ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Social inequality and oligarchy in the US and Europe

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சமூக சமத்துவமின்மையும் வெகுசிலராட்சிமுறையும்

Eric London
21 April 2018

பிரான்சின் பொருளாதார அறிஞரான தோமஸ் பிக்கெட்டி மார்ச்சில் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையானது அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் இருக்கும் “ஜனநாயக” அரசியல் அமைப்புகள் வெகுசிலராட்சிகளாக இருக்கின்றன என்பதையும், பெரும் கட்சிகள் அனைத்தும் பெரும் செல்வந்தர்களின் கைக்கருவி என்பதையும் மற்றும் மக்களை ஏமாற்றுவதற்கும் கீழிருந்து வரும் சமூக எதிர்ப்பை நசுக்குவதற்கும் சேவை செய்கின்றன என்பதையும் காட்டுகின்ற தரவுகளை மேற்கோளிட்டிருந்தது.

“மிடுக்குமிக்க இடது எதிர் வணிக வலது: அதிகரிக்கும் சமத்துவமின்மையும் மாறும் அரசியல் மோதலின் கட்டமைப்பும்” (“Brahmin Left vs. Merchant Right: Rising Inequality and the Changing Structure of Political Conflict”) என்ற இந்த ஆய்வறிக்கையானது, அரசியல் ஸ்தாபகத்தின் பாரம்பரியமான “இடது” கட்சிகள் —அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி, பிரிட்டனில் தொழிற் கட்சி மற்றும் பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி— சமூக சீர்திருத்தத்தின் எந்த நடிப்பையும் கைவிட்டு ஆளும் உயரடுக்கின் மேலாதிக்க பிரிவுகளது விருப்பமான கட்சிகளாக ஆகியிருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றது. ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி, ஸ்பானிய சோசலிஸ்ட் கட்சி மற்றும் இத்தாலிய ஜனநாயகக் கட்சி போன்ற கட்சிகளை இந்த ஆய்வு வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும் கூட, பிக்கெட்டி விவரிக்கும் நிகழ்சிப்போக்கானது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது.

“இதிலிருந்து எடுக்கும் பொதுவான முடிவு தெளிவாய் இருக்கிறது” என்று பிக்கெட்டி எழுதுகிறார். ஒரு வர்க்க அடிப்படையிலான கட்சி அமைப்புமுறையில் இருந்து “பல-உயரடுக்கு” கட்சி அமைப்புமுறை (‘multiple-elite’ party system) என்று பெயர்சூட்ட நான் முன்மொழிகின்ற ஒன்றுக்கு நாம் படிப்படியாக நகர்ந்து வந்திருக்கிறோம். முன்னாளில் 1950கள்-1960களில் கட்சி அமைப்பு வர்க்க வழிகளில் வரையறை செய்யப்பட்டது: இடது-சாரி கட்சிகளுக்கான வாக்குகள் குறைந்த-கல்வி மற்றும் குறைந்த-வருவாய் வாக்காளர்களுடனும் வலது-சாரி கட்சிகளுக்கான வாக்குகள் உயர்-கல்வி மற்றும் உயர்-வருமான வாக்காளர்களுடனும் தொடர்புபட்டதாக இருந்தது.”

அந்த நாட்கள் எல்லாம் முடிவடைந்து விட்டது. இன்று, இந்த மூன்று நாட்டில் இருக்கக் கூடிய அமைப்புமுறைகளுக்கும் ”1950கள்-1960களில் இருந்த ’இடது’ vs ’வலது’ கட்சி அமைப்புமுறைக்கும் அதிக சம்பந்தமில்லை” ஏனென்றால் முன்னாளில் “இடதாக” இருந்த கட்சிகள், இப்போது அவற்றின் சமூகத் தொகுப்பிலும் மற்றும் வேலைத்திட்டத்திலும் குடியரசுக்கட்சி, கோலிஸ்டுகள் மற்றும் டோரி சகாக்களைப் பிரதிபலிக்கின்றன. ஆட்சிக்கு மாறி மாறி வருகின்ற இரண்டு வெவ்வேறு ஆளும் கூட்டணிகள் ஒரு வேறுபட்ட உயரடுக்கின் கண்ணோட்டங்களையும் நலன்களையும் பிரதிபலிக்கத் தலைப்படுகின்றன” என்று பிக்கெட்டி எழுதுகிறார்.

