ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Anger grows over union effort to sabotage Oklahoma teachers strike

ஒக்லஹோமா ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை அடிபணிய செய்யும் சங்கத்தின் முயற்சி மீது கோபம் அதிகரிக்கிறது

By Jerry White
14 April 2018

ஒக்லஹோமா ஆசிரியர்கள் அவர்களின் இரண்டு வாரகால வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர ஒக்லஹோமா பள்ளிக்கல்வித்துறை கூட்டமைப்பு (OEA) விடுத்த அழைப்புக்கு முழு பலத்துடன் எதிர்வினையாற்றி உள்ளனர். அவர்களின் வகுப்பறைக்குத் திரும்புமாறு சங்கங்கள் அவர்களை வலியுறுத்தியதற்கு அடுத்த நாள், ஆயிரக் கணக்கான ஆசிரியர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் வெள்ளியன்று மாநில தலைமைச் செயலகத்தின் முன் ஒன்றுகூடினர்.

ஆசிரியர்களை வேலைக்குத் திரும்ப நிர்பந்திக்க OEA பச்சைக்கொடி காட்டியதும், மிகப் பெரிய நகரங்களான ஒக்லஹோமா, துல்சா மற்றும் புரோக்கன் ஏர்ரோ உள்ளடங்கலாக, அம்மாநிலம் எங்கிலுமான மாவட்ட பள்ளிக்கல்வித்துறை, திங்களன்று வேலைக்குத் திரும்புமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி வெள்ளியன்று அறிவிக்கை வெளியிட்டது.


வெள்ளியன்று தலைமை செயலகத்தின் புல்வெளியில் ஆசிரியர்கள் கூடாரங்கள் அமைத்தனர்

ஆசிரியர்களின் போர்குணம் மிக்க மனோபாவம் வெள்ளியன்று அவர்கள் ஏந்தியிருந்த பாதைகளில் வெளிப்பட்டது, “OEA எனக்காக பேசவில்லை,” “இந்த இயக்கம் OEA உடன் தொடங்கவில்லை, OEA உடன் முடிவடைய போவதும் இல்லை,” “நாங்கள் நகரப் போவதில்லை,” என்பவை அவற்றில் உள்ளடங்கி இருந்தன. தலைமை செயலகத்தின் உள்ளேயும் வெளியேயும், ஆசிரியர்கள் அவர்களின் வெளிநடப்பை அடுத்த வாரமும் எவ்வாறு நீடிப்பது என்பதை குறித்து விவாதிக்க அவசர கூட்டங்களை நடத்தினர்.

“சங்கங்கள் பரந்த அறைக்கூவல் விடுப்பதை விரும்பவில்லை, அவை இந்த போராட்டத்தை நாசப்படுத்த முயன்று வருகின்றன,” என்று ஒக்லஹோமா நகரப்பகுதியில் இருந்து ஓர் இளம் ஆசிரியர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தார். “லூசியானா மற்றும் இதர மாநிலங்களில் உள்ள ஆசிரியர்கள் போராடுவதற்கு ஒரு வழியை எதிர்நோக்கி வருகிறார்கள், அவர்களும் இதற்குள் கொண்டு வரப்பட வேண்டும். ஒக்லஹோமாவில் எங்கள் போராட்டம் குறித்து நாட்டின் இதர பகுதியில் உள்ள ஆசிரியர்கள் தெரிந்து கொள்வதை சங்கங்களும் ஊடகங்களும் விரும்பவில்லை, அமெரிக்கா எங்கிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் தெரிந்து கொள்வதையும் அவர்கள் விரும்பவில்லை,” என்றார்.


வேலைக்குத் திரும்புமாறு OEA விடுத்த உத்தரவை எதிர்க்க ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தைப் பயன்படுத்தினர்

பல பத்தாண்டுகளாக நடத்தப்பட்ட வரவு-செலவு திட்டக்கணக்கு வெட்டுக்களுக்குப் பின்னர் பள்ளிக்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மீட்டமைக்கவும் மற்றும் சம்பள உயர்வு கோரியும் ஆசிரியர்கள் ஏப்ரல் 2 இல் வெளிநடப்பு மேற்கொண்டனர். சமூக ஊடகங்களைக் கொண்டு சாமானிய ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட அந்த வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்களின் ஒன்பது நாள் வேலைநிறுத்தம், போர்த்தோ ரிக்கோ மற்றும் ஜெர்சி நகர பள்ளிகளின் ஒருநாள் வேலைநிறுத்தங்கள் மற்றும் கென்டக்கி, அரிசோனா மற்றும் பிற மாநிலங்களின் ஆசிரியர்களது வெளிநடப்புகளுக்கான கோரிக்கைகள் ஆகியவை வந்தன.

