ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Aisin Automotive workers in India’s Haryana state face a new company-government witchhunt

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் ஐசின் வாகனத் தொழிலாளர்கள் ஒரு புதிய நிறுவன-அரசாங்க சதிவேட்டையை எதிர்கொள்கின்றனர்

By Jai Sharma
28 July 2017

இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (BJP) ஆட்சி செய்கின்ற ஹரியானா மாநிலத்தில் மானேசரில் உள்ள மாருதி சுசூகி நிறுவன வாகன அசெம்பிளி ஆலையை சார்ந்த 13 தொழிலாளர்களுக்கு ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, ஒரு சில மாதங்களிலேயே, மற்றுமொரு ஜப்பான் நிறுவனமான ஐசின் வாகன ஹரியானா பிரைவேட் லிமிடெட் (Aisin Automotive Haryana Private Limited) அதன் தொழிலாளர்கள் மீதான ஒரு பழிவாங்கலை ஆரம்பித்துள்ளது. ஹரியானாவின் IMT ரோஹ்தக் பகுதியில் உள்ள ஜப்பானுக்கு சொந்தமான இந்த வாகன பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் கிட்டத்தட்ட 800 பேரை பணியமர்த்தியுள்ளது.

மானேசர் தொழிலாளர்கள் மலிவுகூலி உழைப்பு நிலைமைகளை எதிர்த்தும் மற்றும் நிறுவனத்திற்கு உடந்தையான தொழிற் சங்கத்திற்கு எதிராக ஒரு சுயாதீனமான தொழிற் சங்கத்தை உருவாக்குவதற்குமென அவர்கள் நடத்திய போராட்டத்திற்கு பதிலிறுப்பாக அவர்களுக்கு எதிரான நிறுவன-அரசாங்க கூட்டு சதிவேட்டையின் ஒரு பகுதியாக மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான இந்த நீதித்துறை சார்ந்த ஜோடிப்பு வழக்கு இருந்தது. இப்போது, அதேபோன்ற அடிமை உழைப்பு நிலைமைகளை எதிர்த்து போராடுவதற்காக ஒரு தொழிற் சங்கத்தை உருவாக்க முனைகின்றபோது ஐசின் (Aisin) தொழிலாளர்களும் சதிவேட்டையில் சிக்கவைக்கப்பட்டு வருகிறார்கள்.

ஐசின் நிறுவனம், தெற்கு இந்திய மாநிலமான கர்நாடகாவிலுள்ள அதன் மற்றொரு ஆலையில், கதவு உட்புற தாழ்ப்பாள், உட்புற வெளிப்புற கைப்பிடி போன்ற வாகன பாகங்களை தயாரிக்கின்றது. இந்த நிறுவனம், மாருதி, ஹோண்டா மற்றும் டொயோட்டா போன்ற பெரிய வாகன உற்பத்தியாளர்களுக்கு வாகன உதிரி பாகங்களை விநியோகிக்கின்றது.

சுமார் 800 ஐசின் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களால் தொழிற்சாலைக்கு வெளியே நடத்தப்பட்ட ஒரு மாத காலம் நீடித்த ஆர்ப்பாட்டத்தை முறிப்பதற்கு நோக்கம் கொண்டு மே 31 அன்று நிகழ்த்தப்பட்ட ஒரு மிருகத்தனமான வன்முறையில் அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 400 க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றனர். நிர்வாக கோரிக்கையின் பேரில் வரவழைக்கப்பட்ட சுமார் 700 காவல்துறை அதிகாரிகள் கொண்ட ஒரு படைப்பிரிவு, நிறுவன வாயிலுக்கு வெளியே தர்ணாவில் (அமர்ந்த நிலை போராட்டம்) ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக ஒரு மிருகத்தனமான தடியடி பிரயோகத்தினை (குண்டாந்தடி) மேற்கொள்ளத் தொடங்கியது. சிறிய குழந்தைகளும், தொழிலாளர்களின் பெற்றோர்களும் கூட தாக்கப்பட்டனர். 390 ஆண்கள் மற்றும் 35 பெண்கள் உட்பட, ஐசின் தொழிலாளர்களும் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

