ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Political lessons of the French elections

பிரெஞ்சு தேர்தல்களின் அரசியல் படிப்பினைகள்

Alex Lantier
23 June 2017

பிரான்சில் இந்த இளவேனிற்கால ஜனாதிபதி மற்றும் சட்டமன்ற தேர்தல் சுற்றுக்கள், சோசலிஸ்ட் கட்சியின் (PS) உருக்குலைவு மற்றும் இமானுவல் மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மற்றும் அவர் அரசாங்கத்திற்கு சாதகமாக தேசிய நாடாளுமன்றத்தில் முழு பெரும்பான்மை ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளன.

சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் அரசாங்கத்தில் பொருளாதார அமைச்சராக பங்குவகித்த மக்ரோன், ஐரோப்பிய ஒன்றியத்தை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய மற்றும் இராணுவ போட்டியாளராக கட்டமைப்பதற்கான பேர்லினின் முயற்சியை ஆதரித்து வருகிறார். வெளிநாடுகளில் ஐரோப்பிய ஏகாதிபத்திய அபிலாஷைகளுக்கான உள்நாட்டு அடித்தளம், தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு ஈவிரக்கமற்ற தாக்குதலாக இருக்கும். சோசலிஸ்ட் கட்சியிலிருந்தும் முதலாளித்துவ வலதிலிருந்தும் வடிகட்டியெடுக்கப்பட்டுள்ள மக்ரோனின் அரசாங்கம், தொடர்ச்சியான பல எதேச்சதிகார உத்தரவாணைகளை திட்டமிட்டு வருகிறது, இவை சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்ட திருத்தங்களை மேலும் தீவிரப்படுத்தும் என்பதோடு, ஒரு நிரந்தரமான அவசரகால நிலை சட்டத்தை நிறுவும்.

இந்த விளைவுகள், ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து முறித்துக் கொண்ட பிரெஞ்சு இடது என்றழைக்கப்படும் அமைப்புகள் அனைத்தினது திவால்நிலைப்பாட்டின் ஒரு நாசகரமான வெளிப்பாடாகும், ஹோலாண்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் மதிப்பிழந்த சிக்கன கொள்கைகள் மற்றும் போர் கொள்கைகளில் இருந்து மக்ரோன் ஆதாயமடைந்ததற்கு இவையே முக்கிய பொறுப்பாகும். கடந்த கால் நூற்றாண்டு காலத்தின்போது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், 1995, 2003, 2010 மற்றும் 2016 இல் என பாரிய வேலைநிறுத்தங்களுடன் பிரான்சில் தொழிலாளர்கள் இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக கூர்மையாக எதிர்வினையாற்றினார்கள். 2002 இல் மற்றும் இந்தாண்டும், இந்த அமைப்புகளுக்கு தொழிலாள வர்க்கம் மில்லியன் கணக்கான வாக்குகளை வழங்கியது, ஆனால் எந்தவொரு மாற்றீட்டையும் அபிவிருத்தி செய்ய இலாயக்கற்றவர்கள் என்பதையே இந்த அமைப்புகள் நிரூபித்துள்ளன. 

அவர்கள் சோசலிஸ்ட் கட்சிக்கு ஒரு மாற்றீடாக தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டமைக்க நோக்குநிலை கொள்ளவில்லை, மாறாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிலாளர்களை அதற்கு பின்னால் திருப்ப தொழிற்பட்டார்கள். 2002 தேர்தலில், தொழிலாளர்கள் போராட்டம் (Lutte ouvrière – LO) மற்றும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்திற்கு (Ligue communiste révolutionnaire – LCR) மொத்தம் 3 மில்லியன் வாக்குகள் கிடைத்ததுடன், அது சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் லியோனல் ஜோஸ்பனை வெளியேற்றி, பழமைவாத ஜாக் சிராக் மற்றும் நவ-பாசிசவாத ஜோன்-மரி லு பென்னுக்கு இடையே இரண்டாம் சுற்று தேர்தலைக் அமைத்தது. அப்போது LO மற்றும் LCR சிராக்கிற்கு வாக்களிக்குமாறு சோசலிஸ்ட் கட்சி பிரச்சாரத்துடன் அணி சேர்ந்தன.    

