ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

SEP holds Paris meeting on 50 years since May 1968 general strike

மே 1968 பொது வேலைநிறுத்தத்தின் 50 வது ஆண்டின் வேளையில் சோசலிச சமத்துவக் கட்சி பாரீசில் கூட்டம் நடத்துகிறது

By our reporters
5 June 2018

பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste de France - PES), “மே 1968 பொது வேலைநிறுத்தத்திற்கு 50 ஆண்டுகளுக்குப் பின்னர், மக்ரோனுக்கு எதிரான போராட்டத்திற்கான ட்ரொட்ஸ்கிச முன்னோக்கு என்ன?” என்ற தலைப்பில், ஞாயிறன்று பாரீசில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தியது. ஜனாதிபதி மக்ரோனின் சிக்கன கொள்கைகளை எதிர்த்து போராடி வரும் மாணவர்களும், தொழிலாளர்களும் மற்றும் பாரீசிலும் சுற்றியுள்ள நகரங்களிலும் உள்ள தமிழ் சமூகத்தவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர், அதில் பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP-Britain) பார்பரா சுலோட்டரின் சிறப்பு கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

செல்வந்தர்களுக்கான வரிச் சலுகைகளை வழங்கவும் மற்றும் பில்லியன் கணக்கான யூரோக்களை இராணுவ செலவினங்களுக்குத் திருப்பிவிடுவதற்காகவும், இரயில்வே துறையை தனியார்மயமாக்குவது, பொதுச்வேவைத்துறை சம்பள வரம்புகள் மீதான தாக்குதல்கள் மற்றும் முக்கிய சமூக திட்டங்களில் வெட்டுக்கள் என மக்ரோனின் திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து வரும் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு இடையே இக்கூட்டம் நடத்தப்பட்டது. வர்க்கப் போராட்டங்களுக்கும், சர்வதேச அளவில் இன்று தொழிலாளர்களும் மாணவர்களும் தீவிரமயப்படுவதற்கும் மத்தியில் 1968 பொது வேலைநிறுத்தத்தின் முக்கியத்துவத்துவம் என்ன என்பது குறித்து ஒரு விளக்கவுரை வழங்கி அலெக்ஸ் லான்ரியேர் அக்கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

லான்ரியேர் பின்வருமாறு குறிப்பிட்டார், இக்கூட்டம் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வை நினைவுகூர்ந்து கொண்டாடுவதற்காக மட்டுமல்ல, மாறாக அனைத்திற்கும் மேலாக இன்றும் தொழிலாளர்கள் முன் நிறுத்தப்பட்டிருக்கும் அரசியல் கேள்விகளுக்கு புரட்சிகரமான மூலோபாயத்தைத் தெளிவுபடுத்துவதற்காகவும் ஆகும். ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளேயே நடந்த குட்டி-முதலாளித்துவ மார்க்சிச-விரோத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்றிற்கு வெளியே, மே-ஜூன் 1968 சம்வங்களையும் இன்றைய வர்க்க போராட்டத்தையும் புரிந்து கொள்ள முடியாது என்றவர் விளங்கப்படுத்தினார்.

ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்டிருந்த குட்டி-முதலாளித்துவ சக்திகள், 1968 இலும் அதற்கு பின்னரும் தொழிலாளர் போராட்டங்களை நாசப்படுத்தும் வேலைகளுக்கு மட்டும் உதவிக் கொண்டிருக்கவில்லை. அவை ஒரு பொய்யான வரலாற்று சொல்லாடலையும் முன்னோக்கையும் உருவாக்கின, இது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தையும் அதன் போராட்டங்களுக்கு தலைமை கொடுக்க ஒரு மார்க்சிச முன்னணி கட்சியைக் கட்டமைப்பதற்கான போராட்டத்தையும் நிராகரித்து, கடந்த 50 ஆண்டுகளாக "இடது" அரசியல் என்று கூறப்பட்டு வந்துள்ளதை வடிவமைத்தது. இதன் அடிப்படையில் தான், அவை ஐரோப்பா எங்கிலும், கிரீஸில் பாசோக் (PASOK) கட்சியிலிருந்து பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி (PS) வரையில் சமூக-ஜனநாயகக் கட்சிகளை கட்டமைத்தன, இவற்றின் ஆக்ரோஷமான, தொழிலாளர்-விரோத கொள்கைகள் மீதான பாரிய கோபத்தின் காரணமாக இப்போது இவை தோல்வியடைந்து வருகின்றன.

