ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Washington is preparing for nuclear war in Europe

வாஷிங்டன் ஐரோப்பாவில் அணுஆயுத போருக்குத் தயாரிப்பு செய்கிறது

By Johannes Stern
2 September 2017

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே அதிகரித்து வரும் இராணுவ மற்றும் இராஜாங்க பதட்டங்களுக்கு இடையே, ஜேர்மன் நாளிதழ் Süddeutsche Zeitung வெள்ளியன்று அறிவிக்கையில், அமெரிக்க காங்கிரஸ் மத்தியதூர அணுஆயுத தளவாடங்கள் மீதான உடன்படிக்கையிலிருந்து (Intermediate Range Nuclear Forces - INF) வாஷிங்டன் வெளியேறுவதற்கான முதல் படியை எடுத்துள்ளதாக குறிப்பிட்டது.

INF, அல்லது மத்தியதூர அணுஆயுத அமைப்புமுறை மீதான வாஷிங்டன் உடன்படிக்கை என்பது (500 இல் இருந்து 5,500 மைல் தூரங்களுக்கு இடையே பயன்படுத்தப்படும்) குறுகியதூர மற்றும் மத்தியதூர ஏவுகணைகளை பயன்பாட்டில் இருந்து நீக்குவது மற்றும் அவற்றின் உற்பத்திக்கு தடைவிதிப்பது மீது அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு இடையே எட்டப்பட்ட ஒரு இருதரப்பு உடன்படிக்கையாகும்.

அமெரிக்க ஜனாதிபதி ரோனால்ட் ரீகன் மற்றும் சோவியத் தலைவர் மிக்கைல் கோர்பசேவ் ஆல், 8 டிசம்பர் 1987 அன்று கையெழுத்தான இந்த உடன்படிக்கை, ஐரோப்பாவில் அமெரிக்க அணுஆயுதங்களைக் கணிசமானளவிற்குக் குறைக்க இட்டுச் சென்றது. அதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அணுஆயுதமேந்திய மத்தியதூர பெர்ஷிங் II (Pershing II) ரக ஏவுகணைகள் மேற்கு ஐரோப்பாவில் நிலைநிறுத்தப்பட்ட போது அது வரையில் வரலாற்றில் இல்லாதளவில் மிகப்பெரிய அமைதிக்கான ஆர்ப்பாட்டாங்களை தூண்டிவிட்டிருந்த நிலையில், அவை திரும்பப் பெறப்பட்டன.

“அமெரிக்கா புதிய ஏவுகணைகளை உருவாக்கி, ஐரோப்பாவில் அவற்றை நிலைநிறுத்தும்,” என்பது தான் இப்போதைய அபாயமாக உள்ளது என்று Süddeutsche Zeitung எச்சரித்தது. ஒரு மிகப்பெரிய மாற்றம் "இயக்கத்திற்குக்" கொண்டு வரப்பட்டு, ஐரோப்பா "ஒரு புதிய அணுஆயுத சகாப்தத்தின் விளிம்பில் … " நிற்கக்கூடும், “... மத்தியதூர அணுஆயுத ஏவுகணைகள் பனிப்போர் கால பயங்கரமாக இருந்தன … முப்பது ஆண்டுகளுக்கு பின்னர், அந்த பயங்கரம் மீண்டும் திரும்பி வந்துள்ளது.”

அமெரிக்க-ரஷ்ய உறவுகள் "ஆழமாக முடங்கி" போயுள்ளதுடன், இரு தரப்பிலிருந்தும் "அவற்றின் அணுஆயுத தளவாடங்களைப் பரந்தளவில் நவீனப்படுத்துவதற்கான" உத்தேசங்கள் குறித்து அறிவிப்புகள் வருகின்றன என்பதே, அப்பத்திரிக்கையின் கருத்துப்படி, அந்த உடன்படிக்கை முறிக்கப்படலாம் என்பதற்கான காரணமாக உள்ளது.

குறிப்பிடும் வகையில், ஜேர்மன் பத்திரிகைகளில் இருந்து வரும் வெடிப்பார்ந்த செய்திகள் முற்றிலுமாக அமெரிக்க பத்திரிகை மற்றும் ஒளி/ஒலிபரப்பு ஊடகங்களில் அலட்சியமாக விட்டுவிடப்படுகின்றன.

