ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Defying the trade unions, Air France workers vote to reject contract

தொழிற்சங்கங்களை மீறி, ஏர் பிரான்ஸ் தொழிலாளர்கள் ஒப்பந்த நிராகரிப்புக்கு வாக்களிக்கின்றனர்

By Alex Lantier
8 May 2018

வேலைநிறுத்தம் செய்துவரும் ஏர் பிரான்ஸ் தொழிலாளர்கள் ஏப்ரல் 16 அன்று தலைமை நிர்வாக அதிகாரியான Jean-Marc Janaillac மற்றும் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட ஒப்பந்தத்தை நிராகரிப்பதற்கு ஆதரவாக 55 சதவீதம் வரை வாக்களித்துள்ளதாக வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது. இந்த வாக்களிப்பில் 80 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

முன்வைக்கப்பட்ட ஒப்பந்தம் தொழிலாளர்களை அவமதிக்கும் வகையிலானதாக இருந்தது. தொழிற்சங்கங்களின் ஓசையெழுப்பாத ஆதரவுடன் Janaillac ஆல் முன்வைக்கப்பட்ட இது நான்கு வருட காலத்தில் வெறும் ஏழு சதவீத ஊதிய அதிகரிப்புக்காய் ஆலோசனையளித்தது. சென்ற ஆண்டில் 1 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாய் சாதனை அளவிலான இலாபத்தைப் பதிவுசெய்த பின்னர், ஏர் பிரான்ஸ் நிர்வாகமானது தனக்கு 67 சதவீதம் வரையில் இரட்டை இலக்க ஊதிய அதிகரிப்புகளை அளித்துக் கொண்டது. ஒட்டுமொத்த ஊதிய மட்டங்களை ஒரேயடியாகக் குறைக்கும் பொருட்டு தொழிலாளர்களை குறைந்த-செலவு துணை விமானநிறுவனங்களுக்கு நகர்த்தியதன் மூலம் இந்த இலாப அதிகரிப்பு சாதிக்கப்பட்டது.

தொழிலாளர்கள் ஏர் பிரான்ஸ் நிர்வாகம் மற்றும் பிரெஞ்சு அரசாங்கத்திடம் இருந்து மட்டுமல்ல, ஒப்பந்தத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்வதற்காக அவர்களைக் கண்டனம் செய்ததோடு அவர்கள் அதற்கு ஒப்புதலளிக்க வேண்டும் என்று கோரிய தொழிற்சங்க நிர்வாகிகளிடம் இருந்தான மிரட்டல்களையும் மீறி இந்த ஒப்பந்தமொழிவை எதிர்த்து வாக்களித்தனர்.

விமான ஓட்டிகள் பெருமளவில் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதலளித்து வாக்களித்ததாக கூறப்படுகின்ற நிலையில், விமான சிப்பந்திகள் மற்றும் பராமரிப்புத் தொழிலாளர்கள் பாரிய அளவில் அதற்கு எதிராக வாக்களித்ததாகத் தெரிகிறது. இந்த நிறுவனத்தில் 3,500 விமான ஓட்டிகளும், 13,000 விமான சிப்பந்திகளும் மற்றும் 32,000 தரைத்தள தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். திறத்தேர்ச்சியுடைய விமானிகள் நல்ல ஊதியம் பெறுகின்ற அதேநேரத்தில், நிறுவனத்தின் மிகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள் அதிக ஊதியமளிக்கப்படாதவர்களாய் இருக்கின்றனர். வரிக்கு-முந்தைய மாதாந்திர சராசரி வருவாய் ஆண்களுக்கு 2,981 யூரோக்களாகவும் பெண்களுக்கு 2,066 யூரோக்களாகவும் இருக்கிறது.