சோசலிஸ்ட் கட்சியுடனான பின்புல பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் LCR சிராக்கிற்கு வாக்களிக்க ஒப்புதல் வழங்கியது, LO வாக்களிப்பை புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்த அதேவேளையில், அது சிராக்கிற்கான வாக்களிப்பை "புரிந்து கொள்வதாக" தெளிவுபடுத்தி, அதன் அனுதாபத்தை காட்டியிருந்தது.

இத்தகைய சகல வாய்ப்புகளுக்கும் முன்னால், அவை தொழிலாள வர்க்கத்தில் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியைக் கட்டமைக்க அவர்களுக்கு கிடைத்த எந்தவொரு பெறுபேறுகளையும் பயன்படுத்த மறுத்தனர். அதற்கு பதிலாக அவர்கள் சோசலிஸ்ட் கட்சி மற்றும் சிராக்கிற்கு பின்னால் அணி சேர்ந்தமை, லு பென்னின் தேசிய முன்னணி பிரான்சில் சிக்கன நடவடிக்கைகளுக்கான ஒரே எதிர்ப்பாக காட்டிக்கொள்ள வழிவகுத்தது. பின்னர் அவர்கள், 2002 இல் செய்த அதேவிதத்தில், மீண்டும் 2017 இல் மக்ரோனுக்கு அடிபணிந்ததை நியாயப்படுத்துவதற்கு தேசிய முன்னணியின் வளர்ச்சியை பயன்படுத்தினர்.

சிரியா மீதான அமெரிக்க விமானத் தாக்குதல்கள் மற்றும் மத்திய தரைக்கடலில் அகதிகள் மூழ்கி உயிரிழக்க அனுமதிக்கும் ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகளை மெலோன்சோன் விமர்சித்த பின்னர், அதன் விளைவாக 7 மில்லியன் வாக்குகளைப் பெற்று, ஜனாதிபதி தேர்தல்களின் இறுதி வாரங்களில், மெலோன்சோனுக்கான ஆதரவு கருத்துக்கணிப்புகளில் இரண்டு மடங்காக இருந்தது. மக்ரோன் மற்றும் தேசிய முன்னணி வேட்பாளர் மரீன் லு பென்னுக்கு இடையிலான இரண்டாம் சுற்று தேர்தலில், மெலோன்சோன் ஒரு நிலைப்பாட்டை எடுக்க மறுத்தார். மக்ரோனின் வலதுசாரி கொள்கைளுக்கு எதிர்ப்பாக அடிபணியா பிரான்ஸ் (La France insoumise - FI) ஆதரவாளர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினர் ஓர் ஆலோசனை வாக்கெடுப்பில் வாக்களிக்காமல் இருப்பதையோ அல்லது செல்லாத வாக்களிப்பதையோ ஆதரிப்பதாக எடுத்துக்காட்டியதையும் அவர் நிராகரித்திருந்தார். லு பென்னுக்கு எதிராக மக்ரோனுக்கு வாக்களிப்பவர்களை அவரால் "புரிந்து கொள்ள முடிவதாகவும்" அவர் வலியுறுத்தினார்.

LO இல் இருந்து LCR (இன்று இது புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, NPA) மற்றும் பியர் லம்பேர் இன் முன்னாள் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பில் (Organisation communiste internationaliste – OCI) அவர் தொழில்வாழ்வைத் தொடங்கிய மெலோன்சோன் வரையில் இத்தகைய போக்குகளில் ஒவ்வொன்றும், ட்ரொட்கிசத்துடன் முறித்துக் கொண்டதில் அவற்றின் அரசியல் தோற்றுவாய்களைக் கொண்டுள்ளன. இது தங்குதடையற்ற குட்டி-முதலாளித்துவ சந்தர்ப்பவாதத்திலும் முதலாளித்துவ அரசுக்கு அடிபணிவதிலும் வெளிப்பாட்டைக் கண்டது.

