ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The definitive film record of the 1917 Russian Revolution
Mehring Books announces release of Tsar to Lenin in DVD format

1917 ரஷ்யப் புரட்சியின் தெளிவான திரைப்பட பதிவு

மெஹ்ரிங் புக்ஸ் டிவிடி வடிவத்தில் ஸார் டு லெனின் திரைப்படத்தின் வெளியீட்டை அறிவிக்கிறது

5 July 2012

மெஹ்ரிங் புக்ஸ், இருபதாம் நூற்றாண்டின் அதிசிறந்த விவரண திரைப்படங்களில் ஒன்றான ஸார் டு லெனின் (ஸார் முதல் லெனின் வரை) திரைப்படத்தின் டிவிடி வெளியீட்டை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.

வியப்பார்வமளிக்கும் ஹெர்மன் அக்ஸெல் பேங்க் (1900-1979), ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சேகரித்து காப்பகத்தில் வைத்திருந்த காட்சிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஸார் டு லெனின், மில்லியன் கணக்கான மக்களை தன்னுள் ஈர்த்துக்கொண்ட, "உலகத்தை குலுக்கிய" மற்றும் வரலாற்றின் போக்கை மாற்றிய, ஒரு புரட்சிகர இயக்கத்தைப் பற்றிய ஒப்பற்ற திரைப்படப் பதிவை வழங்குகிறது. முன்னோடி அமெரிக்க தீவிரவாதியான மெக்ஸ் ஈஸ்ட்மன் (1883-1969) செய்துள்ள விவரிப்பு, புரட்சியின் நிகழ்வுகள் மற்றும் பரிணாமத்தை உணர்ச்சியுடனும் மனிதத்துவத்துடனும் கதையை விளக்குகிறது.

1937 பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட ஸார் டு லெனின், ரஷ்யப் புரட்சி பற்றிய அசாதாரணமான சினிமா மதிப்பீட்டை அளிக்கிறது -இது 1917 பிப்ரவரியில் பல நூற்றாண்டுகள் பழமையான ஆட்சியை தூக்கி வீசியது தொடக்கம், எட்டு மாதங்களுக்கு பின்னர் போல்ஷ்விக் தலைமையிலான எழுச்சி முதல், மூன்று ஆண்டுகால உள்நாட்டுப் போருக்குப் பின்னர் எதிர்ப்புரட்சிகர சக்திகளுக்கு எதிராக புதிய சோவியத் ஆட்சி 1921ல் இறுதி வெற்றியை பெற்றது வரை திரைப்படம் உள்ளடக்கிக்கொண்டுள்ளது.

உங்கள் பிரதிகளை இங்கே பெற்றுக்கொள்ளுங்கள் மெஹ்ரிங் புக்ஸ்

டிவிடியில் உள்ளடங்கியுள்ள உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவரான டேவிட் நோர்தின் அறிமுக கட்டுரையை இங்கு பிரசுரிக்கின்றோம்.

***

 

ஸார் டு லெனின் (Tsar to Lenin-ஸார் முதல் லெனின் வரை), 20ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அதி முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாகும். அதன் உள்ளடக்கம் 1917 ரஷ்யப் புரட்சி ஆகும். மனித வரலாற்றின் போக்கை மாற்றிய நிகழ்வுகளுக்கு சாட்சி பகரும் ஆச்சரியங்களில் இருந்து ஒருவர் ஒருபோதும் பார்வையை தவறவிடமாட்டார். எங்கும் 24 மணி நேர உடனடி செய்தி வழங்கும் தொலைக்காட்சி வருவதற்கு முன்னரே, வரலாறு படம்பிடிக்கப்பட்டு படச் சுருளுக்குள் பாதுகாக்கப்பட்டிருப்பது வியத்தகு விடயமாக தோன்றக் கூடும்.

இந்த அசாதாரண விவரணத் திரைப்படம், புகழ்பெற்ற அமெரிக்க தீவிரவாதியும் சோசலிஸ்டுமான மெக்ஸ் ஈஸ்ட்மன் (1883-1969), உலக வரலாற்றில் ஒரு வளரும் நிகழ்வை பற்றிய மிகச் சிறந்த திரைப்பதிவை வழங்கிய ரஷ்யாவில் பிறந்த குடியேற்றவாசியான ஹெர்மன் எக்ஸெல்பேங்க் (1900-1979), ஆகிய இருவருக்கும் இடையிலான சிக்கலான மற்றும் விவாதத்துக்குரிய கூட்டுழைப்பின் விளைவாகும்.

