ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US media’s silent complicity in Israeli massacre in Gaza

காஸாவிலான இஸ்ரேலின் படுகொலையில் அமெரிக்க ஊடகங்களின் ஓசையெழுப்பாத உடந்தைத்தனம்

Jean Shaoul and Barry Grey
2 April 2018

ஆயுதங்கள் ஏதுமின்றி, அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்த பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களை இஸ்ரேலின் இராணுவம் பாரிய அளவில் கொல்வதையும் காயப்படுத்துவதையும் நியூ யோர்க் டைம்ஸ் சகிதமாக அமெரிக்காவின் பெரும் ஊடகங்கள் ஒரு சம்பவமே இல்லை என்பதைப் போல நடத்துகின்றன.

பாலஸ்தீனியர்களது நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்ததை எதிர்த்தும் பாலஸ்தீனிய அகதிகள் தமது தாய்நாட்டிற்குத் திரும்ப உரிமை கோரியும் வெள்ளிக்கிழமையன்று, பத்தாயிரக்கணக்கிலான பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் இராணுவமயப்பட்ட எல்லைக்கு அருகில் கூடிய சமயத்தில், இஸ்ரேலிய துருப்புகளும் தூரத்தில் இருந்து துல்லியமாக சுடும் படையினரும் துப்பாக்கிசூடு நடத்தினர், இதில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர், மேலும் சுமார் 1,400 பேர் காயமடைந்தனர்.

நிஜக் குண்டுகளைக் கொண்டு திட்டமிட்டு கொலை செய்யப்படுகின்ற காட்சிகளைக் கண்டு உலகெங்கும் மில்லியன் கணக்கான மக்கள் அதிர்ச்சியும் திகிலும் அடைந்தனர். எல்லை வேலியில் இருந்து விலகி ஓடும் ஒரு இளைஞர் முதுகில் சுடப்பட்டு இஸ்ரேலிய துருப்புகளால் கொல்லப்படுவதை ஒரு காணொளி காட்டியது. கொல்லப்பட்டவர்களில் குறைந்தபட்சம் இரண்டு பேரேனும் கைகளில் எந்த ஆயுதமும் இல்லாத நிலையில் இஸ்ரேலின் எல்லையை நோக்கி மெதுவாக நடந்து வந்த நிலையில் சுட்டுக் கொல்லப்படுவதை இன்னொரு காணொளி காட்டியது.

நிராயுதபாணியாக, இந்த பிறநாடுசூழ்ந்த சிறு பிராந்தியத்தின் நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மற்றும் இஸ்ரேலுடனான எல்லையில் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தவர்கள் மீது சுடுவதற்கு இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) துருப்புகளையும் 100க்கும் அதிகமான நெடுந்தூரத்தில் இருந்து குறிபார்த்து சுடும் படையினரையும் அமர்த்தியிருந்தது.

பாலஸ்தீனத்தின் இந்த பிறநாடுசூழ்ந்த பகுதியைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் முதலாளித்துவ இஸ்லாமிய குழுவான ஹமாஸ், வெள்ளியன்று கொல்லப்பட்டவர்களில் ஐந்து பேர் மட்டுமே ஹமாஸின் இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் அப்பாவிப் பொதுமக்கள் என்றும் தெரிவித்திருக்கிறது.

இந்த வெகுஜனங்கள் மீதான துப்பாக்கி சூடு குறித்து ஒரு சுதந்திரமான விசாரணைக்கு அழைப்பு விடுக்கின்ற ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் குவைத் கொண்டுவந்த போது, அதை அமெரிக்கா தலையிட்டு தடுத்து விட்டது, இஸ்ரேலின் செய்தித் தொடர்பாளர் இத்தகைய எந்தவொரு விசாரணையையும் ஒரேயடியாக நிராகரித்தார், “இஸ்ரேலின் இறையாண்மையை பாதுகாத்தமைக்காக” இஸ்ரேலிய படைவீரர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

