ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian Trotskyists hold public meeting in Chennai against Internet censorship

இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இணையத் தணிக்கைக்கு எதிராக சென்னையில் பொதுக் கூட்டம் நடத்தினர்

By our correspondents 
16 April 2018

இணையத் தணிக்கைக்கு எதிராக, ஏப்ரல் 8 அன்று, தமிழ்நாடு மாநில தலைநகரம் சென்னையில் நடத்தப்பட்ட ஒரு பொதுக் கூட்டத்தில், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழில்வல்லுநர்கள் மற்றும் இல்லத்தரசிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (International Committee of the Fourth International-ICFI) இந்திய ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.   

ICFI ஆதரவாளர்கள், ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், சென்னை மற்றும் அதனை சுற்றிலும் உள்ள கல்லூரிகள் மற்றும் தொழிலாள வர்க்கப் பகுதிகளில் பிரச்சாரங்களை நடத்தியும் இந்த கூட்டத்தை பரந்தளவில் ஊக்குவித்தனர். மேலும், இந்நிகழ்ச்சி ஆங்கிலத்திலும் தமிழிலும் நடத்தப்பட்டதுடன், முகநூல் வழியாக நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது.

கூட்டத்திற்கு தலைமை வகித்த சதீஷ் சைமன், கூகுள், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனங்களுடன் அரசாங்கங்கள் கைகோர்த்து வேலை செய்து, பேச்சு சுதந்திரம் மீதான ஒரு தீவிர தாக்குதலை அதிகரித்துள்ளது என்று கூறினார். 

“போலி செய்திகளுக்கு எதிராக போராடுதல்,” என்ற போர்வையில், ICFI இன் இணைய பிரசுரமான உலக சோசலிச வலைத் தளத்தை (World Socialist Web Site-WSWS) மைய இலக்காக வைத்து அதனுடன் சேர்த்து பல சோசலிச, இடதுசாரி மற்றும் போர் எதிர்ப்பு வலைத் தளங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

மேலும், 2003 இல் ஈராக்கை ஆக்கிரமிக்கவும், கொள்ளையடிக்கவும் முனைவதில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பயன்படுத்திய ஒரு அப்பட்டமான பொய்யாகத் தான் வாஷிங்டனின் “பேரழிவுகர ஆயுதங்கள்” என்ற கூற்றுக்கள் இருந்தன என்பதை பேச்சாளர் நினைவுகூர்ந்தார். அத்துடன் இந்த நடவடிக்கை, உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கம் கொண்ட அமெரிக்கா தலைமையிலான ஒரு முடிவற்ற தொடர் போர்களின் ஒரு பாகமாக இருந்ததுடன், தற்போது சிரியாவிற்கு எதிரான ஒரு முழு அளவிலான ஏகாதிபத்திய தலையீட்டின் சமீபத்திய அச்சுறுத்தல்களுக்கும் வழிவகுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் அவர்களது ஊதியங்கள், வேலைகள் மற்றும் வேலை நிலைமைகளை பாதுகாக்க முனையும் போராட்டங்களை ஒழுங்கமைக்க இத்தகைய தளங்களைத் தான் அதிகரித்தளவில் பயன்படுத்தி வருகின்றனர் என்பதால், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மீதான தணிக்கை தீவிரமடைந்துள்ளது என்று சைமன் விளக்கினார். இது, ஒக்லஹோமா, மேற்கு வேர்ஜினியா மற்றும் அமெரிக்காவிலுள்ள பிற மாநிலங்களிலும் ஆசிரியர்கள் மத்தியில் சமீபத்தில் வெடித்த போர்க்குணமிக்க போராட்டங்களில் வரைபடம் மூலமாக காட்டப்பட்டுள்ளது.       


