ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The airstrikes in Syria and the war drive of American imperialism

சிரியாவில் வான்வழி தாக்குதல்களும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் உந்துதலும்

Joseph Kishore
10 April 2017

சிரியா மீதான கடந்த வார கப்பல்தள ஏவுகணை தாக்குதலுக்கு பின்னர், இராணுவ தீவிரப்படுத்தலுக்கான இடைவிடாத தர்க்கமே வாஷிங்டன் முடிவுகளை உந்தி வருகின்றது. இந்நடவடிக்கையை அடுத்து சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத் ஐ பதவியிலிருந்து கவிழ்க்கவும் மற்றும் ரஷ்யாவுடனான மோதலை தீவிரப்படுத்தவும் "பரந்த மூலோபாயம்" ஒன்று கொண்டு வரப்பட வேண்டுமென அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும் ஊடகங்களும் கோரி வருகின்றன.

ஐக்கிய நாடுகளுக்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் தூதர் நிக்கி ஹேலி ஞாயிறன்று அறிவிக்கையில், “[சிரியாவில்] ஆட்சி மாற்றம் நடக்கவிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்,” என்றார். அப்பெண்மணி கூறுகையில், ரஷ்யா மற்றும் ஈரானைப் பொறுத்த வரையில், “நாங்கள் அவர்களை வெளியே இருக்குமாறு கூறி வருகிறோம். ஆனால் இந்த புள்ளியில் மேசையில் எதுவும் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நான் கருதவில்லை… எப்போது செயல்பட வேண்டுமோ அப்போது அமெரிக்கா செயல்படுவதை நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள்,” என்றார்.

குடியரசு கட்சி செனட்டர் லிண்ட்செ கிரஹாம், சிரியாவுக்கு "ஐந்தில் இருந்து ஆறாயிரம் வரையிலான" அமெரிக்க துருப்புகளை அனுப்பவும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடையாணைகளுக்கும் ஞாயிறன்று அழைப்புவிடுத்தார். “நீங்கள் அமெரிக்காவின் விரோதியாக இருந்து, ஏதேனும் ஒரு நாள் ட்ரம்ப்  செய்யக்கூடியது குறித்து நீங்கள் கவலைப்படவில்லையென்றால், நீங்கள் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறீர்கள்,” அது போலத்தான் அசாத், “மிகப்பெரும் தவறை" செய்து கொண்டிருக்கிறார்.

ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினர் இருதரப்பிலிருந்தும் ஒருமித்து அழைப்பு வருகிறது. “அவர்கள் குற்றத்திற்கு உடந்தையானவர்கள்,” என்று குடியரசு கட்சி செனட்டர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். “விளாடிமீர் புட்டின் ஒரு போர் குற்றவாளி, அவர் இன்னொரு போர் குற்றவாளிக்கு உதவி வருகிறார்,” என்றார். அவரது சக கூட்டாளியான ஜனநாயகக் கட்சியின் பென் கார்டின் அறிவிக்கையில், ஐ.நா. பாதுகாப்பு அவை போர் குற்றங்களுக்காக அசாத் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் இருவருக்கும் தண்டனை வழங்க ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்,” என்றார்.

இதுபோன்ற வாய்சவடால்கள் போருக்கான மொழியாகும். ஏதேனும் ஒரு வெளிநாட்டு தலைவரை ஒரு போர் குற்றவாளியாக குற்றஞ்சாட்டுவது இராணுவ நடவடிக்கைக்காக செய்யப்படும் வழமையான வெள்ளோட்டமாகும்.

