ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Bitter conflicts dominate G20 summit in Germany

ஜேர்மனியின் ஜி20 உச்சிமாநாட்டில் கடுமையான மோதல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன

Bill Van Auken
7 July 2017

ஜேர்மனியின் ஹம்பேர்க்கில் இன்று கூடுகின்ற இரண்டு நாள் ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டில், பூகோளமயப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி மேலோங்கி உள்ளதுடன், இராணுவ மோதல் மற்றும் பலதரப்பு புவிசார்மூலோபாய மோதல்களும் அச்சுறுத்துகிறது. யார் முதலில் சுடுவார் என்பது தெரியாமல், பெரிய மற்றும் சிறிய கொள்ளை கும்பல்களுக்கு இடையே நடக்கும் ஒரு கூட்டத்தைப் போல இந்த சூழலுடன் இந்தளவிற்கு வேறெதுவும் ஒத்துபோகாது.

2009 இல் இலண்டனில் நடத்தப்பட்ட முதல் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு, 2008 வோல் ஸ்ட்ரீட் நிதியியல் உருகுதல் தொடங்கியதில் இருந்து உலக முதலாளித்துவத்தை மீட்பதற்காக மற்றும் பாதுகாப்புவாத அபாயத்தை தவிர்ப்பதற்காக, ஒரு கூட்டு முயற்சியை பிரதான சக்திகள் மேற்கொள்வதற்கான கருத்தரங்காக சேவையாற்றுமென கூறப்பட்டது. இன்றோ, முன்பினும் ஆழமடைந்துவரும் மற்றும் தீர்க்கவியலாத முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி பாதிப்பின் கீழ், இந்த சக்திகளுக்கு இடையிலான மோதல்கள் முன்பினும் அபிவிருத்தி அடைந்து, கடுமையாகி, மூடிமறைக்க முடியாததாக மாறியுள்ள நிலைமையில், இது இத்தகைய உலக ஒன்றுகூடல்களின் கடைசி ஒன்றாக இருக்கலாம் என்று நம்புவதற்கும் நிறைய காரணங்கள் உள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜேர்மனியில் வந்திறங்குவதற்கு முன்னதாக, ஐரோப்பாவின் புதிய மேலாதிக்க சக்தியாக ஜேர்மனியின் வளர்ச்சியுடன் கூர்மையாக வேறுபாடு கொண்டுள்ள போலாந்திற்கு விஜயம் மேற்கொண்டதன் மூலம், இந்த உச்சிமாநாட்டிற்கு ஒரு கடுமையான மற்றும் பகிரங்க மோதலுக்கான தொனியை அமைத்துள்ளார். ஐரோப்பிய கண்டத்திலேயே மிகவும் வலதுசாரி அரசாங்கங்களில் ஒன்றால் வரவேற்கப்பட்ட அவர், “நமது நாகரீகமே" பொறிந்து போகுமென எச்சரிக்கும் ஒரு பாசிசவாத உரை வழங்கியதுடன், “குடும்பத்திற்கான, சுதந்திரத்திற்கான, தேசத்திற்கான, கடவுளுக்கான" ஒரு போராட்டத்திற்கும் அழைப்புவிடுத்தார். இரண்டாம் உலக போரில் ஜேர்மன் ஆக்கிரமிப்பை போலாந்து எதிர்த்ததை முன்நிறுத்திக் காட்டிய அவர், ஜேர்மனி உடனான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்றைய போட்டியைத் தொடர்வதற்காக போலாந்துடன் அமெரிக்காவை அணிசேர்க்க முயன்று வருகிறார் என்பதில் எந்த ஐயத்திற்கும் இடம் வைக்கவில்லை.

ட்ரம்ப் வார்சோவில் "முப்பெருங்கடல் அமைப்பின் மாநாட்டில்" (Three Seas Initiative Summit) 12 - மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா நாடுகளுக்கும் உரை நிகழ்த்தினார், இந்த அமைப்பு, 1920 களில் சோவியத் ஒன்றியம் மற்றும் ஜேர்மனி இரண்டுக்கும் எதிராக திரும்பியிருந்த, ஆனால் அமெரிக்காவினால் ஆதரிக்கப்பட்ட, பல்வேறு பாசிசவாத மற்றும் தேசியவாத ஆட்சிகளுடன் உருவாக்கப்பட்ட, இன்டர்மாரியம் கூட்டணி (Intermarium alliance) என்றழைக்கப்பட்டதன் பாரம்பரியத்தைப் பின்தொடர்கிறது.

