ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Great Unraveling: The crisis of the post-war geopolitical order

மாபெரும் கட்டுச்சிதறல்: போருக்குப் பிந்தைய புவியரசியல் ஒழுங்கமைப்பின் நெருக்கடி

Alex Lantier
3 June 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா சுற்றுப்பயணத்தை முடித்து விட்டுத் திரும்பி இன்னும் ஒரு வாரம் கூட ஆகியிராத நிலையில், உலக அரசியலில் பரந்த தாக்கங்களுடனான ஒரு மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாய் இருக்கிறது. பல தசாப்தங்களாய் சர்வதேச பொருளாதாரத்திற்கும் பொது வாழ்விற்கும் கட்டமைப்பை தீர்மானித்த உலகளாவிய உறவுகளும் நிறுவனங்களும் துரிதமாக கட்டுச்சிதறிக் கொண்டிருக்கின்றன.

வர்த்தகப் போரின் அச்சுறுத்தல் அதிகரிப்பதும் அத்தனை ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இராணுவ அபிலாசைகள் மீண்டும் எழுந்திருப்பதும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேலாதிக்க ஏகாதிபத்திய சக்தியாக அமெரிக்கா எழுந்ததன் பின்னர் உருவாக்கப்பட்டிருந்த சர்வதேச நிறுவனங்களின் உடைவு முன்னேறிய கட்டத்தில் இருப்பதன் அறிகுறிகளாய் அமைந்திருக்கின்றன.

இந்த நிலைகுலைவு பல தசாப்தகாலங்களில் முதிர்ச்சியடைந்திருந்த நிகழ்ச்சிப்போக்குகளின் விளைபொருளாய் இருந்தது. 1991 இல், சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டமையானது நேட்டோ கூட்டணிக்கு ஒரு பொது எதிரியை இல்லாது செய்த சமயத்தில், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான பதட்டங்கள் ஏற்கனவே அதிகரித்துக் கொண்டிருந்தன. அமெரிக்க மூலோபாயவாதிகள், சோவியத் ஒன்றியம் இல்லாமல் போனதால் எந்த உடனடியான இராணுவப் போட்டிநாடும் இல்லாத ஒரு “ஒற்றைத் துருவ தருண”த்தை அறிவித்த போது, அமெரிக்காவின் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த பொருளாதார நிலையை ஈடுசெய்வதற்கு இந்த இராணுவ அனுகூலத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அவர்கள் நோக்கம் கொண்டிருந்தனர்.

1992 ஆம் ஆண்டின் பென்டகன் மூலோபாய ஆய்வறிக்கை ஒன்று, அமெரிக்கா, “போட்டியாக வரத்தக்க நாடுகளுக்கு அவை பெரியதொரு பாத்திரத்தை வகிக்க ஆசைப்படுவதற்கோ அல்லது ஒரு மேலதிக மூர்க்கமான நிலைப்பாட்டை பின்பற்றுவதற்கோ அவசியமேதும் இல்லை” என்பதில் நம்பிக்கையூட்ட வேண்டும், அத்துடன் “நமது தலைமையை சவால் செய்வது அல்லது ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கை மாற்றுவதற்கு முனைவது ஆகியவற்றில் அவர்களுக்கு ஊக்கமிழக்கும்படி” செய்ய வேண்டும் என்று திட்டவட்டம் செய்தது.

கால் நூற்றாண்டு காலத்திற்குப் பின்னர், இந்த கொள்கையானது தோல்வி கண்டிருக்கிறது. அக்கொள்கை அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ சக்திகளின் ஒரு தொடர் வரிசையான ஏகாதிபத்திய போர்கள் மற்றும் தலையீடுகளுக்கு இட்டுச் சென்றிருந்தது. இவை ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, உக்ரேன் மற்றும் பல நாடுகளை துவம்சம் செய்தன. இந்த இராணுவவாத நடவடிக்கைகள் மில்லியன் கணக்கான உயிர்களை காவுகொண்டன, ஒட்டுமொத்த சமூகங்களையும் அழித்தன, இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய மாபெரும் அகதிகள் நெருக்கடியை உருவாக்கின, அத்தனைக்குப் பின்னரும் அவை படுதோல்விகளையே உருவாக்கின; அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைவிதியை மாற்றுவதில் தோற்றன. இப்போது அந்த நெருக்கடியில் ஒரு புதிய கட்டம் எட்டப்பட்டிருக்கிறது: அமெரிக்காவின் ஏகாதிபத்திய போட்டி நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு நேரடியான, தொலைநோக்கு தாக்கங்கள் கொண்ட சவால்களை முன்நிறுத்த தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன.

