ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Russians are coming! The Russians are coming!

ரஷ்யர்கள் வருகிறார்கள்! ரஷ்யர்கள் வருகிறார்கள்!

Patrick Martin
12 June 2017

உங்கள் கார் தரிப்பிட மின்கதவு இயங்கவில்லையா? உங்கள் நாய் நடுஇரவில் எழுந்து ஊளையிடுகிறதா? வெய்யில், குளிர், வறட்சி, காற்று அல்லது ஈரப்பதம் என தட்பவெப்பநிலை அதனதன் பருவத்திற்கேற்ப இல்லையா? உங்கள் தொலைக்காட்சி பெட்டி (அல்லது குளிர்பதனப்பெட்டி, அல்லது ஒலியமைப்பு சாதனம் அல்லது வீட்டு எச்சரிக்கை மணி அமைப்புமுறை) திடீரென செயல்படுகிறதா, அல்லது செயல்படாமல் போகிறதா?

ஒருவர் பெருநிறுவன கட்டுப்பாட்டிலான ஊடகங்களை பார்த்து உத்தியோகபூர்வ வாஷிங்டனின் பெரும்பாலான அறிக்கைகளை, அதுவும் குறிப்பாக ஜனநாயகக் கட்சியின் அறிக்கைகளை விமர்சனபூர்வமின்றி அப்படியே ஏற்றுக் கொண்டால், அவர் மிக சுலபமாக ரஷ்யர்கள் தான் இதையெல்லாம் செய்தார்கள் என்ற முடிவுக்கு வந்து விடுவார்.

அமெரிக்க அரசியலும் ஊடக ஸ்தாபகமும் ஒரு பித்துப் பிடித்த வெறித்தனத்தில் சிக்கியுள்ளன. (உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24.3 சதவீதத்துடன், 18 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான) உலகின் மிகப்பெரிய பொருளாதாரம், உலகின் மிகப்பெரிய இராணுவம், மற்றும் தொழில்நுட்பரீதியில் மிகவும் நவீன உளவுத்துறை எந்திரத்திற்கு கட்டளையிடும் ஓர் ஆளும் உயரடுக்கு, (உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதத்துடன், அல்லது அமெரிக்காவை விட பதினான்கில் ஒரு பங்கில் இருக்கும்) உலகின் பன்னிரெண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தை மேற்பார்வை செய்கின்றதும், கணினி சகாப்தத்திற்குள் சிலிக்கன் மண்டலம் நுழைந்து ஒரு தலைமுறைக்கு பின்னர் அதற்குள் கால் பதித்ததுமான ஒரு அரசாங்கத்தின் எங்கும் நிறைந்திருக்கும் விழுதுகளால் ஊடுருவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு மதிப்பீட்டின்படி, உலகின் மொத்த கணினி நிரலாளர்களில் (computer programmers) சுமார் 20 சதவீதத்துடன் அமெரிக்காவில் உள்ள 3.6 மில்லியன் கணினி நிரலாளர்களுடன் ஒப்பிடுகையில், ரஷ்யாவில் அரை மில்லியனுக்கும் சற்று கூடுதலானவர்களே உள்ளனர். உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த மென்பொருள், வன்பொருள் மற்றும் இணைய நிறுவனங்களுக்கு அமெரிக்காவே மையமாக உள்ளது. ரஷ்ய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று கூட உலகின் முதல் 100 இடங்களில் கிடையாது. இவ்வாறிருப்பினும், 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ரஷ்யா ஊடுருவியதாக குற்றஞ்சாட்டி அமெரிக்க ஊடகங்கள் பரப்பி வரும் கதையாடல்களில், கத்தியைக் கொண்டு வெண்ணையை வெட்டுவது போல, மிக சுலபமாக அமெரிக்க தகவல் தொழில்நுட்ப அமைப்புமுறையை ரஷ்ய இணைய போர்முறை நடவடிக்கைகள் ஊடுருவி விட்டதாக கூறப்படுகிறது.

பணியிலிருந்து நீக்கப்பட்ட மத்திய புலனாய்வுத்துறை (FBI) இயக்குனர் ஜேம்ஸ் கோமி வியாழனன்று செனட் சபையின் புலனாய்வு குழு முன்னால் தோன்றியமை, அமெரிக்க ஊடகங்களின் ரஷ்ய-விரோத விஷமப் பிரச்சாரத்தை ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்தி உள்ளது. அமெரிக்க அரசியல் பொலிஸின் இந்த முன்னாள் தலைவர், அமெரிக்க தேர்தல்களில் ரஷ்யா ஊடுருவியதாக கூறப்படுவது, அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஒரு அபாயகரமான அச்சுறுத்தல் என்று கண்டித்தார். “அவர்கள் முயற்சிசெய்ய தேர்ந்தெடுத்த எந்த கட்சிக்காகவும், அதன் சார்பாக வேலைசெய்யவும் அவர்கள் வந்து விடுவார்கள்,” என்றவர் எச்சரித்தார். “அவர்கள் மீண்டும் வருவார்கள்... அவர்கள் அமெரிக்காவிற்கு வருகிறார்கள்,” என்றார்.

