ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The US faces off against China and Russia over North Korea

வட கொரியா குறித்து சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிராக அமெரிக்கா முகங்கொடுக்கிறது

By Peter Symonds
5 September 2017

ஞாயிறன்று நடத்தப்பட்ட வட கொரிய அணுஆயுத சோதனையை தொடர்ந்து கொரிய தீபகற்பம் மீதான தீவிர நெருக்கடிக்கு மத்தியில், நேற்று ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் அமெரிக்கா போரின் ஆபத்தை பாரியளவில் அதிகரித்தது. வாஷிங்டனின் விடையிறுப்பு பியோங்யாங்கை மட்டுமல்லாமல், பெய்ஜிங்கையும் மாஸ்கோவையும் இலக்காகக் கொண்டது.  

மிகத்தெளிவான ஒரு இருதரப்பு பிளவு ஒன்று வெளிப்பட்டது. சீனாவும் ரஷ்யாவும் பதட்டங்களை குறைப்பதற்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் முறையீடு செய்யும் அதேவேளையில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வட கொரியாவிற்கு எதிரான பொருளாதார முற்றுகைக்கும் உட்குறிப்பாக போருக்கும் அச்சுறுத்தின.

ஐ.நா. விற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி போர்நாடும் மற்றும் ஆத்திரமூட்டும் வகையிலான அவரது உரையில், சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் எதிராக இறுதி எச்சரிக்கை ஒன்றை பின்வருமாறு விடுத்தார்: வட கொரியாவுடனான அனைத்து பொருளாதார உறவுகளையும் முடிவுக்கு கொண்டு வாருங்கள் அல்லது அமெரிக்கா உடன் முழுமையானதொரு வர்த்தகப் போருக்கு முகம்கொடுங்கள். மேலும், பெய்ஜிங்கும் மாஸ்கோவும் பியோங்யாங்கை அடிபணிய செய்யவில்லை என்றால், அமெரிக்கா இராணுவ வழிமுறையின் மூலமாக அதை செய்யும் என்றார்.

உண்மையான நிலையை தலைகீழாக்கும்வகையில், ஹேலி, வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் “போரை வேண்டிநிற்பதாக” அறிவித்தார். தவிர்க்க முடியாத வகையில் தோல்வியடைய நேரிடும் அமெரிக்காவுடனான ஒரு பேரழிவுகர போரை தடுக்க முனையும் வகையில், பியோங்யாங் ஆட்சி அதன் அணுசக்தி திட்டத்தை ஒரு ஆழ்ந்த மற்றும் தவறான முயற்சியாக தீவிரப்படுத்தி வருகின்றது. வட கொரியாவுடனான போருக்கான ஒத்திகையாக அமெரிக்காவும் தென் கொரியாவும் முக்கிய வருடாந்திர கூட்டு பயிற்சிகளை நடத்தி முடித்த சில நாட்களுக்குப் பின்னர், ஒரு ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை என்றும் 100 கிலோ டன் எடை மதிப்பிலான விளைவை கொண்டது என்றும் கூறப்பட்ட அதன் சமீபத்திய அணுஆயுத சோதனை நடத்தப்பட்டது.

ஐ.நா. “ஒரு தலைமுறை காணாத எந்தவொரு நாட்டின் மீதும் விதிக்காத ஒரு மிகக்கடுமையான பொருளாதார தடைகளை” திணிக்க வேண்டுமென ஹேலி கோரினார். அரை-நடவடிக்கைகளாக கருதப்படுவனவற்றை வாஷிங்டன் ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் எச்சரித்தார். “நாங்கள் படிப்படியான அணுகுமுறைகளையே மேற்கொண்டிருக்கிறோம், மேலும் சிறந்த நோக்கங்கள் இருந்தபோதிலும் அவை பலனளிக்கவில்லை” என்றவர் அறிவித்தார்.

எந்தவித விபரங்களும் வெளியிடப்படாத நிலையில், பொருளாதார தடைகள் குறித்த விவாதம் எண்ணெய் விநியோக வெட்டு, அனைத்து நிதி பரிவர்த்தனை முடக்கம் மற்றும் வட கொரிய தொழிலாளர் வெளிநாடுகளுக்கு செல்வது முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. வட கொரியாவுடன் எந்தவொரு பொருளாதார நடவடிக்கையையும் மேற்கொள்கின்ற எந்தவொரு நாட்டுடனும் அமெரிக்க வர்த்தகத்தை முறித்துக்கொள்ள ட்ரம்ப் அச்சுறுத்துகிறார்.