1948 இல் நான்காம் அகிலத்திலிருந்து முறித்து கொண்ட Socialisme ou Barbarie குழுவுடன் நெருக்கமாக இருந்தவரான டானியல் கோன்-பென்டிட், மற்றும் 1953 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து (ICFI) முறித்துக் கொண்ட பிரான்சில் இப்போதைய புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியால் (NPA) பிரதிநிதித்துவம் செய்யப்படும் பப்லோவாத போக்கின் அலன் கிறிவின் ஆகிய முன்னாள்-1968 மாணவர் தலைவர்களை லான்ரியேர் மேற்கோளிட்டுக் காட்டினார். இன்று இவ்விருவருமே, மே 1968 பொது வேலைநிறுத்தம் ஒரு புரட்சிகர சூழ்நிலைமையாக இருக்கவில்லை, அங்கே தொழிலாளர்கள் அல்ல மாணவர்களே அப்போது அதிக இடதுசாரி பாத்திரம் வகித்தனர் என்றும் வாதிடுகின்றனர். இருவருமே அந்த பொது வேலைநிறுத்தத்தைக் காட்டிக்கொடுப்பதில் ஸ்ராலினிஸ்டுகள் வகித்த பாத்திரத்தைக் குறைத்துக் காட்டுகின்றனர்.

1968 பொது வேலைநிறுத்தம் ஒரு புரட்சிகர சூழ்நிலையை கொண்டது என லான்ரியேர் விபரிக்கிறார்

இது வரலாற்று பொய்களின் அடிப்படையிலான ஒரு மோசடி முன்னோக்கு என்பதை எடுத்துக்காட்டிய லான்ரியேர், மே மாதத்தின் ஆரம்பத்தில் போலிஸ் ஒடுக்குமுறையிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க தொழிலாளர்கள் எவ்வாறு அணிதிரண்டனர் என்பதையும், இறுதியில் 10 மில்லியன் தொழிலாளர்கள் அவர்களின் ஆலைகளை ஆக்கிரமித்து பிரெஞ்சு முதலாளித்துவத்தையே அதன் காலடியில் கொண்டு வந்திருந்த நிலையில், ஐரோப்பிய வரலாற்றிலேயே மிகப்பெரிய பொது வேலைநிறுத்தத்திற்கு அவர்கள் இட்டுச் சென்றனர் என்பதையும் மீளாய்வு செய்தார். சம்பள சலுகைகளுக்காக வேலைநிறுத்தத்தைக் கைவிட செய்வதற்கு அழுத்தமளித்த தொழிற்சங்கங்களைக் நிராகரித்தும், இறுதி ஆலைகளில் மரணகதியிலான போலிஸ் ஒடுக்குமுறையை எதிர்த்தும் இறுதிவரை போராடும் தொழிலாளர்கள், புரட்சியைக் கோருவதை 1968 இன் வீடியோ படக் காட்சிகள் எடுத்துக்காட்டுகின்றன.

அப்போது ICFI இன் பிரெஞ்சு பிரிவாக இருந்த சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (Organisation communiste internationaliste – OCI) அந்த வேலைநிறுத்தத்தில் வகித்த பாத்திரத்தையும் லான்ரியேர் மீளாய்வு செய்தார். அது செல்வாக்கு கொண்டிருந்த பல முக்கிய ஆலைகளில் பொது வேலைநிறுத்தத்தைத் தூண்டுவதற்கு அது உதவியது என்றாலும், தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல, ஒரு நீடித்த வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைக்க வேண்டுமென்ற முன்னோக்கின் மீது மட்டுமே அது அவ்வாறு செய்தது. ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியை அம்பலப்படுத்தவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் முன்னால் அரசு அதிகார பிரச்சினையை முன்நிறுத்துவதற்காகவும், அதிகாரத்தை எடுக்க ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மறுத்ததன் மீது ஒரு தாக்குதலுக்கு ICFI விடுத்த அழைப்பை OCI வெளிப்படையாக நிராகரித்தது.

