ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Spanish government dispatches police reinforcements to Catalonia

ஸ்பானிஷ் அரசாங்கம் கட்டலோனியாவிற்கு பொலிஸ் படைகளை அனுப்புகிறது

By Paul Mitchell
23 September 2017

அக்டோபர் 1 இல் நடக்கவுள்ள சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்புக்கு முன்னதாக கட்டலோனியாவுக்கு தேசிய பொலிஸ் மற்றும் ஊர்க்காவல் படைகள் அனுப்பப்பட இருப்பதாக ஸ்பானிய உள்துறை அமைச்சர் Juan Ignacio Zoido அறிவித்துள்ளார்.

Zoido அவரது கட்டலான் பிராந்திய சமதரப்பான Joaquím Forn க்கு அனுப்பிய கடிதம் ஒன்றில், சர்வஜன வாக்கெடுப்புக்கான தயாரிப்பில் ஈடுபட்ட கட்டலான் அதிகாரிகள் மற்றும் வணிகர்களை புதனன்று கைது செய்த பின்னர் வெடித்த "கொந்தளிப்பான அணிதிரள்வுகளை" தொடர்ந்து, "பொதுஒழுங்கைப் பேணுவதற்காக" கட்டலான் பிராந்திய பொலிஸ் படை Mossos d’Esquadra க்கு "உதவ" கூடுதல் அதிகாரிகள் அவசியப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். கைது செய்யப்பட்டவர்கள் "பிரிவினைக்காக" அனேகமாக 15 ஆண்டுகால சிறைதண்டனையை முகங்கொடுக்கிறார்கள்.

படைகள் தங்குவதற்கு இடமளிக்க மூன்று கப்பல்கள் பார்சிலோனா மற்றும் டர்ராகோனா துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன, ஆனால் அவற்றிற்கு எதையும் வினியோகிக்க துறைமுக தொழிலாளர்கள் மறுத்துள்ளனர்.

ஆனால் கட்டலான் பிராந்திய பொலிஸ் படையை (Mossos d’Esquadra) நம்ப முடியாது, அவற்றின் எண்ணிக்கையை —சுமார் 16,000 அதிகாரிகள்— சமப்படுத்த வேண்டுமென்ற அச்சங்களே, Zoido இன் அறிவிப்புக்குப் பின்னால், நிறைந்துள்ளன.

கட்டலான் பிராந்திய பொலிஸ் படையின் தலைவர் Josep Lluís Trapero, மாட்ரிட்டில் இருந்து வரும் உத்தரவுகளை போதிய உற்சாகமில்லாமல் அல்லது தெளிவின்றி அவருக்கு கீழ் இருப்பவர்களுக்கு வழங்கி வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறார். வியாழனன்று போலி-இடது CUP கட்சியின் தலைமை அலுவலகங்களை, ஓர் உத்தரவாணையின்றி, ஊர்க்காவல் படை காவலர்கள் ஆத்திரமூட்டும் வகையில் கைப்பற்றுவதை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து, கட்டலான் பொருளாதார அமைச்சகத்தை சோதனையிடுபவர்களை முற்றுகையிட்டதால், மக்கள் கட்சி அதிகாரிகள் அப்படையின் "திராணியற்ற நிலைக்கு" குற்றஞ்சாட்டினர்.

“குற்றம் இழைப்பவர்களுக்கு" எதிராக கட்டலான் பிராந்திய பொலிஸ் படை நடவடிக்கை எடுக்காததற்காக El País தலையங்கம் ஒன்று அதை விமர்சித்தது. கட்டலான் பொலிஸ் படை, உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படலாம் அல்லது அது ஒட்டுமொத்தமாக கலைக்கப்படலாமென பிற பத்திரிகைகள் எச்சரித்தன.

El Espanol தகவல்படி, கட்டலான் அரசாங்கத்தின் சுயாட்சியை நீக்கி அதன் செயல்பாடுகளை ஸ்பானிய அரசியலமைப்பு கைப்பற்ற வழிவகை செய்யும் ஷரத்து 155 ஐ பிரயோகிக்கும் நிகழ்முறையை "கைவிடாமல் வைத்திருக்க" மக்கள் கட்சி அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. “[மக்கள் கட்சி பிரதம மந்திரி மரீனோ] ரஹோய் வெறுமனே ஒரு பார்வையாளராக தொடர்ந்து நடந்து கொண்டால், அந்த அரசு ஆட்சிக்கவிழ்ப்பை நோக்கி செல்லும்" —இந்த வார்த்தை சர்வஜன வாக்கெடுப்பை விவரிக்க மாட்ரிட்டால் பயன்படுத்தப்பட்டது— இவ்வாறு கடுமையாக குறைகூறி அப்பத்திரிகை அம்முடிவை விமர்சித்தது.

