ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Recriminations, threats between US and allies continue after collapse of G7 summit

ஜி7 மாநாடு தோல்வியடைந்த பின்னர், அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் இடையே பரஸ்பர குற்றச்சாட்டுக்களும், அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன

By Barry Grey
12 June 2018

கியூபெக்கில் ஏழு நாடுகளின் குழுவினது இவ்வாரயிறுதி மாநாடு கசப்புணர்வோடு முடிவடைந்ததை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் அவரது உயர்மட்ட அதிகாரிகளும் கனேடிய பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மீதான அவர்களின் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி உள்ளதுடன், எஃகு மற்றும் அலுமினிய பண்டங்கள் மீது ஏற்கனவே திணித்த இறக்குமதி வரிகளுக்கு கூடுதலாக வாகன ஏற்றுமதிகள் மீதான வரிகளையும் விதிக்க அச்சுறுத்தி உள்ளனர்.

1975 க்குப் பின்னர் நடத்தப்பட்ட நீண்ட பல மாநாடுகளிலேயே முதல்முறையாக முழுமையாக தோல்வி அடைந்துள்ள இம்மாநாட்டை அடுத்து, முன்னொருபோதும் இல்லாதளவில் கசப்புணர்வுகளும் பிளவுகளும் பின்தொடர்கின்றன. இது, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் அமெரிக்கா கட்டமைத்த பொருளாதார ஒழுங்கமைப்பில் அடிப்படையான மற்றும் சீர்ப்படுத்தப்பட முடியாத முறிவையும், உலக முதலாளித்துவம் கணக்கிட முடியாத விளைவுகளோடு ஓர் உலகளாவிய வர்த்தகப் போருக்குள் மூழ்கி வருவதையும் சுட்டிக்காட்டுகிறது.

பதட்டங்களினதும் பெரும்பாலும் கசப்பான விவாதங்களினதும் இரண்டு நாட்களுக்குப் பின்னர், வாஷிங்டனுக்கும் ஏனைய ஜி7 சக்திகளுக்கும் இடையே ஆழமடைந்து வரும் பிளவை மூடிமறைக்க எழுதப்பட்டிருந்த ஜி7 அறிக்கையை ஆமோதிப்பதிலிருந்து ட்ரம்ப் திடீரென பின்வாங்கினார். கனேடிய பிரதம மந்திரியின் மாநாட்டு நிறைவு பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பின்னர், ட்ரம்ப் கிம் ஜோங்-உன் உடனான சிங்கப்பூர் சந்திப்புக்கு சென்ற வழியில் ஏர்ஃபோர்ஸ்-ஒன் தளத்திலிருந்து பல ட்வீட் செய்திகளை விசிறி, ட்ரூடோவை ஒரு பொய்யராகவும் பலம்குன்றியவராகவும் சாடினார்.

மாநாட்டுக்கு தாமதமாக வந்த ட்ரம்ப், காலநிலை மாற்றம் மீதான ஒரு அமர்வை தவிர்த்துவிட்டு, முன்னதாக புறப்பட்டு சென்றதுடன், புறப்படுவதற்கு முன்னதாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய அவர், அதில் கனடா மற்றும் ஐரோப்பா நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்றுவதாக குற்றஞ்சாட்டி மீண்டும் அவற்றை தாக்கினார், மேலும் ஜி7 இல் உள்ள ஏனைய நாடுகள் அமெரிக்காவை "ஒவ்வொருவரும் கொள்ளையிடுவதற்கான ஒரு வங்கி கருவூலம்" என்பதைப் போல கையாளுகின்றன என்று சாடினார்.

ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஜப்பான், கனடா மற்றும் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவம் செய்யும் மொத்தம் ஏழு நாடுகளது அரசு தலைவர்களும் ஓர் அறிக்கையில் கையெழுத்திட்டிருப்பதாக அறிவித்து, ட்ரூடோ அவர் பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடங்கினார். பிரதான முதலாளித்துவ அரசாங்கங்களின் அந்த வருடாந்தர உச்சிமாநாடுகளின் 45 ஆண்டுகால வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத விதத்தில், ஓர் இறுதி பிரகடனத்திற்கு ஒருமனதான ஆதரவைப் பெற முடியாமல் போகுமோ என வாரயிறுதியில் கவலை கொண்டிருந்த அங்கே கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் இருந்து ட்ரூடோவின் அறிவிப்பு கைத்தட்டலைப் பெற்றது.

