ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

May Day 2017
The Growth of German Militarism and the Rewriting of History

2017 மே தின உரை: ஜேர்மன் இராணுவவாதத்தின் வளர்ச்சியும், வரலாற்றை திருத்தி எழுதுவதும்

By Sven Wurm
4 May 2017

இந்த உரை ஏப்ரல் 30 அன்று நடத்தப்பட்ட 2017 சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பின் (IYSSSE) பேச்சாளரான ஸ்வென் வுர்ம் வழங்கியதாகும்.

புதிய ஏகாதிபத்திய போர்கள் தொடுப்பதற்கும் மற்றும் புதிய குற்றங்கள் புரிவதற்கும் வரலாறை திருத்தி எழுதவும், ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றகரமான பாத்திரம் குறைத்து காட்டப்பட்டு மறுக்கப்பட வேண்டியும் உள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன்னர், ஜேர்மன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் அமைப்பின் சிற்றிதழ் ஒரு வரலாற்றாளர் உடனான பேட்டி ஒன்றை பிரசுரித்தது, அதில் அவர் ஸ்ராலின் மற்றும் ஹிட்லருக்கு இடையிலான பின்வரும் ஒப்பீட்டை வழங்கினார்: 

"நான் ஹிட்லரை ஸ்ராலினுடன் ஒப்பிடுகிறேன். ஸ்ராலின் மனநோய் கொண்டவராய் இருந்தார், ஹிட்லர் அவ்வாறில்லை. ஸ்ராலினுக்கு வன்முறை சந்தோசமளிப்பதாக இருந்தது, ஹிட்லருக்கு அவ்வாறு இருக்கவில்லை. அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை ஹிட்லர் அறிந்திருந்தார். ஸ்ராலினோ, அவர் செயல்களின் குருதிகொட்டும் பின்விளைவுகளைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்பாத ஒரு அலுவலக ஊழியரை போல் இருந்தார்.”

ஏற்கனவே 2014 இல், இதே நபர் ஜேர்மனியில் மிகவும் பரவலாக வாசிக்கப்படும் வாரயிதழ் Der Spiegel க்கு கூறுகையில், “ஹிட்லர் மனநோயாளி கிடையாது, அவர் வக்கிரமானவரும் இல்லை. யூதர்களை நிர்மூலமாக்குவது குறித்து அவர் மேசையில் பேசுவதை அவர் விரும்பவில்லை,” என்று கூறியிருந்தார்.

இவ்விரு விடயங்களிலும் அவற்றைக் கூறியவர், பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் கிழக்கு ஐரோப்பிய வரலாற்றுத்துறை தலைவர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி ஆவார்.

2017 மே தின உரை ஸ்வென் வுர்ம்

இதை கேட்கும் எவரொருவருக்கும், இந்த கருத்துக்களின் நோக்கம் துல்லியமாக தெளிவாகிவிடும்: இது நாஜிக்களது குற்றங்களைக் குறைத்து காட்டும் மற்றும் ஹிட்லருக்கு புத்துயிரூட்டும் ஒரு முயற்சியாகும். நாஜிக்கள் புரிந்த வெறுக்கத்தக்க குற்றங்கள் குறித்து ஒவ்வொருவருக்கும் தெரியும், ஹிட்லருக்கு "வன்முறை சந்தோசமளிப்பதாக" இருந்தது என்பது நன்கறியப்பட்டதாகும்.

ஏறத்தாழ கடந்த எழுபது ஆண்டுகளாக, ஜேர்மனியிலும் சர்வதேச அளவிலும் பலர் நாஜிக்களுக்கு புத்துயிரூட்டுவது சாத்தியமில்லை என்றே நம்பினர். இரண்டாம் உலக போரின் கொடிய நினைவுகள் விட்டுச் சென்ற காயங்களும், போலந்து மீதான தாக்குதல், சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக நிர்மூலமாக்கும் போர், ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்ட யூத இனப்படுகொலை ஆகியவை மிகவும் ஆழமாக வேரூன்றி இருந்தன.

