ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan president declares emergency rule amid violence against Muslims

இலங்கை ஜனாதிபதி முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு மத்தியில் அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்கின்றார்

By K. Ratnayake 
7 March 2018

இலங்கை அரசாங்கம் நேற்று நாடு முழுதும் அவசர கால நிலையை அறிவித்ததுடன் அது 7 நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தப் பிரகடனம் "நாட்டில் சில பகுதிகளில் நிலவும் திருப்தியற்ற பாதுகாப்பு நிலைமைகளை சீர்படுத்தும்" என்றும், "குற்றவியல் சக்திகளை சமாளிக்க போதுமானளவு அதிகாரம்" பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.

உழைக்கும் மக்களின் சமூக எதிர்ப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை கண்மூடித்தனமாக அடக்குவதற்கு இத்தகைய அதிகாரங்களை பயன்படுத்துவதில் இலங்கை பொலிஸ் மற்றும் ஆளும் தட்டு பேர் போனதாகும்.

மத்திய கண்டி மாவட்டத்தில் தெல்தெனிய, திகன மற்றும் பல்லேகலவில் சிங்கள பௌத்த இனவாத கும்பல் நடத்திய முஸ்லிம்-விரோத வன்முறைகளே இந்தப் பிரகடனத்தின் உடனடிக் காரணம் ஆகும். திங்கள், செவ்வாய் மற்றும் புதன் இரவும் முழு கண்டி மாவட்டத்தை உள்ளடக்கும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் படி அமுல்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் நேற்று காலை 1,000 பொலிஸ் அலுவலர்கள், 200 விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் மற்றும் 200 சிப்பாய்களையும் நிலை நிறுத்தியது.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறையானது சிக்கன நடவடிக்கை திட்டத்தின் மீது தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்பை திசை திருப்ப இலங்கை ஆளும் வர்க்கத்தால் தூண்டிவிடப்பட்டு வருகிறது. கூர்மையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் தமது கைகளை வலுப்படுத்திக்கொள்ள இந்த இனவாத ஆத்திரமூட்டல்களை சுரண்டிக்கொள்கின்றது.

சிங்கள வாகன சாரதியான எச்.குமாரசிங்கவின் மரணத்தின் பின்னர், இந்த கும்பல் வன்முறை ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது. பெப்ரவரி 22 அன்று, மூன்று சக்கர வாகனத்தில் பயணம் செய்த நான்கு பேர் குமாரசிங்கவை ஒரு சர்ச்சையின் போது தாக்கினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குமரசிங்க சனிக்கிழமை மரணமடைந்தார். ஞாயிற்றுக்கிழமை அவரது இறுதிக் கிரியைகள் நடந்தன.

சம்பவம் ஒரு இனவாத மோதல் அல்ல. இருப்பினும், அது முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டுவதற்காக பயன்படுத்தப்பட்டது. இந்த தாக்குதல்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டன. இதில், பல ஆண்டுகளாக தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத ஆத்திரமூட்டல்களுக்கு பேர் போன பாசிச பொது பல சேனா உடந்தையாக இருந்துள்ளது.

பௌத்த துறவியான பொதுபல சேனா தலைவர் கலேகொட அத்தே ஞானசாரா, சவ அடக்கத்திற்குப் பின்னர் இரவு குமரசிங்கவின் வீட்டிற்கு சென்றுள்ளார். பொதுபல சேனாவின் பிரதான நிர்வாகி திலந்த விதானகே, "அமைதியாக இருக்குமாறு" ஞானசார மக்களிடம் வேண்டுகோள் விடுத்ததாக கேலிக் கூத்தாக கூறிக்கொண்டார்.

அன்று இரவில், குறைந்தபட்சம் மூன்று டசின் வீடுகள், 46 கடைகள் மற்றும் 35 வாகனங்கள் பிரதேசத்தில் எரித்து நாசமாக்கப்பட்டன. பல பௌத்த துறவிகள் தெருக்களில் குண்டர்களுடன் திரிந்ததை காணக்கூடியதாக இருந்தது. இன்னொரு பொதுபல சேனா தலைவரான அம்பிட்டியே சுமனாத்தன மட்டக்களப்பில் இருந்து வந்திருந்தார்.

பிரதமர் விக்கிரமசிங்க, அவசரகால பிரகடனம் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் அறிவித்த போது, 25 வயதான முஸ்லிம் இளைஞரின் சடலம் எரிந்த வீட்டிற்குள் காணப்பட்டதாக தெரிவித்தார்.

