ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US-led strike on Syria inflames tensions over Korea

அமெரிக்க தலைமையிலான சிரியா தாக்குதல், கொரிய விவகாரத்தில் பதட்டங்களுக்கு எரியூட்டுகிறது

By Alex Lantier
21 April 2018

சிரியாவில் ரஷ்ய படைகளுடன் ஒரு நேரடி இராணுவ மோதல் அபாயம் இருந்த போதும் கூட, அந்நாட்டுக்கு எதிராக ஏவுகணை தாக்குதல் தொடங்குவதென ஏப்ரல் 9 இல் வாஷிங்டன், இலண்டன் மற்றும் பாரீஸ் எடுத்த முடிவு, சர்வதேச அளவில் எதிர்தாக்கங்களை உருவாக்குகிறது. வட கொரியாவின் அணுசக்தி திட்டம் குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுடன் ட்ரம்ப் நிர்வாகம் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகி வரும் நிலையில், இது கிழக்கு ஆசியாவில் இராணுவ பதட்டங்களுக்கு எரியூட்டி கொண்டிருக்கிறது.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா குண்டுவீசிய நினைவுதினத்தில், ட்ரம்ப், கடந்த ஆகஸ்டு மாதம், வட கொரியா அதன் அணுசக்தி திட்டங்களைக் கைவிடவில்லையானால், "உலகம் ஒருபோதும் பார்த்திராத ஆக்ரோஷமான தாக்குதலை" காணும் என அதை அச்சுறுத்தினார். அதேநேரத்தில், அதுபோன்ற நடவடிக்கைகள் வட கொரியாவுக்கு எதிரான ஓர் அமெரிக்க போரில் சீன தலையீட்டைத் தூண்டும் என்பதை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரியப்படுத்தி இருந்தது. அமெரிக்காவின் ஒரு தாக்குதலுக்குப் பின்னர் வட கொரியாவில் சீனா இராணுவரீதியில் தலையிடுமா என்பதை அதன் செய்தி தொடர்பாளர் ஜெங் ஷொன்ங் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ மறுத்துவிட்டார், இதுவொரு "அனுமான கேள்வி, பதிலளிப்பது கடினம்,” என்றவர் கூறினார்.

அதாவது, 1950 இன் கொரிய போரைப் போலவே, அமெரிக்க துருப்புகள் வட கொரியா வழியாக அணிவகுத்து சீனா அல்லது ரஷ்யாவை தாக்குவதைத் தடுப்பதற்காக, அது அமெரிக்க துருப்புகளைத் தாக்கக்கூடும் என்பதற்கான சாத்தியக்கூறை பெய்ஜிங் பகிரங்கமாக விட்டு வைத்துள்ளது.

அதன் அணுஆயுதமேந்திய போட்டியாளர்களிடம் இருந்து வரும் இதுபோன்ற எச்சரிக்கைகளை வாஷிங்டன் ஒதுக்கிவிட முடியும் என்பதற்கும், ட்ரம்புடன் ஒரு ஏற்கத்தக்க உடன்பாட்டை வட கொரியா ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் அதன் மீது குண்டு வீச அச்சுறுத்துவதற்கும் ஏப்ரல் 9 தாக்குதலை ஒரு சான்றாக இப்போது அமெரிக்க சிந்தனை குழாம்கள் பொறுப்பின்றி புகழ்ந்துரைத்து வருகின்றன. ஹெரிடேஜ் பவுண்டேசன் அமைப்பின் டகோடா வூட் CNBC க்கு கூறுகையில், “வட கொரியாவின் அத்துமீறிய இராணுவ தகைமைகளை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாதென இப்போது அது கூறினால், கிம்மின் அரசாங்கம் அந்த அறிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதோடு, சாத்தியமான இராணுவ விளைவுகளையும் பரிசீலிக்க வேண்டியிருக்கும்.”

ஜனநாயகக் கட்சியின் தரப்பில் அதிகளவில் சாய்ந்துள்ள அட்லாண்டிக் கவுன்சில் அமைப்பின் ஆண்ட்ரீயா டேய்லர் கூறுகையில், சிரியா மீதான குண்டுவீச்சு "வட கொரியாவுடன் அணுஆயுத விவாதங்களில் அமெரிக்காவுக்கு அதிகளவில் பக்கபலமாக இருக்கும்,” என்றார். "மாஸ்கோ ஆகட்டும், தெஹ்ரான் அல்லது பியொங்யாங் ஆகட்டும், உலகெங்கிலுமான நாடுகளின் கண்களில் அமெரிக்கா மீது நம்பகத்தன்மையை" அது அதிகரித்துள்ளதாக அப்பெண்மணி வாதிட்டார்.

