ஏனைய மொழிகளில்

Print Version|Feedback
Trump, risking trade war, signs off on steel and aluminium tariffs

வர்த்தகப் போர் ஆபத்து சகிதமாக ட்ரம்ப் உருக்கு மற்றும் அலுமினியம் மீதான சுங்கவரிவிதிப்பில் கையெழுத்திட்டார்

By Nick Beams
9 March 2018

உருக்கு இறக்குமதியின் மீது 25 சதவீதமும் அலுமினிய இறக்குமதியின் மீது 10 சதவீதமும் சுங்கவரி விதிக்கின்ற ஒரு பிரகடனத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார், இன்னும் 15 நாட்களில் இது அமலுக்கு வரவிருக்கிறது.

ஸ்மூட்-ஹாவ்லி சுங்கவரி விதிப்பு சட்டம் (Smoot-Hawley Tariff Act) கையெழுத்திடப்பட்டதானது உலகெங்கிலும் பெருமந்தநிலையை தீவிரப்படுத்த உதவி செய்த நிகழ்வு நடந்து 85 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர், போருக்குப் பிந்தைய ஒழுங்கின் பொறிவுக்கு முகம்கொடுக்கின்ற அமெரிக்க ஆளும் உயரடுக்கானது, உலகப் போரின் வரவேற்பறையாக இருக்கக் கூடிய பாதுகாப்புவாதத்தை நோக்கி மறுபடியும் திரும்பிக் கொண்டிருக்கிறது. சீனா மட்டுமல்லாது, ஐரோப்பிய ஒன்றியமும் மற்ற அமெரிக்கக் கூட்டாளிகளும் கூட பதிலடி தருவதற்கு சூளுரைத்திரைக்கின்றன, இது “பெரும் சக்திகள்” இடையிலான இராணுவ மோதல் அதிகரித்துச் செல்வதை துரிதப்படுத்த மட்டுமே செய்யத்தக்க ஒரு பகிரங்கமான வர்த்தகப் போராக உருமாறுவதற்கு அச்சுறுத்துகிறது.

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (North America Free Trade Agreement - NAFTA) திருத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய இரு நாடுகளும் அமெரிக்க கோரிக்கைகளுக்கு தலைவணங்குவதற்கு நெருக்குதல் கொடுக்கும் பொருட்டு அந்த இரண்டு நாடுகளுக்கும் இந்த ஷரத்துகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

நேற்று பிரகடனத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியின் போது பேசிய ட்ரம்ப், “கனடா மற்றும் மெக்சிகோவுடன் நமது உறவின் தனித்துவமான தன்மையின் காரணத்தால்”, “NAFTAவில் நம்மால் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு முடிகிறதா” என்று காண்பதற்காக அந்த இரண்டு நாடுகளின் மீது சுங்கவரி விதிப்பில் அமெரிக்கா பொறுமை காக்கவிருப்பதாக தெரிவித்தார். ஆயினும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றால் “அப்போது நாம் NAFTA ஐ முடிவுக்குக் கொண்டுவருவோம், அத்தனையையும் முதலிலிருந்து தொடங்குவோம்” என்று அவர் எச்சரித்தார். ஒரு உடன்பாடு எட்டப்பட்டதென்றால் அப்போது அந்நாடுகளின் மீது எந்த சுங்கவரி விதிப்பும் இருக்காது.

சுங்க வரிவிதிப்புகளை அறிவித்த சமயத்தில், அவரது நடவடிக்கைகளை வழிமொழிகின்ற தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் ட்ரம்பை சூழ்ந்து நின்றிருந்தனர். ஐக்கிய உருக்காலை தொழிலாளர்கள் சங்கத்தின் -இதன் தலைவரான லியோ ஜெரார்ட் ட்ரம்ப்பின் வர்த்தகப் போர் நடவடிக்கைகளை வாயார வழிமொழிந்திருக்கிறார், “அமெரிக்காவின் உருக்கு மற்றும் அலுமினிய தொழிற்சாலைகளை பாதுகாப்பதற்கு” அவை அவசியமானவை என்று வாதிட்டார்- பிரதிநிதிகளும் இதில் இடம்பெற்றிருந்தனர்.

