ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German Foreign Minister Maas sees Europe setting “red lines” for US conduct

அமெரிக்க நடத்தைக்கு ஐரோப்பா “சிவப்புக் கோடுகள்” அமைப்பதை ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் மாஸ் காண்கிறார்

By Ulrich Rippert and Peter Schwarz
29 August 2018

நிதிய நாளேடான Handelsblatt க்கு சென்ற வாரத்தில் அளித்த ஒரு விருந்தினர் கட்டுரையில், வெளியுறவு அமைச்சரான ஹேய்கோ மாஸ் (சமூக ஜனநாயகக் கட்சி, SPD) ஜேர்மன் அரசாங்கத்தின் புதிய அமெரிக்க மூலோபாயத்தின் முக்கியமான புள்ளிகளை கோடிட்டுக் காட்டினார். அட்லாண்டிக்கடந்த கூட்டணியை “மறுவரையறை” செய்யவும் ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்காவுக்கான “சமபலமாக” கட்டியெழுப்பவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவ விவகாரங்களில் ஜேர்மனி கூடுதலாக ஈடுபடுத்திக் கொண்டாக வேண்டும் என்று நீண்ட காலமாகவே, ஜேர்மன் அரசாங்கத்தின் முன்னணிப் பிரதிநிதிகள் பிரகடனம் செய்து வந்திருக்கின்றனர். பலமாத கால இரகசிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், வசந்தத்தில் கிறிஸ்தவ ஜனநாயகவாதிகளுக்கும் (CDU/CSU) மற்றும் SPDக்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டிருந்த கூட்டணி உடன்படிக்கை “ஜேர்மன் இராணுவவாதத்தின் ஒரு பாரிய விஸ்தரிப்புக்கான ஒரு திட்டவரைபடம் போல் காட்சியளிக்கிறது” என்று WSWS கருத்திட்டது.

Handelsblatt இல் எழுதியிருந்த விருந்தினர் கட்டுரையில் மாஸ் இதன் மீது கட்டியெழுப்புகிறார். அமெரிக்காவை ஒரு புதிய ஜேர்மன் வல்லரசுக் கொள்கைக்கான ஒரு முக்கிய முட்டுக்கட்டையாக, அரசாங்க அதிகாரிகள் இதுவரை செய்திருப்பதை விடவும் மிகத் தெளிவானவிதத்தில் அவர் விவரிக்கிறார். அமெரிக்காவை விலைகொடுக்கச் செய்தும் அதனுடனான மோதலிலும் தான் ஜேர்மனி மறுபடியும் ஒரு உலக சக்தியாக ஆக முடியும் என்று, ஒரு “சமநிலைப்பட்ட கூட்டு” (balanced partnership) குறித்த இராஜதந்திர சொல்லாடல்களைக் கொண்டு மெல்லியதாக மட்டுமே மறைத்து, மாஸ் விளக்குகிறார்.

ஆரம்பத்தில் இருந்தே, அட்லாண்டிக் கடந்த பதட்டங்கள் பெருகுவது ”எந்த விதத்திலும் டொனால்ட் ட்ரம்ப்” மற்றும் அவரது “புதிய புதிய உலுப்பல்கள்” உடன் முடிவதாக இருந்தவையில்லை என்பதை வெளியுறவு அமைச்சர் வலியுறுத்துகிறார். அவர் எழுதுகிறார், “அமெரிக்காவும் ஐரோப்பாவும் பல ஆண்டுகளாக பரஸ்பரம் விலகிச் சென்று கொண்டிருக்கின்றன.” “விழுமியங்களும் மற்றும் நலன்களும் ஒன்றுடன் ஒன்றுசேரல்” குறைந்து சென்று கொண்டிருக்கிறது அத்துடன் “கிழக்கு-மேற்கு மோதலின் இணைக்கும் சக்தியாக” இனியும் இல்லை.