தனது வரலாற்றுக் குறிப்பான அன்பும் புரட்சியும்: ஒரு சாகாப்தத்தின் ஊடான என் பயணம் (Love and Revolution: My Journey through an Epoch) என்பதில், ஈஸ்ட்மன், இந்த திரைப்படம் தோன்றிய ஆரம்பம் மற்றும் உருவாக்கல் நடவடிக்கைகள் பற்றிய ஒரு நேரடி மதிப்பீட்டை வழங்கியுள்ளார்.

"1928 இலையுதிர் காலத்தின் பிற்பகுதியில், ஹேர்மன் ஆக்ஸெல்பேங்க் என்ற இளைஞன் என்னைப் பார்க்க வந்தார் - ஒரு நம்பத்தகுந்த இளைஞன். அவர் பரந்த தேகத்துடன் உயரம் குன்றியவராக இருந்தார். போதுமானளவு முடி இருந்ததனால் அவரது கன்னங்கள் எப்போதும் கருப்பாக இருந்தன. தலைமுடியை கட்டையாக வெட்டியிருந்தமை, கண்களைத் தவிர, அவருக்கு மேலும் கம்பீரத் தோற்றத்தை வழங்குபவையாக இருந்தன. அவருடைய கண்கள் அன்பும் ஆர்வமும் கொண்டவையாக தெரிந்ததுடன் மனித நாகரீகத்தின் பெறுமதிகளைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதிப்பட்டைக் காட்டின. மற்றும் மனிதநேயத்தின் உயர்ந்த பெறுமதியானவற்றை அவர் சேகரித்து வைத்திருந்தார்: ரஷ்யப் புரட்சியில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பிரமுகர்களைப் பதிவு செய்திருந்த அனைத்து முக்கியமான திரைப்படங்களின் தொகுப்பு அல்லது அவற்றில் பெரும்பான்மையானவற்றை அவர் வைத்திருந்தார். அவர் கற்பனைக் கதிர்களை உடையவராக இருந்ததுடன், ஏனையவர்களின் தேவைகள் சம்பந்தமான விடயத்தில் ஒருவருடன் ஒப்பிட்டால், ஒரு மேதமையை காட்டுமளவுக்கு அவர் நோக்கங்களில் விடாப்பிடியானவராக இருந்தார். 1920 முதலே அவர் இந்த படங்களை அசையாத உறுதியுடன், புத்தி கூர்மையுடன், வரலாற்று பெறுமதிகள் பற்றிய புத்திசாலித்தனமான உணர்வுடன் சேகரித்து வந்தார். மற்றும் தான் ஏற்கனவே வைத்திருந்தவற்றில் எதையும் இழந்துவிடாமல் தான் விரும்பியதைப் பெறுவதில் ஒப்பிட முடியா திறமையை அவர் கொண்டிருந்தார்.

"அக்செல்பேங்க், இந்த படத்தை தொகுப்பதற்கும், காட்சிகளை விவரிக்கும் இணைக்கூற்றுகளை எழுதவும், திட்டத்தின் நிதி தேவைக்கு பணம் சேகரிக்கவும் ஈஸ்ட்மன் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார். அக்செல்பேங்க், ஈஸ்ட்மனைத் தேர்வுசெய்தமை உள்ளூக்கம் அளிப்பதாகும். போல்ஷிவிக் புரட்சியின் ஆரம்பகால அமெரிக்க ஆதரவாளரான ஈஸ்ட்மன், சோவியத் ஒன்றியத்திற்கு 1920களில் பயணித்து, சோவியத் ஆட்சியின் பல தலைவர்களுடன் -எல்லாவற்றிற்கும் மேலாக லியோன் ட்ரொட்ஸ்கி உடன்- நெருக்கமான அரசியல் மற்றும் தனிப்பட்ட உறவுகளை உருவாக்கிக் கொண்டார். 1920களின் மத்தியில், ஈஸ்ட்மன், இளம் ட்ரொட்ஸ்கி (The Young Trotsky) என்ற வாழ்க்கை வரலாற்றை எழுதியதோடு மட்டுமன்றி, மேலும் மேலும் சக்திவாய்ந்த சோவியத் அதிகாரத்துவம் மற்றும் அதன் தலைவர் ஜோசப் ஸ்டாலினுக்கு எதிராக ட்ரொட்ஸ்கி நடத்திய அரசியல் போராட்டத்தை பற்றி சர்வதேச பார்வையாளர்களுக்கு முதலாவது விரிவான மதிப்பீட்டை வழங்கியிருந்தார்.

