ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Italian government turns away ship with 629 refugees aboard

இத்தாலிய அரசாங்கம் 629 அகதிகள் கொண்ட கப்பலை திருப்பி விடுகிறது

By Marianne Arens 
12 June 2018

தெற்கு இத்தாலிக்கு வந்து சேர்ந்த 600 அகதிகள் கொண்ட கப்பலை இத்தாலியின் புதிய வலதுசாரி அரசாங்கம் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், அதை ஸ்பெயின் ஏற்றுக்கொள்வதாக அறிவித்த பின்னர், அதிவலது லெகாவைச் சேர்ந்த இத்தாலிய உள்துறை மந்திரி மத்தேயோ சல்வீனி திங்களன்று பிற்பகல் அவரது ட்வீட்டில் “வெற்றி!” என அறிவித்தார்.

SOS Méditerranée and Médecins Sans Frontières (MSF) அமைப்பினால் இயக்கப்படும் ஒரு கப்பலான அக்குவாரியஸினால் அகதிகள் மீட்கப்பட்டிருந்தனர். அவர்கள், லிபிய கடல் பகுதிகளில் இத்தாலிய கடற்படைக் கப்பல்கள் ரோந்து சுற்றியபோது சனியன்று மேற்கொண்ட ஆறு தனித்தனி நடவடிக்கைகளில் பாதுகாப்பற்ற படகுகளிலிருந்து காப்பாற்றப்பட்ட புலம்பெயர்ந்தவர்களாவர்.

கடும் நெரிசலுக்கு மத்தியில் கப்பலுக்கு வந்து சேர்ந்த அகதிகளில், 123 துணைக்கு எவருமற்ற சிறார்களும், 11 ஏனைய குழந்தைகளும், மற்றும் ஏழு கர்ப்பிணி பெண்களும் இருந்தனர். அவர்களில் சிலர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தனர் அல்லது, லிபியாவில் மனிதக் கடத்தல்காரர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகளால் காயமடைந்திருந்தனர் என்று கூறப்பட்டது.

லெகா மற்றும் ஐந்து நட்சத்திர இயக்கம் இணைந்த புதிய வலதுசாரி அரசாங்கம் அதன் புலம்பெயர்வோர்-எதிர்ப்பு கொள்கையை செயல்படுத்த ஏதுவாக, இந்த அகதிகளின் உயிர்களை பணயம் வைத்து அவர்களை உதாரணமாக பயன்படுத்த முடிவு செய்திருந்தது. கூட்டணியின் இந்த பிரச்சார அமைப்பு அரை மில்லியன் புலம்பெயர்ந்தவர்களை விரைவாக நாடுகடத்த அழைப்பு விடுத்தது.

“கடலில் உயிர்களை பாதுகாப்பது என்பது கடமை, ஆனால் இத்தாலியை ஒரு மிகப்பெரிய அகதிகள் முகாமாக்குவது என்பது அல்ல,” என்று முகநூலில் வாய்வீச்சாக சல்வீனி அறிவித்தார். “இத்தாலி அதன் தலையை பணிந்து, கீழ்படிந்து நடந்தது. இந்த முறை அங்கு யாரோ ஒருவர் முடியாது எனச் சொல்கிறார்.”

திங்களன்று மாலை, புதிய ஸ்பானிய பிரதம மந்திரி பெட்ரோ சான்சேஸ் (PSOE) மட்டுமே, “ஒரு மனிதாபிமான பேரழிவை தடுக்க,” அக்குவாரியஸை தரையிறங்கவும், அகதிகளை கப்பலிலிருந்து இறக்குவதற்கும் அவரது அரசாங்கம் அனுமதிக்கும் என்று வாக்குறுதியளித்த ஒரே ஐரோப்பிய தலைவராக இருந்தார்.