IDF காஸா எல்லையில் அதன் வன்முறையை அதிகரிக்கவிருப்பதாக, இஸ்ரேலின் இராணுவத் தலைமை செய்தித் தொடர்பாளரான பிரிகேடியர் ஜெனரல் ரோனன் மனேலிஸ் எச்சரித்தார். IDF இதுவரையில் எல்லைவேலியில் தனது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி வைத்திருந்ததாகவும், ஆனால் காஸாவிற்குள்ளாக “மற்ற இடங்களிலும் இருக்கின்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அது தயாரிப்புடனே இருந்தது” என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

இஸ்ரேலின் படுகொலைக்கு அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்தும் அதன் இரண்டு பெரும் கட்சிகளிடம் இருந்தும் முழுமையான ஆதரவு இருப்பதை அடியொற்றி, நியூ யோர்க் டைம்ஸ் இந்தப் படுகொலை குறித்து தனது சனிக்கிழமை பதிப்பில் சம்பிரதாய முறையிலான செய்தி ஒன்றை வெளியிட்டது, அதன் ஞாயிறு பதிப்பிலும் அதன் வலைத் தளத்திலும் இந்தப் பிரச்சினையை முழுமையாகக் கைகழுவி விட்டது. IDF உம் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கமும், மேற்கத்திய அரசாங்கங்கள் மற்றும் ஊடகங்களிடம் இருந்தான சத்தமில்லாத எதிர்வினையால் துணிச்சல் பெற்று, சனிக்கிழமையன்றும் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு சிறு கூட்டத்தின் மீது தாக்குதலைத் தொடர்ந்து, நிறைய ஆர்ப்பாட்டக்காரர்களை காயப்படுத்தியிருந்தன.

“ஆவண செய்தித்தாள்” என்று கூறிக்கொள்வதன் அதே ஞாயிற்றுக்கிழமை பதிப்பில் சிரிய அரசாங்கத்தின் அட்டூழியங்களாகச் சொல்லப்படுபவை குறித்த ஒரு நீண்ட கட்டுரையும் தென் ஆபிரிக்காவில் கடல்நத்தைகளை சட்டவிரோதமாக வேட்டையாடுவது குறித்து புலம்பும் இன்னொரு கட்டுரையும் இடம்பிடித்திருந்தன.

இந்த இஸ்ரேலியப் படுகொலை ஞாயிறன்றான தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சிகளிலும் அபூர்வமாகவே தலைகாட்டியது, எந்த பெரும் ஊடகங்களிடம் இருந்தும் தலையங்க அறிக்கைகள் எதனையும் தூண்டியிருக்கவில்லை.

மே 15, இஸ்ரேல் அரசு உருவாக்கப்பட்ட 70வது தினத்தன்று -இத்தினத்தை பாலஸ்தீனியர்கள் நக்பா தினமாய் (பெருந்துயர தினம்) அனுசரிக்கிறார்கள், அன்று அமெரிக்கா தனது தூதரகத்தை ஜெருசலேமில் திறக்கவிருக்கிறது- முடிவடைய இருக்கும் ”திரும்பல் பேரணி” (March of Return) என்று அழைக்கப்படும் ஆறு வார கால அமைதிப் போராட்டங்களின் தொடக்கமாக வெள்ளியன்றான ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் சென்ற ஆண்டில் அறிவிக்கப்பட்ட, அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெருசலேமுக்கு மாற்றும் நடவடிக்கை ஒரு பாரிய ஆத்திரமூட்டலாகும், ஏனென்றால் பாலஸ்தீனியர்கள் ஜெருசலேமை தமது ஒரு வருங்கால அரசின் தலைநகராக கூறி வருகின்றனர்.

