ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian Stalinists routed in Tripura bastion

இந்திய ஸ்ராலினிஸ்டுகள் திரிபுரா கோட்டையில் தோற்கடிக்கப்பட்டனர்

By Arun Kumar 
8 March 2018

இந்தியாவின் முக்கிய ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம், சமீபத்தில் நடந்துமுடிந்த திரிபுரா மாநில சட்டமன்றத் தேர்தலில், இதுநாள்வரை அம்மாநிலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக ஒருபோதும் இருந்திராத பாரதிய ஜனதா கட்சியிடம் (பிஜேபி) தனது 25 ஆண்டுகால ஆட்சி அதிகாரத்தை இழந்து ஒரு அவமானகரமான படுதோல்வியை சந்தித்திருக்கிறது.

2013 இல் இம்மாநிலத்தில் நடைபெற்ற கடைசி சட்டமன்றத் தேர்தலில், பிஜேபி 2 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றதுடன், அதன் அனைத்து வேட்பாளர்களும் அவர்களது கட்டுப்பணத்தைக் கூட இழந்தனர்.

சிபிஎம் இன் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஎம் தலைமையிலான இடது முன்னணியின் இந்த படுதோல்விக்கு பிஜேபி இன் “பணபலமும் அதிகார பலமும்” மட்டும் தான் காரணம் என்று குற்றம்சாட்டுவதற்கு மும்முரமானார். இருந்தாலும், இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரது பிஜேபியும், 4 மில்லியனுக்கு சற்று குறைவான மக்கள்தொகை கொண்ட ஒரு வட-கிழக்கு மாநிலமான திரிபுராவில் அவர்களை அகற்றிவிட்டு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தேவையான அனைத்து தந்திரோபாயங்களையும் கையாண்டிருக்கலாம் என்பது மட்டும் நிச்சயம்.

ஆனால் சிபிஎம் இன் இந்த தோல்விக்கு, கடந்த கால் நூற்றாண்டாக அதிகாரத்தை தன்வசம் வைத்திருந்த இத்தகைய மாநிலங்களில் அது வலதுசாரி, வணிக-சார்பு கொள்கைகளை பின்பற்றியதே மிகமுக்கியமான காரணமாக இருந்தது; மேலும், மத்தியில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களுக்கு, அதிலும் பெரும்பாலும், உலக மூலதனத்திற்கு ஒரு மலிவு உழைப்பு புகலிடமாக இந்தியாவை மாற்றும் இந்திய முதலாளித்துவத்தின் உந்துதலை முன்னெடுத்துச் சென்ற மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு இராணுவ மூலோபாய கூட்டணியையும் உருவாக்கிய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு அது அளித்த ஆதரவும் அதற்கு காரணமாக இருந்தது.

திரிபுராவைப் போலவே, பெரும்பான்மையினர் வங்க மொழியில் பேசும் அருகிலுள்ள மேற்கு வங்க மாநிலத்திலும், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருந்துவந்த இடது முன்னணி அரசாங்கம், “முதலீட்டாளர் சார்பு” கொள்கை என்று தானே கூறி அவற்றை செயல்படுத்த தொடங்கிய பின்னர், 2011 இல் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது. இது, தொழில்நுட்பவியல் சார்ந்த தொழில்துறைகளில் வேலைநிறுத்தங்களுக்கு தடைவிதிப்பது, மற்றும் வணிக அபிவிருத்தித் திட்டங்களுக்காக விவசாய நிலங்களை கைப்பற்றும் வகையில் விவசாயிகளின் எதிர்ப்பை நசுக்குவதற்கு பொலிஸ் மற்றும் குண்டர்கள் வன்முறையை பயன்படுத்துவது போன்றவற்றை உள்ளடக்கியது.

சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி தற்போது மாற்றத்திற்கு உள்ளாகும்  திரிபுரா மாநில சட்டமன்றத்தில் உள்ள மொத்த இடங்கள் 60 இல் 50 ஐ தக்கவைத்து கொண்டிருந்தது தற்போது அது வெறும் 16 ஆக குறைந்துள்ளது. அது 45 சதவிகித வாக்குகளை பெற்றது அதாவது, முந்தைய தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்ததை விட தற்போது 6 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. பிஜேபி தனியாக 35 தொகுதிகளையும், மற்றும் அதன் தேர்தல் கூட்டணி கட்சியான திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி (Indigenous People’s Front of Tripura-IPFT) 8 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. திரிபுராவின் நீண்டகால இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரசுக்கு இருந்த ஆதரவு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் இரண்டு கட்சிகளும் சேர்ந்து அனேகமாக  51 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளன. மேலும் 2013 இல் 36 சதவிகித வாக்குகளை பெற்றிருந்த காங்கிரஸ் தற்போது வீழ்ச்சி கண்டு 2 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளைத் தான் பெற்றது.

திரிபுரா தேர்தல் முடிவுகள், சிபிஎம் மற்றும் அதன் கூட்டணிகளை இந்தியாவின் 29 மாநிலங்களில் கேரளா மாநிலம் ஒன்றில் மட்டுமே அவர்களது அதிகாரத்தை தக்கவைத்து கொள்ளும் நிலைக்கு தள்ளியுள்ளது. தேசிய பாராளுமன்றத்தில், மிகசமீபத்தில் ஒரு தசாப்த காலமாக மூன்றாவது மிகப்பெரிய அரசியல் சக்தியாக திகழ்ந்த இடது முன்னணி தற்போது ஒரு டசினுக்கும் குறைவான இடங்களையே தக்கவைத்துக்கொண்டுள்ளது.

1991 இல் இருந்து, இந்து வகுப்புவாத பிஜேபி இன் எழுச்சியை முறியடிப்பது மட்டுமே ஸ்ராலினிஸ்டுகளால் அறிவிக்கப்பட்ட முக்கிய நோக்கமாக இருந்துவந்தது. தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்திற்கு —அதாவது இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய அரசாங்க கட்சியான காங்கிரஸ் கட்சி, மற்றும் பிற்போக்குத்தன சாதி அடிப்படையிலான மற்றும் பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளுக்கு— அடிபணிய செய்வதை அவர்கள் நியாயப்படுத்தினர், அவ்வாறாக மட்டும் தான் பிஜேபி யையும் மற்றும் அதன் வழிகாட்டியாக மறைவில் இருந்து வரும் பாசிசவாத RSS ஐயும்  தொலைவில்  விலக்கி வைக்க முடியும் என்றனர்.

இந்த கொள்கையின் இறுதி விளைவு என்னவென்றால், பிஜேபி முன்னெப்போதையும் விட வலுப்பெற்றுவிட்டது. திரிபுரா மற்றும் மிகசமீபத்தில் மாநில சட்டமன்ற தேர்தல் நடந்துமுடிந்துள்ள மற்றொரு வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தையும் சேர்த்து, தேசியளவில் 29 மாநிலங்களில் 21 இல் பிஜேபி அதிகாரத்தில் இருப்பதுடன் (அல்லது ஒரு கூட்டணி அரசாங்கத்தின் பாகமாக குறைந்தபட்ச பங்கை), ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிகளையும் தக்கவைத்துள்ளது.

2014 தேசிய தேர்தலின் பொழுது, முதன்முறையாக பாராளுமன்ற பெரும்பான்மையை வென்று அதிகாரத்திற்கு வந்த பிஜேபி, மிகப்பரந்தளவில் வேலையின்மை மற்றும் மிக ஆழ்ந்து வேரூன்றிய மற்றும் அதிகரித்துவரும் வறுமை ஆகியவற்றின் மீதான மக்களின் கோபத்தை சுரண்டிக் கொண்டது.

தேசிய தொழில்துறை ஆணையத்தின் 2016 கணக்கெடுப்பின்படி, திரிபுராவில் இடது முன்னணி ஆட்சியின் கீழ், வேலையின்மை விகிதம் இந்தியாவிலேயே மிக அதிகபட்சமாக 19.7 சதவிகிதத்திற்கு உயர்ந்தது. மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகவுள்ள பழங்குடியின மக்கள் மத்தியில், வேலையின்மை விகிதம் கணிசமாக அதிகளவில் உள்ளது.

