ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Concentration camps in America

அமெரிக்காவில் தடுப்புக்காவல் முகாம்கள்

Eric London
25 June 2018

அமெரிக்கா எங்கிலும் 120,000 பேர்களை அடைத்து வைக்கும் அளவுக்கு "கடுமையான" தடுப்புக்காவல் முகாம்களின் ஒரு வலையமைப்பைக் கட்டமைக்க அரசு திட்டமிட்டு வருவதாக வெள்ளியன்று வெளியிடப்பட்ட ஒரு கடற்படை குறிப்பு தெரிவித்தது. இந்த முன்மொழிவானது, ஜனநாயகத்தின் முறிவு மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதலில் மற்றொரு மைல்கல்லாகும்.

கலிபோர்னியாவில், சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதிக்கு வெளியே ஒன்றும், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் டியாகோவுக்கு இடையே மற்றொன்றுமாக, மிகப்பெரியளவில் தொழிலாள வர்க்க புலம்பெயர்ந்தோரைக் கொண்ட பகுதிகளான இவை ஒவ்வொன்றிலும் 47,000 பேர்களை வைக்க, இரண்டு மிகப்பெரிய முகாம்களை ஸ்தாபிப்பதும் கடற்படை திட்டத்தில் உள்ளடங்கும். பாரிய நாடுகடத்தல்களுக்கும் மற்றும் அம்மாநில அரசின் இராணுவ தலையீடுகளுக்கும் அனுகூலமாக, இந்த மிகப் பெரும் நகர்புற பகுதிகளுக்குப் போதுமானளவுக்கு நெருக்கமாக இம்முகாம்கள் அமைக்கப்படும்.

இந்த கடற்படை குறிப்பு பெருநிறுவன ஊடகங்களால் பெரிதும் உதறிவிடப்பட்டுள்ளது. ஞாயிறன்று காலை விவாத நிகழ்ச்சியில் விவாதித்த பிரமுகர்கள் அல்லது அரசியல் விருந்தினர்களில், அவர் ஜனநாயகக் கட்சி ஆகட்டும் அல்லது குடியரசுக் கட்சி ஆகட்டும், ஒருவர் கூட இராணுவ திட்டங்களைக் குறித்து குறிப்பிடவில்லை என்பதுடன், ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களை "அதிக மனிதாபிமானத்துடன்" வெளியேற்றுவதற்கான பாசாங்குத்தனமான முறையீடுகளுடன் அவர்களது கருத்துக்களை மட்டுப்படுத்தி இருந்தனர்.

அரசியலமைப்பு கோட்பாடுகள் மற்றும் சட்ட விசாரணை வழிமுறைகளை ஏளனப்படுத்தும் மற்றொரு காட்சிப்படுத்தலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றும் தொடர்ந்து அவரது பாசிசவாத கழிசடை கருத்துக்களை கொட்டினார், அவர் இவ்வாறு ட்வீட் செய்தார்: “இவர்கள் அனைவரும் நம் நாட்டின் மீது படையெடுத்து வர நாம் அனுமதிக்க முடியாது. எரேனும் உள்ளே வரும்போது, நீதிபதிகள் அல்லது நீதிமன்ற வழக்குகள் என்று இல்லாமல், நாம் உடனடியாக அவர்களை அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கே திருப்பி அனுப்ப வேண்டும். நல்லதொரு புலம்பெயர்வு கொள்கை மற்றும் சட்ட-ஒழுங்கு முறை கொண்ட நமது அமைப்புமுறை கேலிக்கூத்தானது.”

அங்கே இன்னமும் 2,053 குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த புலம்பெயர்ந்த குழந்தைகள் "பீதியில் மவுனமாகி" இருப்பதாகவும், “சொல்வதைக் கேட்டுக் கொள்வதாகவும்", அவர்களின் விரக்தி சரீரரீதியில் பருவ வயதடைந்த சிறார்கள் அளவுக்கு ஏற்பட்டுவிட்டதாகவும் சமூக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாடு கடத்துவதற்கான விசாரணை வழிமுறைகள் முடியும் வரையில், புலம்பெயர்ந்த பெற்றோர்களை அவர்களின் குழந்தைகளுடன் ஒன்றிணைக்க முடியாதென்றும் நிர்வாகம் அறிவித்தது—இந்த விசாரணை வழிமுறை முடிய பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம். பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை விரைவாக சந்திக்க விரும்பினால், அவர்கள் தஞ்சம் கோரும் உரிமைகளைக் கைவிட்டு, போர், வன்முறை மற்றும் இன்னல்களிலிருந்து தங்களின் உயிரைப் பணயம் வைத்து தப்பி வந்த அதேயிடங்களுக்குத் அவர்கள் தானாகவே முன்வந்து திரும்பிச் செல்ல உடன்பட வேண்டியிருக்கும். ஏற்கனவே பல பெற்றோர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பதோடு, அவர்களின் குழந்தைகளை எவ்வாறு சென்றடைவது என்றும் தெரியாமல் உள்ளனர்.