இந்த செய்தியானது, மேற்கு ரஷ்யா, பெலாரஸ், கலினின்கிராட் ரஷியன் பகுதியில் ரஷ்ய இராணுவம் இம்மாத இறுதியில் திட்டமிட்டுள்ள இராணுவ ஒத்திகைகள் குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோவினது விஷமப்பிரச்சாரம் அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு இடையே வந்தது, அத்துடன் வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் ஆயுத கையிருப்புகளை முன்கூட்டியே தயார் செய்து வைக்க மற்றும் பால்டிக் நாடுகள் மீது ஒரு படையெடுப்பைத் தயாரிப்பு செய்ய அந்த இராணுவ ஒத்திகைகளை ஒரு "பொய் காரணமாக" பயன்படுத்தப்படலாம் என்று கூறி வருகின்றன.

இந்த போர் பயிற்சிகளுக்கு முன்னதாக, பென்டகன், பால்டிக்கில் கூடுதலாக 600 அமெரிக்க விமானப்படை துருப்புகளுடன் சேர்த்து லித்துவேனியாவின் இராணுவத் தளத்தில் ஏழு அமெரிக்க F-15C ரக போர்விமானங்களை நிலைநிறுத்தி உள்ளது.

ரஷ்யாவிலிருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகளை ரஷ்யா வெளியேற்றியதற்கு எதிராக (இதுவே கூட முன்னதாக அமெரிக்காவிலிருந்து ரஷ்யர்களை வெளியேற்றியதற்கு விடையிறுப்பாக பதிலுக்குபதில் நடவடிக்கையாகும்) பழிவாங்கும் நடவடிக்கையாக, ட்ரம்ப் நிர்வாகம், வாஷிங்டன், நியூ யோர்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் மூன்று ரஷ்ய தூதரங்களை மூடுவதற்கு உத்தரவிட்ட நிலையில், இந்த இராணுவ ஆயத்தப்படுத்தல், இராஜாங்கரீதியில் ஒரு மிகப்பெரிய அமெரிக்க ஆத்திரமூட்டலுடன் இணைந்து நடத்தப்படுகிறது. அந்நடவடிக்கையை ஒரு சர்வதேச சட்டமீறலாக மாஸ்கோ குற்றஞ்சாட்டியுள்ளது, அந்நடவடிக்கை, சான் பிரான்சிஸ்கோ தூதரகம் மற்றும் ரஷ்ய தூதரக அதிகாரிகளது வீடுகளில் FBI தேடல்களை உள்ளடக்கி இருந்ததாக அது கூறியது.

உலகின் இரண்டு மிகப்பெரிய சக்திகளுக்கு இடையே அதிகரித்து வரும் இந்த அபாயகரமான மோதல், சர்வதேச அளவில், குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் போர் அபாயங்கள் அதிகரித்து வரும் உள்ளடக்கத்தில் கட்டவிழ்ந்து வருகிறது. வெள்ளியன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் எச்சரிக்கையில், அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்கு இடையே அதிகரித்து வரும் ஆத்திரமூட்டும் மோதல் அப்பிராந்தியத்தை "ஒரு மிகப்பெரியளவிலான மோதல் விளிம்பின் சமநிலையில்" நிறுத்தி உள்ளதாக எச்சரித்தார்.

இந்த உள்ளடக்கத்தில் தான், ஐரோப்பிய கண்டம் மீதான அபாயகரமான அணுஆயுத இராஜதந்திரத்தின் ஒரு தீவிரப்பாடு குறித்த அச்சுறுத்தல்கள், இதுபோன்றவொரு உடனடி அபாயத்தை முன்னிறுத்துகிறது.