ஒப்பந்த வாக்களிப்பு நாளுக்கு முந்தைய வாரத்தில், பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பின் (CFDT) நிர்வாகியான லோரோன் பேர்ஜே Europe 1 வானொலிக்கு நேர்காணல் அளித்த போது, “நம் அனைவரையும் பணயக்கைதிகளாக ஆக்கியிருப்பதற்காக”வும் நிறுவனத்திற்கு “பெரிய, பெரிய பிரச்சினைகளுக்கு” காரணமாகியிருப்பதற்காகவும் ஏர் பிரான்சின் விமானிகளை நெருப்பான வார்த்தைகளால் கண்டனம் செய்தார். வேலைநிறுத்தம் தொடர்கின்ற ஒவ்வொரு நாளிலும் ஏர் பிரான்ஸ் 26 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான நட்டத்தை சந்திப்பதாகவும், குறைந்தபட்சம் 300 மில்லியன் யூரோக்கள் வரை நட்டமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏர் பிரான்ஸ் நிர்வாகம் மற்றும் அரசாங்கத்திடம் இருந்தான மிரட்டல்களை எதிர்ப்பதற்கு எந்த முன்னோக்கையும் தொழிலாளர்களுக்கு வழங்காமல் ஒரு சில ஒருநாள் வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைத்து விட்டு, எளிதாக “வேண்டும்” வாக்களிப்பைப் பெற்றுவிடலாம் என்றே ஏர் பிரான்ஸ் தொழிற்சங்கங்கள் முழுதாக எதிர்பார்த்தன. ஆனால் வாக்களிப்பின் முடிவுகளைக் காணத் திரண்டிருந்த நிர்வாகத்தினர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், நேரெதிராய் நடந்திருந்ததைக் கண்டு தத்தமது கண்களை நம்ப முடியாமல் திகைத்து நின்றனர்.

ஒரு பெயர்கூறாத தொழிற்சங்க நிர்வாகி அந்தக் காட்சியை பிரான்சின் தொலைக்காட்சிகளில் இவ்வாறு நினைவுகூர்ந்தார்: “55 சதவீதம் என்று பார்த்தேன். முதலில் நான் நினைத்தேன் அது 'வேண்டும்’ என்று கூறிக் கிடைத்த வாக்குகள் என்று, ஆனால் உண்மையில் அது ‘வேண்டாம்’ என்று கூறிக் கிடைத்த வாக்குகள். எல்லோரிடத்திலும் திகைத்துப் போனதொரு அமைதி நிலவியது. ஒரு முழு நிமிடத்திற்கு அங்கே அமைதி நீடித்தது.” அதன் பின் ஏர் பிரான்சின் ஒரு நிர்வாகி கத்தினார், “இந்த நிறுவனம் சமாளிக்கவியலாததாகிறது!”

வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்ததோடு, ஒப்பந்தம் நிறைவேறி விடும் என்று முழுமையாக எதிர்பார்த்துக் கொண்டே வெளியில் அதனை எதிர்ப்பதாக கூறிக் கொண்டு வந்திருந்த தொழிற்சங்க நிர்வாகி ஒருவர், கூட்டத்தில் கூறினார், “நிர்வாகம் செய்திருந்த அத்தனை முயற்சிகளையும் கருத்தில் கொண்டு பார்த்ததில், அவை வெற்றி பெற்றி விடும் என்றே நான் உறுதியாக நம்பினேன்.”

வாக்களிப்பின் முடிவை தொழிலாளர்களுக்குத் தெரிவிக்கின்ற விதமான ஒரேயொரு துண்டுப்பிரசுரமும் விநியோகிப்பதற்கு இல்லாத நிலைக்கு தொழிற்சங்கங்கள் தள்ளப்பட்டிருந்தன. “வேண்டும்” வாக்களிப்பு தான் கிடைக்கும் என்று அவை உறுதியாக நம்பியதால் ஒப்பந்தத்தின் பத்திகளை தெரிவிக்கும் துண்டறிக்கைகளை மட்டுமே அவை அச்சடித்திருந்தன, “வேண்டாம்” வாக்களிப்புக்கு அவை எந்த தயாரிப்பும் செய்திருக்கவில்லை. ஆனால் அவற்றின் உறுப்பினர்கள் அவற்றை மீறி ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்ததால் அவை வெறும் கையுடன் நிற்கும் நிலை நேரிட்டது.

Janaillac உடனடியாக தனது இராஜினாமாவை அறிவித்து எதிர்வினையாற்றினார். “இந்த வாக்களிப்பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன், வரும் நாட்களில் ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர் பிரான்ஸ்-KLM இன் இயக்குநர் குழுவிடம் எனது இராஜினாமாவை சமர்ப்பிப்பேன்” என்றார் அவர். “இந்த வாக்களிப்பு அமைதியின்மையின் வெளிப்பாடாகும். இது ஒரு ஆழமான மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கிறது” என்று தொடர்ந்து கூறிய அவர், தனது இராஜினாமா “மனோநிலையில் ஒரு கூட்டான மாற்றத்திற்கு அனுமதித்து ஒரு மீட்சிக்கான நிலைமைகளை உருவாக்கும்” என்று நம்புவதாக மேலும் சேர்த்துக் கொண்டார்.