வெள்ளை மாளிகையின் திட்டநிரல், 2003 இல் அப்போது அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலராக இருந்த டொனால்ட் ரம்ஸ்ஃபெல்டின் அறிக்கையை எதிரொலிக்கிறது, அவர் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியை "பழைய ஐரோப்பா" என்று புறக்கணித்து, கிழக்கில் உள்ள முன்னாள் வார்சோ உடன்படிக்கை நாடுகளை உள்ளடக்கிய "புதிய ஐரோப்பாவை" நோக்கி வாஷிங்டன் நோக்குநிலை கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டி, ஈராக்கிற்கு எதிரான போருக்கு அமெரிக்க முனைவை ஆதரிக்காததற்காக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஈராக்கிற்கு எதிரான வாஷிங்டனின் குற்றகரமான போர் மீது ஏற்பட்ட அந்த பிளவுகளை, ஒன்றரை தசாப்தத்திற்குப் பின்னர் அம்பலப்படுத்தி உள்ள இந்த புவிசார்மூலோபாய மோதல்கள், ஏனைய பாகங்களுக்கும் பரவி, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவுகளின் ஒவ்வொரு பகுதியையும் பாதித்து, உலக அரங்கில் அரங்கேறி வருகின்றன.

அமெரிக்க ஆளும் நிதியியல் செல்வந்த தட்டின் பிற்போக்குத்தனமான, குற்றகரமான மற்றும் ஒட்டுண்ணித்தனமான உருவ வெளிப்பாடாக ட்ரம்ப் ஹம்பேர்க்கிற்கு வந்துள்ளார். உலக பேரழிவு தாக்குதலாக மாறக்கூடிய வட கொரியா மீதான ஒரு போரில் இருந்து, அதேயளவிற்கு சமமாக ஈரானுடன் மற்றும் சிரியாவில் ரஷ்யாவுடன் அபாயகரமான மோதல் வரையில், மேலும் அவர் நிர்வாகத்தினது பொருளாதார தேசியவாத "அமெரிக்கா முதலில்" திட்டநிரலுக்கு அடிபணிய வைப்பதற்காக அமெரிக்க ஏகாதிபத்திய போட்டியாளர்களைக் மிரட்டுவது வரையில், போர் அச்சுறுத்தலைப் பிரயோகிப்பதே அவர் நோக்கமாக உள்ளது.  

எவ்வாறிருப்பினும் ஓர் ஆக்ரோஷமான ஏகாதிபத்திய திட்டநிரலை முன்னெடுப்பதில் எந்த வகையிலும் ட்ரம்ப் மட்டும் தனியாக இல்லை. ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் அவரின் சொந்த கூட்டத்தை நடத்தினார், இருவரும் சுதந்திர வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்களை முன்னிலைப்படுத்தியதுடன், பாதுகாப்புவாதத்தைக் கண்டித்ததன் மூலம், மறைமுகமாக ட்ரம்ப் நிர்வாக கொள்கைகளை எதிர்த்தனர். சீனாவை மத்திய ஆசியா, ரஷ்யா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கின் எரிசக்தி ஆதாரவளங்களுடன் இணைக்கும் போக்குவரத்து மற்றும் எரிசக்தி வலையமைப்புகளுக்கான உள்கட்டமைப்பை அபிவிருத்தி செய்யும் பெய்ஜிங்கின் "ஒரே இணைப்பு, ஒரே பாதை" திட்டத்தை (OBOR) மேர்க்கெல் புகழ்ந்துரைத்தார், இந்த முனைவை வாஷிங்டனோ அதன் உயிர்வாழ்வு மீதான ஓர் அச்சுறுத்தலாக பார்க்கிறது.

கொரிய தீபகற்பம் மற்றும் தென் சீனக் கடல் இரண்டு இடங்களிலும் வாஷிங்டனிடம் இருந்து அதிகரித்த இராணுவ அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள ஜி அரசாங்கம், அரசியல்ரீதியிலும் இராணுவரீதியிலும் அதிகரித்தளவில் சுதந்திரமாக உள்ளதும் மற்றும் வளர்ந்து வருவதுமான ஜேர்மன் ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான பிணைப்புகளை ஜோடிக்க முனைந்து வருகிறது.