இரகசியமானதென குறிப்பிடப்பட்ட ஒரு நேட்டோ ஆவணம், இதை Süddeutsche Zeitung மற்றும் பிராந்திய பொது ஒளிபரப்புனர்களான NDR மற்றும் WDR இன் ஒரு கூட்டு ஆய்வு குழு கைவரப்பெற்றிருந்த நிலையில், நேட்டோ ரஷ்யாவுக்கு எதிராக எவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என்ற 39 முன்மொழிவுகளைக் கொண்டுள்ளது. இராஜாங்க அதிகாரிகளைப் பொறுத்த வரையில், “நேட்டோவிற்குள் உள்ள உத்தியோகபூர்வ ஆலோசனைகள்" அமெரிக்காவின் முயற்சியில் இலையுதிர்காலத்தில் முன்னெடுக்கப்படலாம். அந்த ஆவணம், மிகக் கவனமாக "வகைப்பாடுகளாக, 'கருதத்தக்கது', 'தற்போதைக்கு தவிர்க்கக்கூடியது' மற்றும் 'பரிந்துரைக்குரியதல்ல' என்று பிரிக்கப்பட்ட" “இருக்கும் சகல வாய்ப்புகளது ஒரு தொகுப்பாக" இருந்தது.

INF உடன்படிக்கைக்குப் பொருத்தமானதாக நேட்டோ கருதுகின்ற ஒரு டஜனுக்கும் அதிகமான "கருதத்தக்க" வாய்ப்புகளும் கூட, “ஏற்கனவே பதட்டமாக உள்ள உறவுகளைத் தீவிரப்படுத்தும்" என்று Süddeutsche Zeitung குறிப்பிடுகிறது. “அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு B-2 மற்றும் B-52 ரக குண்டுவீசிகளை சுழற்சி முறையில் அதிகரிப்பது,” “முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புமுறைகளை மற்றும் ஏவுகணை அல்லது நீர்மூழ்கிக்கப்பல் பாதுகாப்பை விரிவாக்குவது,” மற்றும் "தாக்குதல்களுக்கு எதிராக இராணுவ மற்றும் உள்துறை உள்கட்டமைப்பை" பலப்படுத்துவது ஆகியவை அந்த முன்மொழிவுகளில் உள்ளடங்கி உள்ளன. ஒரு அணுஆயுத பதில் தாக்குதல், “அணுஆயுத சமிக்ஞைக்கான" அதிகரித்த தயார்நிலை மற்றும் தகைமை, “கருதத்தக்க" வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இரண்டு முன்மொழிவுகள் ஆத்திரமூட்டுவதாக உள்ளன: “அணுஆயுத இலக்குகளை திட்டமிடல் என்பதை விரிவாக்குவது—அதாவது அணுஆயுதங்களுக்கான இலக்குகளை அடையாளங்கண்டு உறுதிப்படுத்தி வைப்பது,” மற்றும் "போர் ஏற்பட்டால் இந்த குண்டுகளை வீசக்கூடிய விமானத்தளங்களில் செயல்பாட்டுக்குரிய தயார்நிலையை அதிகரிப்பது.” இதில், “எச்சரிக்கையோடு இருப்பதற்கும் நேட்டோ ஆலோசனை வழங்குகிறது,” என்று Süddeutsche குறிப்பிட்டது. இலக்குகளை உறுதிப்படுத்துவதென்பது, அதாவது ஓர் அணுஆயுத தாக்குதலுக்கு உறுதியாக திட்டமிடல், மனிதயினத்தையே நிர்மூலமாக்கக் கூடிய ஒரு அணுஆயுத போரை ரஷ்யாவுடன் துரிதமாக தூண்டிவிடும்.

Süddeutsche Zeitung தகவல்படி, அமெரிக்கா INF உடன்படிக்கையை முறித்துக் கொண்டால், “ஒரு புதிய பனிப்போருக்குள் மேற்கொண்டு அடியெடுத்து வைப்பதாக, புதிய ரக ஏவுகணைகளைக் கட்டமைப்பது, பரிசோதிப்பது மற்றும் நிலைநிறுத்துவது என தற்போது 'பரிந்துரைக்கு உரியதல்ல' என்ற வகைப்பாட்டில் காணப்படும் நடவடிக்கைகள் கருதத்தக்கதாக [மாறக்கூடும்].”

