ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Socialist Equality Party (US) holds Fifth National Congress

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி ஐந்தாவது தேசிய மாநாட்டை நடத்துகிறது

3 August 2018

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி ஜூலை 22-27 இல் தென்கிழக்கு மிச்சிகனில் அதன் ஐந்தாவது தேசிய மாநாட்டை நடத்தியது. “வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியும், சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்,” என்ற பிரதான மாநாட்டு தீர்மானமே பரந்த விவாதத்தின் கருப்பொருளாக இருந்தது. வரைவு ஆவணத்தின் வெவ்வேறு பகுதிகளைத் திருத்துவது அல்லது தெளிவுபடுத்துவதற்கான முன்மொழிவுகளை உள்ளடக்கிய நான்கு நாட்கள் விவாதத்திற்குப் பின்னர், அத்தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அம்மாநாடு ஜூலியான் அசாஞ்சை இன்னலுக்கு உட்படுத்துவதைக் கண்டிக்கும் ஒரு தீர்மானத்தையும் ஏற்றுக் கொண்டதுடன், அவரது சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒரு சர்வதேச பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுத்தது.

அம்மாநாடு சோசலிச சமத்துவக் கட்சியின் புதிய தேசியக் குழுவைத் தேர்ந்தெடுத்தது. அது டேவிட் நோர்த்தை மீண்டும் கட்சியின் தேசிய தலைவராக தேர்வு செய்தது. உள்வந்துள்ள தேசியக் குழு, ஜோசப் கிஷோரை தேசிய செயலராகவும், லாரன்ஸ் போர்ட்டரை துணை தேசிய செயலராகவும், பாரி கிரேயை உலக சோசலிச வலைத் தளத்திற்கான அமெரிக்க தேசிய ஆசிரியராகவும் மீண்டும் தேர்ந்தெடுத்தது.

சோசலிச சமத்துவக் கட்சியின் மாநாடு, 2016 இல் நடத்தப்பட்ட நான்காவது மாநாட்டிற்குப் பின்னர், அமெரிக்காவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கட்சிக்குள் கணிசமானளவுக்கு புதிய உறுப்பினர்களின் உள்வரவைப் பதிவு செய்தது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த தேசியக் குழுவில் கடந்த ஐந்தாண்டுகளில் கட்சியில் இணைந்துள்ள பல உறுப்பினர்கள் உள்ளடங்கி உள்ளனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சகோதர சோசலிச சமத்துவக் கட்சிகளின் பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்து கொண்டனர். ICFI இன் மத்திய மற்றும் தென் அமெரிக்க ஆதரவாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

அமெரிக்கா மற்றும் சர்வதேச அரசியல் நிலைமைகளை மீளாய்வு செய்த பலதரப்பட்ட பரந்த மற்றும் விரிவான விவாதத்தில் பங்கெடுத்த மாநாட்டு பிரதிநிதிகள், கடந்த இரண்டாண்டுகளில் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் கட்சியின் அனுபவங்களை ஆய்வு செய்து, சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளை விவரித்தனர். அங்கே அமெரிக்காவில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி, இணைய தணிக்கைக்கு எதிரான SEP இன் போராட்டம், ஜூலியான் அசாஞ்சை இன்னலுக்கு உட்படுத்துவதற்கு எதிராக SEP மற்றும் ICFI இன் பிரச்சாரம், ட்ரம்ப் நிர்வாகத்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல், #MeToo பிரச்சாரம் மற்றும் போலி-இடது அரசியலின் வலதுசாரி குணாம்சம் குறித்த பிரத்யேக அறிக்கைகளும் விவாதங்களும் நடந்தன.

மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரதான தீர்மானம், உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழ்ந்த நெருக்கடியை வலியுறுத்துகிறது. அது பின்வருமாறு தொடங்குகிறது:

இந்த உலக முதலாளித்துவ அமைப்புமுறை, சீரழிந்துவரும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அதீத செல்வத் திரட்சியால் தூண்டிவிடப்பட்ட பரந்தளவிலான அதிருப்தி, தீவிரமடைந்து வரும் வர்க்க மோதல், மற்றும் முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் அமைப்புகள் மதிப்பிழந்திருப்பது ஆகியவற்றால் குணாம்சப்பட்ட, கூர்மையான சமூக மற்றும் அரசியல் நெருக்கடி காலத்திற்குள் நுழைந்துள்ளது. முதலாளித்துவம் அதன் இயல்பிலேயே நேர்மையற்றது என்பதுடன், பொருளாதார அமைப்புமுறையில் அடிப்படை மாற்றங்கள் அவசியப்படுகின்றன என்ற உணர்வும் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் இளைஞர்களின் கணிசமான பிரிவுகளிடையே அதிகரித்து வருகிறது.

