ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Extreme right takes power in Italy

இத்தாலியில் தீவிர வலது பதவியேற்கிறது

Peter Schwarz
2 June 2018

1945 இல் பாசிசவாத டூசெ பெனிட்டோ முசோலினி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிந்தைய மிக வலதுசாரி அரசாங்கமாக, ரோமில் நேற்று மதியம் புதிய இத்தாலிய அரசாங்கம் பதவியேற்றது. ஜனாதிபதி செர்ஜியோ மத்ததெரல்லாவின் ஒப்புதலுடன் நிறுவப்பட்டுள்ள இது, அதி வலது லெகா (Lega) மற்றும் வெகுஜனவாத ஐந்து நட்சத்திர இயக்கத்தின் (M5S) ஒரு கூட்டணியாகும்.

லெகா தலைவர் மத்தேயோ சல்வீனி இந்த அரசாங்கத்தில் பலம்மிக்க மனிதராக உள்ளார். நாடாளுமன்ற தேர்தல்களில் அவர் கட்சி வெறும் 17 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தது என்றாலும், அரசாங்கம் அமைப்பதற்கு நடந்த வாரகால இழுபறியின் போது சல்வீனி பின்னணியில் நிலைமையை வரையறுத்ததுடன் நிபந்தனைகளை விதித்திருந்தார்.

லெகா மற்றும் ஐந்து நட்சத்திர இயக்கம், அவற்றின் அரசாங்க கூட்டணி உடன்படிக்கையில் உடன்பட்டுள்ளவாறு, அரை மில்லியன் அகதிகளை நாடு கடத்தவும் மற்றும் போலிஸைப் பலப்படுத்தவும் அவர் இப்போது, துணை பிரதம மந்திரி மற்றும் உள்துறை அமைச்சராக இருந்து, அதிகாரங்களை ஒருங்குவித்துள்ளார். அவர், அனைத்து சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பையும் ஈவிரக்கமின்றி ஒடுக்கும் ஒரு போலிஸ் அரசைக் கட்டமைக்க உத்தேசித்துள்ளார்.

அவரது பாசிசவாத கண்ணோட்டங்களில் சல்வீனி எந்த இரகசியமும் வைக்கவில்லை. அவர் தமது கூட்டங்களுக்கு ஜேர்மன் புதிய வலது சித்தாந்தவாதி கொட்ஸ் கூபிற்செக் (Götz Kubitschek) மற்றும் கிரேக்க நவ-நாஜி கட்சி கோல்டன் டௌன் உட்பட ஐரோப்பிய நவ-நாஜி வட்டத்தின் முன்னணி பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தார். பிரான்சின் தேசிய முன்னணி, ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) மற்றும் பிற நவ-பாசிசவாத கட்சிகளுடனும் அவர் நெருக்கமாக இணைந்து செயல்படுகிறார். அவர் வழமையாக அகதிகள் மற்றும் முஸ்லீம்கள் மீது பாசிசவாத கண்டனங்களை வெளியிடுகிறார்.

உத்தியோகபூர்வமாக லெகா நோர்ட் (Lega Nord) என்றழைக்கப்படும் அக்கட்சி, ஒரு தேசியளவிலான கட்சியாக அபிவிருத்தி அடைவதற்கு முன்னதாக வடக்கு இத்தாலியின் செல்வச்செழிப்பான பகுதி வாழ் மக்களில் தனிச்சலுகை கொண்ட பிரிவுகளின் நலன்களைப் பாதுகாத்தது. அது சில்வியோ பெர்லுஸ்கோனியின் ஃபோர்ஸா இத்தாலியா (Forza Italia) கட்சியுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது, இத்தாலிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஊழல் மற்றும் குற்றகரத்தன்மை கொண்ட எவரொருவரையும் விட பெர்லுஸ்கோனி அதிகமாகவே கொண்டவர், அத்துடன் ஃபோர்ஸா இத்தாலியாவின் தோற்றுவாய்களை நேரடியாக இத்தாலிய பாசிசத்தில் காண முடியும்.

இக்கூட்டணியின் மிகப்பெரிய கட்சியான M5S, இந்த வலதுசாரி கழிவுகளுக்கு அதிகாரம் கிடைப்பதில் உதவும் கரமாக இருந்துள்ளது என்ற உண்மை, M5S இடதையோ அல்லது வலதையோ சார்ந்த கட்சியில்லை என்ற பழங்-கதைகளை எல்லாம் கலைத்து விடுகிறது.

