ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

In meeting with Putin, Macron distances France from Washington’s anti-Russia policy

புட்டின் உடனான சந்திப்பில், மக்ரோன் வாஷிங்டனின் ரஷ்ய-விரோதக் கொள்கையில் இருந்து பிரான்சை தூர நிறுத்துகிறார்

By Alex Lantier
30 May 2017

நேற்று மாலை, புதிதாக தேர்வாகியிருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் வேர்சாய் அரண்மனையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை வரவேற்றார். சிரியாவிலும் அதன்பின் உக்ரேன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலும் ரஷ்யாவுடனான ஒரு நேரடி இராணுவ மோதலுக்கு ஐரோப்பிய சக்திகளையும் அமெரிக்காவையும் இட்டு சென்றிருக்கும் வெடிப்பான மோதல்களுக்கு மத்தியில், மக்ரோன், பிரான்சின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு பரந்த மாற்றத்திற்கு சமிக்கையளித்தார்.

வேர்சாய் மாநாடு, முனிச்சில் ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெலின் ஒரு அசாதாரணமான செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர் வந்திருந்தது, ஐரோப்பா இனியும் அமெரிக்காவையோ அல்லது இங்கிலாந்தையோ நம்பியிருக்க முடியாது என்று அங்கே மேர்க்கெல் கூறியிருந்தார். “ஐரோப்பியர்களாகிய நாம் நமது தலைவிதியை நமது கைகளில் எடுத்தாக வேண்டும்” என்றார் மேர்க்கெல். “அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா உள்ளிட்ட மற்ற அண்டை நாடுகளுடன் நமக்கு நட்புறவுகள் அவசியமாக உள்ளது என்பது உண்மையே” என்ற அவர் இப்போது “நாம் நமது வருங்காலத்திற்காக நாமே போராடியாக வேண்டியிருக்கிறது” என்று விளக்கினார்.

கடந்த காலத்தின் நிகழ்வுகள், இரண்டாம் உலகம் போர் முதலாக “அமெரிக்கா தவிர்த்து விட முனைந்து வந்திருக்கும்” ஒரு “திருப்புமுனை”யை குறிப்பதாய் இருப்பதாக ஒரு அதிருப்திதொனிக்கும் கருத்தினை செல்வாக்குமிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான அமெரிக்க கவுன்சிலின் தலைவரான ரிச்சார்ட் ஹாஸ் இடமிருந்து மேர்க்கெலின் கூற்றுகள் கொண்டுவந்தன. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் மேலாதிக்க சக்தியான ஜேர்மனி வகுத்துத் தரும் பாதையையே —பெருமளவு மூர்க்கத்தனமானதாக இருக்கின்ற அதேநேரத்தில், அதிகமான அளவில் அமெரிக்காவிடம் இருந்து சுயாதீனமாகவும் அதற்கு எதிரானதாகவும் இருக்கின்ற பாதை— மக்ரோனின் கீழான பிரெஞ்சு வெளியுறவுக் கொள்கையும் பின்பற்றிக் கொண்டிருக்கிறது என்பதையே வேர்சாயில் நடந்த நேற்றைய மாநாடு ஊர்ஜிதம் செய்திருக்கிறது.

சிரிய மற்றும் உக்ரேன் நெருக்கடிகளில் ஒரு மூர்க்கமான ஏகாதிபத்தியக் கொள்கையை முன்னெடுத்த அதேநேரத்தில், ரஷ்யாவை நோக்கிய அமெரிக்காவின் கொள்கையில் இருந்து மக்ரோன் தன்னை தூர நிறுத்திக் கொண்டார். உக்ரேன் மற்றும் சிரியா இரண்டிலுமே ஒரு முக்கிய அணு ஆயுத சக்தியான ரஷ்யாவுடன் அமெரிக்கா தொடர்ச்சியாக ஒரு முழுவீச்சிலான இராணுவ மோதலின் அபாயத்தில் இறங்கத் துணிந்து வந்திருக்கின்ற நிலையில், மக்ரோன், “ரஷ்யாவுடனான எங்கள் கூட்டை வலுப்படுத்துவதே” தனது இலட்சியம் என்று தெரிவித்தார்.

சிரியா விடயத்தில் மக்ரோன், ஆட்சி மாற்றத்திற்கான ஒரு மூர்க்கமான தலையீட்டிற்கான தேவையை வலியுறுத்தினார், இதனை அவர் மறைமுகமாக “சிரியாவிலான ஒரு ஜனநாயக உருமாற்றம்” என்று குறிப்பிட்டார்.