“வட கொரியாவுடன் வர்த்தகம் செய்யும் ஒவ்வொரு நாடும் அவர்களின் பொறுப்பற்ற மற்றும் அபாயகர அணுசக்தி நோக்கங்களுக்கு உதவுகின்றது என்ற விதமாகவே அமெரிக்கா அதனை பார்க்கும்” என்று ஹேலி எச்சரித்தார். அமெரிக்கா பொறுமையை இழந்து விட்ட நிலையில், “தாமதமாகிவிடுவதற்கு முன்பாக, நமது இராஜதந்திர வழிமுறைகள் அனைத்தையும் பிரயோசனப்படுத்தி கொள்வதற்கான நேரம் நமக்கு வந்துவிட்டது” எனவும் அவர் அறிவித்தார். அமெரிக்கா போரை முன்னெடுக்கும் என்பது தான் இதற்கான உள்ளார்ந்த குறிப்பாகும்.  

ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் உள்ள அமெரிக்க இராணுவ நட்பு நாடுகள் அனைத்தும் வட கொரியாவின் சமீபத்திய அணுஆயுத சோதனையை கண்டனம் செய்வதில் இணைந்ததோடு, அதன் மீதான கடுமையான பொருளாதார தடைகளை கோரின. வட கொரியாவின் மட்டுப்படுத்தப்பட்ட அணுஆயுத தளவாட தொகுப்பின் மூலம் முன்வைக்கப்படும் அச்சுறுத்தலை பெருகிய முறையில் ஊதி பெரிதாக்கி, ஜப்பான் தூதர் கோரோ பெஸ்ஸோ, பியோங்யாங்கினால் முன்வைக்கப்பட்ட அபாயம் “முன்னெப்போதும் இல்லாத மட்டத்துக்கு உயர்த்தப்பட்டு விட்டதாகவும்,” மேலும், “உலகின் சமாதானத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாக” இருந்ததாகவும் அறிவித்தார்.

இருப்பினும், சீனாவின் தூதர் லியு ஜீய், பியோங்யாங்கை கண்டிக்கும் அதேவேளையில், கொரிய தீபகற்பம் குறித்த நிலைமை “தொடர்ந்து மோசமடைந்து வருவதாக” எச்சரித்ததுடன், இந்த நெருக்கடி “அமைதியாக” தீர்க்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். அனைத்து கட்சிகளும் “நிலைமையை எளிதாக்க, கூட்டு முயற்சிகள் செய்யவும், உரையாடல்களையும், பேச்சுவார்த்தைகளையும் மீண்டும் தொடங்கவும், மேலும் தீபகற்பத்தின் நிலைமை இன்னும் மோசமடைவதை தடுக்கவும்” அவர் அழைப்பு விடுத்தார்.

சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவின் அணுஆயுத மற்றும் ஏவுகணை திட்டத்தை எதிர்த்துள்ளன, ஏனென்றால் இறுதியில் அவர்களது நாடுகளையே இலக்காகக் கொண்டிருக்கும் வகையில், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஒரு பாரிய அளவிலான இராணுவ கட்டமைப்பினை உருவாக்க ஏதுவாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஒரு சாக்குப்போக்கை இது வழங்குகின்றது என்பதுதான். எனினும், அதே நேரத்தில், வட கொரியா மீதான ஒரு முழுமையான பொருளாதாரத் தடை பியோங்யாங்கில் ஒரு அரசியல் நெருக்கடியைத் தோற்றுவிக்கும் என்பதோடு, வாஷிங்டன் தலையீடு செய்வதற்கு அதை பயன்படுத்தி போர் அபாயத்தை பெரியளவில் அதிகரிக்க செய்யுமென பெய்ஜிங் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

புதிய பேச்சுவார்த்தைகளை எளிதாக்கும் முயற்சியில், வட கொரியா அதன் அணுஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை கைவிடுவதற்கு பதிலாக அமெரிக்காவும் தென் கொரியாவும் அவற்றின் பெரும் இராணுவ பயிற்சிகளை முடிவுக்கு கொண்டுவர சீனா மற்றும் ரஷ்யாவால் முன்வைக்கப்பட்ட “இருதரப்பு கைவிடல்” திட்டத்தை லியு திரும்ப திரும்ப வலியுறுத்தினார். ஹேலி மீண்டும் இந்த திட்டத்தை ஒரேயடியாக நிராகரித்தார்.