ஜனநாயகக் கட்சியின் விடையிறுப்போ, அலட்சியம் மற்றும் அப்பட்டமான பாசாங்குத்தனத்தின் கலவையாக உள்ளது. ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள், 2018 இடைத்தேர்தல்களுக்காக புலம்பெயர்ந்தவர்களுக்கு-ஆதரவானவர்களாக காட்டிக்கொள்ளும் ஒரு முயற்சியில், குடும்பங்களைப் பிரிக்கும் அக்கொள்கை "குரூரமானது", “மனிதாபிமானமற்றது" என்று குறிப்பிட்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். “டொனால்ட் ட்ரம்பின் கூண்டுகளை GOP எவ்வாறு உருவாக்கியது" என்று தலைப்பிட்டு நியூ யோர்க் டைம்ஸ் நேற்று ஒரு தலையங்கத்தில், புலம்பெயர்ந்தவர்கள் மீதான இத்தாக்குதலுக்கு ஜனநாயகக் கட்சியினரின் சொந்த பொறுப்புகளை மூடிமறைக்க முயன்றது.

குடியரசு கட்சியினர் "அவர்களின் இருண்ட மனத்தூண்டுதல்களில் இருந்து உரக்க பேசுகின்ற" அதேவேளையில், ஜனநாயகக் கட்சியோ பராக் ஒபாமாவின் கீழ் "சீர்திருத்தத்தை நோக்கி ஓடியது" “நாடு கடத்துவதைத் தள்ளிபோடும் நடவடிக்கைகளை விரிவாக்கியதன்" மூலம் "பழமைவாதிகளை வெறுப்பூட்டியது" என்று டைம்ஸ் குறிப்பிடுகிறது. “திரு. ட்ரம்ப் மற்றும் அவரது புலம்பெயர்வு கொள்கைகளுக்குப் பெரிதும் வழி வகுத்துள்ளவர்கள்,” குடியரசுக் கட்சியினர் தான் என்று டைம்ஸ் வாதிடுகிறது.

யதார்த்தத்தில், வேறெந்த ஜனாதிபதியை விட அதிகமாக, பராக் ஒபாமா தான் 2.7 மில்லியன் பேர்களை நாடு கடத்தினார், மேலும் அவர் நிர்வாகம் எல்லைச் சுவர்களை விரிவாக்கியதுடன், தற்போது புலம்பெயர்ந்த குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலாபத்திற்கான சிறைக்கூடங்களில் பலவற்றை கட்டமைத்தது, நேரடியான அர்த்தத்தில் ட்ரம்பின் தற்போதைய கொள்கைக்கு வழி வகுத்தது.

செனட்டர் பேர்ணி சாண்டர்ஸின் விடையிறுப்பு குறிப்பாக முக்கியத்துவம் கொண்டுள்ளது. ஞாயிறன்று CNN இன் "State of the Union” நிகழ்ச்சியில் தோன்றிய சாண்டர்ஸ், ட்ரம்பின் எல்லை சுவருக்கு நிதியளிக்க அவர் வாக்களித்ததை அவரே முன்வந்து தெரிவித்தார்.

புலம்பெயர்ந்தவர்கள் மீதான கெஸ்டாபோ பாணியிலான தாக்குதலை மேற்பார்வை செய்து வரும் மத்திய அரசு அமைப்பான, புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்க ஆணையத்தைக் (ICE) கலைப்பதை அவர் ஆதரிக்கிறாரா என்று நேரடியாக வினவிய போது, சாண்டர்ஸ் வேண்டுமென்றே தட்டிக்கழிக்கும் பதிலளித்தார், அவர் இவ்வாறு அறிவித்தார்: “நமக்கு என்ன அவசியப்படுகிறது என்றால், புலம்பெயர்வை ஒரு பகுத்தறிவார்ந்த வழியில் கையாளும் கொள்கைகளை உருவாக்க வேண்டியுள்ளது. … நமக்கு என்ன அவசியப்படுகிறது என்றால், காங்கிரஸ் உறுப்பினர்களுடன் ட்ரம்ப் உட்கார்ந்து, இந்த ஆழ்ந்த பிரச்சினையைக் கையாளும் ஒரு பகுத்தறிவார்ந்த திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளது.”