இருந்தும், ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் மீண்டுமொருமுறை உலக சக்தியாவதற்கு கனவு காண்கிறது, ஐரோப்பாவை அதன் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வரவும், அமெரிக்காவுடன் போட்டியிடவும் நோக்கம் கொண்டுள்ளது, கடந்த கால உத்வேகங்கள் எல்லாம் தவிர்க்கவியலாமல் திரும்பி வருகின்றன. புதிய ஏகாதிபத்திய போர்கள் தொடுப்பதற்கும் மற்றும் புதிய குற்றங்கள் புரிவதற்கும் வரலாறை திருத்தி எழுத வேண்டியுள்ளதுடன், 20 ஆம் நூற்றாண்டில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றகரமான பாத்திரத்தைக் குறைத்துக் காட்டி, நிராகரிக்க வேண்டியுள்ளது.

ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கும் அரசியல் விஞ்ஞானி ஹெர்பிரட் முன்ங்லெர், 2014 இன் தொடக்கத்தில் Süddeutsche Zeitung க்கு அளித்த ஒரு பேட்டியில் இந்த நோக்கத்தை தொகுத்தளித்தார்: “இது எல்லாம் நம் தவறுதான் என்று ஒருவர் சிந்திக்கும் வரையில் ஐரோப்பாவில் ஒரு பொறுப்பான கொள்கையைச் செயல்படுத்த முடியாது. 1914 ஐ பொறுத்த வரையில், அதுவொரு கட்டுக்கதை… வரலாற்றுரீதியில் நாம் குற்றவாளிகள் என்பதால், நாம் உலகின் எந்தவொரு இடத்தின் வெளியுறவு கொள்கையிலும் பங்கெடுக்க அனுமதிக்கப்படுவதில்லை என்ற கருத்தை நோக்கி நமது வெளியுறவு கொள்கையைத் திருப்புகிறோம்…" என்றார்.

வெறும் ஒரு சில வாரங்களுக்குப் பின்னர், அப்போதைய ஜேர்மன் ஜனாதிபதி கௌவ்க் உம் மற்றும் ஜேர்மன் அரசாங்கமும் 2014 மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் "இராணுவ கட்டுப்பாடுகள் முடிந்துவிட்டதாக" பிரகடனப்படுத்தியதுடன், ஜேர்மன் உலகெங்கிலும் இப்போது அதன் நலன்களை இராணுவரீதியிலும் மிகவும் தீர்மானகரமாகவும் பாதுகாக்க வேண்டியிருப்பதாக அறிவித்தது. இந்த கொள்கை உக்ரேனில் வலதுசாரி ஆட்சிக் கவிழ்ப்பு சதியை உருவாக்குவதிலும், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் இராணுவ ஆத்திரமூட்டல்களிலும் மற்றும் மாலி, சிரியா மற்றும் ஈராக் போர்களிலும் ஏற்கனவே நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் மக்களின் முதுகுக்குப் பின்னால் என்ன தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறதோ அது இவற்றை எல்லாம் கடந்து செல்கிறது. பாதுகாப்பு வரவு-செலவு திட்டக்கணக்கு ஏறத்தாழ இரட்டிப்பாக்கப்பட உள்ளது மற்றும் ஜேர்மன் இராணுவம் (Bundeswehr) பாரியளவில் மீள்ஆயுதமயப்படுத்தப்பட உள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் உள்அலுவலக ஆவணங்கள், தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைகளை விரிவாக்குவது குறித்து குறிப்பிடுகின்றன. கட்டாய இராணுவச் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவது மற்றும் ஜேர்மனி அதன் சொந்த அணுஆயுதங்களைப் பெறுவது குறித்து ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு அப்பாற்பட்டு, இந்த அபிவிருத்தியை எவரொருவரும் சவால் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஊடகங்களில் எந்த ஆவேச எதிர்ப்பும் இல்லை. இடது கட்சிகள் மற்றும் அமைப்புகள் என்று கூறிக்கொள்பவையின் பாகத்திலிருந்து எந்த விமர்சனமும் இல்லை, சொல்லப் போனால் இவை அவற்றின் "பாசிச விரோத" நற்சான்றுகளை ஊக்குவிக்க விரும்புகின்றன. இவற்றிற்கெல்லாம் முற்றிலும் மாறாக, இடது கட்சியும் பசுமை கட்சியினரும் ஆரம்பத்திலிருந்தே ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகையின் ஓர் உள்ளார்ந்த பாகமாக இருப்பதுடன், முன்ங்லெர் மற்றும் பார்பெரோவ்ஸ்கி உடன் கூட்டு கூட்டங்களையுமே கூட ஏற்பாடு செய்கின்றன. ஒட்டுமொத்த ஸ்தாபகமும் வலதை நோக்கி வெகுதூரம் நகர்ந்துள்ளதுடன், அவ்விதத்தில் Pegida மற்றும் AfD போன்ற அதிதீவிர வலதுசாரி மற்றும் பாசிசவாத சக்திகளைப் பலப்படுத்தி உள்ளன.