அடுத்த நாளே பெண் தொழிலாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும், ஆண் தொழிலாளர்கள் ரோஹ்தக் நகரிலுள்ள சுனாராய்ன் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டதோடு தொடர்ந்து துன்புறுத்தப்பட்டனர். ஐசின் தொழிலாளர்கள் மீதான பொலிசாரின் கொடூரமான தாக்குதலையும் மற்றும் அவர்களை காவலில் வைத்ததையும் எதிர்த்து, ஜூன் 1 அன்று தொழிலாளர்கள் புது தில்லியிலும், ரோஹ்தக் நகரிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் இந்த சதிவேட்டை குறித்து எதிர்ப்பு பெருகிவரும் நிலையில், ஜூன் 3 அன்று தனிநபர் ஒப்பந்த பத்திரங்களின் பேரில் 103 ஆண் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர். ஏனைய தொழிலாளர்கள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு சிறைக்காவலில் வைக்கப்பட்டு, பின்னர் தாமதமாக பிணையில் விடுவிக்கப்பட்டனர். அனைத்து கைது செய்யப்பட்ட தொழிலாளர்களும் தற்போது பிணையில் வெளியே வந்து, ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றனர்.

நிறுவனத்திற்கு மிக உயர்ந்த இலாபங்களை ஈட்டுவதை உறுதி செய்யும் நோக்கம் கொண்டுள்ள மிருகத்தனமான மற்றும் அடக்குமுறை வேலை நிலைமைகளுக்கு எதிராக ஐசின் தொழிலாளர்கள் ஒரு மாத காலம் நீடித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். மதிய உணவு இடைவேளை தவிர, சில அல்லது தண்ணீர் இடைவேளைகள் கூட இல்லாமலும், நாளொன்றுக்கு வெறும் 15 நிமிட கால தேநீர் இடைவேளையுடன், ஒவ்வொரு தயாரிப்பு பொருளையும் ஒருங்கிணைக்க அவர்களுக்கு வெறும் 12 விநாடிகளே தரப்படுகின்றது. உற்பத்தியை வேகப்படுத்துவதற்காக, ஒவ்வொரு தயாரிப்பு பொருள் பிரிவுக்குமான தொழிலாளர் எண்ணிக்கை 25 ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டதுடன், ஒரு மணி நேரத்திற்கு உற்பத்தி செய்யப்படும் அலகுகளின் எண்ணிக்கை 180 ல் இருந்து 300 வரை அதிகரிக்கப்பட்டது.

தண்ணீர் குடிப்பது மற்றும் கழிவறை செல்வது போன்ற செயல்களுக்காக இடைவேளை எடுப்பதற்கு கூட அவர்கள் தண்டிக்கப்படுவதாக தொழிலாளர்கள் கூறினர். இந்தியாவின் மிகச் சிறிய உழைப்புச் சட்டங்களை செயல்படுத்த தவறுவது பற்றி எவரேனும் புகார் செய்தால், அவர்கள் வாய்மொழி துஷ்பிரயோகம், முரட்டுத்தனமான மனித தாக்குதல் மற்றும் நிறுவன அடியாட்கள் மூலமாக அடித்து நொருக்கப்படுவதை எதிர்கொள்வது போன்ற நிலைமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். பெண் தொழிலாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். விடுப்பு நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது, அதிலும் தொழிலாளர்கள் நீண்ட கால விடுப்பு எதுவும் எடுத்தால் அவர்கள் தங்களது வேலையை இழக்கும் நிலைமைக்கு அடிக்கடி முகம்கொடுத்தனர். நான்கு அல்லது ஐந்து நாட்கள் கொண்ட ஒப்புதல் பெற்ற விடுப்பிலிருந்து வேலைக்கு திரும்பும் போது கூட, அவர்கள் மாற்றப்பட்டதை பல சந்தர்பங்களில் தொழிலாளர்கள் கண்டனர். தற்காலிகத் தொழிலாளர்களுக்கு ஒரு அற்பமான ஊதியமாக 6,800 ரூபாயும், பயிற்சியாளர்களுக்கு 8,620 ரூபாயும் என்ற வகையில் தொழிலாளர்களுக்கு மிக மோசமாக ஊதியம் வழங்கப்பட்டது. நிரந்தர தொழிலாளர்களுக்கும் ஒப்புக்கொள்ளப்பட்ட தொகை ஊதியமாக வழங்கப்படவில்லை.

