ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron’s labor decrees in France: A new stage in the international social counter-revolution

பிரான்சில் மக்ரோனின் தொழில் உத்தரவாணைகள்: சர்வதேச சமூக எதிர்-புரட்சியில் ஒரு புதிய கட்டம்

Alex Lantier
5 September 2017

தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவது, வேலை நேரங்களை நீடிப்பது, சம்பளம் மற்றும் சமூக நல சலுகைகளை வெட்டுவது என முதலாளிகளுக்கு தடையாக இதுவரை இருந்த சகல சட்டபூர்வ தடைகளையும் நீக்கும் நோக்கில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அரசாங்கம் கடந்த வாரம் நாட்டின் தொழில் விதிமுறைகளைத் திரும்ப எழுதும் அதன் திட்டங்களைக் விவரித்தது.

வெடிப்பார்ந்த உலகளாவிய விளைவுகளுடன், மக்ரோன், தொழிலாள வர்க்கத்துடனான ஒரு வரலாற்று மோதலை ஆரம்பித்து வைத்துள்ளார். கருத்துக்கணிப்பில் அவர் செல்வாக்கு விகிதம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வெறும் நான்கு மாதங்களில் சுமார் 30 வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது, அவரது கொள்கைகள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஆழ்ந்த எதிர்ப்பை முகங்கொடுக்கின்றன.

அமெரிக்க ஆளும் உயரடுக்கு மருத்துவக் கவனிப்பு, பொதுக்கல்வி மற்றும் பிற முக்கிய சமூக திட்டங்களை வெட்டி வருகின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் கிரீஸின் சிரிசா அரசாங்கத்துடன் (“தீவிர இடது கூட்டணி”) மற்றொரு பாரிய சிக்கன நடவடிக்கைகள் தொடர்பாக பேரம்பேசி வருகின்ற நிலையில், சர்வதேச அளவில் ஆளும் வர்க்கம் பிரான்சை ஒரு முக்கிய பரிசோதனை களமாக பார்க்கிறது. பிரான்சின் 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்த வெடிப்பு உலகளவில் புரட்சிகர போராட்டங்களை தூண்டியதை அது நினைவுகூர்கிறது. 1930 களின் பெருமந்தநிலைக்குப் பிந்தைய தற்போதைய இந்த மிக ஆழமான முதலாளித்துவத்துவ நெருக்கடிக்கு இடையே, ஆளும் உயரடுக்கு மக்ரோனின் செயல்திட்டத்திற்கு எழும் பாரிய எதிர்ப்பின் குரல்வளையை நெரிக்க தீர்மானகரமாக உள்ளது.

“நிஜமான மோதல் தொடங்குகிறது: திரு மக்ரோனுக்கும் தொழில் விதிமுறைகளுக்கும் இடையே" என்று தலைப்பிட்ட ஒரு தலையங்கத்தில், நியூ யோர்க் டைம்ஸ், “பேராசை கொண்ட முதலாளித்துவவாதிகளுக்கு எதிராக நிரந்தர பாதுகாப்பு தேவை என்ற தொழிலாளர்களின் எண்ணப்போக்கை" கண்டித்து, 107 ஆண்டுகள் பழமையான அச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென கோரியது.

பிரான்சில், “குறைந்தபட்சம் ஒரு கால் நூற்றாண்டு காலமாக, அடிப்படை சீர்திருத்தத்திற்கான ஒவ்வொரு முயற்சியும், மிகப்பெரிய மற்றும் சிலவேளைகளில் வன்முறையான தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்களால் தோல்விகண்டது” என்ற உண்மை குறித்து புலம்பிய அத்தலையங்கம், “… திரு. மக்ரோனும் மற்றும் அவர் அரசாங்கமும் தொழிலாளர் சீர்திருத்தத்தைக் கொண்டு சரியான பாதையை அமைத்துள்ளனர், அவர்கள் அதே போக்கில் செல்ல வேண்டும்,” என்றது.

ஜேர்மனியின் Die Welt பத்திரிகை, “உண்மையிலேயே, நாம் ஒரு மிகப்பெரிய போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதைப் போல உணர்கிறோம்" என்ற அதன் கட்டுரையில், “யார் வெல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது" என்று கவலை வெளியிட்டதுடன், மக்ரோன் ஒரு தீர்க்கமான மோதலின் மீது அனைத்தையும் பணயம் வைக்க வேண்டியிருக்கும் என்றுரைத்தது. மக்ரோனுக்கு "இப்போது ஒரு வரலாற்று சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அவருக்கு இரண்டாவது சந்தர்ப்பம் கிடைக்காமல் போகலாம்,” என்று அது எழுதியது.

