ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The inauguration of Ramaphosa and the degeneration of the ANC

ராமபோசாவின் பதவியேற்பும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் சீரழிவும்

Chris Marsden
17 February 2018

பிரதான ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் உலகளாவிய பெருநிறுவனங்களின் உற்சாகமான ஆதரவுடன், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) இன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக, சிரில் ராமபோசா நேற்று தென் ஆபிரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.

அரசின் தலையாய பதவியில் அவர் ஏற்றப்பட்டிருப்பது, முதலாளித்துவ தேசியவாதத்தின் முன்னோக்கின் அரசியல் திவால்நிலைமையை மட்டுமல்ல, மாறாக ஒரு காலத்தில் ஏகாதிபத்திய-எதிர்ப்பாகவும் சோசலிச இலட்சியமாகவும் கூட காட்டப்பட்ட பழைய தேசியவாத இயக்கங்கள் ஏகாதிபத்திய ஆட்சியின் நேரடிக் கருவியாக உருமாறியிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. மேலும், ஒவ்வொரு நாட்டு தொழிலாளர்களும், அனைத்து இடங்களிலும் அரசு மற்றும் முதலாளிமார்களின் விசுவாசமான சேவகர்களாக குறிப்பாக தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் வகிக்கும் கைக்கூலி பாத்திரத்தின் ஒரு மோசமான வெளிப்பாடாகவே ராமபோசாவை கண்டுகொள்வார்கள்.

ராமபோசாவை இரண்டு விடயங்கள் உலக முதலாளித்துவ வர்க்கத்திற்கு பரிந்துரைக்கின்றது. ஒன்று அவர் குவித்துள்ள செல்வவளம், அடுத்தது, 24 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலாள வர்க்க போராட்டங்கள் தான் ANC ஐ அதிகாரத்திற்கு கொண்டு வந்தது என்ற நிலையிலும், அந்த தொழிலாள வர்க்கத்தை ஈவிரக்கமின்றி கையாள தயாராக இருப்பதுமாகும்.

தேசத்திற்கான நேற்றைய அரச உரையில், ராமபோசா சுதந்திரத்திற்கான "நீண்ட பயணத்தை" தொடர்வதற்கு சூளுரைத்தார், இதில் "அனைவரும் நமது மண்ணின் செல்வ வளத்தைப் பகிர்ந்து கொண்டு, நல்வாழ்வு வாழலாம்", நெல்சன் மண்டேலாவின் "ஒரு ஜனநாயக, ஒரு நேர்மையான மற்றும் சமநிலையான சமூகத்தை நோக்கிய தொலைநோக்கு பார்வையை" அடையலாம் என்றார். ஆனால் ஊழல் சகாப்தத்தையும் மற்றும் "ஜேகப் ஜூமா ஆட்சியில் குணாம்சப்படுத்தப்பட்ட பல கோடி பில்லியனர் குப்தா குடும்பத்தால் அரசு கைப்பற்றப்பட்டிருப்பதையும்" முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ராமபோசாவின் வாக்குறுதியானது, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகங்கொடுக்கும் கடுமையான நிலைமையை இன்னும் மோசமாக்க மட்டுமே செய்யும் வணிக-சார்பு கொள்கைகளை அடித்தளத்தில் கொண்டுள்ளது.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் குறிப்பிட்ட குடும்பத்தவர்களுக்கு (nepotism) மற்றும் தமது வாடிக்கையாளர்களுக்கு (clientism) சலுகை வழங்கல் ஆகியவை தென் ஆபிரிக்காவின் செழிப்பான ஆதாரவளங்களான வைரம், விலைமதிப்பார்ந்த உலோகங்கள் மற்றும் கனிமங்களை முழுமையாக சுரண்டும் அவற்றின் ஆற்றலுக்கு ஒரு தடையாக இருப்பதால், அவற்றிற்கு கடிவாளமிடுவதற்காக பெருநிறுவனங்களின் சார்பாக ராமபோசா செயல்படுவார். ஆங்கிலோ அமெரிக்கரான தென் ஆபிரிக்க துணை தலைவர் நோர்மான் மெபஸிமா அறிவித்தார்: “உங்கள் தொழில்துறையை இந்நாட்டின் ஜனாதிபதி புரிந்து கொண்டால் அது மிகவும் உதவியாக இருக்கும்.”

