ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sisi’s sham election and the fate of the Egyptian Revolution

சிசியின் ஏமாற்றுத் தேர்தலும் எகிப்தியப் புரட்சியின் தலைவிதியும்

Bill Van Auken
30 March 2018

2013 இல் ஒரு இரத்தக்களரி ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்திற்கு வந்த ஜெனரல் அப்துல் ஃபதா அல்-சிசியின் அமெரிக்க-ஆதரவு சர்வாதிகாரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எகிப்தின் மூன்று-நாள் மோசடித் தேர்தலில் புதனன்று வாக்குப்பதிவு முடிவடைந்தது.

உத்தியோகபூர்வ முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், முடிவு என்னவாக இருக்கும் என்பதில் ஒருபோதும் சந்தேகமிருக்கவில்லை. சிசி 90 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பதாகவும், அவரை எதிர்த்து தனியாகப் போட்டியிட்ட அதிகம் அறியப்படாத ஆட்சி-ஆதரவு அரசியல்வாதியான மவுஸா முஸ்தபா மவுஸா வெறும் 3 சதவீத வாக்குகளையே பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் நாடகத்துக்கு முறைப்படி நடப்பதான ஒரு தோற்றத்தைக் கொடுப்பதற்காக மவுஸா போட்டியில் களமிறக்கப்படுகின்ற வரை அவரேயும் சிசி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை பகிரங்கமாக ஆதரித்திருந்தார். எகிப்தின் இராணுவப் படைகளில் இருந்த முன்னணி ஆளுமைகள் உள்ளிட சிசிக்கு உண்மையான சவாலை அளித்திருக்கக் கூடிய வேட்பாளர்கள் மிரட்டப்பட்டனர், அச்சுறுத்தப்பட்டனர், அத்துடன் குறைந்தபட்சம் ஒருவரின் விடயத்தில், போட்டியிடுவதில் இருந்து தடுக்கப்படுகின்ற வண்ணமாக சிறையிலடைக்கப்பட்டனர்.

பதிவான கிட்டத்தட்ட அத்தனை வாக்குகளுமே சர்வாதிகாரிக்கே கிட்டியிருக்கும் அதேவேளையில், தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் சென்ற முறை 2014 இல் பதிவானதை விடவும் கணிசமாகக் குறைவாகப் பதிவாகியிருக்கிறது. 40 சதவீதத்துக்கு அதிகமாக வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக அரசாங்கம் கூறிய போதிலும், இது 30 சதவீதத்துக்கு நெருக்கமாகவே இருக்கும் என்பதாய் மற்ற ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன, இளைஞர்கள் பெருமளவில் வாக்களிப்பை புறக்கணித்திருந்தனர். அனைத்துக் கணக்குகளையும் கொண்டு பார்த்தால், வாக்களிக்கத் தகுதியுடைய 60 மில்லியன் வாக்காளர்களில் 25 மில்லியனுக்கும் குறைவானவர்களே வாக்களிக்க வந்திருந்தனர்.

வாக்குப்பதிவின் மூன்றாவது நாளான புதன்கிழமையன்று வாக்குச்சாவடிகள் பெருமளவில் காலியாகக் கிடந்தன, வாக்காளர்களை வாக்களிக்கச் செய்வதற்கு அச்சுறுத்துவதற்கும் கையூட்டு அளிப்பதற்குமான ஒரு அசாதாரணமான பிரச்சாரத்தை ஆட்சி நடத்தியது. பதிவு பெற்ற வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை என்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவிருப்பதாக அரசாங்க அதிகாரிகள் மிரட்டினர், நிறுவன முதலாளிகள் தமது தொழிலாளர்களை பேருந்துகளில் வாக்களிக்க அனுப்பினர், சில இடங்களில் வாக்களிக்காதவர்கள் வேலையை விட்டு நீக்கப்படவிருப்பதாகவும் கூட அச்சுறுத்தப்பட்டனர். இன்னொரு பக்கத்தில், வறுமை நிறைந்த அருகாமைப்பகுதிகளில், வாக்களிப்பவர்களுக்கு ரொக்கப் பணமும் ரேஷன் உணவுப்பொருட்களும் அளிக்கப்படவிருப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்டு, வாக்களிக்க அழைத்து வருவதற்கு டிரக்குகள் அனுப்பப்பட்டன. சில பகுதிகளில், 40 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் வாக்களிப்பு இருக்கும் பகுதிகளில் பொதுப் பணித் திட்டங்கள் நடக்கும் என்று அதிகாரிகள் வாக்குறுதியளித்தனர்.