தொழிலாள வர்க்கம் அதன் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை அழிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நனவுபூர்வமான மற்றும் ஈவிரக்கமற்ற எதிரியாக மக்ரோனின் நிர்வாகத்தைக் காண்கிறது. இந்த அரசாங்கத்தை எதிர்த்து, அதை நீக்குவதை கோருவதே தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும். உத்தரவாணைகளுக்கு எதிராக ஆரம்ப போராட்டங்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளன என்றாலும், மக்ரோனுக்கு எதிரான ஒரு போராட்டத்தின் புரட்சிகர விளைவுகளைக் குறித்து தொழிலாளர்கள் தெளிவான புரிதலில் இருக்க வேண்டும், அதாவது ஒரு புதிய, சர்வதேச மூலோபாயமும் அரசியல் தலைமையும் அவர்களுக்கு அவசியமாக உள்ளது.

ஒரு முன்னாள் முதலீட்டு வங்கியாளரான மக்ரோன், வெளிப்படையாகவே மக்களை அவமதித்து சென்று கொண்டிருக்கிறார். அவரது உத்தரவாணைகளானது, கடந்த ஆண்டு பாரிய போராட்டங்களின் முன்னே ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் முந்தைய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் அதன் பரந்தளவிலான மக்கள்விரோத தொழிற்சட்டத்திலிருந்து திரும்ப பெற்ற நடவடிக்கைகளை சர்வசாதாரணமாக மறுஅறிமுகம் செய்கின்றன. வேலை பாதுகாப்பின்மை, நீதியற்ற வேலைநீக்கங்களுக்கான அபராதங்களுக்கு வரம்பு நிர்ணயித்தல் ஆகியவற்றுடன் புதிய தொழில் ஒப்பந்தங்களை அறிமுகப்படுத்துவது மற்றும் தொழில் விதிமுறைகளை மீறி தனித்தனி நிறுவன மட்டத்தில் தொழில்வழங்குனர்களும் தொழிற்சங்கங்களும் ஒப்பந்தங்களை பேரம்பேச அனுமதிப்பது ஆகியவையும் இவற்றில் உள்ளடங்கும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் அரசியல் கூட்டாளிகளின் உடந்தைத்தன்மையையும் அத்தோடு அவற்றின் திவால்நிலைமையையும் மக்ரோன் சார்ந்துள்ளார். பிரான்சின் அவசரகால நிலையின் கீழ், ஒரு பாரிய பொலிஸ் ஒடுக்குமுறை மற்றும் போராட்டங்களுக்கு தடை விதிப்பதற்கான சோசலிஸ்ட் கட்சியின் அச்சுறுத்தல்களுக்கு இடையிலும் கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களிலிருந்து, சோசலிஸ்ட் கட்சி இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாது என்ற மதிப்பற்ற வாக்குறுதிகளின் அடிப்படையில், தொழிற்சங்கங்கள் பின்வாங்கிக்கொண்டன.

இந்த ஆண்டு தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சி பொறிந்த பின்னர், அதன் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்ரோன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் வேலைத்திட்டத்தை ஈவிரக்கமின்றி திணித்து வருகிறார். பிரெஞ்சு நிதியியல் செல்வந்த தட்டுக்களின் செல்வாக்கான கன்னைகள், பேர்லின் உடனான ஓர் ஆக்ரோஷ இராணுவ கூட்டணிக்கான திட்டங்களுடன் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு விடையிறுத்துள்ளன, 20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்ட சமூக உரிமைகளை அழிப்பதன் மூலமாக இதற்கு நிதி வழங்கப்பட உள்ளன. பெரும் பணக்காரர்களை நோக்கி பணம் மழையென குவிக்கப்படும் அதேவேளையில், தொழிலாளர்கள் பழைய தசாப்தங்களுக்கு பின்னுக்குத் தள்ளப்பட உள்ளனர்.

அவரது தொழிலாளர்-விரோத உத்தரவாணைகளை அறிவிப்பதற்கு ஒருசில நாட்களுக்கு முன்னர், மக்ரோன் ஓர் உரையில், இராணுவத்தை மிகப் பெரியளவில் கட்டியெழுப்ப அழைப்புவிடுத்து அறிவிக்கையில், கடந்த 70 ஆண்டுகளாக ஐரோப்பாவில் மிகப்பெரிய போர் எதுவும் இல்லை என்பது ஒரு "விதிவிலக்கு": “இந்த அச்சுறுத்தல் நம் வாயிற்படியில் நிற்கிறது, நமது கண்டத்தை போர் அச்சுறுத்துகின்றது” என்றார்.