அமெரிக்காவுடனான கூட்டு “இரண்டாம் உலகப் போர் முடிந்ததிலிருந்தான காலத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பின் ஒரு தனித்துவமான கட்டத்தை ஜேர்மனிக்கு கொண்டுவந்திருந்தது” என்றபோதிலும் திரும்பிப் பார்த்து ஏங்குவது வருங்காலத்திற்கு இட்டுச் செல்லாது என்று மாஸ் அறிவிக்கிறார். இது “நமது கூட்டை மறுவரையறை செய்வதற்கான மிகச்சரியான சமயமாகும்.”

அதன்பின் மாஸ் முன்வைக்கின்ற “சமநிலையான கூட்டு” என்பது, அமெரிக்கா பலவீனமடையும் ஒவ்வொரு இடங்களிலும் ஜேர்மன் ஏகாதிபத்தியம் முன்னேறிக் கொண்டிருக்கிறது, நலன்கள் மோதுமிடங்களில் அமெரிக்காவுடன் மோதுகிறது என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. மாஸை பொறுத்தவரை “அமெரிக்கா பின்வாங்கிக் கொள்கின்ற இடங்களில் நாம் நமது பலத்தை அங்கு செலுத்துவதும்” அமெரிக்கா “சிவப்புக் கோடுகளை தாண்டுகின்ற போது நாம் சமபலமாக இருக்கின்றதுமான” ஒரு கூட்டு அது.

வார்த்தைகளின் தெரிவே இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இதுவரையில், அமெரிக்காதான் “அடாவடி நாடுகள்” என குற்றம்சாட்டப்பட்டவற்றுக்கு எதிராக “சிவப்பு கோடுகள்” அமைத்து வந்திருந்தது, இப்போது ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் அதன் கூட்டாளியாகவும் பங்காளியாகவும் சொல்லப்படுகின்ற ஒன்றுக்கு எதிராக அதே வார்த்தையைக் கொண்டு அச்சுறுத்துகிறார்.

அமெரிக்காவுக்கு மாஸ் விடுக்கும் சவால் நீண்டகால வரலாற்று, புவியரசியல் மற்றும் இராணுவத் தாக்கங்கள் கொண்டதாகும். கடந்த நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களுக்கும் பாசிசத்திற்கும் இட்டுச் சென்றிருந்த பிரச்சினைகளில் எதுவொன்றும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

1897 இல், வெளியுறவு அமைச்சரான பேர்ன்ஹார்ட் ஃவொன் புலோ (Bernhard von Bülow) ஜேர்மனிக்கு “சூரியனில் ஒரு இடம்” கோரி ரைய்ஸ்ராக்கின் (பேரரசுக்குரிய நாடாளுமன்றம்) முன்னால் பேசியபோது, அது பழைய காலனியாதிக்க சக்திகளான கிரேட் பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு எதிராக செலுத்தப்பட்டதாய் இருந்தது. இவை தமக்கு அனுகூலக் குறைவை ஏற்படுத்துவதாக துரிதமாய் வளர்ந்து வந்த ஜேர்மன் முதலாளித்துவம் கண்டது. அதனைத் தொடர்ந்து 17 ஆண்டு கால தீவிர இராணுவப் பெருக்கம் நடந்தது. பின், முதலாம் உலகப் போரில், ஜேர்மனி “சூரியனிலான அதன் இடத்தை” படைவலிமையின் மூலமாக வெற்றிகாண முயற்சி செய்தது, ஆனால் போரில் தோற்று விட்டது. இன்னுமொரு வளர்ந்துவந்த முதலாளித்துவ பெரும் சக்தியாக இருந்த அமெரிக்கா தான் முதலாம் உலகப் போரில் உண்மையான வெற்றியாளரானது.

