ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

For international action to defend Julian Assange!

ஜூலியான் அசான்ஜைப் பாதுகாப்பதற்கான சர்வதேச நடவடிக்கைக்காக!

The ICFI and WSWS international editorial board
28 May 2018

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவும், விக்கிலீக்ஸ் பதிப்பாசிரியர் ஜூலியான் அசான்ஜைப் பாதுகாக்க உலகெங்கிலும் அவசர நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுக்கின்றன. அமெரிக்க அரசாங்கமும் அதன் கூட்டாளிகளும் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக ஓயாது இன்னல்படுத்தி வந்ததற்கு எதிராகப் போராடிய பின்னர், ஆஸ்திரேலியாவில் பிறந்த அந்த பத்திரிகையாளர் இப்போது அவர்களின் பிடியில் விழும் பயங்கர ஆபத்தில் உள்ளார்.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மற்றும் சர்வதேச அளவில் அதன் சமசக்திகளின் போர் குற்றங்களையும், ஜனநாயக-விரோத சதித்திட்டங்கள் மற்றும் ஊழல்களையும் உலகின் முன் அம்பலப்படுத்திய, கசியவிடப்பட்ட தகவல்களை அவர் பிரசுரித்தமைக்காக, அவர்கள் விக்கிலீக்ஸ் மற்றும் அதன் பதிப்பாசிரியர் மீது கடும் விரோதம் கொண்டுள்ளனர். அமெரிக்க அரசு, அசான்ஜை மௌனமாக்கவும், அவரை ஒரு சோடிப்பு வழக்கு விசாரணையில் இழுத்து, அவர் மீது மோசடியான “தேசத் துரோக" குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதன் மூலம் கொள்கை ரீதியில் செயல்படும் அனைத்து பத்திரிகையாளர்களையும், இரகசியங்களை வெளியிடுவோரையும் பீதிக்குள்ளாக்குவதில் தீர்மானமாக உள்ளது. உண்மையை வெளியிட்டதற்காக நீண்டகால சிறைவாசம், அல்லது மரண தண்டனையையே கூட, அசான்ஜ் இப்போது முகங்கொடுக்கிறார்.

2010ல், பிரிட்டனில் இருந்த போது, அசான்ஜ் அமெரிக்காவின் குற்றங்களை அம்பலப்படுத்தினார். அதற்கு பின்னர் விரைவிலேயே, ஒரு சுவீடன் வழக்கறிஞர் அவர் பாலியல் அத்துமீறல்கள் செய்திருக்கலாம் என்று அவருக்கு எதிராக கீழ்தரமான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். அந்த குற்றச்சாட்டுக்கள் அவரை மௌனமாக்கவும், கணிசமானளவுக்கு விக்கிலீக்ஸிற்கு கிடைத்த சர்வதேச ஆதரவைப் பலவீனப்படுத்தவும் செய்யப்பட்ட ஒரு சூழ்ச்சியின் பாகமாக இருந்தன. அவரை சுவீடனிடம் ஒப்படைத்து, அங்கிருந்து அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட செய்யப்பட்ட முயற்சிகளுக்கு எதிராக அவர் போராட நிர்பந்திக்கப்பட்டார். 2012 ஜூனில், அயல்நாட்டிடம் ஒப்படைப்பதற்கு எதிரான அவரது சட்டபூர்வ இறுதி முறையீடு, அரசியல்ரீதியில் உந்தப்பட்டு ஒரு பிரிட்டிஷ் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட போது, அவர் இலண்டனின் ஈக்வடோரிய தூதரகத்தில் அரசியல் தஞ்சமடைய நிர்பந்திக்கப்பட்டார்.

