ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Is the US preparing for war against North Korea?

அமெரிக்கா வட கொரியாவுக்கு எதிராக போருக்கு தயாரித்துக் கொண்டிருக்கிறதா?

By Peter Symonds,
13 March 2017

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் ஒரு அபாயகரமான மோதல் துரிதமாக எழுந்து கொண்டிருக்கிறது. இது வட கிழக்கு ஆசியாவையும் உலகின் எஞ்சிய பகுதிகளையும் அணுஆயுத வல்லமை கொண்ட சக்திகளுக்கு இடையிலான மோதலில் அமிழ்த்தும் சாத்தியம் கொண்டதாக இருக்கிறது.

வடகொரிய ஆட்சியால் முன்நிறுத்தப்படும் அச்சுறுத்தலை ஊதிப்பெருக்கும் வகையில் அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களில் சரமாரியான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதற்கு மத்தியில், ட்ரம்ப் நிர்வாகமானது வட கொரியாவை நிராயுதபாணியாக்கவும் அதனை கீழ்ப்படியச் செய்யவும் “அத்தனை தெரிவுகளை”யும் செயலூக்கத்துடன் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது.

வடகொரியா பிப்ரவரியில் ஒரு புதிய இடைத் தூர ஏவுகணை ஒன்றை சோதித்ததற்குப் பின்னர், சென்ற வாரத்தில் நான்கு மத்திய-தூர பல்லிஸ்டிக் ஏவுகணைகளை அது சோதித்தது தான் உடனடிச் சாக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆயினும், அமெரிக்க இராணுவ அச்சுறுத்தலின் முரசு கொட்டப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே, அமெரிக்க கண்டத்தை தாக்கும் திறன்படைத்த கண்டம் விட்டுக் கண்டம் தாவி வெடிக்கும் ஏவுகணையை (ICBM) வடகொரியா கட்டுவதைத் தடுக்கும் நடவடிக்கை குறித்து அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை வட்டாரங்கள் மற்றும் இராணுவ வட்டாரங்களில் உயர்நிலை விவாதங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன.

ியூயோர்க் டைம்ஸ் செய்திப்படி, அப்போது ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா, வடகொரியாவுக்கு எதிரான அதி தீவிர நடவடிக்கைகளை பரிசீலித்து வந்திருந்தார் என்பதோடு, ஜனாதிபதியாக தேர்வாகியிருந்த டொனால்ட் ட்ரம்ப் வடகொரியாவை தனது உச்சமட்ட பாதுகாப்பு முன்னுரிமையில் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். ட்ரம்ப் நிர்வாகம் ஆட்சியில் அமர்ந்த நாள் முதலாகவே வட கொரியா தொடர்பான அமெரிக்க மூலோபாயத்தின் மீது உயர்மட்ட திறனாய்வை நடத்தி வந்திருக்கிறது என்பதோடு வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் கூறியது போல, “ஆட்சி மாற்றம்” மற்றும் வட கொரியாவின் அணுஆயுத அமைவிடங்கள் மற்றும் இராணுவ கிடங்குகள் மீதான இராணுவத் தாக்குதல்கள் போன்ற “பிரதான வழிவகைகளுக்கு நன்கு வெளியிலமைபவை” உள்ளிட்ட ஒவ்வொரு தெரிவையும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது.

”வட கொரியாவில் அதிகரிக்கும் பதட்டங்கள்” என்ற தலைப்பில் சென்ற வாரத்தில் நியூயோர்க் டைம்ஸில் வெளியான கவலை தொனிக்கும் தலையங்கம் ஒன்று, வடகிழக்கு ஆசியாவில் போர் வெடிப்பதன் அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டியது. “கொதிக்கத் தொடங்கும் இந்த நெருக்கடியை திரு.ட்ரம்ப் எப்படி கையாள எண்ணம் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகவில்லை, ஆயினும் மூர்க்கமாய் பதிலிறுப்பதற்கான ஒரு விருப்பத்தை அவர் காட்டியிருக்கிறார்” என்று அந்த செய்தித்தாள் எழுதியது. “திங்களன்று, வெள்ளை மாளிகை ஏவுகணை சோதனைகளை கண்டனம் செய்ததோடு ‘மிக மோசமான பின்விளைவுகள்’ குறித்தும் எச்சரித்தது.”