இந்த நிலைமைகளின் கீழும் எகிப்திய வாக்காளர்கள் பெருமளவில் வாக்களிக்க வராமையானது மக்களின் பரந்த பிரிவுகளின் மத்தியில் இந்த ஆட்சியின் மீது இருக்கின்ற கொந்தளிக்கும் கோபம் மற்றும் வெறுப்பின் ஒரு பிரதிபலிப்பாக இருக்கிறது.  

நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக பதவிக்கு வந்தது முதலாகவே, சிசி மிருகத்தனமான போலிஸ்-அரசு நடவடிக்கைகளை நடத்தி வந்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டில் முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான முகமது முர்ஸியை தூக்கிவீசி விட்டு, அவரது தொண்டர்கள் 1,600க்கும் அதிகமான பேரை கெய்ரோ வீதிகளில் படுகொலை செய்ததன் மூலமாக இந்த எகிப்திய ஜெனரல் தனது பதவியை வலுப்படுத்திக் கொண்டார்.

அப்போது முதலாக, அரசியல் காரணங்களுக்காக சுமார் 60,000 பேர் சுற்றிவளைக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பலவந்தமாக காணாமல் செய்யப்பட்டிருக்கிறார்கள், ஆட்சியின் சிறைகளில் சித்தரவதை என்பது சாதாரணமாக இருக்கிறது. மாற்று ஊடகங்கள் உள்ளிட எதிர்க்கும் வலைத் தளங்கள் மூடப்பட்டிருக்கின்றன, முக்கியமான ஊடகங்கள் அரசியல் பிரச்சாரத்தை எதிரொலிக்கின்ற வண்ணமாக முற்றிலும் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றன.

2011 பிப்ரவரியில் எகிப்தின் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன எழுச்சியால் தூக்கிவீசப்பட்ட அமெரிக்க-ஆதரவு சர்வாதிகாரியான ஹோஸ்னி முபாரக்கின் கீழ் 30 ஆண்டுகாலம் இருந்ததை விடவும் மோசமாக இன்றைய ஒடுக்குமுறை இருக்கிறது.

இதனிடையே, 2016 இல் கையெழுத்தான 12 பில்லியன் டாலர் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் கீழ் திணிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கின்ற பொருட்டு பெருமளவிலான “சீர்திருத்தங்களை” சிசியின் சர்வாதிகாரம் அமலாக்கியிருக்கிறது.

பெருவணிகங்கள் -எகிப்தின் பொருளாதாரத்தில் 40 சதவீதம் வரை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிற அதன் இராணுவம் உள்ளிட- இலாப அதிகரிப்பைக் கண்டிருக்கின்ற அதேநேரத்தில், தொழிலாள வர்க்கம் நாணயமதிப்புக் குறைப்பு, பணவீக்கம், மானிய வெட்டுக்கள் மற்றும் வரி அதிகரிப்புகளின் காரணத்தால் தனது வாழ்க்கைத் தரத்தில் கடுமையான வெட்டினைக் கண்டிருக்கிறது. எகிப்தின் கிட்டத்தட்ட 100 மில்லியன் மக்களில் சுமார் 40 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 2 டாலருக்கும் குறைவான தொகையில் வாழ்வதற்கு தள்ளப்பட்டிருக்கின்றனர், வேலைவாய்ப்பின்மை குறிப்பாக இளைஞர்களிடம் வியாபித்திருக்கிறது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரத்தின் படி, 18-29 வயதானோரில் சுமார் 26.7 சதவீதம் பேர் வேலைவாய்ப்பற்று இருக்கின்றனர்; உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சமீபத்திய ரஷ்யத் தேர்தல்களை முறையற்றது என்று கண்டனம் செய்த, வெனிசூலாவில் தேர்தல் நடப்பதற்கு முன்பே அதனை ஒரு ஏமாற்றுவேலை என கண்டனம் செய்த அதே அமெரிக்க அதிகாரிகள் எகிப்தின் தேர்தல் முறைகேடுகளுக்கு பெருந்தன்மையான பார்வையை வழங்கியிருக்கின்றனர்.

