ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trade war and the eruption of economic nationalism

வர்த்தகப் போரும், பொருளாதார தேசியவாதத்தின் வெடிப்பும்

Nick Beams
22 June 2018

ஓராண்டுக்கு முன்னர், கூட்டறிக்கைகள் மற்றும் பிரகடனங்களில் "பாதுகாப்புவாதத்தை எதிர்க்கும்" கடமைப்பாடுகளை உள்ளடக்குவதற்கு அமெரிக்கா மறுத்தது தொடர்பாக பிரதான சர்வதேச பொருளாதார அமைப்புகளுக்குள் மோதல் இருந்தது.

இந்த சொற்பதத்தை, 2008 இல் உலகளாவிய நிதியியல் நெருக்கடி வெடித்ததற்கு விடையிறுப்பாக, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஜி20 போன்ற சர்வதேச அமைப்புகள் வழமையாக பயன்படுத்தி இருந்தன. உண்மையில் பிரதான முதலாளித்துவ சக்திகளின் தலைவர்கள், பெருமந்தநிலைக்குப் பிந்தைய அந்த மிக முக்கிய பொருளாதார முறிவுக்கு விடையிறுப்பாக, அதை தொடர்ந்து வந்த ஆண்டுகளில், 1930 களின் பாதையில் அவர்கள் செல்லவில்லை என்று தங்களைத்தாங்களே வழமையாக பாராட்டிக் கொண்டார்கள்.

வரலாற்றின் படிப்பினைகளைப் பெற்றிருப்பதாக கூறிய அவர்கள், அந்த மந்தநிலைமையை ஆழப்படுத்துவதிலும் இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்குரிய நிலைமைகளை உருவாக்குவதிலும் முக்கிய பாத்திரம் வகித்த வர்த்தக போர் மற்றும் பாதுகாப்புவாத நடவடிக்கைகள் மீண்டும் வராது என்று வாதிட்டனர்.

இந்த வார்த்தைப் போர் வெடிப்பின் பன்னிரெண்டு மாதங்களுக்குப் பின்னர், இன்று நிலைமை என்ன?

அமெரிக்கா, “தேசிய பாதுகாப்பு" என்பதைக் கையிலெடுத்து, ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் ஜப்பானில் இருந்து எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிகள் மீது 25 சதவீத இறக்குமதி வரிகள் விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இன்று பதிலடி வரிவிதிப்பை திணிக்க உள்ளது, அதேபோல கனடாவும் அமெரிக்கா மீது இறக்குமதி வரிவிதிப்பைத் திணிக்க தயாராகி வருகிறது.

அமெரிக்கா, உயர்-தொழில்நுட்ப பண்டங்களை இலக்கு வைத்து, 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பண்டங்கள் மீது அடுத்த மாதம் வரிவிதிப்புகளைத் திணிக்க தொடங்கும், இதற்கு கூடுதலாக 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பண்டங்கள் மீதும் தீர்வைச்சுமை பளுவைச் சுமத்தவும் மற்றும் பதில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான அச்சுறுத்தலை சீனா முன்னெடுத்தால், அதன் பின்னர் இன்னும் கூடுதலாக 200 பில்லியன் டாலர் வரிவிதிப்புக்கான சாத்தியக்கூறுகளுடனும் அச்சுறுத்தி உள்ளது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதிகளை அதிகரிப்பதற்கான சீனாவின் நகர்வுகளை அமெரிக்கா நிராகரித்துள்ள நிலையில், சீனா உடனான மோதலில் உள்ள முக்கிய பிரச்சினையில் பிரதானமானது, அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை அல்ல, மாறாக பெய்ஜிங் அதன் "சீன தயாரிப்பு 2025” திட்டத்தின் கீழ் அதன் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப தகைமைகளை விரிவாக்க நகர்ந்து வருகிறது என்பது தான். இந்த முன்னோக்கை அமெரிக்கா அதன் பொருளாதார மற்றும் இராணுவ மேலாதிக்கம் இரண்டுக்குமான ஓர் அச்சுறுத்தலாக கருதுகிறது.

இவ்வாரம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியான ஒரு கருத்துரையில், ட்ரம்பின் வெள்ளை மாளிகை பொருளாதார ஆலோசகர் பீட்டர் நவார்ரோ, “வளர்ந்து வரும் தொழில்நுட்ப தொழில்துறையில் மேலாதிக்கம் செலுத்துவதற்கான பெய்ஜிங்கின் துணிகர திட்டம்" என்று அவர் எதை குறிப்பிட்டாரோ அவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், “மூலோபாய தொழில்நுட்பங்களில்" சீனாவின் முதலீடு "அமெரிக்காவின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை அடித்தளத்திற்கு" “மரணகதியிலான அபாயத்தை" முன்னிறுத்துகிறது என்றும், “பொருளாதார பாதுகாப்பே தேசிய பாதுகாப்பு ஆகும்" என்றும் தெளிவுப்படுத்தினார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்கா நடத்தி வரும் பொருளாதாரப் போர்முறை, சீனாவை ஒரு பொருளாதார அரை-காலனி அந்தஸ்துக்கு குறைப்பதற்கான முனைவுடன் பிணைந்துள்ளது, இந்த திட்டநிரல் அவசியமானால் இராணுவ வழிவகைகளைக் கொண்டும் திணிக்கப்படலாம்.

