ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s withdrawal from the Paris agreement: The socialist solution to climate change

பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து ட்ரம்ப் விலகல்: காலநிலை மாற்றத்திற்கான சோசலிசத் தீர்வு

Bryan Dyne
3 June 2017

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்ளும் ட்ரம்ப்பின் முடிவானது அவரது நிர்வாகத்தின் முற்றிலும் பிற்போக்கான தன்மையை விளங்கப்படுத்தும் நடவடிக்கைகளது எண்ணிக்கை பெருகிச் செல்லும் பட்டியலில் இன்னுமொன்றாய் ஆகியிருக்கிறது.

அவர் வியாழனன்று வழங்கிய போலி-ஜனரஞ்சகவாத “முதலில் அமெரிக்கா” வாய்வீச்சின் -இது ஐயத்திற்கிடமில்லாமல் ட்ரம்பின் பாசிச தலைமை அதிகாரி ஸ்டீபன் பனானின் முத்திரையை தாங்கியிருந்தது- பின்னால், ‘பெருநிறுவன மற்றும் நிதியப் பிரபுத்துவத்தின் கொள்ளையடிக்கும் நோக்குடைய நடவடிக்கைகளுக்கு தளையிடுவதை ஒத்த எதுவொன்றும் சகித்துக் கொள்ளப்படாது’ என்ற திட்டவட்டம் இருந்தது. அதற்காக முழு பூமியும் நஞ்சாக்கப்படுவதானாலும் பரவாயில்லை.

ட்ரம்ப்பின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போட்டியாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பிடித்துக் கொண்டு சுற்றுச்சூழலின் காவலர்களாய் காட்டிக்கொண்டனர். நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்டின் தலையங்கங்கள் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளை “குறுகிய பார்வை கொண்டவை” என்றும் “சொந்தத் தரப்பை தோற்கடிப்பவை” என்றும் அழைத்தன. ஐரோப்பாவில், இந்த ஒப்பந்தம் மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படாது என்றும் “இது நமது பூமி, சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களுக்கான ஒரு இன்றியமையாத சாதனமாகும்” என்றும் அறிவிக்கும் ஒரு கூட்டு அறிக்கையை இத்தாலிய பிரதமர் பவோலா ஜெண்ட்டிலோனி, ஜேர்மன் சான்சலரான அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஆகியோர் விடுத்தனர்.

இத்தகைய விமர்சனங்களுக்கும், ஆளும் வர்க்கத்தின் பல்வேறு கன்னைகளுக்கு இடையிலான சர்வதேச அளவிலான மற்றும் உள்நாட்டு அளவிலான மோதல்களுக்கும் தான் சம்பந்தமே தவிர்த்து, காலநிலை மாற்றம் என்ற உண்மைப் பிரச்சினைக்கு அதனுடன் உள்ள சம்பந்தம் அதைவிட மிகவும் குறைவே, என்கின்றபோது பூமி சூடாவதைத் தடுப்பதற்கான கவனத்திற்குரிய நடவடிக்கைகளாக அவற்றைக் கருதுவதற்கெல்லாம் போகவும் தேவையில்லை. அட்லாண்டிக் கடந்த பிரிவினை பெருகிச் செல்வதன் மத்தியில் ஜேர்மனியின் தலைமையில் ஐரோப்பிய சக்திகள், பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்தான ட்ரம்ப்பின் விலகலைப் பயன்படுத்திக் கொண்டு தமது சுதந்திரமான மற்றும் புவிமூலோபாய நலன்களை நிலைநாட்டுகின்ற ஒரு பிரச்சாரத்தை காலூன்றுவதற்கு முனைந்து கொண்டிருக்கின்றன.

உள்நாட்டுரீதியாக, ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் மீதான விமர்சனமானது ஆளும் வர்க்கத்திற்குள்ளாக, வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகளை மையமாகக் கொண்ட ஆழமான மோதல்களுடன் குறுக்கிடக் கூடியதாக இருக்கிறது. புரூக்கிங்ஸ் ஸ்தாபனத்தை சேர்ந்த சமந்தா கிராஸ், இந்த முடிவை, “அமெரிக்காவின் உலகளாவிய நிலைக்கு குழிபறிக்கக் கூடிய” “வெளியுறவுக் கொள்கையிலான ஒரு மாபெரும் தவறு” என்று அழைத்தபோது அவர் ஒரு பொதுவான தொனியை ஒலித்தார். “அமெரிக்கா காலி செய்யும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு சீனா எதிர்நோக்கக் கூடுமோ?” என்று அவர் கவலைப்பட்டார்.

