ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: Jaffna victims of police witch-hunt further remanded

இலங்கை: யாழ்ப்பாணத்தில் பொலிஸ் வேட்டையாடலில் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் சிறை வைக்கப்படனர்

By our correspondent
19 September 2017

வட இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள, துன்னாலை மற்றும் குடவத்தை கிராமங்களைச் சேர்ந்த 36 இளைஞர்கள் பருத்தித்துறை நீதவான நீதிமன்றினால் செப்டெம்பர் 22 வரை மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். செப்டம்பர் 8 அன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்படுவார்கள் என உறவினர்கள் எதிர்பார்த்திருந்தனர். இன்னமும் விசாரணை செய்யவேண்டி இருப்பதாக கூறி பொலிஸ் பிணை வழங்க மறுத்துவிட்டது. ஆனால், கைதுசெய்து வைக்கப்பட்டுள்ளவர்களை முடிந்தவரை நீண்ட காலம் தடுத்து வைத்திருப்பதற்கு அவர்கள் திட்டமிடுவதாக மக்கள் குற்றஞ்சாட்டினர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள், பொலிஸ் வாகனம், உப பொலிஸ் பரிசோதகரின் வீடு மற்றும் காவல் அரன்களையும் சேதப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். கடற்படை சிப்பாய்களைத் தாக்கியதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றார்கள்.

ஓகஸ்ட் 4 முதல் 8 வரை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினால் இராணுவத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தொடர்ச்சியான இராணுவ மற்றும் பொலிஸ் அட்டூழியங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும், போர்க் காலத்தில் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரும், காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து தருமாறு கோரிப் போராடும் மற்றும் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்க்கும் வடக்கு மக்களுக்கு எதிரான இராணுவ மற்றும் பொலிஸ் அச்சுறுத்தல்களின் ஒரு பாகமே இந்த நடவடிக்கைகள் ஆகும்.

கடந்த யூலையில், மணல் ஏற்றிக்கொண்டு வந்த லொறியொன்றில் பயணம் செய்த யோகராசா தினேஸ் என்ற இளைஞனை பொலிஸ் சுட்டுக் கொன்றது. இந்த வாகனம் சட்ட விரோதமாக மணல் ஏற்றிச் சென்றதாக பொலிஸ் கூறியது. ஆனால் தினேஸ் ஒரு அப்பாவி என மக்கள் கூறினார்கள். இனால் துன்னாலை மற்றும் குடவத்தை மக்கள் வீதிக்கு வந்து தமது எதிர்ப்பினைத் தெரிவித்தார்கள். பொலிஸ் மக்களின் கோபத்தைத் தணிப்பதற்காக அதிகாரத்தை “மேலதிகமாக” பயன்படுத்தியதாக கூறி, ஒரு பொலிஸ் உப பரிசோதகரை கைது செய்தது.

பின்னர், ஆவா குழு என்றழைக்கப்படும் கும்பல் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு சம்பவத்தில் இரண்டு பொலிசார் தாக்கப்பட்டதை பயன்படுத்திக் கொண்டு, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, அங்கே பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் புத்துயிர் பெறும் அறிகுறி காணப்படுவதாக கூறி, “பயங்கரவாத்தின்” மீதான பாய்ச்சலுக்கு சமிக்ஞை கொடுத்தார். 2009 மே மாதம் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும், தமிழர் விரோத பிரச்சாரத்தை கிளறிவிடுவதற்காக புலிகளின் புத்துயிர்ப்பு பற்றி போலிப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. “புலிகள் புத்துயிர் பெறுகின்றார்கள்” என்ற போலி இனவாதப் போர்வையின் கீழ், பொலிஸ் மா அதிபர் வழங்கிய உத்தரவுக்கு அமையவே கடந்த ஓகஸ்ட்டில் துன்னாலை மற்றும் குடவத்தை கிராமங்கள் மீதான பாய்ச்சல்கள் நடத்தப்பட்டன.