முதலாம் உலகப் போருக்கு பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த முடிவை மாற்றியமைக்கின்ற ஒரு முயற்சியில், முதலாளிகள், இராணுவம் மற்றும் பிற்போக்கான அரசியல்வாதிகளது ஒரு சதியானது ஹிட்லரை அதிகாரத்திற்குக் கொண்டுவந்தது. நாஜிக்கள் தொழிலாள-வர்க்க இயக்கத்தை அடித்து நொருக்கி விட்டு நாட்டின் அத்தனை வளங்களையும் ஒரு பிரம்மாண்டமான இராணுவப் பிரச்சாரத்தின் சேவைக்காய் வைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர், முதலில் ஐரோப்பாவை கீழ்ப்படியச் செய்வதற்கும் அதன்பின் சோவியத் ஒன்றியத்தை —ஸ்ராலினிச சீரழிவுக்கு உட்பட்டிருந்த போதும், அதனை முதலாளித்துவத்திற்கான ஒரு முக்கிய அச்சுறுத்தலாக அவர் கண்டார், அத்துடன் அந்த பிராந்தியத்தை அவர் ஜேர்மன் பொருளாதாரத்தின் உயிர்வாழ்விற்கு அத்தியாவசியமான பிராந்தியமாக (”Lebensraum”) கண்டார்— கைப்பற்றுவதற்கும் முயற்சி செய்தார்.

ஆனால் போரின் தர்க்கமானது தவிர்க்கவியலாமல் மிக வலிமையான ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்காவுடனான ஒரு மோதலில் முடிந்தது. ஹிட்லரின் பீரங்கிகள் ஹாலந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்சின் மீது உருண்டு நகர்ந்த 1940 மே சமயத்திலேயே நான்காம் அகிலம் எச்சரித்தது: “நேச நாடுகளை ஜேர்மனி வெற்றி கொள்ளக் கூடிய சாத்தியமானது அமெரிக்காவின் தலைக்கு மேல் ஒரு கொடுங்கனவைப் போல தொங்கிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பியக் கண்டத்தையும், அதன் காலனிகளது வளங்களையும் தனக்கு அடித்தளமாக்கிக் கொண்டு, ஐரோப்பாவின் அத்தனை ஆயுதத் தொழிற்சாலைகளையும் கப்பல்கட்டும் தளங்களையும் தனது கையசைப்பில் கொண்டிருக்கும் சமயத்தில், ஜேர்மனி —குறிப்பாக கிழக்குத் திசையில் ஜப்பானுடன் சேர்ந்து கொண்டு— அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு மரணகரமான அபாயத்தை கொண்டதாக ஆகும். இந்த அர்த்தத்தில் ஐரோப்பியக் களங்களிலான இப்போதைய மாபெரும் யுத்தங்கள் ஜேர்மனிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சண்டையின் தயாரிப்பு அத்தியாயங்கள் மட்டுமே” (ஏகாதிபத்தியப் போர்  மற்றும் உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சி மீதான நான்காம் அகிலத்தின் அறிக்கை).

இறுதியாக அமெரிக்கா, ஜேர்மன் ஏகாதிபத்தியத்தை தூக்கிவீசுவதற்காக சோவியத் ஒன்றியத்துடன் கைகோர்த்தது. ஆயினும் போருக்குப் பின்னர், அது உயிர்பிழைப்பதையும் அமெரிக்கா உறுதிசெய்தது. பனிப் போரில் ஒரு கோட்டையாகப் பயன்படுவதற்கும் தனது சொந்த பொருளாதாரத்தை விரிவாக்கம் செய்வதற்காகவும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஜேர்மனி அவசியமாக இருந்தது. அதுதான், மாஸ் குறிப்பிடுகின்ற “அமைதி மற்றும் பாதுகாப்பின் தனித்துவமான கட்டமாக” இருந்ததன் அடிப்படையாக இருந்தது, அந்தக் கட்டம் மிக அமைதிகரமானதாக இல்லாத அதேநேரத்தில் இப்போது ஒரு முடிவுக்கும் வந்திருக்கிறது.

