ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Julian Assange and the betrayal of Latin America’s “left”

ஜூலியான் அசான்ஜூம், இலத்தீன் அமெரிக்க "இடதின்" காட்டிக்கொடுப்பும்

Bill Van Auken
28 July 2018

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியான் அசான்ஜை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் ஒப்படைப்பது குறித்து ஈக்வடோர் அரசாங்கம் மும்முரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதை வெள்ளியன்று ஈக்வடோர் ஜனாதிபதி லெனின் மொரேனோ தெளிவுப்படுத்தினார், இலண்டன் நடைபாதைகளில் அசான்ஜ் அடியெடுத்து வைக்கும் அந்த கணமே அவரைப் பிடிக்க பிரிட்டிஷ் போலிஸ் ஈக்வடோரிய தூதரகத்திற்கு வெளியே காத்துக் கொண்டிருக்கிறது.

அவர் பிரிட்டிஷ் அதிகாரிகளின் பிடியில் சிக்கினால், நீண்ட சிறைவாசத்திற்கு உள்ளாக்கப்படுவார் என்பதோடு அமெரிக்காவிடம் ஒப்படைப்பதும் நிலுவையில் உள்ளது, அங்கே அவர் உளவுபார்ப்பு மற்றும் சதி குற்றச்சாட்டுக்களின் பேரில் ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையே கூட முகங்கொடுக்கக்கூடும்.

பிரதான ஏகாதிபத்திய சக்திகளுடன் அவரும் அவரின் அரசாங்கமும் நன்மதிப்பைப் பெறுவதற்காக ஐரோப்பிய பயணம் மேற்கொண்டு வரும் மொரேனோ, அவர் வழியில் வெள்ளியன்று அசான்ஜ் மீது பழிச்சுமத்த நகர்ந்தார்.

“திரு. அசான்ஜ் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுடன் நான் ஒருபோதும் உடன்பட்டதில்லை,” என்றார். “அரசாங்கங்கள் மற்றும் நபர்களது சில விரும்பத்தகாத நடவடிக்கைகளை வெளிச்சமிடுவது எந்தளவுக்கு மதிப்புடையதாக இருந்தாலும், தகவல்களைத் திரட்டுவதற்காக மக்களின் மின்னஞ்சல்களை ஊடுருவுவதுடன் நான் ஒருபோதும் உடன்படுவதில்லை… அதை செய்வதற்கு சரியான மற்றும் சட்டபூர்வ வழிமுறைகள் உள்ளன,” என்றார்.

முன்னதாக, மொரேனோ அசான்ஜை ஒரு "ஊடுருவும் நபர்" (hacker) என்றும், “நீண்டகால பிரச்சினை" மற்றும் "நம் காலணியில் மாட்டிய கல்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

எது என்னவாக இருந்தாலும் அசான்ஜோ அல்லது விக்கிலீக்ஸோ எவரேனும் மின்னஞல்களை ஊடுருவினார்கள் அல்லது எந்தவொரு சட்டத்தையும் மீறினார்கள் என்ற விடயத்தைப் பொறுத்த வரையில், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வாஷிங்டன் மற்றும் பிற அரசாங்கங்களாலும் மற்றும் பன்னாட்டு பெருநிறுவனங்களாலும் நடத்தப்பட்ட ஏகாதிபத்திய போர் குற்றங்கள், பெருந்திரளான மக்கள் மீதான கண்காணிப்பு மற்றும் ஜனநாயக-விரோத சூழ்ச்சிகள் மற்றும் சதிகள் குறித்து, அவர்களால் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த உலக தகவல்களை மக்கள் அறிய செய்து, அசான்ஜ் ஒரு தைரியமான மற்றும் சமயோசிதமான பத்திரிகையாளராக மதிப்பிடவியலாத பணியைச் செய்துள்ளார்.

இத்தகைய குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக அவர் அரசியல் இன்னல்களை முகங்கொடுக்கிறார் என்பதற்கு தெளிவான ஆதாரம் இருந்ததால்தான், 2012 இல் ஜனாதிபதி ரஃபேல் கோரேயாவின் முந்தைய ஈக்வடோர் அரசாங்கத்தால் அசான்ஜிற்கு அடைக்கலம் வழங்கப்பட்டது.

