ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ආන්ඩුව නැවත පදිංචිවු ඉරනයිතිවු ජනයාට නිවාස නොදෙන්ට තීන්දු කරයි

இலங்கை அரசாங்கம் மீள்குடியேறிய இரணைதீவு மக்களை புறக்கணிக்கிறது

By Vimal Rasenthiran and Murali Maran
13 June 2018

இலங்கை அரசாங்கமானது கிட்டத்தட்ட 100 மீனவ குடும்பங்களை நீண்ட கால போராட்டத்திற்குப் பின்னர் வடக்கில் உள்ள சிறிய இரணைதீவில் மீள்குடியேற அனுமதிக்கத் தள்ளப்பட்டது. இருப்பினும், எந்தவொரு வீட்டு வசதிகளும் அவர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்காலிக முகாம்கள்

இந்த குடும்பங்கள் 1992ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தின் போது நடந்த இராணுவ நடவடிக்கைகளில் இருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தீவில் இருந்து வெளியேறி, கிழக்கு கடற்கரைக்கு அருகே இரணைமாதா நகரில் தற்காலிகமாக குடியேறின. 2009 மே மாதம் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், கடற்படை ஆக்கிரமிப்பை தொடர்ந்ததோடு அந்தக் குடும்பங்ள் தங்கள் நிலங்களுக்குத் திரும்புவதை அனுமதிக்க மறுத்துவிட்டது.

இந்த குடும்பங்கள் இரணைமாதா நகரில் ஒரு வருட காலமாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. ஏப்ரல் 23, படகுகளில் மக்கள் தீவுக்குச் சென்று தேவாலயம், பாடசாலை மற்றும் சிறிய குடிசைகளிலும் வலுக்கட்டாயமாக தஞ்சமடைந்தனர். அவர்களை பலாத்காரமாக திருப்பி அனுப்ப முடியாமல் போன நிலையில், மீள்குடியேற்ற அமைச்சு மே 15 அன்று அவர்களை இரணைதீவில் மீண்டும் குடியேற அனுமதித்தது.

சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களுடன் இந்த குடும்பங்கள், தீவினுள் இரப்பர் சீட்டுகள் மற்றும் பனை ஓலைகளையும் கொண்டு அமைக்கப்பட்ட தற்காலிக குடிசைகளில் வசிக்கத் தள்ளப்பட்டுள்ளன. இரணைமாதா நகரில் குடியேறிய போது அங்கு அவர்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கியதால், இங்கு இரண்டாவது முறை அவர்களுக்கு வீடுகள் கட்டத்தரப்பட மாட்டாது என கிளிநொச்சி பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

கடற்படை ஒரு முகாமுடன் தீவை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளதுடன், ஒரு ராடார் மையத்தை பராமரிக்கிறது. முன்னதாக, புலிகள் ஆயுதங்களைக் கடத்துவதை தடுப்பது கடற்படையின் சாக்குப் போக்காக இருந்தது. இப்போது, ​​பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்துப்படி, இந்திய மீனவர்களின் ஊடுருவலையும் போதைப்பொருள் கடத்தலையும் தடுப்பதற்காக இரணை தீவு தேவைப்படுகிறது.

வடக்கிலும் கிழக்கிலும் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்பாக அரசாங்கம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது மக்கள் மத்தியில் வளர்ச்சிடைந்து வரும் எதிர்ப்பை தணிப்பதற்கே மீள்குடியேற்ற அமைச்சு மக்களை மீளக் குடியேற அனுமதித்துள்ளது. ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிப்பதாகவும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதாகவும் வாக்குறுதியளித்து தமிழ் கூட்டமைப்பின் ஆதரவுடனயே அதிகாரத்திற்கு வந்தது.

இரணைதீவு மக்களின் போராட்டமானது, இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை விடுவிக்குமாறும் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் மற்றும் இராணுவத்திடம் சரண்டைந்த பின்னர் காணாமல்போயுள்ளவர்களை கண்டுபிடிக்குமாறும் கோரி தற்போது வடக்கு கிழக்கில் நடைபெற்று வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தொழிலாளர்களும், சர்வதேச நாணய நிதியத்தினால் கட்டளையிடப்பட்டுள்ள அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தெற்கில் தங்கள் வர்க்க சகோதரர்களுடன் தொடர்ந்து போராட்டத்தில் பங்குபற்றி வருகின்றனர்.