வெள்ளியன்றான படுகொலை காஸாவில் 2014 இன் இஸ்ரேலது போருக்குப் பிந்தைய மிகவும் மரணகரமான தினமாக இருந்தது, அப்போரில் 2,250 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பான்மையோர் அப்பாவி பொதுமக்கள். அதற்கு முன்பாக 2008-2009 இலும் மற்றும் 2012 இலும் இந்த அடைபட்ட மற்றும் வறுமைப்பட்ட பகுதியின் மீதான குற்றவியல் தாக்குதல்களில் முறையே 1,217 பேரும் மற்றும் 147 பேரும் கொல்லப்பட்டிருந்தனர், அவர்களிலும் பெருவாரியானோர் அப்பாவி பொதுமக்கள். இந்த அத்தனை போர்க்குற்றங்களுக்கும் வாஷிங்டனின் ஆதரவு இருந்தது.

இஸ்ரேல், காஸா மீது 2007 இல் ஒரு தடையைத் திணித்ததும் -இதில் எகிப்தும் இணைந்து கொண்டது- அதனுடன் இஸ்ரேலிய இராணுவத்தால் உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதுமாய் சேர்ந்து இந்த பிராந்தியத்திற்கும் அதன் 1.9 மில்லியன் வாசிகளுக்கும் பெருநாசம் செய்திருக்கிறது. மின் வெட்டுக்கள் தண்ணீர் பற்றாக்குறைகளுக்கும் சாக்கடை சுத்தம் செய்ய முடியாமைக்கும் இட்டுச் சென்றிருக்கிறது, ஆயிரக்கணக்கான பொதுத் துறை தொழிலாளர்களுக்கு ஊதியங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன அல்லது அகற்றப்பட்டிருக்கின்றன, அத்துடன் ட்ரம்ப் நிர்வாகம் உணவு உதவிக்கான நிதியையும் காஸாவின் சுமார் 1.2 மில்லியன் மக்களுக்கு உதவுகின்ற ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் வேலை முகமைக்கான நிதியையும் நிறுத்தி வைத்திருக்கிறது.

இதேபோன்ற ஏதேனும் சிரிய அல்லது ரஷ்யப் படைகளால் நடத்தப்பட்டிருந்தால் எத்தனை கொந்தளித்து தலையங்கங்களும், வருணனைகளும், சிறப்புக் கட்டுரைகளும் அச்சு ஊடகங்களையும் ஒளிபரப்பு ஊடகங்களையும் ஆக்கிரமித்திருக்கும் என்பதை ஒருவர் கற்பனை செய்து பார்க்கலாம். விளாடிமிர் புட்டினின் அதி-வலது, புலம்பெயர்-விரோத போட்டியாளரான அலெக்ஸி நவால்னி கைது செய்யப்பட்டால், அது உடனே முன்பக்கச் செய்தியாகி விடுகிறது.

பல வாரங்களாக, முன்னாள் ரஷ்ய உளவாளியும் பிரிட்டிஷ் இரட்டை முகவருமான சேர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது வயதுவந்த மகளுக்கு நஞ்சூட்டப்பட்டதில் ரஷ்ய அரசாங்கம் சம்பந்தப்பட்டிருந்ததாக முற்றிலும் ஊர்ஜிதமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலான ஒரு முழுமையான ஜோடிப்பு சம்பவம், மாஸ்கோவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான இராஜதந்திர மற்றும் இராணுவத் தாக்குதலை பாரிய அளவில் தீவிரப்படுத்துவதற்கான சாக்காக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

ஆனால் அதே ஊடகங்கள் பாலஸ்தீனியர்கள் ஏதோ பூச்சிகளைப் போல, சுடப்படுவதும் கொல்லப்படுவதும் வெகு சாதாரண விடயம் போல் காட்டுகின்றன.

சமூக ஊடக பெருநிறுவனங்களும், கருத்துசுதந்திரத்தின் மீதான அவற்றின் அடக்குமுறையின் அடியொற்றி, தமது பங்கைச் செய்து கொண்டிருக்கின்றன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அழுத்தத்தின் கீழ், ஃபேஸ்புக் சென்ற வாரத்தில், பாலஸ்தீனத்தின் ஒரு பெரும் செய்தி முகமையான, சஃபா பாலஸ்தீனிய ஊடக முகமையின் (Safa Palestinian Press Agency) பக்கத்தை மூடியது. “வெறுப்பு உரை” மற்றும் “தூண்டிவிடல்”க்கு எதிரான ஒரு நடவடிக்கையாக ஃபேஸ்புக் தனது நடவடிக்கையை பாதுகாத்துப் பேசியது.