அவரிடம் கேள்வி எழுப்பிய முதலாளித்துவ அரசியல்வாதிகளில் ஒருவர் கூட, ரஷ்யா அமெரிக்காவின் பிரதான எதிரி என்ற கூற்றின் மீதோ அல்லது ரஷ்ய ஊடுருவல் அமெரிக்க தேர்தல் அமைப்புமுறைக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்ற கூற்றையோ சவால் செய்யவில்லை. வோல் ஸ்ட்ரீட் நலன்களுக்காக அமெரிக்க தேர்தல்களுக்குள் பில்லியன் கணக்கில் பணம் பாய்ச்சப்பட்டமை அமெரிக்கர்களின் ஜனநாயக உரிமைக்கு அதை விட மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று எவருமே கூறவில்லை.   

வாரயிறுதி ஊடக செய்திகள் பேரழிவுகரமான எச்சரிக்கைகளோடு சேர்ந்து கொண்டன. ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸில் வெளியான முதல் பக்க அறிக்கை ஒன்று, ட்ரம்ப் மற்றும் கோமி இற்கு இடையிலான மோதல் அதைவிட முக்கிய பிரச்சினையான அமெரிக்க தேர்தல் முறைக்குள் ரஷ்ய தலையீட்டால் "அமெரிக்காவிற்கு ஏற்படும் ஒரு அதிர்ச்சிகரமான அச்சுறுத்தலை" மறைக்க அனுமதிக்கப்படக்கூடாது என்று எச்சரித்தது.

டைம்ஸ் செய்தியின்படி, “தேசிய பாதுகாப்பு முகமையின் தலைமையகத்திலிருந்து அரசு தலைநகரங்கள் வரையில் அவற்றின் வாக்காளர்-பதிவு அமைப்புகளுக்குள் ரஷ்யர்கள் நுழைந்திருப்பதை அவை கண்டறிந்துள்ளன, ரஷ்யா கடந்த ஆண்டு அமெரிக்க ஜனநாயகத்தை எவ்வாறு தகர்த்தது, அவ்வாறு மீண்டும் ஏற்படாமல் எவ்வாறு தடுப்பது என்பதை எடுத்துக்காட்டுவதில் இருந்து கவனம் திசை திருப்பப்படுமோ என்பது தான் கவலையாக உள்ளது.”

அக்கட்டுரை எந்தவித நிஜமான ஆதாரமும் இல்லாமல் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளின் சந்தேகங்களை மட்டுமே மேற்கோளிட்டு, ரஷ்ய அரசு ஊடுருவல்காரர்கள் வாக்களிப்பு முறைக்கான மென்பொருள் வழங்கும் நிறுவனங்களிலும், மின்சக்தி பகிர்மான வலைப்பின்னல் மற்றும் ஏனைய அத்தியாவசிய உள்கட்டமைப்பிற்குள்ளும் ஊடுருவி இருப்பதாக அறிவுறுத்தும் அளவிற்கு சென்றது. அது, "தீவிரப்பட்ட இணையவழி போர்முறை" எச்சரிக்கை குறித்த கோமி இன் கருத்துக்களை விரிவாக்கிய "வல்லுனர்களின்" பல தொடர்ச்சியான ரஷ்ய-விரோத கருத்துக்களை மேற்கோளிட்டது.  

“கோமி ஐ விடுங்கள். அமெரிக்கா மீதான ரஷ்யாவின் போர் தான் நிஜமான செய்தி" என்ற தலைப்பின் கீழ் Politico.com இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கருத்துரை இன்னும் அதிகளவில் கடுமையாக இருந்தது. அக்கட்டுரையின் ஆசிரியர், ஜோர்ஜியா மற்றும் மால்டோவாவின் ரஷ்ய-விரோத அரசாங்கங்களுக்கான ஒரு முன்னாள் அமெரிக்க ஆலோசகரான Molly K. McKew ஆவர்.