மேலும் வெள்ளியன்று, ஆயிரக் கணக்கான ஆசிரியர்களும், ஏனைய பள்ளித்துறை பணியாளர்களும், பொதுத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் அவர்களின் ஓய்வூதியங்களைப் பாதுகாக்க கென்டக்கி, பிராங்க்போர்ட் தலைமை செயலகத்தில் வந்து குழுமினர். மாநிலந்தழுவிய வேலைநிறுத்தத்திற்கான கோரிக்கைகள் அதிகரித்து வருவதை முகங்கொடுத்து, கென்டக்கி கல்வித்துறை கூட்டமைப்பு (KEA) ஒரு "நாள் நடவடிக்கைக்கு" அழைப்புவிடுத்து, அதுவொரு வேலைநிறுத்தமாக இருக்கக்கூடாது, அவ்வாறு செய்ய கருதினாலும் ஆசிரியர்கள் மட்டுமே "சட்டபூர்வமாக" கலந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியது. பல ஆசிரியர்களும் KEA உத்தரவை மீறியதுடன், ஓய்வூதியங்கள் மற்றும் கல்வித்துறை நிதி ஒதுக்கீட்டிற்கான தங்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை அவர்கள் வெளியில் தங்கியிருக்கப் போவதாக சமூக ஊடகங்களில் கோபத்துடன் குறிப்பிட்டனர்.


வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் ஒரு குழு

பொதுக்கல்வி மீதான இருகட்சியின் தாக்குதலுக்கு எதிராக, இதற்கு சங்கங்களே ஒத்துழைத்து துணைபோய் உள்ளன என்ற நிலையில், நாடெங்கிலுமான கல்வியாளர்களின் கூட்டு நடவடிக்கையைத் தடுப்பதற்காக, தேசிய கல்வித்துறை கூட்டமைப்பு (NEA), அமெரிக்க ஆசிரியர்களின் சம்மேளனம் (AFT) மற்றும் அவற்றின் மாநில அளவிலான கிளைகள் ஆகியவை அவற்றால் ஆன மட்டும் அனைத்தும் செய்து வருகின்றன. ஒக்லஹோமா வேலைநிறுத்தம் முடிந்துவிட்டது என்று அறிவித்த ஒரு நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையில், AFT தலைவர் Randi Weingarten குறிப்பிடுகையில், ஆசிரியர்களின் கோபத்தை 2018 தேர்தலில் ஜனநாயகக் கட்சியினரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு பிரச்சாரத்திற்குப் பின்னால் திருப்பி விட முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

வெள்ளியன்று, துல்சா உள்ளாட்சி ஜனநாயகக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வுக்கு OEA தலைவர் அலிசியா ப்ரீஸ்ட் தான் பிரதான சொற்பொழிவாளராக இருந்தார். நவம்பரில் ஜனநாயக கட்சியினருக்கு வாக்களிப்பதைத் தவிர குடியரசு-கட்டுப்பாட்டிலான சட்டசபையை எதிர்க்க வேறெதுவும் செய்ய முடியாதென கூறி, ஆசிரியர் போராட்டத்தை விற்றுத்தள்ளுவதை அப்பெண்மணி நியாயப்படுத்தினார்.

எவ்வாறிருப்பினும் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினர் போலவே ஆசிரியர்கள் மற்றும் பொதுக்கல்விக்கு அதேயளவுக்கு ஈவிரக்கமற்ற எதிரி என்பதை நிரூபித்துள்ளனர். ஒக்லஹோமாவில், மூலதன இலாபங்கள் மீதான மற்றும் செல்வந்தர்களுக்கான வருவாய் மீதான வரிகளை வெட்டியது ஒரு ஜனநாயக கட்சியாளரான முன்னாள் ஆளுநர் பிராட் ஹென்றி ஆவார், அத்துடன் மாநில நிதி ஒதுக்கீட்டில் ஆழ்ந்த வெட்டுக்கள் செய்து தற்போதைய குடியரசுக் கட்சி ஆளுநர் மேரி ஃபாலினுக்கு பாதை அமைத்து கொடுத்தவரும் அவர் தான்.