அதற்காகவே அவர் மாஸ்கோவிற்கான இரண்டு நாள் விஜயத்திற்குப் பின்னர் ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டார். மாஸ்கோவில் அவரும் புட்டினும், பியொங்யாங் ICBM (கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை) சோதனை நடத்தியதை அடுத்து சீனா வட கொரியாவை அடிபணிய வைக்க பிரயத்தனம் செய்ய வேண்டுமென்ற வாஷிங்டனின் கோரிக்கைகளைப் புறக்கணித்தனர். அதற்கு பதிலாக அவர்கள் தென் கொரியாவில் இருந்து அமெரிக்கா அதன் பெருந்தொலைவு பாயும் ஏவுகணை-தகர்ப்பு அமைப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டுமென அமெரிக்காவிற்கு அவர்களின் சொந்த கோரிக்கைகளை வைத்தனர்.

இதற்கிடையே, உச்சிமாநாட்டுக்கு சற்று முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியமும் ஜப்பானும், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை உள்ளடக்கிய ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை முடிவு செய்திருப்பதாக அறிவித்தன. ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே அறிவிக்கையில் அந்த உடன்படிக்கை "பாதுகாப்புவாதத்தை நோக்கிய ஒரு திருப்பத்திற்கு எதிராக சுதந்திர வர்த்தக கொடியைப் பறக்க விடுவதற்கான எங்களின் பலமான அரசியல் விருப்பத்தை" எடுத்துக்காட்டுகிறது என்றார்.

“தனிமைப்படுத்தல் மற்றும் உருக்குலைவு காலகட்டம் மீண்டும் வந்து கொண்டிருப்பதாக சிலர் கூறினாலும், இது அவ்விதத்தில் கிடையாது என்பதை நாங்கள் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறோம்,” என்பதையும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டஸ்க் சேர்த்துக் கொண்டார்.

அந்த உடன்படிக்கை, அமெரிக்காவை மையமாக கொண்ட பன்னாட்டு நிறுவனங்களை விலையாக கொடுத்து அமைக்கப்பட்டுள்ளது, இரண்டு அறிக்கைகளுமே தெளிவாக ட்ரம்புக்கு எதிராக திரும்பி இருந்தன, அவர் அந்த உச்சிமாநாட்டுக்கு முன்னதாக ட்வீட் செய்கையில், “அமெரிக்கா உலக வரலாற்றிலேயே மிக மோசமான வர்த்தக உடன்படிக்கைகள் சிலவற்றை செய்துவிட்டது. நமக்கு உதவி செய்யாத நாடுகளோடு நாம் ஏன் இத்தகைய உடன்படிக்கைகளைத் தொடர வேண்டும்,” என்றார்.

உலக பொருளாதாரத்தின் மையத்தில் உள்ள பொருளாதார சக்திகளுக்கு இடையே தொடர்ந்து தீவிரமடைந்து வரும் மோதல்களுடன் சேர்ந்து, நேட்டோ கூட்டணிக்கு உள்ளே அதிகரித்து வரும் பகிரங்கமான மற்றும் கடுமையான பிளவுகளும் மற்றும் ஒரு அதிகார சக்தி மாற்றி மற்றொரு அதிகார சக்தி அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அவற்றின் நலன்களை அதிகரித்து கொள்வதை நோக்கி திருப்பிவிடப்பட்ட பல்வேறு உடன்படிக்கைகளை எட்டுவதும் என இந்நிலைமைகள், முதலாம் உலக போரின் போது லெனின் வரையறுத்த நிலைமைகளோடு மிக மிக அதிகமாக ஒத்திருக்கின்றன, அந்நிலைமைகளில் ஏகாதிபத்திய சக்திகள் "ஒவ்வொன்றும் மற்றொன்றுடனும், அவற்றின் கூட்டாளிகளுடனும், மற்றும் அவற்றின் கூட்டாளிகளுக்கு எதிராகவும் இரகசிய உடன்படிக்கைகளின் ஒரு வலையமைப்பை அமைத்திருந்தன.”