1905 ரஷ்ய புரட்சியால் தூண்டிவிடப்பட்டு ஐரோப்பா எங்கிலும் நடந்த வேலைநிறுத்தங்களின் அலைக்கு விடையிறுப்பாக 1910 இல் நிறைவேற்றப்பட்ட பிரெஞ்சு தொழில் விதிமுறைகளே, இராணுவவாத தாக்குதலின் முதல் இலக்காக உள்ளது. அனைத்திற்கும் மேலாக 1917 அக்டோபர் புரட்சியின் அடிப்படையில், 20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கப்பட்ட சகல சமூக விட்டுக்கொடுப்புகளும், அழிப்பிற்காக இலக்கில் வைக்கப்பட்டுள்ளன. மக்ரோனின் அமைச்சர்கள் மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியங்கள் மற்றும் கல்வியை அழிப்பதற்கான திட்டங்களையும், அதேவேளையில் பாதுகாப்பு வரவு-செலவு திட்ட செலவில் பில்லியன்களை அதிகரிப்பது குறித்தும், சொத்து வரிகளில் (Tax on Wealth – ISF) வெட்டுக்களையும் அறிவித்து வருகின்றனர்.

2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கு விடையிறுப்பாக முதலாளித்துவ வர்க்கம் வங்கிகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான யூரோக்களை பாய்ச்ச தொடங்கி அண்மித்து ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், தொழிலாளர்களின் அடிப்படை சமூக தேவைகளுக்குப் பணமில்லை என்று கூறப்படும் வாதம், ஓர் இழிவான பொய்யாகும். சோசலிஸ்ட் கட்சியின் தொழிற்சட்டத்திற்கு எதிரான கடந்த ஆண்டு போராட்டம் எடுத்துக்காட்டியதைப் போல, அடிப்படை சமூக உரிமைகளின் பாதுகாப்பு என்பது, அரசாங்கத்துடனான ஒரு மோதலாக வேகமாக தீவிரமடையும். பிரெஞ்சு தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்க போராட்டத்தை அல்ல ஓர் அரசியல் போராட்டத்தை முகங்கொடுக்கின்றனர், இதை அவர்கள் ஐரோப்பா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவில் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளுடனான ஒரு பொதுவான புரட்சிகர போராட்டத்தினூடாக மட்டுமே தொடுக்க முடியும்.

தொழிற்சட்ட உத்தரவாணைகளுக்கு எதிராக போராட முயலும் தொழிலாளர்கள், ஏகாதிபத்திய போர் மற்றும் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பொய்களை எதிர்க்க நிர்பந்திக்கப்படுவார்கள். லிபிய மற்றும் சிரிய போர்கள், இவை மத்திய கிழக்கில் நேட்டோ சக்திகள் பினாமிகளாக ஆதரித்த இஸ்லாமிய வலையமைப்புகளது பயங்கரவாத தாக்குதல்களை ஐரோப்பாவில் வளர்த்துவிட்ட நிலையில், ஏகாதிபத்திய போரின் ஜனநாயக-விரோத உள்நோக்கங்களுக்கு மிகச் சரியான சான்றுகளாக உள்ளன. அத்தகைய பயங்கரவாத தாக்குதல்களுக்காக, சோசலிஸ்ட் கட்சி (PS) மத்திய கிழக்கில் இஸ்லாமியவாத சக்திகளுக்கான ஆதரவை நிறுத்திவிடவில்லை, மாறாக அடிப்படை ஜனநாயக உரிமைகளை நீக்கும் அவசரகால நிலையை அறிவித்ததன் மூலமும் அத்தோடு அரசியலமைப்பு ரீதியில் பாதுகாக்கப்பட்ட போராட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது வழக்கு தொடுக்க பொலிஸிற்குக் கடுமையான கூடுதல் அதிகாரங்கள் வழங்கியதன் மூலம் விடையிறுத்தது.

மக்ரோனின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு, ஒரு புதிய அரசியல் தலைமையும் தொழிலாள வர்க்க போராட்டத்திற்கான புதிய அமைப்புகளையும் கட்டமைக்க வேண்டியுள்ளது, மேலும் ஜோன்-லூக் மெலோன்சோன் அல்லது புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற குட்டி முதலாளித்துவ அரசியல் சக்திகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிரான ஒரு போராட்டமும் அவசியப்படுகிறது. அவர்கள் பல அடையாள போராட்டங்களுக்கு அழைப்புவிடுத்து வருகின்றனர் என்றாலும், இந்த அமைப்புகளால் தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவுகளை மட்டுமே உண்டாக்க முடியும்.