தேசியளவில், ஒபாமா நிர்வாகம் வோல் ஸ்ட்ரீட் வங்கிகளைப் பிணையெடுக்க ட்ரில்லியன் கணக்கிலான டாலர்களைக் கையளித்த அதேவேளையில், சுமார் 300,000 ஆசிரியர்கள் மற்றும் இதர பள்ளிப் பணியாளர்களின் வேலைகள் நீக்கப்படுவதையும், இலாபத்திற்கான சார்ட்டர் பள்ளிகள் பரந்தளவில் விரிவாக்கப்படுவதையும் மேற்பார்வையிட்டது. ஜனாதிபதி ட்ரம்பும் அவர் கல்வித்துறை செயலர் பில்லியனர் பெட்சி டேவோஸூம் இப்போது பொதுக் கல்வி மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

சங்கத்தின் நடவடிக்கைகள் ஆசிரியர்களிடையே மிதமிஞ்சிய கோபத்தைத் தூண்டியுள்ளது. ஒக்லஹோமா ஆசிரியர் மிஸ்டி கூறுகையில், “நமது கோரிக்கைகளில் 95 சதவீதத்தை நாம் வென்றுள்ளதாக OEA கூறியதும் புதனன்று நான் [OEA தலைவர்] அலிசியா ப்ரீஸ்ட் உடன் பேசினேன். எங்களுக்கு ஒரு நல்லதொரு காரியம் செய்திருப்பதாக அவர் கூறினார். 'வேலைநிறுத்தத்தைக் கொண்டு நாம் சாதித்து விட்டதாக' அவர்கள் கூறிவிடுவார்களோ என்று சந்தேகித்தேன். வியாழனன்று, நண்பகல் வாக்கில் நான் OEA மேசைக்கு சென்ற போது, வேலைநிறுத்தத்திற்கான அவர்களின் ஆதரவை நிறுத்திக் கொள்ளப் போகிறீர்களா என்று நான் வினவினேன். அவர்கள் கூறினர், 'நிச்சயமாக இல்லை. நாங்கள் இந்த வேலைநிறுத்தத்தைத் தொடர்வோம்,' என்றனர். மாலை 4 மணி வாக்கில், ப்ரீஸ்ட் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அது முடித்துக் கொள்ளப்படுவதாக அறிவித்தார்.”

“என்னை பாதுகாக்க OEA ஒன்றும் செய்யாது என்பதால், அதில் நானொரு உறுப்பினர் இல்லை. அவர்களே அவர்களை காட்டிக்கொடுப்பதைப் போல அது ஆசிரியர்களுக்கான ஒரு சங்கமே கிடையாது. அதுவொரு வியாபாரம், அதை அவர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்,” என்றார்.

ஒக்ஹோமா நகரின் ஒரு முன்னாள் ஆசிரியர் தொடர்ந்து கூறுகையில், “மாசசூசெட்ஸ் ஆசிரியர்கள் வெளிநடப்பு செய்வது குறித்தும், அதுவும் தொழிற்சங்கங்களுக்கு இல்லாமல் அவ்வாறு செய்வது குறித்தும் எங்களுடன் பேசி வருகின்றனர். ஆசிரியர்கள் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு வேலை செய்பவர்கள். நாங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்பட முயற்சி செய்தோம், எங்களுக்காக சங்கங்கள் பேசட்டும் என்று அனுமதித்தோம், ஆனால் எதுவுமே இந்த வரவு-செலவு திட்டக்கணக்கு வெட்டுக்களை நிறுத்தவில்லை. இதற்கு மேல் இதை விட்டு வைக்க முடியாதென நாங்கள் முடிவெடுத்தோம்,” என்றார்.

OEA போலவே ஆரம்பத்திலிருந்தே இந்த வேலைநிறுத்தத்தை எதிர்த்து வந்த ஒக்லஹோமா நகரின் அமெரிக்க ஆசிரியர் சம்மேளனம், அது நடத்திய ஒரு கருத்துக்கணிப்பு இந்த வேலைநிறுத்தத்தைத் தொடர்வதற்கு பெருவாரியான ஆதரவிருப்பதைக் காட்டியதாக வெள்ளியன்று ஒப்புக் கொண்டது. இவ்வாறிருந்த போதும், அம்மாநிலத்தின் மிகப் பெரிய பள்ளிக்கல்வித்துறை மாவட்டமான அதன் அதிகாரிகள் திங்களன்று காலை அவர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டுமென வெள்ளியன்று இரவு அறிவித்தனர்.