சோசலிஸ்ட் கட்சியை ஸ்தாபிப்பதற்கான தயாரிப்புகளில் பின்னர் இணைந்து கொள்ள, OCI 1971 இல் ட்ரொட்ஸ்கிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் முறித்துக் கொண்டது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தை நிராகரித்து, அது நிதி மூலதனத்தின் ஒரு பிற்போக்குத்தனமான கட்சியான சோசலிஸ்ட் கட்சியைச் சுற்றி இடது ஐக்கியத்தைக் கட்டமைக்கும் வகையில் தொழிலாளர்களின் நோக்குநிலையை மாற்ற முயன்றது. OCI அதன் அங்கத்தவர்களை சோசலிஸ்ட் கட்சிக்குள் அனுப்பியது—அவர்களில் ஒருவர்தான் பின்னாளில் பிரான்சின் பிரதம மந்திரியான லியோனல் ஜோஸ்பன்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனான அதன் 1953 உடைவின்போது ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படை கோட்பாடுகளை நிராகரித்த LCR/NPA போக்கைப் பொறுத்த வரையில், அது ட்ரொட்ஸ்கி உடன் வெறும் அடையாளத்திற்கும் மற்றும் வார்த்தையளவிலும் இணைந்திருந்ததையும் 2009 இல் உத்தியோகபூர்வமாக கைத்துறந்தது. அது சோசலிஸ்ட் கட்சி அங்கத்தவர்களுக்கு திறந்துவிடப்பட்ட ஒரு "பரந்த இடது" கூட்டணி கட்சியாக NPA ஐ கட்டமைப்பதற்கு முன்மொழிந்து, ட்ரொட்ஸ்கிசம் அல்லாத அடித்தளத்தில் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியை ஸ்தாபித்தது.

இத்தகைய வட்டாரங்களில் மேலோங்கியுள்ள மிகவும் குரூரமான மார்க்சிச-விரோத கருத்துருக்களைச் சில சமயம் மெலோன்சோன் வெளிப்படுத்தினார். சோசலிஸ்ட் கட்சி மதிப்பிழந்திருப்பதை சோசலிசம் மற்றும் இடதின் முடிவை அர்த்தப்படுத்துவதாக அறிவித்து, அவர் மக்களின் சகாப்தம் (The Era of the People) என்ற அவர் நூலில் தொழிலாள வர்க்கம் இனி ஒரு சுயாதீனமான அரசியல் பாத்திரம் வகிக்க முடியாது என்பதோடு, சோசலிச புரட்சியை "குடிமக்களின் புரட்சியை" கொண்டு பிரதியீடு செய்ய வேண்டுமென பிரகடனப்படுத்தினார். இந்த "குடிமக்கள் புரட்சியின்" முதல் கட்டமாக இந்த சம்பவத்தில், சமூக எதிர்புரட்சிக்கான மக்ரோனின் திட்டங்களுக்கு உதவுவதாக இருந்தது.

தொழிலாள வர்க்க எதிர்ப்பை தடுக்க ஆளும் வர்க்கத்தின் முயற்சிகளுக்கு புறநிலையாக சேவையாற்றிய இந்த கொள்கை, தத்துவார்த்தரீதியில் இத்தகைய அரசியல் கட்சிகளில் முன்னணி பாத்திரம் வகிக்கும், பிரெஞ்சு கல்வித்துறைசார் குட்டி முதலாளித்துவத்தின் அடுக்கால் ஊக்குவிக்கப்படும் பல்வேறு போலி-மார்க்சிச வடிவங்களில் அடித்தளமிட்டிருந்தது. இத்தகைய போக்குகள் மற்றும் அவற்றின் மார்க்சிச-விரோத தத்துவங்களை பரிசோதித்துப் பார்க்க பிரான்ஸ் ஒரு பரிசோதனை களமாக இருந்தது.