உண்மையில், அரசாங்க கொள்கைகள் விவசாயத்தை பொருளாதார ரீதியில் தவிர்க்க முடியாததாக்கிய காரணத்தால், ஹரியானா மற்றும் தொழிற்துறை இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் பொதுவாக மலிவுகூலி உழைப்பு நிலைமைகள் அதிலொரு பகுதியாக உள்ளன. இதனால், கிராமங்களில் இருந்துவரும் வேலையில்லாத இளைஞர்களுக்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லாத நிலையில், கொடூரமான வேலையிட நிலைமைகளின் கீழ் வேலை செய்ய நகரத்திற்கு வரவேண்டிய நிலை உருவாகின்றது.

ஐசின் தொழிலாளர்கள் மீண்டும் போராட ஒரு தொழிற் சங்கத்தை அமைக்க முடிவு செய்தனர். எனினும் மார்ச் 20 அன்று ஹரியானா மாநில தொழிலாளர் துறை, ஐசின் வாகன ஹரியானா மஜ்தூர் தொழிற்சங்கம் (Aisin Automotive Haryana Mazdoor Union) உத்தியோகபூர்வ அங்கீகாரம் பெறுவதற்கென அவர்களிடம் அளித்த விண்ணப்பத்தை, போதுமான உறுப்பினர்கள் இல்லை என்ற போலிகாரணத்தை முன்வைத்து நிராகரித்தது. மோடி அரசாங்கம் 2014 ல் ஆட்சிக்கு வந்த பின்னர், தொழிற்சங்க சட்டம் 1926 இல் செய்யப்பட்ட மாற்றங்களின்படி, ஒரு தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்படுவதற்கு மொத்த தொழிலாள சக்தியில் குறைந்தது 10 சதவிகிதத்தினர் அதில் உறுப்பினர்களாக இருக்கவேண்டும்.

எனினும், ஐசின் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை உருவாக்க போதுமான உறுப்பினர்களை அவர்கள் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினர் என்றாலும்,  நிறுவனம் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையை ஒரு காகிதளவில் அதிகரிப்பு செய்து தவறாக காட்டிய காரணத்தால் தொழிற்சங்க விண்ணப்பம் நிராகரிக்கப்படலாமெனவும் தெரிவித்தனர். நிறுவனம் 280 நிரந்தர தொழிலாளர்களை கொண்டுள்ளது, மேலும் 250 பேரை பயிற்சியாளர்களாகவும், 150 பேரை அவர்களது வேலைத் திறமையைக் கண்டறியும் கால நிலையிலும் வைத்துள்ள போதிலும், அது தொழிற்சங்கத்தின் பதிவு நிராகரிக்கப்படுவதை நியாயப்படுத்த 513 நிரந்தர தொழிலாளர்கள் இருப்பதாக தவறாகக் காட்டியது. கூறப்படும் இந்த சம்பவத்தில், நிறுவன மேலாண்மை, மாநில தொழிலாளர் துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றிற்கு இடையிலான வாட்ஸ்அப் செய்தி மூலம் வெளிப்படுத்தப்படும் கூட்டுசதியினால், தொழிற்சங்க பதிவை நிராகரிக்கும் முடிவு பற்றி தொழிலாளர்களுக்கு தொழிலாளர் துறை உத்யோகபூர்வமாக தெரிவிப்பதற்கு 10 தினங்களுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது.

தொழிற்சங்கம் அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்ட 20 தற்காலிக தொழிலாளர்களை மே 3 அன்று நிறுவனம் பணிநீக்கம் செய்தது. இந்த நியாயமற்ற நடவடிக்கையை எதிர்த்து 600 ஏனைய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததன் விளைவாக நிறுவனம் கதவடைப்பை அறிவித்தது. இந்த ஆர்ப்பாட்ட தொழிலாளர்களிடம், அவர்கள் எந்தவொரு தொழிற்சங்கத்திலும் சேர மாட்டார்கள் என்று உறுதிமொழி எடுத்த பின்னர் மட்டுமே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்களென கூறப்பட்டது. எனினும், உறுதிமொழியில் கையொப்பமிட அவர்கள் மறுத்துவிட்டதோடு, பணிநீக்கம் செய்யப்பட்ட 20 தொழிலாளர்களை மீண்டும் பணியிலமர்த்த கோரிக்கை விடுத்து தொழிற்சாலை வாயிலுக்கு வெளியே ஒரு ஆர்ப்பாட்டத்தையும் தொடங்கினர். சுட்டெரிக்கும் வெப்பமான சூழ்நிலையில், மே மாதம் முழுவதிலுமாக ஒரு மாதத்திற்கு இந்த தொழிலாளர் போராட்டம் தொடர்ந்தது.