தேர்தலுக்கு பின்னர், சிபிஎம் இன் பிரதான இடது முன்னணி கூட்டணி கட்சியான இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) பொதுச் செயலாளர் சுராவரம் சுதாகர் ரெட்டி, திரிபுராவின் “பொருளாதாரம் மோசமாகவுள்ளது. துயரமும் வறுமையும் அங்கு அதிகரித்து வருகின்றது. ஆகவே, மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியுடனும் கோபமுற்றும் இருந்தனர்” என்பதை ஒப்புக்கொண்டார்.

இடது முன்னணி, பல்வேறு பழங்குடியின குழுக்களால் உருவாக்கப்படும் சிறுஇனக்குழுவாத-தேசியவாத எழுச்சிகளை நசுக்குவதற்காக, கடுமையான சட்டங்களை கொண்டு வந்தது –பொதுவான அடக்குமுறை அதிகாரங்களை வழங்கக்கூடிய கலவரப்பகுதிகள் சட்டம் (Disturbed Areas Act) மற்றும் ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டம் (Armed Forces Special Powers Act –AFSPA)– இவை இந்திய பாதுகாப்பு படைகளுக்கு வரம்பற்ற அடக்குமுறை அதிகாரங்களை வழங்கியது, மேலும் அவற்றுக்கு குற்றம் சார்ந்த செயல்கள் குறித்து வழக்கு தொடரப்படுவதிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டது. 2015 இல் தான் இந்த AFSPA நீக்கப்பட்டது.

மோடியின் கீழ் பிஜேபி, கடுமையான சிக்கன நடவடிக்கைகளை திணித்தது, அதேசமயம்  தனியார்மயமாக்கலை முடுக்கிவிடுவது மற்றும் தொழிலாளர் தரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை அகற்றுவது போன்றவற்றையும் முடுக்கி விட்டது, இவ்வாறான நிலையில் திரிபுராவில் அபிவிருத்தியை கொண்டுவரப்போவதாக மோசடியான வாக்குறுதியை அளித்தது. “திரிபுரா 2018 குறித்த பார்வை ஆவணம்” என்ற அதன் 30 பக்க அறிக்கை, உணவு பதப்படுத்துதல், மூங்கில் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (IT) போன்ற துறைகளுக்காக சிறப்பு பொருளாதார மண்டலங்களை (Special Economic Zones-SEZs) அமைப்பது; ஒவ்வொரு வீட்டிற்கும் வேலைவாய்ப்பை வழங்குவது; இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட்ஃபோன்கள் வழங்குவது; பெண்களுக்கு இலவசக் கல்வியளிப்பது; வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள அனைத்து வீடுகளுக்கும் இலவச சுகாதார காப்பீடு வழங்குவது; மற்றும் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது என அனைத்திற்கும் உறுதியளித்துள்ளது.

பிஜேபி, அதன் வழக்கப்படி, பல்வேறு வகுப்புவாத விண்ணப்பங்களை செய்தது. வடகிழக்கில் அதன் தேர்தல் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கத்துடன், தேசிய பிஜேபி அரசாங்கம், பங்களாதேஷில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த இந்து மக்களுக்கு குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமையையும் அளித்தது. அதேசமயம் அவற்றை புலம் பெயர்ந்த முஸ்லீம் மக்களுக்கு மறுத்தது மேலும் அவர்களை படையெடுப்பாளர்களாகவும் பயங்கரவாதிகளாக இருக்கக் கூடியவர்கள் என்றும் முத்திரை குத்தியது.

பிஜேபி வெற்றியின் மற்றொரு காரணியாக IPFT உடனான அதன் தேர்தல் கூட்டணி இருந்தது, இது மாநிலத்தின் மிக வறிய மற்றும் வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட பழங்குடியின மக்களின் சார்பாக பேசுவதற்கு உரிமை கோருவதுடன், இந்திய ஒன்றியத்திற்குள் “ட்விப்ரலாண்ட்” என்றொரு தனி மாநில கோரிக்கைகான பிரச்சாரங்களையும் நடத்திவருகிறது. தனி மாநில கோரிக்கையை ஆதரிக்காமல் பிஜேபி கவனமாக இருந்தாலும், பழங்குடியின மக்களின் நிலைமைகளை மேம்படுத்த வாய்ச்சவடலாக வாக்குறுதிகளை மட்டும் வாரிவழங்கியது. 2013 தேர்தல்களில், பழங்குடியின மக்களுக்காக “ஒதுக்கப்பட்ட அனைத்து 20 தொகுதிகளையும்” இடது முன்னணி தான் வென்றது என்றாலும், 2018 இல் வெறும் ஒரு இடத்தை மட்டுமே அது கைப்பற்றியுள்ளது.

