ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

වැටුප් හා සේවා කොන්දේසි කප්පාදුවට එරෙහිව තැපැල් සේවකයන් උද්ඝෝෂනය කරයි

ஊதியம் மற்றும் வேலை நிலைமை வெட்டுக்களுக்கு எதிராக தபால் ஊழியர்கள் போராட்டம்

By our reporter
29 December 2017

ஊதியம் மற்றும் வேலை நிலைமைகள் வெட்டுக்களுக்கு எதிராக தபால் ஊழியர்கள் எதிர்ப்பு பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அதன் பாகமாக கடந்த டிசம்பர் 27, மதிய உணவு வேளையில் மாத்தறை, காலி, கண்டி, குருனாகல், மாத்தளை, பொலனறுவை, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களிலும், டிசம்பர் 18 அன்று கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு முன்னாலும் மறியல் போராட்டங்களை நடத்தினர்.

சம்பள முரண்பாடுகளை நீக்குமாறும் தனியான சேவை யாப்பின் மூலம் தபால் திணைக்களத்தையும் வரையறுக்கப்பட்ட சேவையாக மாற்றுமாறும் அவர்கள் கோருகின்றனர். ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியே இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்தது. தபால் தொழிற்சங்க கூட்டணி என்பது, தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம், அகில இலங்கை தந்தி சேவையாளர்கள் சங்கம், தேசிய தபால் மற்றும் தந்தி சேவையாளர்கள் சங்கம், இலங்கை தபால் ஊழியர்கள் சங்கம் உட்பட 27 தொழிற்சங்கங்களின் கூட்டணியாகும்.

2006/6 அரச சேவை சுற்றுநிரூபத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சேவை ஒப்பீட்டின் கீழ் சம்பளம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் சில தரங்களில் உள்ள பதவிகளும் இல்லாமல் போயுள்ளதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பிட்ட சுற்றுநிரூபத்தின் படி மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் கீழ், முதலில் இருந்த தபால் நிலைய அதிபர் தரங்கள் இரண்டுக்கும் மாறாக மூன்றாம் தரம், இரண்டாம் தரம் மற்றும் முதல் தரம் என மூன்று தரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தரத்துக்கே புதிய ஆட்சேர்ப்புகள் இடம்பெறுகின்றன. இதற்கு முன்னர் இரண்டாம் தரத்துக்கே ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அதன் மூலம் புதிய ஆட்சேர்ப்புக்கான ஆரம்ப ஊதியம் 16,440 ரூபாயில் இருந்து 15,005 வரை 1635 ரூபாயால் வெட்டப்பட்டுள்ளது.

அதே போல் ஏழு ஆண்டுகள் சேவை காலத்தின் பின்னர், குறிப்பிட்ட பரீட்சையில் சித்தி பெற்று பதவி உயர்வு பெற்றுக்கொள்வதற்கு இருந்த வாய்ப்புகள் அகற்றப்பட்டு, பத்து ஆண்டு கால சேவை காலத்தின் பின்னர் பதவி உயர்வு வழங்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம், ஊழியர்களுக்கு கீழ் தரத்தில் இருந்து உப தபால் நிலைய அதிபர் வரை பதவி உயர்வு பெறுவதற்கு இருந்த வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. கடிதங்களை விநியோகிப்பவர்கள், தேர்வு செய்பவர்கள் அலுவலக பணி உதவியாளர்கள் என்ற முறையில் இருந்த 18 தரங்கள் இரத்துச் செய்யப்பட்டு, தபால் உதவியாளர்கள் என்பதைச் சூழ தனியான தரம் ஒன்றுக்குள் அடக்குவதன் மூலம், மேலும் சம்பள வெட்டு மற்றும் பதவி உயர்வுகளுக்கு குழி பறிக்கப்பட்டுள்ளது என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தபால் தொழிற்சங்க கூட்டணி கடந்த பத்தாண்டுகளாக, ஆட்சியில் இருந்த அரசாங்கங்களுக்கு இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் அழுத்தம் கொடுக்கும் பயனற்ற பிரச்சாரங்களில் தபால் ஊழியர்களை ஈடுபடுத்தி வந்ததோடு அரசாங்கத்தின் கண்கட்டிவித்தை வாக்குறுதிகளுக்கு அடிபணிந்து கைவிடப்பட்டதன் மூலம் அவை முடிவுக்கு வந்தன. “2006ம் ஆண்டில் இருந்தே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் இதுவரை இந்த முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள முடியவில்லை.” கடந்த ஜூன் மாதம் போராட்டத்தை நிறுத்தும் போது, அரசாங்கம் தம்முடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டை முறித்துக்கொண்டதன் மூலம், “ஒட்டுமொத்த தபால் சேவையே ஏமாற்றப்பட்டுள்ளது” என்று தற்போதைய பிரச்சாரத்துக்காக வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் தொழிற்சங்க கூட்டணி புலம்பியுள்ளது.”