2016 இறுதியில், சுவீடன் அதிகாரிகள் இலண்டனில் வைத்தே அசான்ஜை விசாரிக்க உடன்பட்டனர், பின்னர் கடந்த ஆண்டு, அவர்கள் எந்தவொரு குற்றச்சாட்டும் கூட சுமத்தாமல் தங்களின் போலி விசாரணையைக் கைவிட்டனர். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம், வாஷிங்டனுடன் சேர்ந்து, அரசியல் தஞ்சம் கோரிக் கொண்டே பிணையில் தலைமறைவாக இருப்பதற்காக குற்றம்சாட்டி அசான்ஜ் மீது வழக்கு தொடுத்து, சிறையில் அடைக்கும் அதன் நோக்கத்தைக் கைவிட மறுத்துள்ளது.

இந்நிலைமை இப்போது ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியுள்ளது. 2012ல் அசான்ஜிற்கு மிகவும் தைரியமாக அரசியல் தஞ்சம் வழங்கிய ஈக்வடோரிய அரசாங்கம், அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷின் கடுமையான அழுத்தத்திற்கு அடிபணிந்துவிட்டது. ஒன்பது வாரங்களுக்கு முன்னர், மார்ச் 28 அன்று, அது அசான்ஜிற்கான அனைத்து தகவல் தொடர்புகளையும், பார்வையாளர்களை சந்திப்பதற்கான அவரது வசதிகளையும் முற்றிலுமாக துண்டித்தது.

ஈக்வடோரிய அரசாங்கம் அதன் தூதரகத்திலிருந்து அசான்ஜ் "தானாக முன்வந்து" வெளியேறும் வகையில் செய்ய அவர் மீது பெரும் அழுத்தம் கொடுப்பதாக ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன. அவர் ஏறத்தாழ முழுமையாக தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்பே கூட, அசான்ஜின் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அவர் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக, சூரிய ஒளியைக் காணாமல் ஒரு மிகச் சிறிய அறையில், நடைமுறையளவில் சிறைவாசம் அனுபவித்துள்ளார். அவர் வெளியே வர மறுத்தால், அவருக்கு தஞ்சம் அளித்திருப்பதைக் கைவிட்டு, பிணையில் தலைமறைவாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்களுக்காக அவரை பிரிட்டிஷ் பொலிஸிடம் ஒப்படைக்கவும் ஈக்வடோரிய அதிகாரிகள் கோழைத்தனமாக பிரிட்டனுடன் கலந்துரையாடி வருவதாக அவர்களிடமிருந்து வரும் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

அமெரிக்க சிஐஏ மற்றும் ஏனைய பொலிஸ்-உளவுத்துறை முகமைகளும் அசான்ஜை நாடுகடத்துவதற்கான உத்தரவாணைகளுடன் பாய்வதற்கு காத்துக் கொண்டிருக்கின்றன. இரகசியங்களை வெளியிடுவோரை இல்லாமல் ஆக்கவும் அதன் குற்றங்களை உலகத்திற்கு மறைக்கவும் அமெரிக்க ஆளும் வர்க்கம் உறுதியாக இருப்பதை அடிக்கோடிடும் வகையில், விக்கிலீக்ஸை "அரசு-சாரா விரோத உளவுத்துறை முகமை" என்று சிஐஏ முத்திரை குத்திய அதேவேளை, அமெரிக்க அரசோ அசான்ஜைக் கைது செய்வது "முதன்மையானதாக" இருப்பதாக அறிவித்துள்ளது.

ஜூலியன் அசான்ஜைப் பாதுகாக்க உலகெங்கிலும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் விவரிப்புகளும் பிற பொது நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

ஈக்வடோரிய தூதரக கட்டிடத்தினுள் அவர் நுழைந்து ஆறு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜூன் 19 அன்று லண்டனில் அக்கட்டிடத்திற்கு வெளியே விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்து வரும் விழிப்புணர்வு போராட்டத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் ஆதரிக்கிறன.