அரசு-முதாலளித்துவ எழுத்தாளர்கள் கொர்னேலியுஸ் காஸ்ட்ரோரியாடிஸ் (Cornelius Castoriadis) மற்றும் குளோட் லுஃபோர் (Claude Lefort) இல் இருந்து, பின்-கட்டமைப்புவாதி (post-structuralist) மிஷேல் ஃபூக்கோ (Michel Foucault), அல்லது முன்னாள்-மாவோயிச பின்நவீனத்துவவாதி அலன் பாடியு (Alain Badiou) மற்றும் ஜாக் றான்சியேர் (Jacques Rancière) வரையில், போலி-இடதின் ஒவ்வொரு தத்துவார்த்த போக்கும் மார்க்சிசத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் அதன் ஒரு துளி விஷத்தையாவது கலக்க பங்களிப்பு செய்தன. ஜோன்-பிரான்சுவா லியோத்தாரின் வரலாறு முடிந்துவிட்டது மீதான 1979 உதிரித்திட்டங்கள் மற்றும் "மாபெரும் கதையாடல்களின் மரணம்" ஆகியவையும் மற்றும் மார்க்சிசம் "போலி-மார்க்சிசத்திற்கு" வழி விட வேண்டியுள்ளது என்ற மார்க்சின் ஆவிகள் (Specters of Marx) நூலில் 1993 இல் டெரிடா (Derrida) இன் அறிவிப்பு ஆகியவையும் அவற்றில் உள்ளடங்கும்.

இத்தகைய தத்துவங்களின் மதிப்பை, பாடியு (Badiou), அவரை அறியாமலேயே, சிறப்பாக மதிப்பீடு செய்திருந்தார். அவர் கிரேக்க மக்களுக்கு எதிரான சிக்கன திட்டத்தின் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரச்சாரம் குறித்து "நமது சமகாலத்திய இயலாமை" என்று தலைப்பிட்டு 2013 இல் ஒரு கட்டுரையை எழுதினார்.

“இப்போது கிரேக்க மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள எந்தவொரு பிரச்சினைகளையும் தீர்க்க எனக்கு தகமையோ அல்லது நோக்கமோ இல்லை” என்று பாடியு அறிவித்தார். “ஆகவே இங்கே எனது உள்ளுணர்வு இது சம்பந்தமான பிரச்சனையில் பரந்தளவில் அதனுடன் தொடர்பற்றதாக உள்ளது. இந்த நிலைப்பாட்டின் வரம்புகளை நான் ஏற்றுக்கொள்வதுடன் மற்றும் சிலவேளை தனிப்பட்டரீதியானதும், சிலவேளை நியாயப்படுத்தமுடியாத ஒரு தாக்கத்தின் உணர்வுடன் ஆரம்பித்து உனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பொதுவான அரசியல் இயலாமையின் ஒரு உணர்வை உணர்கின்றேன். என்றார்.

1917 அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டில், சோசலிஸ்ட் கட்சி பொறிந்து போயுள்ள நிலையில், மக்ரோனுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் புதிய போராட்டங்கள் வரவிருக்கின்ற நிலையில், இந்த அனுபவத்தின் படிப்பினைகளை பெற்றாக வேண்டும். எதிர்விரோத வர்க்க நலன்களிலும் மற்றும் மார்க்சிசத்தை அவர்கள் நிராகரிப்பதிலும் வேரூன்றியுள்ள இத்தகைய சக்திகளின் பலவீனம், தோல்விகளை மட்டுமே ஒழுங்கமைக்கும். தொல்சீர் மார்க்சிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசம், மற்றும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி என புரட்சிகர மார்க்சிசத்தின் மாபெரும் சிந்தனையாளர்களின் பாரம்பரியங்களுக்கு திரும்பி, புரட்சிகர பாதையில் செல்வது மட்டுமே முன்னிருக்கும் ஒரே பாதையாகும்.

இந்த வேலைத்திட்டத்திற்கு, பிரான்சிலும் சர்வதேச அளவிலும், தொழிலாள வர்க்கத்தை வெல்வதே, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’égalité socialiste - PES) பணியாகும்.