அசான்ஜிற்குத் தஞ்சம் வழங்குவதற்கான கியூட்டோவின் (ஈக்வடோர் தலைநகர்) முடிவை அறிவித்து ஈக்வடோர் வெளியுறவுத்துறை அமைச்சர் ரிக்கார்டோ பாட்டினோ அறிவிக்கையில், அசான்ஜ் அம்பலப்படுத்தியதற்காக வாஷிங்டனின் பழிவாங்கும் நடவடிக்கைகள் "அவரின் பாதுகாப்பை, அடைக்கலத்தை மற்றும் அவர் வாழ்வையே கூட ஆபத்திற்கு உட்படுத்தும்" என்று அறிவித்திருந்தார். “திரு. அசான்ஜ் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டால், அவர் மீது ஒரு நியாயமான வழக்கு விசாரணை நடக்காது என்பதையே ஆதாரங்கள் காட்டுகின்றன. அவர் குரூரமாக, தரக்குறைவாக கையாளப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ கூட விதிக்கப்படலாம் என்பது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றல்ல,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

அதற்கு பின்னர் என்ன மாறியுள்ளது? அசான்ஜ் ஈக்வடோரிய தூதரகத்தில் சிக்கி கடந்த ஆறாண்டுகளாக அங்கே செலவிட்டுள்ளார். முன்னாள் சிஐஏ இயக்குனரும் தற்போதைய வெளியுறவுத்துறை செயலருமான மைக் பொம்பியோ, விக்கிலீக்ஸ் ஒரு "அரசு-சாரா விரோத உளவுத்துறை சேவை, பெரும்பாலும் இது ரஷ்யா போன்ற அரசு நடவடிக்கையாளர்களுக்குத் துணைபோகிறது” என்று அறிவித்து, அதன் வெளியீடுகள் அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டத்திருத்தத்தை பாதுகாக்கவில்லை என்றும் பிரகடனப்படுத்தி, ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க உள்நோக்கங்களை இன்னும் வெளிப்படையாக மட்டுமே எடுத்துக்காட்டியுள்ளது.

மோசடி வழக்கை முகங்கொடுப்பதற்காக அசான்ஜை சங்கிலியோடு அமெரிக்காவுக்கு கொண்டு வருவதே அமெரிக்க நீதித்துறையின் "முன்னுரிமை" என்று அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செஸ்சன்ஸ் வலியுறுத்தி உள்ளார்.

ஈக்வடோரிய ஜனாதிபதி மொரேனோ வெள்ளிக்கிழமை அறிவிப்பில் கூறுகையில், “அவர் உயிருக்கு ஆபத்திருக்காது என்றவொரு உத்தரவாதத்தை மட்டுமே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் அது குறித்து பேசியுள்ளோம், சொல்லப்போனால், இது சம்பந்தமாக திரு. அசான்ஜின் சட்டக் குழுவுடனும், பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் பேசி வருகிறோம்,” என்றார்.

அசான்ஜிற்கு தஞ்சம் வழங்கியதைத் திரும்ப பெறுவதற்கும் மற்றும் அவரை இன்னலுக்கு உள்ளாக்குபவர்களிடம் அவரை ஒப்படைப்பதற்கும் பிரதி உபகாரமாக, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து அசான்ஜ் தூக்கிலிடப்பட மாட்டார் என்ற மதிப்பற்ற வாக்குறுதியை மட்டுமே ஈக்வடோரிய அரசாங்கம் நிபந்தனையாக முன்வைத்திருப்பதாக தெரிகிறது. அதாவது, "குரூரமாக, தரக்குறைவாக கையாளப்படுவது" மற்றும் "ஆயுள் தண்டனை" உள்ளடங்கலாக, 2012 இல் ஈக்வடோரிய அதிகாரிகளால் மேற்கோளிடப்பட்ட அசான்ஜிற்கான மற்ற அச்சுறுத்தல்கள் இப்போது வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

பிரிட்டிஷ் அரசாங்கத்துடனான அவரது பேச்சுவார்த்தைகளுக்கு கூடுதலாக, மொரேனோ ஸ்பெயினுக்கு விஜயம் செய்து, பெட்ரோ சான்சேஸ் தலைமையிலான வலதுசாரி சோசலிச தொழிலாளர் கட்சி (PSOE) சிறுபான்மை அரசாங்கத்துடனும் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார், அதேவேளையில் ஈக்வடோரிய சந்தைகள், ஆதாரவளங்கள் மற்றும் மலிவு உழைப்பை ஸ்பானிய முதலாளித்துவவாதிகள் தங்குதடையின்றி அணுகுவதற்கும் அவர் உத்தரவாதமளித்தார்.