அவர்களின் பங்கிற்கு, ரஹோயும் மக்கள் கட்சியும் (PP) சர்வஜன வாக்கெடுப்பைத் தடுக்க பொலிஸ் நடவடிக்கைகளின் தகைமையைக் கணக்கிட்டு வருகின்றனர். வாக்குச்சீட்டுக்கள், சுவரொட்டிகள் மற்றும் வாக்குப்பதிவு மையங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் தொடர்ந்து வாக்குப்பதிவு நடத்த தயாரிப்பு செய்தால் நாளொன்றுக்கு 16,000 யூரோ வரையில் அபாராதங்கள் விதிக்கவும் அச்சுறுத்தி உள்ளனர். கட்டலான் அரசாங்க நிதிகளும் மாட்ரிட்டால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய நீதிமன்றத்தின் அரசு வழக்குதொடுனர்களின் அலுவலகம் கட்டலான் தேசிய நாடாளுமன்றத்திற்கு (Asamblea Nacional de Cataluña - ANC) எதிராகவும், புதனன்று பார்சிலோனாவிலும் ஏனைய நகரங்களிலும் போராட்டம் நடந்திய Omnium Cultural அமைப்பிற்கு எதிராகவும் பிரிவினைவாத குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்துள்ளது. அவ்விரு பிரதான பிரிவினைவாத அமைப்புகளும் வன்முறையைத் தூண்டுவதாக அது குற்றஞ்சாட்டுகிறது, ஆனால் உண்மையில் ANC தலைவர் Jordi Sánchez அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்தவே அழைப்புவிடுத்து வந்துள்ளார்.

மக்கள் கட்சி, அதன் கூடுதல் பொலிஸ் நியமிப்பு மற்றும் அதிக ஒடுக்குமுறையை நியாயப்படுத்த வன்முறையைக் காரணமாக்கி வருகிறது. அவர்கள் CUP ஐ, “கட்டலான் சமூகத்தின் யதார்த்தத்திலிருந்து வெகுதூரம் விலகி நிற்கும்", “மிகவும் தீவிர மற்றும் வன்முறை இயல்புடன், ஓர் அராஜகவாத தோற்றுவாய் இயக்கம்" என குறி வைத்துள்ளனர். இந்த வகையான அறிக்கைகள் CUP க்கு உதவவே செய்கின்றன, அது கட்டலோனிய இடது குடியரசு (ERC) மற்றும் கட்டலான் ஐரோப்பிய ஜனநாயகக் கட்சி (PdeCAT) ஆகிய பிரதான கட்டலான் முதலாளித்துவ கட்சிகளின் அருவருடியாக இருந்து கொண்டே, போலி-சோசலிச வண்ணத்தில் தன்னை மறைத்துக் கொள்கிறது.

அக்டோபர் 1 இல் பிரிவினைவாதிகள் சர்வஜன வாக்கெடுப்பை கைவிட்டால், மக்கள் கட்சி அவர்களுடன் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் மீது பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என்று அறிவித்து பிரிவினைவாதிகளை மக்கள் கட்சி பிளவுபடுத்த முனைந்து வருகிறது. ஸ்பெயினில் ஒரு "பிராந்திய மாதிரியிலான ஆணைக்குழுவை" அமைக்க, ஏற்கனவே காங்கிரஸின் முன் வைக்கப்பட்ட, சோசலிச கட்சியின் (PSOE) முன்மொழிவை ஆதரித்து அங்கே மக்கள் கட்சிக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றன.

பொருளாதார அமைச்சர் Luis De Guindos பைனான்சியல் டைம்ஸிற்கு கூறுகையில், “அவர்கள் சுதந்திரத்திற்கான திட்டங்களைக் கைவிட்டால், உடனேயே எங்களால் பேச முடியும்… கட்டலான் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய சுயாட்சியாக விளங்குகிறது என்றாலும், நிதியியல் அமைப்புமுறை மற்றும் பிற பிரச்சினைகளில் ஒரு சீர்திருத்தம் குறித்து எங்களால் பேச முடியும்,” என்றார்.