தொழிலாள வர்க்கத்தின் ஆதரவுடன் எந்த பெரிய கட்சியும் இல்லாதிருப்பது “அதிகரித்துச் செல்லும் சமத்துவமின்மையை விளக்குவதற்கு” உதவிசெய்கிறது, ஏனென்றால் தொழிலாள வர்க்கம் அரசாங்கக் கொள்கையின் திசையில் செல்வாக்கு செலுத்துவதற்கான எந்த பொறிமுறைகளும் அங்கே இல்லாதிருக்கிறது. இது தொழிலாள வர்க்கத்தினுள் பரவலான ஏமாற்றத்தை உருவாக்கியிருக்கிறது, இதுவே பரவலான வாக்குப்பதிவின்மைக்கும் வலது-சாரி ஜனரஞ்சகவாதத்தின் வலுப்படலுக்கும் பொறுப்பானதாக பிக்கெட்டி கூறுகிறார், ஏனென்றால் “குறைந்த கல்வி, குறைந்த வருவாய் வாக்காளர்கள் தாம் கைவிடப்பட்டதாக உணரலாம்”.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் உயர் வருவாய் பிரிவின் தலைமை 10 சதவீதத்தினரில் ஜனநாயகக் கட்சி வாக்காளர்களின் பங்கிற்கும் கீழேயிருக்கும் 90 சதவீதத்தினரில் வாக்காளர்களின் பங்கிற்கும் இடையிலான வித்தியாசம் காலத்தால் எவ்வாறு மாறுபட்டுள்ளது என்பதைக் காண்கிறது.

1940கள் முதலாக 1970களின் ஆரம்பம் வரையிலும், தொழிலாள வர்க்க வாக்காளர்கள் பெரும்பாலும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க தலைப்பட்டிருந்தனர் என்பதை இந்த வரைபடம் காட்டுகிறது. இது 1970களின் மத்தியில் மாற்றம் காணத் தொடங்கி, ஒபாமாவின் ஜனாதிபதி பதவிக்காலத்தின் போது மிகப்பெருமளவில் மாற்றம் கண்டு, 2016 தேர்தலில் இந்த மாற்றம் உச்சநிலை அடைந்திருந்தது, அத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வாக்கு பாகம் கீழேயிருக்கும் 90 சதவீதத்தினரிடம் இருந்ததைக் காட்டிலும் மேலேயிருந்த 10 சதவீதம் பேர் மத்தியில் அதிகமாய் இருந்தது.

பின்வரும் வரைபடம் 1948 முதல் 2016 வரையான ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின் போதும் வருவாய் வாரியாக ஜனநாயகக் கட்சி பெற்றிருந்த வாக்குகளின் விகிதத்தை காட்டுகிறது. 2016 இல் ஜனநாயகக் கட்சி பெற்ற வாக்குகளைக் காட்டும் அடர்சிவப்புக் கோடு, உயர் 10 சதவீதத்தினர், உயர் 5 சதவீதத்தினர் மற்றும் உயர் 1 சதவீதத்தினரில் கிட்டத்தட்ட 60 சதவீத வாக்காளர்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்ததை சுட்டிக்காட்டுகிறது, வசதிபடைத்தவர்கள் மற்றும் சொத்துமிகுந்தவர்களில் பெரும்பான்மையினர் ஒரு ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தது இதுவே முதன்முறையாக இருந்தது. சொத்துமிக்கவர்களில் 40 சதவீதத்துக்கு அதிகமானோரின் வாக்குகளை ஜனநாயகக் கட்சி 1990கள் மற்றும் 2000களில் மட்டும் வென்றிருந்தது. 1950கள் முதல் 1970கள் முழுமையிலும், தலைமை 1, 5, மற்றும் 10 சதவீதத்தினர் குடியரசுக் கட்சியினரை 70சதவீதம்-30 சதவீதம் முதல் 85 சதவீதம்-15 சதவீதம் வரையான விகிதத்தில் ஆதரித்திருந்தனர். 