இந்த ஏமாற்றத்தினால் அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கம் சம்பந்தமாக கடும் எதிர்ப்பும் கோபமும் தபால் ஊழியர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து வருவதனாலேயே, தபால் தொழிற்சங்க கூட்டணி மீண்டும் ஒரு பிரச்சாரத்துக்கு அழைப்பு விடுப்பதற்கு நெருக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை மறியல் போராட்டத்தின் போது உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் பேசிய மாத்தறை தபால் அலவலகத்தின் பல தொழிலாளர்களும், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் சம்பந்தமாக தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தினர்.

45 வயதான ஒரு தொழிலாளி கூறியதாவது: “நாம் இதுவரை பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை தொழிற்சங்கத் தலைமைத்துவம் ஏற்றுக்கொண்டதாலேயே கடந்த வேலை நிறுத்தத்தை முடித்துக்கொண்டோம். எனினும் ஒன்றும் கிடைக்கவில்லை. சில தொழிற்சங்கத் தலைவர்கள் “நல்லாட்சி” அரசாங்கத்தின் பாதுகாவலர்களாவர். அந்த நிலைமையிலேயே நாம் மீண்டும் போராட்டத்துக்கு வந்துள்ளோம். கடந்த அரசாங்கத்தைப் போன்றே இந்த அரசாங்கமும் எங்கள் கோரிக்கைகளை அலட்சியம் செய்கின்றது. இந்த அரசியல் நிலைமைகள் சம்பந்தமாக அதிருப்தி மட்டுமே இருக்கின்றது.”

“நான் தொழிற்சங்க உறுப்பினராக இருந்தாலும், தொழிற்சங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டத்தின் மூலம் எமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாது என்பது நன்கு தெளிவானதாகும்” என ஒரு தபால் ஊழியர் கூறினார். தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய துறைசார்ந்த தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்துக்குச் செல்லத் தயாராக வேண்டும் என ஒரு கூட்டத்தில் அவர் பிரேரித்திருந்தாலும், “எமது கோரிக்கைகள் ஏனைய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுடன் பொருந்தாது” என கூறி தொழிற்சங்க அதிகாரத்துவம் அதை நிராகரித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

டிசம்பர் 18 நடத்திய பிரச்சாரத்தில் இருந்து 14 நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால், முன்னறிவிப்பு இன்றி “காலவரையறையற்ற” வேலை நிறுத்தத்திற்கு செல்வதாக தொழிற்சங்க முன்னணி பொய் கூச்சலும் போட்டுள்ளது. அப்படி இல்லாவிட்டால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக செய்யப்படும் தபால் விநியோகம் ஸ்தம்பிக்கும் என அரசாங்கத்திற்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்தகைய எச்சரிக்கை, பரீட்சை, தேர்தல் மற்றும் தேசிய விழாக்கள் இடம்பெறும் சமயங்களில் முன்னெடுக்கும் வேலை நிறுத்தங்களின் மூலம் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்து ஏதாவது சலுகை பெறமுடியும் என்பது, தொழிலாளர்களின் நேர்மையான போராட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு எதிராக நிற்கும் தொழிற்சங்கங்களால் தூக்கிப் பிடிக்கப்படும் சந்தர்ப்பவாத சூத்திரமாகும்.

தொழில், சம்பளம் மற்றும் தொழில் நிலைமைகள் சம்பந்தமான தபால் ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அவை வென்றெடுக்கப்பட வேண்டும். அதற்காகப் போராட வேண்டும். எனினும், அவர்களின் தொழில், ஊதியம் மற்றும் தொழில் நிலைமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களின் பொருளாதார அரசியல் மூலங்களைப் புரிந்துகொண்டு மற்றும் அதற்கு பொருத்தமான முறையில் தமது போராட்டங்களை ஏற்பாடு செய்துகொள்ளாமல், புதிய உரிமைகளை வென்றெடுப்பது ஒரு புறம் இருக்க, கடந்த கால போராட்டங்களின் வென்றெடுத்த உரிமைகளையும் கூட பாதுகாத்துக்கொள்ள முடியாது.