அமெரிக்கா அதன் இராணுவ மேலாதிக்கத்தைப் பயன்படுத்தி சரிந்து செல்கின்ற தனது பொருளாதார வலுவை சரிக்கட்டுவதற்கு முயற்சி செய்கிறது. 1990கள் முதலாக, அமெரிக்கா கிட்டத்தட்ட இடைவெளி இல்லாமல் போரில் ஈடுபட்டு வந்திருக்கிறது. ஸ்திரத்தன்மைக்கான ஒரு நங்கூரமாக இருந்ததில் இருந்து, இப்போது சர்வதேச ஸ்திரமற்ற நிலையின் மிகப்பெரும் காரணியாக அமெரிக்கா ஆகியிருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப் அந்த அபிவிருத்தியின் இப்போதைய உச்சப் புள்ளி மட்டுமே. ஜேர்மன் ஏகாதிபத்தியமானது இராணுவவாதம் மற்றும் மூர்க்கமான வல்லரசு அரசியலுக்குத் திரும்புவதன் மூலமாக பதிலிறுத்துக் கொண்டிருக்கின்றது. மாஸ் மற்றும் ஜேர்மன் அரசியல்வாதிகளின் மொழி மட்டுமல்ல, அவர்களது கொள்கையின் உள்ளடக்கமும் கூட மேலும் மேலும் அதிகமாக ஃவொன் புலோ மற்றும் ஹிட்லரின் வெளியுறவு அமைச்சராக இருந்த ஜோஅஹிம் ஃவொன் ரிப்பன்ட்ரோப் ஆகியோரை நினைவுக்குக் கொண்டுவருகிறது.

அந்த நாட்களில் போலவே, ஜேர்மன் ஏகாதிபத்தியம் மறுபடியும், அமெரிக்காவை எதிர்த்து நிற்க ஐரோப்பாவில் மேலாதிக்கம் செலுத்துவது அவசியம் எனக் கருதுகிறது. அமெரிக்காவுடனான மோதலில் “ஜேர்மனியால் மட்டும்” தனியாக வெற்றிகண்டு விட முடியாது என்பதை மாஸ் வலியுறுத்துகிறார். இந்தக் காரணத்திற்காகவே, “ஒரு இறையாண்மையுடனான, வலிமையான ஐரோப்பாவை கட்டியெழுப்புவது” ஜேர்மன் வெளியுறவுக் கொள்கையின் “தனிச்சிறப்பான இலக்காக” இருந்தது. “பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே” அமெரிக்காவை எதிர்த்து நிற்பது சாத்தியமாகும். ஐரோப்பிய ஒன்றியம் “சர்வதேச ஒழுங்கின் ஒரு முக்கிய பங்குதாரராக ஆகியாக வேண்டும்”. ட்ரம்ப்பின் “அமெரிக்கா முதலில்” சுலோகத்திற்கு எதிரில் அவர் “ஒன்றுபட்ட ஐரோப்பா!” என்ற சுலோகத்தை முன்வைக்கிறார்.

ஆயினும் ஐரோப்பாவில் மையவிலக்கு சக்திகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. தனது நிதியக் கட்டளைகளுக்கும், பொருளாதார நலன்களுக்கும் மற்றும் வெளியுறவுக் கொள்கை இலக்குகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்தவர்களை கீழ்ப்படியச் செய்வதற்கு ஜேர்மனி செய்கின்ற முயற்சிகள், கொஞ்சமும் குறைவின்றி, பல நாடுகளில் தேசியப் போக்குகளை வலுப்படுத்தியிருக்கின்றன. பேர்லின் இராணுவச் செலவின அதிகரிப்பைக் கொண்டு எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவுடன் மோதுகையில், நேட்டோ மீது கேள்விக்குறி எழுப்பும் அளவுக்கு மாஸ் செல்லவில்லை. “பாதுகாப்பு விடயத்தில் போல அட்லாண்டிக் இடையிலான இணைப்பு எங்களுக்கு வேறெங்கும் அத்தனை தவிர்க்கமுடியாததாக இருக்கவில்லை” என்று அவர் எழுதுகிறார். ரஷ்யாவுடனான மோதலுக்கு ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு நேட்டோ இன்னும் அவசியமாகவே உள்ளது. ஜேர்மனியில் இப்போதும் 45,000 அமெரிக்க படையினர்களும் பல அமெரிக்க இராணுவ கட்டளை மையங்களும் இருக்கின்றன.