பிரான்சில், இதேபோன்றதொரு நிகழ்ச்சிப்போக்கே நடக்கிறது. 2017 தேர்தலில், ஐந்தாம் குடியரசின் வரலாற்றில் முதன்முறையாக, வருவாய் பிரிவில் உயர் 10 சதவீதத்தில் இருக்கும் வாக்காளர்கள் “இடது” (ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி, ஜோன்-லுக் மெலன்சோனின் அடிபணியா பிரான்ஸ் இயக்கம் மற்றும் இம்மானுவல் மக்ரோனின் La République En Marche ஆகியவை உள்ளிட) கட்சிகளை ஆதரிக்கக் கூடியவர்களாக இருந்தனர்.

பிரிட்டனில், தொழிற் கட்சியின் பங்கு, உயர் 10 சதவீதத்தில் இருப்பதைக் காட்டிலும் கீழிருக்கும் 90 சதவீதத்தினரிடையே சுமார் 11 சதவீதம் அதிகமாகத் தான் இருக்கிறது என்றபோதிலும் கூட, இதே அடிப்படை மாற்றம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 1964 மற்றும் 1966 பொதுத் தேர்தல்களில் தொழிற் கட்சி வேட்பாளர் ஹரோல்ட் வில்சன் வெற்றிபெற்ற போது, தொழிலாளர்கள் மத்தியில் தொழிற் கட்சி பெற்ற கிட்டத்தட்ட 40 சதவீத அதிக வாக்கு பங்களவை ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை கணிசமாய் வீழ்ந்திருக்கிறது.

ஜனநாயகக் கட்சி, தொழிற் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சிகள் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை விசுவாசத்துடன் முன்னெடுத்து வந்திருப்பதால் உயரடுக்கினர் மத்தியில் அவை புதிய ஆதரவுப்பகுதிகளைக் கண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும், இவை சமூகநலத் திட்டங்களுக்கான நிதியை வெட்டின, தொழிலாளர்களது ஊதியங்களைக் குறைத்தன, வங்கிப் பிணையெடுப்புகளுக்கும் பெருநிறுவன வரி வெட்டுக்களுக்கும் டிரில்லியன் கணக்கில் வழங்கின, இதன்மூலம் சமூக சமத்துவமின்மையில் முன்கண்டிராத ஒரு வளர்ச்சிக்கு பாதை அமைத்துக் கொடுத்தன.

பிரிட்டிஷ் தொழிற் கட்சியில், ஜேரிமி கோர்பினின் அமைதிவாத வார்த்தையாடல்கள் எல்லாம் இருந்தபோதிலும், அது டோரிக்களுக்கு சளைக்காத போர்-ஆதரவுக் கட்சியாகும். பிரான்சிலும் அமெரிக்காவிலும் சோசலிஸ்ட் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் ஏகாதிபத்திய விரிவாக்கத்தின் மிக மூர்க்கமான வக்காலத்துவாதிகளாக இருக்கின்றனர். ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி ஒபாமா, சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் தொழிற் கட்சியின் பிரதமர்கள் டோனி பிளேயர் மற்றும் கோர்டன் பிரவுன் ஆகியோரின் கீழ், இந்தக் கட்சிகள் மத்திய கிழக்கின் பெரும்பகுதிகளிலும், மத்திய ஆசியாவிலும் மற்றும் வடக்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவின் பெரும் பகுதிகளிலும் குண்டுவீச்சு நடத்தியிருக்கின்றன, படையெடுத்திருக்கின்றன அல்லது ஒரு இராணுவ நிலைநிறுத்தத்தை ஸ்தாபித்திருக்கின்றன. சென்ற வாரத்தில் தான், இந்தக் கட்சிகள் அவற்றின் கன்சர்வேட்டிவ் சகாக்களுடன் கைகோர்த்துக் கொண்டு ஒரு இட்டுக்கட்டப்பட்ட போலிக்காரணத்தின் அடிப்படையில் சிரியா மீது குண்டுவீசின.