தொழிலாளர் கோரிக்கைகளை நிராகரிப்பதில், நடுவர் மன்றங்கள் மற்றும் மத்யஸ்த அமர்வுகளில் மாநில அரசாங்க தொழிலாளர் துறை ஆணையாளர் நிறுவன நிர்வாகத்துடன் இணைந்திருந்தார். அரசாங்க தொழிலாளர் துறை அதிகாரிகளின் பகிரங்கமான ஆதரவினால் அதன் கை வலுப்படுவதுடன், இன்னும் 150 தொழிலாளர்களை நிறுவனம் பணிநீக்கம் செய்தது, மேலும், தொழிலாளர்கள் சட்டவிரோத துப்பாக்கிச் சூடுகளை நடத்தி வருவதாக குற்றம்சாட்டி, அந்த குற்றச்சாட்டுக்களின் பேரில் உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் ஒரு முதல் தகவல் அறிக்கையையும் (First Information Report - FIR) பதிவு செய்தது, இதனால் மே 31 அன்று மிருகத்தனமான பொலிஸ் தாக்குதலுக்கு தயாரிப்பு செய்தது.

தொழிற்சாலை வாயிலுக்கு வெளியே 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 400 மீட்டர் தொலைவிற்கு அப்பால் அவர்களது ஆர்ப்பாட்டத்தை தொடர்கின்ற நிலையில், தாங்கமுடியாத கோடை வெப்பத்தையும் மீறி, குடி தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட இல்லாத நிலைமைக்கும் முகம்கொடுக்கின்றனர். தொழிலாளர்கள் எதிர்ப்பை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையில், தொழிற்சாலை வாயிலுக்கு வெளியே 400 மீட்டர் தொலைவுக்குள் எந்தவொரு அணிதிரள்வையும் தடைசெய்யும் ஒரு நீதிமன்ற உத்தரவை நிர்வாகம் பெற்றுள்ளது. ஒரு தற்காலிக கூடாரத்தை கட்டியெழுப்புவதை கூட தடைசெய்தும், மேலும் அவர்கள் தங்களது பிரச்சாரத்தை நிறுத்தாவிட்டால் அவர்களுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும் என்று அச்சுறுத்தியும் மாநில பொலிஸ் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை துன்புறுத்துவதை தொடர்கின்றது.

இதற்கிடையில், தொழிலாளர்களின் எதிர்ப்பை முறிப்பதற்கும் மற்றும் அதன் அடிமை உழைப்பு ஆட்சியின் கீழ் மீண்டும் அவர்கள் வேலைக்கு திரும்ப அழுத்தம் கொடுப்பதற்குமான ஒரு முயற்சியில், ஐசின் மாற்று தொழிலாளர்களை பயன்படுத்தி தொழிற்சாலையை நடத்துகின்றது. புதிதாக வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட இந்த தொழிலாளர்கள் தொழிற்சாலை வளாகத்துக்குள் பயங்கரமான சூழ்நிலையில் ஒரு பெரிய கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேலை தளத்திலேயே வேலை செய்யவும், சாப்பிடவும், தூங்கவும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சீருடைகள் மற்றும் தேவைப்படும் பாதுகாப்பு கருவிகளான சிறப்பு காலணிகள் மற்றும் கண்ணாடி போன்றவற்றையும் நிறுவனம் அவர்களுக்கு வழங்கவில்லை. நிர்வாகம், அவர்களது முழு அடிமைப்படுதலை உறுதி செய்யும் விதமாக, அடையாள அட்டைகள் உள்ளிட்ட அவர்களது அனைத்து ஆவணங்களையும் பறித்து வைத்துக்கொண்டது.

