ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Fears of nuclear war grow after Trump’s threat to annihilate North Korea

வட கொரியாவை நிர்மூலமாக்கும் ட்ரம்ப் அச்சுறுத்தல்களுக்குப் பின்னர், அணுஆயுத போர் அச்சங்கள் அதிகரிக்கின்றன

By Alex Lantier
21 September 2017

செவ்வாயன்று நியூ யோர்க் ஐக்கிய நாடுகள் பொது சபையில், "வட கொரியாவை முற்றிலுமாக அழிக்க" வாஷிங்டன் "தயாராக இருப்பதாக, விரும்புவதாக மற்றும் வல்லமை கொண்டிருப்பதாக" அறிவித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய பாசிசவாத வெறிப்பேச்சு, நேற்று உலகெங்கிலுமான மக்களுக்கு அதிர்ச்சியோடு பீதியூட்டியது.

வட கொரிய ஆட்சியின் கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) அறிவிக்கையில், அதை அழிக்க அமெரிக்க படைகள் தயாராகி வருகின்றன என்பதை கண்டால், அது அமெரிக்க இலக்குகளை இப்போதே தாக்குமென எச்சரித்தது. “அவர்கள் ஆத்திரமூட்டுவதற்கான ஏதேனும் சிறிய அறிகுறி காட்டினாலும்" பியொங்யாங் ஒரு "உறுதியான முன்கூட்டிய தாக்குதலுக்கு தயாரிப்பு செய்யும். அமெரிக்கா முடிவாக மோதல் மற்றும் போரைத் தேர்ந்தெடுக்கும்பட்சத்தில்... அது கொடூரமான அணுஆயுத தாக்குதலையும், துயர்மிகுந்த இறுதி சீரழிவைச் சந்திக்கும்,” என்று KCNA அறிவித்தது.

ஐ.நா. அதிகாரிகளும் உலகின் ஏனைய பிரதான சக்திகளும் ட்ரம்ப் உரைக்கு எதிர்வினைக்காட்டி வந்தாலும், வாஷிங்டன் ஓர் அணுஆயுத போரைத் தொடங்கும் அல்லது தூண்டிவிடும் என்ற அபாயத்திற்கு முன்னால், சர்வதேச அளவில் அரசியல்ரீதியில் திவாலாகியுள்ள ஆளும் உயரடுக்கு, பீதியுற்று குழப்பத்துடன் மறுப்புரை வழங்கும் நிலையில் தான் உள்ளது என்பது முன்பினும் தெளிவாகிறது. உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் மையத்தில் உள்ள இந்த தலையாய ஏகாதிபத்திய ஆதிக்க சக்தியின் இராணுவ தீவிரப்படுத்தலை நிறுத்துவதற்கு அவர்களில் எவரிடமும் எந்த வழியும் இல்லை. ட்ரம்ப் கருத்துக்களின் காட்டுமிராண்டித்தனமான இயல்பின் மீதும், மனிதயினத்தையே அழிக்கவல்ல ஓர் அணுஆயுத போர் அபாயம் குறித்தும் அவர்கள் மவுனமாக உள்ளனர்.

டஜன் கணக்கான நாடுகள் அணுஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஒருநாள் முன்னர் தான், நியூ யோர்க்கின் ஐ.நா. பொதுச்சபையில், ட்ரம்ப், வட கொரிய மக்களுக்கு எதிராக அவரது மனிதயின படுகொலை அச்சுறுத்தல்கள் விடுத்து உரையாற்றி இருந்தார். பிரேசிலிய ஜனாதிபதி மிஷேல் திமெர் அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட முதல் அரசு தலைவராவார். ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், "அணுஆயுதமில்லா உலகை அடைவதற்கான உலகளாவிய குறிக்கோளை நோக்கிய ஒரு முக்கிய படி" என்று அதை பாராட்டினார்.

உண்மையில், அந்த உடன்படிக்கை ஒரு பலவீனமான தந்திர நாடகமாகும். அணுஆயுதங்கள் வைத்திருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸூம் அதை நிராகரித்தன. ஐ.நா. பாதுகாப்பு அவையில் அந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவதை தடுக்க இந்த சக்திகள் ஒவ்வொன்றுக்கும் வீட்டோ அதிகாரம் உள்ளது என்ற நிலையில், இந்த உடன்படிக்கையின் வருகை உயிரற்றதாக உள்ளது. நேட்டோ கூட்டணியும் ஓர் அறிக்கை வெளியிட்டது, அது வட கொரியாவுக்கு எதிரான ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் குறித்து ஒன்றும் கூறாமல், ஆனால் அந்த உடன்படிக்கை "அதிகரித்து வரும் சவாலான பாதுகாப்பு சூழலின் யதார்த்தங்களை மதிக்கவில்லை" என்று கூறி, அதை கண்டனம் செய்தது.