அவர் ஏன் இன்னமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை விவரித்து, மூன்றாம் நிலை ஆசிரியர் ரசேல் WSWS க்கு கூறுகையில், “எனது ஒரே நோக்கம் என் மாணவர்களுக்கானது. OEA எங்களைக் கைவிடுவதாக நேற்றிரவு அலிசியா ப்ரீஸ்ட் அறிவித்து, இந்த வெளிநடப்பிலிருந்து எங்களை வெளியேற்ற முயன்ற போது, எனது வகுப்பறைக்கு திரும்பி சென்று, அங்கே 'இதற்கு நீங்கள் இலாயக்கில்லை' என்று கூறும் அந்த 42 கண்களைப் பார்க்க வேண்டியிருக்குமே என்று நினைத்தேன். ஏனென்றால் அவ்வாறு நினைக்க அவர்களுக்கு தகுதி இருக்கிறது.


ஆசிரியர்களின் கூட்டத்தில் ஜெர்ரி வொயிட் உரையாற்றுகிறார்

“நான் இங்கே ஒவ்வொரு நாளும் அவர்களுக்காக போராடுவேன், மின்னஞ்சல்கள் எழுதுவேன், அவர்கள் பெற தகுதியுடைய கல்வியை அவர்கள் பெறுவதை உறுதிப்படுத்த என்னவெல்லாம் அவசியமோ அதை செய்வேன். அவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் தேவைப்படுகின்றன, அவர்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் அவசியப்படுகின்றன, அவர்களுக்கு பொருட்கள் தேவைப்படுகின்றன. ஆசிரியர்களுக்கும் அவையெல்லாம் தேவைப்படுகின்றன, ஆகவே எங்களுக்குத் தேவையானதை பெறுவதற்கும் மற்றும் மாணவர்கள் அவர்கள் பெற வேண்டியதை ஒரு வழியில் அவர்களுக்கு வழங்கவும் அதற்குரிய மிகவும் பயனுள்ள ஆசிரியர்களாக நாங்கள் இருக்க முடியும்,” என்றார்.

கென்டக்கி, அரிசோனா மற்றும் மேற்கு வேர்ஜினியா உட்பட மற்ற மாநில ஆசிரியர்களும் நிதி ஒதுக்கீடு மற்றும் நல்ல சம்பளத்திற்காக போராடுகிறார்கள் மற்றும் வேலைநிறுத்தம் செய்கிறார்கள் என்பது குறித்து வினவிய போது, ரசேல் பதிலளித்தார், “நாங்கள் போதுமானளவுக்கு காத்திருந்து விட்டோம், மாணவர்களே இப்போது மிகவும் முக்கியம் எனக் கூறி, ஒக்லஹோமாவிலும் சரி நாடெங்கிலும் சரி கல்வியாளர்கள் மேலெழுந்து வருவதை இது காட்டுகிறதென நினைக்கிறேன், மாணவர்கள் பெற தகுதியுடையதை அவர்கள் பெறுவதை உறுதிப்படுத்த என்ன ஆனாலும் சரி நாங்கள் செய்ய இருக்கிறோம். என்னைப் போன்ற ஆசிரியர்கள் அவர்களின் மாநிலங்களில் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எதிர்த்து நிற்கிறார்கள் என்பது குறித்து நான் உற்சாகமாக உணர்கிறேன்,” என்றார்.

வெள்ளியன்று போராட்டத்தின் போது, தங்களின் கோரிக்கைகள் குறித்தும் முன்னுள்ள பாதை குறித்தும் விவாதிக்க ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள் தலைமை செயலகத்திற்குள்ளே ஒன்றுகூடினர். அக்கூட்டம் ஒக்லஹோமா ஸ்டில்வாட்டர் ஆசிரியரான அல்பேர்டோ மொரெஜொன் ஆல் அழைப்புவிடுக்கப்பட்டது, அவர் "ஒக்லஹோமா ஆசிரியர் வெளிநடப்பு—இதுதான் சரியான நேரம்!” என்ற பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கியதும், மிக விரைவில் அதில் 70,000 பேர் இணைந்தனர்.