வடகொரியாவின் ஏவுகணை அமைப்புக்கு எதிராக ஒபாமா நிர்வாகம் ஒரு இணைய மற்றும் மின்னணுப் போரில் ஈடுபட்டு வந்திருந்தது என்பதை சுட்டிக்காட்டிய அந்தத் தலையங்கம் தொடர்ந்து எழுதியது: “சில வகை இராணுவ நடவடிக்கைகள் -இவை ஏவுகணை சோதனைத் தளங்கள் மீது இருக்கும் என்று அனுமானிக்கலாம்- மற்றும் சீனாவை ஆதரவை துண்டிக்கச் சொல்லி தொடர்ந்து நெருக்குவது ஆகியவையும் மற்ற தெரிவுகளில் இடம்பெறும். மிக அபாயகரமான யோசனையாக தென்கொரியாவுக்குள் மீண்டும் அணுஆயுதங்களை அறிமுகம் செய்வது குறித்தும் ட்ரம்ப் நிர்வாகம் விவாதித்திருக்கிறது.”

சீன அரசாங்கம், அதன் வாசலில் அதன் கூட்டாளி வடகொரியாவுக்கு எதிராய் ஒரு போர் நடக்கக் கூடிய சாத்தியம் குறித்து கடுமையாக கவலை கொண்டிருக்கிறது. அசாதாரணமான அப்பட்டமான மொழிநடையில், சீனாவின் வெளியுறவு அமைச்சரான வாங் யீ, அமெரிக்காவும் வட கொரியாவும் “எதிரெதிரே அதிவேகத்தில் வரும் இரண்டு இரயில்கள் இரண்டுமே வழிவிட விருப்பம் இல்லாமல் முன்னேறி வருவதைப் போன்று” இருப்பதாக எச்சரிக்கை செய்தார். ”இரண்டையும் நிறுத்திவைப்பதை” - வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுசக்தி வேலைத்திட்டங்களை மற்றும் தென்கொரியாவில் நடைபெற்று வரும் பாரிய அமெரிக்க போர் ஒத்திகைகளை- பேச்சுவார்த்தைகளை புதுப்பிப்பதற்கான அடிப்படையாக சீனா யோசனை வைத்ததை ட்ரம்ப் நிர்வாகம் திட்டவட்டமாய் நிராகரித்து விட்டது.

பேச்சுவார்த்தைகளை நிராகரித்ததன் மூலமாக, வட கொரியாவுடன் மட்டுமல்லாது சீனாவுடனும் மோதலுக்கான பாதையை வெள்ளை மாளிகை அமைத்திருக்கிறது. வட கொரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு தயாரிப்பு செய்வதன் மூலமாக, அமெரிக்க உலக ஏகாதிபத்தியத்திற்கான மிக உடனடி சவாலாக அது அடையாளம் கண்டிருக்கும் சீனாவிற்கு எதிராகவும் அது அச்சுறுத்தலை முன்நிறுத்துகிறது.

ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போர் நடவடிக்கைகளுக்கும் தென் சீனக் கடலில் சீனத் தீவுத்திட்டுகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கும் அச்சுறுத்தியிருக்கிறது. தென் கொரியாவில் வெடிப்பு-ஏவுகணை-எதிர்ப்பு பேட்டரியான Terminal High Altitude Area Defence (THAAD) ஐ அமெரிக்கா நிலைநிறுத்துவது - இந்த வேலை சென்ற வாரத்தில் தொடங்கியது- சீனா அல்லது ரஷ்யாவுடன் அணுஆயுதப் போருக்கு வழிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஏவுகணை-எதிர்ப்பு அமைப்புமுறையின் ஒரு பகுதியாகும்.