ஆயினும் ஜேர்மன் மேலாதிக்கத்தை அதிகரித்து அமெரிக்க மேலாதிக்கத்தை தேய்வுறச் செய்வதற்கு பாரிய மறுஆயுதத்தரிப்புக்கு மாஸ் அழுத்தம் கொடுக்கிறார். “வடக்கு அட்லாண்டிக் கூட்டணியின் ஐரோப்பியத் தூணை வலுப்படுத்துவது நமது சொந்த நலனின் அடிப்படையிலேயே கூறப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் எப்போதும் புதிய சதவீத இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டே இருக்கிறார் என்பதால் அல்ல, மாறாக நாம் இதுவரை பழகி வந்திருக்கின்ற அதே பழைய அளவுக்கு வாஷிங்டனை நம்பியே இருந்து கொண்டிருக்க முடியாது என்ற காரணத்தினாலாகும்” என்று அவர் Handelsblatt இல் எழுதுகிறார். ஒரு ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் காவல் ஒன்றியத்தை (European Security and Defence Union) “ஐரோப்பா அதன் சொந்த திட்டப்பணியாக” “படிப்படியாக” கட்டியெழுப்புவது மிக முக்கியமானதாகும் என்கிறார்.

அமெரிக்காவுக்கு எதிரான மாஸின் தாக்குதல் இராணுவப் பிரச்சினைகளுடன் சுருக்கிக் கொள்ளவில்லை. நிதிச் சந்தைகளிலும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உடைக்க அவர் விரும்புகிறார், ஐரோப்பாவில் இருக்கும் அமெரிக்க இணைய நிறுவனங்களுக்கு இன்னும் அதிகமாய் வரிவிதிக்க வலியுறுத்துகிறார். “அமெரிக்காவிலிருந்து-சுயாதீனப்பட்ட பணம்செலுத்த வழிகளை ஏற்படுத்துவதும், ஒரு ஐரோப்பிய நாணய நிதியத்தை உருவாக்குவதும் ஒரு சுயாதீனமான SWIFT அமைப்புமுறையை கட்டியெழுப்புவதும்” அவசியம் என்று அவர் தெரிவிக்கிறார். அமெரிக்க மேலாதிக்கமுடைய SWIFT வலைப்பின்னல் உலகெங்குமான 10,000க்கும் அதிகமான வங்கிகளில் இருந்து செய்திகள் மற்றும் பரிவர்த்தனைகளது போக்குவரத்தை நடத்துகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான வர்த்தகப் போரில், உலகெங்குமான மற்ற நாடுகளுடன் கூட்டணி சேர்வதற்கு மாஸ் விரும்புகிறார், இதனை அவர் “பன்முகத்தன்மைக்கான கூட்டணி” என்று அழைக்கிறார். “நம்மைப் போன்றே, கட்டுப்படுத்தும் விதிமுறைகளையும் நியாயமான போட்டியையும் சார்ந்திருக்கக் கூடிய கூட்டாளிகளது ஒரு வலைப்பின்னல்” ஆக அது இருக்கும். ஐரோப்பியக் கூட்டாளிகள் தவிர, ஜப்பான், கனடா மற்றும் தென்கொரியாவில் உள்ள அரசாங்கங்களுடனும் அவர் ஏற்கனவே வெற்றிகரமாக பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறார்.