அருண் குமார் மற்றும் சதீஷ் சைமன்

கூட்டத்திற்கு முக்கிய உரையாற்றிய அருண் குமார், உலக சோசலிச வலைத் தளத்தின் சோசலிச மற்றும் போர் எதிர்ப்பு முன்னோக்கு மற்றும் அதன் வாசகர் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள ஒரு விரைவான அதிகரிப்பு போன்றவற்றால் கடந்த வருடம் முதல் அதனை தடுப்பதற்கு கூகுள் இலக்கு வைத்து வருவதாக கூறினார். மேலும், ICFI, ஏகாதிபத்திய போரின் அதிகரித்துவரும் அபாயத்தை எதிர்த்து போராடும் ஒரு சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தை கட்டமைத்து வருகிறது என்றும், போர் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் குறித்து ஜூன் 2014 மற்றும் பிப்ரவரி 2016 லும் பிரதான அரசியல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், “அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள், அவர்களது பிற்போக்குத்தனமான நவ-காலனித்துவ போர் நடவடிக்கைகளையும் சுதந்திரமாக முன்னெடுக்க விரும்புகின்றன,அவர்களது இராணுவவாத கொள்கைகளுக்கு எதிராக பரந்தளவில் அணிதிரட்டப்படும் எந்தவொரு எதிர்ப்பையும் தேசத்துரோகமாக கருதுகின்றனர். இது கூகுளின் தணிக்கை மூலமாக WSWS, கடும் தாக்குதலுக்குள்ளாகி வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும், இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையில் தற்போது ஃபேஸ்புக்கும் இணைந்துள்ளது”  என்று அவர் கூறினார்.

இந்திய ஸ்ராலினிச மற்றும் மாவோயிச கட்சிகள், “இத்தகைய எச்சரிக்கைகள் மக்களை அச்சுறுத்தக்கூடும் என்று கூறி, போர் அபாயத்தை குறை மதிப்பீடு செய்துள்ளனர்” என்று அருண் குமார் கூறினார். மேலும், லெனினும் போல்ஷிவிக்குகளும் முதலாம் உலகப் போர் அபாயம் பற்றி முன்கூட்டியே பேசியிருந்தனர் என்பதோடு, சர்வதேச சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை தயார் செய்யவும் அவர்கள் போராடினர் என்பதையும் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

மேலும், முதலாம் உலகப் போர் தொடங்கியபோது, ஏகாதிபத்தியப் போரை தொழிலாளர்களின் சொந்த ஆளும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான ஒரு உள்நாட்டு போராக மாற்றுவதற்கு லெனின் அழைப்பு விடுத்ததாக பேச்சாளர் தொடர்ந்து கூறினார். 1917 அக்டோபர் புரட்சியின் வெற்றி, போர் முடிவின் ஆரம்பமாகவும், மனிதகுலத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை திறந்து வைப்பதாகவும் இருந்தது என்றும் தெரிவித்தார்.

வட இந்தியாவில் மானேசரில் மாருதி சுசூகி நிறுவனத்தின் வாகன ஒருங்கிணைப்பு ஆலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குறித்த WSWS இன் கொள்கை சார்ந்த பாதுகாப்பு பற்றி அருண் குமார் மீளாய்வு செய்தார். மலிவுகூலி உழைப்பு நிலைமைகளுக்கு எதிரான அத்தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போராட்டங்கள் பற்றியும் WSWS கட்டுரைகள் வெளியிடப்பட்டது, மற்றும் அவர்களுக்கு எதிரான நிறுவனம் மற்றும் அரசாங்கத்தின் கூட்டு சதிவேட்டையையும் அம்பலப்படுத்தியது என்று கூறினார்.

“மார்ச் 18, 2017 அன்று 13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனையும், ஏனைய 18 தொழிலாளர்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனைகளும் வழங்கப்பட்ட போது, ICFI, WSWS மூலமாக, ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட அத்தொழிலாளர்களை விடுவிக்க கோரும் ஒரு சர்வதேச பிரச்சாரத்தை முன்னெடுத்தது,” என்று பேச்சாளர் தெரிவித்தார்.