காலநிலை மாற்றம் என்பது உடனடியான நடவடிக்கை தேவையாக இருக்கக் கூடிய ஒரு உண்மையான அச்சுறுத்தல் ஆகும். உலக வெப்பமாதல் என்பது மனிதனின் தொழிற்துறை மற்றும் விவசாயத் துறை நடவடிக்கைகளில் இருந்து பூமியின் வாயுமண்டலத்திற்குள் கார்பன் உமிழப்படுவதன் (பிரதானமாக கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் மீத்தேன்) ஒரு விளைவு என்பது 1990 இல் காலநிலை மாற்றம் குறித்த முதல் அரசாங்கங்களுக்கு-இடையிலான குழுவின் அறிக்கை முதலாக புரிந்து கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. உடனடியான மற்றும் நீண்டகாலத்திற்கான நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே பேரழிவுகரமான பின்விளைவுகள் தடுக்கப்பட முடியும் என்ற ஒருமித்தான முடிவை விஞ்ஞான ரீதியான அமைப்புகளிடம் இருந்தான அறிக்கைகள் வெளிப்படுத்தி வந்திருக்கின்றன.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பாக கணிக்கப்பட்டிருந்த பிரச்சினைகள் ஏற்கனவே வெளிப்பட்டு நிற்கின்றன. கிட்டத்தட்ட 136 ஆண்டுகளில் மிகச் சூடான 17 ஆண்டுகளின் பட்டியலில் 16 ஆண்டுகள் 2001க்குப் பின்னர் வந்தவையாகும். கடுமையான வெப்ப அலைகளும் நீண்ட வறட்சிகளும் உலகெங்கிலும் விவசாய உற்பத்தியில் குறுக்கிட்டுள்ளன. அமேசான் மழைக்காடுகளில் உலர்ந்த மற்றும் வெப்பமான காலநிலையின் காரணத்தால் 1998, 2005 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் பாரிய அளவிலான ஒரு காட்டுத்தீ பற்றியிருந்தது. கடல்கள் வெப்பமடைவதாலும் வெப்பநிலை அதிகரிக்கும் போது நீர் விரிவடைவதாலும் கடல் மட்டங்கள் ஏற்கனவே உயரத் தொடங்கியுள்ளன. இது, அதன்பங்காக, புயல்கள் மற்றும் சூறாவளிகளுடனான வெள்ளப்போக்கை உக்கிரப்படுத்தியிருக்கிறது.

பவள அரிப்புகள் —கடல் வெப்பநிலை அதிகரிப்பாலும் கடல் அமிலத்தன்மை அதிகரிப்பாலும் பவளப் பாறைகள் மீது உண்டாகும் அழுத்தம்— பூமியின் உணவுச் சங்கிலியின் மற்றும் பொதுவான சூழலியல் சமநிலையின் ஒரு முக்கியமான பகுதியான கிரேட் பேரியர் (Great Barrier) பவளப் பகுதியில் ஏற்கனவே பாதியைக் கொன்றுவிட்டிருக்கின்றன. அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தின் பனிச்சிகரங்கள் உருகி கடலில் வீழும் நிலை இருக்கிறது, இது உடனடியாய் கடல் மட்டங்களை உயர்த்தக் கூடியவை என்பதுடன் உலகளவில் காலநிலைப் போக்குகளையும் இடையூறு செய்யக் கூடியவையாகும். விலங்கினங்கள், அவற்றின் வாழ்விடங்கள் திடீரென மாற்றப்படுவதாலோ அல்லது கூடுதல் வெப்பமான காலநிலைகளில் உயிர்வாழக் கூடிய புதிய நோய்கள் அறிமுகமாவதாலோ அழிக்கப்படுகின்றன.

