ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German Professor Baberowski explains his far-right agenda

ஜேர்மன் பேராசிரியர் பார்பெரோவ்ஸ்கி அவரது அதிவலது திட்டநிரலை விவரிக்கிறார்

By Peter Schwarz
31 May 2017

Neue Zürcher Zeitung இன் சிறப்பு பக்கத்தில் மே 20 இல் வெளியான ஒரு நீண்ட பேட்டியில், ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி அவரது அதிவலது திட்டநிரலை விவரிக்கிறார்.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் Der Spiegel இல் அவர் கூறியதும் மற்றும் சமீபத்தில் Forschung und Lehre (ஆய்வும் & கற்பித்தலும்) சஞ்சிகையில் மீண்டும் வெளியானதுமான, “ஹிட்லர் வக்கிரமானவர் கிடையாது" என்ற அவர் கருத்தை பார்பெரோவ்ஸ்கி ஏன் வலியுறுத்துகிறார் என்பதை அந்த பேட்டி தெளிவுபடுத்துகிறது. வலதைக் கட்டியெழுப்புவதற்காக, அவர் வார்த்தைகளில் கூறுவதானால், “இடது கலாச்சார ஆதிக்கத்தை" முறிப்பதே அவர் நோக்கமாகும். அவரைப் பொறுத்த வரையில், நாஜி குற்றங்களைக் குறைத்துக் காட்டுவதும் மற்றும் போர், இனவாதம் மற்றும் தேசியவாதத்திற்கு வக்காலத்துவாங்குவதும் இனி "தார்மீகரீதியில் மதிப்பிழந்ததாக" இருக்கக்கூடாது என்பதோடு, மாறாக அவையொரு "சம்பிரதாயமாக" ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

அப்பேட்டியின் முதல் பாதி, “இடதுகளின் மேலாதிக்கம்" என்று குற்றஞ்சாட்டப்படுவதன் மீது மூர்க்கமான தாக்குதல்களை உள்ளடக்கி உள்ளது. “அன்டோனியோ கிராம்ஷி (Antonio Gramsci) வரையறுத்ததைப் போல, இடதுகள் போராடி, கலாச்சார மேலாதிக்கத்தைத் திணித்துள்ளது,” என்று அறிவிக்கும் பார்பெரோவ்ஸ்கி, "தன்னை ஒரு பழமைவாத வலதுசாரியராக பெருமையுடன் கூறிக் கொண்ட" ஒரு பாவேரிய பிற்போக்காளர் பிரன்ஸ் ஜோசெப் ஸ்ட்ரவுஸ் (Franz Josef Strauss) போன்ற பழமைவாதிகள் இல்லாமல் இருப்பதைக் குறை கூறுகிறார்.

“இன்று தன்னை ஒரு வலதுசாரி என கூறிக்கொள்ள யார் துணிவார்கள்?” என்று பார்பெரோவ்ஸ்கி கேள்வி எழுப்புகிறார். “சரி, ஒரு வலதுசாரி (right-winger) என்பவர் குழந்தைகள் மீது பாலியல் வெறி கொண்டவரா அல்லது குழந்தைகளுக்குப் பாலியல்ரீதியில் தொல்லை கொடுப்பவரா?” இந்த கருத்துரு, "ஜனநாயக கருத்தொற்றுமையில் இருந்து வேறுபட்டு சிந்திப்பவரை ஒதுக்கி வைப்பதற்காக, பிரதானமாக அவதூறுகளுக்கு வார்த்தையளவில் ஒரு வழிவகையாக சேவையாற்றுகிறது,” என்றார்.

“பகிரங்க கலந்துரையாடல்களில் இடதுகளின் கரம் ஓங்கி உள்ளதாலும், யார் இடது மற்றும் யார் வலது என்று தீர்மானிக்கும் ஒரே சக்தியாக அது இருப்பதாலும்,” மட்டுமே இந்த "நிலை மாற்றம்" (“shift of coordinates”) வெற்றியடைந்துள்ளது என்றார். தாராளவாதிகளும் சரி பழமைவாதிகளும் சரி இருதரப்புமே "இந்த விதிகளுக்கு உட்படுகின்றனர்" என தெரிவித்தார்.

“படைத்துறைசாரா அமைப்புகள், ஊடகங்கள், கல்வித்துறை, பல்கலைக்கழகங்களில்" “இடது கலாச்சார ஆதிக்கமானது, எதிர்த்தாலும் பலனில்லை என்றளவிற்கு கட்டமைப்புரீதியில் பாதுகாக்கப்படுகிறது,” என்று அந்த பேராசிரியர் தொடர்கிறார்.

“குறிப்பாக முதலாளித்துவ கூட்டத்தினுள், பெரும்பாலானவர்கள் இந்த விதமான மொழியையே பேசுகிறார்கள் என்பதுடன், நல்லொழுக்க உத்தரவின் அவசியங்கள் மீறப்படாமல் இருக்க போராடுகிறார்கள்... மேலும் இறுதியில் ஒவ்வொருவரும் இதே மொழியில் பேசுகையில், பின் சிந்தனை முறையானது பலவந்த இயைந்துபோதலுக்கு (Gleichschaltung) உட்படுத்தப்படுகிறது,” என்றார்.