ஏப்ரல் 7 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடுத்த அப்பட்டமான இராணுவ மூர்க்கத்தனத்தின் —அப்போது ரஷ்ய மற்றும் சிரிய துருப்புகளது சிரிய விமான தளம் ஒன்றின் மீது அமெரிக்கா டசன்கணக்கில் கப்பலில் இருந்தான ஏவுகணைகளை வீசியது— வகையில் பிரான்ஸ் பங்கேற்க நேர்ந்த சூழல்களை அவர் பட்டியலிட்டார். “நமது தரப்பில் இரண்டு தெளிவான சிவப்பு கோடுகள் இருக்கின்றன: இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதானது உடனடியாக பிரெஞ்சு தரப்பில் இருந்தான பதிலடியைத் தூண்டும், அத்துடன் மனிதாபிமான நிலைகளைப் பாதுகாப்பதற்கான தேவையின் போதும் அது நடக்கும்” என்றார் மக்ரோன்.

முன்னாளில் பிரான்சின் ஒரு காலனியாக இருந்த, கடைசி ரஷ்ய-ஆதரவு அரபு ஆட்சியை அழிப்பதற்கு செய்த முயற்சியில், நேட்டோ சக்திகள் நடத்திய பினாமிப் போரை நியாயப்படுத்துவதற்கு மக்ரோன் பயன்படுத்தி வந்திருந்த அரசியல் பொய்களை அவர் திரும்பவும் மறுசுழற்சி செய்து கொண்டிருந்தார். சிரியாவுக்குள் போராளிகளையும் தன்னார்வலர்களையும் அனுப்புவதற்கு நேட்டோ இஸ்லாமிய பயங்கரவாத வலைப்பின்னல்களை பயன்படுத்தியது, இவற்றில் சில அதன்பின் ஐரோப்பாவிலேயே கூட பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தின, பாரிஸ் தாக்குதல் மற்றும் மான்செஸ்டரில் மிக சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவையும் இதில் அடங்கும்.

இரசாயனத் தாக்குதல்களை பொறுத்தவரை —2012 இல் ஹௌலாவில் மற்றும் 2013 இல் கௌடாவில் ஆகியவை இழிபிரபலமானவை— இவை உண்மையில் சிரியாவில் நேட்டோ நாடுகளது ஒரு நேரடியான இராணுவத் தலையீட்டை தூண்ட செய்யும் முயற்சியில் நேட்டோ-ஆதரவு “கிளர்ச்சியாளர்”களால் நடத்தப்பட்டவையாகவே இருந்தன.

மக்ரோன் பாராட்டும் “மனிதாபிமான நிலைகளை” பொறுத்தவரை, அவை எல்லாவற்றுக்கும் மேல், போரினால் வீடிழக்கச் செய்யப்பட்டிருக்கும் 10 மில்லியனுக்கும் அதிகமான சிரிய அகதிகள், ஐரோப்பாவுக்குத் தப்பி ஓடி வருவதில் இருந்து தடுப்பதற்கான பொறியாகவே சேவை செய்து வந்திருக்கின்றன. இந்த கொலைபாதகக் கொள்கையை முன்னெடுப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் மத்திய தரைக்கடலில் ரோந்துகளையும் மீட்பு நடவடிக்கைகளையும் குறைத்து விட்டது; மத்திய தரைக்கடலில் மீதி இருக்கும் அகதிகளை இருக்குமிடத்திலேயே இருக்கும்படி அச்சுறுத்தி வைக்கும் எண்ணத்துடன் ஆயிரக்கணக்கான அகதிகள் மூழ்கி விடுவதை அது அனுமதித்தது.

அதேநேரத்தில், பிரான்ஸ் தனது தூதரகத்தை டமாஸ்கஸில் மீண்டும் திறக்கக் கூடும் என்பதை மக்ரோன் சூசகம் செய்தார்; இது அமெரிக்காவின் கொள்கையுடனும், சிரியாவின் இஸ்லாமிய எதிர்ப்புப்படைகளையே சிரியாவின் முறையான அரசாங்கமாய் அங்கீகரித்த மக்ரோனுக்கு முன்னிருந்த பிரெஞ்சு ஜனாதிபதியான பிரான்சுவா ஹாலண்டின் கொள்கையில் இருந்தும் ஒரு முறிவைக் குறிப்பதாக இருக்கும். இஸ்லாமிய வலைப்பின்னல்களுக்கு எதிராக ரஷ்ய உளவுச் சேவைகளுடன் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தவும் மக்ரோன் ஆலோசனையளித்தார்.