"அமெரிக்க ஜனநாயகம் மீது நீண்டகால, ஆழ்ந்து செல்லும், நன்கு செயல்படுத்தப்பட்ட மற்றும் நடைமுறையளவில் பீதியூட்டும் ரஷ்ய தாக்குதல் குறித்து அக்கறையின்றி இருப்பதற்காக" அப்பெண்மணி ஜனாதிபதி ட்ரம்பைக் குறை கூறியதுடன், “அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஒருபோதும் முகங்கொடுத்திராத ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு விடையிறுக்கத் தவறியதற்காக" வெள்ளை மாளிகையை தாக்கும் அளவிற்குச் சென்றார்.

“ரஷ்யாவின் உலகளாவிய ஏகாதிபத்திய ஊடுருவல்" குறித்து எழுதும் McKew, உலகின் இரண்டு மிகப்பெரிய அணுஆயுத சக்திகளுக்கு இடையே தவிர்க்க முடியாமல் ஆயுத மோதலுக்கு இட்டுச் செல்லும் ஒரு "புதிய பனிப்போரையும்" கடந்து செல்லும் ஒரு நடவடிக்கைப் போக்கை அறிவுறுத்துகிறார். 

ஒபாமா நிர்வாகத்தின் இரண்டாவது பதவிக்காலத்தின் போது, அதுவும் குறிப்பாக உக்ரேனில் 2014 அமெரிக்க ஆதரவிலான அதிவலது ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் இருந்து தொடங்கப்பட்ட மாஸ்கோவிற்கு எதிரான வெளியுறவு கொள்கை நடவடிக்கைகளுடன் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை இயைந்து நிற்கச் செய்வதற்காக, இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் மிகவும் சக்தி வாய்ந்த பிரிவுகளது ஒரு முயற்சியை பிரதிநிதித்துவம் செய்கின்றதும், ஜனநாயகக் கட்சி மற்றும் பெரும்பாலான பெருநிறுவன ஊடகங்களால் ஆதரிக்கப்படுகின்றதுமான ரஷ்ய-விரோத பிரச்சாரத்தில் உள்ள அரசியல் பிரச்சினைகளை உலக சோசலிச வலைத் தளம் பல முறை மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்தி உள்ளது.

சிரியாவில் ஒரு முழு அளவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையை மேற்கொள்வதற்காக அந்நாட்டிற்குள் பினாமி உள்நாட்டு போரைத் தீவிரப்படுத்தும் அவற்றின் திட்டங்களை அந்நாட்டிற்குள் ரஷ்யாவின் தலையீடு முறியடித்தது என்பதற்காகவே, ரஷ்ய-விரோத பிரச்சாரத்தை முன்னெடுக்கும் ஆளும் வர்க்கத்தின் கன்னைகளும் மற்றும் உளவுத்துறை முகமைகளும் குறிப்பாக கோபமடைந்துள்ளன. லிபியாவில் கடாபி மற்றும் ஈராக்கில் சதாம் ஹூசைனுக்கு என்ன கதி ஏற்பட்டதோ அதே கதியை சிரியாவில் அசாத் சந்திக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். புட்டின் மீதான அவர்களின் வெறித்தனமான வெறுப்பு, ரஷ்ய ஜனாதிபதி குறித்தும் அவர்கள் அதேபோன்ற ஆசைகளை மனதில் கொண்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. 

ரஷ்ய-விரோத பிரச்சாரத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் மோசடியானதாகும். இராணுவ-உளவுத்துறை முகமைகள், ஜனநாயக கட்சி மற்றும் ஊடகங்களும் முன்னர் குடியரசு கட்சி வலதுகளுக்கு உரித்தான தனிச்சிறப்பான போலி மோசடிகளை உருவாக்கும் நன்கு-ஸ்தாபிக்கப்பட்ட வடிவத்தையே பின்தொடர்கின்றன. கிளிண்டனின் Whitewater மோசடி, ஒபாமா ஒரு முஸ்லீம், ஹிலாரி கிளிண்டனும் பெங்காசியும் போன்ற இத்தகைய போலி பிரச்சாரங்கள், பின்னர் அவற்றின் சொந்த உத்வேகத்தைப் பெற்றுக்கொள்ளும் என்ற ஊகத்துடன் தொடங்குகின்றன.

ரஷ்ய ஊடுருவல் அமெரிக்க ஜனநாயகத்தைப் "பலவீனப்படுத்துவதாக" குற்றஞ்சாட்டுவதில் என்ன உள்ளடங்கி உள்ளது? வாக்கு எண்ணிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. 2000 இல் புளோரிடாவில் அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிமன்றத்தால் ஜனநாயக-விரோத நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதைப் போல, எந்த வாக்களிப்பும் நிராகரிக்கப்படவில்லை. அதற்கு மாறாக, உண்மையான தகவல்கள் பெயர் வெளியிடாமல் விக்கிலீக்ஸ் க்கு வினியோகப்பட்டது, அது அந்த ஆவணங்களை வெளியிட்டு, ஜனநாயக கட்சியின் தேசிய குழு பேர்னி சாண்டர்ஸ் பிரச்சாரத்தை அடிபணிய செய்ய வேலை செய்தது என்பதையும், ஹிலாரி கிளிண்டன் வோல் ஸ்ட்ரீட் பார்வையாளர்களுடன் உடந்தையாய் இருந்து, ஒரு புதிய கிளிண்டன் நிர்வாகம் பெரிய நிதிய நலன்களின் பைகளில் இருக்குமென அவர்களுக்கு மறுஉறுதி வழங்கியதையும் எடுத்துக்காட்டியது.  