இந்த எரிச்சலூட்டும் ஆத்திரமூட்டல்களில் அமெரிக்கா மட்டும் தனியாக இல்லை. ஐரோப்பாவில் உள்ள சகல ஏகாதிபத்திய சக்திகளும் அமெரிக்க தாக்குதல்களுக்கு ஆதரவாக அணி திரண்டுள்ளன. பிரிட்டிஷ் பாதுகாப்பு செயலர் மைக்கல் ஃபாலன் ஞாயிறன்று, ரஷ்யா "கடந்த வாரம் ஒவ்வொருவர் கொல்லப்படுவதற்கும் பினாமியாக பொறுப்பாகிறது" என்று எழுதினார், ஆனால் இதுமாதிரியான வாதங்கள் கடந்த மாதம் மொசூலில் அமெரிக்கா நடத்திய படுகொலை சம்பந்தமாக எதுவும் வெளியாவதில்லை.

இன்று இத்தாலியில் தொடங்கவிருக்கின்ற ஜி7 வெளியுறவுத்துறை அமைச்சர்களின் ஒரு கூட்டத்தில் வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சன் பங்கெடுக்கிறார், இக்கூட்டத்தில் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் சிரியாவிலிருந்து மாஸ்கோ அதன் அனைத்து துருப்புகளையும் திரும்ப பெறவும் மற்றும் அசாத் அரசாங்கத்திற்கு ஆதரவை நிறுத்துவதற்கும் இறுதி எச்சரிக்கை விடுப்பது குறித்து விவாதிக்க உள்ளனர். இந்த கோரிக்கையை ரில்லர்சன் மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் உடனான ஒரு நேருக்கு நேர் சந்திப்பில் மீண்டும் கூறுவார் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன, "போர் குற்றங்களில்" ரஷ்யா உடந்தையாய் இருப்பதாகவும் செய்திகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இதுபோன்ற நிலைப்பாடுகளின் விளைவுகளைக் குறிப்பிடும் ஒருசில கருத்துரைகளில் ஒன்றில், ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழக பேராசிரியர் Colin Kahl ஞாயிறன்று வாஷிங்டன் போஸ்டில் எழுதுகையில், ஆட்சி மாற்றம் மற்றும் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதி ஆகியவற்றிற்கான கோரிக்கைகளுடன் அமெரிக்கா தீவிரப்படுத்தும் பாதையில் சென்றால், “நிஜமாகவே மாஸ்கோ உடன் ஒரு இராணுவ மோதலுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளது,” என்று குறிப்பிட்டார். இருந்தாலும் ட்ரம்ப் நிர்வாகம், ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன், துல்லியமாக இந்த பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது.

சிரியாவில் இருந்து வெளியேறுவதற்கான ஒரு இறுதி எச்சரிக்கையை ரஷ்யா நிராகரித்தால் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் எவ்வாறு விடையிறுப்பார்கள்? அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் ஊடகங்களது விஷமப் பிரச்சாரத்திற்கு இடையே, ரஷ்யாவுடனான போரில் எத்தனை நூறு மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள் என்றோ அல்லது ஒரு அணுஆயுத மோதலுக்குப் பின்னர் அங்கே ஒரு வழமையான உலகம் இருக்குமா என்றோ யாரும் கேட்பதில்லை.

இவை எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கையில், அமெரிக்கா ஆசியாவிலும் அதன் போர் அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்தி வருகிறது. ட்ரம்ப் நிர்வாகம் வாரயிறுதி வாக்கில் கொரிய தீபகற்பத்திற்கு போர்க்கப்பல்களை அனுப்பியது, இதற்கிடையே வெள்ளை மாளிகை வட கொரிய அரசாங்கத்திற்கு எதிராக "படுகொலை" தாக்குதல்களையும் மற்றும் ஏனைய இராணுவ நடவடிக்கைகளையும் பரிசீலித்து வருவதாக ஊடக செய்திகள் அறிவிக்கின்றன—இது இவ்வாரம் வெகு விரைவிலேயே நடக்கக்கூடும்.

ஏகாதிபத்திய வெளியுறவு கொள்கையின் அடாவடித்தனத்தின் மட்டம் ஒரு புறநிலை அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இரண்டு ஒன்றோடொன்று தொடர்புபட்ட காரணிகள் அதை உந்திச் செல்கின்றன.

முதலாவதாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைக்கு பெரிதும் இப்போது கட்டளையிட்டு வரும் இராணுவத்தின் பலமான பிரிவுகள், 2013 இல் சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிக்கப்படுவதை மேற்பார்வையிட ரஷ்யாவுடன் ஓர் உடன்படிக்கை செய்து, சிரியா மீதான போரிலிருந்து ஒபாமா நிர்வாகம் பின்வாங்கியதை, என்ன விலை கொடுத்தாவது மாற்ற தீர்மானகரமாக உள்ளன. இதை அவர்கள் மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் மட்டுமல்ல, மாறாக உலகெங்கிலும் அமெரிக்க மேலாதிக்கத்தைப் பேணுவதற்கு அதிமுக்கியமானதாக பார்க்கிறார்கள்.

குடியரசு கட்சி செனட்டர் டோம் காட்டன் ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸில் எழுதுகையில், சிரியா மீதான தாக்குதல்கள் மூலமாக "உலகில் மிக மோசமாக பாதிப்படைந்துள்ள நம் மீதான நம்பகத்தன்மையை மீட்டமைக்க நீண்டகாலம் ஆகி உள்ளது,” என்றார். காட்டன் அறிவித்தார்: “ஒரு இரவில், ஜனாதிபதி ட்ரம்ப் விடயங்களை தலைகீழாக ஆக்கி உள்ளார். அமெரிக்கா ஓர் எச்சரிகை விடுக்கிறது என்றால், அது அதன் வார்த்தைகளைக் காப்பாற்றும் என்பதை அவர் உலகிற்குக் காட்டி உள்ளார்… நம் மீதான நம்பகத்தன்மை மீட்டமைக்கப்பட்டுள்ளதோடு, அமெரிக்கா உலகெங்கிலும் மீண்டும் தாக்குதலில் இறங்க முடியும்,” என்றார்.

இந்த இரசாயன ஆயுத தாக்குதல் என்பது தலையீட்டுக்காக உருவாக்கப்பட்ட இன்னொரு பாசாங்குத்தனம் என்பதை காட்டனின் வாதங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் மீண்டும், போர் குற்றங்கள் நடத்தப்பட்டதாக கூறப்படும் ஏகாதிபத்திய குற்றச்சாட்டுக்கள், ஒரு நவ-காலனித்துவ மற்றும் சூறையாடும் திட்டநிரலை நியாயப்படுத்த முற்றிலும் இட்டுக்கட்டப்பட்டதாக பின்னர் நிரூபணமாகி உள்ளன.

அசாத் அவரது பின்வாங்கி செல்லும் எதிரிகளை இரசாயன ஆயுதங்களைக் கொண்டு தாக்குவதால், தாக்குதலுக்கு உள்ளாகி உள்ள அசாத்தின் சிரிய அரசாங்க படைகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அமெரிக்காவிற்கு வெளிப்படையாகவே அரசியல் உள்நோக்கங்கள் இருந்தன. சிஐஏ மற்றும் இராணுவம் புவிசார் மூலோபாய அக்கறைகளின் அடிப்படையில் சிரிய அரசாங்கம் மீது விமானத் தாக்குதல்களை தொடங்குவதற்கு காரணத்தைத் தேடி வந்தன.

இப்போது அவர்கள் அதை செய்துள்ளனர், “அமெரிக்கா நிகரில்லா பலத்தைக் கொண்டது என்பது மட்டுமல்ல, மாறாக நமது நலன்கள், அபிலாஷைகள் மற்றும் நேச நாடுகளை பாதுகாக்க அது மீண்டுமொருமுறை நமது பலத்தைப் பிரயோகிக்கும் என்பது நண்பர்களுக்கும் சரி எதிரிகளுக்கும் சரி நினைவூட்டப்பட்டுள்ளது,” என்று காட்டன் பெருமை பீற்றினார்.

இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கான இரண்டாவது காரணம், ஐரோப்பா எங்கிலும் மற்றும் அமெரிக்காவிற்குள்ளும் ஆழமடைந்து வரும் நெருக்கடி மற்றும் ஸ்திரமின்மை மீதான கவலைகளோடு சம்பந்தப்பட்டதாகும். பிரிட்டன் வெளியேறுவதை அடுத்து தேசியவாத இயக்கங்களின் வளர்ச்சிக்கு இடையே ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உடைந்து வருகின்றன.

ரஷ்யாவிற்கு எதிரான சண்டை ஒரு "ஐக்கியப்படுத்தும்" கருப்பொருளாக ஆகி இருக்கிறது. டெல்வேர் இன் ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் கூன்ஸ் கடந்த வாரம் புரூகிங்ஸ் பயிலகத்தில் அவரது கருத்துக்களில் இதை வெளிப்படுத்தினார். “ரஷ்யாவுடன் நாம் போரில் இருக்கிறோமா?” என்ற தலைப்பில் கூன்ஸ் பேசுகையில், ரஷ்ய நடவடிக்கைகளின் காரணமாக “அமெரிக்க தலைமையிலான சர்வதேச ஒழுங்கமைப்பு" அச்சுறுத்தலில் உள்ளது, "குறுகிய சிந்தனை தேசியவாதத்தை ஆதரிக்கின்ற மற்றும் ஓர் ஒத்திசைவான ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மற்றும் பலமான நேட்டோவிற்கும் தனது எதிர்ப்பை பகிர்ந்து கொள்கின்ற ஐரோப்பிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் இருந்து" ரஷ்யா "நேரடியாக பலனடைகிறது" என்று அறிவித்தார்.

கூன்ஸ் கருத்துப்படி, “விளாடிமீர் புட்டின் ஆட்சி 1950 இல் சோவியத் ஒன்றியம் என்ன செய்ய இருந்ததோ அதை இன்று சாதித்து வருகிறது… அது அமெரிக்காவை தனிமைப்படுத்தி, மேற்கின் ஐக்கியத்தை அழித்து வருகிறது மற்றும் நமது அரசாங்கங்களில் இருந்து மேற்கத்திய மக்களை அன்னியப்படுத்தி வருகிறது.” அது "நமது அமைப்புகளில் அமெரிக்கா மீதான நம்பிக்கையை, ஒருவர் மீதான ஒருவரது நம்பிக்கையை, மற்றும் நமது ஜனநாயகம் மீதான நம்பகத்தன்மையையே பலவீனப்படுத்துகிறது,” என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவை மற்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்குள் நிலவும் சமூக அதிருப்தியை ரஷ்யாவின் புட்டின் அரசாங்க நடவடிக்கைகள் மீது சாட்டுவதற்கான கூனின் முயற்சி முற்றிலும் அபத்தமாக உள்ளது. வீழ்ச்சி அடைந்து வரும் வாழ்க்கைத் தரங்களால் பாதிக்கப்பட்டுள்ள பத்து மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களுக்கு, அவர்களது அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புமுறை தோல்வியடைந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள புட்டினின் அவசியம் கிடையாது.

அமெரிக்காவிற்குள், ஜனநாயகக் கட்சி —இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளுடன் சேர்ந்து— ஐரோப்பாவை அணி சேர்த்து வைக்கவும் மற்றும் அமெரிக்காவுடன் சேர்ந்து உள்நாட்டு சமூக பதட்டங்களை இராணுவ மோதலை நோக்கி திசைதிருப்பவும் ரஷ்ய-விரோத விஷமப் பிரச்சாரத்தை தூண்டிவிடுவதில் முக்கிய பாத்திரம் வகித்து வருகிறது. ஜனநாயக கட்சியினர் ட்ரம்ப் நிர்வாகத்தின் உள்நாட்டு கொள்கைகள் மீதான அவர்களது அவ்வப்போதைய விமர்சனத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டனர். கடந்த வார சிரிய விமானத் தாக்குதல்களுக்கு பின்னர் அவர்கள் வெள்ளை மாளிகையை புகழ்ந்துரைக்க விரைந்ததோடு, அசாத் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக இன்னும் இசைவான கொள்கையை மட்டுமே கோரி வருகின்றனர்.