தொடர்புகொள்வதற்கும் பார்வையாளர்களைப் பார்ப்பதற்குமான அசான்ஜின் உரிமைகளை ஈக்வடோரிய அரசாங்கம் மீண்டும் வழங்க வேண்டும். அவருக்கு அரசியல் தஞ்சம் வழங்கியிருப்பதால், அவரை அவருக்குத் தொல்லை கொடுப்பவர்களிடம் ஒப்படைக்க அதற்கு உரிமையில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம், அதன் பங்கிற்கு, அவரது பிணையிலிருந்து அவர் நழுவியதாக அசான்ஜ் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களைக் கைவிட வேண்டும். தாம் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படலாம் என்ற நியாயமான கவலையினால் மட்டுமே அவசிய நடவடிக்கையாக அவர் பிணை எடுத்திருந்தார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆஸ்திரேலிய பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி, ஜூன் 17 ஞாயிறன்று மதியம் 1.00 மணிக்கு சிட்னியின் மத்திய நகர மண்டப சதுக்கத்தில் ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பிரபல பத்திரிகையாளர் ஜோன் பில்ஜெர் மற்றும் பிற கொள்கைரீதியிலான விக்கிலீக்ஸ் பாதுகாவளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தை அங்கீகரித்துள்ளனர். அசான்ஜின் நிபந்தனையற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், ஆஸ்திரேலியாவுக்குத் திரும்ப அழைத்து கொள்ளவும் ஆஸ்திரேலிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த ஆர்ப்பாட்டம் கோரும். அவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான எந்த முயற்சியிலிருந்தும் அவரைப் பாதுகாப்பதற்கு பிரதமர் மல்க்கம் டர்ன்புல்லின் அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டுமென்றும் அது கோரும்.

அடுத்தடுத்து வந்த ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் ஓர் ஆஸ்திரேலிய பிரஜையாக ஜூலியன் அசான்ஜின் உரிமைகளைத் தாங்கிபிடித்து பாதுகாத்திருக்க கடமைப்பட்டவை என்றபோதும், அவை அதை முற்றிலும் அவமரியாதையுடன் கையாண்டுள்ளன. தனது போர் குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்களை அவர் அம்பலப்படுத்தியதற்காக அமெரிக்க அரசால் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுவதில் இருந்து அசான்ஜை, அதாவது ஓர் ஆஸ்திரேலிய பத்திரிகையாளரைப் பாதுகாக்க ஆரம்பத்திலிருந்தே கான்பெர்ரா கடமைப்பட்டிருந்தது.

அதற்கு பதிலாக, பிரதமர் ஜூலியா கில்லார்ட் தலைமையிலான தொழிற் கட்சி அரசாங்கத்தில் இருந்து தொடங்கி, கான்பெர்ரா அசான்ஜை ஓநாய்களிடம் வீசியுள்ளது.

விக்கிலீக்ஸை வேட்டையாடுவதிலும், இன்னல்களுக்கு உள்ளாக்குவதிலும் கில்லார்ட் பகிரங்கமாக ஒபாமா நிர்வாகத்துடன் ஒத்துழைத்தார். அமெரிக்க போர் குற்றங்களை அம்பலப்படுத்தி, கசிந்த தகவல்களை விக்கிலீக்ஸ் பிரசுரித்ததை "சட்டவிரோதமானது" என்று தொழிற் கட்சி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியது. அனைத்திற்கும் மேலாக, அமெரிக்கா அசான்ஜை எந்தவொரு குற்ற வழக்கில் இழுத்தாலும் அதற்கு உதவுமென்று அது அறிவித்தது.

அதன் பங்கிற்கு, இந்த கூட்டணி எதிர் கட்சியாக இருக்கையில், தொழிற் கட்சி விக்கிலீக்ஸ் ஆசிரியரை ஈவிரக்கமின்றி நடத்துவதைப் பற்றி எப்போதாவது மட்டுமே விமர்சித்திருந்தது. ஆனால் அது ஆட்சிக்கு வந்ததும், விக்கிலீக்ஸிற்கு எதிராக அமெரிக்காவுடன் முந்தைய அரசாங்கத்தினது கூட்டுறவையே தொடர்ந்தது.