ஜி7 மற்றும் நேட்டோ உச்சிமாநாடுகளில் ஐரோப்பாவிடம் இருந்து மேம்பட்ட பொருளாதார உடன்பாடுகளை பெறுவதற்கு ட்ரம்ப் செய்த முயற்சிகள் திருப்பித்தாக்கின. நேட்டோ கூட்டணியில் இராணுவ செலவினத்திற்கு “செலுத்த வேண்டிய அளவுக்கு தொகை செலுத்தாதவர்கள்” என ஐரோப்பியர்களைக் குறைகூறிய ட்ரம்ப் ஜேர்மனியை “படுமோசமானது” என்று கண்டனம் செய்ததோடு அமெரிக்காவுக்கான ஜேர்மன் கார் ஏற்றுமதியை “நாங்கள் நிறுத்துவோம்” என்றும் சேர்த்துக் கூறினார். ஆனால் ஐரோப்பாவிடம் இருந்து பதிலிறுப்பாக அனுதாபமும் நிதி உதவியும் வரவில்லை, மாறாக உட்கண்ட ஐரோப்பிய சக்திகள் அமெரிக்காவுடன் அரசியல்ரீதியாகவும் இராணுவரீதியாகவும் முறித்துக் கொள்வதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருப்பதை சுட்டிக் காட்டுகின்ற வரிசையான நடவடிக்கைகள் தான் வந்தன.

ஞாயிறன்று முனீச் பீர் கூடார பேரணியில் பேசிய ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்கெல், உச்சிமாநாடுகளில் ட்ரம்ப் நடந்து கொண்டவிதம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற பிரிட்டன் வாக்களித்தமை இரண்டையும் குறிப்பிட்டார்: “நாம் மற்றவர்கள் மீது நம்பியிருந்த காலம் குறிப்பிட்ட மட்டத்திற்கு முடிந்து விட்டது என்பதை கடந்த சில தினங்களில் நான் அனுபவபூர்வமாய்க் கண்டேன். ஐரோப்பியர்களாகிய நாம் உண்மையாகவே நமது தலைவிதியை நமது சொந்தக் கைகளில் எடுத்தாக வேண்டும்”. முன்னோக்கிச் சென்று, “நமது எதிர்காலத்திற்காக நாமே தான் போராடியாக வேண்டும்” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

மேர்க்கெலின் வசனம் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் 1949 இல் ஸ்தாபிக்கப்பட்டிருந்த நேட்டோ இராணுவக் கூட்டணியில் ஒரு ஆழமான நெருக்கடியை பிரதிபலித்தது என்பதை கடந்த வாரத்தில் ஐரோப்பாவில் நடந்த நிகழ்வுகள் ஊர்ஜிதம் செய்தன. ட்ரம்ப்பின் கீழ், அமெரிக்கா தன்னை “மேற்கத்திய சமூகத்தின் விழுமியங்களுக்கு” வெளியே நிறுத்திக் கொண்டிருப்பதாக ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான சிக்மார் காப்ரியல் அறிவித்தார். இது “உலக சக்திகளிடையேயான உறவுகளில் ஒரு மாற்றத்தை” சமிக்கை செய்ததாக அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

ஜேர்மனியின் ஒரு நெருங்கிய கூட்டாளியான, புதிதாக தேர்வாகியிருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், வேர்சாயில் ஒரு உயர்நிலை உச்சிமாநாட்டிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை அழைத்திருந்தார். ஒரு இணைந்த செய்தியாளர் சந்திப்பில் புட்டினுக்கு பக்கத்தில் நின்றிருந்த மக்ரோன், சமீப காலங்களின் அத்தனை முக்கியமான அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய தலையீடுகளையும் விமர்சனம் செய்தார். 2014 இல் கியேவில் அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஆதரவுடன் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பால் உக்ரேனில் தூண்டப்பட்ட மோதலை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்த அவர், ரஷ்யாவுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்புக்கும் அழைப்பு விடுத்தார் என்பதுடன் சிரியாவில், டமாஸ்கஸ் நகரில் பிரான்சின் தூதரகத்தை மீண்டும் திறக்கும் சாத்தியத்தையும் உலவ விட்டார்.