தயாரிக்கப்பட்டு வருகின்ற போரின் அளவைக் குறிப்பிட்ட சில கருத்துரைகளில் ஒன்றாக, சீனாவின் அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் இன் ஒரு கருத்துரை, வட கொரியா மீதான அமெரிக்காவின் ஆரம்பநிலை தாக்குதலே கூட வடகிழக்கு ஆசியாவின் மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதியில் நூறு மில்லியன் கணக்கானவர்களின் உயிரைப் பறிக்குமென எச்சரித்தது. ஆனால் அமெரிக்காவின் ஆரம்பநிலை தாக்குதலுக்குப் பின்னர் என்ன நடக்கும் என்பதை அது கூறவில்லை என்பதோடு, அதன் குறைகூறல்களை ட்ரம்ப் மற்றும் வட கொரியாவுக்கு இடையே சம அளவில் பங்கிட்டு, ட்ரம்ப் மீதான அதன் விமர்சனங்களை மிருதுவாக்க முனைந்தது.

அது எழுதியது, “வட கொரியாவை முழுமையாக அழிப்பது வடகிழக்கு ஆசியாவுக்கு ஒரு தாங்கொணா சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தும். வடகிழக்கு சீனா, ஷன்டொங் தீபகற்பம் மற்றும் தென் கொரியா அனைத்தும் அணுசக்தியின் துணைவிளைவுகளால் சூழப்படும். இதனால் அமெரிக்க ஜனாதிபதி, இராணுவ பலத்தை பெருமைபடுத்துவதற்கு பதிலாக, அதுபோன்றவொரு போரைத் தவிர்க்க முயல வேண்டும்... ஓர் அணுஆயுத போர் மூண்டால், அது பியொங்யாங் மற்றும் வாஷிங்டனால் சீனர்கள் மற்றும் தென் கொரியர்களுக்கு எதிராக நடத்தப்படும் ஒரு குற்றமாக இருக்கும்,” என்று குறிப்பிட்டது.

அதுபோன்றவொரு தாக்குதலுக்கு சீன ஆட்சி எவ்வாறு விடையிறுக்கும் என்பதை குளோபல் டைம்ஸ் குறிப்பிடவில்லை என்றாலும், அதன் அணுஆயுத ஏவுகணைகள் அமெரிக்க கண்டம் முழுவதும் எட்டக்கூடியது என்பது அதற்கு நன்றாக தெரியும். சீனாவும் ரஷ்யாவும் Vladivostok க்கும் கொரிய தீபகற்பத்தின் வடக்கே Okhotsk கடலுக்கும் இடையே ஒரு கூட்டு கடற்படை ஒத்திகை நடத்தின என்பதால், பெய்ஜிங்கும் மாஸ்கோவும் பழிவாங்கும் நடவடிக்கைக்கு தயாரிப்பு செய்து வருகின்றன என்பது தெளிவாகிறது, இது ஆசியா, ஐரோப்பா, மத்தியக் கிழக்கு மற்றும் உலகெங்கிலும் உள்ள அமெரிக்க படைகளுடன் துரிதமாக ஓர் உலகளாவிய போராக வடிவெடுக்கலாம்.

ரஷ்யா தற்போது அதன் Zapad இராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகிறது, நேற்று TASS செய்தி ஸ்தாபனம் அறிவிக்கையில் ரஷ்ய படைகள் வெற்றிகரமாக RS-24 மூலோபாய அணுசக்தி ஏவுகணைகளைப் பரிசோதித்திருப்பதாக அறிவித்தது, இவை ரஷ்யாவின் Kamchatka தீபகற்பத்தில் அவற்றின் இலக்குகளைச் சரியாக சென்று தாக்கின.

ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய சக்திகளுக்கும், குறிப்பாக ஜேர்மனி மற்றும் பிரான்சுக்கும் இடையிலான ஆழ்ந்த பிளவையும் வெளிப்படுத்தி உள்ளன. ஐரோப்பிய அதிகாரிகளும் ஊடகங்களும், வட கொரியா மீதான இனப்படுகொலை தாக்குதல் குறித்த ட்ரம்பின் அச்சுறுத்தலைக் கண்டிக்காமல் அல்லது அதைக் குறித்து எதுவும் கூறாமல், உலகந்தழுவிய இராணுவ மோதல்கள் மற்றும் பல பிரச்சினைகளில் அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கு எதிராக அவர்களின் பகிரங்க எதிர்ப்பைக் காட்டுவதற்கு நகர்ந்து வருகின்றனர் என்பதை தெளிவுபடுத்தினர்.