மூன்று பொது கழிப்பறைகள், ஒரு சன சமூக நிலையம் மற்றும் கிணறுகளை சுத்தம் செய்யவும் அரசாங்கம் ஒரு மில்லியன் ரூபாய் அற்ப தொகையை ஒதுக்கி வைத்துள்ளதாக உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் இரணைதீவு மக்கள் தெரிவித்தனர். இந்த தொகை தரமான ஒரு கழிப்பறை கட்டக் கூட போதாது. பெண்கள் இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தண்ணீர் விநியோகிக்க அரசாங்கம் கொடுத்த றக் வண்டி மூன்றே நாட்களில் உடைந்து போனது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகள் மேலும் வாக்குறுதிகள் கொடுக்க தீவுக்கு விரைந்து விஜயம் செய்து உலர் உணவும் "பனை கிடுகுகளையும்" கொடுத்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஈழ மக்கள் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் இரணை தீவுக்கு சென்றிருந்தனர்.

ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் விஜயகாலா மகேஸ்வரன், இரணைமாதா நகரில் வசதிகள் இருக்கும் போது ஏன் இரணைதீவில் குடியேற விரும்புகிறீர்கள் என மக்களிடம் கேட்டார். இது ஒரு பொய். அந்த பிரதேசத்தில் மக்களுக்கு நல்ல வசதிகள் அல்லது வருமானம் தேடுவதற்கான வழி இல்லை.

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் உலர் உணவுகளுடன் அங்கு சென்று இரணைதீவை முழுமையாக விடுவிக்க மத்திய அரசாங்கத்துடன் பேசுவதாக உறுதியளித்தார். இருப்பினும், அதே மூச்சில் அவர் "பாதுகாப்பு அமைச்சே பிரச்சினைக்கு முடிவுகாண வேண்டும்" என்றார்.

மக்கள் மத்தியிலான கோபத்தை வெளிப்படுத்திய ஒருவர் இவ்வாறு கூறினார்: "ஊடக பிரச்சாரத்திற்காகவும் எதிர்கால தேர்தலை குறிவைத்துமே அவர்கள் இங்கு வந்தனர். அவர்களுக்கு எங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஆர்வம் இல்லை. "

"இரணைதீவை நாங்கள் போரில் கைப்பற்றியதால் அதை விட முடியாது" என ஒரு கடற்படை அதிகாரி கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார். கடற்படை உளவுத்துறை அதிகாரிகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைவதாகவும் அவர்களை நோட்டம் விடுவதாகவும் மக்கள் கலவை தெரிவித்தனர்.

இரணைதீவில் மக்கள் கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளாக வாழ்கின்றனர். சுமார் 225 குடும்பங்கள் இரணை தீவுக்கு வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முளங்காவில் பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்து, இரணைமாதா நகரை ஸ்தாபித்து தற்காலிகமாக தஞ்சமடைந்தனர். இப்போது குடும்பங்களின் எண்ணிக்கை 400க்கும் மேல் அதிகரித்துள்ளது. இன்னும் 175 குடும்பங்கள் திரும்ப காத்திருக்கின்றன.

இரணைமாதா நகரில் தங்கியிருத்தலும், அவர்கள் மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற வாழ்வாதரங்களுக்கு இரணைதீவையே பயன்படுத்தினர்.

1886ல் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட தேவாலயம், பாடசாலைகள் மற்றும் கலங்கரை விளக்கம் மட்டுமே போரின் அழிவில் இருந்து தப்பியுள்ளன. கடற்படை ஆக்கிரமித்துள்ள ஏழு வீடுகள் தவிர ஏனைய அனைத்து கட்டிடங்களும், உட்கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டுள்ளன.

மழைநீரை சேகரிப்பதற்காக மக்களால் உருவாக்கப்பட்ட பெரிய நீர் தாங்கிகள் பாழடைந்து தொற்று நோய் பெருகுவதற்கான ஆபத்தான இடங்களாக மாறியுள்ளன.

கிராமங்களில் இருந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளதுடன் அவற்றின் கன்றுகள் பாதுகாப்புப் படையினர் வளர்க்கும் நாய்களால் வேட்டையாடப்பட்டுள்ளன. தீவில் சில தென்னை மரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. மக்கள் இந்த அழிவுக்கு கடற்படையினரை குற்றம் சாட்டினர்.

ஒரு தொண்டர் ஆசிரியரான நியூமன், தங்கள் நிலங்களை மட்டுமே திரும்பக் கேட்பதாகவும், ஏனெனில் தமது வாழ்வாதாரம் அவற்றிலேயே இருப்பதாகவும் கூறினார். "நாங்கள் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெயர்ந்து வாழ்ந்துள்ளோம். அரசாங்கம் எந்த விதமான உதவியையும் வழங்கவில்லை. பல இளைஞர்கள் உயர் தர பரீட்சையில் சித்தி பெற்றுள்ளனர். அரசு அவர்களுக்கு வேலை கொடுத்ததா? பத்து வருடங்களாக தொண்டர் ஆசிரியராக நான் கற்பிக்கிறேன். பத்து வருடங்கள் ஒரு தொண்டர் ஆசிரியருக்கு நிரந்தர நியமனம் கொடுக்காத அரசாங்கம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?" என்று அவர் கேட்டார்.