“தென் ஆபிரிக்க போட்டித்தன்மையின் நலனுக்காக அரசு, வணிகம் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே ஓர் உடன்படிக்கை" அவசியமென பைனான்சியல் டைம்ஸ் எழுதியது. பிரிட்டனின் தலையாய வணிக பத்திரிகை "தொழிலாளர்" குறித்து பேசுகையில், அது தென் ஆபிரிக்க தொழிற்சங்கங்களது சம்மேளனத்தின் (COSATU) அதிகாரத்துவத்தை அர்த்தப்படுத்துகிறது—இதுதான் வேலைகள், கூலிகள் மற்றும் சமூக நிலைமைகள் மீது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அதன் தாக்குதலைத் திணிக்க, ஸ்ராலினிச கட்சியான தென் ஆபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியுடன் ANC இன் முத்தரப்பு கூட்டணியைத் தாங்கி பிடித்ததில் முக்கிய தூணாக இருந்தது.

ஊழலுக்கு எதிரான இந்த தர்மயுத்தம், தென் ஆபிரிக்காவிலேயே மிகப் பெரிய ஊழல்வாதியான ஒருவரால் நடத்தப்பட உள்ளதாம்!

நிறவெறி ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் போது, ராமபோசா சுரங்க தொழிலாளர்களுக்கான தேசிய தொழிற்சங்கத்தின் (NUM) தலைவராக இருந்தார். இப்பதவியை சாதகமாக்கி தான், அவர் தொழிலாள வர்க்கத்தை ANC இன் முதலாளித்துவ-சார்பு சுதந்திர சாசன முன்னோக்குடன் கட்டிப்போடுவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார். அந்த சாசனம் வெள்ளை இனத்தவரின் மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தையும் மற்றும் தென் ஆபிரிக்க கறுப்பின மக்களது உத்தியோகபூர்வ சட்டரீதியிலான சமத்துவத்துவத்திற்கான போராட்டத்தையும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான எதிர்ப்பிலிருந்து பிரித்தது.

கறுப்பின மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான ANC கொள்கையினது (BEE) இன்றியமையா செயல்பாடு உருவாக்கிய, ஒரு புதிய கறுப்பின முதலாளிமார் அடுக்கின் சுய-செல்வவளமைக்கு அவர் புதிய பிரதிநிதியாக ஆனார். 1996 இல், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) தனியார் துறைகளுக்குள் புகுவதற்கு ராமபோசாவைத் தேர்ந்தெடுத்தது. அவர் செல்வாக்கைக் கொண்டு தேசிய வளர்ச்சி ஆணையம் மூலமாக அரசு ஒப்பந்தங்களை அவரால் பெற முடிந்ததுடன் சேர்ந்து, அந்நாட்டின் சில மிகப் பெரிய நிறுவனங்களது பொதுக்குழுவில் பதவிகளை வெல்ல, அவர் தொழிற்சங்க ஓய்வூதிய நிதிகளைப் பயன்படுத்தினார்.

எட்டப்பட்ட ஒவ்வொரு உடன்படிக்கையும் தாராளமான பங்கு இலாபங்களைக் கொண்டு வந்தது, அதன் மூலமாக, 2017 வாக்கில், அவரது தனிப்பட்ட 500 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், அவர் தலையாய "ஒப்பந்த அதிபர்" ஆகியிருந்தார். அவர் ஒன்றுவிட்ட சகோதரரும் அந்நாட்டின் ஒரே கறுப்பின பில்லியனருமான பற்றீஸ் மொற்சேப்ப இற்கு பின்னர் ராமபோசா தென் ஆபிரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய கறுப்பின செல்வந்தராவார்.

அனைத்திற்கும் மேலாக மாரிக்கானா படுகொலைகளுக்கு ஒத்துழைப்பதில் அவர் வகித்த பாத்திரத்திற்காகத்தான், மொத்தத்தில் ராமபோசா நம்பிக்கையோடு ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.

தொழிற்சங்க அதிகாரத்துவமானது மூலதனத்திற்கு சார்பாக தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு பொலிஸ் படையாக மாறியுள்ளதை, ஆகஸ்ட் 2012 இல் 34 சுரங்க தொழிலாளர்கள் கொல்லப்பட்ட லொன்மின் பிளாட்டின சுரங்கத் தொழிலாளர் படுகொலை எடுத்துக்காட்டும் அளவுக்கு, வேறெந்தவொரு சம்பவமும் காட்டுமிராண்டித்தனத்தை எடுத்துக்காட்டாது.