பிரெஞ்சு நாளிதழ் Le Monde, “எஞ்சிய சர்வதேச சமூகத்தைப் பொறுத்த வரையில், [ட்ரம்பின்] உரை ஒரு கடுமையான சவாலாகும். குறிப்பாக அமெரிக்காவின் கூட்டாளியும் தனிசலுகை கொண்ட பங்காளியாக இருந்ததுமான, இப்போது காலநிலை, ஈரான், பன்முகத்தன்மை போன்ற பல பிரச்சினைகளில் வாஷிங்டனை எதிர்த்து வருவதுமான, ஐரோப்பாவை பொறுத்த வரையில் இப்படி தான் உள்ளது. இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் உரை, வியத்தகுவகையில் ட்ரம்புக்கு முரண்பட்டு இருந்தது. அட்லாண்டிக் கூட்டணி அதன் அர்த்தத்தை இழந்து வருகிறது,” என்று கருத்துரைத்தது.

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் கூறுகையில், வட கொரியாவில் "இந்த மோதலுக்கு ஒரு சமாதானமான, இராஜாங்கரீதியிலான தீர்வு மட்டுமே சாத்தியம். வேறு எதுவொன்றும் பேரழிவுக்கே இட்டுச் செல்லும், அதை நான் வலுவாக நம்புகிறேன்,” என்று எச்சரித்தார். ஒரு சமாதான தீர்வுக்காக "எனது முழு பலத்துடன்" போராட இருப்பதாக அவர் தொடர்ந்து தெரிவித்தார்.

ட்ரம்பின் இனப்படுகொலை அச்சுறுத்தல்களை ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேல் சாந்தமான தொனியில் "பொருத்தமற்றது" என்றார். “இதுபோன்ற போருக்கு ஒத்த வீராவேச பேச்சுக்களைக் கொண்டு நாம் ஒரு படி கூட முன்நகர முடியாது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஐ.நா.வில் ட்ரம்ப் உரையின் போது வேண்டுமென்றே கலந்து கொள்ளாத பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், ஏற்கனவே, ட்ரம்ப் உரைக்குப் பின்னர் உடனடியாக ஐ.நா.வில் பேசியிருந்தார். கொரியாவிலும், அத்துடன் ட்ரம்ப் அச்சுறுத்திய உலகின் வேறெந்த ஆட்சிக்கு எதிராகவும் "எந்தவொரு தீவிரப்பாட்டையும் [பிரான்ஸ்] எதிர்க்கும்" என்றவர் தெரிவித்தார். ட்ரம்ப் அச்சுறுத்துவதைப் போல, 2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை பயனற்றதாக ஆக்கும் ஒரு ஒருதலைபட்சமான முயற்சி "பொறுப்பற்றதாக" இருக்கும் என்று கூறிய மக்ரோன், “மரணகதியிலான" போர் "சுழலுக்குள்" இறங்குவது சாத்தியமாகிவிடுமென தெஹ்ரான் மற்றும் வாஷிங்டனை அவர் எச்சரித்திருப்பதாகவும் சேர்த்துக் கொண்டார்.

அதன் வெளியுறவு கொள்கையை மீள்இராணுவமயப் படுத்துவதற்கான மூன்றாண்டு கால பழைய அதன் இப்போதைய பிரச்சாரத்துடன் சேர்ந்து, ஜேர்மனியின் வழிகாட்டுதலில், ஐரோப்பிய அரசாங்கங்கள் அவற்றின் பல பில்லியன் யூரோ இராணுவ செலவின அதிகரிப்புகளை தீவிரப்படுத்துவதன் மூலமாக அதிகரித்து வரும் போர் அச்சுறுத்தலுக்கு விடையிறுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ட்ரம்பின் ஐ.நா. உரையை போலவே, ஐரோப்பிய மற்றும் சர்வதேச சக்திகளின் எதிர்வினையும் ஒரு நீண்ட பரிணாமத்தின் விளைவாகும். ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு, வாஷிங்டனுக்கு இராணுவ எதிர்பலம் இல்லாமல் போன ஒரு கால் நூற்றாண்டில், அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கிலும் உலகெங்கிலும் தீவிர ஆக்கிரமிப்பு போர்களில் தஞ்சமடைந்ததன் மூலமாக அதன் அதிகரித்து வந்த பொருளாதார பலவீனத்திற்கு எதிர்நடவடிக்கை எடுக்க முனைந்தது. அது உலக முதலாளித்துவத்தின் நிதியியல் மற்றும் இராணுவ அச்சாணியாக தொடர்ந்து செயற்பட்டதுடன், அதுவே அதன் ஐரோப்பிய போட்டியாளர்களுக்கு அதிகரித்தளவில் இராணுவவாத மற்றும் சிக்கன கொள்கைகளுக்கான ஒரு முன்மாதிரியாகவும் ஆனது.