பேச்சுவார்த்தைக்கான மக்கள் கட்சியின் ஆதரவை சோசலிஸ்ட் கட்சி தலைவர் Cristina Narbona வரவேற்ற அதேவேளையில், அரசாங்கம் அக்டோபர் 2 வரையில் காத்திருக்க வேண்டியதில்லை, மாறாக உடனே தொடங்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இருப்பினும் சோசலிஸ்ட் கட்சி (PSOE), “ஐரோப்பிய நாடாளுமன்றவாதிகள், அரசு மற்றும் சுய-அதிகார சமூக பிரதிநிதிகள் ஆகியோருடன், மக்கள் கட்சி மற்றும் குடிமக்கள் கட்சி நீங்கலாக ஏனைய சகல அரசியல் அமைப்புகளின் கழகங்கள் மற்றும் கழக நிர்வாகிகளை" உள்ளடக்கி பெடெமோஸ் தொடங்கிய ஒரு முனைவில் இணைய மறுத்துள்ளது. இதற்கும் கூடுதலாக, Zaragoza மாகாண கவுன்சிலின் PSOE தலைவர் இந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் ஞாயிற்றுக்கிழமை கூட்டத்திற்கு தடைவிதித்துள்ளதார், இருப்பினும் அதை ஏற்பாடு செய்தவர்கள் அதை வேறு இடத்தில் நடத்த முயற்சித்து வருகின்றனர்.

இதற்கிடையே கட்டலான் ஜனாதிபதி Carles Puigdemont, அந்த சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் கட்டலான் அரசாங்கத்திடம் "அப்போதைக்குரிய திட்டங்கள்" உள்ளன என்றும் அறிவித்துள்ளார். வாக்கெடுப்பு மையங்களின் ஒரு வரைபடம் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை கையாள சுமார் 55,000 பேர் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. கட்டலான் தேசிய நாடாளுமன்றம் மற்றும் Òmnium Cultural ஆகிய பிரிவினைவாத குடை அமைப்புகளால் “நிரந்தர போராட்டத்திற்கான" ஒரு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்டாலோனியா சம்பவங்கள் பிற சுயாட்சி பிரதேசங்களிலும் எதிர்விளைவுகளைக் கொண்டுள்ளன. வியாழனன்று பாஸ்க் (Basque) பகுதியின் தலைவர் Iñigo Urkullu, ஸ்பெயினின் "பிராந்திய அரசியல் சிக்கல்களிலிருந்து வெளியேறுவதை”, “இறையாண்மை அரசின் மறுபகிர்மானத்ததை" மற்றும் கூட்டாட்சி "இறையாண்மை பகிர்வு" கருத்துக்கள் மீதான விவாதங்களை அறிவித்தார். சிறுபான்மை மக்கள் கட்சி அரசாங்கமானது, Urkullu இன் பாஸ்க் தேசிய கட்சியைச் சேர்ந்த காங்கிரஸில் உள்ள பிரதிநிதிகளைச் சார்ந்தே உயிர்பிழைத்துள்ள நிலையில், அவர்கள் வரவு-செலவு திட்டக்கணக்கு மீதான வாக்கெடுப்பை மறுத்ததால், அது ஒத்தி வைக்க நிர்பந்திக்கப்பட்டது.

பிரிட்டனின் வெளியேற்றத்தாலும் தேசியவாதம் மற்றும் பிரிவினைவாதத்தின் அதிகரிப்பாலும் சூழப்பட்டு, ஐரோப்பிய ஒன்றிய அணியின் உயிர்வாழ்வுக்கான நெருக்கடியை கட்டாலோனிய நெருக்கடி இன்னும் மோசமாக்கும் என்று அஞ்சி, ஒருசில ஐரோப்பி தலைவர்கள் அது குறித்து பகிரங்கமாகவே பேசியுள்ளனர். இவ்வாரம், ஸ்காட்டிஷ் தேசிய கட்சி Nicola Sturgeon கட்டலான் பிரிவினைவாதிகளுடனான பொதுவான அம்சங்களைச் சுட்டிக்காட்டி, அந்த சர்வஜன வாக்கெடுப்பை முன்னெடுக்குமாறு அழைப்புவிடுத்தார். இத்தாலியில், Forza Italia இன் ஆதரவுடன், வடக்கு லீக் ஊக்குவித்த இரண்டு சர்வஜன "ஆலோசனை" வாக்கெடுப்புகள் அந்நாட்டின் இரண்டு மிக செல்வசெழிப்பான பிராந்தியங்களான Lombardy மற்றும் Veneto க்கு இன்னும் கூடுதல் சுயாட்சி பெற அக்டோபர் 22 இல் நடத்தப்பட உள்ளன.