அத்துடன் இந்த வாரத்தில், புரூசெல்ஸில் ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய இராணுவத் தலைமையகம் செயல்படத் தொடங்கியது. ஐரோப்பிய ஒன்றியம் நேட்டோவுக்கு ஒரு போட்டியாகி விடக் கூடும் என்ற அமெரிக்காவின் அச்சத்தை அடியொற்றி அதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்திருந்த பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறி விட்ட காரணத்தால் இனியும் அது அதனைத் தடுத்து வைக்க முடியாமல் போனது.

இந்த நிகழ்வுகள் அமெரிக்காவுக்கு ஒரு வரலாற்றுப் பின்னடைவைக் குறிக்கின்றன என்பது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மூலோபாயவாதிகள் இடையே பரவலாக ஒப்புக்கொள்ளப்படுகின்றது. “1945க்குப் பிந்தைய ஒவ்வொரு அமெரிக்க நிர்வாகமுமே ஜேர்மனியுடனும் நேட்டோவுடனும் நெருங்கி வேலைசெய்வதற்கே முயற்சி செய்து வந்திருக்கின்றன” என்று ஜாக்கோப் ஹையில்புருன் தி நேஷனல் இண்டரஸ்ட்டில் எழுதினார், ஆனால் ட்ரம்ப்பின் கீழான அமெரிக்கா “மேர்க்கெலை ஒரு ஜேர்மன் வல்லரசை உருவாக்க தள்ளிக் கொண்டிருக்கிறது”.

ஹையில்புருன் மேலும் சேர்த்துக் கொண்டார்: “இப்போது பிரான்ஸ் இமானுவல் மக்ரோனை ஜனாதிபதியாக தேர்வு செய்து விட்டிருக்கிறது, ஒரு பொதுவான பொருளாதார மற்றும் இராணுவப் பாதையை பின்பற்றத்தக்கதாய் ஒரு பிரான்ஸ்-ஜேர்மன் அச்சினை உருவாக்கும் நடவடிக்கையில் மேர்க்கெல் இறங்கியிருக்கிறார். இது அமெரிக்காவின் கௌரவத்திலும் வெளிநாட்டிலான செல்வாக்கிலும் கணிசமானதொரு குழிபறிப்பை குறிப்பதாய் இருக்கும். உதாரணத்திற்கு, ஈரான் மீது தடைகளுக்கும் அதனைத் தனிமைப்படுத்துவதற்குமான ட்ரம்ப்பின் நெருக்குதலை மறுதலிக்க மேர்க்கெல் முடிவெடுத்து, வடகொரியாவுடன், அதற்கு ஆயுதங்கள் விற்பது உட்பட, வர்த்தக உறவுகளை ஸ்தாபிக்கிறார் என கற்பனை செய்து பாருங்கள்.”

ஆயினும் இந்தப் பதட்டங்கள் எல்லாம் வெறுமனே வெள்ளை மாளிகையில் இப்போது இருப்பவரின் அதீத தேசியவாதக் கொள்கையின் விளைபொருள் மட்டுமன்று. உண்மையில், ஜனநாயகக் கட்சியானது ரஷ்யாவை இடைவிடாது தீமையாக காட்டுவதுடன் அமெரிக்க ஜனநாயகத்திற்கு எதிராய் சதிசெய்வதாக அதன் மீது குற்றமும் சாட்டுகின்ற அதேநேரத்தில், சென்ற ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றிருந்தாலும் ஐரோப்பாவில் மோதல்கள் தீர்க்கப்பட்டு விட்டிருக்காது என்பது இப்போது முன்னினும் தெளிவாய் தெரியக் கூடியதாய் இருக்கிறது. மாறாய், இந்தப் பதட்டங்கள் சென்ற நூற்றாண்டில் இரண்டுமுறை உலகப் போருக்கு இட்டுச் சென்றிருந்த பெரும் ஏகாதிபத்திய சக்திகளது நலன்களுக்கு இடையிலான ஆழமான முரண்பாடுகளிலேயே வேரூன்றியிருக்கின்றன.