வேலைநிறுத்தத்தின் முன்னோக்கிய பாதை குறித்து விவாதிக்க ஆசிரியர்கள் தலைமை செயலகத்திற்குள் சந்தித்தனர்

ஆசிரியர்களின் கரவொலிக்கு இடையே மொரெஜொன் தெரிவித்தார், “ஆசிரியர்கள் தான் இதை தொடங்கினார்கள், இதை முடித்துக் கொள்ளலாம் என ஆசிரியர்கள் கூறும் வரையில் நாங்கள் இதை முடிக்க போவதில்லை.” ஆனாலும், இந்த போராட்டத்தை முன்னெடுக்க அவர் எந்தவொரு நம்பகமான மூலோபாயத்தையும் முன்வைக்கவில்லை, அதற்கு பதிலாக அவர் எண்ணெய் துறை மற்றும் எரிவாயு துறை உட்பட சக்தி வாய்ந்த பெருநிறுவன நலன்களால் கட்டுப்படுத்தப்படுகின்ற மற்றும் பெருநிறுவன வரி வெட்டுக்களுக்கு நிதி வழங்க பொதுக் கல்வியைத் தொடர்ந்து தவிக்க விட தீர்மானகரமாக உள்ள மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடமே ஆசிரியர்களும் பெற்றோர்களும் தொடர்ந்து பேரம் பேச வேண்டுமென கூறினார்.

பள்ளிகள் திங்களன்று மீண்டும் திறக்கப்பட்டால், ஆசிரியர்-பிரதிநிதிகளில் சிலர் தொடர்ந்து "பேரம் பேசுவதற்கு" தலைமை செயலகத்திற்கு செல்ல அனுமதிக்குமாறு அவர்களின் பள்ளி தலைவர்களுக்கு விண்ணப்பிக்குமாறு மொரெஜொன் ஆசிரியர்களிடம் தெரிவித்தார். வரவுசெலவு திட்டக்கணக்கில் மனநல ஆரோக்கியம் போன்ற அத்தியாவசிய சேவைகள் மீதான இதர வெட்டுக்கள் ஒருபுறம் இருக்கட்டும், தொழிலாள வர்க்க குடும்பங்களிடம் இருந்து திரும்ப பிடுங்கும் வரிகளைத் திணித்து, அதன் மூலம் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வதை கூட அவர்கள் விரும்பவில்லை என்பதை பல்வேறு ஆசிரியர்களும் வலியுறுத்தினர்.

வேலைக்குத் திரும்புமாறு சங்கங்களின் உத்தரவை மறுத்தது தான் மேற்கு வேர்ஜினிய ஆசிரியர்களின் மிகவும் சக்தி வாய்ந்த நடவடிக்கையாக இருந்தது, ஒக்லஹோமா ஆசிரியர்களும் அதேயே செய்ய வேண்டுமென இந்த செய்தியாளர் அந்த விவாதத்தின் போது தெரிவித்தார். கென்டக்கி, அரிஜோனா மற்றும் பிற மாநில ஆசிரியர்கள் வரை விரிவாக்குவதற்கும், கல்வியாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களையும் இணைத்து ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு செய்யவும், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்திற்கு தயாரிப்பு செய்வதற்கும் அழைப்பு விடுத்த போது, ஆசிரியர்கள் உரக்க கூச்சலிட்டு அவர்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.

ஒக்ஹோமா போராட்டம் தோற்கடிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் சமூகத்திலும் சாமானிய குழுக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அரசியல்வாதிகளிடம் "பேரம் பேசக்கூடாது", மாறாக வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களுக்கு பாதிப்பேற்படுத்தும் எந்தவொரு முயற்சிக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தில் பரந்த ஆதரவை அணித்திரட்ட வேண்டும்.

பெருநிறுவன வரி வெட்டுக்களுக்கும் புதிய மற்றும் இன்னும் இரத்தந்தோய்ந்த போர்களுக்கும் ட்ரில்லியன் கணக்கில் வாரியிறைக்கும் இரண்டு பெரு வணிக கட்சிகளுக்கும் எதிராக பொதுக்கல்வியைப் பாதுகாக்க, நாடுதழுவிய வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு செய்வதற்காக, நாடெங்கிலும் சாமானிய குழுக்களின் ஒரு வலையமைப்பை ஸ்தாபிப்பதன் மூலமாக அளவிட முடியாதளவில் ஒக்லஹோமா போராட்டத்தைப் பலப்படுத்தலாம்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

Union seeks to shut down strike: The way forward for Oklahoma teachers
[13 April 2018]