அமெரிக்காவின் "மூலோபாய கூட்டாளிகள்" மற்றும் அது குறிப்பிடும் அதன் "மூலோபாய போட்டியாளர்" ஆன சீனா, இரண்டு தரப்புக்கு எதிராகவும் அமெரிக்கா திணித்து வரும் வர்த்தக போர் நடவடிக்கைகள், மனிதர்களின் உற்பத்தி சக்திகளது அபிவிருத்தியின் நிலைப்பாட்டிலிருந்து பார்க்கையில் முற்றிலும் பகுத்தறிவற்றதாகும்.

1930 களின் அழிவார்ந்த வர்த்த மற்றும் செலாவணி போர்களுக்குப் பிந்தைய எட்டுக்கும் அதிகமான தசாப்தங்களில், உலகளாவிய பொருளாதாரம் இன்னும் அதிக ஆழமாக ஒருங்கிணைந்த அமைப்பாக மாறியுள்ளது, அத்துடன் நடைமுறையளவில் ஒவ்வொரு பண்டமும் ஒரு பரந்த மற்றும் சிக்கலான சர்வதேச உழைப்பு பிரிவின் விளைபொருளாக உள்ளது, இதில் தயாரிப்புகளின் எத்தனையோ துணைபொருட்கள் அவற்றின் இறுதி வடிவத்தைப் பெறுவதற்கு முன்னதாக பலமுறையும் சர்வதேச எல்லைகளைக் கடந்து செல்கின்றன.

ஆனால் "அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக ஆக்குவோம்,” என்ற பதாகையின் கீழ் திணிக்கப்பட்ட அமெரிக்க நடவடிக்கைகளின் இந்த பகுத்தறிவற்றத்தன்மை, ஏதாவது விதத்தில் பின்னுக்கு இழுத்துக் கொள்ளப்படும் என்று அர்த்தம் கொள்ள முடியாது.

இதற்கு எதிர்விதமாக, சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னரே ட்ரொட்ஸ்கி அவதானித்ததைப் போல, தேசியவாத அடித்தளத்தில் ஒத்திசைந்த பொருளாதார அபிவிருத்தியின் சாத்தியக்கூறு முற்றிலும் சாத்தியமில்லை என்றாலும், ஓர் எதேச்சதிகார அல்லது பாசிசவாத அரசின் பொருளாதார தேசியவாதமானது "ஒரு புதிய போரின் தயாரிப்புக்கு தேசத்தின் சகல பொருளாதார சக்திகளையும் ஒன்றுதிரட்டும் பிரச்சினை என்பதாக இதுவரையில் அச்சுறுத்தும் யதார்த்தமாக" இருந்தது. இத்தகைய நடவடிக்கைகள், ஒரு புதிய உலகப் போர் "கதவுகளைத் தட்டுகிறது" என்பதையே அர்த்தப்படுத்துகின்றன.

ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகள் தற்போதைய சர்வதேச அரசியல் சூழலுக்கு ஒத்திருக்கின்றன. 1930 களைக் குணாம்சப்படுத்திய எதேச்சதிகார மற்றும் பாசிசவாத ஆட்சி வடிவங்களின் மீளெழுச்சிக்கு இடையே, ஒவ்வொரு நாட்டிலும், தாராளவாத ஜனநாயகத்தின் விதிமுறைகள் கிழிந்து வருகின்றன. அக்காலக்கட்டத்தைப் போலவே, இன்றும், மீண்டும் ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் கூறுவதானால், “ஒவ்வொருவரும், சுங்க சுவர் மற்றும் துப்பாக்கி முனையில் கட்டுக்களாலும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்டு, மற்றொருவருக்கு எதிராக தன்னைத்தானே காத்துக் கொள்கிறார்.”

உலக சோசலிச வலைத் தளம் நேற்றைய முன்னோக்கு கட்டுரையில் விவரித்ததைப் போல, இப்போது புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக ஓர் உலகளாவிய போர் நடக்கிறது. அமெரிக்காவில், கெஸ்டாபோ பாணியிலான வேட்டையாடல்கள் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான மொழிகளைப் பயன்படுத்தி தொடங்கப்பட்டு வருகின்றன, இவை ஜேர்மனியின் நாஜி ஆட்சியை நினைவூட்டுகின்றன. ஐரோப்பிய அரசியலில் —ஜேர்மனி, இத்தாலி, ஹங்கேரி மற்றும் ஏனைய இடங்களிலும்— அதிகரித்தளவில் வலதுசாரி மற்றும் பாசிசவாத இயக்கங்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளது, இவை 20 ஆம் நூற்றாண்டில் மிக மோசமான குற்றங்களை நடத்தியவர்களது தொனியில் பேசுகின்றன.