“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் மறு பக்கம் திரும்பிக் கொண்டன. பாதிக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களுடன் தம்மை ஒன்றாக அடையாளம் காட்டும் எந்தவொரு செயலும் இந்திய முதலாளித்துவத்தின் பிரிவுகளுடன் அவர்கள் வைத்திருக்கும் நெருக்கமான உறவுகளை பலவீனப்படுத்தும் என்று கருதுகின்றனர், அப்பிரிவுகள், இந்த சதிவேட்டையை ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை கொடுப்பதற்கும் மற்றும் அடிமை உழைப்பு நிலைமைகளை ஸ்தாபிக்க அரசாங்கம் கொண்டுள்ள உறுதியை பூகோள முதலீட்டாளர்களுக்கு ஒரு சமிக்ஞையாக அனுப்பவும் விரும்புகின்றனர்” என்றும் அவர் கூறினார்.

பிரதம மந்திரி நரேந்திர மோடியின் அரசாங்கமும் கூட “வெறுக்கத்தக்க பேச்சுகளை” எதிர்க்கும், மற்றும் “தேசிய பாதுகாப்பை” நிலைநிறுத்தும் சாக்குபோக்கில், குறிப்பிட்ட வலைத் தளங்களையும், சமூக ஊடக கணக்குகளையும் தணிக்கை செய்யும் பொருட்டு ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களுடன் இணைந்து செயல்படுவதாக அருண் குமார் கூட்டப் பங்கேற்பாளர்களுக்கு தெரிவித்தார்.

“இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகள், அமெரிக்கா உடனான மோடி அரசாங்கத்தின் நெருங்கிய மூலோபாய கூட்டாண்மை மற்றும் சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் போர் உந்துதலில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக மாற்றுவது ஆகியவற்றுடன் தொடர்புடையவையாகும். சமூக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க-சார்பு மாற்றம் ஆகியவற்றின் மீது எதிர்ப்பு வளர்ந்துவரும் நிலையில், அவ்வெதிர்ப்பை ஒழுங்கமைக்க சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் அச்சமடைகின்றது” என்று தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் இடையேயான திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகள் போரைத் தவிர்க்க உதவிடுமா, மற்றும் சாதிப் பிரச்சினைகளை தீர்க்காமல் இந்தியாவில் சோசலிசத்திற்காக போராடும் சாத்தியம் இருந்ததா என்பது போன்ற முக்கிய கேள்விகளை பார்வையாளர்கள் எழுப்பினர்.

கிம் ஜோங்-உன் சம்பந்தப்பட்ட எதிர்கால பேச்சுவார்த்தைகள் எதுவாக இருப்பினும், உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஆழமடைந்துவரும் நெருக்கடியால் ஏகாதிபத்திய போரின் ஒரு புதிய காலத்திற்கு உந்துதல் அளிக்கப்பட்டு வந்ததாக பார்வையாளர்களுக்கு அருண் குமார் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள சாதிப் பிரச்சினை, முதலாளித்துவ வர்க்க சுரண்டலுடன் பிணைந்திருந்தது குறித்தும், மற்றும் 1947 இல் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தால் மேற்கொள்ளப்பட்ட காலனித்துவ விரோத ஜனநாயக புரட்சியின் அரசியல் கருச்சிதைவினால் உருவாக்கப்பட்ட ஒரு தீர்க்கப்படாத பெரும் பிரச்சினைகளில் ஒன்றாக அது இன்னும் இருக்கிறது என்று அவர் விளக்கமளித்தார்.