இந்த ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் மற்றும் உலக அளவிலும் செல்வம் தீவிரமாக ஓரிடத்தில் குவிவதானது “ஜனநாயக” ஏகாதிபத்திய நாடுகளது அரசாங்கங்களை, அவற்றின் போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சி வேலைத்திட்டங்களுக்கான எந்த எதிர்ப்பையும் சகித்துக் கொள்ள முடியாத வெகுசிலராட்சிகளாக மாற்றியிருக்கிறது. இத்தகைய ஆட்சி வடிவங்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு இணக்கமற்றதாகும், அமெரிக்காவில் பாரிய கண்காணிப்பு மற்றும் போலிஸ் வன்முறையை ஜனநாயகக் கட்சி மேற்பார்வை செய்தமை, பிரான்சில் ஒரு நிரந்தரமான அவசரகாலநிலையை சோசலிஸ்ட் கட்சி அமல்படுத்தியமை, மற்றும் தகவல்களை வெளிப்படுத்திய ஜூலியன் அசாஞ்சை அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு தொழிற் கட்சி தொடர்ந்து மிரட்டி வருவது ஆகியவை இதற்கு சாட்சியமளிக்கின்றன.

ஜனநாயகக் கட்சி, சோசலிஸ்ட் கட்சி மற்றும் தொழிற் கட்சியின் தலைவர்களும் நிர்வாகிகளும் உற்சாகத்துடன் வலது நோக்கி அணிவகுத்திருக்கின்றனர், ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை தனிமைப்படுத்தி ஒடுக்கியிருந்த தொழிற்சங்கங்களால் இது சாத்தியமாக்கப்பட்டிருந்தது. உலகின் உற்பத்தி சக்திகள் பூகோளமயமாவதற்கு, தேசியவாத நஞ்சைப் பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு எதிராய் ”அவர்களின்” ஆளும் வர்க்கங்களுடனான ஒரு பெருநிறுவனக் கூட்டணிக்குள்ளாக நுழைவதன் மூலமாக தொழிற்சங்கங்கள் பதிலிறுப்பு செய்தன. அவை தொழிலாளர்களை அரசியல்ரீதியாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தில் முறையே ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற் கட்சிகள் உடனும் பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகளுடனும் கட்டிப் போட்டன.

“இடது” முதலாளித்துவக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் வெகுசிலராட்சியின் நிறுவனங்களாக இருக்கின்றன என்பதையும், அதனால் தான் தொழிலாளர்கள் இந்த அமைப்புகளை ஒட்டுமொத்தமாய் கைவிட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் பிக்கெட்டி ஆய்வறிக்கை தெளிவாக்குகிறது. இத்தகைய ஒரு தருணத்தில் தான், தொழிலாளர்களுக்கு ஆதரவான சீர்திருத்தங்களை இவற்றை ஏற்றுக்கொள்ளச் செய்ய நெருக்குதலளிப்பதற்காக தாங்கள் செய்யும் முயற்சியில் தொழிலாளர்களும் இளைஞர்களும் நம்பிக்கை வைக்க வேண்டும் என அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO) மற்றும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA), ஐக்கிய இராஜ்ஜியத்தில் Momentum மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), மற்றும் பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) ஆகியவை போன்ற போலி-இடது குழுக்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த திவாலான நோக்குநிலை வெறுமனே ஒரு அரசியல் தவறு அன்று. இந்த மார்க்சிச-விரோத மற்றும் தொழிலாள வர்க்க விரோத அமைப்புகளின் அடித்தளத்தை உருவாக்குகின்ற உயர்-நடுத்தர வர்க்க அடுக்குகளுக்குள்ளாக ஏற்பட்டிருக்கும் வலதுநோக்கிய நகர்வின் ஒரு பிரதிபலிப்பாகும் இது.

உலக அளவில், ஒரு பாரிய அரசியல் துருவப்படல் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. தலைமையில் இருக்கும் 10 சதவீதம், அதன் சலுகையுடைய நிலையை இழந்து விடுகின்ற அச்சத்தில், வலது நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கீழிருக்கும் 90 சதவீதத்தினர் —உலகெங்கிலும் இருக்கும் பில்லியன் கணக்கான தொழிலாளர்கள்— வெகுசிலராட்சியுடனும் அதன் அரசியல் பிரதிநிதிகளுடனும் புரட்சிகரத் தாக்கங்களைக் கொண்ட ஒரு மோதலுக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றனர்.