Chargé d’Affaires தாமஸ் கோல்ட்பேர்கர் ஒரு வாக்குச் சாவடியில் நின்றிருக்கும் ஒரு புகைப்படத்தை திங்களன்று ட்வீட் செய்த அமெரிக்க தூதரகம் அதனுடன் இந்த செய்தியை பதிவிட்டிருந்தது: “எகிப்திய வாக்காளர்களின் இந்த உற்சாகத்தையும் தேசப்பற்றையும் கண்டு அமெரிக்கர்களாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறோம்.”

செவ்வாயன்று வாஷிங்டனில், வெளியுறவுத் துறையின் செய்தித்தொடர்பாளர் “எகிப்தில் ஒரு வெளிப்படையான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட தேர்தல் நடைமுறை”க்கு அமெரிக்கா ஆதரவாக இருப்பதை உறுதிசெய்தார், உண்மையில் அந்நாட்டில் கட்டவிழ்ந்து கொண்டிருக்கின்ற ஊழலடைந்த அவமதிப்பான நிகழ்முறையின் தன்மை குறித்து, இன்னும் தேர்தல் முடியவில்லை என்ற முகாந்திரத்தின் பேரில், அவர் கருத்துக்கூற மறுத்து விட்டார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் சிசி ஆட்சியை முழுமையாக ஆதரிக்கிறது, வருடந்தோறும் 1.3 பில்லியன் டாலர் இராணுவ உதவியை தொடர்ந்தும் அளித்து வருகிறது, இத்தொகையில் இஸ்ரேலுக்கு அடுத்தபடியான இரண்டாவது அதிகப்பட்சத்தை பெறும் நாடாக எகிப்து இருக்கிறது. இந்த உதவிக்கு நாடாளுமன்றத்தால் விதிக்கப்படுகின்ற மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகமுறைகள் குறித்த அடையாள நிபந்தனைகள் எல்லாம் தேசியப் பாதுகாப்பு என்ற பேரில் புறந்தள்ளப்படுவது வழக்கமாக இருக்கிறது, அதற்கு ஜனநாயகக் கட்சியினரோ அல்லது குடியரசுக் கட்சியினரோ எந்த ஆட்சேபமும் தெரிவிப்பதில்லை. “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பேரில் நியாயப்படுத்தப்படுகின்ற அமெரிக்க ஆயுதங்கள் தான் எகிப்திய மக்களுக்கு எதிரான ஒரு பயங்கரம் கோலோச்சப்படுவதற்காய் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சிசியை ஆதரிக்கிற வாஷிங்டன், அதேசமயத்தில் “மனித உரிமைகள்” மற்றும் “ஜனநாயகம்” என்ற பேரில் லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான இரத்தம்பாய்ந்த போர்களை நடத்தியது என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கபடவேடத்தை மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு முழுவதிலுமான அதன் எதிர்ப்புரட்சிகர மூலோபாயத்தையும் அம்பலப்படுத்துகிறது.

சிசியின் ஆட்சிக்கவிழ்ப்புக்கு அமெரிக்கா ஆதரவளித்ததும் லிபியா மற்றும் சிரியாவிலான அதன் இராணுவத் தலையீடுகளும் 2011 இல் இப்பிராந்தியத்தை உலுக்கிய “அரபு வசந்தம்” எனச் சொல்லப்பட்ட புரட்சிகர எழுச்சிகளை நசுக்குவதையும், அதேசமயத்தில், எண்ணெய் வளம் செறிந்த மற்றும் மூலோபாயரீதியாக இன்றியமையாததான இந்தப் பிராந்தியத்தின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சவாலற்ற மேலாதிக்கத்தைத் திணிப்பதற்கான முனைப்பை முன்செலுத்துவதையும் நோக்கமாய் கொண்டிருந்தன.