கனடா பத்திரிகையாளர்களிடம் இருந்து வந்த கேள்விகளின் கீழ், ட்ரம்ப் திணித்த இறக்குமதி வரிகளை விமர்சித்த ட்ரூடோ ஜூலை 1 இல் இருந்து 12.8 பில்லியன் டாலர் பதிலடி வரிவிதிப்பைத் திணிக்கும் திட்டங்களுடன் அவர் முன்நகர இருப்பதாக அறிவித்தார். ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பேரம்பேசுவதை அவசியப்படுத்துகின்ற, ஒரு காலவரம்புக்கு உட்பட்ட வரையறையை (sunset clause) உள்ளடக்கிய திருத்தப்பட்ட வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான (NAFTA) அமெரிக்க கோரிக்கைகளைக் கனடா நிராகரிப்பதாகவும் அவர் மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தினார். தேசியவாத உணர்வை முடுக்கிவிடும் வகையில், அவர் கனடாவை "பயமுறுத்த முடியாது" என்றார்.

ட்ரூடோவுக்கு எதிராக தனிப்பட்ட அவமரியாதைகளுடன் விடையிறுத்த ட்ரம்ப், “அமெரிக்க சந்தையில் வெள்ளமென பாய்ச்சப்படும் வாகன பொருட்கள் மீது இறக்குமதி வரி விதிக்க பார்த்து வருகிறோம்" என்பதால், அறிக்கைக்கு வாஷிங்டனின் ஆதரவைத் திரும்ப பெறுமாறு அவர் உதவியாளர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அறிவித்தார்.

அதற்கடுத்த இரண்டு நாட்களில், ட்ரம்ப் மற்றும் அவர் உயர்மட்ட பொருளாதார அதிகாரிகளின் கடுஞ்சொற்கள் தீவிரமடைந்தன, அதேவேளையில் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ட்ரூடோவுக்கு அவர்களின் ஆதரவை அறிவித்ததுடன், ஜூலை 1 இல் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் அதன் சொந்த பதிலடியாக அதன் இறக்குமதி வரிகளைத் திணிக்கும் திட்டங்களை மீளவலியுறுத்தின.

திங்களன்று, ட்ரம்ப் சிங்கப்பூரில் இருந்து பின்வருமாறு ட்வீட் செய்தார்: “நியாயமான வர்த்தகம், இருதரப்பிற்கு பரஸ்பரமாக இல்லையென்றால் அதை இனி முட்டாள்தனமான வர்த்தகம் என்றே அழைக்க வேண்டியிருக்கும். கனேடிய பத்திரிகை அறிக்கையின்படி, அவர்கள் அமெரிக்கா உடனான வர்த்தகத்தில் ஏறத்தாழ 100 பில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்கள் (அவர்களின் சுயபெருமையிலிருந்து பிடிபட்ட உத்தேசம்!)… இதை குறிப்பிட்டால் பின் ஜஸ்டின் காயப்படுவதாக நடிக்கிறார்!”

ட்ரம்ப் ஒரு பிரத்யேக ட்வீட் செய்தியில், நேட்டோ கூட்டாளிகள் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 2 சதவீதத்தைப் பாதுகாப்பிற்கு செலவிடத் தவறுவதற்காக அவற்றைத் தாக்க திரும்பினார். அவர் எழுதினார்: “நேட்டோவின் மொத்த செலவுக்கு நெருக்கமான தொகையை அமெரிக்கா செலுத்துகிறது—வர்த்தகத்தில் நம்மிடமிருந்து அறுவடை செய்யும் இதே நாடுகளில் பலவற்றைப் பாதுகாப்பதற்காக…" “நேட்டோவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்தை (அதுவும் மெதுவாக)” செலுத்துவதாக அவர் ஜேர்மனியைப் பிரத்யேகமாக சுட்டிக்காட்டினார்.

ஞாயிறன்று உரையாடல் நிகழ்ச்சிகளில், ட்ரம்பின் உயர்மட்ட பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசகர்கள் வாய்வீச்சுடன் ட்ரூடோவைத் தாக்கினர், வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் ஒருவர் இதை குறிப்பிடுகையில் "பொதுவாக இராணுவ நடவடிக்கைக்கு முன்னதாக பயன்படுத்தப்படும் ஒருவிதமான வார்த்தைகளில்" தாக்கியதாக குறிப்பிட்டார்.