"கடற்படை எங்களை மீள்குடியேற விடாமல் தடுத்து வந்தது, ஆனால் அது பெளத்த விகாரைகளை கட்டி, பார்வையாளர்களுக்கான விடுதி வசதியையும் அமைத்துள்ளது. எங்கள் பாடசாலை மற்றும் மருத்துவமனைகளின் தளவாடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு பொருட்களும் காணாமல் போயுள்ளன." அரசியல்வாதிகளின் நொண்டி சாக்குகளை நம்புவதற்கு மக்கள் முட்டாள்தனமானவர்கள் அல்ல, அவர்கள் சுயாதீனமாகவே தங்கள் நிலங்களுக்கு செல்ல முடிவு செய்ததாக, அவர் கூறினார்.


யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலையில் உதயகுமார்

முள்ளிவாய்க்கால் அடையும்வரை தனது குடும்பத்தை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அகற்றிக் கொண்டதாக உதயகுமார் கூறினார். அங்கு போர் ஒரு இரத்தக்களரிக்கு வந்தது. "யுத்தத்தின் போது, என் மனைவியும் நானும் காயமடைந்தோம். சுமார் 35 ஈரான் சிவிலியன்கள் இராணுவத்தின் இறுதித் தாக்குதலில் கொல்லப்பட்டனர், மேலும் பன்னிரண்டு பேர் மறைந்துவிட்டனர். 10 க்கும் மேற்பட்ட இளம் விதவைகளும், 60 க்கும் மேற்பட்ட குடும்பங்களும் பெண்களால் நடத்தப்படுகின்றன.

போர் முடிவடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியை அடையும்வரை தனது குடும்பம் இடத்திற்கு இடம் இடம்பெயர்ந்துகொண்டே இருந்ததாக உதயகுமார் கூறினார். "யுத்தத்தின் போது, என் மனைவியும் நானும் காயமடைந்தோம். சுமார் 35 இரணைதீவுவாசிகள் இராணுவத்தின் இறுதித் தாக்குதலில் கொல்லப்பட்டனர், மேலும் பன்னிரண்டு பேர் காணாமல் போய்விட்டனர். 10 க்கும் மேற்பட்ட இளம் விதவைகள் உள்ளனர், 60க்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளன.

அவர் மேலும் தொடர்ந்தார்: "எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் மீள்குடியேற்றம் என்ற பெயரில் நாங்கள் இரணைதீவில் விடப்பட்டுள்ளோம். கடந்த எட்டு ஆண்டுகளாக நாங்கள் எங்கள் சொந்த நிலங்களில் குடியேற போராடி வருகிறோம். அரசாங்கமோ அல்லது தமிழ் அரசியல்வாதிகளோ எங்களுக்கு உதவவில்லை. மீன்பிடிக்கும் படகுகளை பயன்படுத்தும் போது 5,000 ரூபாய் செலவழிக்க வேண்டும். அவர்கள் தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றால் 1,500 ரூபாவுக்கும் குறைவாகவே செலவாகும்.”


காணிக்கை

காணிக்கை, 63 வயது, கூறியதாவது: "என் மூன்று பிள்ளைகளில் ஒருவர் இறுதிப் போரில் இறந்தார். புனர்வாழ்வு என்ற பெயரில், இராணுவம் மாத்தளனில் வைத்து மற்றொரு மகனை கொண்டு சென்றது. அப்போது அவருக்கு 24 வயது, இன்னமும் அவர் இருக்கும் இடத்தை நான் அறியவில்லை. நான் காணாமல் போனவர்களின் உறவினர்களால் நடத்தப்படும் போராட்டங்களில் கூட கலந்து கொள்கிறேன். இப்போது என் இளைய மகள் மட்டுமே எங்களுடன் இருக்கிறாள்."


மரியநாயகம்

64 வயதான நீக்கலான் மரியநாயகம் தெரிவித்ததாவது: "ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நான் இரணமாதா நகரில் இருந்தபோது மீன்பிடிக்கப் போனேன். நான் பாரிசவாதத்தில் பாதிக்கப்பட்ட பின்னர் மணமான என் மகனின் வருமானத்திலேயே என் மனைவி தங்கியிருந்தார். எங்கள் சொந்த நிலத்திற்கு வந்த பின்னர், கடலட்டை பிடித்து 600 முதல் 700 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். சொந்த கிராமத்தில் இருக்கும் போது, நான் உற்சாகமாக உணர்கிறேன், நான் நோயாளியாக உணரவில்லை."