வட கொரியாவில் 25 மில்லியன் மக்களைக் கொல்லும் ட்ரம்ப் அச்சுறுத்தல்களுக்கு எந்தவொரு சர்வதேச கண்டனமும் இல்லாதிருப்பதானது, உலகெங்கிலும் ஆளும் வர்க்கத்தின் அரசியல் சீரழிவுக்கு ஓர் அளவீடாகும். அவர்கள் ஒன்றும் கூறவில்லை ஏனென்றால் —ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக், அல்லது லிபியா, சிரியா, மற்றும் உக்ரேனில் அமெரிக்க தலைமையிலான போர்களில் ஐரோப்பிய சக்திகளும் அமெரிக்காவின் ஏனைய கூட்டாளிகளும் இணைந்த ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின்னர்— அவர்களும் போர் மற்றும் வன்முறையின் கொடூர மட்டங்களுக்குள் தஞ்சமடைய தயாரிப்பு செய்து வருகின்றனர்.

ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் மீது செயல்பட்டு, போர் முனைவை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதையே ஆளும் உயரடுக்கின் திவால்நிலைமை எடுத்துரைக்கிறது. ஐ.நா. சபைக்கான அவரது உரையில் ட்ரம்ப் வெறித்தனமாக சோசலிசத்தைக் கண்டித்ததன் முக்கியத்துவத்தை இது சுட்டிக்காட்டுகிறது, இது குறித்து அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நடைமுறையளவில் முற்றிலும் மவுனமாகி விடுகின்றனர். அவர்கள் ஒரு கொடூரமான அணுஆயுத மோதலின் விளிம்பில் இருக்கிறார்கள் என்பது ஊழல்பீடித்த பெரும் பணக்கார ஆளும் வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளுக்கு நன்கு தெரியும், ஒரு போர் நெருக்கடியானது, உலக முதலாளித்துவத்தின் மீது முற்றிலும் மதிப்பிழந்துள்ள மக்களிடையே வேகமாக ஒரு அரசியல் மாற்றத்தை தூண்டுமென அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இதற்கிடையே, ஐரோப்பிய சக்திகளும் அத்துடன் சீனாவும் மற்றும் ரஷ்யாவும் அமெரிக்காவுடன் முன்பினும் கூர்மையான இராஜாங்க மூலோபாய மோதலுக்குள் நகர்ந்து வருகின்றன. உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோ, நேற்று ஐநா பாதுகாப்பு சபையில் பேசுகையில், OSCE இன் கண்காணிப்பாளர்களை சர்ச்சைக்குரிய ரஷ்ய மொழி பேசும் டொன்பாஸ் பகுதிக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்தார், உக்ரேனில் 2014 நேட்டோ-ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் இருந்து அப்பகுதியில் ரஷ்ய-ஆதரவிலான போராளிகள் குழுக்களின் எதிர்ப்பை கியேவ் முகங்கொடுத்துள்ளது.

மாஸ்கோவுக்கு எதிராக உக்ரேனிய ஆட்சியை ஆயுதமயப்படுத்த வேண்டுமென வாஷிங்டனில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் விடுக்கப்படுகின்றன —இந்தவொரு கொள்கையானது, ரஷ்யாவுடனான "முழு அளவிலான போர்" அபாயம் குறித்து ஜேர்மனியும் பிரான்சும் எச்சரிக்கை விடுப்பதற்கும், 2015 இல் மின்ஸ்கில் உக்ரேன் மற்றும் ரஷ்யாவுடன் தனித்தனியாக சமாதான உடன்படிக்கை செய்து கொள்வதற்கும் அவற்றிற்கு அழுத்தமளித்தது. நேற்று மக்ரோன் அறிவிக்கையில், “மின்ஸ்க் உடன்படிக்கையின் உள்ளடக்கத்தில், உக்ரேனில் வன்முறைகளைக் குறைக்கவும் மற்றும் சீர்திருத்தங்களைத் தொடரவும்" ஜேர்மனி, ரஷ்யா மற்றும் உக்ரேனுடன் பிரான்ஸ் ஒரு புதிய சந்திப்பை நடத்த முயலுமென அறிவித்தார்.