ஒரு முஸ்லீம் அரசாங்க அமைச்சரான ரிஷாட் பதியூதீன், பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், அந்த பகுதியில் வசிக்கும் மக்களை தங்கள் கடைகளை மூடிவிட்டு வீடுகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தியதாக, தெரிவித்தார். குடியிருப்பாளர்கள் வீட்டில் இருந்தபோது, ​​அவர்களது கடைகள் எரிக்கப்பட்டன. குண்டர்கள் தாக்குதலை நடத்தியது பொலிசார் சும்மா பார்த்துக் கொண்டு நின்றதாக ஒரு கண்கண்ட சாட்சி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கடந்த 2009ல் தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால தமிழர்-விரோத போரின் போது உட்பட, முன்னர் வெடித்த இனவாத வன்முறைகளின் போது, சிங்கள குண்டர் கும்பல்களுக்கு இதேபோன்ற அனுதாபத்தை பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் காட்டியுள்ளனர்.

சமீபத்திய வன்முறை ஒரு வாரத்தில் முஸ்லீம்கள் மீதான இரண்டாவது தாக்குதல் ஆகும். பெப்ரவரி 26 அன்று, கிழக்கில் அம்பாறையில் ஒரு ஹோட்டலில் ஆத்திரமூட்டலில் ஈடுபட்ட ஒரு குண்டர் கும்பல், சிங்கள வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் உணவில் கருத்தடை மாத்திரைகளை கலந்ததாக கூறுமாறு ஒருவரை கட்டாயப்படுத்தியுள்ளது. அவர்கள் ஹோட்டலின் உரிமையாளரைத் தாக்கி பொலிஸுக்கு தகவல் கொடுத்தனர். பொலிஸ் அவரை கைது செய்துள்ளது. சுமார் 100 குண்டர்கள் பல கடைகள் தாக்கினர்.

பல சிங்கள பௌத்த அதிதீவிரவாத அமைப்புகள் இலங்கையில் இயங்குகின்றன. பொதுபல சேனாவுக்கு மேலாக, சிஹல ரவய மற்றும் இராவண பலகாயவும் இதில் அடங்கும். இந்த குழுக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆட்சியை ஆதரித்தன.

பொதுபல சேனா 2014 ஜூனில், தெற்கு நகரமான அளுத்கமவில், நாடெங்கிலும் இனவாத பதட்டங்களை உக்கிரமாக்கிய, நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதலை நடத்தி, இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் மீது பெருகிவந்த வெகுஜன எதிர்ப்பை திசை திருப்பவும் பிளவுபடுத்தவும் உதவியது.

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்திய பின்னர், இலங்கை அரசாங்கம் இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கு அர்ப்பணித்துக்கொண்டுள்ளது என தெரிவித்தார். குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அல்லது இனவாத அமைதியின்மையை தூண்டிவிடும் அனைவரும் கடுமையாக நடத்தப்படுவார்கள் என்று மக்களுக்கு அவர் உறுதியளித்தார். விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் இதேபோன்ற கருத்தை வெளியிட்டார்.

இத்தகைய அறிக்கைகள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை. இருவரும் பதவி ஏற்ற சமயத்தில் மத மற்றும் இனவாத தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி சுதந்திரமாக இயங்கி வருகின்ற பேரினவாத குழுக்களை சாந்தப்படுத்துகின்றனர். 2016 ஜனவரியில், முஸ்லிம் மற்றும் தமிழர்களுக்கு எதிரான பொதுபல சேனாவின் புகார்களை கேட்க அதன் தலைவர்களை சிறிசேன சந்தித்தார்.

ஏழு ஆண்டுகளில் இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது இது முதல் தடவையாகும். 2011ல் ஜனாதிபதி இராஜபக்ஷ முந்தைய அவசரகால நிலைமையை அற்றிய போதிலும், அதன் பொலிஸ்-அரச அம்சங்களை நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்துடன் இணைத்தார். இராஜபக்ஷ, சீனாவிலிருந்து ஒதுங்கி வாஷிங்டனின் பாதையில் அடியெடுத்து வைக்குமாறு நெருக்குவதன் ஒரு பகுதியாக ஜனநாயக உரிமைகள் மீதான அவரது அடக்குமுறையை பற்றி சிடுமூஞ்சித்தனமாக மேற்கோள் காட்டி வந்த, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பெரும் பூகோள சக்திகளின் அழுத்தத்திற்கு உட்பட்டிருந்தார்.

சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னர் அவசரகால நிலைமையை நாடாவிட்டாலும், அது எரிபொருள் தொழிலாளர்கள் மற்றும் இரயில்வே சாரதிகள் உள்ளிட்ட வேலைநிறுத்தங்களை நசுக்குவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அத்தியாவசிய சேவை விதிமுறைகளை பல முறை அமுல்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் உண்மையான இலக்கானது, தீவிரவாதக் குழுக்கள் அல்ல, மாறாக வாழ்க்கை மற்றும் சமூக நிலைமை மீதான அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிராக போராட்டத்திற்கு வரும் தொழிலாள வர்க்கமே ஆகும். வளர்ந்துவரும் வெகுஜன எதிர்ப்பு அரசாங்கத்தை ஒரு கடுமையான அரசியல் நெருக்கடியில் தள்ளியுள்ளது.

கடந்த மாதம் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஆளும் கூட்டணி பங்காளர்களான சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் பெரும் தோல்வியை சந்தித்தன. இராஜபக்ஷ தலைமையிலான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, பெரும்பான்மை வாக்குகளை வென்று, பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டை வென்றது.

இந்த வாக்களிப்பு அரசாங்கத்திற்கு எதிரானதே அன்றி இராஜபக்ஷவுக்கு ஆதரவானது அல்ல. இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத ஆட்சி 2015ல் அவரது தோல்விக்கு வழிவகுத்தது. சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்தி, வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளை முன்னேற்றுவதாகவும், வடக்கிலும் கிழக்கிலும் யுத்தத்தின் அழிவுகளை எதிர்கொள்ளும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகவும் வாக்குறுதியளித்தே அதிகாரத்திற்கு வந்தனர். இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் அவர்கள் தூக்கியெறிந்து விட்டு, சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆணையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த தயாராகிவிட்டனர்.

ஆட்சிக்கு வருவதற்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை எதிர்த்து நிற்கவும் வலதுசாரி இயக்கத்தை தயார் செய்வதற்கு இராஜபக்ஷ இந்த அதிதீவிரவாத குழுக்களின் ஆதரவை பட்டியலிட்டுள்ளார்.

தொழிலாள வர்க்க அமைதியின்மை தீவிரமடைகிறது. அதன் சமீபத்திய வெளிப்பாடு பெப்ரவரி 28 தொடங்கிய சுமார் 16,000 பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆகும். அரசாங்கம் அவர்களது ஊதிய மற்றும் மருத்துவ கோரிக்கைகளை வழங்க முடியாது என வலியுறுத்துகிறது. இந்த வாரம், சுமார் 3,000 துறைமுக கொள்கலன் சாரதிகள், சிறந்த நிலைமைகளை கோரி வேலைநிறுத்தம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டங்கள், சர்வதேச ரீதியில் தொழிலாள வர்க்கத்தின் தீவிரமடைதலின் ஒரு பகுதியாகும். இது ஒட்டு மொத்த ஆளும் வர்க்கத்தையும் நடுங்கச் செய்துள்ளது.

நிதி உயரடுக்கு, மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன கொள்கைகளில் இருந்து அரசாங்கம் பின்வாங்க கூடாது என அழுத்தம் கொடுத்து வருகின்றது. மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாஸ்வாமி, "அசையாமல் நகருமாறு" அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். "எங்களுக்கு எந்தவொரு எல்லையும் கிடையாது, எங்களுக்கு நிதி இடைவெளி இல்லை, வெளிநாட்டுக் கணக்கில் எமக்கு எந்தவொரு அடிதாங்கியும் கிடையாது -ஆகவே நாங்கள். விளிம்பில் இருக்கின்றோம்," என்றார்.

தீவிர அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் முதலாளித்துவ வர்க்கம், அதன் ஆட்சியை பாதுகாக்க பொலிஸ்-அரச வழிமுறைகளை நாடுகிறது. இந்த அபிவிருத்திகள் தொழிலாள வர்க்கத்திற்கு முன் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன. முதலாளித்துவத்திற்கு எதிரான சர்வதேசப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிசக் கொள்கைகளுக்கு போராடுவதற்கு, கிராமப்புற வறியவர்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டுவதன் பேரில், ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலும் இருந்து தொழிலாளர்கள் விலகிக்கொள்ள வேண்டும்.