முன்னாள் கட்டலோனிய பிராந்திய தலைவர் கார்லெஸ் புய்க்டெமொன்ட் ஐ கைது செய்ததற்காக அசான்ஜ் மாட்ரிட்டைக் கண்டித்ததன் மீதான ஸ்பெயினின் எதிர்ப்புகள் தான், அசான்ஜின் இணைய அணுகுதலை மொரேனோ அரசாங்கம் வெட்டுவதற்கும், தொலைபேசி அழைப்புகள் அல்லது பார்வையாளர்களை அவர் சந்திப்பதிலிருந்து அவரைத் தடுப்பதற்கும் இட்டுச் சென்று, ஒரு சிறைக் கைதியை விட குறைந்த உரிமைகளோடு அவரைக் தனிமைக் காவலில் அடைந்து கிடக்குமளவுக்கு அவரைக் குறைத்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கே என்ன சம்பந்தப்பட்டுள்ளது என்றால், அது லெனின் மொரேனோ அரசாங்கத்தினது மட்டுமல்ல, மாறாக இலத்தீன் அமெரிக்காவில் உள்ள ரோஜா நிறப் பேரலை (Pink Tide) என்றழைக்கப்படும் மற்றும் அவர்களின் போலி-இடது துணை அமைப்புகளின் அனைத்து அரசாங்கங்களது வலதை நோக்கிய ஒரு கூர்மையான திருப்பமாகும்.

வெனிசூலாவின் மறைந்த ஹ்யூகோ சாவேஸ் இன் "பொலிவேரிய புரட்சியைச்" சேர்ந்தவராக தன்னைத்தானே பிரகடனப்படுத்தி கொண்ட முன்னாள் ஜனாதிபதி ரஃபேல் கோரேயாவை அடுத்து விருப்பத்திற்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் மொரேனோ. மொரேனோ மற்றும் கோரேயாவுக்கு இடையே கடுமையான பூசல்கள் இருந்தாலும், ஏகாதிபத்தியத்துடன் நல்லிணக்கமாக இருப்பது மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவது ஆகிய வலதுசாரி கொள்கைகள் கோரேயாவின் கீழ் தொடங்கப்பட்டது, இவரது அரசாங்கம்தான், ஹிலாரி கிளிண்டனின் வெற்றியை மற்றும் பேர்ணி சாண்டர்ஸின் தோல்வியை உறுதிப்படுத்துவதற்காக ஜனநாயகக் கட்சி 2016 ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சாரத்தில் சூழ்ச்சி செய்ததை அம்பலப்படுத்திய மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் பிரசுரித்ததை பழி வாங்குவதற்காக, அசான்ஜின் இணைய அணுகுதலை முதலில் வெட்டியது.

இதற்கிடையே இலத்தீன் அமெரிக்காவில் "இடதை நோக்கிய திருப்பம்" என்றழைக்கப்பட்டதுடன் அடையாளம் காணப்பட்ட மற்ற அரசாங்கங்களும் முற்றிலுமாக மதிப்பிழந்துள்ளன. சாவேஸை அடுத்து வந்த நிக்கோலஸ் மாதுரோ வெனிசூலாவின் கடும் பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் வைத்துள்ளார், அதேவேளையில் அவர் அந்நாட்டின் செல்வந்த தட்டுக்கள் மற்றும் இராணுவ தளபதிகளின் செல்வவளம் மற்றும் தனிச்சலுகைகளுக்கும், அத்துடன் சர்வதேச வங்கிகளுக்கு கடன்களைத் திரும்ப செலுத்துவதற்கும் உத்தரவாதம் அளித்துள்ளார்.

நிக்கரகுவா சாண்டினிஸ்டா ஜனாதிபதி டானியல் ஓர்டேகா (Daniel Ortega) சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை நசுக்க ஓர் இரத்த ஆறைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார், இது 400 பேர் இறப்பதில் போய் முடிந்தது. பிரேசிலில், தொழிலாளர் கட்சியின் (PT) முன்னாள் தலைவர் லூலா சிறையில் உள்ளார், அதேவேளையில் தொழிலாளர் கட்சி அதன் சொந்த ஜனநாயக-விரோத நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்களால் முற்றிலுமாக மதிப்பிழந்துள்ளதுடன், இராணுவ சர்வாதிகாரத்திற்குப் பிந்தைய மிகவும் வலதுசாரி அரசாங்கத்திற்கும் மற்றும் பகிரங்கமான பாசிசவாத வேட்பாளரான ஜெயர் போல்சோனாரோவுக்கும் (Jair Bolsonaro) பாதையைத் திறந்துவிட்டுள்ளது.

குட்டி-முதலாளித்துவ தேசியவாதம் மேலோங்கிய, தேசிய தொழிலாளர் அதிகாரத்துவ நோக்குநிலையோடு, நாடாளுமன்ற பதவிகளுக்காக முண்டியடித்துக் கொண்டு அடையாள அரசியலை ஏற்றுள்ள இலத்தீன் அமெரிக்க போலி-இடது, பெரிதும் அசான்ஜ் மீதான தாக்குதல்களைப் புறக்கணித்துள்ளதுடன், அவரின் பாதுகாப்புக்காக ஒரு சுண்டுவிரலைக் கூட தூக்க மறுக்கிறது மற்றும் அவர் தலைவிதியோடு பிணைந்துள்ள தீர்க்கமான ஜனநாயக மற்றும் சமூக நலன்களை இலத்தீன் அமெரிக்க தொழிலாளர்களுக்கு தெரிவிக்க தவறுகிறது.