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஒரு அப்பட்டமான எச்சரிக்கையாக, லியு, “தீபகற்பம் மீதான குழப்பத்திற்கும் போருக்கும் சீனா ஒருபோதும் அனுமதிக்காது” என்று எச்சரிக்கை விடுத்தார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அமெரிக்க சார்பு கொரியாவை உருவாக்கும் வகையில் சீனாவின் நுழைவாயிலில் அமெரிக்க தலைமையிலானதொரு ஆட்சி மாற்ற நடவடிக்கையை அல்லது போரை தடுக்க அதன் மூலமான அனைத்து வழிகளையும் பயன்படுத்த பெய்ஜிங் தீர்மானித்துள்ளது.

அணு ஆயுதங்களை உள்ளடக்கிய ஒரு போருக்கான தயாரிப்பில் கொரிய தீபகற்பத்தில் மேற்கொள்ளப்படும் பெரியளவிலானதொரு இராணுவ கட்டமைப்புடன் சமீபத்திய அமெரிக்க அச்சுறுத்தல்களும் சேர்ந்து வருகின்றன.

ஞாயிறன்று தென் கொரியாவில் “திருப்திப்படுத்துதல் குறித்த பேச்சுவார்த்தைக்கு” கடும் முயற்சி எடுத்த பின்னர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் உடன் நேற்று பேசினார். தென் கொரிய ஏவுகணைகள் மூலம் செலுத்தப்படக்கூடிய வெடிகுண்டு அளவு குறித்து இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு உடன்படிக்கை விதித்த வரம்புக்கு முடிவு கட்ட ட்ரம்ப் ஒப்புக்கொண்டார். அதற்கு பதிலாக, அமெரிக்கா அதன், ஒரு முனைய அதிஉயர பகுதி பாதுகாப்பு (Terminal High Altitude Area Defence-THAAD) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை முழுமையாக நிறுவுவதற்கு மூன் அனுமதியளித்தார். தென் கொரியாவிற்கு “பல பில்லியன் டாலர்கள்” மதிப்பிலான இராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கு “கருத்தாய்வு ஒப்புதல்” ஐ ட்ரம்ப் வழங்கினார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று கூறுகின்றது.

கடந்த வாரம் அமெரிக்க பாதுகாப்புதுறை செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் மற்றும் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் சாங் யோயுங்-மியூ ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்னும் அதிகமாகியுள்ளன. நேற்று தென் கொரிய தேசிய சட்டமன்றத்தில் பேசுகையில், சாங், அமெரிக்க “தந்திரோபாய” அணு ஆயுதங்களை நாட்டில் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு தென் கொரியாவிலிருந்து பலர் அழைக்கப்பட்டிருந்தனர் என்று மாட்டிஸூக்கு அவர் பரிந்துரைத்ததாக தெரிவித்தார்.

விமானம், போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் அணுஆயுத ஏவுகணைகளை பயன்படுத்தி வட கொரியாவை அமெரிக்கா முன்பே அழித்திருக்க முடியும். தந்திரோபாய அணுஆயுதங்களை நிறுவுதல் என்பது கொரிய தீபகற்பத்தை ஒரு மிக நெருக்கடியான தூண்டுதலுக்குள் கொண்டு செல்லும், மேலும் அணுஆயுத பரிமாற்றத்தை வெடிக்கச் செய்யும் விதமான ஒரு தவறு அல்லது தவறான மதிப்பீட்டினால் அபாயத்தை பாரியளவில் அதிகரிக்கும். தற்போது, ஜனாதிபதி மூன் இந்த தேர்வை நிராகரித்துள்ளார்.

தொலைதூர கனரக குண்டுவீசிகள், விமானம் தாங்கிகள் மற்றும் ஏனைய மூலோபாய சொத்துக்களை தென் கொரியாவிற்கு அடிக்கடி அனுப்புமாறு மாட்டிஸூக்கு அவர் அழுத்தம் கொடுத்ததை சாங் சுட்டிக்காட்டினார். அமெரிக்கா, வட கொரியாவிற்கான ஒரு எச்சரிக்கையாக கொரிய தீபகற்பத்தை நோக்கி மூலோபாய B-1 ரக குண்டுவீசிகளை பலமுறை நகர்த்தியுள்ளது, மேலும் கடந்த வாரம் இரு கொரியாக்களுக்கு இடையேயுள்ள எல்லைக்கு அருகாமையிலான ஒரு வரம்பிற்குள் B-1 லான்சர்கள் குண்டுகளை வீசியெறிந்த புகைப்படங்களை வெளியிட்டது.