ட்ரம்ப்-கிம் பேச்சுவார்த்தைகளில் பக்கவாட்டு அபாயம் குறித்து டோக்கியோவில் கவலை அதிகரித்து வந்தாலும், ஜப்பானிய அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகளும் அதேபோல சிரியா மீதான தாக்குதல்களை வட கொரியாவை அச்சுறுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக புகழ்ந்துரைத்தன. Asahi Shimbun எழுதியது: “அவசியமானால் வாஷிங்டன் படைகளைப் பயன்படுத்த தயங்காது என்பதை எடுத்துக்காட்ட சிரியா மீதான சமீபத்திய குண்டுவீச்சைப் பயன்படுத்திக் கொள்ளலாமென அரசு அதிகாரிகள் நம்புகின்றனர். அந்த விமானத் தாக்குதல்கள், அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு 'வட கொரியாவுக்கு ஒரு பலமான சேதியை‘ அனுப்பும் என்று உயர்மட்ட பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.”

ஏப்ரல் 9 தாக்குதல், "லிபியாவின் தலைவரைக் கோரமாக படுகொலை செய்வதில் போய் முடிந்த, அமெரிக்க தலைமையிலான 2011 லிபியா தலையீட்டை வட கொரியாவுக்கு கூர்மையாக நினைவூட்ட சேவையாற்றும்" என்று ஜப்பான் டைம்ஸ் எழுதியது. சிரியாவில் பினாமிப் போருக்கு நேரடியாக முன்னதாக, அந்நாட்டில் நடத்தப்பட்ட நேட்டோ போரில், கடாபி "2011 இல் அவர் பிடிக்கப்பட்டதும் உடனடியாக சுட்டு கொல்லப்படுவதற்கு முன்னதாக, துப்பாக்கி முனையில் மானபங்கப்படுத்தப்படுவதில்" போய் முடிந்தது என்று அப்பத்திரிகை குறிப்பிட்டது.

வட கொரியா ஆட்சி அதன் சொந்த கொள்கைகளை நெறிமுறைப்படுத்துவதற்காகவும், மற்றும் குறிப்பாக அணுஆயுதங்களைப் பெற்றிருக்க வேண்டிய அதன் நிலைப்பாட்டின் அவசியத்தை விவரிப்பதற்காகவும் அது மத்திய கிழக்கு சம்பவங்களை மிகக் கவனமாக பின்தொடர்வதாக ஜப்பான் டைம்ஸ் குறிப்பிட்டது. 2013 இல், நேட்டோ கடாபியைப் படுகொலை செய்த பின்னர், வட கொரிய ஆட்சி, "அவற்றின் அணுஆயுத திட்டங்களைப் பாதியில் கைவிட்ட நாடுகளின் பரிதாபகரமான விளைவுகளை" மேற்கோளிட்டு, லிபியாவை முன்னுதாரணமாக சுட்டிக்காட்டி அதன் தேசிய பாதுகாப்புக்கு அணுஆயுத தளவாடங்கள் மிகவும் அவசியம் என்ற அதன் வாதத்தை நியாயப்படுத்தியது.

வாஷிங்டன் மற்றும் டோக்கியோவில், ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகள் கிம்மை சந்திப்பதற்கான ட்ரம்பின் திட்டம் மீது கோபமாக உள்ளன. இராணுவ அச்சுறுத்தல்களைக் கொண்டு அடிபணிவுக்குள் கொண்டு வர வட கொரியாவை மிரட்டுவதற்கு அந்த சந்திப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவை ட்ரம்புக்கு அழைப்பு விடுப்பது பதட்டங்களை அதிகரிக்க மட்டுமே செய்யும், இது சிரியாவில் நேட்டோ நாடுகள் தாக்குதல்கள் நடத்தியதைப் போலவே, பிரதான அணுசக்திகளுக்கு இடையே மோதலை வெடிக்க வைக்கக்கூடும். குறிப்பாக, வட கொரியாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களை சீன ஆட்சி அதன் அடிப்படை தேசிய பாதுகாப்புக்கு எதிரான ஒரு சவாலாக பார்க்கிறது என்பதை அது தெளிவுபடுத்தி உள்ளது, இதற்காக சீனா கடந்த காலத்தில் போருக்குள் சென்றுள்ளது, அவ்விதமே மீண்டும் இறங்கக்கூடும்.

சீனாவின் போர்வெறியூட்டும் அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ், “சிரியா தாக்குதல்களுக்குப் பின்னர், அடுத்து வட கொரியாவா?” என்று தலைப்பிட்ட ஒரு தலையங்கத்துடன் ஏப்ரல் 9 தாக்குதலுக்கு விடையிறுத்தது. ஆசிய பசிபிக் பகுதிக்கு USS கார்ல் வின்சன் விமானந்தாங்கி போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்பியதைக் குறிப்பிட்டு, அது எச்சரிக்கையில், சிரியா மீதான சமீபத்திய தாக்குதலைப் போலவே, வட கொரியா மீதான ஓர் அமெரிக்க தாக்குதல், விரைவிலேயே போராக தீவிரமடையக் கூடும் என்றது.

