும் சமூக சேவைகள் அந்த சட்டமசோதாவுக்கு அடிவருடவும் செய்ய பெரும்பிரயத்தனத்துடன் உள்ளன. ஆகவே அவர்கள் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களை நோக்குநிலை பிறழச் செய்து, ஒடுக்குவதற்கு தயாராக உள்ளனர்.

மெலோன்சோனின் ஜனாதிபதி முயற்சியைக் கடந்த ஆண்டு ஆதரித்திருந்த பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தொழில் வல்லுனர்கள் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளை ஒருங்கிணைத்து ஒன்று சேர்த்திருந்த Harpocrate சிந்தனைக் குழாம், அவசரகால நிலையின் கடுமையான போலிஸ்-அரசு நிலைமைகளின் கீழ் தொடங்கப்பட்டிருந்தது.

நவம்பர் 2016 இல், "ஒரு நியாயமான பயங்கரவாத-எதிர்ப்பு கொள்கை" என்ற தலைப்பில் Marianne செய்தி சஞ்சிகையில் அவர்கள் பிரசுரித்த ஒரு கட்டுரை பின்வருமாறு அறிவிக்கிறது: “அவசியமான சிக்கன நடவடிக்கைகள் என்று கூறப்படுபவைகளுக்காக உளவுத்துறைக்கான ஆதாரவளங்கள் கைவிடப்படக் கூடாது, அதற்கு எதிர்விதமாக, அவை மீளப்பலப்படுத்தப்பட வேண்டும். … அடிமட்ட போக்கின் அடாவடித்தனமான ஆட்டிப்படைப்புகளும், அத்துடன் போலிஸ் பணியாளர்களது குறைப்புகளும், நிர்வாக முகவர்களை நியமிப்பதன் மூலமாகவும், போலிஸ் மற்றும் துணை-இராணுவ போலிஸ் க்காக தரையில் இராணுவத்தை இறக்கி விடுவதன் மூலமாகவும் எதிர்க்கப்பட வேண்டும்.”

காவலர்கள் மற்றும் உளவாளிகளுடன் மெலொன்சோன் நெருக்கமாக ஒத்துழைப்பதற்காக அக்கட்டுரை நிறைவாக அவரைப் பாராட்டி இருந்தது: “உளவுத்துறை வல்லுனர்கள் மற்றும் பயங்கரவாத-எதிர்ப்பு நிபுணர்களின் நிபுணத்துவத்தால் வழிகாட்டப்பட்டு, நீண்டகால அடிப்படையில் விளங்கப்படுத்தப்பட்ட தீர்வுகளுக்குத் தான் நன்றி கூற வேண்டும், அதாவது பாதுகாப்பு பிரச்சினைகள் மீதான ஜோன்-லூக் மெலொன்சோனின் வேலைத்திட்டம், பாதுகாப்பு தொழில் வல்லுனர்கள் உள்ளடங்கலாக, ஒருமனதான ஆதரவை வென்றுள்ளது!”

தன்னைத்தானே மெலொன்சோனின் நண்பராக காட்டிக் கொள்ளும் அவரின் பாதுகாப்புக்கான செய்தி தொடர்பாளர் Djordje Kuzmanovic, Harpocrate குழுவில் இணைந்திருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. ஒரு முன்னாள் இராணுவ அதிகாரியும், பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியலில் பொதுவாக நேட்டோ மீது விரோதம் கொண்ட வல்லுனரும், இப்போதும் ஓர் இராணுவ இருப்புப்படை அதிகாரியாக இருக்கும் இவர், 2000 இல் இருந்து 2012 வரையில் இராணுவத்தில் இருந்தார். ஆரம்பத்தில் பாராசூட் வீரராக விளங்கிய இவர், பால்கன்களில் செயல்முறை உளவுத்துறை குழுவுக்கான (GIO) திட்டங்களை நடத்தி இருந்தார், பின்னர் ஆப்கானிஸ்தானில் நேட்டோ ஆக்கிரமிப்பின் போது அங்கே அவர் "விருப்பமில்லாமல் உளவுத்துறை வேலை செய்து" வந்ததாக கூறுகிறார்.

Journal du Dimanche இன் பேட்டியில் பால்கன்களில் அவர் வேலை என்னவாக இருந்தது என்று கேட்கப்பட்ட போது, சேர்பிய வம்சாவழியைச் சேர்ந்த Kuzmanovic அது குறித்து கூற மறுத்துவிட்டார்: “தலையீடுகள், பகுப்பாய்வு வேலை மற்றும் மொழிபெயர்ப்பு வேலை ஆகியவற்றுடன் பிணைந்த சிலவற்றை செய்து வந்தேன் … அது குறித்து நாம் பேச வேண்டியதில்லை,” என்றார்.

1994 இல், துட்சி-விரோத இனப்படுகொலைக்குப் பொறுப்பான ஹூட்டு-தீவிரவாத ஆட்சிக்கு மித்திரோனின் PS அரசாங்கம் நிதியுதவிகள் மற்றும் ஆயுத உதவிகள் வழங்கி வந்த அந்த ஆண்டில், ருவாண்டா நடவடிக்கை ஒன்றின் போது, அகதிகள் முகாம்களில் அனாதைகளை அடையாளம் காணும் குற்றகரமான பணி Kuzmanovic க்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இது அப்போதைய சட்டக்கல்லூரி மாணவரான Charlotte Girard ஐ சந்தித்த போது நடந்ததாகவும், அவர் இந்த பாராசூட் வீரருக்கு 2008 இல் மெலொன்சோனை அறிமுகப்படுத்தியதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

2007 இல் இருந்து 2010 வரையில், Kuzmanovic அவர் காலத்தை ரஷ்யாவில் செலவிட்டார். அவர் பிரான்சின் இடது கட்சியில் (PG) இணைந்து, ரஷ்ய இடது முன்னணியுடன் உறவுகளை அபிவிருத்தி செய்தார். மெலொன்சோன் ரஷ்யாவுக்கு சமீபத்தில் விஜயம் செய்ததில் Kuzmanovic ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன, அங்கே மெலொன்சோன் ரஷ்ய அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ரஷ்யாவில் உள்ள பிரெஞ்சு முதலீட்டாளர்களைச் சந்தித்தார். அந்த விஜயம் ஜேர்மன்-விரோத உணர்வுக்கு ஒரு தேசியவாத பிராங்கோ-ரஷ்ய முறையீட்டை உருவாக்கியது.

இந்த பெனல்லா விவகாரம், மக்ரோனுக்கு எதிராக வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைக்க உதவுவதற்காக என்று கூறி, NPA இன் கோரிக்கையின் பேரில் தொடங்கப்பட்ட, LFI, LO, NPA மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் என இவற்றிற்கு இடையிலான கூட்டணியின் வர்க்க குணாம்சத்தின் முகத்திரையைக் கிழித்துள்ளது. உண்மையில் இது, போலிஸ் மற்றும் போலிஸ்-அரசு எந்திரத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ள குட்டி-முதலாளித்துவ, மார்க்சிச-விரோத மற்றும் எதிர்-புரட்சிகர சமூக அடுக்காகும்.