இந்த ஐந்து நட்சத்திர இயக்கம் (M5S), இத்தாலியைச் சீரழித்த 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் நகைச்சுவை நடிகர் பெப்பே கிறில்லோவால் நிறுவப்பட்டது. பல பத்தாண்டுகளாக, ஒவ்வொரு இத்தாலிய அரசாங்கமும் இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கை கொள்கைகளைப் பின்பற்றியுள்ளன, சமூக ஜனநாயக கட்சியான ஜனநாயகக் கட்சி (PD) மற்றும் Rifondazione Comunista போன்ற பல்வேறு போலி-இடது கட்சிகளை அடித்தளத்தில் கொண்டிருந்த அரசாங்கங்களும் அவற்றில் உள்ளடங்கும். இதன் விளைவாக ஏற்பட்ட சமூக பேரழிவு மற்றும் இடதில் ஏற்பட்ட அரசியல் வெற்றிடமே, இத்தாலிய அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் அவர்களின் சொந்த செல்வசெழிப்பு மீது வாய்வீச்சு தாக்குதல்களுடன் ஒரு கூட்டத்தை வென்றெடுக்க கிறில்லோவை அனுமதித்தது. ஜனநாயக கட்சியைச் சுற்றியிருந்த "இடது" என்றழைக்கப்பட்டவை முதலாளித்துவத்தைப் பாதுகாக்கின்றன என்று உணர்ந்த இளைஞர்களிடையே, M5S காலடி பதித்தது.

எவ்வாறிருப்பினும், உலக சோசலிச வலைத் தளம் ஐந்தாண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டதைப் போல, ஐந்து நட்சத்திர இயக்கத்தின் வேலைத்திட்டம் ஆரம்பத்திலிருந்தே சாரத்தில் வலதுசாரியாக இருந்தது. நாம் எழுதினோம், “ஊழல், ஏகபோகங்கள் மற்றும் அதிகாரத்துவத்திற்கு எதிராக போராடுகிறோம் என்ற வேஷத்தில், அது தொழிலாளர்களுக்கு எதிராகவும் மற்றும் போருக்குப் பிந்தைய நலன்புரி அரசின் ஒட்டுமொத்த கட்டமைப்புக்கு எதிராகவும் ஒரு வரலாற்று தாக்குதலுக்கு அழைப்புவிடுக்கிறது, இத்தாலிய தொழிலாள வர்க்கத்தின் சமூக தேட்டங்களை அது குறி வைத்துள்ளது.”

இந்த மதிப்பீடு இப்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. லெகாவின் வெளிநாட்டவர் விரோத வேலைத்திட்டத்தை M5S முழுமையாக தழுவியுள்ளதுடன், அக்கட்சியுடனான M5S இன் கூட்டணி நேரடியாக தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் இலக்கில் வைக்கிறது.

M5S ஒவ்வொருவருக்கும் அடிப்படை குறைந்தபட்ச சம்பளத்திற்கு உறுதியளித்து, தேர்தலில் அதன் ஆதரவைப் பெற்றிருந்தது. அனைத்திற்கும் மேலாக 30 களின் இறுதிகால வயது வரையில் தங்களின் பெற்றோர்களின் வீட்டை விட்டு பிரிந்து செல்ல முடியாமலும், குடும்பம் அமைக்க முடியாமலும் மிகவும் வறிய பல இளைஞர்களிடம் இருந்து அது வாக்குகளைப் பெற்றிருந்தது. அது வறிய தெற்கு பகுதியிலும் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்தது.

இரண்டாவது துணை பிரதம மந்திரியாக, தொழில்துறை மற்றும் தொழிலாளர் அமைச்சராக, ஐந்து நட்சத்திர இயக்கத் தலைவர் லுயிகி டி மாயோ (Luigi di Maio) இப்போது இந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பொறுப்பாகிறார், இது பெருநிறுவன உயரடுக்கிற்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். மாதத்திற்கு 780 யூரோ அடிப்படை சம்பளம் என்பது எந்தவொரு வேலையையும், எல்லா வேலை வாய்ப்புகளையும் ஏற்றுகொள்பவர்களுக்கு மட்டுமே என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் ஹார்ட்ஸ் IV சட்டங்களைப் போலவே, இது மிகப்பெரும் குறைவூதியத் துறையை உருவாக்குவதற்கான ஒரு இயங்குமுறையாக சேவையாற்றும்.