ஈஸ்ட்மன் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, அந்த திட்டத்தில் தன்னையே இணைத்துக்கொண்டார். 1929 பிற்பகுதியில், ஐரோப்பாவிற்கான பயணத்தின் போது, அவர் மேலதிக காட்சிகளுடன் அக்ஸெல்பேங்கின் திரைப்பட காப்பகத்தை விரிவாக்கினார். புரட்சிக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர், ஸார் தனது கூட்டாளிகளுடன் நிர்வாணமாக நீச்சலடிக்கும் வியத்தகு காட்சியும் இதில் அடங்கும். [முழுமைப்படுத்தப்பட்ட விவரணத்தில்], "ஒரு மன்னரின் உண்மையான தோற்றத்தை உலகம் அப்படியே கண்டது இதுவே முதல் முறை!" என இந்த காட்சியை ஈஸ்ட்மன் வேறுபட்ட பார்வையில் விளக்கியிருந்தார்.

ஈஸ்ட்மன், போல்ஷிவிக்குகளால் தூக்கி எறியப்பட்ட தற்காலிக அரசாங்கத்தின் தலைவரும் நாடுகடந்து வாழ்ந்தவருமான அலெக்ஸாண்டர் கெரென்ஸ்கியையும் சில நிமிட பட காட்சிக்கு போஸ் கொடுக்க இணங்க வைத்தார். அவரை அமெரிக்க புகைப்படக் கலைஞர் மேன் ரே படமெடுத்தார். 1917 மற்றும் 1921க்கு இடையிலான தீர்க்கமான புரட்சிகர ஆண்டுகளில், ஸ்ராலினின் எந்தவொரு கானொளிப் பதிவையும் ஈஸ்ட்மனால் கண்டுபிடிக்க முடியாமல் போனது. அத்தகைய பதிவு இல்லாததற்கான காரணம், போல்ஷிவிக்குகள் அதிகாரத்தை கைப்பற்றுகையில் ஸ்ராலினின் வகிபாகம் புரட்சிகர நிழற்படப் பிடிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போதுமானளவு முக்கியத்துவமானதாக இருக்கவில்லை என்பதே.

1931 ஜனவரியில் இந்த படம் பூரணப்படுத்தப்பட்டது. ஸார் டு லெனின் பிரமாண்டமான பார்வையாளர்களை ஈர்க்கும் என்று ஈஸ்ட்மன் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் தனது வரலாற்றுக் குறிப்பில் நினைவு கூர்ந்ததாவது:

"புரட்சியில் ஆர்வம் தீவிரமாகவும் இன்னமும் பெருமளவில் மனக் குழப்பமில்லாமலும் இருந்தது –அது கிரெம்ளினில் உள்ள வரலாற்றை மீள் உருவாக்கம் செய்பவர்களால் இன்னமும் திசைதிருப்பப்பட்டு கட்டுப்படுத்தப்படவில்லை. அதாவது, அக்டோபர் எழுச்சியை ஒழுங்கமைத்து, செஞ்சேனையை வெற்றியை நோக்கி வழிநடத்தியது ட்ரொட்ஸ்கியே என அறிவார்ந்த அமெரிக்கர்கள் இன்னமும் நினைவு கூர்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஸ்ராலினின் உதவியின்றி லெனினால் தெருவை கடக்கக் கூடியதாக இருந்தது."