ரஷ்யாவுக்கு எதிரான வாஷிங்டனின் அதிகரித்தளவிலான ஆக்ரோஷ போர் முனைவால் ஜேர்மன் ஆளும் வர்க்கம் தீவிரமாக கவலை கொண்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியல் (சமூக ஜனநாயகக் கட்சி, SPD) வியாழனன்று ஒரு நேர்காணலில், “பனிப்போரின் மோசமான தவறுகளை மீண்டும் செய்வதற்கு" எதிராக எச்சரித்தார். “நாம் இரண்டாம் பனிப்போர் நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ஆயுதக்குறைப்பு மற்றும் ஆயுத கட்டுப்பாடுகள் மீது கோர்பசேவ் மற்றும் ரீகனின் அருமையான அனைத்து உடன்படிக்கைகளும் கூர்மையான ஆபத்தில் உள்ளன. ஐரோப்பா அணுஆயுதங்களுக்கான ஒரு இராணுவ பயிற்சிக்களமாக மாறுகிறது என்பதால் மீண்டுமொருமுறை அச்சுறுத்தப்பட்டுள்ளது.

அவர் தொடர்ந்து கூறுகையில், “இதில் திருமதி. மேர்க்கெல் மவுனமாக இருப்பது தவறு. அனைத்து நாடுகளுக்குமாக ஜேர்மனி இதற்கு எதிராக குரலெழுப்ப வேண்டும். நாம் சமாதானத்திற்கான ஒரு சக்தியாக மற்றும் ஆயுத சுருள்வட்ட வளர்ச்சியை எதிர்க்கும் ஒரு சக்தியாக உறுதியாக இருக்க வேண்டும். அந்த உள்ளடக்கத்தில், முடிவாக நமது நாட்டை அணு ஆயுங்களிலிருந்து விடுவிப்பதில் கவனம் குவிக்க வேண்டும் என்ற [SPD சான்சிலர் வேட்பாளர்] மார்ட்டின் சூல்ஸ் இன் கூற்றை சரியானதாக நான் காண்கிறேன்” என்றார்.

சூல்ஸ் மற்றும் காப்ரியல் ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையில் உள்ளனர், மேலும் பூமியின் பிற பகுதி மக்களைப் போலவே ஜேர்மனி மக்களில் பாரிய பெரும்பான்மையினரும் இராணுவ மீள்ஆயுதமயப்படுத்தல் மற்றும் போரை எதிர்க்கின்றனர் என்பதும் மற்றும் ஜேர்மனியில் இப்போதும் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க அணுஆயுதங்களைத் திரும்பப் பெறுவதை அவர்கள் வரவேற்பார்கள் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும்.

அவ்விரு சமூக ஜனநாயக கட்சி அரசியல்வாதிகளும் எந்த விதத்திலும் சமாதானத்திற்கு பொறுப்பேற்றவர்கள் கிடையாது, மாறாக அவர்கள் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தை வழிநடத்தும் பிரதிநிதிகளாக உள்ளன. அவர்கள் அணுஆயுதங்களின் மீள்ஆயுதமயமாக்கலுக்கான அமெரிக்க திட்டங்களை எதிர்க்கின்றனர் ஏனென்றால் பனிப்போர் நிலைமைகள் திரும்ப வருவதென்பது உலக வல்லரசாகும் ஜேர்மனியின் சொந்த திட்டங்களை ஆபத்திற்குட்படுத்தி, பேர்லின் அமெரிக்காவைச் சார்ந்திருந்திருப்பதை அதிகரிக்கும் என்பதால் ஆகும். அது, முன்பினும் அதிகமாக வாஷிங்டனின் பொருளாதார மற்றும் புவிஅரசியல் நலன்களுடன் முரண்பட்டுள்ள ஜேர்மனியின் பொருளாதார மற்றும் புவிஅரசியல் நலன்களுக்கு குழிபறிக்கும்.

ஜூலையில், காப்ரியல் ரஷ்யாவுக்கு எதிரான சமீபத்திய அமெரிக்க தடைகளைப் பலமாக விமர்சித்தார். "ரஷ்யாவின் கிழக்கு உக்ரேனிய நடவடிக்கைகள் மற்றும் கிரிமியாவை ரஷ்யா சட்டவிரோதமாக இணைத்துக் கொண்டதற்கு" ஐரோப்பாவும் அமெரிக்காவும் "கூட்டாக மற்றும் நெருக்கமான கலந்தாலோசனைகளைக் கொண்டு பதிலளித்தன,” என்றாலும், “ஐரோப்பிய எரிசக்தி வினியோகங்களின் விரிவாக்கத்தில் பங்களிப்பு செய்யும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு எதிராக சட்டவிரோதமாக எல்லைக்கடந்த தடையாணைகளைக் கொண்டு அச்சுறுத்துவதை!" ஏற்பது சாத்தியமில்லை என்றார். ஐரோப்பாவிற்கான எரிசக்தி வினியோகம், “ஐரோப்பிய விவகாரமாகும், அது அமெரிக்கா சம்பந்தப்பட்டதல்ல!” என்றார்.

