ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Oppose the Sri Lankan government’s ban on May Day celebrations

இலங்கை அரசாங்கம் மே தினக் கொண்டாட்டங்களுக்கு விதித்துள்ள தடையை எதிர்த்திடுவோம்

Socialist Equality Party (Sri Lanka)
25 April 2018

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), மே 1 அன்று திட்டமிடப்பட்டுள்ள மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை இலங்கை அரசாங்கம் இரத்து செய்துள்ளதை கடுமையாக கண்டனம் செய்கின்றது. இது சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள பாரதூரமான தடையாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியையும் அதேபோல் ஏனைய பல தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளையும் மே தின நிகழ்வுகளையும் மே தினத்தையும் நடத்த விடாமல் தடுக்கும் அரசாங்கத்தின் முடிவை சோசலிச சமத்துவக் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான பிரதான தாக்குதலாகும்.

முக்கால் நூற்றாண்டிற்கும் மேலாக இலங்கையின் உழைக்கும் மக்கள் அனுபவித்து வந்துள்ள அரசியலமைப்பு உரிமைக்கு எதிரான இந்த அப்பட்டமான தாக்குதலை எதிர்த்து சோ.ச.க. உடன் அணிசேருமாறு அனைத்து தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

சோ.ச.க. மே 1 அதனது பொதுக் கூட்டத்திற்காக கொழும்பு மாநகர சபையின் புதிய நகர மண்டபத்தை கட்டணம் செலுத்தி ஒதுக்கீடு செய்துள்ளது. கட்சி சட்டத்தின் படி கூட்டத்திற்காக பொலிஸ் அனுமதியையும் பெற்றுள்ளது. எவ்வாறெனினும், திங்களன்று எமது கூட்டத்திறக்கான நகர மண்டப ஒதுக்கீட்டை இரத்து செய்து, பதில் மாநகர சபை ஆணையாளரும் பொறியியலாளருமான எல். ஆர். எல். விக்கிரமரத்ன அனுப்பியுள்ள கடிதம் ஒன்று சோ.ச.க.க்கு கிடைத்துள்ளது.

“உயர் பெளத்த மதகுருக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மே 1ம் திகதி மே தினக் கூட்டங்களை இரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது”, இதனால் மாநகர சபையும் அதன் வளாகத்தில் கூட்டங்களை அனுமதிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளது, என்று தனது கடிதத்தில் விக்கிரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மே 1 அன்று மே தின நிகழ்வுகளை திட்டமிட்டுள்ள மற்ற அமைப்புகளும் இதே போன்ற தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இலங்கை வணிக ​​கைத்தொழில் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம், சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம், இலங்கை தோட்ட ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் ஊடக ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பு உட்பட 14 தொழிற்சங்கங்களின் கூட்டும், அதே போல் முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.), ஐக்கிய சோசலிசக் கட்சி (USP) மற்றும் நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.) போன்றவையும் இதில் அடங்கும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், இந்த மாத தொடக்கத்தில், இம்முறை மே 1ம் திகதி ஒரு பாரம்பரிய பௌத்த கொண்ட்டாட்ட நாளான “வெசாக் வாரமாக” இருப்பதனால், அந்த நாளில் தொழிலாள வர்க்கத்தின நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டாம் என்ற பெளத்த தலைவர்களின் "கோரிக்கைக்கு" இணங்க, மே தின பொது விடுமுறையை இரத்து செய்தது. அதன்படி, அரசாங்கம் மே தின விடுமுறையை மே 7ம் திகதிக்கு எதேச்சதிகாரமான முறையில் மாற்றிக் கொண்டது.

* சோ.ச.க. மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், மே 1 அன்று கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கான வசதிகளை இரத்து செய்வதன் மூலம் மே தினத்திற்கு விதித்துள்ள பாரதூரமான தடையை அரசாங்கமும் பிற அதிகாரிகளும் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோருகின்றன.

* மே தினத்தை தடுப்பதற்கான அரசாங்கத்தின் முடிவானது உழைக்கும் மக்களினதும் இளைஞர்களினதும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை கிழித்தெறிவதற்காக அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் ஒட்டுமொத்த தாக்குதல்களின் அறிகுறியாகும் என்று நாம் தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கிறோம்.