ஐசின் தொழிலாளர்கள் போராடுவதற்கு ஒரு உண்மையான உறுதியை காட்டியுள்ளனர். எனினும், இதுபோன்ற அடிமை தொழிலாளர் நிலைமைகளுக்கு எதிராக ஒரு நிறுவன-அரசாங்க சதிவேட்டைக்கு முகம் கொடுப்பதில் மாருதி சுசூகி தொழிலாளர்கள் மூலம் நடத்தப்பட்ட பல ஆண்டுகள் நீடித்த பிரச்சாரங்களில் இருந்து அவர்கள் தேவையான பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் முக்கிய ஸ்ராலினிச அமைப்புகள், குறிப்பாக அவர்களது தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் உறுதியான போராட்டத்தை முறையாக தனிமைப்படுத்துவதன் மூலம் மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான சதிவேட்டைக்கு வழிவகுக்கும் வகையில் ஒரு துரோகத்தனமான பாத்திரத்தை அவர்கள் ஏற்றுள்ளனர். ஐசின் தொழிலாளர்கள் தொடர்பாகவும் அவர்கள் தற்போது அதே பாத்திரத்தை வகிக்கிறார்கள். பிரதான ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM உடன் இணைக்கப்பட்ட இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (Center of Indian Trade Unions-CITU), ஐசின் தொழிலாளர்கள் மீதான பொலிஸ் தாக்குதல் மற்றும் அவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது ஆகியவற்றை “கடுமையாக” கண்டிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஐசினிலோ அல்லது மாநிலத்தின் மற்ற இடங்களிலோ ‘ஹோண்டா’ அல்லது ‘மாருதி’ மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதற்கு எதிராக பி.ஜே.பி. தலைமையிலான ஹரியானா மாநில அரசாங்கத்தை இது எச்சரிக்கின்றது.

இது வெறும் வாய்வீச்சாகத்தான் உள்ளது. உண்மையில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மற்றும் தற்போதைய பி.ஜே.பி. தலைமையிலான அரசாங்கம், அவர்களது பொலிஸ், நீதிமன்றங்கள் மற்றும் மாருதி சுசூகி நிர்வாகம் ஆகிய அனைத்தும், மானேசர் ஆலையில் தொழிலாளர்களுக்கு எதிராக அவற்றின் சதிவேட்டையை தொடங்கி அதனை செயல்படுத்துவதில் ஸ்ராலினிஸ்டுகள் அவற்றிற்கு உதவி செய்துள்ளனர். அந்த துரோகத்தனமான தொழிற்சங்கங்களையும், அவற்றுடன் இணைந்த கட்சிகளையும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும் என்பதுடன், அரசியல் ரீதியாகவும், நிறுவன ரீதியாகவும் அவர்களிடம் இருந்து உறுதியாக முறித்துக்கொள்ள வேண்டும்.

அடிமை உழைப்பு நிலைமைகளுக்கு எதிரான அவர்களின் போராட்டத்தில், நிறுவன மேலாண்மை மற்றும் மத்திய மற்றும் மாநில மட்டங்கள் இரண்டிலும் உள்ள பி.ஜே.பி. அரசாங்கம், அவர்களது பொலிஸ், நீதிமன்றங்கள் மற்றும் தொழிலாளர்துறை அதிகாரிகளும் உட்பட ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு பகுதியாக ஒரு கூட்டு தாக்குதலை ஐசின் தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர். ஹரியானா மற்றும் இந்தியா முழுவதும், தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் எங்குமிருக்கின்ற இதேபோன்ற மலிவுகூலி உழைப்பு நிலைமைகளையும், நிறுவன மேலாண்மை மற்றும் மாநில அதிகாரிகளின் ஒரு கூட்டு தாக்குதலையும் எதிர்கொள்ளும் சக தொழிலாளர்கள் பக்கம் அவர்கள் திரும்ப வேண்டும்.

அடிமை உழைப்பு மற்றும் மலிவு உழைப்பு நிலைமைகளுக்கு எதிராக ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை தொழிலாளர்கள் நடத்தவேண்டும். முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராகவும் மற்றும் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு எதிராகவும் ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களின் ஒரு புதிய சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டமைப்பதை நோக்கி அத்தகைய போராட்டம் இயக்கப்படவேண்டும்.