அதற்கு பதிலாக, OCI ஸ்ராலினிச மற்றும் சமூக-ஜனநாயக தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து, ஒரு மத்திய தேசிய வேலைநிறுத்த குழுவுக்கான (comité national central de grève) மத்தியவாத கோரிக்கையை முன்னெடுத்தது, இது 1971 இல் ட்ரொட்ஸ்கிசத்திலிருந்தும் ICFI இல் இருந்தும் அது முறித்துக் கொண்டு, புதிதாக உருவாக்கப்பட்டிருந்த ஒரு முதலாளித்துவ கட்சியான சோசலிஸ்ட் கட்சியின் (PS) சுற்றுவட்டத்திற்குள் அது நுழைவதற்கு பாதை வகுத்தது.

1968 பொது வேலைநிறுத்தம், இறுதியில், பிரான்சின் குட்டி-முதலாளித்துவ புத்திஜீவிகளை பயமுறுத்தியது. அவர்கள் விரைவாக வலதுக்கு நகர்ந்தமையும், மார்க்சிசத்தின் மீது வெளிப்படையாக தாக்குதல்கள் தொடுத்தமையும் பின்நவீனத்துவ புத்திஜீவித சூழலை வடிவமைத்தது. 1968 இல் பப்லோவாத மற்றும் மாவோயிச மாணவர் தலைவர்கள் இன்று பெருமைப்படுத்தப்படுவது குறித்தும் லான்ரியேர் பகுத்தாராய்ந்தார், இவர்கள் 1968 இல் பிரான்சின் முக்கிய நகரங்களில் போலிஸ் செயல்படமுடியாதுபோயிருந்த நிலையில் போராட்டங்களைக் கட்டுப்படுத்த உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட்டார்கள். இந்த மாணவ எதிர்புரட்சியாளர்கள் அப்போதிருந்து வெகு காலமாக கூடுதலாக வலதுக்கு நகர்ந்து, இப்போது லிபியா மற்றும் சிரியாவில் நேட்டோ போர்களுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் அளவுக்கு பரிணாமம் அடைந்துள்ளனர் என்பதை லான்ரியேர் சுட்டிக்காட்டினார்.

இந்த அனுபவம், NPA போன்ற சக்திகள் கூறிக் கொள்கின்றவாறு அவர்களும் தொழிற்சங்கங்களும் மக்ரோனுக்கு எதிராக போராடி வருகின்றனர் என்பதன் மீதான பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியின் எதிர்ப்பை ஊர்ஜிதப்படுத்தி இருப்பதைச் சுட்டிக்காட்டி லான்ரியேர் நிறைவு செய்தார். தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர போராட்டமானது, 1968 ஐ போலவே, NPA மற்றும் அதன் அரசியல் மற்றும் தொழிற்சங்க கூட்டாளிகளுக்கு எதிரான எதிர்ப்பிலிருந்து மட்டுமே உடைத்து கொண்டு வர முடியும், ஏனென்றால் அவர்கள் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு விரோதமாக உள்ளனர். தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களை நசுக்குவதற்கான அவர்களின் முயற்சியை எதிர்ப்பதற்கான ஆயுதமாக சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மற்றும் ICFI ஐ கட்டமைப்பதே அடிப்படை புரட்சிகர பணி என்பதை அவர் அழுத்தமாக வலியுறுத்தினார்.

பிரிட்டனில் பழமைவாத ஹீத் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்கிய 1974 சுரங்க தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைப் போலவே ஐரோப்பா எங்கிலும் அடுத்தடுத்து நடந்த போராட்டங்களைச் சுட்டிக்காட்டி, பிரெஞ்சு 1968 பொது வேலைநிறுத்தத்தின் படிப்பினைகளில் உள்ள சர்வதேச தன்மையை சுலோட்டர் வலியுறுத்தி பேசினார். ஆளும் வர்க்கம் அதிகரித்து வந்த சமூக கோபம் மற்றும் புரட்சிகர உணர்வுகளைத் தணிக்க முயன்று வந்த நிலையில், பிரிட்டனிலும் பிரான்சிலும், தொழிலாளர்களின் பரந்த பிரிவுகள் எவ்வாறு அதிக சம்பள உயர்வுகளைப் பெற்றார்கள் என்பதை அவர் நினைவூட்டினார்.