“Fox News Sunday” இல் பேட்டி காணப்பட்ட வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவார்ரோ கூறுகையில், “ஜனாதிபதி டொனால்ட் ஜெ. ட்ரம்புடன் ஏமாற்றும் எண்ணத்தில் இராஜாங்க நடவடிக்கை மேற்கொண்டு, பின்னர் கதவுக்கு வெளியே வந்ததும் அவர் முதுகில் குத்த முயலும், எந்தவொரு வெளிநாட்டு தலைவருக்கும் நரகத்தில் ஒரு சிறப்பு இடம் உள்ளது,” என்றார்.

கியூபெக்கிற்கு வர உடன்பட்டதன் மூலமாக ட்ரம்ப் ட்ரூடோவுக்கு நன்மை செய்துள்ளார் என்பதையும் சேர்த்துக் கொண்ட அவர், “அந்த சோசலிச அறிக்கையில் கையெழுத்திடவும் கூட அவர் விரும்பினார்,” என்றார். ஆனால், நவார்ரோவின் தகவல்படி, ட்ரம்ப் கனடாவை விட்டு சென்றதும், உடனேயே, “ட்ரூடோ எங்கள் ஜனாதிபதியின் முதுகில் குத்தினார். அதை அனுமதிக்க முடியாது.”

வெள்ளை மாளிகை தேசிய பொருளாதார குழுவின் இயக்குனர் லோரென்ஸ் குட்லொவ், CNN இன் “State of Union” நிகழ்ச்சியில் தோன்றி, வட கொரியா உடனான சந்திப்புக்கு முன்னர் அவரை பலவீனப்படுத்தும் நோக்கில் ட்ரூடோ ட்ரம்பை “காட்டிக்கொடுத்ததாக” மற்றும் “ஏமாற்றியதாக” குற்றஞ்சாட்டினார். ட்ரூடோ மன்னிப்பு கோரி, “அதை திரும்ப பெற வேண்டும்” என்று குட்லொவ் கோரினார்.

ட்ரம்ப் மற்றும் அவர் ஆலோசகர்களின் தாக்குதல்களுக்கு ட்ரூடோ நேரடியாக விடையிறுப்பதைத் தேர்வு செய்யவில்லை. அதற்கு பதிலாக அவர், ஜி7 அறிக்கையின் விதிமுறைகளுக்கு கனடா இணங்கி இருக்கும் என்று வலியுறுத்தினார், அந்த அறிக்கை "விதிகள்-அடிப்படையிலான" வர்த்தக முறையை உறுதிப்படுத்துவதையும், பாதுகாப்புவாதத்தை எதிர்ப்பதற்கான ஒரு சூளுரையையும் உள்ளடக்கி உள்ளது. செல்வாக்கு சரிந்து வரும் நிலைமைகளின் கீழ் மற்றும் அவர்களின் சமூக செலவின குறைப்பு திட்டநிரலுக்கு தொழிலாள வர்க்கத்திடையே எதிர்ப்பு அதிகரித்து வருகின்ற நிலையில் கனேடிய தேசியவாத உணர்வுக்கு முறையிட முனைந்த அதேவேளையில், ட்ரூடோவும் கனேடிய முதலாளித்துவ வர்க்கமும் அமெரிக்காவுடனான முற்றுமுதலான வர்த்தகப் போரின் சாத்தியக்கூறைக் குறித்து பயப்படுகின்றன, அமெரிக்காவுடனான வர்த்தகம் கனேடிய ஏற்றுமதிகளில் சுமார் 75 சதவீதமாகும். ஒரு மதிப்பீட்டின்படி 1.9 மில்லியன் கனேடிய வேலைகள் நேரடியாக அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளுடன் பிணைந்துள்ளன.

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் ஞாயிறன்று இரவு ARD பொது தொலைக்காட்சி சேனலுக்கு வழங்கிய ஒரு பேட்டியில், ட்ரம்பின் வர்த்தக எச்சரிக்கைகளை நிராகரித்ததுடன், உலக வர்த்தக அமைப்பில் நடவடிக்கை எடுப்பதன் மூலமாக எஃகு மற்றும் அலுமினியம் மீதான அமெரிக்க இறக்குமதி வரிவிதிப்புகளுக்கு எதிர்நடவடிக்கை எடுப்பதற்கும், அதேயளவுக்கு போர்பன் விஸ்கி, ஹார்லி-டேவிட்சன் மோட்டார்பைக்குகள் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் போன்ற அமெரிக்க பண்டங்கள் மீது வரிவிதிப்புகளைத் திணிப்பதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் உத்தேசித்திருப்பதை வலியுறுத்தினார்.