வாழ்வூதியத்திற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அந்த சுரங்க தொழிலாளர்கள், வெளிப்படையாக NUM க்கு எதிராக இருந்தனர். ராமபோசாவின் நிறுவனம், 9 சதவீத பங்குகளுடன் லொன்மினின் BEE இல் பங்குதாரராக இருந்தது. அந்த செல்வாக்கில், ஆகஸ்ட் 12 இல், அவர் அப்போதைய பொலிஸ்துறை அமைச்சர் நாதி மெத்தேவா இனை தொடர்பு கொண்டு, மாரிக்கானாவுக்கு கூடுதல் அதிகாரிகளை அனுப்ப ஆதரவு கோரினார். மாரிக்கானா சுரங்க தொழிலாளர்கள், தொழில் பிரச்சினையில் ஈடுபட்டிருக்கவில்லை மாறாக "சட்டவிரோத குற்ற" நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக ஆகஸ்ட் 15 இல் ராமபோசா கனிமவளத்துறை அமைச்சருக்கு எழுதினார்.

ராமபோசாவின் தூண்டுதலின் கீழ், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களைச் சுட்டுத் தள்ளவும், கொல்லவும் மற்றும் ஊனமாக்கவும் பொலிஸை அனுப்பியதுடன், நிறவெறி காலத்தில் இருந்த "பொதுவான நோக்கத்திற்கான" சட்டங்களின் கீழ், கொலை மற்றும் கொலை முயற்சி என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 270 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆறு மாதங்களுக்கும் குறைந்த காலத்திற்குப் பின்னர், ஜூமாவுடன் சேர்ந்து, ராமபோசா ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது, மிகப் பெரிய பெருநிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் விசுவாசம் எடுத்துக்காட்டப்பட்டது. மாரிக்கானா செயல்பாட்டாளர் நப்போலியன் வெப்ஸ்டர் கடந்த ஆண்டு கூறினார்: “வணிக சமூகம் சிரிலை நேசிக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்… இந்த சிரில் தான் லொன்மின் படுகொலைக்கு காரணமாக அதே அசுரன்,” என்றார்.

புதனன்று நாடாளுமன்றத்தின் முன் உரையாற்றுகையில், ராமபோசா ஜூமாவின் வெளியேற்றம் குறித்து இவ்வாறு அறிவித்தார்: “இது சுதந்திரமல்ல (uhuru)… நாங்கள் தொடர்ந்து நம் மக்களின் வாழ்வை உயர்த்த முயற்சிக்க இருக்கிறோம், 1994 க்குப் பின்னர் இருந்து, துல்லியமாக இதை தான் நாங்கள் செய்து வந்துள்ளோம்.” நிறவெறி ஆட்சியால் மட்டுமல்ல, மாறாக மில்லியன் கணக்கானவர்கள் மீது சுமத்தப்பட்ட அளப்பரிய இழப்புகளாலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய புரட்சிகர இயக்கத்தின் தலைமையினாலேயே ஏப்ரல்-மே 1994 இல் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பதவிக்கு வந்தது.

ஆனால் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் சுதந்திர பிரகடனம் ஸ்ராலினிச முன்னோக்கான "இரண்டு கட்ட புரட்சியின்" அடித்தளத்தில் இருந்தது. ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதைப் பிரதான இலக்காக நிறுவியதுடன், COSATU தொழிற்சங்க எந்திரத்தைக் கொண்டு, இதற்காக குறிப்பிடப்படாத எதிர்காலம் வரையில் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச அபிலாஷைகள் அடிபணிய வைக்கப்பட்டன.