சான்சலர் அங்கேலா மேர்கெல் ஜேர்மனியின் சர்வதேச செல்வாக்கை விஸ்தரிப்பதற்கும் எதிர்நோக்கியிருக்கிறார். உதாரணமாக, சென்ற வாரத்தில், கிரிமியா நெருக்கடிக்குப் பின்னர் முதன்முறையாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ஒரு தனிப்பட்ட கலந்தாலோசனைக்காக அவர் அரசாங்க விருந்தினர் இல்லமான Schloss Meseberg இல் வரவேற்றார். மற்ற விடயங்களுடன், வாஷிங்டனில் இருந்தான கடும் விமர்சனத்திற்குப் பின்னரும், நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் இணைப்புக் கட்டுமானத் திட்டத்திற்கு இருவரும் உடன்பட்டனர். அதனையடுத்து மேர்க்கெல், ஜோர்ஜியா, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய மூன்று காகசஸ் நாடுகளுக்கு —இவற்றில் ரஷ்யா அமெரிக்கா இரண்டு நாடுகளுமே பாரிய நலன்களைக் கொண்டுள்ளன— விஜயம் செய்தார். வரவிருக்கும் நாட்களில், செனகல், கானா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்வதற்காக அவர் ஆபிரிக்கா பயணம் செல்கிறார். அடுத்த மாதத்தில் அமெரிக்காவின் இப்போதைய குறியாக இருக்கும் துருக்கியின் ஜனாதிபதியான ரிசப் தையீப் எர்டோகன் பேர்லினுக்கு ஒரு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள அவர் எதிர்பார்த்திருக்கிறார்.

மாஸின் அமெரிக்காவுக்கான புதிய மூலோபாயமானது அரசாங்கக் கட்சிகளால் மட்டுமல்லாது, எதிர்க்கட்சிகளாக சொல்லப்படுவனவாலும் ஆதரிக்கப்படுகிறது. குறிப்பாக இடது கட்சி, “அமெரிக்காவுக்கு எதிரான ஒரு கடுமையான நிலைப்பாட்டை” ஜேர்மனி எடுக்க வேண்டும் என்று கோருவதற்கு கிடைக்கின்ற எந்த வாய்ப்பையும் தவறவிடுவதில்லை.

ஊடகங்களில் கூட, விமர்சனபூர்வ குரல்கள் ஏதுமில்லை. ஆயினும், ஒரு பாரிய ஆயுதமாக்கல் வேலைத்திட்டத்தை பகிரங்கமாக ஆலோசனையளிக்க சில வருணனையாளர்கள் கோருகின்றனர். கூட்டணி உடன்பாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்ற இராணுவச் செலவின இரட்டிப்பாக்கல் என்பது மாஸின் வல்லரசுத் திட்டங்களை நிஜமாக்குவதற்கு போதுமானதாக இருப்பதில் இருந்து வெகுதொலைவிலானதாகும் என்பதை அவை அறிந்து வைத்திருக்கின்றன. உதாரணமாக, “அமெரிக்காவிற்கு அப்பாற்பட்ட கொள்கை”க்கு “உள்ளடக்கம்” அதாவது பொருத்தமான இராணுவ பலம் அவசியமாக இருக்கிறது என்று Frankfurter Allgemeine Zeitung எச்சரிக்கிறது.

வெளியுறவு விவகாரங்களுக்கான ஜேர்மன் கவுன்சிலின் சுற்றுப்பத்திரிகையான IP இன் புதிய பதிப்பு மாபெரும் கூட்டணி மீது குற்றம்சாட்டுகிறது, “கூட்டரசாங்க குடியரசின் பாதுகாப்புக் கொள்கை கூற்றுகளது சுய-உறுதியளிப்பு அல்லது மறுவரையறையும் கூட” “2017 தேர்தல் பிரச்சாரத்தில் கிட்டத்தட்ட எந்த பங்கும்” வகிக்கவில்லை. ஆயினும், “சான்சலர் கூறுவதைப் போல ‘ஐரோப்பியர்களாகிய நாம் நமது தலைவிதியை நமது சொந்தக் கரங்களில் கொண்டிருந்தாக வேண்டும்’ —ஆனால் அதேநேரம் இராணுவப் படைகள் அவற்றின் மீது வைக்கப்படும் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலையில் இருக்கின்றன என்றால் பாதுகாப்பு மற்றும் காவல் கொள்கையின் உண்மையான அர்த்தம் தான் என்ன என்பதை ஜேர்மன் மக்களுக்கு” குறைந்தபட்சம் இப்போதேனும் விளக்கப்பட வேண்டும்.