இருப்பினும், அகதிகளுடன் ஏற்கனவே அளவுக்கு மீறிய எடையுடனான அக்குவாரியஸ் ஸ்பானிஷ் கடற்கரைக்கு பயணிக்க முடியுமா என்பது தெளிவாக இல்லை. திங்களன்று பிற்பகலில், MSF, “ஸ்பெயின் வழங்கிய பாதுகாப்பு துறைமுகமான வாலென்சியா 1,300 கிலோமீட்டர் தொலைவில் இருந்த நிலையிலும் மற்றும் ஏற்கனவே அக்குவாரியஸ் அதிகபட்ச கொள்திறனை மீறியிருந்த நிலையிலும், அதனுடனான இன்னும் 3 நாள் பயணம் என்பது கேள்விக்குறியாக இருந்தது. மேலும், கப்பலிலுள்ள நோய்வாய்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் உட்பட பயணித்துக் கொண்டிருக்கும் மக்கள் ஆரோக்கியத்துடன் பாதுகாத்து காப்பாற்றப்படவும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளையும் முதலில் காப்பாற்ற வேண்டும்” என்று ட்வீட் செய்தது.

சல்வீனி ஞாயிறன்று, அக்குவாரியஸை எடுத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி வெலெட்டாவில் உள்ள மால்டிஸ் அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ குறிப்பு ஒன்றை அனுப்பி வைத்தார். அதே நேரத்தில், தரையிறங்க அக்குவாரியஸை அனுமதிக்கக் கூடாதென அனைத்து இத்தாலிய துறைமுகங்களுக்கும் அவர் கடுமையாக தடை விதித்திருந்தார்.

அடுத்து மால்டாவும் அக்குவாரியஸை ஏற்க மறுத்தது. ஒரு சமூக ஜனநாயகவாதியான மால்டிஸ் பிரதம மந்திரி ஜோசப் மஸ்கட், இந்த அகதிகளின் கடல்வழி மீட்பில் பல வணிக கப்பல்களும், இத்தாலிய கடலோர பாதுகாப்பு படையின் மூன்று ரோந்து படகுகளும் ஈடுபட்டிருந்ததை சுட்டிக்காட்டினார். அதன் விளைவாக, மால்டா “மீட்பு பணிகளுக்கு ஒழுங்கமைப்பதில் ஈடுபடவோ அல்லது பொறுப்பேற்கவோ இல்லை.”

குறிப்பாக, அக்குவாரியஸை தடை செய்யும் சல்வீனியின் குறிப்பில், புதிய உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரும் ஐந்து நட்சத்திர இயக்கத்தின் (M5S) ஒரு உறுப்பினருமான டானிலோ டோனிநெல்லி கூட கையெழுத்திட்டிருந்தார். மேலும், M5S இன் தலைவரும், இரண்டாவது துணை பிரதம மந்திரியுமான லூய்கி டி மாயோ, “புலம்பெயர்ந்தோர் நிகழ்வு” இத்தாலியில் கட்டுப்படுத்த முடியாததாகிவிட்டது என்று கூறி, ஒருசில மணி நேரங்களுக்கு முன்பாக ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் வெளிப்படையாக சல்வீனிக்கு ஆதரவாக பேசினார்.

மெஸ்ஸினாவிற்கும் மால்டாவிற்கும் இடையே இரண்டு நாட்கள் பயணம் செய்தும் ஒரு பாதுகாப்பான புகலிடத்தை கண்டறிய முடியாத நிலையில், அக்குவாரியஸில் மீட்கப்பட்டிருந்த மக்களின் நிலைமை அதிகரித்தளவில் தாங்க முடியாததாகிவிட்டது. தொலைக்காட்சி செய்தியாளர் அனெலிஸ் போர்கஸ், இரண்டு மூன்று நாட்களுக்கான பொருட்களே கப்பலில் உள்ளதாகவும் அவையும் விரைவில் தீர்ந்துவிடக்கூடும் என்று அக்குவாரியஸில் இருந்து செய்தி வெளியிட்டார்.