“வணிக உலகமும்" “நினைத்துப் பார்க்க முடியாத விதத்தில் சில தசாப்தங்களுக்கு முன்பிருந்து இந்த ஆதிக்க சொல்லாடலுக்கு தன்னை இணக்குவித்துக்" கொண்டுள்ளது. பொருளாதார தாராளவாதிகளும் சரி, உலகை முன்னேற்றுவதில் நம்பிக்கை கொண்ட இடதுசாரி கற்பனை நவிற்சிவாதிகளும் (leftist romantics) சரி, “ஒவ்வொருவருக்கும் எல்லைகளைத் திறந்துவிடுவதற்கான பல்வேறு காரணங்களை" வரவேற்கிறார்கள். “சிலர் எல்லையற்ற இலாபங்களைப் பெற முயல்கின்றனர், மற்றவர்கள் ஓர் உலகளாவிய சமூகத்தைக் கனவு காண்கிறார்கள்,” என்றார்.

இங்கே பார்பெரோவ்ஸ்கி, தீவிர வலதின் பண்டைய கருத்துருவைப் பாதுகாக்கிறார். “அரசியல்ரீதியாக சரியாக ஆதிக்கம் செலுத்தும் கருத்து" மற்றும் "நல்லொழுக்க உத்தரவு" இவற்றுக்கு முரண்பட்ட ஒரு கருத்தை, புலம்பெயர்வோர், முஸ்லீம்கள் அல்லது ட்ரம்ப் குறித்த பிரச்சினைகள் மீது ஒருவர் வெளிப்படுத்தும் போது, அவர் "பொது விவாதங்களில் இருந்து ஒதுக்கப்படுவதைக் கணக்கில் கொள்ள" வேண்டியிருக்கிறது என்றவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

ஒரு புள்ளியில் அவர் கூறுகிறார்: “இனவாதம், காலனித்துவம், போர் மற்றும் சமாதானம் அல்லது பாலுறவு குறித்து மதிப்பிடும் ஒருவர், இவற்றை ஆதிக்கத்தில் உள்ள உபதேசம் அனுமதிப்பதைக் காட்டிலும் வித்தியாசமாக மதிப்பிடுகையில், அவர் தார்மீகரீதியில் மதிப்பிழக்கிறார்.” இனவாதம், காலனித்துவம் மற்றும் போரை கையிலெடுக்காத "ஆதிக்கத்தில் உள்ள விவாதம்" (hegemonic discourse) மீது பார்பெரோவ்ஸ்கி ஆட்சேபணை தெரிவிப்பது, அவற்றிற்கான அவரின் ஆதரவாக மட்டுமே அர்த்தப்படுத்த முடியும்.

அந்த பேட்டியின் அதே பந்தி, பார்பெரோவ்ஸ்கி ஏன் இந்தளவிற்கு பிடிவாதமாக ஹிட்லர் எனும் நபரின் முக்கியத்துவத்தைக் குறைத்துக்காட்டுகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. “கடந்தகாலத்தைக் குறித்து என்ன கூறப்பட வேண்டும் மற்றும் எவ்வாறு கூறப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ததன் மூலமாக" “அரசியலை நெறிப்படுத்துவதற்கான அடித்தளங்கள்" அமைத்த, "68 தலைமுறையை" அவர் குறைகூறுகிறார் — இவர்கள், அவர்களின் பெற்றோர்கள் வாய்மூடி இருந்ததற்கு எதிராக 1968 இல் போராடியதுடன், நாஜி குற்றங்கள் மீதான பிரச்சினையைக் கையிலெடுத்தனர்.

பின்வரும் வாக்கியம் மிகத் தெளிவாக பார்பெரோவ்ஸ்கியின் அதிவலது மைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது: “அப்போதிருந்து ஒரு மறைந்த சர்வாதிகாரி மீதான எதிர்ப்பே, ஏனைய மக்கள் மீது அதிகளவில் தார்மீக அடித்தளத்தைப் பெற போதுமானதாக உள்ளது.”

