ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Juncker’s State of the EU speech: Europe readies for war with the world

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஜூங்கரின் பொது உரை: ஐரோப்பா உலகின் மீது போருக்குத் தயாராகிறது

By Alex Lantier
14 September 2017

புரூசெல்ஸில் நேற்று ஐரோப்பிய ஒன்றிய அரசுகளுக்கான அவரது பொது உரையில், ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியதற்குப் பிந்தைய, ஒரு ஆக்கிரோஷமான இராணுவ மற்றும் வர்த்தக செயற்பட்டியலை கோடிட்டுக் காட்டினார்.

அதன் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளுக்காக தொழிலாளர்களால் இழிவாக கருதப்படும் ஒரு அமைப்பின் தலைவராக, ஜூங்கர், தொடர்ந்து அவரின் கொள்கையின் அடித்தளமாக “ஐரோப்பிய மதிப்புகளை" கையிலெடுத்தார். ஆனால் இந்த வெற்றுத்தனமான தவறாக வழிநடத்தும் வார்த்தைகளை தவிர்த்து, அவர் உரை ஓர் தெளிவான சேதியை வழங்கியது, அதுவாவது: நீண்டகால கூட்டாளிகளுடன், அனைத்திற்கும் மேலாக வாஷிங்டன் மற்றும் இலண்டனுடன், ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் பொறிந்துள்ளதற்கு இடையே, அது உலகளாவிய வர்த்தக போருக்குத் தயாரிப்பு செய்ய வேண்டும் மற்றும் அமெரிக்காவிடமிருந்து ஒரு சுதந்திரமான இராணுவ கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்றிருந்தது.

2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் அண்மித்து ஒரு தசாப்தத்தில், “முடிவாக ஒவ்வொரு [ஐரோப்பிய ஒன்றிய] அங்கத்துவ நாட்டையும் எட்டியுள்ள ஒரு பொருளாதார மீட்சிக்காக" ஐரோப்பிய ஒன்றியத்தை வாழ்த்தி ஜூங்கர் அவ்வுரையை தொடங்கினார். இந்த மீட்சி எனப்படுவதை ஆர்ப்பரித்த போதினும், இதன் பலன்கள் அதிகரித்தளவில் சமூகத்தின் செல்வவளமான அடுக்குகளுக்கே சென்றுள்ளது என்பதால், ஜூங்கர் ஒரு கவலையான குறிப்பையும் எதிரொலித்தார்: “நமக்கு இப்போதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது, ஆனால் இந்த ஜன்னல் எப்போதும் திறந்திருக்காது. இதில் வீசும் காற்றை நமது பயணத்திற்கு பயன்படுத்தி, இச்சந்தர்ப்பத்தை மிகவும் பயனுள்ளதாக ஆக்குவோம்,” என்றார்.

கனடா மற்றும் ஜப்பானுடன் ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் அதிகரித்து வருகின்றன என்றாலும், மெக்சிகோ, தென் அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து உடன் இதுபோன்ற உடன்படிக்கைகளுக்கான திட்டங்கள் உள்ளன என்றாலும் கூட, இவை ஐரோப்பாவின் வர்த்தக பங்காளிகளுக்கு எதிரான வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஒரு மிகப்பெரும் இராணுவ ஆயத்தப்படுத்தலுக்கான திட்டங்களுடன் கரங்கோர்த்து செல்கின்றன என்பதை ஜூங்கர் தெளிவுபடுத்தினார்.

“ஒருமுறை அனைவருக்கும் தெரிவித்துவிடுகிறேன்: நாம் அப்பாவி சுதந்திர வர்த்தகர்கள் அல்லர். ஐரோப்பா எப்போதுமே அதன் மூலோபாய நலன்களைப் பாதுகாக்க வேண்டும்,” என்று தெரிவித்த ஜூங்கர், “இதனால் தான் இன்று நாம் முதலீட்டு பாதுகாப்புக்காக ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பை முன்மொழிந்து வருகிறோம். வெளிநாட்டு, அரசுடைமை நிறுவனம் ஒன்று ஐரோப்பிய துறைமுகம் ஒன்றை, நமது எரிசக்தித்துறை உள்கட்டமைப்பு அல்லது ஒரு பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் பகுதியை, விலைக்கு வாங்க விரும்புகிறது என்றால், அது நுண்மையாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டு, வெளிப்படைத்தன்மையோடு மட்டுமே நடக்க வேண்டும்,” என்றார். இது "அவசியமானால் நமது பாதுகாப்பைப் பேணுவதற்கு" உதவக்கூடும் என்பதையும் ஜூங்கர் சேர்த்துக் கொண்டார்.

அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய அட்லாண்டிக் நாடுகள் கடந்த வர்த்தக மற்றும் முதலீட்டு பங்காண்மை (TTIP) பேச்சுவார்த்தைகள் பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் ஆட்சேபனைகளால் உடைந்து போய் ஓராண்டுக்குப் பின்னர், ஜூங்கர் அமெரிக்காவை ஒரு முக்கிய வர்த்தக பங்காளி என்றோ அல்லது ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை பெற முயலும் ஒரு நாடு என்றோ அதை குறிப்பிடவில்லை.

ஜேர்மன் வெளியுறவு கொள்கையை மீள்இராணுவமயப்படுத்துவதாக பேர்லின் அறிவித்த மூன்றாண்டுகளுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய இராணுவம் என்பதாக இருக்கக்கூடிய ஒன்றை உருவாக்குவதை ஜூங்கர் தீவிரப்படுத்துமாறு அழைப்புவிடுக்குமளவிற்கு சென்றார்.

ஐரோப்பிய ஒன்றியம் "ஒரு பலமான உலகளாவிய பாத்திரம் வகிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். உலகின் மீது அதிக பலத்தைக் கொண்டிருக்க வேண்டுமானால், நாம் வெளியுறவு கொள்கை முடிவுகளை விரைவாக எடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இதனால் தான் அங்கத்துவ நாடுகள் வெளியுறவு கொள்கை முடிவுகளை ஒருமித்த கருத்து என்பதிலிருந்து தகுதியான பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் எடுக்க ஆலோசிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். ... மேலும் பாதுகாப்பு விடயங்களில் நாம் இன்னும் கூடுதலான முயற்சிகளை அர்பணிக்க வேண்டுமென்றும் நான் விரும்புகிறேன். ஒரு புதிய ஐரோப்பிய பாதுகாப்பு நிதியம் கண்ணுக்குத் தெரிகிறது. பாதுகாப்புத்துறையில் ஒரு நிரந்தர அமைப்புரீதியிலான கூட்டுறவு என்பதைப் போல உள்ளது. 2025 வாக்கில், நமக்கு முழு செயல்பாட்டில் இருக்கும் ஒரு ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு அவசியம். நமக்கு அது அவசியப்படுகிறது. நேட்டோவும் அதை விரும்புகிறது,” என்றார்.

வாஷிங்டன் மற்றும் இலண்டன் உட்பட, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு அமைப்பு உருவாவதை விரும்புகிறது என்ற ஜூங்கரின் கூற்று, வேகமாக அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய மோதல் அதிகரித்து வருவதைக் குறைத்துக் காட்டும் முயற்சியன்றி வேறொன்றுமில்லை.

சர்வதேச அளவில் தீவிரப்படுத்தப்பட்டு வரும் போர் முனைவுக்கு மத்தியில், வாஷிங்டனுக்கும் குறிப்பாக பேர்லின்-பாரீஸ் அச்சாக உள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே இராணுவ பதட்டங்கள் துரிதமாக அதிகரித்து வருகின்றன. அதன் சொந்த போர்களுக்கு அதிக ஐரோப்பிய உதவிகளைப் பெறும் நம்பிக்கையில், வாஷிங்டன் சமீபத்திய ஆண்டுகளில் ஐரோப்பா அதன் இராணுவ செலவினங்களை அதிகரிக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் அழுத்தம் அளித்துள்ள அதேவேளையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இருந்த வரையில் ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்திற்கான திட்டங்களை வீட்டோ அதிகாரம் கொண்டு தடுக்க வாஷிங்டன் இலண்டனைச் சார்ந்திருந்தது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது என்றான பின்னர், ஜேர்மனியும் பிரான்சும் அமெரிக்காவிடம் இருந்து சுதந்திரமாக ஓர் ஆக்ரோஷ ஐரோப்பிய ஒன்றிய இராணுவ கொள்கைக்கான திட்டங்களை விரைவாக மீட்டுயிர்ப்பித்துள்ளன.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின்னர், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் அமெரிக்காவிற்குமான ஒரு பொதுவான எதிரி இல்லாமல் போனதால், பிரதான நேட்டோ அதிகாரங்களுக்கு இடையிலான பதட்டங்கள் இக்கூட்டணியை பொறிவின் விளிம்புக்கு கொண்டு வருகின்றன. அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான கூட்டணியின் அடித்தளங்கள் ஆட்டம் கண்டுள்ளன. ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர், அவரது நிர்வாகம் தண்டிக்கும் வகையிலான வரிவிதிப்புகளுடன் ஐரோப்பிய ஒன்றிய கார் மற்றும் எஃகுத்துறை ஏற்றுமதிகளை இலக்கில் வைக்கும் என்பதை ட்ரம்ப் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி உள்ளார், இது முற்றுமுதலான அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக போரைத் தூண்டக் கூடியதாகும்.