ஆசியாவில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையில் அதிகரித்துச் செல்லும் போட்டியில் இது அடிக்கோடிட்டுக் காட்டப்படுவதாய் இருக்கிறது. சென்ற மாதத்தில், சீனா, அதன் ஒரே இணைப்பு, ஒரே பாதை (One Belt, One Road - OBOR) சீனா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவை ஒருங்கிணைக்கின்ற வகையில் எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பின் ஒரு வலையைக் கட்டுவதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுவதை தொடக்கிய போது, அமெரிக்கா ஓரமாய் ஒதுங்கி நிற்கின்ற ஒரு பாத்திரத்திற்காய் குறைக்கப்பட்டு விட, சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்களது உறவுகளை அபிவிருத்தி செய்து கொண்டன. ஆயினும், சீனாவை தனிமைப்படுத்தும் நோக்குடனான அமெரிக்காவின் “ஆசியாவை நோக்கிய திரும்புநிலை”யில் அமெரிக்காவின் கூட்டாளிகளாக இருக்கின்ற ஜப்பான் மற்றும் இந்தியாவின் பதிலிறுப்பும், அடிப்படையில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சக்திகளை விடவும் அதிக நட்புடையதாக இருந்து விடவில்லை.

சென்ற வாரத்தில், “ஆசியா ஆபிரிக்கா வளர்ச்சி வளாகம்” ஒன்றுக்கான “தொலைநோக்கு ஆவணம்” ஒன்றை ஜப்பானும் இந்தியாவும் இணைந்து வெளியிட்டன; சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை (One Belt, One Road - OBOR) க்கான ஒரு மாற்றாக முன்வைக்கப்படுகின்ற இது இந்தியாவை ஒரு உற்பத்தி-சங்கிலி மையமாகவும் இராணுவரீதியாய் சீனாவுக்கான எதிர்ப்பலமாகவும் அபிவிருத்தி செய்யும். வெறுமனே சீனாவை விஞ்சுவது மட்டுமல்ல, மாறாக ஜப்பானை மீண்டும் ஆயுதபாணியாக்குவதும் ஆசியாவின் மேலாதிக்க சக்தியாக அமெரிக்காவின் இடத்தில் அமர்வதும் தான் ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபே மற்றும் அதி தேசியவாத Nippon Kaigi அமைப்பில் இருக்கும் அவரது ஆதரவாளர்களது இலட்சியமாக இருக்கிறது.

இந்திய-ஜப்பான் கூட்டணியானது ”உலகின் எந்தக் கூட்டணியை” காட்டிலும் “மிகவும் சாத்தியத்திறம்” கொண்டிருக்கிறது என்று அபே -இவரது அரசாங்கமானது இரண்டாம் உலகப் போர் தோல்விக்குப் பின்னர் ஜப்பானின் வெளிநாட்டுப் போர்கள் மீது அரசியலமைப்பு சட்டரீதியாக திணிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதற்கு மூர்க்கமாக நெருக்கிக் கொண்டிருக்கிறது- தொடர்ந்து அறிவித்து வந்திருக்கிறார்.

ட்ரம்ப்பின் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை சூழ்ந்த நிகழ்வுகள் வெறுமனே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியையும் பிரதிபலிக்கின்றன. அமெரிக்காவுடன் போட்டியிடும் நாடுகளில் எதுவொன்றும் —உள்நாட்டில் சிக்கனநடவடிக்கைக் கொள்கைகளுக்காக வெறுக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியமும் சரி, அல்லது பொருளாதாரரீதியாக மரணப்படுக்கையில் இருக்கும் ஜப்பானின் வலது-சாரி ஆட்சியும் சரி, அல்லது சீனாவின் மாவோயிசத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ நிதிப்பிரபுத்துவமும் சரி— ஒரு முற்போக்கான மாற்றை வழங்கவில்லை.

உலக முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்துவதற்கும், பெரிய-அளவிலான வர்த்தகப் போரும் இராணுவ மோதலும் உருவாவதை தடுக்கும் வகையிலும் இந்த சக்திகளது ஒரு கூட்டணி உருவாகியே தீரும் என்று எவரொருவர் திட்டவட்டம் செய்தாலும், அவர் வரலாற்றுக்கு எதிராய் கனமாய் பந்தயம் கட்டுகிறார் என்பதே அர்த்தமாயிருக்கும். ட்ரம்ப் ஜேர்மனிக்கு எதிராய் வர்த்தக போருக்கு கோருகிறார், ஜேர்மனியும் ஜப்பானும் தமது வெளியுறவுக் கொள்கையை மீண்டும் இராணுவமயமாக்குகின்றன, அதிகாரத்துக்கு வரும் புதிய பிரெஞ்சு ஜனாதிபதி கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதை ஆதரிக்கிறார், இத்தகைய நிலைமைகளில், சென்ற நூற்றாண்டின் உலகப் போர்களது மட்டத்திற்கான —அல்லது அதனினும் பெரிய மட்டத்திற்கான— ஒரு புதிய உலகளாவிய பற்றவைப்பை நோக்கி ஆளும் உயரடுக்கினர் கண்ணைமூடிக் கொண்டு பாய்ந்து சென்று கொண்டிருக்கின்றனர் என்பதையே ஒவ்வொன்றும் சுட்டிக்காட்டுகிறது.