வட கொரியா மீதான ஒரு வலிந்த தாக்குதலானது கணக்கிடமுடியாத பின்விளைவுகளைக் கொண்ட ஒரு போர் நடவடிக்கையாக இருக்கும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மற்றும் அதன் கூட்டாளிகளின் இராணுவ வலிமையின் அருகில் நிற்க முடியாது என்றாலும் கூட, வட கொரியா ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிப்பாய்களைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்படுகின்ற ஒரு மிகப்பெரும் இராணுவத்தைக் கொண்டிருக்கிறது, பாரம்பரிய ஏவுகணைகள் மற்றும் ஆட்டிலறியின் ஒரு பெரும் வரிசையையும் -இவற்றின் பெரும்பகுதி கடுமையாக அரணேற்படுத்தப்பட்டுள்ள இராணுவமயமற்ற மண்டலத்தைச் சுற்றிலும் நிறுவப்பட்டுள்ளது என்பதோடு மக்கள்தொகை அடர்த்திமிக்க தென்கொரிய தலைநகரான சியோலின் மீது தாக்குதல் நடத்தும் திறன் படைத்தவை- கொண்டிருக்கிறது.

போர் ஒன்று வந்தால், அணு ஆயுதப் பயன்பாடுகள் இல்லையென்றாலே கூட, கொரிய தீபகற்பத்தில் மட்டுமே அது மிகப்பெரும் அழிவுகளை உண்டாக்கும். 1994 இல் கிளிண்டன் நிர்வாகம் வடகொரியாவின் அணுசக்தி நிறுவல்கள் மீது தாக்குதல் நடத்தும் விளிம்பு வரை சென்றது, ஆனால் 300,000 முதல் 500,000 வரை தென்கொரிய மற்றும் அமெரிக்க இராணுவ உயிரிழப்பு நேரும் என்ற ஒரு நிதான மதிப்பீட்டை பென்டகன் வழங்கியதன் பின்னர் கடைசி நிமிடத்தில் அது பின்வாங்கி விட்டது.

இப்போது வரக் கூடிய ஒரு போர் பாரம்பரிய ஆயுதங்களுடன் மட்டுப்படுவதாகவோ அல்லது கொரிய தீபகற்பத்துடன் மட்டுப்படுவதோ சாத்தியமில்லாததாகும். இன்னும் விரிந்தவொரு மோதலுக்காக பென்டகன் செயலூக்கத்துடன் திட்டமிட்டு வருகிறது. 2015 டிசம்பரில், அமெரிக்க கூட்டுப்படை படைத்தலைவரான ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்ட் கூறுகையில், வடகொரியாவுடனான எந்த மோதலும் தவிர்க்கமுடியாமல் “பிராந்தியம் கடந்ததாக, பல களத்திலானதாக, பல செயல்பாட்டுமுறைகளுடனானதாக” - வேறு வார்த்தைகளில் சொன்னால், அத்தனை சக்திகளும் பங்குபெறுகின்ற அணு குண்டுகள் உள்ளிட்ட அத்தனை ஆயுதங்களும் பயன்படுத்தப்படுகின்ற ஒரு உலகப் போராக- ஆகும் என்றார்.

போரின் உடனடி அபாயமானது சம்பந்தப்பட்ட அத்தனை அரசாங்கங்களின் கூர்மையான அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளால் -இதன் உச்சமாய் சென்ற வெள்ளிக்கிழமையன்று தென்கொரிய ஜனாதிபதி பார்க் ஜியூன்-ஹை மீதான கண்டனத்தீர்மானமும் அவரது பதவியகற்றமும் இருந்தது- மேலும் சிக்கலாக்கப்பட்டு வருகிறது. ஒரு முன்கூட்டிய தேர்தலுக்கும் அதில் தோல்வியின் வாய்ப்புக்கும் முகம்கொடுக்கும் நிலையில் ஆளும் வலது-சாரி சுதந்திர கொரியா கட்சி சொந்த நாட்டின் அரசியல் நெருக்கடிகளில் இருந்து திசைதிருப்புவதற்கு வடகொரியாவுடனான போர் பதட்டங்களை விசிறி விட திட்டவட்டமான முகாந்திரம் இருக்கிறது.