பிரகடனத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் கூறிய கருத்துக்கள் அவரது 2016 பிரச்சாரம் மற்றும் அவரது பதவியேற்பு உரை ஆகியவற்றில் இருந்த முரட்டுத்தனமான பேசுபொருட்களின் வரிசையில் இருந்தன. “உருக்கு மற்றும் அலுமினியத்தின் மீதான வெளிநாட்டு இறக்குமதிகள் மீது சுங்கவரிகள் விதிப்பதன் மூலமாக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பை இன்று நான் காத்து நிற்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

மார்ச் 1 அன்று இதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் ஒரு வார காலம் மோதல் நடந்திருப்பதன் பின்னர் இந்தப் பிரகடனம் வந்துசேர்ந்திருக்கிறது. ட்ரம்ப்பின் தேசியப் பொருளாதார குழுவின் தலைவராக இருந்த காரி கோன், இந்த நடவடிக்கைகளுக்கான தனது எதிர்ப்பில் இந்த வாரம் இராஜினாமா செய்தார், வெள்ளை மாளிகை தேசிய வர்த்தக கவுன்சிலின் இயக்குநரான பீட்டர் நவரோ தலைமையிலான பொருளாதார தேசியவாத “முதலில் அமெரிக்கா” முன்மொழிவாளர்களிடம் அவர் தோற்று விட்டிருந்தார். நவரோ ஜேர்மனி மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளின் வர்த்தகக் கொள்கைகளுக்கும் கடுமையான ஒரு விமர்சகராக அறியப்படுபவராவார்.

NAFTA பேச்சுவார்த்தைகள் விடயத்தில் கனடா மற்றும் மெக்சிகோ மீது தொங்குகின்ற மிரட்டல் தவிர, இந்த பிரகடன அறிவிப்பானது, சுங்கவரி விதிப்பில் இருந்து விலக்கு பெற விரும்புகின்ற நாடுகள் அமெரிக்காவிற்கு தலைவணங்கிச் செல்கின்றதும் அமெரிக்காவிடம் கெஞ்சுகின்றதுமான நிலைமைகளை உருவாக்குகிறது. ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் இந்த சலுகைகளைப் பெற இயலக்கூடும் என்றாலும் இச்சலுகைகள் முக்கியமான ஒரு உருக்கு ஏற்றுமதி நாடான தென்கொரியாவுக்கு நீட்டிக்கப்படுவதற்கு சாத்தியம் குறைவே, ஏனென்றால் அந்நாடு சீன உருக்குக்கு பாய்வுப்பாதையாக செயல்படுகிறது என்று நிர்வாகம் கருதுகிறது.

“நாம் நமது உருக்கு மற்றும் அலுமினிய தொழிற்துறைகளை பாதுகாக்கின்ற மற்றும் கட்டியெழுப்புகின்ற அதேநேரத்தில், நமது உண்மையான நண்பர்களை நோக்கி பெரும் நெகிழ்வையும் ஒத்துழைப்பையும் காட்ட வேண்டியிருக்கிறது” என்று கையெழுத்திடும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் தெரிவித்தார்.

நாளில் முன்னதாக நேட்டோவுக்கு போதுமான பங்களிப்பு செய்யாததற்காக ஜேர்மனியை அவர் விமர்சனம் செய்த ஒரு அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னரும் சரி, கையெழுத்திடும்போதும் சரி, இரண்டு சந்தர்ப்பங்களிலுமே ட்ரம்ப் கூறிய கருத்துக்களில், அட்லாண்டிக்-கடந்த உறவுகளில் விரிசல் அதிகரித்துச் செல்வதைக் குறிக்கின்ற வகையில் ஐரோப்பாவுக்கு காட்டிய குரோதம் ஒரு அம்சமாக இருந்தது. “வர்த்தக மற்றும் இராணுவ விடயங்களில் மிக மோசமானதாக இருந்து வந்திருக்கும் நாடுகளில் பலவும்” நமது கூட்டாளிகளாக அல்லது அவ்வாறு தங்களை அழைத்துக் கொள்ள விரும்பியவையாக இருந்தன என்று அவர் கூறினார்.

சுங்கவரிவிதிப்புகள் குறித்த ஆரம்பகட்ட மார்ச் 1 அறிவிப்பைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் அது பதிலடி நடவடிக்கைகளைக் கொண்டுவரக் கூடிய சாத்தியத்தை எழுப்பிய சமயத்தில், ட்ரம்ப் சென்ற சனிக்கிழமையன்று ஒரு ட்வீட்டில் இவ்வாறு பதிலிறுப்பு செய்தார்: “ஐரோப்பிய ஒன்றியமானது அங்கே வணிகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் மீது ஏற்கனவே சுமத்தி வந்திருக்கின்ற பாரிய சுங்கவரி விதிப்புகள் மற்றும் முட்டுக்கட்டைகளை மேலும் அதிகரிக்க விரும்புமேயானால், நாங்கள் அமெரிக்காவிற்குள் பாய்வு காணும் அவர்களது கார்கள் மீது ஒரு வரியை விதிக்க வேண்டியது தான். எங்களது கார்கள் (மற்றும் நிறைய) அங்கே விற்பனையாவதை அவர்கள் சாத்தியமற்றதாக்குகிறார்கள்.”