சோசலிஸ்ட் கட்சியின் சுற்றுவட்டத்தில் பல தசாப்தங்களாக செயற்பட்டு வந்த மெலோன்சோன் மற்றும் NPA, உத்தரவாணைகளுக்கு எதிராக தொழிலாளர்களிடையே எழும் எதிர்ப்பை தடம் புரளச் செய்ய ஒரு தேசியவாத செயல்திட்டத்தை முன்னெடுக்கின்றனர். ஜேர்மனி உடனான மக்ரோனின் கூட்டணியை எதிர்க்கும் ஆளும் வர்க்க கன்னைகளை மெலோன்சோன் ஆதரிக்கிறார் —சான்றாக தளபதி பியர் டு வில்லியே, இவரது திடீர் இராஜினாமா மக்ரோன் நிர்வாகத்தை உலுக்கியது— மேலும் போராட்டங்களை ஒடுக்காமல் இருக்க பொலிஸிற்கு பயனற்ற மற்றும் எரிச்சலூட்டும் முறையீடுகளை செய்கிறார். புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியைப் போலவே, இது மெலோன்சோனின் சக்திகளுக்கும் மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே உள்ள ஒரு நெருக்கமான கூட்டணிக்கு அழைப்புவிடுக்கின்ற நிலையில், மெலோன்சோனும், பிரான்சிலும் மற்றும் சர்வதேச அளவிலும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்த விரோதமாக உள்ளார்.

உத்தரவாணைகள் மீது மக்ரோனுடன் பேரம்பேசி முடித்த பின்னர் போராட்டங்களுக்கு அழைப்புவிடுத்து வருகின்ற, ஸ்ராலினிசத்தின், தொழிலாளர்களுக்கான பொது கூட்டமைப்பு (CGT) போன்ற ஊழல்பீடித்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களை பிரதியீடு செய்ய, போராட்டங்களுக்கான புதிய வடிவங்கள் தொழிலாளர்களுக்கு அவசியமாக உள்ளது. இந்த உத்தரவாணைகள், தொழிலிடங்களில் வெட்டுக்களை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிற்சங்கங்களுக்கு உத்தியோகபூர்வமாக பரந்த அதிகாரங்களை வழங்குகின்றன, மேலும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் பெருவணிகத்தின் நம்பிக்கைக்குரிய கருவிகள் என்பதால், தொழிற்சங்க கஜானாக்களுக்குள் அதிகளவில் பெருநிறுவன பணத்தைப் பாய்ச்ச, மக்ரோன் "தொழிற்சங்க காசோலை" என்றழைக்கப்படுவதை ஊக்குவித்து வருகிறார்.

புறநிலையாக எழும் தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்பு, ஒரு நனவுபூர்வமான அரசியல் இயக்கமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். சர்வாதிகாரம், போர் மற்றும் சமூக எதிர்-புரட்சிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முனைவுக்கு எதிரான எதிர்ப்பானது, பிரான்சிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் வேலையிடங்கள், பள்ளிகள் மற்றும் தொழிலாள வர்க்க சமூகங்களில் விவாதிக்கப்பட வேண்டும். இதுவே, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, மக்களின் வேலையிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதி குழுக்களது ஒரு பரந்த வலையமைப்பை அபிவிருத்தி செய்வற்கு அடித்தளம் அமைக்கும், இவற்றினூடாக தொழிலாளர்களால், முதலாளித்துவ-எதிர்ப்பு, ஏகாதிபத்திய-எதிர்ப்பு மற்றும் பாரிய பெருந்திரளான மக்களின் தேவைகளை வெளிப்படுத்தும் சோசலிச கோரிக்கைகளை விவாதித்து முன்னெடுக்க முடியும்.

அனைத்திற்கும் மேலாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியிலும் (Parti de l’égalité socialiste—PES), ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் உள்ள ICFI இன் சகோதர அமைப்புகளிலும் இணைந்து அவற்றைக் கட்டியெழுப்புமாறு நாம் தொழிலாளர்களை வலியுறுத்துகிறோம்.

பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (PES) பிரான்சில் தொழிலாள வர்க்கத்திற்கான ஓர் அரசியல் தலைமையைக் கட்டமைத்து வருகிறது. அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை, பிரான்சிலும் ஐரோப்பா எங்கிலும் அரசு அதிகாரத்தைக் கையிலெடுக்கக் கூடிய ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்துடன் இணைத்து, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளைக் கட்டமைப்பதன் மூலமாக, சமூகத்தின் தேவையின் அடிப்படையில் பொருளாதார வாழ்வை மறு-ஒழுங்கமைப்பதே எம் முன்னால் உள்ள பிரதான பணியாகும்.

மேலதிக வாசிப்புகளுக்கு:

அரண்மனை சதியா அல்லது வர்க்கப் போராட்டமா: வாஷிங்டனின் அரசியல் நெருக்கடியும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயமும் [PDF]