“எங்களை மீண்டும் மேலும் மேலும் விளிம்புக்கு ஒதுக்குவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்று கூறிய அவர், “நாங்களும் எதிர்நடவடிக்கை எடுப்போம்,” என்றார்.

அமெரிக்கா தவிர்த்து ஒரு பரந்த வர்த்தக அணியை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியை அறிவுறுத்திய அவர், “நமது ஐரோப்பிய கோட்பாடுகள், நமது மதிப்புகளுக்காக சாத்தியமானளவுக்கு கனடா மற்றும் ஜப்பானுடன் சேர்ந்து எதிர்த்து நிற்க வேண்டியுள்ளது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

அமெரிக்க வர்த்தக தாக்குதலுக்கும் மற்றும் ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகியது போன்ற மற்ற விரோதமான நடவடிக்கைகளுக்கும் ஐரோப்பாவின் பொதுவான விடையிறுப்புக்கு ஒத்த விதத்தில், ஒரு சுதந்திரமான ஐரோப்பிய பாதுகாப்பு படையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய மேர்க்கெல், ஜேர்மன் இராணுவ செலவினங்களைக் கூடுதலாக அதிகரிக்க சூளுரைத்தார்.

ஓர் எதிர்ப்பு அறிக்கை வெளியிட்ட பிரான்சின் எலிசே மாளிகை, “சர்வதேச கூட்டுறவு என்பது கோபம் மற்றும் சிறிய வார்த்தைகளைச் சார்ந்திருப்பதல்ல… ஒரு வரைவையும் கடமைப்பாடுகளையும் அடைவதில் நாம் இரண்டு நாட்கள் செலவிட்டுள்ளோம். நாம் அதில் இணைந்திருக்க வேண்டும். அதிலிருந்து விலகி அவற்றிற்கு தனது முதுகை திருப்புவர்கள் யாராக இருந்தாலும் அவரது முன்னுக்குப் பின் முரணான ஒத்துவராத தன்மையையே எடுத்துக்காட்டுகிறார்,” என்று அறிவித்தது.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கடந்த ஞாயிறன்று ட்வீட் செய்கையில், ஒரு "தனிமைப்பட்ட" அமெரிக்கா அதன் கூட்டாளிகளின் ஒரு "ஐக்கிய அணியை" முகங்கொடுக்கிறது.

முன்னாள் சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் பிரான்ஸ் 3 தொலைக்காட்சியில் கவலை வெளியிட்டார்: “இது ஜி7 க்கு மிகப்பெரிய அடி… இதுவொரு மரணஅடியாகக் கூட இருக்கலாம்… அங்கே தடையாணைகள், பழிவாங்கும் எதிர்நடவடிக்கைகள், அவ்விதத்தில் கூடுதலான வரிவிதிப்பு கட்டுப்பாடுகள் தீவிரமடையும் என்பது மிகத் தெளிவாக உள்ளது.”

இலண்டனை மையமாக கொண்ட பைனான்சியல் டைம்ஸ், “டொனால்ட் ட்ரம்ப் ஜி7 இல் தான்தோன்றித்தனமாக செல்கிறார்" என்று தலைப்பிட்டு திங்களன்று ஓர் அதிரடியான தலையங்கத்தை வெளியிட்டது.

ட்ரம்ப் அவர் அச்சுறுத்தலைக் காட்டுவதற்கு அக்கூட்டத்தை அவர் தவிர்த்திருந்தால் நல்லதாய் போயிருக்கும் என்று எழுதிய, பிரிட்டிஷ் நிதி மூலதனத்தின் தலையாய பத்திரிகையான அது, “ஆனால் விளைவு ஏறத்தாழ யாரும் கற்பனையும் செய்து பார்த்திருக்க கூடியதை விட மோசமாக இருந்தது… அவர் கூட்டாளிகளாக இருக்கக்கூடிய நாடுகள் மீது அவர் கோபத்தை வாரியிறைத்த நிலையில், ஓர் அடாவடித்தனமான வல்லாட்சியை [ரஷ்யா] இணைத்து அக்குழுவை விரிவாக்க வேண்டுமென்று அறிவுறுத்தியதோடு, இன்னும் கூடுதல் தீவிர மட்டத்திற்கு வர்த்தக மோதல் குறித்த அவர் அச்சுறுத்தல்களை உயர்த்தினார்,” என்று குறிப்பிட்டது.