இதற்கான காரணம் மிகவும் எளிதானது. ஆஸ்திரேலிய ஆளும் ஸ்தாபகமும், தங்களின் அனைத்து அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து மிகப்பெரும் பணக்காரர்களும், ஜனநாயக உரிமைகளை விட, அல்லது ஆஸ்திரேலிய பிரஜைகளின் உயிர்களை விட ஆஸ்திரேலிய-அமெரிக்க இராணுவ கூட்டணியை மிக முக்கியமானதாக கருதுகின்றன. அனைத்திற்கும் மேலாக, ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் இதர இடங்களிலும் அமெரிக்க தலைமையிலான ஒவ்வொரு போர் குற்றங்களையும் ஆதரித்தன அல்லது பங்கெடுத்துள்ளன, மேலும் விக்கிலீக்ஸ் போன்ற ஊடக அமைப்புகளை ஒடுக்குவதற்கு அவற்றுக்கு உள்ள பேரார்வத்த்தில் குறைச்சல் இல்லை.

தொழிலாள வர்க்கமும், மாணவர்களும், மற்றும் பேச்சு சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாக்கின்ற ஒவ்வொரு அமைப்பும் இந்நிலைமையை இனியும் ஏற்றுக் கொண்டிருக்க முடியாது. அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸ் மீதான தாக்குதல், குறிப்பாக ஆளும் உயரடுக்கிற்கு எதிரான எதிர்ப்பை மௌனமாக்கி, சமத்துவமின்மை மற்றும் போருக்கான தமது கொள்கைகளை முன்னெடுக்கும் நோக்கில், தணிக்கையையும் ஒடுக்குமுறையையும் மேற்கொள்ளும் பரந்த பிரச்சாரத்தின் ஒரு கூர்மையான வெளிப்பாடு மட்டுமே ஆகும்.

சிட்னியில் ஜூன் 17 ஆர்ப்பாட்டமானது ஜூலியன் அசான்ஜைப் பாதுகாப்பதற்கான ஒரு பாரிய அரசியல் பிரச்சாரத்திற்கு தொடக்கப்புள்ளியாக இருக்க வேண்டும்.

இதில் தலையிட கான்பெர்ராவுக்கு அதிகாரமில்லை என்ற எந்தவொரு கூற்றும் பொய்யாகும். அசான்ஜிற்கு உடனடியாக ஆஸ்திரேலிய தூதரக அந்தஸ்து வழங்கி, ஒரு தூதரக கடவுச்சீட்டை அளித்து, ஆஸ்திரேலிய தூதரக வாகனங்களில் ஈக்வடோரிய தூதரகத்திலிருந்து வெளியில் கொண்டு வந்து, தூதரக விதிவிலக்கு உரிமைகளால் பாதுகாக்கப்பட்ட பிரிட்டிஷ் புலம்பெயர்வு மூலமாக ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு வர முடியும்.

ஜூன் 17 ஆர்ப்பாட்டத்தைப் பற்றி எந்தளவுக்கு சாத்தியமோ அந்தளவுக்கு தகவலைப் பரவலாக கொண்டு செல்லுமாறு நாம் விக்கிலீக்ஸ் பாதுகாவலர்களையும் ஜனநாயக உரிமைகளைக் காப்பவர்களையும் வலியுறுத்துகிறோம். இந்த ஆர்ப்பாடத்தில் பங்கெடுக்க உத்தேசமுள்ள, இதை அங்கீகரிக்கும் அமைப்புகள், sep@sep.org.au என்ற மின்னஞ்சலில் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சிக்குத் தகவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இதை ஆமோதிக்கும் கருத்துக்கள் நாளையிலிருந்து WSWS இல் பிரசுரிக்கப்படும்.

ஜூலியன் அசான்ஜை விடுவி! அவர் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்புவதைக் கோரு!