ஃபிராங்பேர்ட்டில் நேற்று நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரான மரியோ ட்ராஹி ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் குறித்து ஆட்சேபம் எழுப்பினார். “எனக்கு என்ன திகைப்பூட்டுகிறது என்றால், வர்த்தகம் குறித்து உங்களுக்கு என்ன உறுதிப்பாடுகள் இருப்பினும் கூட, அந்த பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு ஒரு பலதரப்பு நடைமுறையில் தீர்க்கப்பட வேண்டும் என்றே நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஒருதரப்பான முடிவுகள் ஆபத்தானவை.”

“சர்வதேச உறவுகளின் நிலை குறித்து ஒரு குறிப்பிட்ட அக்கறை அல்லது கவலை வருகிறது, ஏனென்றால் நீங்கள் உங்கள் கூட்டாளிகள் மீது சுங்கவரிகளை விதிக்கிறீர்கள் என்றால், அப்படியானால் உங்கள் எதிரிகள் யார் என்று ஒருவர் யோசிக்கும்படியாகிறது” என்று அவர் தெரிவித்தார்.

வர்த்தகச் செயலாளரான வில்பர் றோஸ் புதன்கிழமையன்று ஃபாக்ஸ் பிசினஸ் நெட்வொர்க்கிடம் கூறிய கருத்துக்களிலும் ஐரோப்பாவை நோக்கிய குரோதம் வெளிப்பட்டது, 1962 அமெரிக்கச் சட்டத்தின் ஒரு பிரிவின் கீழான “தேசிய பாதுகாப்பு” ஷரத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் சுங்கவரி விதிப்புகள் உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளை மீறியிருப்பதாக எழும் விமர்சனத்திற்கு அவர் பதிலளித்தார்.

“நமது சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அத்தனையையும் போலவே, நமது WTO ஒப்பந்தமும், தேசியப் பாதுகாப்புக்கென ஒரு தனியான செதுக்கலைக் கொண்டிருக்கிறது. நமது தேசிய பாதுகாப்பு என்ன என்பதை நமக்கு வரையறை செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சற்று துணிச்சல் தேவை என்றே நான் நினைக்கிறேன்” என்றார்.

பிரகடனத்துக்குப் பின்னர் CNBC இல் நேர்காணல் செய்யப்பட்ட போது, உருக்கு மற்றும் அலுமினிய சுங்கவரி விதிப்பு நடவடிக்கைகளுக்கான பதிலடி நடவடிக்கைகள் எதிர்கொள்ளப்படுமாயின் ஐரோப்பாவின் கார்கள் மீது 25 சதவீத சுங்கவரி விதிப்பதற்கு நிர்வாகம் கொண்டிருக்கக் கூடிய திட்டங்கள் குறித்து றோஸ்ஸிடம் கேட்கப்பட்டது. றோஸ் குறிப்பான அம்சங்களை விவாதிக்க மறுத்து விட்டார், ஆயினும் “நிறைய விஷயங்களை நாங்கள் பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம்” என்பதைத் தெரிவித்தார்.

ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் மீதான விமர்சனக் குரல் குடியரசுக் கட்சிக்குள்ளாகவும் கூட எழுப்பப்பட்டிருக்கிறது, ஆயினும் அந்தக்குரல், இந்த சுங்கவரி விதிப்புகளும் மற்ற நடவடிக்கைகளும் சீனாவை நோக்கி ஏவப்பட வேண்டுமே அன்றி அமெரிக்கக் கூட்டாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் இருந்து எழுப்பப்படுகிறது.

அவையின் குடியரசுக் கட்சியை சேர்ந்த 107 பேர், ட்ரம்ப்பின் நடவடிக்கைகளை எதிர்க்கின்ற ஒரு கடிதத்தை புதன்கிழமை விடுத்திருப்பதை ஒட்டி, அவையின் குடியரசுக் கட்சியின் சபாநாயகரான போல் ரியான், ட்ரம்ப்பின் பிரகடனத்தை எதிர்க்கும் அறிக்கையை வெளியிட்டார்.

இந்த நடவடிக்கையில் உடன்பாடு இல்லை என்றும், இதன் “எதிர்பார்க்கவியலாத பின்விளைவுகள்” குறித்து அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி சில அமெரிக்கக் கூட்டாளிகளுக்கு விலக்கு சேர்த்திருப்பதைக் கொண்டு “மகிழ்ச்சி” வெளியிட்ட அவர், அது இன்னும் மேலதிகமாக நீட்சி காண வேண்டுமென்றார்.

