ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

World hunger increasing for first time since turn of the century

100 ஆண்டுகளில் முதன்முறையாக உலகின் பட்டினி அதிகரிக்கிறது

By Shelley Connor
18 September 2017

உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2016 இல் 815 மில்லியனாக உயர்ந்து, அதிலும் முந்தைய ஆண்டிற்கு முன்பிருந்து 38 மில்லியனால் அதிகரித்துள்ளது. வெள்ளியன்று, ஐந்து ஐக்கிய நாடுகளின் அமைப்புகளும் அறக்கட்டளைகளும் இணை கையொப்பமிட்டு ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organisation of the UN-FAOUN) வெளியிட்ட ஒரு புதிய அறிக்கையின்படி, ஒரு நூற்றாண்டில் முதன்முறையாக இவ்வாறு ஆண்டிற்கு ஆண்டு அதிகரிப்பாக இது இருந்தது.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, மற்றும் அதனால் உலகெங்கிலும் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகின்ற உணவு உற்பத்தி ஆகியவற்றினால் ஒரு நூற்றாண்டு காலம் நீடித்த பட்டனி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான சாத்தியம் உருவாக்கப்பட்டுள்ளது. 2016 இல், உலகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் போதுமான மற்றும் சத்தான உணவை வழங்குவதற்கு ஏதுவாக தேவைக்கு அதிகமான அளவில் உணவுகளை உலகமே உற்பத்தி செய்தது.

ஆனால், ஐ.நா. அறிக்கையின்படி, இந்த வெற்றிகள் இப்பொழுது பெருகிய முறையில் போர் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆகியவற்றால் மாற்றப்பட்டுள்ளன. அது குறித்து பெருமளவில் ஐ.நா. மௌனம் சாதிக்கும் மற்றொரு காரணி பெருகிவரும் பொருளாதார சமத்துவமின்மையின் தாக்கம் ஆகும். அதாவது ஒப்பீட்டளவில் பணக்கார மற்றும் ஏழை நாடுகளிலும், உபரியாக உள்ள உணவு பொருட்களை கூட வாங்கவியலாத மிகுந்த ஏழ்மையான நிலையிலேயே ஏராளமானோர் இருக்கின்றனர்.

உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food and Agriculture Organization-FAO), உலக சுகதார அமைப்பு (World Health Organization-WHO), வேளாண்மை அபிவிருத்திக்கான சர்வதேச நிதி (International Fund for Agricultural Development-IFAD),  உலக உணவு திட்டம் (World Food Programme) மற்றும் UNICEF போன்ற ஐந்து அமைப்புகள் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளன. ஒரு சமூக பேரழிவு என்று மட்டுமே விவரிக்கப்படும்போது கூட இதுபோன்ற அறிக்கைகளில் வழமையாக உள்ளது போல, இதிலும் அவை பயன்படுத்தும் வார்த்தை பிரயோகம் வேண்டுமென்றே கட்டுப்படுத்தப்படுவதோடு, எச்சரிக்கையுடனான மற்றும் படிப்படியான அணுகுமுறையையுமே இது கொண்டுள்ளது.

2016 இல், உதாரணமாக, ஐந்து வயதுக்கு குறைவான 155 மில்லியன் கணக்கிலான சிறுவர்கள் அவர்கள் வயதிற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாதவர்களாக கருதப்பட்டு “வளர்ச்சி குன்றியவர்கள்” என வகைப்படுத்தப்பட்டனர், ஏனெனில் உணவுப் பற்றாக்குறை காரணமாக அவர்களின் உடல் வளர்ச்சி கணிசமாக குறைந்துவிட்டது. சுமார் 52 மில்லியன் குழந்தைகள் அவர்களது உயரத்திற்கேற்ற எடை கொண்டவர்களாக இல்லாததால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கருதப்பட்டனர். கிழக்கு ஆபிரிக்காவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர், மற்றும் முழு கண்டத்தின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக உள்ளனர். ஆசியாவில், முக்கியமாக தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மக்கள்தொகையில் 12 சதவிகிதத்தினர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக உள்ளனர்.

2000 இல் 900 மில்லியன் மட்டத்திலிருந்த உலகளாவிய ஊட்டச்சத்துக் குறைவுடையோர் எண்ணிக்கையை குறைப்பதில் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டிருந்தது தற்போது தலைகீழாக ஆபத்தில் உள்ளது என்பதாக இந்த அறிக்கை எச்சரிக்கின்றது. கடந்த ஆண்டில் மட்டும், உலகளவில் நாள்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு “தீவிர மட்டத்துக்கு” உயர்ந்தது. பிப்ரவரியில் தெற்கு சூடானில் பஞ்சம் அறிவிக்கப்பட்டது. யேமன், வடகிழக்கு நைஜீரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் பஞ்சத்தின் விளிம்பில் தள்ளாடி கொண்டிருக்கின்றன.