இந்த வர்த்தக பதட்டங்கள் நேட்டோவிற்குள் கட்டமைந்து வரும் வெடிப்பார்ந்த மூலோபாய மோதல்களைப் பிரதிபலிக்கின்றன, அதேவேளையில் ரஷ்யா மற்றும் சீனாவை அமெரிக்கா இலக்கில் வைப்பது உலகையே முற்றுமுதலான போர் விளிம்பில் நிறுத்தி உள்ளது. வட கொரியாவை ட்ரம்ப் போரைக் கொண்டு அச்சுறுத்துகின்ற நிலையில், இது இன்றைய ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தின் விடயமாக உள்ளதுடன், சீனாவுடனான போராக தீவிரமடையக்கூடிய ஒரு போரில் வாஷிங்டனை ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் ஆதரிக்காமல் போவதற்கான சாத்தியக்கூறு முன்பினும் அதிகமாக உள்ளது.

2014 இல் நேட்டோ ஆதரவுடன் நடந்த கியேவ் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் இருந்து கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் இடைவிடாத இராணுவ ஆயத்தப்படுத்தலின் இலக்காக இருந்துள்ள ரஷ்யாவை ஜூங்கரின் உரை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். எவ்வாறிருப்பினும் கிழக்கு உக்ரேனில் ரஷ்ய மொழி பேசும் சக்திகளுக்கு எதிராக உக்ரேனில் அதிவலது போராளிகள் குழுக்களை ஆயுதமேந்த செய்வதென்ற ஓர் அமெரிக்க கொள்கையை வெட்டுவதற்காக, பேர்லினும் பாரீசும் 2015 இல் உக்ரேன் விவகாரத்தில் தலையீடு செய்தன. உக்ரேன் ஆட்சிக்கு ஆயுதங்கள் வழங்குவதென ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் இப்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கையில், இந்த மோதல்கள் மீண்டும் வெடிப்பார்ந்த மட்டங்களை அடைந்துள்ளன.

எது எவ்வாறிருப்பினும், இந்த போர் முனைவை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே; உலகெங்கிலும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நலன்களை வலியுறுத்த போட்டியிடுவதில், சர்வசாதாரணமாக ஐரோப்பிய ஒன்றியமே ஒரு மூர்க்கமான வாகனமாக உருவாகி வருகிறது, இது புதிய இரத்தந்தோய்ந்த மோதல்களைத் தூண்ட அச்சுறுத்துகின்றது.

ஐரோப்பிய ஒன்றிய கொள்கை ஒரு சமாதான கொள்கை அல்ல, இது லிபியா மற்றும் சிரியா போர்களுக்கான அதன் ஆதரவிலும் மற்றும் உள்நாட்டில் பிரெஞ்சு அவசரகால நிலை போன்ற அதன் ஈவிரக்கமற்ற பொலிஸ்-அரசு நடவடிக்கைகளைத் திணிப்பதற்கு அது வழங்கிய ஆதரவிலும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அது, போர் எந்திரத்தைக் கட்டமைப்பதற்கான நிதிச்சுமைகளை ஐரோப்பிய தொழிலாளர்களின் முதுகில் சுமத்த நோக்கம் கொண்டுள்ள, வாஷிங்டனுடன் போட்டியிடும் ஒரு எதிர்விரோத ஏகாதிபத்திய சக்திகளின் அணியின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. ஜூங்கர், ஐரோப்பிய ஒன்றியத்தின் வலையில் விழ்ந்துள்ள ஒரு பரந்த நாடுகளின் பட்டியலைச் சுட்டிக்காட்டுவதற்கு அவர் உரையின் பெரும்பகுதியைச் செலவிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு துருக்கியில் அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஆதரவிலான ஒரு தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்குப் பின்னர் துருக்கிய ஆட்சி உள்நாட்டு எதிர்ப்பை மூர்க்கமாக ஒடுக்கியதற்கு விடையிறுப்பாக, துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஜூங்கர் நிராகரித்தார். “சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை மற்றும் அடிப்படை மதிப்புகள் ஆகியவையே பேச்சுவார்த்தைகளின் முதல் முன்னுரிமையில் உள்ளன, இது கண்ணுக்கு எட்டிய எதிர்காலத்தில் துருக்கி ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தைப் பெறுவதை தவிர்த்து விடுகிறது,” என்றார். “குறிப்பிட்ட காலத்திற்கு துருக்கி ஏற்ற இறக்கங்களோடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒதுங்கி சென்றுள்ளது,” என்றார்.