பிரான்சின் பொருளாதார அமைச்சரான Bruno Le Maire ஏர் பிரான்சின் தொழிலாளர்களை மிரட்டும் விதமாக, அரசு “ஏர் பிரான்சின் கடன்களை தள்ளுபடி செய்யாது” என்று அறிவித்ததோடு, தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கைகள் “நியாயமற்றவை” என்று ஆணவத்துடன் உபதேசமளித்தார்.

நேற்று, Janaillac இன் இராஜினாமாவை அடுத்து, நிறுவனம் முதலீட்டாளர்களுக்குக் கொடுத்து வருகின்ற பில்லியன் கணக்கிலான இலாபங்களில் இந்த வேலைநிறுத்தம் வெட்டைக் கொண்டுவரும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சிய காரணத்தால், Air France-KLM பங்குவிலை 13 சதவீதம் வீழ்ச்சி கண்டது. “ஒரு மோதல் நடைபெறுவதன் மத்தியில் தலைமை நிர்வாகி ஒருவர் இல்லாத நிலையில் இது நிறுவனத்தை விடுகிறது” என்று நிதி ஆய்வாளர்கள் Le Figaro விடம் தெரிவித்தனர்.

ஒப்பந்தத்திற்கான ஏர் பிரான்ஸ் தொழிலாளர்களின் தீரமிகு எதிர்ப்பானது நிதியப் பிரபுத்துவத்தின் கோரிக்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் ஒரு சர்வதேச எழுச்சியின் பகுதியாக இருக்கிறது. சாமானியத் தொழிலாளர்களது இந்த எதிர்ப்பு அலையானது தொழிலாள வர்க்கத்தை தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனும் ஒரு பகிரங்கமான மோதலுக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில், தொழிற்சங்கங்களை மீறி ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களது ஒரு அலை ஏராளமான மாநிலங்களில் வெடித்திருக்கிறது. ஏர் பிரான்ஸின் தொழிலாளர்கள் ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்த நேரத்தில், பத்தாயிரக்கணக்கிலான கலிபோர்னியா பல்கலைக்கழகத் தொழிலாளர்கள் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுடன் சேர்ந்து, கொலராடோ ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் இறங்கிக் கொண்டிருந்தனர். அதேநேரத்தில், பிரிட்டன் முதல் இலங்கை வரை மற்ற நாடுகளிலும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர்.

ஐரோப்பாவில் புத்தாண்டு தினத்தில் தொடங்கி ஜேர்மன் வாகன உற்பத்தித் தொழிலாளர்கள், உலோகத் தொழிலாளர்கள் மற்றும் அரசாங்கத் தொழிலாளர்கள்; பிரிட்டிஷ் இரயில்பாதைத் தொழிலாளர்கள்; கிழக்கு ஐரோப்பிய வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் மற்றும் துருக்கிய உலோகத் தொழிலாளர்கள் மத்தியில் வேலைநிறுத்தங்கள் வெடித்து வந்திருக்கின்றன.

பிரான்சில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் சிக்கன நடவடிக்கை மற்றும் இராணுவவாதத் திட்டநிரலுக்கு எதிரான அரசியல் போராட்டத்திற்குள் தொழிலாள வர்க்கம் வந்து கொண்டிருக்கிறது. தேசிய இரயில்வேயை (SNCF) தனியார்மயமாக்கும் மக்ரோனின் திட்டங்களுக்கு எதிராக இரயில்வே வேலைநிறுத்தம் ஒன்று நடைபெற்று வருகின்ற நிலையில், சுகாதாரப் பராமரிப்புத் தொழிலாளர்களும் அரசுத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தங்களுக்கு செல்வதோடு மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் முற்றுகைப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இராணுவச் செலவினத்தில் ஒரு பாரிய அதிகரிப்பை மேற்கொள்ளும் பொருட்டு 300 பில்லியன் யூரோக்கள் திரட்டுவதற்காக ஊதியங்கள் மற்றும் சமூக சேவைகளில் ஆழமான வெட்டுக்களை மக்ரோன் மேற்பார்வை செய்து கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், மத்திய கிழக்கில் அமெரிக்க தலைமையிலான போர் முனைப்பில் இணைந்து பிரான்ஸ் சிரியா மீது குண்டுவீசுவதோடு ஈரானுடனும் போருக்கு அச்சுறுத்தி வருகிறது.

வேலைநிறுத்தங்களை ஊழலடைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கைகளில் இருந்து விடுவித்து, வேலைநிறுத்தம் செய்பவர்களை சர்வதேச அளவில் அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்துவதற்கான சாமானியத் தொழிலாளர்களது சுயாதீனமான அமைப்புகளை ஸ்தாபிப்பதே முன்நோக்கியிருக்கும் பாதையாகும்.