முதலாளித்துவ அரசியலின் உடைவிற்கு மாற்றீடாக எழவிருக்கும் சக்தி, சர்வதேச தொழிலாள வர்க்கமேயாகும். சகிக்க முடியாத வாழ்க்கை நிலைமைகள், பாரிய வேலைவாய்ப்பின்மை, மற்றும் பல தசாப்த கால சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் ஆகியவற்றின் பின்னரான சமூகத் துயர நிலை ஆகியவற்றின் மூலமாக அது நடவடிக்கைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அமேசன் மற்றும் ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்கள், பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் தமது தொழிலாளர் படையை பரவலாகக் கொண்டு ஒரு உலகமயமாக்கப்பட்ட உலகப் பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்ற நிலையில், தொழிலாள வர்க்கமானது, ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி செய்கின்ற நிதியப் பிரபுத்துவங்களில் இருந்து அடிப்படையாய் பிரிந்து நிற்கின்ற மற்றும் அவற்றுக்கு எதிராய் நிற்கின்ற நலன்களைக் கொண்ட ஒரு சர்வதேச வர்க்கமாக அதன் பாத்திரம் குறித்து மேலும் மேலும் அதிகமாய் நனவுபெற்று வருகிறது.

சர்வதேச முதலாளித்துவ உறவுகளின் பொறிவானது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தில் வர்க்கப் போராட்டத்தை மட்டுப்படுத்த எழுந்த பல்வேறு சமூக ஜனநாயக மற்றும் தாராளவாதக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களது மதிப்பிழப்புடன் கைகோர்த்து நடைபெறுகிறது. அதிர்ச்சியூட்டும்விதமாய் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாய் வாக்களிக்கப்பட்டமை, ட்ரம்ப்பின் தேர்வு மற்றும் பிரான்சின் சமீபத்திய ஜனாதிபதி தேர்தலில் பிரான்சின் இருகட்சி ஆட்சிமுறை சிதறிப் போனமை ஆகியவை பழைய ஆளும் ஸ்தாபகங்கள் உருக்குலைந்து கொண்டிருப்பதற்கு சாட்சியமளிக்கின்றன. வர்க்கப் போராட்டத்தின் ஒரு உலகளாவிய வெடிப்பு தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எழுந்திருக்கும் நெருக்கடியானது, ஸ்ராலினிஸ்டுகளின் சோவியத் ஒன்றிய கலைப்பு, சோசலிசத்துக்கான சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் முடிந்து போனதைக் குறித்து நிற்கவில்லை என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வலியுறுத்தலை சரியென நிரூபணம் செய்கிறது. முதலாளித்துவமானது, இருபதாம் நூற்றாண்டின் மகத்தான மார்க்சிஸ்டுகளால் அடையாளம் காணப்பட்டவாறாய், போருக்கும் சோசலிசப் புரட்சிக்கும் இட்டுச் செல்லக் கூடிய அடிப்படை முரண்பாடுகளான உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான மற்றும் சமூகமயமாக்கப்பட்ட பொருளாதார உற்பத்திக்கும் தனியார் இலாபக் குவிப்பிற்கும் இடையிலானவற்றை தீர்க்க முடிந்திருக்கவில்லை.

ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய அக்டோபர் புரட்சியின் பாரம்பரியத்திலான ஒரு சர்வதேசிய மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புரட்சிகரப் போராட்டம் மட்டுமே தொழிலாள வர்க்கத்திற்கு முன்நோக்கியிருக்கின்ற பாதையாகும். போட்டி ஏகாதிபத்திய சக்திகளில் ஏதோவொன்றின் இராணுவக் கொள்கைகளுக்கு தொழிலாளர்கள் ஆதரவளிக்க முடியாது. உலகளாவிய ஒரு சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதே உலக முதலாளித்துவத்தின் ஆழமடையும் நெருக்கடிக்கு அவசியமாயிருக்கக் கூடிய பதிலிறுப்பாகும்.