ஜூங்கர் அவர் உரையில் பிரிட்டனுக்கு ஒரு கண்டிப்பான எச்சரிக்கையும் விடுத்தார். பிரிட்டன் வெளியேறுவதை ஆதரிக்கும் இங்கிலாந்து சுதந்திர கட்சியின் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற அங்கத்தவர்கள் வெளிப்படுத்திய உற்சாகத்திற்கு விடையிறுப்பாக, ஜூங்கர் அவர்களை எச்சரித்தார்: “பிரிட்டன் வெளியேறியதும் நீங்கள் வருத்தப்படுவீர்களென நான் நினைக்கிறேன், அவ்வளவு தான் என்னால் கூற முடியும்,” என்றார்.

ஐரோப்பாவில் வெளிநாட்டு முதலீடுகளைக் கண்காணிப்பதற்கும் மற்றும் ஐரோப்பிய துறைமுகங்களை வெளிநாட்டு அரசு உரிமையில் விடுவதை கண்காணிப்பதற்கும் ஜூங்கர் அழைப்புவிடுப்பதானது, சீனாவிற்கு எதிரான ஒரு மறைமுக அச்சறுத்தலாக இருந்தது. சீனா மிகப்பெரியளவில் ஐரோப்பிய நிறுவனங்களில் முதலீடு செய்து வருவதுடன், ஏதென்சில் மிக முக்கிய பிரேயுஸ் துறைமுகத்தின் பங்குகளை அதிகளவில் வாங்கியுள்ளது.

அனைத்திற்கும் மேலாக, மே மாதம் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 24 இல் வரவிருக்கின்ற ஜேர்மன் பொது தேர்தல்களுக்குப் பின்னர், பேர்லின் மற்றும் பாரீஸ் தலைமையில் பின்பற்றும் ஒரு திட்டநிரலை அமைக்க ஜூங்கரின் உரை நோக்கம் கொண்டள்ள அதேவேளையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே அங்கே ஆழ்ந்த பிளவுகள் உள்ளன.

கடந்த வாரம் ஏதென்ஸ் க்கு விஜயம் செய்த மக்ரோன், யூரோ மண்டலத்திற்கான ஒரு பொதுவான நாடாளுமன்றம் மற்றும் வரவு-செலவு திட்டத்தை உருவாக்குவது உட்பட ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகளில் நிறைய மாற்றங்கள் செய்வதற்கு அழைப்புவிடுத்தார். கிரேக்க கடன் நிவாரணம் மற்றும் பேர்லின் நீண்டகாலமாக எதிர்த்து வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தை (IMF) கிரேக்க கடன் திட்டத்தில் இருந்து வெளியேற்றுவதற்கும் அவர் அழைப்புவிடுத்தார்.

இந்த முன்மொழிவுகளை ஆமோதிக்க மறுத்து, ஜூங்கரின் உரை மக்ரோனை இலக்கில் வைத்த ஒரு கண்டனமாக இருந்தது. அதற்கு பதிலாக அவர் ஓர் ஐரோப்பிய நிதி அமைச்சகத்திற்கு அழைப்புவிடுத்தார், அதாவது வாஷிங்டன் டிசி ஐ மையமாக கொண்ட IMF ஐ பிரதியீடு செய்து ஒரு ஐரோப்பிய நாணய நிதியம் உருவாக்குவது. Le Monde கருத்துரைக்கையில், "அனேகமாக நான்காவது முறையாக பதவிக்கு வரக்கூடிய [ஜேர்மன்] சான்சிலர் அங்கேலா மேர்க்கெலுக்கும் மக்ரோனுக்கும் இடையே, இந்த இலையுதிர் காலத்தில் தொடங்கக்கூடிய யூரோ மண்டல எதிர்காலம் மீதான பேச்சுவார்த்தைகளில் சமரசத்தை ஏற்படுத்த" ஜூங்கர் தயாரிப்பு செய்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டது.