ஒட்டுமொத்த பொருளாதார ஒழுங்கமைப்பினது முறிவும் அதனை அடுத்து அதனால் உண்டாகும் அரசியல் விளைவுகளும், சர்வதேச ஸ்திரப்பாட்டிற்கு உத்தரவாதம் அளிப்பவராக கூறப்பட்ட அமெரிக்காவின் தலைமையில் நடந்து வருகின்றன என்ற உண்மையானது, மிக ஆழமான வரலாற்று முக்கியத்துவம் கொண்டுள்ளது.

வர்த்தக போர் தொடங்குவதும் மற்றும் பொருளாதார தேசியவாதத்திற்கு திரும்புவதும், உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழ்ந்த மற்றும் தீர்க்கவியலாத முரண்பாடுகளின் விளைவாகும், அனைத்திற்கும் மேலாக பொருளாதாரத்தின் உலகளாவிய குணாம்சத்திற்கும் மற்றும் போட்டி தேசிய-அரசுகளாகவும், சந்தைகள் மற்றும் இலாபங்களுக்காக ஒன்றுக்கு எதிராக ஒன்று போராடி வரும் வல்லரசுகளாகவும் உலகம் பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான முரண்பாடுகளின் விளைவாகும்.

1930 களின் இறுதி ஆண்டுகளில் மற்றும் போர் நடந்த ஆண்டுகளில், அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் முக்கிய பிரிவுகள், தேசியவாத கொள்கைளுக்கு அந்த தசாப்தத்தில் எந்தவிதத்திலும் திரும்புவது என்பது ஒரு பொருளாதார பேரழிவைக் கொண்டு வந்து, சோசலிச புரட்சிக்கான நிலைமைகளை உருவாக்கும் என்ற தீர்மானத்தை எட்டின. இந்த புரிதல்தான் சுதந்திர சந்தையை ஊக்குவிப்பதன் மீதும், பாதுகாப்புவாத மற்றும் அயல்நாட்டவரை பலி கொடுத்து தன்னை செழிப்பாக்கும் பொருளாதார நடவடிக்கைகளைக் கைத்துறப்பதன் மீதும் அடித்தளம் கொண்ட போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பைக் கட்டமைப்பதற்கான அடித்தளமாக இருந்தது.

அமெரிக்கா அதன் முன்னாள் பொருளாதார மற்றும் மூலோபாய போட்டியாளர்களை நசுக்க முயல்வதை விட்டுவிட்டு, பிரெட்டன் வூட்ஸ் நாணய உடன்படிக்கை, மார்சல் திட்டம், வரி மற்றும் வர்த்தகத்திற்குமான பொது உடன்படிக்கை (GATT) போன்ற நடவடிக்கைகள் மூலமாக அவற்றின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முனைந்தது. இந்த கொள்கைகள் எல்லாம் ஏதோ அமெரிக்க நல்லெண்ணத்தின் அடிப்படையில் நடத்தப்படவில்லை, மாறாக கணக்கிட்ட சுயநலன்களின் அடிப்படையில் இருந்தன — அதாவது அமெரிக்காவின் பொருளாதார விரிவாக்கமானது ஒட்டுமொத்தமாக உலக பொருளாதாரத்தின் விரிவாக்கத்தைச் சார்ந்திருந்தது என்பதை அது உணர்ந்திருந்தது.

இந்த கருத்துருக்கள் தான் போருக்குப் பிந்தைய பொருளாதார ஒழுங்கமைப்பிற்கு அடித்தளமாக இருந்தன. ஆனால் உலகப் பொருளாதாரத்தின் இந்த வளர்ச்சியே, உலக பொருளாதாரத்திற்குள்ளேயே ஒரே சீராக அமெரிக்காவின் மேலாதிக்க இடத்திற்கு குழி பறித்தது. கடந்த 30 ஆண்டுகளில், பூகோளமயப்பட்ட உற்பத்தி இந்த போக்கை தீவிரப்படுத்தி உள்ளன. இப்போது அமெரிக்கா அதன் பழைய போட்டியாளர்களான ஐரோப்பா மற்றும் ஜப்பானின் அதிகரித்து வரும் பொருளாதார சக்தியை மட்டும் எதிர்கொண்டிருக்கவில்லை, மாறாக சீனாவின் வடிவில் ஒரு புதிய "மூலோபாய போட்டியாளர்" எழுச்சி பெற்றிருப்பதையும் எதிர்கொள்கிறது.