“மீட்பு கப்பலில் நெரிசல் அதிகரித்துள்ள காரணத்தால்,” “நிலைமை மிகவும் ஆபத்தாக உள்ளது” என்று போர்கஸ் கூறினார். இந்த கப்பல் பொதுவாக 550 பேருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. “பெரும்பாலான மக்கள் கப்பல் தளத்திற்கு வெளியே தங்க வேண்டியிருந்ததுடன், முற்றிலும் திறந்த வெளியிலேயே பயணிக்க வேண்டியிருந்தது. மீட்கப்படுவதற்கு முன்னர் ஏற்கனவே 20 முதல் 30 மணிநேரங்கள் வரை கடலில் செலவழித்திருந்த மக்களைப் பற்றி நாங்கள் பேசுகிறோம்” என்றும் சேர்த்துக் கூறினார்.

இந்த அக்குவாரியஸின் நிலைப்பாடு, புகழ்பெற்ற 1939 “Voyage of the damned,” என்ற நூலை நினைவுகூர்வதாக உள்ளது, அதில், கடல்வழி வியாபாரியான சென் லூயிஸ், நாஜி பயங்கரவாதத்தில் இருந்து தப்பிக்க முயன்ற 937 ஜேர்மனிய யூதர்களுடன் கியூபாவுக்கு பயணிக்க ஒரு கப்பலை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது, அந்த கப்பல் கரைசேர கியூபா மட்டுமல்லாது, அதே போல அமெரிக்காவும் கனடாவும் கூட மறுத்தன, இந்நிலையில் ஐரோப்பாவிற்கே அக்கப்பல் திரும்புவதற்கு நிர்பந்திக்கப்பட்டதோடு, அதில் இருந்த அகதிகளை அடுத்த ஒரே ஆண்டுக்குள் நாஜிக்களால் கைப்பற்றப்பட்ட பெல்ஜிய நாட்டின்  துறைமுகமான ஆன்ட்வேர்பில் தரையிறக்க நேரிட்டது. மேலும், குறைந்தபட்சம் அப்பயணிகளில் கால் பங்கினர் படுகொலை முகாம்களில் நாஜிகளால் கொலைசெய்யப்பட்டனர் என்பதும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அக்குவாரியஸில் மீட்கப்பட்டிருந்த அகதிகள் லிபியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் கூட ஒரு நரகவேதனையான பயணத்தில் நிலைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், புலம்பெயர்ந்தவர்களில் பலரும் லிபிய கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டு, இழிபுகழ்பெற்ற லிபிய சித்திரவதை முகாம்களுக்கு திரும்ப இழுத்துச் செல்லப்பட்டனர். ஒருசில நாட்களுக்கு முன்பு கூட, லிபியாவில் நடந்த ஒரு பாரிய சிறை உடைப்பின் மத்தியில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

இத்தாலியில் அக்குவாரியஸூக்கு புகலிடம் அளிக்க மறுத்ததும், அத்துடன் லிபிய கடலோர காவல்படை உடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union - EU) நெருங்கிய ஒத்துழைப்பும், ஐரோப்பிய ஒன்றிய அகதிகள் கொள்கையின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது. தற்போது புதிய இத்தாலிய அரசாங்கமும் இந்த கொள்கையை மிக பகிரங்கமாகவும் இரக்கமின்றியும் வெறுமனே பின்பற்றுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான ஒரு மறைமுக யுத்தத்தை நடத்துகிறது, இது மத்தியதரைக் கடல் எனும் பெரும் பிரேதக் குழியில் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்டுவிட்டது. சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (IOM), இந்த ஆண்டில் மட்டும் 785 அகதிகள் மூழ்கி இறந்துள்ளதாக ஆவணப்படுத்தியுள்ளது.

அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக ஜேர்மன் அரசாங்கம் கூட இந்த ஐரோப்பிய ஒன்றிய யுத்தத்திற்கு ஆதரவளிக்கிறது. சான்சலர் அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம், CDU), இழிந்த AnKER மையங்களை விரைவாக உருவாக்குவதற்கு ஆதரவாக பேசியுள்ளார். ஞாயிறன்று, Anne Will நடாத்தும் விவாத நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, எதிர்காலத்தில் தஞ்சம் கோரும் நடைமுறைகள் விரைவாக்கப்பட வேண்டும், “அப்போதுதான் நிராகரிக்கப்பட்ட புகலிடம் கோருவோரை நாட்டை விட்டு வெளியேற்ற முடியும்” என்று தெரிவித்தார்.