இது ட்ரம்பின் புலம்பெயர்ந்தோர்-விரோத திட்டத்திற்கு சரணடைவதாகும். ஜனநாயகக் கட்சியினர் மற்றும் சாண்டர்ஸின் பார்வையில், ஒரு "பகுத்தறிவார்ந்த" புலம்பெயர்வு திட்டம் என்பது மில்லியன் கணக்கான புலம்பெயர்வோரை சிறையில் அடைக்கும் அல்லது நாடு கடத்தும், இராணுவ தொழில்நுட்பங்களைக் கொண்டு எல்லையைப் பலப்படுத்தும், வறுமை மற்றும் வன்முறையிலிருந்து தப்பியோடி வரும் ஆயிரக் கணக்கான அகதிகளைப் பாலைவனத்தில் மரணிப்பதற்கு கட்டாயப்படுத்தும் ஒரு திட்டமாகும். இது, நாடுகடத்தும் எந்திரத்தை வேகப்படுத்துவதற்கும், சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிரடிப்படை துருப்புகளினதும் மற்றும் ICE இனதும் அதிகாரங்களை விரிவாக்குவதற்குமான ஒரு சூசகமான வழக்குமொழியாகும்.

புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்பின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, வரவிருக்கும் நாட்களிலும் வாரங்களிலும் நாடுதழுவி டஜன் கணக்கான நகரங்களில் ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்புக்கு ஒரு தெளிவான அரசியல் ஒருங்குவிப்பும் கொள்கையும் அவசியம்.

வறுமை மற்றும் சமத்துவமின்மைக்கு நிஜமான காரணமான முதலாளித்துவ அமைப்புமுறையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, மிகவும் ஒடுக்கப்பட்டவர்களைப் பலிக்கடா ஆக்கும் ஒரு பரந்த நடைமுறையே, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல் என்பது உணரப்பட வேண்டும். வீழ்ச்சி அடைந்து வரும் வாழ்க்கை நிலைமைகளுக்காக புலம்பெயர்ந்தோர் மீது பழிபோடும் கூற்றுகள் பொய்யாகும்.

புலம்பெயர்தோர் மீதான தாக்குதலுக்கும், ஜனநாயக உரிமைகளுக்கு இராணுவத்தால் முன்னிறுத்தப்படும் அதிகரித்த அச்சுறுத்தலுக்கும், குடியரசுக் கட்சிக்கு குறைவின்றி ஜனநாயகக் கட்சியும் பொறுப்பானது என்பது உணரப்பட வேண்டும். இராணுவ வரவு-செலவு திட்டகணக்கில் 82 பில்லியன் டாலரை அதிகரிக்கும் மற்றும் வாஷிங்டன் டி.சி. இல் ஓர் இராணுவ அணிவகுப்பு நடத்துவதற்கு ட்ரம்புக்கு அதிகாரமளிக்கும் ஒரு நிதி மசோதாவிற்கு ஜனநாயகக் கட்சியினர் கடந்த வாரம் பெருவாரியாக வாக்களித்தனர்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் முதல் இரண்டு ஆண்டுகளைப் பொறுத்த வரையில், ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பைச் சிதறடிக்கவும், திசைதிருப்பவும், அதை அவர்களது போர்வெறி கொண்ட ரஷ்ய-விரோத பிரச்சாரத்திற்குப் பின்னால் திருப்பிவிடவும், விசாரணைக்கு தலைமை வகிக்கும் இராணுவ-உளவுத்துறை முகமைகளை விமர்சிக்கும் எவரொருவரையும் தாக்கவும் முனைந்துள்ளனர்.

சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதலை நிறுத்தக்கூடிய, நிறுத்தும் சமூக சக்தி தொழிலாள வர்க்கமாகும், இதுதான் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலில் மத்திய இலக்கில் வைக்கப்பட்டுள்ளது. இராணுவம், ட்ரம்ப் நிர்வாகத்தின் மூலமாக, உள்நாட்டு கொள்கைகளில் முன்பினும் மிக அதிக பாத்திரத்தை உறுதிப்படுத்தி வருகிறது. போர் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பை ஒடுக்குவதற்கான உள்கட்டமைப்பைத் தயார் செய்ய, புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்பின் தாக்குதல், இராணுவத்திற்கு ஒரு மூடிமறைப்பை வழங்குகிறது.