இந்த தடையானது மாணவர்கள், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் சட்டபூர்வமான எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது இந்த முதலாளித்துவ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக-விரோத தாக்குதலை விரிவுபடுத்துவதாகும். வேலைநிறுத்தங்களை கலைக்க இராணுவத்தை கருங்காலிகளாக பயன்படுத்தி தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் தனது கொடூர முகத்தைக் காட்டியுள்ளது.

ஏகாதிபத்திய நிதி மூலதனத்தால் கோரப்படும் சமூக எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு, உழைக்கும் மக்கள் கடுமையான போராட்டத்தில் வென்றெடுத்த ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்காக, முதலாளித்துவ அரசின் முழு சக்தியையும் பயன்படுத்த சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் உறுதியாக உள்ளது.

மே தின ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தொழிலாளர்களுக்கு உள்ள உரிமைகளைத் தடுக்க பௌத்த உயர்பீடத்தின் வேண்டுகோள் என்றழைக்கப்படுவதை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவது, முற்றிலும் சட்டவிரோதமானதும் அரசியலமைப்பிற்கு முரணானதுமாகும். அரசியலமைப்பு, குறைந்தபட்சம் பெயரளவிலேனும், அனைத்து குடிமக்களும் அவர்களின் அமைப்புகளும் சட்டத்திற்கு முன் சமன், எனக் கூறும் அதேவேளை, கருத்து வெளியிடும் சுதந்திரம் மற்றும் ஒன்று கூடுவதற்கான சுதந்திரத்தையும் அங்கீகரித்துள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பௌத்தர்கள் அல்லாதவர்கள் மற்றும் நாத்திகர்களுக்கும் எதிரான தெளிவான பாரபட்சமாக இருப்பதோடு அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.

தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எந்தவொரு அணிதிரள்வுக்கும் எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை, முதலாளித்துவ ஆட்சியின் ஏற்கனவே உக்கிரமடைந்துள்ள அரசியல் நெருக்கடியை ஆழப்படுத்தும் என்ற பீதியில் இருந்தே தோன்றுகிறது. சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் கூட்டணி கந்தலாகிப் போயுள்ளது.

அரசாங்கத்தின் மீதான வெகுஜனங்களின் வளர்ச்சி கண்டு வரும் எதிர்ப்பு, பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூர்மையாக வெளிப்பட்டது. விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) ஆகிய இரண்டும் தமது வாக்குகளை இழந்தன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான எதிர்க் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) வெற்றிகளைப் பெற்றது. இது எந்த வகையிலும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தோற்கடிக்கப்பட்ட இராஜபக்ஷவுக்கான வெகுஜன அங்கீகரம் அல்ல, மாறாக, தற்போதைய நிர்வாகத்திற்கு எதிரான பரந்த எதிர்ப்பின் வெளிப்பாடு ஆகும்.

தினசரி அடிப்படையில், தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தொழில் வல்லுனர்களின் பல்வேறு பிரிவினரதும் மற்றும் வடக்கில் ஒடுக்கப்பட்ட தமிழர்களதும் எதிர்ப்புகள் தொடர்ந்தும் வெடித்து, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனத்தையும் புறநிலை ரீதியாக சவால் செய்கின்றன. மிக குறிப்பிடத் தக்க வகையில், உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடியால் தூண்டிவிடப்பட்டுள்ள தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச எதிர் தாக்குதலுக்கு சமாந்தரமாக, தீவு முழுவதுமான இந்த போராட்டங்கள் இடம்பெறுவதோடு, ஒவ்வொரு நாட்டிலும் வர்க்க உறவுகளையும் அரசியல் ஸ்திரத்தையும் பாதித்துள்ளன.

தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீது சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள மேலும் இரக்கமற்ற தாக்குதல்களை சுமத்த சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் தயாராகி வருகிறது. எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டனத்தை உடனடியாக அதிகரிப்பதற்கு அது நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த விலையேற்றம் எல்லா அத்தியாவசிய செலவிலும் சங்கிலித் தொடரான விளைவை ஏற்படுத்தும். அரசாங்கம் இந்த ஆண்டு மொத்தம் 290 கோடி அமெரிக்க டாலர் வெளிநாட்டு கடன்களை செலுத்த வேண்டும். இது அடுத்த ஆண்டு 440 கோடி டாலர் ஆகும். இதற்கான பணம் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளிடம் இருந்தே கறக்கப்படும்.