டேவிட் நோர்த் இந்த கருத்துருவை விளக்கி, அம்மாநாட்டின் தனது அறிமுக அறிக்கையில், அம்மாநாடு எம்மாதிரியான அசாதாரண நிலைமைகளின் கீழ் நடத்தப்படுகிறது என்பதை ஆய்வுக்குட்படுத்தினார்: அதாவது, சர்வதேச கூட்டணிகளின் முறிவு; அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எழுச்சி மற்றும் அனைத்து பிரதான முதலாளித்துவ சக்திகளின் இராணுவக் கட்டமைப்பு; அரசின் உயர்மட்டங்களுக்குள் மூர்க்கமான மோதல்கள்; இணைய தணிக்கை உட்பட ஆளும் வர்க்கம் எதேச்சதிகாரவாதத்திற்கு திரும்புதல்; மற்றும் சமூக சமத்துவமின்மையின் அதீத வளர்ச்சி ஆகிய நிலைமைகளையாகும்.

நோர்த், அமெரிக்காவில் ஆளும் வர்க்கத்தின் அனைத்து கன்னைகளது பிற்போக்குத்தனமான மற்றும் ஜனநாயக-விரோத குணாம்சத்தை அழுத்தமாக வலியுறுத்தினார்:

ட்ரம்ப்புக்கும் மற்றும் அவரை எதிர்க்கும் ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஓர் ஆழ்ந்த அரசியல் பிளவு இருப்பதாக நம்புவது அப்பாவித்தனத்தின் உச்சக்கட்டமாக இருக்கும். யார் "மோசமானவர்" என்று தீர்மானிக்க முயல்வதானது, நீங்கள் ஒரு விஷப்பாம்பால் கடிபட விரும்புகிறீர்களா அல்லது மலைப்பாம்பால் இறுக்கப்பட்டு கொல்லப்படுவதை விரும்புகிறீர்களா என்று கேட்பதைப் போன்றிருக்கும். ஒரு தருணத்தில் நீங்கள் ட்ரம்ப்பை விட மோசமானவர் எவரும் இருக்க முடியாதென நினைக்கலாம். ஆனால் பின்னர், ஜனநாயகக் கட்சி செனட்டர் மார்க் வார்னர் ரஷ்யாவுக்கு எதிராக போர் அச்சுறுத்தல் விடுப்பதைப் பார்க்கையிலும், பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சியினர் வெறித்தனமாக "அமெரிக்கா, அமெரிக்கா!” என்று கூச்சலிடுவதையும் ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கையில், ட்ரம்ப் எவ்வளவோ நாகரீகமானவர் என்று தோன்றும். ஆகவே "உங்களது இரண்டு கட்சிகளுமே ஒரு தொற்றுநோய் தான்!” என்று ஷேக்ஸ்பியர் கூறியது தான் இதற்கு பொருத்தமான விடையாக இருக்கும்.

செப்டம்பர் 1938 இல், லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் முதல் மாநாடு நடத்தப்பட்டதன் 80 வது நினைவாண்டே நோர்த் அறிக்கையின், பிரதான மாநாட்டு தீர்மானம் மற்றும் மாநாட்டு விவாதத்தின் மையக் கருத்துருவாக இருந்தது. மாநாட்டில் பங்களித்தவர்கள் பலரும், நான்காம் அகிலம் அதன் வரலாறு நெடுகிலும் பாதுகாத்து வந்துள்ள மரபியத்திற்கும், பரந்த பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அபிவிருத்தி அடைந்து வரும் நனவுக்கும் இடையிலான உறவைக் குறித்து விவாதித்தனர்.

“2018ன் சரியான நிலைப்பாட்டிலிருந்து பார்க்கையில் தெளிவாகத் தெரிவது”, “1938 இல் நான்காம் அகிலம் எதன் அடித்தளத்தில் ஸ்தாபிக்கப்பட்டதோ, 1953 இல் அனைத்துலக குழு ஸ்தாபிக்கப்படுவதற்குக் காரணமான பகிரங்க கடிதம் எதைத் தாங்கிப்பிடித்ததோ, அந்த வரலாற்றுப் பகுப்பாய்வும், கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டமும் ஒட்டுமொத்த வரலாற்று அபிவிருத்தியின் போக்கில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன என்பதில் எந்த கேள்வியும் இல்லை,” என்று பிரதான தீர்மானம் குறிப்பிடுகிறது.