இத்தகைய நிகழ்வுகளையும், மற்றும் வரலாற்றை திருத்தி எழுதுவதையும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) மட்டுமே அதிக கவனத்தில் எடுத்துள்ளன. நாம் இவற்றை ஜேர்மன் இராணுவவாத மீள்வருகையுடன் நேரடியாக தொடர்புபடுத்தி உள்ளோம். இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான பரந்த எதிர்ப்பைக் கடந்து வர முதலாளித்துவத்திற்கு ஒரு புதிய வரலாற்று சொல்லாடல் அவசியப்படுகிறதென நாம் குறிப்பிட்டுக் காட்டினோம். போதிய எண்ணிக்கையிலான மக்கள் அவர்களது கண்கள் காதுகளை மூடிக் கொண்டால் போதும் வரலாற்றைத் திருத்தி எழுதுவதால் எந்த பலனும் இருக்காதென்ற நம்பிக்கையில் நாம் எமது தலைகளை மண்ணுக்கள் புதைத்துக்கொள்ளவில்லை.

நமது நிலைப்பாடு பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும், தொழிலாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் கணிசமானளவிற்கு ஆர்வத்தை ஈர்த்தது. பலர் கலந்து கொண்ட பல கூட்டங்களில், நாம் ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகை குறித்தும், நாஜிக்களுக்கு மறுவாழ்வளிப்பதன் அரசியல் பாதிப்புகள் குறித்தும் எச்சரித்துள்ளோம்.

நமது விமர்சனங்களை ஒடுக்க முயன்ற பல முயற்சிகளை நாம் முறியடித்துள்ளோம். பேராசிரியர்களை விமர்சிப்பதை கைவிட்டால் தான் கூட்டம் நடத்துவதற்கு அறை வழங்கப்படும் என்று ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாகம் நிபந்தனை விதித்தபோது, நாம் அந்த தணிக்கைக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை ஒழுங்கமைத்து, மாணவர்கள் மத்தியில் பரந்த ஆதரவை வென்று, இறுதியில் எந்தவொரு நிபந்தனையும் இன்றி ஓர் அறையைப் பெற்றோம்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர், “கல்வித்தகைமையா அல்லது போர் பிரச்சாரமா?” என்ற தலைப்பில், நாம், ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் வரலாற்றை திருத்தி எழுதும் முயற்சிகளையும், ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகை குறித்தும், அதையடுத்த சர்ச்சைகளை குறித்தும் விவரித்து ஒரு நூல் வெளியிட்டோம்.

சர்வதேச சமத்துவத்திற்கான இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புக்கான (IYSSE) ஆதரவு தொடர்ந்து வளர்ந்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக —ஒவ்வொரு முறையும் அதற்கு முந்தைய ஆண்டை விட சிறந்த வாக்குகளுடன்— நாம் மாணவர் நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். இந்தாண்டு, கிறிஸ்துவ ஜனநாயக யூனியன், பசுமை கட்சி மற்றும் இடது கட்சியின் மாணவர் குழுக்களை விட IYSSE அதிக வாக்குகளை பெற்றது. நாம் வலதுசாரி பேராசிரியர்களை விமர்சிக்கும் உரிமையைப் பாதுகாக்கும் முக்கிய தீர்மானங்களைக் கொண்டு வந்ததுடன், மாணவர் நாடாளுமன்றத்தில் ஆதரவையும் வென்றெடுத்தோம்.