பெருநிறுவன போட்டித்திறனையும் இலாபங்களையும் அதிகரிப்பதிலேயே முழுக்கவனத்தையும் செலுத்துகின்ற தொழிற்சங்கங்கள், அவை பிரதிநிதித்துவம் செய்வதாக போலியாக கூறிக் கொள்கின்ற தொழிலாளர்களது நலன்களை நேரடியாகப் பலவீனம் செய்யும் நடவடிக்கைகளுக்கு எப்படி உடன்படுகின்றன என்பதற்கான ஒரு வெளிப்பட்ட உதாரணத்தை சமீபத்திய ஆண்டுகளது ஏர் பிரான்ஸ் வேலைநிறுத்தங்கள் வழங்கியிருக்கின்றன.

2014 இல், குறைந்த ஊதியங்களை வழங்குகின்ற மலிவு-விலை துணைநிறுவனங்களுக்கு தொழிலாளர்களை இடமாற்றம் செய்யும் திட்டங்களுக்கு எதிராக ஏர் பிரான்ஸ் நிறுவனத்தில் விமானிகளின் ஒரு சக்திவாய்ந்த வேலைநிறுத்தம் வெடித்தது. ஏர் பிரான்ஸ் நிர்வாகம் நூறு மில்லியன் கணக்கான யூரோக்கள் நட்டத்தை சந்தித்ததோடு நிதிரீதியாக மண்டியிடச் செய்யப்பட்டது. வேலைநிறுத்தம் செய்தவர்களது கைக்கெட்டும் தூரத்தில் வெற்றி இருந்த சமயத்தில், தொழிற்சங்கங்கள் திடீரென நடவடிக்கையை திரும்பப் பெற்றன. “நமது நிறுவனத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதும் மீளமுடியாத சேதாரம் இழைக்கப்படுவதற்கு முன்பாக அதன் காயங்களுக்கு மருந்திடுவதும் நமது கடமையாகும்” என்று தொழிற்சங்கங்கள் ஒரு அறிக்கையில் அறிவித்தன.

தொழிற்சங்கங்கள் அவற்றின் உறுப்பினர்களது ஊதிய மட்டங்களிலான ஒரு பொறிவை எதிர்த்து நிற்கவில்லை. வேலைநிறுத்தத்தின் வெற்றியானது பெருநிறுவன இலாபங்களுக்கு தீங்கிழைக்கும் என்பதோடு பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலுமான விமானப்போக்குவரத்துத் துறையிலும் இன்னும் விரிந்த வேலைநிறுத்தங்களை ஊக்குவிக்கும் என்ற அச்சம்கொண்ட அவை அதைத் தடுப்பதற்கு தீர்மானத்துடன் இருந்தன. வேலைநிறுத்தத்தை கழுத்துநெரிப்பதில் அவற்றின் பங்கு, புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி மற்றும் தொழிலாளர் போராட்டம் (LO) உள்ளிட வசதியான நடுத்தர வர்க்கத்தின் பல்வேறு போலி-இடது கட்சிகளாலும் பாராட்டப்பட்டது.

தொழிற்சங்கங்கள் இந்த ஒப்பந்தத்தின் ஏதோவொரு வடிவத்தை மீண்டும் திணிப்பதற்கு குறுக்கே எதுவந்தாலும் நிற்கப் போவதில்லை, வெற்றியின் விளிம்பில் நின்றபடி தோல்வியைப் பறிப்பதற்கு தமது சக்திக்குட்பட்ட எல்லாவற்றையும் செய்யும் என்ற ஒரு தீவிரமான எச்சரிக்கையை 2014 வேலைநிறுத்தத்தின் முடிவு இன்றைய ஏர் பிரான்ஸ் தொழிலாளர்களுக்கு வழங்குவதாய் இருக்கிறது.

வேலைநிறுத்த நடவடிக்கை நடந்துவருகிற நிலையில், நேற்றிரவு நடந்த கூட்டத்தில் தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தத்தை எவ்வாறு தொடர வேண்டும் என்பதில் எந்த உடன்பாட்டையும் எட்டுவதற்குத் தவறின. பெயர்கூறாத ஒரு தொழிற்சங்க நிர்வாகி Le Figaro இடம் தெரிவித்தார், “நாங்கள் பொறுப்புணர்வு கொண்டவர்கள் என்பதைக் காட்ட விரும்புகிறோம், ஆகவே மேலதிக வேலைநிறுத்தங்களுக்கு உடனடியாக நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை.”