2016 இல், நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு உடையோர் எண்ணிக்கை 815 மில்லியனாக உயர்வு கண்டது, இது முழு ஐரோப்பிய கண்டத்தின் மக்கள்தொகையை விட அதிக எண்ணிக்கை கொண்டதாகும். அந்த எண்ணிக்கையில், 489 மில்லியன், அதாவது 60 சதவிகிதத்தினர் போர் அல்லது உள்நாட்டு மோதல் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழ்கின்றனர்.

கடந்த தசாப்தத்தில் மோதல்கள் “எண்ணிக்கை அளவில் மட்டும் திடீர் உயர்வை” கொண்டிருக்கவில்லை, மாறாக அவை “இயல்பாகவே மிகவும் சிக்கலானவையாகவும், கடுமையானதாகவும் ஆகிவிட்டன” என்பதாக அறிக்கையின் முன்னுரை தெரிவிக்கின்றது. மோதல் பிராந்தியங்களை சார்ந்த நாடுகளில் வசிப்பவர்கள் மற்ற நாடுகளை விட கிட்டத்தட்ட இரண்டரை மடங்கிற்கு அதிகமாக ஊட்டச்சத்து குறைவானவர்களாக இருக்கின்றனர். தெற்கு சூடானில், கடுமையான உணவு பாதுகாப்பற்ற தன்மை கிட்டத்தட்ட 4.9 மில்லியன் மக்களை, அதாவது மக்கள்தொகையில் 42 சதவிகிதத்திற்கு அதிகமானோரை அல்லற்படுத்துகிறது.

யேமனில், மக்கள்தொகையில் 60 சதவிகிதம் —17 மில்லியன் மக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது— கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுகின்றனர். 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த எண்ணிக்கை 47 சதவிகிதம் அதிகரித்துள்ளதை குறிப்பிடுகின்றது. அறிக்கையின்படி யேமனில், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு என்பது “நீண்ட காலத்திற்கானதொரு பிரச்சனையாக” உள்ளது. என்றாலும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, அல்லது வீணடித்தல் போன்றவை கடந்த மூன்று ஆண்டுகளில் மிகத் தீவிரமாக உயர்ந்துள்ளது. “தூண்டப்பட்ட மோதல், பொருளாதார ரீதியான நெருக்கடி ஆகியவை ஒட்டுமொத்த மக்கள்தொகையையும் பாதிக்கின்றது” என அறிக்கை மேற்கோளிடுகின்றது.

போரும் உள் மோதல்களும் அநேக வழிகளில் உணவு பாதுகாப்பின்மையை உருவாக்குகின்றன. அவற்றிலொன்றாக, மக்கள் இடப்பெயர்ச்சி மூலம் உருவாகின்றது. FAOUN அறிக்கையின்படி, அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் (internally displaced persons-IDPs) எண்ணிக்கை “பெருமளவிலான மோதல்களுடன் சேர்ந்தே கணிசமாக அதிகரித்துள்ளமை,” 2007 இல் இருந்து 2016 வரையில் இரட்டிப்பாகி மொத்தம் 64 மில்லியன் ஆகியுள்ளது.

தற்போது, ஒவ்வொரு 113 பேரில் ஒருவர் அகதியாகவோ, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவராகவோ, அல்லது புகலிடம் தேடுபவராகவோ இருக்கிறார். மதிப்பீட்டின்படி, உலகளவில் 70 மில்லியன் மக்கள் இடம்பெயர்தலின் விளைவாக ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

வேளாண்மை மற்றும் உணவு விநியோக முறைகளான, “உற்பத்தி, அறுவடை, செயலாக்கம் மற்றும் உள்ளீடு வழங்கலுக்கு உற்பத்திப் பொருட்களை இடம்பெயர்த்தல், நிதியளித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில்” போரும் கடுமையான வரிகளை அதிகரிக்க வழிசெய்வதாக அறிக்கை தெரிவிக்கின்றது. ஈராக்கில், உதாரணமாக, 2003 அமெரிக்க படையெடுப்புக்கு முன்னதாக, நினிவே மற்றும் சலா-அல் டின் மாவட்டங்கள் நாட்டின் கோதுமை உற்பத்தியில் மூன்று பங்கு அளவையும், பார்லி உற்பத்தியில் 40 சதவிகிதத்தையும் உற்பத்தி செய்தன. ஆயினும் 2016 பிப்ரவரியில், சலா-அல் டின் தானிய உற்பத்திகளில் 70-80 சதவிகிதம் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன; மொசூல் நகரத்தை உள்ளடக்கிய நினிவேயில், கோதுமை சாகுபடிக்கு பயன்படுத்தப்பட்ட 32-68 சதவிகித நிலமும், அத்துடன் பார்லி சாகுபடிக்கு பயன்படுத்தப்பட்ட 43-57 சதவிகித நிலமும் பயன்படுத்தமுடியாமல் அல்லது அழிக்கப்பட்டது.