“ஒட்டுமொத்த அமெரிக்க உளவுத்துறை சமூகமும், ரஷ்யா நமது தேர்தல் நடைமுறைகளில் குறுக்கிட்டது என்பதை தெளிவுபடுத்திய" பின்னரும் கூட, “அமெரிக்கர்களில் பாதி மக்கள் மட்டுமே உண்மையில் நமது ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா குறுக்கிட்டதாக நம்புகின்றனர்" என்ற சமீபத்திய கருத்துக்கணிப்புகளின் உண்மையால் அதிர்ந்து போய் கூன்ஸ் கவலை கொண்டார். காங்கிரஸ் "ரஷ்யா உடனான நமது மோதலின் இயல்பை புரிந்து கொண்டு, அந்த புரிதலை அமெரிக்க மக்களும் பகிர்ந்து கொள்வதை உறுதிப்படுத்த" வேண்டும் என்றார்.

அமெரிக்க மக்கள் "அந்த புரிதலை பகிர்ந்து" கொள்ள வில்லை என்றால்? பின் "எதிரி பிரச்சாரம்" மற்றும் சட்டவிரோதத்தன்மை தான் விளைவு என்பது தெளிவாகிறது.

அமெரிக்க ஆளும் வர்க்கம் பாரிய மக்கள் நனவைக் குறித்து சரியாகவே கவலை கொண்டுள்ளது. ஏகாதிபத்திய போரை உருவாக்கும் உலக முதலாளித்துவத்தின் அதே முரண்பாடுகள், உலகெங்கிலும் வர்க்க போராட்டத்தின் வளர்ச்சி என்ற வடிவத்தில், சோசலிச புரட்சிக்கான புறநிலை அடித்தளத்தையும் உருவாக்குகின்றன. அமெரிக்காவில், ரஷ்யாவிற்கு எதிரான போர் உந்துதலின் விளைவுகள் அதிர்ச்சி மற்றும் ஆத்திரத்தை உருவாக்கும். அங்கே தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த பிரிவுகளின் அடியில் ஓர் ஆழ்ந்த ஐயுறவுவாதமும், அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களின் மீது வெறுப்பும் உள்ளது.

ஆனால் மிகப்பெரும் அபாயம் என்னவென்றால், எதிர்ப்பு, அரசியல்ரீதியில் ஒழுங்கமைக்கப்படவில்லை. பிரளயகரமான விளைவுகளைக் குறித்து பெருந்திரளான மக்களுக்கு தெரியாதவாறு, திரைக்குப் பின்னால் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஊடகங்களில், அரசாங்க பிரச்சார வாதங்களை ஏதேனும் விதத்தில் விமர்சனபூர்வமாக ஆராய்வது என்பது முற்றிலுமாக இல்லை. உத்தியோகபூர்வ அரசியலின் ஒட்டுமொத்த தொகுப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பேரழிவுகரமான போர் கொள்கையை ஆதரிக்கின்றன.

சிரியா மீதான அமெரிக்க தாக்குதல்களின் உடனடி விளைவு என்னவாக இருந்தாலும், சம்பவங்கள் இடைவிடாது உலக போரை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த யதார்த்தம், ஏகாதிபத்தியம் மற்றும் தேசிய-அரசு பிளவுகளை முடிவுக்குக் கொண்டு வந்து சோசலிச அடித்தளங்களின் மீது சமூகத்தை ஒழுங்கமைக்க, அரசியல்ரீதியில் நனவுபூர்வமான தொழிலாள வர்க்கத்தின் ஒரு தலையீட்டுக்காக சர்வதேசரீதியில் போராடுவதில் உயிரூட்டப்பட வேண்டும்.