உக்ரேன் விடயத்தில், “மோதல் விரிவாக்கத்தை-குறைப்பதற்கு” ஜேர்மனி மற்றும் உக்ரேன் உடனான ஒரு சந்திப்புக்கு “சாத்தியமான மிகக்குறைந்த இடைவெளியில்” ஏற்பாடு செய்வதற்கு தானும் புட்டினும் நோக்கம் கொண்டிருப்பதாகவும் மக்ரோன் தெரிவித்தார். இவ்வாறாக அவர்கள் உக்ரேன் விடயத்தில் ஜேர்மனி, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் உக்ரேன் பங்குபெறும் ”நோர்மண்டி” என்று அழைக்கப்படுகின்ற தூதரக பேச்சுவார்த்தை வடிவத்தை ஆதரித்தனர். அமெரிக்காவை தள்ளி வைக்கும் இந்த வடிவமானது, 2015 இல் கியேவில் இருந்த ரஷ்ய-ஆதரவு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அதிவலது போராளிக் குழுக்களது தலைமையில் ஒரு சதிக்கவிழ்ப்பை அமெரிக்காவும் ஜேர்மனியும் ஒழுங்கமைத்ததற்குப் பின்னர், உதயமாகியிருந்தது.

2015 இல், கிழக்கு உக்ரேனின் ரஷ்ய மொழி பேசும் பகுதிகளில் போர் நடத்துவதற்கு இந்த போராளிக் குழுக்களுக்கு ஆயுதமளிக்க இருப்பதாக அமெரிக்கா மிரட்டியது. இது ஜேர்மனி மற்றும் பிரான்சில் ஒரு திடீர் கொள்கை மாற்றத்தைத் தூண்டியது, ரஷ்ய மற்றும் உக்ரேன் துருப்புகள் இடையே ஒரு முழுவீச்சிலான தரையுத்தத்தையும் ஐரோப்பாவெங்கிலும் போர் வெடிப்பையும் தூண்டி விடத்தக்க ஒரு இராணுவ தீவிரப்படலை தடுப்பதற்காக ரஷ்யா மற்றும் உக்ரேனுடன் மின்ஸ்க் உடன்படிக்கைகள் மூலம் அவை வேகமாக பேச்சுவார்த்தை நடத்தின.

எலிசே ஜனாதிபதி மாளிகையில் அவசரகதியில் கூட்டப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் சுருக்கமாகப் பேசிய ஹாலண்ட், ரஷ்யாவுடன் “முழுமையான” போர் சாத்தியமே என்று கூறி பத்திரிகையாளர் குழுவை திகைக்கச் செய்து விட்டு மேர்க்கெல், புட்டின் மற்றும் உக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ போரோஷெங்கோ உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மின்ஸ்க் பறந்தார்.

அமெரிக்க ஆளும் உயரடுக்கில், குறிப்பாக ஜனநாயகக் கட்சியில் இருக்கும் ரஷ்ய-விரோதக் கன்னைகள், ஐரோப்பா இன்னும் தயாராகியிராத ரஷ்யாவுடனான ஒரு மோதலுக்குள் ஐரோப்பா சிக்கவைப்பதைத் தடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் செய்துவரும் முயற்சிகளை மக்ரோன் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவு. ரஷ்யாவுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை —இது அமெரிக்கா மற்றும் ஜேர்மனியும் கூட ஆதரித்த ஒரு கொள்கையாகும், ஆயினும் இது உக்ரேன் மோதலைத் தீர்ப்பதில் ‘எந்தப் பங்களிப்பும்’ செய்யவில்லை என்று புட்டின் கூறி விட்டார்— முடிவுக்குக் கொண்டுவர புட்டின் விடுத்த அழைப்புக்கு மக்ரோனிடம் இருந்து எந்த எதிர்ப்பும் எழவில்லை.

புட்டினுடன் அணு ஆயுதங்கள் மற்றும் வட கொரிய நெருக்கடி இரண்டும் உட்பட பலதரப்பட்ட உலக விடயங்களை விவாதித்ததை மக்ரோன் தெளிவாக்கினார். அபாயச்சங்கு என்னவென்றால், புட்டினுடன் விவாதித்த எல்லா விடயங்களையும் செய்தியாளர் சந்திப்பில் கூற முடியாது, அது நல்ல இராஜதந்திரமாக ஆகாது என்று அவர் சேர்த்துக் கொண்டது தான்.