தபால் ஊழியர்கள் போலவே தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பகுதியினரது தொழில், ஊதியம் மற்றும் தொழில் நிலைமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், மேலும் மேலும் ஆழமடைந்துவரும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் மத்தியில் எல்லா நாடுகளிலும் உள்ள முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் சமூக எதிர்ப் புரட்சியின் ஒரு பாகமாகும். அந்த வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் மூலம், அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், சம்பளம் மற்றும் தொழில் நிலைமைகளை வெட்டுவது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அதன்படி தனியார்மயமாக்கல் திட்டத்தின் கீழ், தொலைத் தொடர்பு திணைக்களத்தை இரண்டாகப் பிரித்து, தபால் திணைக்களத்தை கரைத்துவிடுவது 1997 இலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் நடவடிக்கையாக அதை நிறுவனமாக மாற்றி, திணைக்களத்தை கரைத்துவிடும் திட்டமொன்று பிரேரிக்கப்பட்டிருந்த போதும், தொழிலாளர்களின் எதிர்ப்பின் காரணமாக அப்போது இருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தால் அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. எனினும், குமாரதுங்கவின் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கங்களின் கீழ் கடிதங்கள் மற்றும் பொதிகள் விநியோகத்திற்கு தனியார் கம்பனிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குதல், தனியார் துறைகளில் உப தபால் அலவலகங்களை அமைக்க அனுமதிப்பது, சில பிரதான தபால் நிலையங்களை உப காரியாலயங்களாக ஆக்குவது மற்றும் தொழில் வெட்டுக்கள் ஊடாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தற்போதைய அரசாங்கத்தால் இந்த தாக்குதல்கள் மேலும் மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி, தமது உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாள வர்க்கத்தின் அல்லது வேறு சமூக குழுவினரின் போராட்டங்களை கொடூரமாக நசுக்கித் தள்ளுவதற்கு அரசாங்கம் தயங்காது என்பதை சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் இப்போது நிரூபித்துள்ளது. இந்த நிலைமையின் கீழேயே, தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு “மேதகு ஜனாதிபதி உடபட அரசியல் அதிகாரத்திடமும் தபால் முகாமைத்துவத்திடமும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இன்னமும் பிரதிபலிப்புகள் கிடையாது” என தொழிற்சங்க கூட்டணி ஒப்பாரி வைக்கின்றது.

தபால் ஊழியர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு தொழிற்சங்க கூட்டணி நேரடியாக பொறுப்புச் சொல்ல வேண்டும். ஏனெனில், அதில் ஒரு பகுதி இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் இன்னொரு பகுதி சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் பந்தம் பிடிப்பதன் மூலமும் தபால் ஊழியர்களின் போராட்டங்களை மீண்டும் மீண்டும் தடம்புரளச் செய்வதன் மூலம், தபால் ஊழியர்களைப் போலவே ஏனைய தொழிலாளர்களுக்கும் எதிரான தாக்குதல்களை நடைமுறைப்படுத்துவதற்காக முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் கைகளைப் பலப்படுத்துவதற்கு அவர்கள் பங்களிப்பு செய்துள்ளனர்.

அதனால், முதலாளித்துவ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்ற “காலவரையறையற்ற” போராட்டங்கள் மூலம் ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என தொழிற்சங்க கூட்டணி பரப்பிவிடும் மாயையில் தபால் ஊழியர்கள் ஏமாறக்கூடாது.

தபால் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் பாகமாகும். அதனால், தொழிற்சங்கங்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்பிக்கொண்டு, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக முன்னெடுக்கின்ற பொதுப் போராட்டத்தின் மூலம், மற்றும் திட்டமிடப்பட்ட சோசலிசப் பொருளாதார கொள்கையை அமுல்படுத்துகின்ற தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டுவருவதன் மூலமும் மட்டுமே தபால் ஊழியர்களைப் போலவே தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பகுதியினராலும், அவர்களது உரிமைகளை வெல்ல முடியும்.