“தன்னைத்தானே இந்தளவுக்கு முழுமையாக தனிமைப்படுத்தியதன் மூலமாக, திரு. ட்ரம்ப் ஜி7 என்பதை ஜி6+1 என்று ஆக்க உறுதியாக முடிவெடுத்துள்ளார். உலக பொருளாதாரத்திற்கு வழிகாட்டும் குழுவாக செயல்பட பயன்பட்டு வந்த ஒரு பேரவை இப்போது வெறுமனே அந்த ஜனாதிபதியால் தவறாக வழிநடத்தப்பட்ட வர்த்தக போரை எதிர்க்கும் மற்றொரு அரங்கமாக ஆகியுள்ளது…

“அதற்கு பதிலாக, ஜி6 மற்றும் அதேமாதிரியான எண்ண ஓட்டம் கொண்ட பிற நாடுகளும் எப்போதெல்லாம் சாத்தியமோ பாதுகாப்புவாதத்தை எதிர்க்க ஒருங்கிணைய வேண்டும், அமெரிக்காவைத் தவிர்த்த வர்த்தக உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டு திரு. ட்ரம்பைக் கடந்து செல்ல முயல வேண்டும், நம்பத்தகுந்த வகையில் வெள்ளை மாளிகைக்கு புத்தியுள்ள ஒருவர் வரும் வரையில் அவர்களால் முடிந்த வரைக்கும் உலகளாவிய கூட்டுறவு எந்திரத்தை செயல்படுத்தி வர வேண்டும். இவ்வாரயிறுதியானது, ஒழுங்கு குலைந்த ஓர் உலகை காட்டியது, இதில் அமெரிக்கா அதன் பொறுப்புறுதிகளைக் கைத்துறந்துள்ளது. உலகின் ஏனைய நாடுகள் விளைவுகளை வரையறுக்க வேண்டும்.”

ஒரு எதிர்கால அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து நல்ல முடிவு வரும் என்ற பைனான்சியல் டைம்ஸின் பயபக்தியான நம்பிக்கைகள் நிறைவேறப் போவதில்லை. ட்ரம்ப் நிர்வாகத்தின் அதீத பொருளாதார தேசியவாதம் மற்றும் தன்னிச்சைவாதத்தை, வெள்ளை மாளிகையில் இப்போது உட்கார்ந்திருப்பவரின் விசித்திரமான நம்பிக்கைகள் மற்றும் சிந்தனைப்போக்குகளின் விளைபொருள் என்பதாக சித்தரிக்கும் முயற்சிகள் ஒருபக்கம் இருக்க, வர்த்தக போர் மற்றும் கடிவாளமற்ற இராணுவவாதத்தை நோக்கி அமெரிக்கா திரும்புவது பல தசாப்தகால ஆழ்ந்த புறநிலை நிகழ்வுபோக்குகளின் விளைவாகும். அது வெறுமனே, அமெரிக்க முதலாளித்துவம் குற்றகரமான நிதியியல் செல்வந்த தட்டின் இந்த பிரதிநிதியை முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு உயர்த்தி விட்டதன் தற்செயலான விபத்தல்ல.

ட்ரம்பும் அவரது "அமெரிக்கா முதலில்" திட்டநிரலும், கடந்த ஐந்து தசாப்தங்களாக அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக பொருளாதார அந்தஸ்தில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியை அமெரிக்க ஆளும் உயரடுக்கால் இராணுவ வன்முறை வழிவகைகளைக் கொண்டு மாற்ற முடியாமல் போனதின், மற்றும் அதன் மீது அமெரிக்க ஆளும் உயரடுக்கின் நோக்குநிலை பிறழ்ச்சி மற்றும் சீற்றத்தின் வெளிப்பாடாகும். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் ஒரு கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக நடத்தப்பட்ட நவ-காலனித்துவ போர்கள் இந்த வீழ்ச்சியை தீவிரப்படுத்த மட்டுமே செய்துள்ளன, மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் குறிப்பாக சீனாவின் வளர்ச்சியால், அதன் மேலாதிக்க அபிலாஷைகளுக்கு புதிய அச்சுறுத்தல்களை முகங்கொடுப்பதாக காண்கிறது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், முதலாளித்துவ அமைப்புமுறையின் ஓர் உலகளாவிய நெருக்கடியின் உள்ளடக்கத்தில், அமெரிக்கா —1930 களைப் போலவே, தவிர்க்கவியலாமல் உலக போருக்கு இட்டுச் செல்லும் ஒரு பாதையில்— அதன் நெருக்கடியை அதன் பிரதான போட்டியாளர்கள் மீது சுமத்தும் ஒரு முயற்சியில் வர்த்த போர் முறைகளை பயன்படுத்தி வருகிறது.