அந்த வெளியீடுகள் நிச்சயமாக கிளிண்டனை சேதப்படுத்தியது தான், என்றாலும் அப்பெண்மணி நிதிய செல்வந்த தட்டின் ஒரு ஊழல்பீடித்த கைப்பாவை என்று ஏற்கனவே அவரைக் குறித்து அமெரிக்கர்கள் என்ன அறிந்திருந்தனரோ அதை மட்டுமே அந்த வெளியீடுகள் உறுதிப்படுத்தின.

ஏனைய நாடுகளின் தேர்தல்களில் தலையீடு செய்வதைப் பொறுத்த வரையில், இந்த பழக்கத்தில் அமெரிக்க ஆளும் வர்க்கமே நிறைய பயிற்சிகளினூடாக திறமை பெற்றுள்ளது. ஒரு விடயம் சிறப்பாக குறிப்பிடுவதற்கு தகுதி உடையதாகும்: 1996 ரஷ்ய தேர்தலில், பொரிஸ் யெல்ஸ்டின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, வெள்ளை மாளிகையின் வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க அரசியல் நடவடிக்கையாளர்கள் தலையீடு செய்தனர். அந்த நடவடிக்கையின் தொடக்கத்தில், கருத்துக்கணிப்புகளின்படி ஒரு இலக்கத்தில் இருந்த யெல்ஸ்டின், அதிகரித்தளவில் மக்கள் எதிர்ப்பை முகங்கொடுத்திருந்தார். யெல்ஸ்டின் ஒரு அமெரிக்க கொடியைப் பிடித்திருப்பதைக் காட்டும் படத்துடன் ஜூலை 1996 டைம்ஸ் இதழ், “மீட்பதற்கான இழுவைகள்: யெல்ஸ்டின் வெற்றிக்கு அமெரிக்க ஆலோசகர்கள் எவ்வாறு உதவினார்கள் என்பதைக் குறித்த ஒரு இரகசிய கதை" என்று எழுதி, அந்நடவடிக்கையை தொகுத்தளித்து.  

2016 தேர்தலில் கிளிண்டன், வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் வேட்பாளராக போட்டியிட்டதாலும் மற்றும் தொழிலாள வர்க்க அதிருப்திக்கு முறையிடாததாலும் தோற்று போனார். இது, சமூக சமத்துவமின்மையின் அதிக வளர்ச்சியை ஒபாமா மேற்பார்வையிட்டு வந்த அதேவேளையில் தசாப்தங்களாக நடந்து வந்த பொருளாதார மந்தநிலை, கூலி வெட்டுக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய எட்டாண்டுகளுக்கு பின்னர் நடந்தது. ட்ரம்ப் நிர்வாகத்தின் முதல் மாதங்களில் இந்த வலதுசாரி நோக்குநிலை தான் ஜனநாயகக் கட்சியை தொடர்ந்து வழி நடத்திக் கொண்டிருந்தது.

மருத்துவ காப்பீடு மீதான அவரின் தாக்குதல்களுக்காகவோ, புலம்பெயர்ந்தவர்கள் மீதான அவரின் தாக்குதல்களுக்காகவோ, உலகெங்கிலும் அவர் இராணுவவாதத்தைக் கொண்டு மிரட்டுகிறாரே என்பதற்காவோ, அல்லது மக்கள் வாக்குகளை இழந்து உரிமையும் கோர முடியாத ஒரு சிறுபான்மை ஜனாதிபதியாக உள்ள அவர் அந்தஸ்தைக் குறித்தோ கூட ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்புக்கு எதிராக போராட்டத்தில் இறங்கவில்லை. மாறாக, அவர்கள் அமெரிக்க வரலாற்றின் மிகவும் வலதுசாரி ஜனாதிபதியான ட்ரம்ப், ரஷ்யாவுடனான ஓர் இராணுவ மோதலுக்கு போதுமானளவிற்கு பொறுப்பேற்கவில்லையே என அவரை வலதிலிருந்து கண்டித்து, தாக்குவதை தேர்ந்தெடுத்துள்ளனர்.