1970 களில் தொடங்கி பல பத்தாண்டுகளாக நடந்த பூகோளமயமாக்கலுக்குப் பின்னர், அதுபோன்ற விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள ஆளும் வர்க்கத்திடம் ஆதார வளங்களும் இல்லை திராணியும் இல்லை என்பதை மட்டுமல்ல, மாறாக இன்று தொழிலாள வர்க்கம் முன்னொருபோதும் இல்லாதளவில் உலகளவில் வியாபித்துள்ளதையும் அவர் விவரித்தார். பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இரண்டு இடங்களிலும் வேலைநிறுத்தம் செய்துவரும் இரயில்வே தொழிலாளர்களுடன் சேர்ந்து, மக்ரோனுக்கு எதிரான பிரெஞ்சு தொழிலாளர்களைப் போலவே ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்கள் அணிதிரண்டு வருகிறார்கள். பிரான்சில் மட்டுமல்ல சர்வதேச அளவில் தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் அரசியல் கூட்டாளிகள் வகிக்கும் எதிர்-புரட்சிகரப் பாத்திரத்தை சுட்டிக்காட்டிய அவர், சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் கட்டமைக்க உதவுமாறு பார்வையாளர்களுக்கு முறையிட்டார்.

இதைத் தொடர்ந்து நேரடி கேள்வி பதில் அமர்வு நடந்தது. பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் வகிக்கும் பாத்திரம் குறித்தும், இன்று மக்ரோனுக்கு எதிரான போராட்டங்களில் OCI இன் வழிவந்தவர்கள் வகிக்கும் பாத்திரம் குறித்தும், மற்றும் 1968 இல் உண்மையில் புரட்சி நடக்காதபோதும் 1968 சம்பவங்களைப் பிரான்சின் முந்தைய புரட்சிகர அனுபவங்களுடன் ஒப்பிடலாமா என்றும் கேள்வி எழுப்பினர்.

சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்கள் பிரெஞ்சு தொழிற்சங்கங்களது பாத்திரம் குறித்து விவரித்தனர், இவை OCI இன் வழிவந்தவர்களான சுதந்திர ஜனநாயக தொழிலாளர் கட்சி (POID) என்றழைக்கப்படுவதால் ஆதரிக்கப்படுகின்றன. மக்ரோனின் அனைத்து சமூக வெட்டுக்களையும் நடைமுறையளவில் ஏற்றுக் கொள்கின்ற அதேவேளையில், அவருக்கு எதிராக வெவ்வேறு பிரிவு தொழிலாளர்களின் மட்டுப்படுத்தப்பட்ட, ஐக்கியப்படுத்தப்படாத வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கு அழைப்புவிடுப்பதன் மூலமாக, அவை நடைமுறையில் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி, தடுத்து வருகின்றன. அவ்விதத்தில் அவை மக்ரோனின் சமூக வெட்டுக்களைச் சட்டமாக்க அவருக்கு உதவி வருகின்றன. அதேநேரத்தில், அவை தொழிற்சாலைகளில் பாரியளவில் நிரந்தரமற்ற வேலைகளை ஏற்றுக் கொள்வதன் மூலமாக சம்பள மட்டங்களை கடுமையாக குறைத்து வைப்பதை மேற்பார்வையிடுகின்றன.

1968 இல், டு கோல் ஆட்சி கிட்டத்தட்ட பொறிந்து போயிருந்தது என்பதையும் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றும் விளிம்பில் இருந்தது என்பதையும் சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்கள் வலியுறுத்தினர்: ஸ்ராலினிஸ்டுகளின் எதிர்ப்பை உடைக்கவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்கு இட்டுச் செல்லவும் தகைமை கொண்ட ஒரு கட்சி அங்கே இருக்கவில்லை என்ற உண்மையானது, அங்கே புரட்சிகர நெருக்கடி இல்லை என்பதை அர்த்தப்படுத்தாது. அது, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு பப்லோவாத, ட்ரொட்ஸ்கிச-விரோத சக்திகளின் எதிர்புரட்சிகரப் பாத்திரத்தை மட்டுமே மேலுயர்த்திக் காட்டுகிறது.

மேலதிக வாசிப்புகளுக்கு :

1968 பிரான்சின் பொது வேலைநிறுத்தமும் மாணவர் எழுச்சியும்

பிரான்ஸ் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவோம்!