அர்ஜென்டினாவின் பிரதான போலி-இடது கட்சிகளான PTS (Partido de los Trabajadores Socialistas) மற்றும் PO (Partido Obrero) ஆகியவற்றின் எதிர்வினை—அல்லது, இன்னும் துல்லியமாக கூறுவதானால், எதிர்வினையின்மை—குறிப்பிடத்தக்க உதாரணமாக உள்ளது, இவை, அவற்றிற்கு இடையே என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், “இடது மற்றும் தொழிலாளர்களின் முன்னணி" (FIT) என்றவொரு கோட்பாடற்ற தேர்தல் கூட்டில் இணைந்துள்ளன.

அசான்ஜ் குறித்து PTS இன் வலைத் தளம், Izquierda Diario இல், கடைசியாக ஏப்ரல் 3, 2017 இல் தான் முக்கிய கட்டுரை வெளியானது. அது, “லெனின் மொரேனோ வெற்றி பெற்றுள்ள நிலையில், ஜூலியான் அசான்ஜ் ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து வெளியேறுவது தவிர்க்கப்பட்டுள்ளது” என்று அதன் தலைப்பில் அறிவித்தது. வலதுசாரி முதலாளித்துவ அரசியல்வாதி மொரேனோ மீது பிரமைகளை விதைத்தும் மற்றும் அசான்ஜ் முகங்கொடுத்த அபாயங்கள் குறித்து அகம் மகிழ்ந்தும், PTS உண்மையில் விக்கிலீக்ஸ் ஆசிரியரின் பாதுகாப்புக்குக் குழிபறித்தது.

PO ஐ பொறுத்த வரையில், அது ஐந்தாண்டுகளுக்கும் அதிகமாக அவர் விடயம் குறித்து எதையுமே எழுதாமல், அசான்ஜ் பிரச்சினையை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது. உள்நாட்டில் பெரோனிஸ்ட் தொழிற்சங்க அதிகாரத்துடன் ஒரு கூட்டணியை நோக்கியும், வெளிநாட்டில் ரஷ்ய ஸ்ராலினிசத்தின் தீவிர வலதுசாரி சக்திகளை நோக்கியும் நோக்குநிலை கொண்டுள்ள இக்கட்சி, இலத்தீன் அமெரிக்க குட்டி-முதலாளித்துவ தேசியவாதத்தின் பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்திற்கு முன்னுதாரணமாக விளங்குகிறது, இது அசான்ஜ் விடயத்தைப் பொறுத்த வரையில், ஏனைய பிற பிரதான அரசியல் பிரச்சினைகளைப் போலவே, தொழிலாள வர்க்கத்தின் மீது ஏகாதிபத்திய அழுத்தத்தைப் பாய்ச்சுவதற்கு வடிகாலாக சேவையாற்றுகிறது.

ஜூலியான் அசான்ஜைப் பாதுகாக்கும் பணியானது—மிகப் பரந்தளவில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறை, சமூக சமத்துவமின்மை மற்றும் வறுமையிலிருந்து இலத்தீன் அமெரிக்காவை விடுவிப்பதுடன் சேர்ந்து, உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பணியானது—"இடது" முதலாளித்துவ கட்சிகள் எனப்படும் அனைத்து கட்சிகளிடமிருந்தும் மற்றும் அவற்றை ஆதரிக்கும் குட்டி-முதலாளித்துவ போலி-இடது குழுக்களிடமிருந்தும் சுயாதீனமாக அரசியல்ரீதியில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே அடையப் பெற முடியும்.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கான ஒரே உண்மையான ஆதரவுத் தளமாக இருப்பது தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும், உலகப் போர் மற்றும் சர்வாதிகாரத்துடன் மனிதயினத்தை அச்சுறுத்துகின்ற முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முடிவு கட்ட, சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தின் பாகமாக மட்டுமே இதை கைவரப்பெற முடியும்.

இலத்தீன் அமெரிக்க தொழிலாளர்கள் அசான்ஜின் பாதுகாப்பிற்கு முன்வந்து, உலகெங்கிலுமான அனைத்து தொழிலாளர் அணியில் இணைந்து, அவருக்குத் தஞ்சம் வழங்குவதை இரத்து செய்யும் ஈக்வடோர் அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான முயற்சியை நிறுத்த வேண்டும் என்றும், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளால் இன்னல்படுத்தப்படுவதில் இருந்து அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கோரி, அவரை கைது செய்வதற்கான அல்லது வேறு நாட்டிடம் ஒப்படைப்பதற்கான எந்தவொரு முயற்சிக்கு எதிராகவும் பாரிய போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்குத் தயாரிப்பு செய்ய வேண்டும்.