மக்ரோன் இன்னும் சற்று வெளிப்படையாகப் பேச முடிந்திருக்குமாயின், நேட்டோ சக்திகளது பொறுப்பற்ற கொள்கைகள் உருவாக்கியிருக்கும் ஒரு நெருக்கடிக்கு, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவெங்கிலுமான ஆளும் வர்க்கத்திடம் எந்த வகையான தீர்வும் இல்லாதிருக்கிறது என்று ஒப்புக் கொண்டிருப்பார். ட்ரம்ப், ஜேர்மனியையும் பிரான்சையும் வர்த்தகப் போரைக் கொண்டு அச்சுறுத்துகின்ற நிலையில், முக்கிய ஐரோப்பியத் தலைநகரங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அதிகரித்துச் செல்லும் பதட்டங்களே கூட, நேட்டோ கூட்டணிக்குள்ளான பதட்டங்கள் ஒரு வெடிப்பான பரிமாணங்களை எடுத்துக்கொண்டிருக்கின்றன என்பதின் எச்சரிக்கையே ஆகும்.

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில், நேட்டோ சக்திகளால் தொடுக்கப்பட்ட ஏகாதிபத்தியப் போர்கள் பால்கன்கள் மற்றும் கிழக்கு ஐரோப்பா, மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா எங்கிலும் பரவியிருக்கின்றன. மொத்தமாய் எடுத்துப் பார்த்தால், இந்தப் போர்கள் —ஆப்கானிஸ்தான், யூகோஸ்லேவியா, ஈராக், சிரியா, லிபியா ஆகியவை மீதான போர்கள் மற்றும் இவற்றைக் கடந்து நடந்தவை— மில்லியன் கணக்கான உயிர்களைக் காவு கொண்டிருப்பதோடு இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பெரும் அகதிகள் நெருக்கடியை உருவாக்கியிருக்கின்றன. இப்போது உலக முதலாளித்துவத்தின் அதிகரித்துவரும் சர்வதேச முரண்பாடுகள் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முன்பாக ஒரு புதிய உலகப் போரின் அபாயத்தை முன்நிறுத்துகின்றன.

உண்மையில், இந்த செய்தியாளர் சந்திப்பு, பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய இறுதி நூற்றாண்டில் வரலாற்றுரீதியாய் அழியத் தலைவிதி கொண்டிருந்த ஒரு வரம்பிலா முடியாட்சியால் கட்டப்பட்டதான தங்கமுலாம் பூசப்பட்ட வேர்சாயின் அரங்கில் நடைபெற்றது என்ற உண்மை விசித்திரமான பொருத்தமுடையதாகும். அவர்களின் சொந்த கொள்கைகளால் விளைந்த பெருகிச் செல்லும் அபாயகரமான பின்விளைவுகளை எப்படிக் கையாளுவது என்பதற்கான எந்த ஆலோசனையையும் கூடியிருந்த செய்தியாளர்கள் அல்லது அரசியல்வாதிகளில் எவராலும் வழங்கமுடியவில்லை.

புட்டினும் மக்ரோனும் அணு ஆயுதங்கள் குறித்து என்ன விவாதித்துக் கொண்டார்கள் என்பது குறித்தோ, அல்லது நேட்டோ சக்திகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மூலோபாய அணு ஆயுதப் போரின் தாக்கம் ஐரோப்பிய அல்லது உலக மக்கள் தொகையின் உயிர்வாழ்க்கை மீது என்னவாயிருக்கும் என்பது குறித்தோ எவரும் புட்டினிடமோ அல்லது மக்ரோனிடமோ கேள்வி எழுப்பவில்லை.

மக்ரோனின் கொள்கை ஒரு பெரும் போர் ஏற்படாமல் தடுப்பது அல்ல, மாறாக அதற்குத் தயாரிப்பு செய்வதே ஆகும். கட்டாய இராணுவ சேவையைக் கொண்டுவருவதற்கு பிரெஞ்சு இளைஞர்களில் பெருவாரியாய் மூன்றில் இரண்டு பங்கினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பதை கருத்துக்கணிப்புகள் காட்டுகின்ற போதிலும், மக்ரோனோ இப்போது இளம் பெண்களுக்கும் நீடிக்கப்பட்டுள்ள, அனைவரும் இராணுவ சேவைக்கு திரும்புவதற்கும் அத்துடன் பிரான்சின் இராணுவ செலவினத்தில் பல பில்லியன் யூரோ அதிகரிப்புகளுக்கும் முன்மொழிந்துள்ளார்.