ஆயினும், அமெரிக்க மூலோபாயவாதிகளின் எதிர்ப்புரட்சிகரத் திட்டங்கள் தவிர்க்கவியலாமல் பிராந்தியம் முழுவதிலும் வர்க்கப் போராட்டம் மீளெழுச்சி காண்பதற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த மாதங்களில் துனிசியாவும் ஈரானும் பாரிய ஆர்ப்பாட்டங்களைக் கண்டிருக்கின்றன, அத்துடன் அல்ஜீரியாவில் மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களது வேலைநிறுத்தங்களும் நடைபெற்றன. எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் கொதித்துக் கொண்டிருக்கும் அதிருப்தி புரட்சிகரப் போராட்டமாக மீண்டும் வெடிப்பது தவிர்க்கவியலாததாகும்.

இந்த அச்சுறுத்தல் ஜேர்மனியின் -அந்த அரசாங்கமும் சிசியை ஆதரித்து வந்திருக்கிறது- Der Spiegel ஆல் சுட்டிக்காட்டப்பட்டது. “போலிஸ் தன்னிச்சையாக செயல்படுவது, அதிகரிக்கும் உணவுப்பொருள் விலைகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லாமை, அத்துடன் மக்களுடன் தொடர்பை அதிகமாக தொலைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜனாதிபதி - ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக முபாரக்கிற்கு எதிரான எழுச்சியைத் தூண்டிய இந்த அத்தனை காரணிகளும் இப்போது எகிப்தில் மறுபடியும் காணப்படுகின்றன” என்று அந்த பத்திரிகை எச்சரிக்கிறது. “ஆகவே [ஜேர்மன்] கூட்டரசாங்கம் ஸ்திரத்தன்மை குறித்த சிசியின் வாக்குறுதியால் குருடாக்கப்பட்டு விடக்கூடாது, மாறாக கெய்ரோவில் என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.”

இந்த நிலைமைகளின் கீழ், 2011 இன் எகிப்தியப் புரட்சியும் பிராந்தியம் முழுவதையும் உலுக்கிய பரந்த எழுச்சிகளும் காட்டிக்கொடுக்கப்பட்டதன் படிப்பினைகள் போராட்டத்திற்குள் வருகின்ற வர்க்க-நனவான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் கற்கப்படுவதும் உட்கிரகித்துக் கொள்ளப்படுவதும் இன்றியமையாததாகும்.

பாரிய ஆர்ப்பாட்டங்கள் -அத்துடன், எல்லாவற்றுக்கும் மேல், எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் பாரிய வேலைநிறுத்தங்கள்- அமெரிக்க-ஆதரவுடனான சர்வாதிகாரியை தூக்கிவீசி, நாட்டின் அரசியல் ஸ்தாபகத்தை அதன் வேர்வரையிலும் உலுக்குவதற்கு முடிந்தது. அப்படியிருந்தும், அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிக்காத நிலையிலும் அதற்குத் தலைமை கொடுக்க ஒரு புரட்சிகரக் கட்சி இல்லாத நிலையிலும், எகிப்தியத் தொழிலாள வர்க்கத்தால் முதலாளித்துவ அரசைத் தூக்கிவீசிவிட்டு முதலாளித்துவச் சுரண்டலையும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையும் முடிவுக்குக் கொண்டுவருகிற அதன் சமூக மற்றும் ஜனநாயக நோக்கங்களை சாதிப்பதற்கான அடித்தளங்களை இடுவதற்கு இயலாமல் போனது.