இந்த தாக்குதல்கள், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட இராணுவத்தின் முழு சக்தியை கட்டவிழ்த்துவிடாமல் தடுக்க முடியாதளவு போராட்டங்களின் அலைகளை தூண்டிவிடும் என்பதை பற்றி அரசாங்கம் விழிப்புடன் இருக்கிறது. இதனாலேயே உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் அகற்றுவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. ஒரு இராணுவ-பொலிஸ் அரசை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளின் பகுதியாக, சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த கொழும்பில் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கு பேஸ்புக்குடன் அரசாங்கம் கலந்துரையாடியுள்ளது.

1948ல் உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்றதிலிருந்தே, ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், ஆளும் வர்க்கம் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்ட போதெல்லாம் இன ரீதியாக தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்காக தொடர்ந்து தமிழர்-விரோத பாகுபாடுகளை கையாண்டு வந்துள்ளது. 1948ல் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதுடன் 1956ல் சிங்கள மொழியை மட்டும் அரச மொழியாக ஆக்கியது. 1972ல் முன்னாள் ட்ரொட்ஸ்கிச லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க.) மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்த முதலாளித்துவ ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான கூட்டணி அரசாங்கம், பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் முதன்மை இடத்தை வழங்கியது.

அது முதல் திட்டமிட்ட ஆத்திரமூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன், 1983ல் தமிழ்-விரோத யுத்தம் தூண்டிவிடப்பட்டு அது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தொடர்ந்தது. 2009 மே மாதம் இராஜபக்ஷ இராணுவ ரீதியாக வெற்றி பெற்றாலும், இனவாத ஆத்திரமூட்டல்கள் நிறுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, பொது பாலா சேனா, ராவண பாலகாய மற்றும் மஹாசோஹோன் பாலகாயா போன்ற அதிதீவிரவாத பௌத்த குழுக்கள் ஊக்குவிக்கப்பட்டு அவை முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் எதிராக பயங்கரத்தை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றன.

ஐ.தே.க., ஸ்ரீ.ல.சு.க., இராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. ஆகியவை பௌத்த உயர்மட்டத்தினரின் ஆதரவைப் பெற ஒன்றை ஒன்று போட்டியிடுகின்றன. அவை அதன் ஆசிகளை பெறுவதற்காக கணிசமான இலஞ்சம் கொடுத்து, ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஜனநாயக-விரோத மற்றும் சமூக விரோத செயல்களுக்கு ஒரு மதப் போர்வையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி அதன் "ஆலோசனையைப்" பெறுகின்றது.

1889ல் சோசலிச அகிலத்தால் ஸ்தாபிக்கப்பட்ட மே தின விழா, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு அடிப்படை ஜனநாயக உரிமை ஆகும். இலங்கையின் தொழிலாள வர்க்கம் பல தசாப்தங்களாக இந்த நாளை ஒரு உரிமையாக கொண்டாடி வருகின்றது. அரசாங்கத்தின் தாக்குதலானது பாரதூரமான பிற்போக்கு விளைவுகளைக் கொண்டுள்ளதுடன், இது உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் முழு அரசியல் வலிமையையும் கொண்டு தோற்கடிக்கப்பட வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் கொழும்பு, கோட்டை இரயில் நிலையத்துக்கு முன்னால் ஏப்ரல் 27, வெள்ளிக்கிழமை, மாலை 4 மணிக்கு நடத்தவுள்ள ஒரு பகிரங்க மறியலில் இணைந்துகொள்வதற்கு தொழிலாளர்கள், ஏழைகள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகள் மற்றும் வல்லுனர்களின் பலமான அணிதிரள்வுக்கு அழைப்பு விடுக்கின்றன.

மே தினத்தின் மீதான தாக்குதலானது தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலும் இருந்து முழுமையாக பிரிந்து, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு தலைமை வகிக்க வேண்டியதன் தவிர்க்க முடியாத அவசியத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என சோ.ச.க. வலியுறுத்துகிறது. இது மட்டுமே உழைக்கும் மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கும், முதலாளித்துவ சர்வாதிகாரத்தையும் ஏகாதிபத்திய சக்திகளால் தயாரிக்கப்படும் மூன்றாம் உலகப் போர் அச்சுறுத்தலையும் தடுப்பதற்குமான ஒரே வழி ஆகும்.