அது எழுதியது, “சியோலைக் குறிவைத்துள்ள பியொங்யாங்கின் பெரும் எண்ணிக்கையிலான குறுகிய-தூர ஏவுகணைகளையும் ஆயிரக் கணக்கான பீரங்கி குண்டுகளையும் பார்க்கையில், அமெரிக்காவினால் வட கொரியாவுக்கு எதிராக நடத்தப்படும் ஓர் அடையாள தாக்குதல் கூட சியோல் மக்களுக்கு பேரழிவாக இருக்கும்... வாஷிங்டன் பியொங்யாங்கை நோக்கி இராணுவ வழிவகைகளை நாடுகிறது என்றால், அது அணுஆயுத தளங்களோடும் இராணுவ உள்கட்டமைப்பு சம்பந்தமாகவும் மட்டும் மட்டுப்பட்டு இருக்காது. வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்கா-தென் கொரியாவின் கூட்டான 'செயலிழக்க வைக்கும் தாக்குதல்' பெரிதும் சாத்தியமானதாகும். இவ்விதத்தில், வடக்கு மீதான ஓர் இராணுவ தாக்குதல் அத்தீபகற்பத்தில் மிகப் பெரியளவில் இரத்தந்தோய்ந்த போராக பரிணமிக்கக் கூடிய அதிக சாத்தியமுள்ளது.”

குளோபல் டைம்ஸ் இதை குறிப்பிடவில்லை என்றாலும், அமெரிக்காவின் இந்த விதத்திலான ஆக்ரோஷ நடவடிக்கையானது, சென்ற ஆண்டு சீன வெளியுறவு அமைச்சக அறிக்கை தெளிவுபடுத்தியதைப் போல, முழு அளவிலான பிராந்திய மற்றும் உலகளாவிய போராக வேகமாக தீவிரமடையக் கூடும். ஒரு புதிய அணுஆயுத சோதனை போன்ற எந்த நடவடிக்கையையும் வட கொரிய ஆட்சி மேற்கொள்ள வேண்டாம், அது அமெரிக்க இராணுவ விடையிறுப்பைத் தூண்டவிடக்கூடும் என்று குளோபல் டைம்ஸ் எச்சரித்தது.

சிரியாவில், ஈடுபட்டுள்ள பிரதான முதலாளித்து சக்திகளின் ஆளும் உயரடுக்குகள் பாரிய இராணுவ மோதல்களின் அச்சுறுத்தல்களை அதிகரிப்பதைத் தவிர வேறெந்த வழியையும் காணவில்லை. ஒன்று அமெரிக்க நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அதன் அணுஆயுத தளவாடங்களை ஒப்படைத்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல் வட்டத்திற்குள் நுழைவதற்கு அடித்தளமாக ஓர் உடன்படிக்கையை எட்டுவது, அல்லது அணுஆயுத நிர்மூலமாக்கல் அபாயத்தை முன்நிறுத்தும் ஓர் அமெரிக்க இராணுவ தாக்குதலை எதிர்கொள்வது என பியொங்யாங்கிற்கு நடைமுறையில் இரண்டே இரண்டு வாய்ப்புகளே உள்ளன என்பதை தெளிவுபடுத்த, ஐயத்திற்கிடமின்றி ட்ரம்ப், கிம் உடனான அவர் சந்திப்பு நடந்தாலும், அப்பட்டமான இராணுவ அச்சுறுத்தல்கள் உட்பட அவர் முன்தீர்மானங்களில் ஒவ்வொரு வழிவகைகளையும் பயன்படுத்துவார்.

ஆனால் வட கொரியா ஓர் உடன்படிக்கையை எட்டினாலும் கூட, அது சிரியா மற்றும் வட கொரியாவுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்களில் குறிப்பிடப்படாத இலக்குகளாக உள்ள, வட கொரியாவின் அண்டை நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக அமெரிக்க சதிகளை அதிகரிப்பதற்கு ஒரு வெள்ளோட்டமாகவே இருக்கும். சிரியாவில் ரஷ்ய துருப்புகள் இருந்த போதும் அதன் மீது குண்டுவீசியதன் மூலம், சீனாவின் எச்சரிக்கைகளுக்கு இடையிலும் வட கொரியாவை அச்சுறுத்தியதன் மூலம், வாஷிங்டன் அணுஆயுத நாடுகளுடன் முழு அளவிலான போர் அபாயத்தை ஏற்பதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.