எகிப்தின் தேசிய முதலாளித்துவ வர்க்கம், மீண்டும் மீண்டும், அதன் ஏகாதிபத்திய எஜமானர்களின் ஆதரவுடன், தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ ஆட்சிக்கும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கும் கீழ்ப்படியச் செய்கின்ற நோக்கத்துடன் முபாரக்கிற்கு பிரதியீடுகளை முன்வைப்பதற்கு முனைந்தது. இந்த நடவடிக்கையில், புரட்சிகர சோசலிஸ்டுகள் (RS) குழுவில் ஒழுங்கமைந்திருந்த எகிப்தின் நடுத்தர வர்க்கத்தின் வசதியான அடுக்கின் போலி-இடது பிரதிநிதிகளின் அரசியல்ரீதியாக மிக முக்கியமான ஒத்துழைப்பு அதற்குக் கிட்டியது.

அமெரிக்காவில் சர்வதேசிய சோசலிஸ்ட் அமைப்பு (ISO), பிரிட்டனில் சோசலிஸ்ட் தொழிலாளர்கள் கட்சி மற்றும் ஜேர்மனியில் இடதுகட்சியின் கூறுகள் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டதான RS, புரட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும், எகிப்தின் தொழிலாளர்களது புரட்சிகர முனைப்புகளை முதலாளித்துவத்தின் ஏதாவது ஒரு கன்னையின் பின்னால் செலுத்துவதற்காய் வேலைசெய்தது, முதலில் இராணுவத்தில் பிரமைகளை ஊக்குவித்தது, அதன்பின் “புரட்சியின் வலதுசாரி பிரிவு” என்று சொல்லி முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பை ஆதரித்தது, பின், முர்ஸி அரசாங்கத்திற்கு வெகுஜன எதிர்ப்பு பெருகியதை அடுத்து மறுபடியும் தன்னை இராணுவத் தளபதிகளின் பின்னால் நிறுத்திக் கொண்டு சிசியின் ஆட்சிக்கவிழ்ப்பை “இரண்டாவது புரட்சி” என்று கூறிப் பாராட்டியது.

முதலாளித்துவத்தின் ஒவ்வொரு கன்னைக்கும் ஒரு சோசலிசப் புரட்சிக்கு குரோதம் காட்டுகின்ற நடுத்தர வர்க்க போலி-இடது சக்திகளில் இருக்கின்ற அவற்றின் உடந்தையாளர்களுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கு வெளியில் புரட்சியின் வெற்றி சாத்தியமில்லாதது என்பதே எகிப்தின் தொழிலாள வர்க்கமும் மற்றும் உலகெங்கும் இருக்கும் தொழிலாளர்களும் பெற்றிருக்கக் கூடிய கசப்பான பாடமாகும்.

எகிப்துப் புரட்சியின் முடிவு லியோன் ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் ஒரு மையமான அம்சத்தை ஊர்ஜிதம் செய்கிறது: ஒடுக்கப்பட்ட நாடுகளில் தொழிலாள வர்க்கம் மட்டுமே ஜனநாயகத்திற்கு ஆதரவான மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை கொடுக்க முடியும், ஒரு சர்வதேச சோசலிசப் புரட்சியின் பகுதியாக முதலாளித்துவ அமைப்புமுறை தூக்கிவீசப்படுவதன் மூலமாக மட்டுமே இந்தப் போராட்டம் பூர்த்தியாக முடியும்.

தவிர்க்கவியலாமல் ஜெனரல் சிசியின் நெருக்கடி நிரம்பிய ஆட்சியின் மீது வீழ்ந்து அதனை நிலைகுலைய செய்ய இருக்கின்ற, மத்திய கிழக்கு எங்கிலும் வெடித்துக் கொண்டிருக்கும் போராட்டங்களின் புதிய அலையானது, அமெரிக்கா, ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலும் கூட ஆசிரியர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மற்ற பிரிவுகளது பாரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், 2011 இல் நிலவியதை விடவும் அதிகமாய் சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தின் மிக முன்னேறியதொரு வளர்ச்சியுடன் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

உலக சோசலிசப் புரட்சியின் பகுதியாக எகிப்திலும் மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் போராடுகின்ற, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவினை, எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவதே தீர்மானகரமான பிரச்சினையாகும்.