காஸாவுக்கு எதிரான இஸ்ரேலின் குற்றவியல்தனமான மற்றும் ஆத்திரமூட்டுகின்ற நடவடிக்கைகளும், மே 15 வரையான காலத்தில் இந்த நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவதற்கான அதன் வாக்குறுதியும், டெல் அவிவும் ரியாத்தும் வாஷிங்டனின் ஆசிர்வாதத்துடன் அல்லது நேரடி பங்கேற்புடன் ஈரானுடன் போர் நடத்துவதற்கு பரஸ்பர உறுதி பூண்டிருக்கும் ஒரு பொருட்சூழலில் வைத்து பார்க்கப்பட வேண்டும். நெத்தனியாகு, பிராந்தியமெங்கிலும் பாலஸ்தீனியர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் இருந்து ஒரு விரிவான எதிர்வினையைத் தூண்டுவதன் மூலமாக, ஈரான் மற்றும் அதன் பிராந்தியக் கூட்டாளிகளுக்கு எதிராக அமெரிக்கா ஒரு பாரிய தலையீடு செய்வதற்கு அவசியமான நிலைமைகளை உருவாக்குவதில் இறங்கியிருக்கிறார்.

அமெரிக்க ஊடகங்களின் அமைதி போர்க் குற்றங்களில் உடந்தையாக இருக்கும் ஒரு செயலாகும். ஒரு ரவுடித்தன ஆட்சியின் கொலைகாரக் கொள்கைகளுக்கு பகிரங்கமாக அல்லது ஓசையற்ற ஆதரவை வழங்கும் பக்கத்தில் நிற்கிற சர்வதேச முதலாளித்துவத்திற்காக அவை பேசுகின்றன. முதலாளித்துவ ஊடகங்களில் “மனித உரிமைகள்” -ஆட்சி மாற்றத்திற்கான அல்லது கொள்ளையடிப்பதற்கான நவ-காலனித்துவ போர்களுக்கு ஒரு மறைப்பாக அது சேவை செய்யும்போது- குறித்து பேசப்படும் சிடுமூஞ்சித்தனமான அபத்தங்களைப் பொறுத்தவரை, 'ஒழுக்கநெறி அத்தனையும் வர்க்க ஒழுக்கநெறியே’ என்ற பழைய சொல்வழக்கு ஊர்ஜிதம் பெறுகிறது.

சர்வதேசத் தொழிலாள வர்க்கம் எச்சரிக்கப்பட்டாக வேண்டும்: காஸா சம்பவங்கள் வரவிருக்கும் விடயங்களுக்கான ஒரு அறிகுறியாகும். உலக முதலாளித்துவ நெருக்கடி ஆழமடைவதற்கும் தொழிலாள வர்க்க எதிர்ப்பு பெருகிச் செல்லும் அறிகுறிகளுக்குமான பதிலிறுப்பில் பெரும் நாடுகள் அத்தனையிலும் பிற்போக்குத்தனம், இராணுவவாதம் மற்றும் சர்வாதிகாரத்திற்கான முனைப்பு ஆகியவை மேலோங்கிச் சென்று கொண்டிருக்கின்றன. பாலஸ்தீன மக்களை பாதுகாக்க முன்வருவதும், மத்திய கிழக்கிலு மற்றும் சர்வதேச அளவிலும் அத்தனை மத மற்றும் தேச வித்தியாசங்களைக் கடந்து, அத்தனை தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்துவதற்கு போராடுவதும் தொழிலாள-வர்க்கம் அளிக்க வேண்டிய பதிலிறுப்பின் ஒரு அத்தியாவசியமான பகுதியாக இருக்கிறது.