போருக்குப் பின்னர் அமெரிக்கா உருவாக்கிய அதே அமைப்புமுறை, அமெரிக்காவின் இடத்தை விரிவாக்குவதற்கு பதிலாக, இப்போது அதை பலவீனப்படுத்தி வருகிறது என்ற முடிவுக்கு அமெரிக்க ஆளும் உயரடுக்கின் பிரிவுகள் வந்துவிட்டன. இந்த மதிப்பீடு ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து தொடங்கவில்லை, மாறாக ஒபாமா நிர்வாகத்தின் சர்வதேச பொருளாதார கொள்கைகளின் மையத்தில் வைக்கப்பட்டிருந்தது. பன்முகச்சார்பியத்தின் (multilateralism) அடிப்படையில் அல்ல, மாறாக உலகளாவிய பொருளாதார உறவுகளின் ஒரு வலையமைப்பின் மையத்தில் அமெரிக்காவை நிறுத்தும் ஒரு புதிய ஆட்சிமுறையை ஸ்தாபிப்பதன் மீது, ஒரு புதிய அமைப்புமுறை கட்டமைக்கப்பட வேண்டுமென அது வலியுறுத்தியது.

இது, சீனாவைத் தவிர்த்த, ஒபாமா நிர்வாகத்தின் பசிபிக் கடந்த நாடுகளது பங்காண்மைக்கான (TPP) முன்மொழிவுகளது தேசியவாத மையமாகவும், மற்றும் ஐரோப்பாவுக்கான ஒபாமாவின் அடுத்தடுத்த திட்டங்களாகவும் இருந்தது.

இந்த இரண்டு திட்டங்களையுமே ட்ரம்ப் ஒதுக்கி வீசிய போதினும், அவற்றின் இன்றியமையா உள்ளடக்கமாக இருந்த பொருளாதார தேசியவாதம் இப்போது அபிவிருத்தி செய்யப்பட்டு, இன்னும் அதிக வீரியமான வடிவில் விரிவாக்கப்பட்டுள்ளது. என்னென்ன வழிவகைகள் அவசியமோ, அதாவது வர்த்தக போர் மற்றும் பொருளாதார தேசியவாதத்தை செயல்படுத்துவது, அவசியத்திற்கேற்ப அதிகரித்தளவில் எதேச்சதிகார நடவடிக்கைகளை உள்ளெடுப்பது, உலகின் ஒவ்வொரு மூலையிலும் அமெரிக்க இராணுவ பலத்தைப் பலப்படுத்துவது என இவற்றைக் கொண்டு அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தை மீண்டும் ஸ்தாபிப்பதே இதன் நோக்கமாகும்.

ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க நேட்டோ கூட்டாளிகள் மீது ட்ரம்ப் திணித்திருக்கும் இறக்குமதி வரிகளை விமர்சித்தாலும் கூட, சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தகப் போர் நடவடிக்கைகளை அவர்கள் பாராட்டுகின்றனர், அவற்றின் விரிவாக்கத்தைக் கூட கோருகின்றனர். இந்த கொள்கைகளை இருகட்சிகளும் ஆதரிப்பதானது, வர்த்தகப் போர் மற்றும் பாதுகாப்புவாதம் ஆகியவை வெறுமனே ட்ரம்பின் விளைபொருள் அல்ல, மாறாக அமெரிக்க முதலாளித்துவத்தினது என்பதை தெளிவுபடுத்துகிறது.

வர்த்தகப் போர் மற்றும் பொருளாதார தேசியவாதத்தின் பைத்தியக்காரத்தனத்திற்கு முன்னால், ஏதோவிதத்தில், ஏதோ வழியில், அமெரிக்கா பகுத்தறிவோடு புரிந்து கொண்டு, அதன் போக்கைத் திரும்ப பெறாவிட்டாலும், திருத்திக் கொள்ளும் என்று வீணாக நம்புபவர்களும் இருக்கிறார்கள். இதுவொரு நப்பாசை தான். கடந்த காலத்திற்கு திரும்ப முடியாது ஏனென்றால் அது எதன் மீது அமைக்கப்பட்டுள்ளதோ அந்த பொருளாதார அடித்தளங்களைச் சிதைத்துவிடும்.

அரசியல் அதிகாரத்திற்காகவும் மற்றும் உலகை சோசலிசத்திற்கு மாற்றுவதற்காகவும் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட்டு போராட்டுவது மட்டுமே, உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் முறிவில் இருந்தும் மற்றும் அதைத் தொடர்ந்து அது உருவாக்கும் அனைத்து பயங்கரங்களில் இருந்தும் வெளிவருவதற்கான ஒரே வழியாகும்.