இந்தத் திரைப்படத்தை விற்கவும் தொழில்முறை அலைவரிசைகள் ஊடாக பரவலான விநியோகத்தை ஈட்டவும் ஈஸ்ட்மன் திட்டமிட்டிருந்தார். அவ்வாறு திரைப்படத்தை முதலில் பார்வையிட்டவர்களில் சார்லி சாப்ளினும் ஒருவர். அவர் ஆர்வத்துடன் பதிலளித்தார். இருப்பினும், இந்த கட்டத்தில், ஈஸ்ட்மன் மற்றும் அக்ஸெல்பேங்க் இடையேயான உறவுகள் பிளவுண்டன. ஸார் முதல் லெனின் வரை திரைப்படத்தை உருவாக்க தனது முழு இளமைக் காலத்தையும் அர்ப்பணித்ததோடு, திரைப்படத்தின் மகத்தான வரலாற்று மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை நன்கு அறிந்திருந்த அக்ஸெல்பேங்க், கொலம்பியா பிக்சர்ஸ் போன்ற சக்தி வாய்ந்த ஹொலிவுட் நிறுவனத்திற்கு படம் விற்கப்படுவதன் விளைவுகளைப் பற்றி அஞ்சினார். ஈஸ்ட்மனின் உள்நோக்கங்கள் பற்றி அவர் கொண்டிருந்த சந்தேகங்கள் சரியானதாக இல்லாவிட்டாலும், அடுத்தடுத்து வந்த நிகழ்வுகள், அக்ஸெல்பேங்கின் அச்சங்களை நியாயமானவையாக காட்டின. ஈஸ்ட்மன் இந்த திரைப்படத்தை திருட முயற்சிக்கிறார் என்று அவர் குற்றம்சாட்டினார். இருவருக்கும் இடையேயான முரண்பாடுகள் ஆறு ஆண்டுகளுக்கு ஸார் டு லெனின் வெளியிடப்படுவதை தாமதப்படுத்தின!

இந்த தாமதம் முற்றிலும் வீணானதாக இருக்கவில்லை. ஈஸ்ட்மன் மற்றும் அக்செல்பேங்கிற்கு இடையிலான சட்டரீதியான சச்சரவு ஓரளவு தீர்க்கப்பட்ட காலப்பகுதியில், ஒலித் தொழில்நுட்பத்தின் அபிவிருத்தி மிகவும் முன்னேறியதாக இருந்ததுடன் இதுவரை விவரணத் திரைப்படத்துக்காக எழுதப்பட்ட இணைக்கூற்றுக்கள் பற்றாக்குறையாக இருந்தன. இவ்விதத்தில், மெய்யான விருப்பத்துடனும் ஒரு நடிகரின் உணர்வைக் கொண்டும் ஸார் டு லெனின் திரைப்படத்துக்கு மேலான விவரணத்தை ஈஸ்ட்மன் வழங்கினார்.

1937 மார்ச் 6 அன்று, நியூயோர்க் நகரத்தில் ஐம்பத்து-எட்டாவது தெருவில் உள்ள ஃபிலிமார்டே திரையரங்கில் படம் திரையிடப்பட்டது. பொது மக்களை இது சென்றடைய ஒன்பது ஆண்டுகள் ஆனது, அதே நேரம், விமர்சனப்பூர்வமான மற்றும் வெகுஜன பிரதிபலிப்பு பேரளவிலானதாக இருந்தது. நியு யோர்க் டைம்ஸ் பத்திரிகை ஸார் டு லெனினை "ஒரு முக்கியமான வேலை… ரஷ்ய புரட்சியைப் பற்றிய ஒரு முழுமையான, பாரபட்சமற்ற மற்றும் புத்திஜீவித்தனமான திரைப்பட வரலாறு" என்று பாராட்டியது. நியூயோர்க் போஸ்ட் பத்திரிகையின் விமர்சகர், "என் வாழ்க்கையில் நான் பார்த்த மிக முக்கியமான திடைப்படம்... திரைப்பட வரலாற்றில் என் மனதை ஈர்த்துக்கொண்ட மிகவும் முக்கியமான திரைப்படம்,” என விவரித்தார்.

படத்தைப் பார்வையிட பெரும் கூட்டம் வந்தது. ஆனால், சோவியத் அரசாங்கமும் முற்றிலும் ஸ்ராலினிசமயப்பட்ட அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியும், திரைப்படத்தின் மதிப்பைக் கெடுக்கவும் அதன் காட்சிகளைத் தடை செய்யவும் ஒரு பாரிய பிரச்சாரத்தை விரைவில் ஏற்பாடு செய்தன. மொஸ்கோ விசாரணைகளின் மத்தியிலும் பழைய போல்ஷிவிக்குகள் கொன்று அழிக்கப்பட்ட காலத்திலும் இந்த திரைப்படம் வெளிவந்ததால், ஸ்டாலினிச ஆட்சியானது வரலாற்றை பொய்மைப்படுத்தும் தனது முயற்சிகளுக்கு ஒரு ஆபத்தான தடையாக அதைக் கண்டது. ஈஸ்ட்மன் பின்வருமாறு நினைவு கூர்ந்தார்:

ட்ரொட்ஸ்கி அக்டோபர் எழுச்சியை வழிநடத்தி, செஞ்சேனையை ஒழுங்கமைத்தார் -திரைப்படங்கள் அவ்வாறே கூறின- ஆனால் ஸ்ராலின் மொத்த அதிகாரத்தில் இருந்தார். ஃபிலிமார்டே திரயரங்குக்கு அப்பால் ஸார் டு லெனின் ஒரு சில டொலர்களைக் கூட அதிகமாகப் பெறவில்லை. [நியூயோர்க் பிரஸ் பத்திரிகையிலிருந்து] புகழ்பாடப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பின்னர், பெரிய கொட்டெழுத்துடன் கட்டுரையொன்று [கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாளான] டெய்லி வேர்கர் பத்திரிகையில் வெளிவந்தது:

"சோவியத் சோசலிச நிலத்துரோகிகளில் ட்ரொட்ஸ்கி குழுவின் முதன்மை ஆதரவாளரான மக்ஸ் ஈஸ்ட்மன், செய்தித் தொகுதிகளையும் ஆவணப் பாகங்களையும் ஒன்றுசேர்த்துள்ளார். இந்த மனிதன் திரிபுபடுத்தல், சொற்புரட்டு, தந்திரம், மறைமுக அவதூறு மற்றும் அப்பட்டமான பொய்களின் நிபுணர் ஆவார்... ஸார் டு லெனின் பகிஷ்கரிக்கப்பட வேண்டும்... ஃபிலிமார்டே திரையரங்கின் நிர்வாகத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்... ஸார் டு லெனின் கலப்படமில்லாத ட்ரொட்ஸ்கிச பிரச்சாரமாகும் என்பதை ஏனைய திரையரங்குகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும், மற்றும் சுதந்திரத்தின் நண்பர்கள் அத்தகையவற்றை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை தெளிவாக்க வேண்டும். ... ஸார் டு லெனினை பகிஷ்கரி!"

டெய்லி வேர்கர் பத்திரிகையின் ட்ரொட்ஸ்கி-விரோத அடுக்குகளை விட, திரைக்குப் பின்னால் சோவியத் ஆட்சி ஏற்பாடு செய்த பிரச்சாரம் மிகவும் நயவஞ்சகமானது. அது, ஸார் டு லெனினை திரையரங்குகளில் வைத்தால், பிரபலமான செர்ஜி ஐசென்ஸ்டீன் போன்றவர்களின் திரைப்படங்களைப் போன்ற சோவியத் திரைப்படங்களை சந்தைப்படுத்த அனுமதிக்க முடியாது என்று விநியோகஸ்தர்களை அச்சுறுத்தியது. இந்த பிரச்சாரம் மிகவும் விளைபயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டது. ஸார் டு லெனின் "எப்போதும் ஓடவே இல்லை. அனைத்து நடப்பு நோக்கங்களுக்காகவும் ஃபிலிமார்டேயில் அது அடைந்த வெற்றி, அதன் முடிவாக இருந்தது,” என ஈஸ்ட்மன் நினைவு கூர்ந்தார்.

ஒரு வாய்ச்சொல் உள்ளது: புத்தகங்கள் சொந்த தலைவிதியைக் கொண்டுள்ளன. திரைப்படங்களைப் பொறுத்தளவிலும் இது உண்மைதான். ஸார் டு லெனின் அதன் சொந்த கலைத்துவமிக்க மற்றும் வரலாற்று உள்ளடக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. புரட்சி மற்றும் அதில் ட்ரொட்ஸ்கியின் வகிபாகத்தைப் பற்றிய உண்மைகளை திரைப்படம் துல்லியமாக சித்தரித்துக் காட்டுவதை ஜீரனிக்க முடியாத ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் தாராளவாத இடதுகளாலும் அது முதலில் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

குளிர் யுத்த தொடக்கத்துடன், ஹேர்மன் அக்ஸெல்பேங்குக்கும் அவரது விவரணத் திரைப்படத்துக்கும் புதிய பிரச்சினைகள் தோன்றின. ஒரு சாதகமான வெளிச்சத்தில் அக்டோபர் புரட்சியையும் போல்ஷிவிக்குகளையும் காட்டுகின்ற ஒரு திரைப்படத்தை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் திரையிடும் சாத்தியம் இல்லாமல் போனது. ஈஸ்ட்மனே வலது பக்கம் சென்றிருந்ததோடு, தான் மறைக்க முயற்சித்த தீவிரவாத நோக்குநிலை அந்த விவரிப்பில் வெளிப்படுவதால், திரையிடல்களை தடுக்கவும் அவர் முயற்சித்தார். அக்ஸெல்பேங்க் இன்னுமொரு விவரிப்பை குரல் பதிவுசெய்து தனது திரைப்படத்தை பாதுகாக்க முயற்சித்தார். இந்த வடிவத்தில் இந்த திரைப்படம் சிறிய திரையரங்குகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அவ்வப்போது திரையிடப்பட்டது. ஆனால் அந்த விவரிப்பு ஈஸ்ட்மனின் அசல் விவரிப்பை கம்யூனிஸ்ட்-விரோதமாக கேலிக்கு உள்ளாக்குவதாகவும் அக்ஸெல்பேங்க் வழங்கிய படங்களை ஏளனம் செய்வதாகவும் இருந்தது.