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், கட்டாலோனிய பிரச்சினையானது ஒரு "ஸ்பெயினின் உள்நாட்டு விடயம்", ஆனால் ஜேர்மன் அரசாங்கம் "ஸ்பெயினின் ஸ்திரப்பாட்டை பேணுவதில் மிகுந்த ஆர்வம்" கொண்டுள்ளது என்பதை அவர் [மேர்க்கெல்] அவ்வபோது ரஹோய்க்கு தெரிவித்துள்ளார்" என்று குறிப்பிட்டு உத்தியோகபூர்வ ஐரோப்பிய ஒன்றிய பாதையை அவர் தொகுத்தளித்தார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உள்ள பசுமை கட்சியின் ஜேர்மன் துணை-தலைவர் Ska Keller கூறுகையில், “ரஹோய் எரியும் தீயில் நிறைய எண்ணெய் வார்த்துள்ளார், அது சுதந்திரவாத விவாதத்திற்கு எண்ணெய் வார்த்து வருகிறது. அவர் ஒரு பெரிய தவறு செய்துவிட்டார்" என்று இன்னும் வெளிப்படையாக அறிவித்ததுடன், “விடயங்களைத் தணிக்க" மக்கள் கட்சியின் மற்ற தலைவர்கள் அவர் மீது அழுத்தமளிக்க வேண்டுமென அழைப்புவிடுத்தார்.

ஐரோப்பிய ஆணைக்குழு (EC) தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் அவர் பிரிவினையை ஆதரிப்பதைச் சுட்டிக்காட்ட, சுதந்திரத்திற்குப் பின்னர் கட்டாலோனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையலாம் என்ற அவரது கடந்த வார கருத்துக்களை கட்டலான் அரசியல்வாதிகள் பயன்படுத்துவதை விமர்சித்தார். வழங்கப்பட்டுள்ளவாறு, அது அங்கத்துவ அரசுக்கான அரசியலமைப்பு சட்டத்திற்கு இணங்க இருந்தால் மட்டுமே ஒரு புதிய சுதந்திர அரசு அதில் இணைய அனுமதிக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

இங்கிலாந்து கார்டியன் தலையங்கம் ஒன்று "விளிம்பிலிருந்து பின்வாங்குமாறு" அழைப்புவிடுத்தது. “அனைத்து ஸ்பானிய பிரதம மந்திரிமார்களே, மரீயானோ ரஹோய், கட்டாலோனியாவில் மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் என்ன சாதித்திருக்கிறார் என்றால், அப்பிராந்தியத்தின் கருத்தைக் கடுமையாக்கி, ஆயிரக் கணக்கானவர்களை வீதிக்கு இழுத்து வந்துள்ளார்,” என்றது குறிப்பிட்டது.

“ஒரு சமரசத்தை நோக்கி ஒன்றும் செய்யப்படவில்லை என்றால், ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்கிலுள்ள அந்த மிகப்பெரிய அங்கத்துவ நாட்டை தொடர்ச்சியான ஓர் அரசியல் அழிவு அச்சுறுத்தும்,” என்றது எச்சரித்தது.

எக்னாமிஸ்ட் பத்திரிகை அறிவித்தது, “சட்டத்தின் ஆட்சிக்கு ஏதேனும் அர்த்தம் இருக்கிறதென்றால், அரசியலமைப்பு தாங்கிபிடிக்கப்பட வேண்டும். அதற்காக திரு. Puigdemont அவரது பொறுப்பற்ற சர்வஜன வாக்கெடுப்பிலிருந்து பின்வாங்க வேண்டும்... திரு. ரஹோய் தற்காப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும்: அதாவது, இப்போது அவர் கட்டாலோனியாவுடன் ஒரு புதிய ஏற்பாட்டிற்குப் பேரம்பேச முனைய வேண்டும், அதேவேளையில் பிரிவினை மீதான சர்வஜன வாக்கெடுப்புகளை அனுமதிக்க அரசியலமைப்பை திருத்தி எழுதவும் அவர் அனுமதிக்க வேண்டும், ஆனால் அது அதிக வாக்குப்பதிவுடன் ஒரு தெளிவான பெரும்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும்.”