அமெரிக்காவிடமிருந்து வந்த சமீபத்திய அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து சமூக ஜனநாயகவாதிகள் டொனால்டு ட்ரம்பின் வலதுசாரி, இராணுவவாத கொள்கைகளுக்கு எதிரான பரந்த எதிர்ப்பை ஜேர்மன் இராணுவவாதத்திற்கான ஆதரவிற்குள் திருப்பிவிட முயற்சிக்கும் பாதையில் பயணிக்கின்றனர். “ட்ரம்ப் மிதமிஞ்சி, ஒரு போரைக் கிளறிவிடுவாரென பல ஜேர்மனியர்கள் நியாயமாகவே அஞ்சுவதாக" அவர் கருதுகிறாரா என்று வினவிய போது, காப்ரியல் விடையிறுக்கையில், “அமெரிக்கா எப்போதைக்கும் மேற்கிடம் தோற்குமென நான் கவலையுறுகிறேன். டொனால்டு ட்ரம்பைச் சுற்றியுள்ள சிலர் சட்டத்தின் ஆட்சியை பலத்தின் ஆட்சியைக் கொண்டு பிரதியீடு செய்ய விரும்புகிறார்கள். இதற்கு எதிராக நம்மை நாம் காட்ட வேண்டும்,” என்றார்.

சிந்தனைக்குழாம்கள் மற்றும் பிரதான அரசியல் கட்சிகள் வெளியிட்ட ஆவணங்கள், ஜேர்மன் ஏகாதிபத்தியம் அதன் நலன்களை "வலியுறுத்த" அது பயன்படுத்த உத்தேசிக்கும் அணுகுமுறை விதங்களை எடுத்துரைக்கின்றன. “சமூக ஜனநாயக பாதுகாப்பு மற்றும் தற்காப்பு கொள்கைக்கான கோட்பாடுகள்" என்பதில் SPD எழுதுகிறது, “நெருக்கடிகள், இணைய பாதுகாப்பு, மற்றும் நமது சொந்த மக்களின் பாதுகாப்பைக் கையாள சர்வதேச நிலைநிறுத்தல்களுக்கான அதிகரித்த கோரிக்கைகளுக்கு சமமாக, நம்மிடம் நடவடிக்கைக்குத் தகைமை கொண்ட நவீன ஆயுத படைகள் அவசியப்படுகின்றன. நமக்கு ஓர் இராணுவம் வேண்டும் அதில் […] நெருக்கடி நிலைமைகளுக்கு தயாராக நிலைநிறுத்தத்தக்க துருப்புகள் இருக்க வேண்டும். இதற்காக நாம் சிப்பாய்கள் மற்றும் தளவாடங்களுடன் இராணுவத்தைச் சிறப்பாக ஆயத்தப்படுத்த வேண்டியிருக்கும்.”

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei -SGP) ஒன்று மட்டுமே, ஜேர்மனியின் கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரத்தில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து அமெரிக்காவின் அணுஆயுத ஆயத்தப்படுத்தலை எதிர்க்கும் மற்றும் சமூக சமத்துவமின்மை, இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக ஒரு சோசலிச மூலோபாயத்திற்காக போராடும் ஒரே கட்சியாக பங்கெடுக்கிறது. அட்லாண்டிக்கின் இரண்டு தரப்பிலும் உள்ள முதலாளித்துவ போர்வெறியர்களுக்கு எதிராக, நாம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை எதிர் நிறுத்துகிறோம். அதிகரித்து வரும் அணுஆயுத போர் அபாய நிலைமைகளின் கீழ், இந்த முன்னோக்கு மிக மிகப் பாரியளவில் அவசரமாகிறது.