இதற்கிடையே, ஏனைய ஜேர்மன் பல்கலைக்கழகங்களின் மாணவர்களும் நமது விமர்சனங்களை முன்னெடுக்கின்றனர். பேர்லினில் உள்ள மற்றும் பேர்லினுக்கு வெளியே உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் மாணவர் அமைப்புகள் IYSSE இன் வேலைகளுக்கு அவர்களது ஆதரவை தெரிவித்துள்ளதுடன், பார்பெரோவ்ஸ்கியை கண்டித்துள்ளனர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தாக்குதல்களுக்கு எதிராக நம்மை ஆதரிக்கின்றனர். பல்கலைக்கழக நிர்வாகம் பார்பெரோவ்ஸ்கிக்கான அதன் ஆதரவை பகிரங்கமாக திரும்ப பெற வேண்டுமென்றும், அவரது வலதுசாரி நிலைப்பாடுகளுக்கு எதிராக ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டுமென்றும் அழைப்புவிடுத்து, மூன்று நாட்களுக்கு முன்னர், ஹம்போல்ட் பல்கலைக்கழக மாணவர் நாடாளுமன்றம் பெரும் பெரும்பான்மையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. 

ஹம்போல்ட் பல்கலைகழகத்தில் நடந்த சம்பவங்கள் முக்கிய அரசியல் படிப்பினைகளை கொண்டுள்ளன. ஒரு நுண்நோக்கியின் கீழ் வைத்து பார்ப்பதைப் போல நுண்மையாக பார்த்தால், ஒவ்வொரு நாட்டிலும் இன்று முதலாளித்துவ சமூகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஒருவரால் புரிந்து கொள்ள முடியும்: ஒரு சிறிய ஆனால் செல்வாக்கான ஒரு உயர்மட்ட அடுக்கு, பரந்த பெரும்பான்மை மக்களுக்கு எதிராக —அதாவது தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக— போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக எதிர்புரட்சிக்கான அதன் திட்டநிரலைத் திணிக்க முயன்று கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்விற்கு பெரும் எதிர்ப்பு உள்ளது. ஆனால் அது இப்போதிருக்கும் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்குள் எந்த வெளிப்பாட்டையும் காணவில்லை. IYSSE இன் தலையீடு இந்த எதிர்ப்பை மேற்புறத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், அதற்கு ஒரு அரசியல் முன்னோக்கையும் வழங்குகிறது. நம்மை மிகவும் தீர்மானகரமாக எதிர்க்கும் எதிர்ப்பாளர்களும் கூட இதை உணர்கிறார்கள். IYSSE மற்றும் WSWS மீதான ஒரு கீழ்தரமான தாக்குதலில், Frankfurter Allgemeine Zeitung, எமது கருத்துகளுக்கு "ஒரு மிகவும் பலமான தாக்கம்" இருப்பதாக ஒப்புக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டது.

1930 களின் விடயங்களைப் போலவே, இன்றும் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மட்டுமே நிஜமான போர் அபாயத்தை புரிந்து கொண்டுள்ளனர், அதற்கு எதிராக எச்சரிக்கின்றனர் மற்றும் போரை எதிர்க்க ஒரு புரட்சிகர முன்னோக்கை உருவாக்கி அளித்துள்ளனர். சோசலிச தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் புதிய தலைமுறைக்கு அரசியல் கல்வியூட்டுவதில், வரலாற்று உண்மையைப் பாதுகாப்பது ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது. இந்த உரையைக் கேட்டுக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த போராட்டத்திலிருந்து படிப்பினைகளைப் பெறவும் மற்றும் நமது கட்சியைக் கட்டமைப்பதில் பங்கெடுக்குமாறும் நாம் அழைப்பு விடுக்கிறோம்.