CDU இன் கூட்டணி கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி (Social Democratic Party-SPD), அகதிகளுக்கு எதிரான கடுமையான அணுகுமுறைகள் பற்றி பகிர்ந்து கொள்கிறது. ஞாயிறன்று, Spiegel இன் இணையவழி நேர்காணலில், SPD தலைவர் ஆன்டிரியா நாஹெலஸ், “பாதுகாப்பான நாடுகளில் இருந்து வருபவர்கள்” எனும் கொள்கை “மக்கள் நாடுகடத்தப்படுவதையும் உள்ளடக்கியது. நாம் அதை கையாள வேண்டும். தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட மக்களுக்கு சாதாரணமாக ஜேர்மனியில் தங்கலாம் என்ற உணர்வை நாங்கள் கொடுக்க முடியாது” என்று தெரிவித்தார். மிக சமீபத்தில் இந்த விடயம் குறித்து “பல முடிவுகள்” எட்டப்படும் என்றும் அவர் அச்சுறுத்தினார்.

அக்குவாரியஸை இறங்குதுறைக்குள் நுழைய அனுமதி மறுத்ததன் மூலம் இத்தாலிய அரசாங்கம் ஒரு கொடிய முன்னோடியாக அதனை காட்டியுள்ளது என்பதுடன், NGO கப்பல்களை மீண்டும் திருப்புவதற்கு சமிக்ஞை செய்துள்ளது. அக்குவாரியஸை திருப்பியனுப்பிய பின்னர், Seawatch உட்பட பிற கப்பல்கள், ஞாயிறன்று, மத்தியதரைக் கடல் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 800 பேரை மீட்டுள்ளது. கடந்த வார இறுதியில் மட்டும், 1,420 க்கும் அதிகமான மக்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர், அவர்களது விதியும் உயிர் பிழைப்பும் தற்போது நேரடியாகவே அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது.

வாலென்சியாவில் இறங்குதுறைக்குள் அக்குவாரியஸ் அனுமதிக்கப்பட்டாலும், பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ் இன் புதிய PSOE அரசாங்கம், ஐரோப்பாவின் எஞ்சிய முதலாளித்துவ அரசாங்கங்களைக் காட்டிலும் குறைந்த அளவிலான புலம்பெயர்வோர் எதிர்ப்பு கொள்கையை பின்பற்றப் போவதில்லை. 2015 இல் PSOE தலைமையின் கீழ், ஸ்பானிஷ் பிராந்தியத்தை வந்தடையும் அகதிகளை தடுத்து நிறுத்த ஸ்பெயின் முதன்முதலில் மெலில்லா மற்றும் சியூடாவை சுற்றி ஒரு எல்லை வேலியை அமைத்ததுடன், மொரோக்கோவில் ஸ்பானிய குடியிருப்புக்களையும் உருவாக்கியது. மேலே ரேஸர்-கம்பிகள் கொண்ட மூன்று மீட்டர் உயரமான வேலிகள் அமைக்கப்பட்டிருந்ததுடன், CCTV கண்காணிப்பு கம்பங்கள் மற்றும் இயக்க உணரிகள் உடனான பொலிஸ் கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த வேலிகளின் உயரம் ஆறு மீட்டருக்கு உயர்த்தப்பட்டது, மேலும், செயற்கைக்கோள்கள் மற்றும் ஆளில்லா விமானங்களின் (ட்ரோன்கள்) கண்காணிப்பும் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

அக்குவாரியஸில் இருந்த அகதிகள் ஸ்பெயினை சென்றடைந்த போதும், அவர்களுக்கு அங்கு அடைக்கலம் கொடுக்கப்படும் என்று நம்புவதற்கு எந்தவித காரணமும் இல்லை. கொடூரமான கூட்டு நாடுகடத்தல்களுக்கு ஸ்பெயின் நாடு இழிபுகழ்பெற்றதாகும் என்பதுடன், கடந்த அக்டோபர் மாதத்தில் தான் இது குறித்து மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் கண்டனத்திற்கும் உள்ளானது.