நிலைமையின் தீவிரம் முதலாளித்துவ சக்திகளால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளுக்கு கடும் பேதமுடையதாக உள்ளது. பாரிஸ் ஒப்பந்தமானது, ஊடகங்களில் குறிப்பிடப்படுகையில் “மைல்கல்” என்ற அடைமொழியுடன் பயன்படுத்தப்படுவது வழக்கமாக இருக்கிறது என்றாலும், உண்மையில் அது பற்களற்றதாகும், உலக வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்ஸியசுக்குக் கீழ், அதாவது இப்போதைய வெப்ப அதிகரிப்பு அளவைக் காட்டிலும் இருமடங்குக்கும் சற்று அதிகமான அளவுக்குக் கீழ், பராமரிப்பதற்கான கட்டுப்படுத்தும் அதிகாரமற்ற வாக்குறுதிகளைக் கொண்டதாகும்.

2015 இல் இது ஏற்றுக்கொள்ளப்பட்டதான சமயத்தில், முன்னணி காலநிலை விஞ்ஞானியான ஜேம்ஸ் ஹான்சென் இதனை பொருத்தமான வகையில் “மோசடியானது” என்றும் “ஏமாற்று” என்றும் குணாம்சப்படுத்தினார். எக்ஸான்மொபில் போன்ற எரிசக்தி நிறுவனங்கள் உள்ளிட மிகப்பெரும் பெருநிறுவன முதலைகளது ஆதரவு பாரிஸ் ஒப்பந்தத்திற்கு இருக்கிறது என்ற உண்மையே அதன் உண்மையான குணத்தைக் குறித்து ஒவ்வொன்றையும் கூறி விடுகிறது.

பாரிஸ் ஒப்பந்தம் பிரதியிட்ட 1997 கியோட்டோ புரோட்டோகால் முறையும் பற்றாக்குறையானதாகவே இருந்தது, ஆயினும், அது தோல்வியடைந்ததற்குக் காரணமே அமெரிக்காவின் தலைமையில் முக்கிய முதலாளித்துவ சக்திகள் அது நிர்ணயித்த இலக்குகளை நிராகரித்ததே ஆகும். காலநிலை மாற்ற அபாயம் குறித்து கவர்ச்சிகரமான உரையாற்றுவதில் விருப்பம் கொண்டவரான அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா, பாரிஸ் ஒப்பந்தத்திற்கு முன்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற சமயத்தில், அமெரிக்கா எந்த புதிய காலநிலை ஒப்பந்தத்தாலும் சட்டரீதியாக கட்டுப்படுத்தப்பட முடியாது என்பதை வலியுறுத்தினார்.

காலநிலை மாற்றப் பிரச்சினையை உண்மையாகவே நிவர்த்தி செய்ய வேண்டுமாயின் உலகளவில் பொருளாதார வாழ்க்கையை பெருமளவில் மறுஒழுங்கு செய்வது அதற்கு அவசியமாய் உள்ளது. எரிசக்தி கட்டமைப்பானது மரபுவழி எரிபொருட்களை பயன்படுத்துகின்ற ஒரு முறையாக இருப்பதில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சார்ந்ததாக இருக்கும் ஒன்றாக உருமாற்றப்பட வேண்டும். இது, போருக்கும் உலகின் பில்லியனர்கள் தம்மைத் தாமே செழுமைப்படுத்திக் கொள்வதற்குமாய் டிரில்லியன் கணக்கில் அளிக்கப்படுவதை மாற்றி, உள்கட்டமைப்பிற்கு பாரிய நிதியாதாரத்தை பாய்ச்சுவது, நடப்பு தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்வது மற்றும் புதிய யோச6னைகளை ஆய்வு செய்வது ஆகியவற்றைக் கொண்டதாக ஆக்குகிற ஒரு சர்வதேச அளவிலான முயற்சியை அவசியமாக்குகிறது.

இந்தப் பிரச்சினைகளை தீர்க்கின்ற அதேநேரத்தில், உலக மக்களின் வாழ்க்கைத்தரங்களையும் வாழ்க்கை முறையையும் மேம்படுத்தக் கூடியதாய் இருக்கின்ற தொழில்நுட்பம் இருக்கவே செய்கிறது. ஆனாலும் முதலாளித்துவ அமைப்புமுறையின் சட்டகத்திற்குள்ளாக அதனை செய்ய சாத்தியமற்றதாய் இருக்கிறது.

காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் இரண்டு அடிப்படை முரண்பாடுகளுடன் மோதலுறுகின்றன: ஒரு உலகப் பொருளாதாரத்திற்கும் உலகம் போட்டி தேசிய-அரசுகளாகப் பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான முரண்பாடு; சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் பொருளாதார வாழ்க்கையானது தனியார் இலாபக் குவிப்பிற்கு கீழ்ப்படியச் செய்யப்படுவதற்கும் இடையிலான முரண்பாடு.

தனது நடவடிக்கைகள் உலக காலநிலைப் போக்குகளில் ஒரு நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதான ஒரு புள்ளிக்கு மனிதகுலம் வந்துசேர்ந்திருக்கிறது என்பது உற்பத்தி சக்திகளது அபிவிருத்தியின் பிரம்மாண்ட தாக்கத்தின் ஒரு வெளிப்பாடே ஆகும். ஆயினும் இந்த உற்பத்தி சக்திகள் ஒரு காலாவதியான மற்றும் பகுத்தறிவற்றதொரு சமூகப் பொருளாதார அமைப்புமுறைக்குள்ளாக சிறைப்பட்டுக் கிடக்கிறது. பகுத்தறிவான மற்றும் விஞ்ஞானபூர்வமானதொரு அடிப்படையில் அவை மேலதிகமாய் அபிவிருத்தி செய்யப்படுவதற்கு சமூக உறவுகள் முழுமையாக மறுஒழுங்கு செய்யப்படுவது அவசியமாக இருக்கிறது.

காலநிலை மாற்றப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான எந்த முக்கியமான நடவடிக்கைகளுக்கும் முட்டுக்கட்டை போடுகின்ற முதலாளித்துவ அமைப்புமுறையின் அதே முரண்பாடுகள் தான், ஒட்டுமொத்த பூமியையும் அச்சுறுத்துகின்ற ஏகாதிபத்தியப் போரையும் அத்துடன் வறுமைப் பெருக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றையும் கூட உருவாக்குவதாய் இருக்கின்றன. அதேசமயத்தில் இந்த முரண்பாடுகள் உலகெங்கிலுமான தொழிலாளர்களை அரசியல்ரீதியாக தீவிரப்படுத்திக் கொண்டும் இருக்கின்றன.

மனிதகுலம் முகம்கொடுக்கும் மற்ற ஒவ்வொரு பிரச்சினையையும் போலவே, காலநிலை மாற்றமும் அடிப்படையில் ஒரு வர்க்கப் பிரச்சினையே ஆகும். உலக வெப்பமயமாதலின் பாதிப்பில் அதிகமாய் பாதிக்கப்பட இருப்பது தொழிலாள வர்க்கமே ஆகும். புறநிலையாகவும் மேலும் மேலும் அதிகமாகவும் தன்னை ஒரு சர்வதேச வர்க்கமாக வரையறை செய்வது தொழிலாள வர்க்கமேயாகும். தொழிலாள வர்க்கமே முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதிலும், தனியார் உற்பத்தி உடைமையை ஒழிப்பதிலும், ஒரு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் உள்ளிட மனிதகுலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதார அமைப்புமுறையை ஸ்தாபிப்பதிலும் தனது சமூக நலன்கள் பொதிந்திருக்கும் நிலையைக் கொண்டுள்ளது.

அராஜகவாத மற்றும் பின்தங்கிய முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு எதிராக சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் போராட்டத்தின் மூலமாக மட்டுமே உலக வெப்பமயமாதலால் முன்வைக்கப்படும் அபாயங்கள் நிவர்த்தி செய்யப்பட முடியும். இந்த வழியில் மட்டுமே உலகின் பொருளாதாரம் பகுத்தறிவான வகையிலும் விஞ்ஞானபூர்வமாகவும் மறுஒழுங்கு செய்யப்பட முடியும், சுற்றுச்சூழல் பேரழிவு தடுக்கப்பட முடியும். சுருக்கமாய் சொன்னால், காலநிலை மாற்றத்துக்கான தீர்வு சோசலிசம் தான்.