லெகாவும் ஐந்து நட்சத்திர இயக்கமும் இரண்டடுக்கு ஒரேமாதிரியான வரியை அறிமுகப்படுத்தவும் உடன்படுள்ளன, அதாவது பணக்காரர்களுக்கும் மிகப் பெரிய வணிகங்களுக்கும் இது பல பில்லியன் யூரோ கையளிப்பாக இருக்கும்.

இதுபோன்றவொரு அரசாங்கம் அமைக்கப்பட்டிருப்பது இத்தாலி தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, ஐரோப்பா எங்கிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும். ஆளும் உயரடுக்கு வேகமாக எதேச்சதிகார ஆளும் வடிவங்களுக்குத் திரும்பி வருகிறது.

பாசிசவாத லெகா மற்றும் ஐந்து நட்சத்திர இயக்க கூட்டணி, ஐரோப்பிய ஒன்றிய ஒப்புதல் முத்திரையுடன் அதிகாரத்திற்கு வருகிறது. மத்தரெல்லா அவரது அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி லெகா-ஐந்து நட்சத்திர இயக்க அரசாங்கம் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு வெறும் ஒருசில நாட்களுக்கு முன்னர் தான், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை தலைவர் பெடிரிகா மொஹிரினி, இத்தாலிய ஜனாதிபதி மீது அவருக்கு "முழு நம்பிக்கை" இருப்பதாக அழுத்தமாக வலியுறுத்தி இருந்தார்.

நேற்றிரவு, ஐரோப்பா எங்கிலுமான அரசியல்வாதிகள் ரோமின் இந்த வலதுசாரி ஆட்சியைப் புகழ்ந்து தள்ளினர். ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் “அரசியல், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் என எல்லா மட்டத்திலும் ஜேர்மனி மற்றும் இத்தாலியை ஒன்றிணைக்கும் நெருக்கமான மற்றும் நட்புரீதியான உறவுகளைப்” புகழ்ந்து, புதிய இத்தாலிய அரசாங்கத்திற்கு கூறுகையில், “உங்களுடனான நெருக்கமான பங்காண்மையை அபிவிருத்தி செய்யவும் ஆழப்படுத்தவும் நான் எதிர்நோக்கி உள்ளேன்,” என்றார்.

ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர், “அரசியல்வாதிகளை அவர்களின் நடவடிக்கைகளைக் கொண்டு அளவிட வேண்டும், அவர்களின் வனப்புரை அறிக்கைகளைக் கொண்டல்ல,” என்ற கருத்துக்களுடன் சல்வீனியின் பாசிசவாத பேச்சுக்களைக் குறைத்துக்காட்டி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் புதிய அரசாங்கத்திற்கு இடையே நெருங்கிய கூட்டுறவுக்கு அழைப்புவிடுத்தார்.

இத்தாலி, சல்வீனியின் கீழ், யூரோவிலிருந்து வெளியேறிவிடுமோ அல்லது அதன் மிகப்பெரும் 2.3 ட்ரில்லியன் யூரோ கடனை முழுமையாக செலுத்தாமல் முரண்டுபிடிக்குமோ என்ற ஆட்சேபனைகள் மட்டுந்தான் மத்தரெல்லா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவலையாக இருந்தன. கடந்த ஆண்டு, அக்கடன்களின் மீது 66.4 பில்லியன் யூரோ வட்டித்தொகை தேங்கியிருந்தது, அதுவும் மிகக் குறைந்த 0.7 சதவீத வட்டிவிகிதத்தில். வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டால் விரைவிலேயே இந்த தொகை பெருகிவிடும்.