வட கொரிய அணுஆயுத சோதனை களத்தின் மீதானதொரு தாக்குதலை உருவகப்படுத்துவதற்கு F-15K போர் விமானங்கள் மற்றும் தரையிலிருந்து தரைக்கு செலுத்தக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உள்ளடக்கிய ஒரு பயிற்சியை தென் கொரிய இராணுவம் நேற்று மேற்கொண்டது. அதே சமயத்தில் செப்டம்பர் 9 அன்று மற்றொரு ஏவுகணை சோதனைக்கு வட கொரியா தயாரிப்பு செய்து வருவதாக மேஜர் ஜெனரல் ஜங் க்யுங் சோவ் கூறுவதோடு, தென் கொரியாவும் அதன் “வலுவான விருப்பத்தையும், பதிலடி கொடுக்கும் திறனையும்” காட்ட மற்றுமொரு ஏவுகணை பயிற்சியை நடத்த திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

கடந்த வாரம் தென் கொரிய செய்தித்தாள் Chosun Ilbo, “ஒருவேளை வட கொரியா எல்லை தாண்டிய அல்லது தலைநகர் பிராந்தியம் மீதான தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் ஒரு ஆத்திரமூட்டும் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற நிலையில், விரைவாக தாக்குதல் நிலைப்பாட்டிற்கு மாறும் வகையில்” புதிய போர் திட்டங்களை உருவாக்க இராணுவத்திற்கு ஜனாதிபதி மூன் உத்தரவிட்டார் என்று தெரிவித்தது. இந்த திட்டத்தின் நோக்கம், “வட கொரிய ஆட்சியை விரைவில் கவிழ்க்க பியோங்யாங்கிற்குள் ஊடுருவுவது” ஆகும்.

போருக்கான அமெரிக்க தயாரிப்புகளுக்கு விடையிறுப்பாக, சீனாவும் ரஷ்யாவும் தங்களது இராணுவ நிலைப்பாட்டை வலுப்படுத்துகின்றன. ஜூலையில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்ணலில் ஒரு நீண்ட கட்டுரை, சீன இராணுவம் “வான்வழி ஆளில்லா விமானங்களின் (Drones) உதவியுடன் மலைப்பிரதேசங்களில் 24 மணி நேர காணொளி கண்காணிப்பிற்காக ஒரு புதிய எல்லை பாதுகாப்பு படையையும், மேலும் ஆணுஆயுத மற்றும் இரசாயன குண்டுவெடிப்புகளுக்கு எதிராக பாதுகாத்துக்கொள்ள பதுங்கு குழிகளையும்” ஸ்தாபித்துள்ளது என்று தெரிவித்தது.

ரஷ்யா மற்றும் சீனா இரு நாடுகளுமே, தென் கொரியாவில் THAAD ஏவுகணை எதிர்ப்பு திட்டத்தை நிறுவுதல் குறித்து, அவற்றின் உயர் சக்தியிலான ரேடார்கள் தங்களது பிராந்தியங்களுக்குள் ஆழ்ந்து பாயும் திறன் கொண்டவை என்றும், மேலும் அவை தங்களது அணுசக்தி தடைகளை வலுவற்றதாக்கும் என்றும் கூறி எதிர்த்துள்ளன. ரஷ்யாவின் துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியப்கோவ், தென் கொரியாவில் விரிவாக்கப்பட்ட THAAD செயல்பாட்டிற்கு விடையிறுப்பாக மாஸ்கோ பசிபிக்கில் அதன் ஏவுகணை பிரசன்னத்தை அதிகரிக்க செய்யும் என்று தெரிவித்தார்.

வட கிழக்கு ஆசியாவில் இந்த கட்டுப்படுத்தமுடியாத வெடிகிடங்கை உருவாக்குவதற்கான முக்கிய பொறுப்பாளியாக இருப்பது ட்ரம்ப் நிர்வாகம் தான். வட கொரியா “போரை வேண்டிநிற்கிறது” என்பதை விட, நாட்டின் “ஒட்டுமொத்த அழிவை” விளைவிக்கும் “பாரிய இராணுவ நடவடிக்கை” என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் மாட்டிஸ் குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு ஒரு சாக்குப்போக்கை உருவாக்கும் வகையிலானதொரு நகர்வுக்கு இட்டுச்செல்ல அமெரிக்கா பியோங்யாங் மீது முறையாக செயல்களை செய்ய தூண்டும் விதத்தில் அழுத்தம் கொடுத்து வருகின்றது.