அப்போதிருந்து பதவியில் இருந்து வந்துள்ள இந்த முக்கூட்டு அரசாங்கம், கறுப்பின வியாபாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் நிர்வாகிகளின் ஒரு சிறிய அடுக்கைச் செழிப்பாக்கி, அதேவேளையில் உழைக்கும் மக்களுக்கு நிஜமான ஆதாயம் கிடைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், ஈவிரக்கமின்றி உலகளாவிய மூலதனம் மற்றும் தென் ஆபிரிக்க முதலாளித்துவத்தின் கட்டளைகளை திணித்துள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமை, நிறவெறி காலத்தில் இருந்தை விட மோசமடைந்துள்ளது என்பதே கசப்பான யதார்த்தமாகும். வருவாய் சமத்துவமின்மை அசாதாரணமானரீதியில் மிக அதிகமாக உள்ளது—மக்கள்தொகையில் சுமார் 60 சதவீதத்தினர் ஆண்டுக்கு 7,000 டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கின்றனர், அதேவேளையில் மக்கள்தொகையில் 2.2 சதவீதத்தினர் 50,000 டாலருக்கும் அதிகமாக சம்பாதிக்கின்றனர். செல்வவள உடைமையோ இன்னும் அதிக கூர்மையாக துருவமுனைப்பட்டுள்ளது, மக்கள்தொகையில் 10 சதவீதத்தினர் மொத்த சொத்துக்களில் குறைந்தபட்சம் 90-95 சதவீதத்தை உடைமையாக கொண்டுள்ளனர்.

மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள், மாதத்திற்கு 43 டாலருக்கும் குறைவாக சம்பாதித்து, உத்தியோகபூர்வமாக வறுமையில் வாழ்கின்றனர், அதேவேளையில் 13.8 மில்லியன் பேர் அதீத வறுமையில் உள்ளனர். உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை 28 சதவீதத்தில் நிற்கிறது, உத்தியோகபூர்வமாக இல்லையென்றால் இது 36 சதவீதமாகும். இதுவே இளைஞர்கள் மத்தியில் மலைப்பூட்டும் அளவுக்கு 68 சதவீதமாகும்.

தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் இன்றியமையா ஜனநாயக மற்றும் சமூக தேவைகளில் எதுவுமே தேசிய முதலாளித்துவ ஆட்சியின் கீழ் பூர்த்தி செய்யவியலாது, அது இயல்பாகவே ஏகாதிபத்தியத்துடன் பிணைந்துள்ளதுடன், அதன் சொந்த தனிச்சலுகைகள் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளைக் கொடூரமாக சுரண்டுவதைச் சார்ந்துள்ளன.

முன்னேறிய தொழிலாளர்கள், அனைத்திற்கும் மேலாக முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய உலக ஒழுங்கமைப்பைப் பாதுகாக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கொள்கைகளால் வாழ்க்கை இருண்டு போன இளம் தலைமுறை, இப்போது ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டமைக்க இறங்க வேண்டும். அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி, ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தை நிறுவி, வங்கிகள், சுரங்கங்கள் மற்றும் பிற மிகப்பெரிய பெருநிறுவனங்களைப் பறிமுதல் செய்து, அவற்றை தனியார் இலாபங்களுக்காக அல்லாது சமூக தேவையைப் பூர்த்தி செய்வதற்காக செயல்படுத்தும், சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதே அதன் முன்னோக்காக இருக்க வேண்டும்.

ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் பாரிய பன்னாட்டு பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஒட்டுமொத்த உலக மேலாதிக்கத்தை எதிர்கொள்ளும், ஒரு பூகோளமயப்பட்ட பொருளாதாரத்தில், லியோன் ட்ரொட்ஸ்கி அவரது நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் விவரித்த மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மூலோபாயத்தின் அடித்தளத்தில் மட்டுமே இந்த போராட்டத்தை வெற்றிகரமாக தொடுக்க முடியும்.

தென் ஆபிரிக்க தொழிலாள வர்க்கம், ANC, COSATU மற்றும் அவற்றின் பெருநிறுவன மற்றும் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கு எதிரான அதன் போராட்டத்தை, ஆபிரிக்கா மற்றும் ஒட்டுமொத்த உலகம் எங்கிலும் உள்ள அவர்களின் சகோதர சகோதரிகள் தொடுக்கும் போராட்டத்துடன் நனவுபூர்வமாக ஐக்கியப்படுத்த முயல்வதன் மூலம், அதன் சொந்த சர்வதேச சோசலிச மூலோபாயத்தை ஏற்க வேண்டும். இதன் அர்த்தம், சோசலிச புரட்சிக்கான உலக கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவை கட்டமைக்க தொடங்குதல் என்பதாகும்.