“ஒரு மறைந்த சர்வாதிகாரி மீதான எதிர்ப்பானது", அதாவது ஹிட்லரைப் புறக்கணிப்பதானது, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய ஜேர்மனியில் தசாப்தங்களாக அடிப்படை அரசியல் ஒற்றுமையின் பாகமாக இருந்துள்ளது. பார்பெரோவ்ஸ்கி அதை மாற்ற விரும்புகிறார். பின்னர், அதிதீவிர அமைப்பான ஜேர்மனிக்கான மாற்றீடு இன் (AfD) முன்னணி அங்கத்தவர் Björn Höcke போன்ற ஒரு நாஜி அனுதாபியின் கண்ணோட்டங்கள், ஹிட்லரின் எதிர்ப்பாளர்களது கண்ணோட்டங்களைப் போலவே சம அளவில் பொது விவாதங்களின் சட்டபூர்வ பாகமாக மாறும். உண்மையில் இடதின் "உள்ளார்ந்த அதிகாரத்திற்கும்" மற்றும் “இயைந்துபோகும் சிந்தனைக்கும்" ("பலவந்தமாக இணங்குவிக்கப்பட்ட சிந்தனைமுறைக்கும்”) அதுபோன்ற கண்ணோட்டங்கள் அடிபணிவதில்லை என்பதால் அவை ஏற்புடையதாக பார்க்கப்படுகின்றன. பார்பெரோவ்ஸ்கியின் Neue Zürcher Zeitung பத்திரிகை பேட்டியை AfD மேன்மைப்படுத்தி ட்வீட்டரில் வெளியிட்டதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) பெப்ரவரி 2014 இல் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு அனுப்பிய ஒரு பகிரங்க கடிதத்தில், “பார்பெரோவ்ஸ்கி, மூன்று தசாப்தங்களாக நாஜி குற்றங்களின் முக்கியத்துவத்தைக் குறைத்துக்காட்டவும் மற்றும் சுருக்கவும் முனைந்த ஏர்ன்ஸ்ட் நோல்ட இன் இழிவார்ந்த வலதுசாரி கருத்துக்களை முன்னெடுப்பதற்கு, பல்கலைக்கழகத்தில் அவரது அந்தஸ்தைப் பயன்படுத்தி வருகிறார்,” என்பதைச் சுட்டிக்காட்டியது.

அக்கடிதம், Der Spiegel இல் வெளியான ஒரு கட்டுரையைக் குறிப்பிட்டுக் காட்டியது. அதில், “வரலாற்றுரீதியில் நோல்ட சரியாக" இருந்ததாக பார்பெரோவ்ஸ்கி கூறியிருந்தார்.

பார்பெரோவ்ஸ்கி அப்போதிருந்து, அவர் விமர்சகர்கள் மீது மறைமுக அவதூறுகளுடனும் மற்றும் பிரேமன் மாணவர் அமைப்பான Asta விடயத்தில் நீதிமன்ற வழக்குடனும் விடையிறுத்து, குணத்தை அவதூறுப்படுத்தும் தாக்குதல் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்டவராக தன்னைத்தானே சித்தரித்து வருகிறார். Neue Zürcher Zeitung பேட்டியில் அவரே அதை தான் செய்கிறார். அவர், ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பான IYSSE ஐ, "தன் மீது கவனத்தை ஈர்ப்பதற்காக ஆதிக்க விவாத வழிவகைகளைப்" பயன்படுத்தும் "ஸ்ராலினிச பிரிவு" என்பதாக குற்றஞ்சாட்டுகிறார். பிரச்சினையில் சிக்கியுள்ள விடயங்கள் மிகவும் தீவிரமானவையாக இல்லாதிருந்தால், ஒட்டுமொத்த ஊடக தளத்தையும் அணுகக்கூடிய ஒரு பேராசிரியரிடம் இருந்து இதுபோன்ற வார்த்தைகள் வருவதற்காக ஒருவர் சிரித்திருப்பார்.

“ஜேர்மன் இராணுவவாதத்தின் புத்துயிரூட்டலுக்கு, நாஜி சகாப்த குற்றங்களைக் குறைத்துக்காட்டும் ஒரு புதிய வரலாற்று பொருள்விளக்கம் அவசியப்படுகிறது,” என்பதை IYSSE 2014 இல் ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எழுதிய அதன் பகிரங்க கடிதத்தில் விளங்கப்படுத்தியது.

இது அப்போதிருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹிட்லருக்கு மறுவாழ்வளிக்காமல் ஜேர்மனியால் வல்லரசு அரசியலுக்கும் இராணுவவாதத்திற்கும் திரும்ப முடியாது என்பது அதிகரித்தளவில் தெளிவாக உள்ளது. Timur Vermes இன் சமீபத்திய நாவலான Look Who’s Back என்பதும், அந்நூலை அடிப்படையாக கொண்ட திரைப்படமும் தற்போது பெரிதும் இதை நிரூபிக்கிறது.

இதனால் தான், அவரது அதிவலது நிலைப்பாடுகள் ஐயத்திற்கிடமின்றி இருந்தாலும், ஒரு நீதிமன்ற தீர்ப்பால் சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்டன என்ற உண்மைக்கு இடையிலும், பார்பெரோவ்ஸ்கி ஏறத்தாழ ஒட்டுமொத்த ஊடகங்களாலும் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தாலும் பாதுகாக்கப்படுகிறார். எவ்வாறிருப்பினும் மாணவர்களும் தொழிலாளர்களும் இதுபோன்ற கண்ணோட்டங்களை பயங்கரமானதாகவும், அருவருப்பானதாகவும் நிராகரிக்கின்றனர்.