“இந்தியாவில் பிரதான சமூக பிளவாக இருப்பது வர்க்கம் தானே தவிர, சாதியன்று,” என்று அருண் குமார் தெரிவித்தார். மேலும், “சாதிய ஒடுக்குமுறை மற்றும் ஜனநாயக புரட்சி குறித்த பிற தீர்க்கப்படாத பிரச்சினைகளை, தொழிலாள வர்க்கம் அதன் தலைமையின் கீழ் ஏனைய ஒடுக்கப்பட்ட திரளான மக்களை அணிதிரட்டுவதன் மூலமும் மற்றும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்தை தூக்கியெறியும் ஒரு போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலம்  மட்டுமே தீர்த்துவைக்க முடியும்” என்றும் கூறினார்.

கூட்டம் நிறைவுற்ற பின்னர், உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் கூட்ட பங்கேற்பாளர்கள் சிலரிடம் பேசினர்.


முத்துக்குமார்

சட்டம் பயிலும் மாணவரான முத்துக்குமார் பின்வருமாறு தெரிவித்தார்: “‘இணைய தணிக்கையை எதிர்ப்போம், பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்போம்” என்ற கூட்ட பதாகையிலுள்ள முழக்கத்தை நான் ஆதரிக்கிறேன். சர்வதேச அரசியலானது பொருளாதாரத்தையும், புவியியல் நலன்களையும் தான் சுற்றி இயங்குகிறது. தொழிலாள வர்க்கத்தை நாம் அணிதிரட்ட வேண்டும் என்பதோடு தொழிலாளர்களை வர்க்க நனவு உள்ளவர்களாக்க பயிற்றுவிக்க வேண்டும், மேலும் அப்பொழுது தான் மற்றொரு அழிவுகரமான உலகப் போரிலிருந்து உலகத்தை அவர்கள் காப்பாற்ற முடியும் என்பதையும் அவர்களை புரிந்துகொள்ளச் செய்யவேண்டும். மேலும், முதலாளித்துவ முறையை தூக்கியெறியவும் அதே சக்தியை நாம் பயன்படுத்த முடியும்.”      

மணி ஒரு கணக்காளர், இவ்வாறு கூறினார்: “நான் எப்பொழுதுமே பேச்சு சுதந்திரத்தை ஆதரிப்பேன் என்பதால், எந்தவொரு வகையான இணைய தணிக்கையையும் நான் வலுவாக எதிர்க்கிறேன். இந்த கூட்டத்தின் மூலமாக, நான், சர்வதேசிய முன்னோக்கு பற்றியும், தேசிய மற்றும் சர்வதேசிய அளவிலான பிரச்சினைகளை முதலாளித்துவத்தால் உருவாக்கப்படுவது பற்றியும் கற்றுக்கொண்டேன்.”

காவேரி நீர்-பகிர்வு குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடாகா மாநிலங்களின் இடையே நடந்துவரும் பிரச்சினையை குறிப்பிட்டு அவர், “தொழிலாள வர்க்கத்திற்குள் பிளவுகளை உருவாக்க அரசியல் கட்சிகளால் இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது… என்றும், சாதிக் கேள்வி பற்றி மார்க்சிசத்தால் சரியான தீர்வு வழங்க முடியவில்லை என்று முன்பு நான் நினைத்தேன், ஆனால் சாதிப் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்ள முடியும் என்பதற்கான சில வழிமுறைகளை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். இன்னும் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன, அது பற்றி நாம் மேலும் விவாதிக்கலாம்.”

மாணிக்கம் என்ற ஒரு அச்சுத் தொழிலாளி இவ்வாறு குறிப்பிட்டார்: “மோடி பிரதம மந்திரியான பின்னர், பேச்சு சுதந்திரம் மற்றும் பிற ஜனநாயக உரிமைகள் மீது பெரும் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. சில தலைவர்களின் காரணமாக மட்டுமே போர் அபாயம் ஏற்படுகிறது என்று நான் கருதினேன், ஆனால் அதற்கான காரணம் முதலாளித்துவம் தான் என்பதை இப்பொழுது நான் புரிந்துகொண்டேன். மார்க்ஸ் கூறியது சரியானதே; தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தை தூக்கியெறிந்துவிட்டு, அதன் தலைமையிலான ஒரு அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்று.”