ஒருகாலத்தில் விவசாயம் செழித்தோங்கிய, மற்றும் பல விஞ்ஞானிகள் வரலாற்று ரீதியாக இங்குதான் இது தோற்றுவிக்கப்பட்டதாகவும் நம்பிய சிரியாவில், ஆறு ஆண்டுகளாக அமெரிக்கா மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கான முயற்சிகளால் நாட்டின் சாகுபடி சூறையாடப்பட்டது. சிரியர்களில் 85 சதவிகிதத்தினர் தற்போது வறுமையில் வாழ்கின்றனர். 2016 இல் 6.7 மில்லியன் மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மைக்கு முகம் கொடுத்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாடும் வீணடித்தலும் தற்போது பெரும்பாலான பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றது.

மோதல்கள் ஊட்டச்சத்து குறைபாட்டை தூண்டுவது “உணவு… போருக்கானதொரு ஆயுதமாக பயன்படுத்தப்படுவதில்” தங்கியுள்ளது என்பது மிகவும் நயவஞ்சகமான வழிகளில் ஒன்றாகும். தெற்கு சூடானில் வர்த்தக முற்றுகைகளை பயன்படுத்துவதைப் பற்றி இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இது குறிப்பாக, பெரும்பகுதி மக்கள்தொகைக்கான ஊட்டச்சத்து உணவு விநியோகத்திற்கு வழிவகுக்கும் இறக்குமதி செய்யப்பட்ட தானியங்களை கொண்ட யேமனுக்கு எதிரான சவுதி தலைமையிலான முற்றுகையை குறிப்பிடத் தவறிவிட்டது.

ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு மோதல்கள் மட்டுமே மூலகாரணமாக இருப்பதில்லை என்பதை FAOUN அறிக்கை தெளிவுபடுத்துகிறது. சுற்றுச்சூழல் உச்சநிலைகளும் கூட, உப-சஹாரா ஆபிரிக்காவிலும், அத்துடன் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் உணவு பாதுகாப்பின்மையில் கூர்மையான அதிகரிப்பிற்கு வழிவகுத்தன.

மேலும், உலக சோசலிச வலைத் தளம் கடந்த காலத்தில் தெரிவித்தது போன்று, ஊட்டச்சத்து குறைபாடுகளால் உருவாகும் நோய்கள் அமெரிக்கா மற்றும் பெரிய பிரித்தானியா போன்ற வளர்ச்சியுற்ற நாடுகளில் மீண்டும் அதிகரித்து வருகின்றது. இந்த நாடுகளில், ஒரு குடும்பத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் கூடிய நோய்தடுப்பு குறைபாடுகளும் ஏற்படுவதான நிகழ்வுகளை கண்டறிவதென்பது சாதாரணமானதாக உள்ளது. ஊதியங்கள் தேங்கி நிற்கையில், உணவு பொருட்களின் விலைகள் மட்டும் தொடர்ந்து அதிகரிக்கின்ற நிலையில், பெரும்பாலானோர் பெரிதும் பதப்படுத்தப்பட்ட, மாச்சத்து உணவுகளை மட்டுமே வாங்க முடியும். கெட்டுப்போகும் வாய்ப்பு குறைவு என்பதாலும் போக்குவரத்து மற்றும் சேமித்து வைப்பதற்கும் மலிவானவையாக இருக்கக்கூடிய இத்தகைய பொருட்களை விநியோகிப்பது நிறுவனங்களுக்கு மிகவும் இலாபகரமானதாக இருக்கின்றது.

இது ஒரு பெருகிவரும் சுகாதார நெருக்கடியாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது: “கர்ப்ப காலத்திலும், குழந்தை பருவத்திலும் உள்ள உணவு பாதுக்காப்பின்மையும், ஊட்டச்சத்து குறைபாடும் உடல் பருமனை அதிகரிக்க செய்யும் மற்றும் முதுமை காலத்தில் தொற்றுநோயல்லாத நாட்பட்ட நோய்களையும் சேர்த்துக்கொள்ளும் வளர்சிதை மாற்றங்களுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.