மேலும், இப்போது நடைபெற்று வருகின்ற அமெரிக்க-தென்கொரிய இராணுவ ஒத்திகைகள் -இதில் மிக நவீன அமெரிக்க வான் மற்றும் கடற்படையினர் உள்ளிட 320,000க்கும் அதிகமான இராணுவத்தினர் பங்குபெற்றுள்ளனர்- வட கொரியாவைத் தாக்குவதற்கான ஒரு ஆகச்சிறந்த சந்தர்ப்பத்தை வழங்குகின்றன. சென்ற ஆண்டு நிலவரப்படி, வடகொரியாவுடனான ஒரு போருக்கான ஒத்திகையாக கூறத்தக்க இந்த வருடாந்தர போர்ப் பயிற்சிகள், வட கொரியாவின் இராணுவத் தளங்கள் மீது வலிந்து தாக்குதல் நடத்துவது மற்றும் அந்நாட்டின் தலைமையைப் படுகொலை செய்வதற்கு “தலைசீவும் திடீர்தாக்குதல்”களை நடத்துவது ஆகியவை உள்ளிட்ட மூர்க்கமான புதிய செயல்பாட்டுத் திட்டங்களின் அடிப்படையில் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன.

ஒருபக்கம் அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டிற்கு எதிர்பார்ப்பதும், மறுபக்கத்தில் ஒரு ஆயுதப் போட்டியில் ஈடுபடுவதுமாய் -இது போர் அபாயத்தை அதிகப்படுத்தவே செய்கிறது- அமெரிக்க மிரட்டல்களுக்கு சீனா மற்றும் வட கொரியா இரண்டு அரசாங்கங்களின் பதிலிறுப்புமே முற்றிலும் பிற்போக்கானதாய் இருக்கிறது. இந்த இரண்டு ஆட்சிகளுக்கும் சோசலிசத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவை தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்கவும் இல்லை. தேசியவாதத்தை விசிறி விடுகின்ற அவற்றின் நடவடிக்கைகள் ஏகாதிபத்தியப் போருக்கு எதிராய் ஆசியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தொழிலாளர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்கு முட்டுக்கட்டையாகவே செயல்படுகின்றன.

இந்த அதி பதட்ட நிலைமையில் மிக ஸ்திரம்குலைக்கும் காரணியாக அமெரிக்கா இருக்கிறது, அங்கு அரசியல் ஸ்தாபகமும் அரசு எந்திரமும் வெளியுறவுக் கொள்கை மற்றும் ஊடுருவல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு கன்னை யுத்தத்தில் இறங்கியிருக்கின்றன. உள்முகமான சமூக மற்றும் அரசியல் பதட்டங்களை பொதுவான “எதிரி”க்கு எதிராய் திருப்புவதற்கான முயற்சியில் ட்ரம்ப் நிர்வாகம் வடகொரியாவுடன் போரில் இறங்குவதை நோக்கித் திரும்பக் கூடிய அபாயம் மிக நிஜமானதாய் இருக்கிறது.

ஒரு பேரழிவுகரமான போரின் சாத்தியம் தனிநபர்கள் அல்லது கட்சிகளில் இருந்து எழுவதில்லை. சர்வதேச முதலாளித்துவத்தின் ஆழமடைந்து செல்கின்ற நெருக்கடியினாலும் உலகப் பொருளாதாரத்திற்கும் உலகம் போட்டி தேசிய அரசுகளாய் பிளவுபட்டுக் கிடப்பதற்கும் இடையிலான தீர்க்கமுடியாத முரண்பாட்டினாலுமே அது உந்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆயினும், இலாப அமைப்புமுறையின் அதே நெருக்கடி தான் தொழிலாள வர்க்கம், முதலாளித்துவம் மனிதகுலத்தை காட்டுமிராண்டித்தனத்திற்குள் அமிழ்த்தும் முன்னதாக அதற்கு ஒரு முடிவு கட்டுவதற்கான ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது என்ற, அதன் சொந்த புரட்சிகரத் தீர்வுக்காய் போராடுவதற்கான புற நிலைமைகளையும் அரசியல் அவசியத்தையும் கூட உருவாக்குகிறது.