வரலாற்று நனவுக்கும் சோசலிச நனவுக்கும் இடையிலான உறவை நோர்த் தனது அறிக்கையில் விவரித்தார். “மார்க்சிஸ்ட்களைப் பொறுத்த வரையில், எப்போதுமே கடந்த அனுபவங்களினூடாக வேலை செய்வது என்பது எதிர்கால போராட்டங்களுக்கான இன்றியமையா தயாரிப்பாகும்,” என்றார்.

அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளும் தொழிலாள வர்க்க போராட்டங்களுள் வெறுமனே முழக்கங்களையும், கோரிக்கைகளின் ஒரு தொகுப்பையும் மட்டும் அறிமுகப்படுத்துவதில்லை. இவை குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டவை தான், என்றாலும் தொழிலாள வர்க்கத்திற்கு கல்வியூட்டுவதற்கும் மற்றும் சோசலிச புரட்சி நடத்த அவசியமாகும் மட்டத்திற்கு அதன் அரசியல் நனவை உயர்த்துவதற்கும் அவை போதுமானவை அல்ல. நெருக்கடியை மற்றும் அது எதிர்கொண்டிருக்கும் பணிகளைப் புரிந்து கொள்வதற்கு, தொழிலாள வர்க்கம் அது வாழ்ந்து வரும் மற்றும் போராடி வரும் வரலாற்று சகாப்தத்தின் இயல்பைப் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்திற்கும் மேலாக, புரட்சிகர மூலோபாயம் மற்றும் உரிய உத்திகளை வகுப்பதில், தொழிலாள வர்க்கம் கடந்த நூற்றாண்டின் பிரதான அரசியல் சம்பவங்கள் மற்றும் புரட்சிகர போராட்டங்களைக் குறித்து போதுமான மட்டத்திற்குப் புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். இறுதியாக, தொழிலாள வர்க்கம் அதன் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறும் அமைப்புகள் மற்றும் போக்குகளை மதிப்பீடு செய்வதைப் பொறுத்த வரையில், அவற்றின் வரலாறு, அவற்றின் அரசியல் பாரம்பரியம் மற்றும் கடந்த கால போராட்டங்களில் அவை வகித்த பாத்திரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பாரிய சோசலிச இயக்கத்தின் அபிவிருத்தியானது SEP மற்றும் ICFI இன் நடவடிக்கைகளைச் சார்ந்துள்ளது என்பதை பிரதான தீர்மானம் வலியுறுத்துகிறது. விவாதத்தின் போது, பங்கெடுத்தவர்களில் பலரும் தீர்மானத்தின் பின்வரும் பகுதியை மேற்கோளிட்டனர்:

இந்த வரலாற்று நிலைமைக்குள், புரட்சிகர கட்சியானது புறநிலை நெருக்கடியின் விளைவைத் தீர்மானிப்பதில் அதுவே ஒரு ஆழ்ந்த காரணியாகும். புரட்சிகரக் கட்சியினது தலையீட்டின் தாக்கத்தை விட்டுவிட்டு அரசியல் சாத்தியப்பாடுகளின் யதார்த்தபூர்வ மதிப்பீடுகளையும் புறச்சூழலையும் மதிப்பிடலானது, மார்க்சிசத்திலிருந்து முற்றிலும் அன்னியப்படுவதாகும். மார்க்சிச புரட்சிகர கட்சி வெறுமனே சம்பவங்களின் மீது கருத்துக்களை வழங்குவதில்லை, அது பகுப்பாய்வு செய்யும் சம்பவங்களில் தலையீடு செய்து, அதன் தலைமை மூலமாக தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தினூடாக உலகை மாற்ற பாடுபடுகிறது.

தொழிலாள வர்க்கத்தில் ஒரு சுயாதீனமான, புரட்சிகர, சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே சோசலிச சமத்துவக் கட்சியின் மத்திய பணியாகும். இதற்கு, அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் மற்றும் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு போன்ற குழுக்கள் உட்பட உயர்-நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட பிரிவுகளின் சமூக நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் போலி-இடது அரசியலுக்கு எதிரான ஒரு போராட்டம் அவசியமாகிறது. இது பெருநிறுவன நிர்வாகத்தின் மற்றும் அரசின் முகவர்களாக செயல்படுகின்ற மற்றும் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக செயல்பட்டு வருகின்ற தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தையும் அவசியப்படுத்துகிறது.