அறிக்கையின் ஆசிரியர் கூறுவது போல, ஐ.நா.வின் மதிப்பீடுகளின் முடிவுகள், “நம்மால் புறக்கணிக்க முடியாத அளவிற்கு எச்சரிக்கை மணிகளை அடித்துள்ளன.” இருப்பினும், ஊட்டச்சத்து குறைபாடுகளை மோதல்கள் தான் தோற்றுவிக்கின்றன என்பதை ஐ.நா. சரியாக சுட்டிக்காட்டுகின்ற போதிலும், இந்த மோதல்களில் ஏகாதிபத்தியம் வகிக்கும் பாத்திரத்தை அப்பட்டமாக மறைத்து விடுகிறது. தெற்கு சூடானிலும் சிரியாவிலும் நிலவுகின்ற மோதல்களை உள்நாட்டு பூசல்களாக இது வகைப்படுத்துகின்ற போதும், உண்மையில், இரு நாடுகளிலும் ஏற்பட்ட இந்த குழப்பம் நேரடியாக அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் மற்றும் அதன் பிரதிநிதித்துவ நாடுகளால் ஏற்பட்டுள்ளது. ஈராக் தனது மதிப்பீட்டில் குறைந்தபட்சம், 2003 முதல் 2011 வரை அமெரிக்கா, இராணுவப் படை கொண்டு அதனை ஆக்கிரமித்ததோடு தொடர்ந்து படையெடுத்து வீணடித்தது முதல் இன்றுவரை அந்நாடு ஒரு போர்க்களமாகவே இருப்பதை குறிப்பிடுவதற்கு கூட தவறிவிட்டது.

யேமனுக்கு எதிரான சவுதி தலைமையிலான கூட்டணியின் தாக்குதல்களை பற்றியும், மேலும் இத்தாக்குதல்களுக்கு அமெரிக்கா உடந்தையாக இருந்தது பற்றியும் எந்தவொரு தகவலையும் குறிப்பிடுவதை இந்த அறிக்கையின் ஆசிரியர்கள் ஒடுக்குகின்றனர்; பல சந்தர்ப்பங்களில், மனிதாபிமான உதவி அமைப்புகளை நாட்டிற்குள் நுழைவதை இக்கூட்டணி தடுத்துள்ளதோடு, அது பல மருத்துவமனைகள் மற்றும் நகரும் மருந்தகங்கள் மீது குண்டு வீசி தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆனால் அறிக்கை, தெற்கு சூடானில் “போரிடும் பிரிவினர்” நடத்திய சில குற்றங்கள் குறித்து நீண்ட அளவில் விவரிக்கின்றது.

மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தின் எப்பொழுதுமான தெளிவான விளைவுகள் நீண்ட தூரம் பெருமளவில் நிராகரிக்கப்பட்டது. காலநிலை மாற்றம் மற்றும் வளர்ந்த நாடுகளில் மலிந்துள்ள ஊட்டச்சத்து குறைபாடு இரண்டிற்கும் பொறுப்பாக இருக்கக்கூடிய இலாப நோக்கின் காரணமாக உருவாகும் அரிக்கும் சமூக விளைவுகளுக்கு எதிராக எந்தவொரு விமர்சனமும் எழுப்பப்படுவதில்லை.

உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி புதிய, அதிகளவு கொடிய யுத்தங்கள் குறித்து அச்சுறுத்துகின்றன. ஏகாதிபத்திய நாடுகள் உணவு பாதுகாப்பின்மை குறித்து மட்டும் உரையாற்ற முடியாது, ஏனென்றால் அவர்கள் தங்களது சொந்த முரண்பாடுகளை தீர்ப்பதில் அடிப்படையாகவே திறனற்றவர்களாக உள்ள நிலையில், தங்களது இராணுவவாதம் மற்றும் கட்டுப்பாடற்ற தொழில்துறை மாசுபடுத்தல் ஆகியவற்றுடன் இணைந்ததாகவே அதை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த அறிக்கை வெளியிடப்பட்டாலும் கூட, முன்னெப்போதும் இல்லாத வன்முறை சூறாவளிகள் ஒட்டுமொத்த நகரங்களையும் மூழ்கடித்தன என்பதோடு, ஆயிரக்கணக்கானோரை இடம்பெயரச் செய்தது, மேலும் அமெரிக்க வளைகுடா கடற்கரை மற்றும் கரீபியன் பகுதி முழுவதுமான உயிர்களையும் பலிகொண்டுள்ளன.

முதலாளித்துவத்தின் முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, மற்றும் சமூக தேவையை அடிப்படையாகக் கொண்டதொரு பொருளாதார அமைப்புடன் அதை மாற்றீடு செய்துகொள்வது ஆகியவற்றினால் மட்டுமே உலகளாவிய பட்டினியை முற்றிலுமாக அழிக்க முடியும். பரந்த அளவிலான ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய ஒரு எச்சரிக்கை மணியாக ஐ.நா. குரல் கொடுப்பதாக இருந்தாலும், ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் மட்டும் தான் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.