“சீனா போன்ற நாடுகளின் மோசமான நடத்தைகள்” குறித்து குறிப்பாக மேற்கோளிட்டு அவர், “வர்த்தக சட்டத்தை மீறுகின்ற நாடுகளின் மீது மட்டுமே கவனம் குவிக்கின்றதான வகையில் இந்தக் கொள்கையை மேலும் குறுக்க வேண்டும் என்று நாங்கள் நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்றார்.

இதுவரையிலும் சீனாவின் பதிலிறுப்பு என்பது, அதிகாரிகள் ஒரு பதிலிறுப்பு குறித்து பொதுவான எச்சரிக்கைகள் விடுப்பதும், உலக வர்த்தக முறையின் விதிகளைக் கைவிடுவதன் அபாயங்களை சுட்டிக்காட்டுவதுமாக, ஒப்பீட்டளவில் சத்தம்குறைந்ததாகவே இருக்கிறது.

தேசிய மக்கள் காங்கிரசின் வருடாந்திர அமர்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய சீனாவின் வெளியுறவு அமைச்சரான வாங் யீ, சீனாவைக் குறிவைத்தான எந்த நடவடிக்கையும் “ஒரு நியாயமான மற்றும் அவசியமான பதிலிறுப்பை” கொண்டுவரும் என்றார், பாதுகாப்புவாதத்தின் வளர்ச்சியானது உலகப் பொருளாதாரத்தையும் அத்துடன் அமெரிக்காவையும் சேதப்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.

“ஒரு வர்த்தகப் போர் என்பது ஒருபோதும் சரியான தீர்வு கிடையாது” என்றார் அவர். “விளைவு எல்லோருக்குமே தீங்கிழைப்பதாக இருக்கும்.”

உயர்-தொழில்நுட்ப மற்றும் புத்திஜீவித சொத்து விடயத்தில் அமெரிக்க நலன்களுக்கு தீங்கிழைப்பவையாகக் கருதப்படுகின்ற சீன நடைமுறைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு 1974 வர்த்தக சட்டத்தின் பிரிவு 301 இன் கீழ் ட்ரம்ப் நிர்வாகம் எடுக்க பரிசீலித்து வரும் நடவடிக்கைகளின் விளைவுகள் தான் சீனாவுக்கான முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது.

பதிலிறுப்பு என்னவாக இருக்கும் என்பதன் ஒரு முக்கியமான அறிகுறி, சான் டியகோவை தளமாகக் கொண்டு இயங்கும் தொழில்நுட்ப நிறுவனமான குவால்காம் (Qualcomm) ஐ சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனமான பிராட்காம் (Broadcom) கையகப்படுத்த ஆலோசிக்கப்படுவதற்கு எதிராக, தேசிய பாதுகாப்பு முகாந்திரங்களைக் காரணமாக்கி, எச்சரிக்கை விடுக்கும் ஒரு பகிரங்க கடிதத்தை வெளியிட்டு இந்த வாரத்தில் வெளிநாட்டு முதலீட்டு கமிட்டி (CFIUS) செய்த தலையீட்டின் மூலமாக வழங்கப்பட்டிருந்தது.

குவால்காம் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கு கம்ப்யூட்டர் சிப்கள் தயாரிக்கும் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாகும், 5ஜி நெட்வொர்க் அபிவிருத்தி சம்பந்தமான ஆராய்ச்சியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பிராட்காமின் கையகப்படுத்தலானது குவால்காமின் நீண்டகால தொழில்நுட்ப போட்டித்திறனைக் குறைத்து விடும் என்றும், “அமெரிக்க தேசிய பாதுகாப்பை கணிசமாய் பாதிக்கும்” என்றும், “5ஜி நிர்ணயங்களை அமைப்பதில் சீனா தனது செல்வாக்கை விரிப்பதற்கான ஒரு பாதையை திறந்து விடும்” என்றும் CFIUS கூறியது.

“தேசிய பாதுகாப்பு” கவலைகளை மேற்கோளிட்டமையானது —உருக்கு மற்றும் அலுமினியம் விடயத்தில் ட்ரம்ப்பினால் கையிலெடுக்கப்பட்ட அதே கோட்பாடு— அமெரிக்காவால் இயக்கமளிக்கப்படுகின்ற வளர்ந்துசெல்லும் வர்த்தகப் போரானது இராணுவவாதத்தின் வளர்ச்சியுடனும் பெருகும் போர் அபாயத்துடனும் பிரிக்கவியலாமல் பிணைந்துள்ளது என்ற உண்மையை சுட்டிக்காட்டுகிறது.