அதிகரித்து வரும் போர் அச்சுறுத்தலும் மற்றும் இரண்டாம் உலக போரிலிருந்து மேலாதிக்க ஏகாதிபத்திய சக்தியாக அமெரிக்கா உருவெடுத்த பின்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்புகளின் உடைவும், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய கால் நூற்றாண்டில் முதிர்ச்சி அடைந்துள்ள நிகழ்ச்சிப்போக்குகளின் இறுதி விளைவாகும்.

அமெரிக்க மூலோபாயவாதிகள் எதை “ஒற்றை துருவமுனை தருணம்” என்று குறிப்பிட்டார்களோ அதன் எழுச்சியானது, தொடர்ச்சியான பல ஏகாதிபத்திய போர்கள் மற்றும் தலையீடுகளுக்கு களம் அமைத்தது, இதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக பொருளாதாரத்தில் அதன் அந்தஸ்து வீழ்ச்சியைத் தடுத்து சமநிலைப்படுத்திக் கொள்ள, அதன் இராணுவ அனுகூலங்களை சாதகமாக்கி கொண்டது.

இந்த போர்கள் ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, உக்ரேன் மற்றும் ஏனைய நாடுகளைச் சீரழித்து, மில்லியன் கணக்கானவர்களைக் கொன்று குவித்து, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய மிகப்பெரும் அகதிகள் நெருக்கடியை கட்டவிழ்த்துவிட்டதுடன், இறுதியில் அவை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நல்வாய்ப்புகளை வழங்குவதிலும் தோல்வியடைந்தன.

இப்போதோ இந்நெருக்கடி ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது, இதில் வாஷிங்டனின் உலகளாவிய போட்டியாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு சவால்விடுத்து வருகின்றனர்.

அதிகரித்துவரும் இந்த அபாயகரமான அபிவிருத்திகளின் அடியில் இருப்பது என்னவென்றால், ஒருபுறம், பூகோளரீதியில் ஒருங்கிணைந்த மற்றும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ள பொருளாதாரத்திற்கும் மற்றும் அது எதிர்விரோத தேசிய அரசுகளாக பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலானதும், மறுபுறம், பூகோளமயப்பட்ட உற்பத்தியின் சமூகமயப்பட்ட தன்மைக்கும் மற்றும் உற்பத்தி கருவிகளின் தனிசொத்துடைமை மூலமாக ஆளும் முதலாளித்துவ வர்க்கம் தனிநபர் இலாபங்களைக் குவித்துக் கொள்வதற்காக அதை அடிபணிய வைத்திருப்பதற்கும் இடையிலான உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை முரண்பாடுகளாகும்.

மனிதயினத்தையே அழிக்க முன்நிற்கும் ஒரு புதிய உலக போரைக் கொண்டு இத்தகைய முரண்பாடுகளை தீர்ப்பது மட்டுமே, ஏகாதிபத்தியத்தின் ஒரே வழிவகையாக உள்ளது. எவ்வாறிருப்பினும் இதே முரண்பாடுகள் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர மேலெழுச்சிக்கும் அடித்தளங்களை அமைத்து வருகின்றன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI), “சோசலிசமும் மற்றும் போருக்கு எதிரான போராட்டமும்" என்ற அதன் 2016 அறிக்கையில் குறிப்பிட்டவாறு:

"நடப்பு உலக நிலைமைகளில் இருந்து எழுகின்ற மாபெரும் வரலாற்றுக் கேள்விகளை பின்வருமாறு சூத்திரப்படுத்தலாம்: உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி எவ்வாறு தீர்க்கப்படப் போகிறது? அமைப்புமுறையை உலுக்கும் முரண்பாடுகள் உலகப் போரில் போய் முடியுமா அல்லது உலக சோசலிசப் புரட்சியில் முடியுமா? எதிர்காலம் பாசிசத்திற்கும், அணுஆயுதப் போருக்கும், திரும்பவியலாமல் காட்டுமிராண்டித்தனத்திற்குள் வீழ்வதற்கும் இட்டுச் செல்லப் போகிறதா? அல்லது சர்வதேச தொழிலாள வர்க்கம் புரட்சியின் பாதையை கையிலெடுத்து, முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறிந்து, பின் உலகை சோசலிச அடித்தளங்களின் மீது மறுகட்டுமானம் செய்யப் போகிறதா? இவைதான் மனித குலம் முகம்கொடுக்கும் உண்மையான மாற்றீடுகளாகும்.”