ஜனநாயகக் கட்சிக்கும், சாண்டர்ஸ் க்கும் மற்றும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள், ஏனைய போலி-இடது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களில் உள்ள அவரது ஆதரவாளர்களுக்கும் எதிரான எதிர்ப்பிலிருந்து தான் தொழிலாள வர்க்க அணிதிரள்வு நடக்க வேண்டும். புலம்பெயர்ந்தவர் எவரொருவரும் நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலின் கீழ் இருக்கும்போது, குடும்பங்கள், அண்டைஅயலார்கள், நண்பர்கள் மற்றும் சக-தொழிலாளர்களின் எதிர்ப்பை ஒழுங்கமைக்க, வசிப்பிடக் குழுக்கள் மற்றும் வேலையிட குழுக்களை ஸ்தாபிப்பது அவசியமாகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி பின்வருவனவற்றைக் கோருகிறது:

அமெரிக்காவில் அடைக்கப்பட்டுள்ள அனைத்துக் குழந்தைகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், அத்துடன் உலகெங்கிலுமான முகாம்களிலும் சிறைவாச மையங்களிலும் அடைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் அனைவரையும் விடுவிக்க வேண்டும்.

அமெரிக்க கெஸ்டாபோ, அதாவது புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்க ஆணையம் (ICE), சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு ஆணையம் (CBP) ஆகியவற்றை கலைக்க வேண்டும்.

நாடு கடத்தும் எந்திரத்துடன் முற்றிலுமாக ஒத்துழையாமை வேண்டும்.

அமெரிக்காவில் ஆவணமின்றி உள்ள புலம்பெயர்ந்தோர்கள் அனைவருக்கும் உடனடியாக பொது மன்னிப்பும், பயணம் செய்வதற்கும் வேலை செய்வதற்குமான உரிமைக்கு உத்தரவாதங்களும் வழங்கப்பட வேண்டும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் உள்நாட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒருபோல வேலை பயிற்சி திட்டங்களும், பொது சேவைகளுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலரும் வழங்கப்பட வேண்டும். அங்கே போதுமானளவுக்கு செல்வ வளமும் உள்ளது, அனைவருக்கும் இடமும் உள்ளது.

ஏகாதிபத்திய போர் மற்றும் வறுமையிலிருந்து தப்பியோடி வரும் பத்து மில்லியன் கணக்கானவர்கள் பாதுகாப்பான தஞ்சம் கோருவதிலிருந்து தடுப்பதற்கு ஒரு "பகுத்தறிவார்ந்த" வழி இருப்பதாக கூறப்படும் வலியுறுத்தலை சோசலிஸ்டுகள் நிராகரிக்கிறோம். உலகில் செலாவணி ஊக வணிகர்கள், பங்குச்சந்தை வர்த்தகர்கள் மற்றும் பெருநிறுவன நிர்வாகிகள் ஒரு பொத்தானை அழுத்தி உலகளவில் மோசடிகளை நடத்தி செல்கின்ற அதேவேளையில், தொழிலாளர்களும் வறியவர்களும் அடிக்கப்படுவதும், சிறையிலடைக்கப்படுவதும் அல்லது கொல்லப்படுவதும், முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை முரண்பாடாகும்.

சோசலிசமும் தேசியவாதமும் பரஸ்பரம் வெவ்வேறானது. செல்வந்தர்களிடம் இருந்து செல்வ வளத்தைப் பறிக்கும் மற்றும் உலகின் உற்பத்தி சக்திகளைத் தொழிலாள வர்க்கத்தின் மேற்பார்வையில் வைக்கும் புரட்சிகரப் பணியை, எல்லைகளை அகற்றுவதன் மூலமும், உலகின் அரசியல் வரைபடத்தை உற்பத்தி நிகழ்முறையின் சர்வதேச குணாம்சத்திற்கு ஒத்திசைவாக கொண்டு வருவதன் மூலமும் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.

சோசலிசத்தின் கீழ், துன்புறுத்தல், சிறைக்காவல் அல்லது நாடு கடத்தல் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்ற உலகில் தொழிலாள வர்க்கம் எங்கே வேண்டுமானாலும் பயணிப்பதற்கான சட்டபூர்வ உரிமையையும் மற்றும் சடரீதியிலான ஆதாரவளங்களையும் இரண்டையும் பெற்றிருக்கும். சோசலிசப் புரட்சிக்கான ஒரு பொதுவான சர்வதேச போராட்டத்தில் அனைத்து இனங்கள் மற்றும் தேசியங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்துவது அவசியமாகும்.