மத்தரெல்லா ஆகட்டும் அல்லது ஐரோப்பிய ஒன்றியம் ஆகட்டும், ஆயிரக் கணக்கான அகதிகளைக் கைது செய்து நாடு கடத்தும் அரசாங்கத்தின் திட்டங்களைப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் இந்த புதிய உள்துறை அமைச்சரின் இனவாத வெறிப்பேச்சுக்களைக் குறித்தோ, எதேச்சதிகார ஆட்சிக்கு அவரது ஆதரவு குறித்தோ சிறிதும் கருத்துக் கூறவில்லை. இது ஏனென்றால் இந்த கொள்கைகள் இப்போது ஐரோப்பாவில் கருத்தொற்றுமையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாட்டிலும், ஆளும் வர்க்கம் அதன் ஆட்சியைப் பாதுகாத்து கொள்வதற்கு தணிக்கை, அரசு ஒடுக்குமுறை மற்றும் பாசிசவாத அணுகுமுறைகளை ஏற்று வருகின்றன. ஒருபுறம் இது முன்னொருபோதும் இல்லாத ஐரோப்பிய மற்றும் உலக முதலாளித்துவ நெருக்கடியாலும், மறுபுறம், சமூக வெட்டுகள், ஒடுக்குமுறை மற்றும் இராணுவவாதத்திற்கு தொழிலாள வர்க்கத்திடையே அதிகரித்து வரும் எதிர்ப்பினாலும் உந்தப்படுகிறது. இந்த எதிர்ப்பானது தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் அவற்றின் போலி-இடது கூட்டாளிகளின் திணறடிக்கச் செய்யும் பிடியிலிருந்து உடைத்துக் கொள்ள அச்சுறுத்துகின்றன, வர்க்க போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் ஒடுக்குவதற்குமான இவற்றின் தகைமை தேய்ந்து வருகிறது.

ஆஸ்திரியா, ஹங்கேரி மற்றும் போலாந்து உள்ளடங்கலாக பல ஐரோப்பிய நாடுகளில் அதிவலது கட்சிகளே இப்போது அரசாங்கம் அமைத்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் நான்காவது மிகப் பெரிய பொருளாதாரமும் 60 மில்லியன் மக்கள்தொகையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பு நாடுமான இத்தாலியில் அதிதீவிர வலது அரசாங்கம் அதிகாரத்தைப் பெற்றுள்ளது என்ற உண்மை, ஒட்டுமொத்த ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கும் ஓர் எச்சரிக்கையாக பார்க்கப்பட வேண்டும்.

சமூக ஜனநாயகக் கட்சிகள், போலி-இடது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு பாசிசத்தின் அபாயத்தை எதிர்க்க திராணியும் இல்லை, அவற்றிற்கு விருப்பமும் இல்லை. அவை தீவிர வலதைச் சட்டபூர்வமாக்க உதவியுள்ளன. பெருமூலதன நலன்களுக்காக வலதுசாரி கொள்கைகளைப் பின்பற்றியதன் மூலமாக, பாசிசவாத கட்சிகள் நடைமுறையை எதிர்ப்பவர்களாக தங்களைக் காட்டிக் கொள்வதற்கு அவை அனுமதித்துள்ளன. அனைத்திற்கும் மேலாக, சமூக ஜனநாயக மற்றும் போலி-இடது கட்சிகள் அகதிகள் மீதான அடக்குமுறை, உள்நாட்டு ஒடுக்குமுறை மற்றும் சமூகத்தை மீளஇராணுவமயப்படுத்துவதற்கு கோரி, தீவிர வலதின் களத்திலிருந்து பெரும்பான்மையானவற்றை ஏற்றுக் கொண்டுவிட்டன.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தால் மட்டுமே தீவிர-வலது முன்னிறுத்தும் அச்சுறுத்தலை எதிர்க்க முடியும். அதுபோன்றவொரு இயக்கத்திற்கான புறநிலையான முன்நிபந்தனைகள் நிலவுகின்றன. ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் மற்றும் கண்டத்தை இராணுவமயப்படுத்துவதற்கும் அதிகரித்து வரும் எதிர்ப்புடன் சேர்ந்து, சமூக பதட்டங்களும் வர்க்க போராட்டமும் ஐரோப்பா எங்கிலும் அதிகரித்து வருகின்றன.

இத்தாலிய, ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி, முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதற்கான அவர்களின் புரட்சிகர சக்தியை அணித்திரட்ட இப்போது ஒரு புதிய மார்க்சிச கட்சியைக் கட்டமைப்பதையே ஒவ்வொன்றும் சார்ந்துள்ளது. இது இத்தாலியிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளைக் கட்டமைக்கும் பணியை அவசரமாக முன்னிறுத்துகிறது.