மாநாட்டில் பரந்த விவாதப் பொருளாக இருந்த பிரதான தீர்மானத்தின் ஒரு முக்கிய பகுதி, “வர்க்கப் போராட்டத்தின் தர்க்கமும், பொது வேலைநிறுத்தமும்" என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அது குறிப்பிடுகிறது, இதற்கு முன்னர் ஒருபோதும் பார்த்திராத அளவில் சமூக போராட்டங்கள் ஏறக்குறைய முற்றிலுமாக தவிர்க்கவியலாமல் அமெரிக்காவில் வெடித்துள்ளன, இத்தகைய போராட்டங்களில், “உடனடி பிரச்சினை என்னவாக இருந்தாலும் அல்லது எந்த இடத்தில் நடந்தாலும்,” “மில்லியன் கணக்கான தொழிலாளர்களைப் போராட்டத்தில் செயலூக்கத்துடன் பங்குபற்றுவதற்கு விரைவாக உள்ளிழுக்கும்." அது தொடர்ந்து குறிப்பிட்டது: “தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்களை எடுத்துக்கொண்டால், சமூகப் போராட்டங்களின் இந்த ஒன்றுதிரள்வின் தர்க்க விளைவு ஒரு பொது வேலைநிறுத்தமாக இருக்கும் என்பதோடு, அது அரசியல் அதிகாரத்திற்கான கேள்வியை எழுப்பும்.”

அத்தகைய ஒரு வேலைநிறுத்தத்திற்குத் தயாரிப்பு செய்ய, தொழிலாள வர்க்கம் "முக்கிய வேலையிடங்கள் மற்றும் அண்டை வசிப்பிடங்களில் ஒன்றோடொன்று இணைந்த குழுக்களின் வலையமைப்பை" உருவாக்க வேண்டும், இதற்கான அவசியமும் தொழிலாள வர்க்க விரோத தொழிற்சங்களுடன் தொழிலாளர்களுக்குக் கிடைத்த அனுபவங்களில் இருந்தே எழுகிறது என்று அத்தீர்மானம் குறிப்பிடுகிறது. மாநாட்டின் பிரதான அறிக்கைகளில் ஒன்றில், WSWS இன் தொழிலாளர் பிரிவு ஆசிரியர் ஜெர்ரி வைட், தொழிற்சங்கங்களுக்கு எதிராக அமெரிக்காவில் அபிவிருத்தி அடைந்த ஆசிரியர்களின் வேலைநிறுத்த அலை உட்பட கடந்தாண்டு அனுபவங்களை விரிவாக மீளாய்வு செய்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் ஜோசப் கிஷோர் கூறுகையில், இம்மாநாடு கட்சி முகங்கொடுக்கும் அளப்பரிய பணிகளைக் குறித்த நனவால் உயிரூட்டப்பட்டிருப்பதாக தெரிவித்தார். “ஆளும் வர்க்கம் ஜனநாயக உரிமைகள் மீது நீண்டகால தாக்குதல்களைத் திணிக்க வேகமாக நகர்ந்து வருகிறது,” என்று கூறிய அவர், “இணையத்தை மூடுவது மற்றும் தணிக்கை செய்வதற்கான முயற்சிகளும் இதில் உள்ளடங்கும், இவை அனைத்திற்கும் மேலாக உலக சோசலிச வலைத் தளத்தை இலக்கில் வைத்துள்ளன. செல்வந்த தட்டானது அதன் அரசியல் வடிவங்களை —தாங்கொணா சமூக சமத்துவமின்மை மட்டங்கள் மற்றும் உலகப் போருக்கான முன்னேறிய தயாரிப்புகள் ஆகியவை உட்பட— முதலாளித்துவ சமூகத்தின் குணாம்சத்துடன் ஒத்திசையச் செய்து வருகிறது என்றவர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும், உலகெங்கிலுமான பெருந்திரளான அனைத்து தொழிலாளர்களின் நலன்களை எடுத்துரைக்கும் மற்றும் வெளிப்படுத்தும் SEP மற்றும் ICFI இன் கோட்பாடுகளையும் வரலாற்றையும் புரிந்து கொண்டதில் வேரூன்றிய புரட்சிகர நன்னம்பிக்கைவாதத்தின் உத்வேகத்தாலும் இம்மாநாடு குணாம்சப்பட்டுள்ளது என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். “தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் தலைமையாக SEP மேலுயரும் என்பதிலும், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகப் போராடுவதற்கு ஒரு வழி தேடும் பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ட்ரொட்ஸ்கிசத்தின் பதாகையை வென்றெடுக்கும் என்பதிலும்,” “எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,” என்றவர் தெரிவித்தார்.