இன்னமும் இந்தப் பிரதேசத்தில் பொலிஸ் பாச்சல் தொடர்வதாக மக்கள் கூறுகின்றார்கள். “கைதுக்கு பயந்து டசின் கணக்கான ஆண்கள் கிராமங்களை விட்டுத் தப்பியோடிவிட்டார்கள். அவர்களுடைய குடும்பங்கள் பெரும்பாலும் பட்டினி கிடக்கின்றன. பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக 50 வீதமான சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்வதில்லை,” என ஒருவர் கூறினார். பொலிஸ் ஜீப்புக்கள் அடிக்கடி கிராமங்களைச் சுற்றித் திரிகின்றன. பொலிஸ் புனலாய்வுப் பிரிவினர் பிரதேசத்தில் அலைந்து கொண்டிருக்கின்றார்கள். பொலிசார் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களை வழிமறித்து மக்களை சோதனையிடுகின்றார்கள்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருசிலர் மாத்திரமே சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். பல காரணங்களால் மற்றையவர்கள் சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்யவில்லை. வறுமை அதில் ஒரு காரணம். அவர்களிடம் பணம் இல்லை. தங்களுடைய உறவினர்களை விடுதலை செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை அநேகமானவர்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் நம்பிக்கையிழந்த நிலையில் தெரிவித்தார்கள்.

ஒரு சட்டத்தரணி கூறியதாவது: “இவர்கள் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். பொலிசாரிடம் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என நினைக்கின்றேன். அவர்களுடை இலக்கு இவர்களை நீண்டகாலத்திற்கு தடுத்து வைத்திருப்பதே ஆகும். அரசியல் அழுத்தங்களால் மட்டுமே இவர்களை விடுதலை செய்யும். எந்தவொரு அரசியல் அமைப்பும் அவர்களுக்கு உதவுவதற்கு முன்வரவில்லை.”

 எவ்வாறாயினும், கொழும்பு அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த அச்சுறுத்தல் பிரச்சாரத்தை எந்த அரசியல் அழுத்தத்தாலும் நிறுத்தமுடியாது. மக்கள் மத்தியில் நிலவிவரும் அமைதியின்மையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்கின்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலமையிலான கொழும்பு அரசாங்கம், தீவின் தென்பகுதியில் தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வளரும் எதிர்ப்புக்களுக்கு மறுபக்கம் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களிலும் அபிவிருத்தியுறும் எதிர்ப்புக்கள் பற்றி விழிப்புடன் உள்ளது.

மக்கள், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் ஜனாதிபதி சிறிசேனவின் செயலாளருக்கும் உதவிகோரி கடிதங்களை எழுதியுள்ளார்கள். எந்தவிதமான உதவியும் அற்ற நிலையில், துன்னாலை கிராமவாசிகள், அச்சுறுத்தல் நிறுத்தப்பட்டு உறவினர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளினால் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில், தங்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்காக மன்னிப்பு கோரினார்கள். ஆனால், இது ஒரு “சட்டப் பிரச்சினை” என அதிகாரிகள் கூறியுள்ளனர். எவ்வாறாயினும் அப்பாவி இளைஞனை பொலிசார் சுட்டுக் கொன்றதே உண்மையான “சட்டப் பிரச்சினையாகும்.” அரசாங்கம், பொலிஸ் மற்றும் நீதிமன்றமும் இந்தக் கொலையை மூடி மறைப்பதற்கு செயற்படுகின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட அரசியல் கட்சிகள் எந்தவித உதவிகளையும் செய்யவில்லை. தேர்தல் நேரங்களில் மட்டும் வாக்குகளைப் பெறுவதற்கு தம்மை நாடுவதாக மக்கள் கூறுகின்றார்கள்.

ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் சம்பந்தமாக இந்தக் கட்சிகளுக்கு எந்தவிதமான அக்கறையும் கிடையாது. தங்களுக்கான அற்ப சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, அமெரிக்கா உட்பட சர்வதேச சக்திகளுடனும் கொழும்பு அரசாங்கத்துடனும் உறவுகளை ஸ்திரப்படுத்துவதற்காகவே அவை செயற்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தையும் பொலிசையும் ஆதரிக்கும் இந்த கட்சிகள், தெற்கில் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது கொழும்பு அரசாங்கம் நடத்தும் தாக்குதல்களையும் ஒடுக்குமுறைகளையும் ஆதரிக்கின்றன.