திரிபுராவில் இடது முன்னணி அரசாங்கத்தை தோற்கடிப்பதில் பிஜேபி தேசியத் தலைமை கணிசமாக அரசியல் மற்றும் பொருள் ரீதியான வளங்களை முதலீடு செய்திருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. 2013 இல், காங்கிரஸ் சின்னத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 திரிபுரா மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் 7 பேர் கடந்த ஆண்டில் பிஜேபி பக்கம் தாவுவதற்கு ஊக்குவிக்கப்பட்டனர். கடந்த சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கையில், கடந்த ஆண்டில் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட மற்றும் இதுவரை நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக இருந்துவரும் உத்திர பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி பெற்ற வெற்றியைக் காட்டிலும், திரிபுராவில் அது பெற்ற வெற்றி என்பது இன்னும் மிகப்பெரிய கட்சிக் கொண்டாட்டமாக இருக்கும் என மோடி கூறினார்.

2014 தேசிய தேர்தலைப் போல, திரிபுராவில் பிஜேபி அடைந்த வெற்றியானது, இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்கள் மத்தியில் இந்து வலதுசாரிகளுக்கு ஆதரவாக திரண்டதன் விளைபொருள் அல்ல. மாறாக, ஆழ்ந்த பொருளாதார துன்பங்கள் மற்றும் பெருகிவரும் சமூக சமத்துவமின்மை, மேலும் பாரம்பரியமாக முற்போக்கு அல்லது இடது என அடையாளம் காணப்பட்ட கட்சிகளான காங்கிரஸ், அத்துடன் ஸ்ராலினிச கட்சிகள் மீதான நம்பிக்கையற்ற வாக்கு ஆகியவற்றின் மீதான பெரும் வேதனைமிக்க ஓலமாகவே அது இருந்தது. “மனிதாபிமானம் மிக்க” நவ தாராளவாத “சீர்திருத்தம்” குறித்த அவர்களது வாக்குறுதிகள் அனைத்தும் வெற்றுத்தனமானவை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், வளர்ச்சி கண்டு வரும் இந்து மேலாதிக்கவாத பிஜேபி தற்போது காங்கிரஸை முதலாளித்துவத்தின் பிரதான கட்சி என்ற நிலையிலிருந்து தெளிவாக மாற்றியமைத்துள்ளது, இதனை தொழிலாள வர்க்கம்  ஒரு புதிய பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசரத் தேவைக்கான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் –அதாவது தொழிலாள வர்க்கம், ஸ்ராலினிச கட்சிகளான சிபிஎம் மற்றும் சிபிஐ உள்ளிட்ட முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் அதனை முறித்துக்கொண்டும், மேலும், சோசலிச கொள்கைகளுக்கு உறுதிபூண்ட ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கான போராட்டத்திற்கு பின்னால் அது உழைக்கும் மக்களை அணிதிரட்ட வேண்டும்.

ஸ்ராலினிஸ்டுகள், அவர்களது பங்கிற்கு, திரிபுராவில் தங்களது தோல்விகளை பயன்படுத்தி, பிஜேபி இன் வளர்ந்துவரும் அரசியல் சக்தி “அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஐக்கியப்படுத்த வேண்டும்” என்பதை எடுத்துக் காட்டுவதாக கூறி மேலும் வலதை நோக்கி நகர்வதற்கான ஒரு விவாதத்தை முன்வைக்க எண்ணியுள்ளனர். அதாவது பிஜேபி இன் வலதுசாரி அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் “ஜனநாயக” இந்தியாவின் அழுகிப்போய்க்கொண்டிருக்கும் அரசு அமைப்புகளுக்கு பின்னால் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காகும்.