1969ல் ஈஸ்ட்மன் 86 வயதில் இறந்தார். பின்னர் அக்ஸெல்பேங்கின் திரைப்படம் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டது. 1970 களின் நடுப்பகுதி வரை, சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான தொழிலாளர் கழகம், ஹெர்மன் அக்ஸெல்பேங்குடன் தொடர்பை ஏற்படுத்தும் வரை மறக்கப்பட்டே இருந்தது. அக்ஸெல்பேங்க் தனது எழுபதுகளின் நடுப்பகுதியிலும் அவர் எப்பொழுதும் இருந்ததைப் போலவே போர் மனப்பான்மையுடன் இருந்தார்.

ஒரு போதும் இழந்துவிடாமல் இருப்பதற்காக இந்த திரைப்படத்தை வாங்குவதற்கு தொழிலாளர் கழகம் ஆர்வமாக உள்ளது என்று ஹெர்மனுக்கு நான் தெரிவித்தேன். அக்ஸெல்பேங்கின் ஆரம்ப கோரிக்கைகளை அடைய முடியாமல் இருந்தது. "கெஞ்சு, கடன் வாங்கு அல்லது திருடு" என்ற விதத்திலேயே அவர் மிகவும் கனிவான வார்தைகளிலான எனது வேண்டுகோள்களுக்கு பிரதிபலித்தார். ஆனால் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், ஒரு உடன்படிக்கை எட்டப்பட்டது. 1978 ஜனவரியில் ஸார் டு லெனின் உரிமையை அக்ஸெல்பேங்க் தொழிலாளர் கழகத்திற்கு மாற்றினார். விறுவிறுப்பான முடிவாக, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் 1979 ஜூலையில் அக்ஸெல்பேங்க் திடீரென்று காலமானார்.

அடுத்து வந்த ஆண்டுகளில், தொழிலாளர் கழகமும் அதன் பின்வந்த அமைப்பான சோசலிச சமத்துவக் கட்சியும், பல திரையிடல்களை ஏற்பாடு செய்தன. ஸார் டு லெனின் திரையிடல்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் சோ.ச.க.யின் சக அரசியல் சிந்தனையாளர்களால் உலகம் முழுதும் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால் அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு நெருங்குகின்ற நிலையில், அக்டோபர் புரட்சியை புரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் கிடைக்கக் கூடியவாறு, இந்த அசாதாரணமான திரைப்படத்தின் பிரதிகளை டிவிடி வடிவில் உருவாக்குவதற்கான காலம் நெருங்கிவிட்டது.

அதன் முதல் காட்சிப்படுத்தலில் இருந்து எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஸார் டு லெனினின் முக்கியத்துவம் குறையாமல் உள்ளது. உண்மையில் 1991ல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மூலம் தூண்டிவிடப்பட்ட வரலாற்று பொய்மைப்படுத்தல்களின் புதிய அலை, இந்தப் படத்திற்கு விதிவிலக்கான பொருத்தத்தை கொடுத்துள்ளது. உலக முதலாளித்துவ நெருக்கடியின் புதிய காலகட்டத்தில் -பொருளாதார வீழ்ச்சி, பரந்த சமூக சமத்துவமின்மை மற்றும் இராணுவவாதத்தை விரிவுபடுத்துதலின் மத்தியில்- ஸார் டு லெனின், உலக வரலாற்றில் சோசலிசக் கொள்கைகள் மிகப்பெரிய புரட்சிகர இயக்கத்தை ஊக்கப்படுத்திய ஒரு தருணத்திற்கு சாட்சி பகர்கின்றது.

டேவிட் நோர்த்
5 ஜூலை 2012

ஸார் டு லெனின் பிரதியைப் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்