மாஸ் இந்த சவாலை நிறைவேற்ற விரும்புகிறார். “பாதுகாப்பு செலவின அதிகரிப்பு குறித்த விவாதத்தை நான் தவிர்க்கவில்லை” என்று அவர் கூறியதாக Tagesspiegel மேற்கோளிடுகிறது. இராணுவரீதியான ஒதுங்கியிருப்புக்கு முடிவுகட்டுவதற்காக ஐந்து வருடங்களாக மாபெரும் கூட்டணி தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்திருக்கிறது என்ற நிலையிலும், இப்போது வரையில், சமூகம் இந்த கொள்கை விடயத்தில் ஒரு “நிலைநிற்காத மந்தமான நிலை”யில் மாட்டிக் கொண்டு இருந்திருப்பதாக அவர் தொடர்ந்து கூறுகிறார். சமூகம் மாபெரும் அளவில் இராணுவமயமாக்கப்படுவதற்கு அரசாங்கம் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது என்பது மட்டுமே அதன் அர்த்தமாக இருக்க முடியும். கட்டாய இராணுவ சேர்க்கையை மீண்டும் கொண்டுவருவது, ஆண் பெண் இருவருக்கும் இராணுவ சேவை கடமைப்பாட்டை கொண்டுவருவது, மற்றும் அணு ஆயுதங்கள் வாங்குவது ஆகியவை குறித்த விவாதங்கள் வரவிருப்பனவற்றுக்கான ஒரு சோற்றுப் பதம் மட்டுமே ஆகும்.

இராணுவவாதத்திற்கு திரும்புவதை மக்களின் மிகப் பரந்த பிரிவுகள் ஆவேசத்துடன் நிராகரிக்கின்றன என்பதை அரசாங்கம் அறியும். ஆகவே தான் அது அவர்களது முதுகின் பின்னால் தனது திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறது. கைய்சர் சாம்ராஜ்யம் மற்றும் நாஜி ஆட்சியின் எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களை எடுக்காமல் அத்தகைய வல்லரசு அரசியலுக்கு திரும்பவே முடியாது. ஆகவே தான் ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) ஊக்குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, போருக்கும் முதலாளித்துவத்திற்குமான எதிர்ப்பு, குற்றமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆகவே தான் அரசியல்சட்ட பாதுகாப்பிற்கான கூட்டரசாங்க அலுவலகத்தின், ஜேர்மனியின் இரகசிய சேவை இவ்வாறே அழைக்கப்படுகிறது, சமீபத்திய வருடாந்திர அறிக்கை AfD மற்றும் அதன் பாசிச சுற்றுவட்டம் குறித்து குறிப்பிடவும் கூட இல்லை. அதேநேரத்தில், முதலாளித்துவத்தின் மீதும் அதன் பின்விளைவுகள் மீதுமான —சமூக சமத்துவமின்மை, போர், இனவாதம் மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவுகள் போன்றவை— எந்த விமர்சனத்தையும், குறிப்பாக, ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவு குறித்து பல ஆண்டுகளாக எச்சரித்து வருக்கின்ற சோசலிச சமத்துவக் கட்சியின் விமர்சனத்தை, “இடது-சாரி தீவிரவாதம்” என்றும் “அரசியலமைப்பு-விரோதமானவை” என்றும் இந்த அறிக்கை கண்டனம் செய்கிறது.

இரண்டாம் உலகப் போர் முடிந்து சுமார் 73 ஆண்டுகளின் பின்னர், ஜேர்மன் ஏகாதிபத்தியமானது, வரலாற்றின் மாபெரும் குற்றங்களில் உச்சம்கண்டதாய் இருந்த இராணுவவாத மற்றும் வெளியுறவுக் கொள்கை பாரம்பரியங்களுக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறது. இப்போது அனைத்துமே, போருக்கு எதிரான போராட்டத்தை அதன் காரணமான முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்துடன் ஒன்றுபடுத்துகின்ற, தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதையே சார்ந்திருக்கின்றது. இதுவே SGP மற்றும் உலகெங்குமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளது இலக்காகும்.