அடுத்த மாதம் ஹைதராபாத்தில் சிபிஎம் இன் தேசிய மாநாடு நடைபெறவிருக்கையில், காங்கிரஸ் கட்சியுடன் தங்களது கூட்டணியை எவ்வாறு புதுப்பித்துக்கொள்வது என்பது குறித்து கட்சித் தலைமை ஆழமாக பிளவுபட்டுள்ளது – அதனை இடது முன்னணி 1991 மற்றும் 1995 இற்கு இடையிலும், மேலும் மீண்டும் 2004 முதல் 2008 வரையிலும் அதிகாரத்தில் நீடிக்க வைத்தது.

பொதுச் செயலாளர் யெச்சூரி, 2016 மேற்கு வங்க மாநில தேர்தல்களில் காங்கிரசுடன் சேர்ந்து சிபிஎம் அமைத்த வெளிப்படையான தேர்தல் கூட்டணியின் பாதையையே பின்பற்றி காங்கிரசுடன் ஒரு “புரிதலை” ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறார். இந்நிலையில் அவரை, அவரது முன்னோடி பிரகாஷ் காரத்தும் மற்றும் வெளியேறும் சிபிஎம் அரசியல் குழுவின் பெரும்பான்மையினரும் எதிர்க்கின்றனர். அவர்கள் ஒரு மாறுபட்ட வலதுசாரி போக்கை ஆதரிக்கிறார்கள் — தமிழ்நாட்டில் தி.மு.க. வைப் போன்று, பல்வேறு பிராந்தியக் கட்சிகளுடனான ஒரு கூட்டணியை உருவாக்க, அதாவது இந்த கட்சிகள் அவர்களே காங்கிரசுடன் ஒரு தேர்தல் கூட்டணியை அமைத்திருந்தாலும் கூட.

இரு கன்னைகளுமே, பிஜேபி அரசாங்கத்தின் தோல்வியே அவர்களது முக்கியமான உடனடி இலக்காக இருப்பதை அறிவித்துள்ளன, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஒரு அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவர உதவுவதற்கு அவர்கள் தயாராக இருப்பதை சமிக்ஞை செய்துள்ளனர். ஆனால் காரத் பிரிவினர், வாக்குகள் எண்ணப்படும் வரை காங்கிரஸூக்கான ஆதரவை குறைவாகவே வெளிப்படுத்தப்பட வேண்டுமென விரும்புகின்றனர், இல்லையெனில் ஸ்ராலினிஸ்டுகளின் “எதிர்ப்பு” நற்சான்றுகள் இன்னும் கூட கடும் சேதத்திற்கு உள்ளாகும் என அஞ்சுகின்றனர்.

சிபிஎம் இன் மேற்கு வங்க மாநில மூத்த தலைவர் ஒருவர், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தவறியது பற்றி செய்தி ஊடகத்தில் கடுமையாக புகார் கூறினார். மேலும், “திரிபுரா முடிவுகள்”, “பிஜேபி ஐ தோற்கடிப்பதற்கு அனைத்து பிஜேபி விரோத சக்திகளையும் ஒருங்கிணைக்க இடது முன்னணி கண்டிப்பாக முயலவேண்டும் என்பதை தெளிவாக காட்டியிருப்பதாக” அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதான ஆளும் கட்சியாக சமீபகாலம் வரை இருந்த கட்சியுடன் மீண்டும் ஒருமுறை வெளிப்படையாக ஒருங்கிணையுமாறு அதன் இடது முன்னணி கூட்டணி மீதான அழுத்தத்தை சிபிஐ அதிகரித்துள்ளது. சிபிஐ இன் தேசிய செயலர் டி.ராஜா, “கம்யூனிஸ்டுகளாக”, “மாறும் நேரங்களையம் சவால்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்... பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஐ ஒருங்கே தோல்வியடையச் செய்வதற்கு ஏற்றவாறு எங்களது மூலோபாயத்தை நாங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். அதனால் தான், எங்களுக்கு ஒரு பரந்த பிஜேபி எதிர்ப்பு முன்னணி தேவைப்படுகிறது” என அறிவித்தார்.