ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Presidential front-runner Macron pledges to bring back the draft in France

ஜனாதிபதி பதவிக்கு முன்னணியில் உள்ள மாக்ரோன் பிரான்சில் கட்டாய இராணுவ சேவையை திரும்ப கொண்டு வர சூளுரைக்கிறார்

By Alex Lantier
21 March 2017

சனியன்று பாரீசில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டு மற்றும் ஆளும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) பெரும்பான்மையினரது விருப்பத்திற்குரிய ஜனாதிபதி வேட்பாளரான இமானுவெல் மாக்ரோன், கட்டாய இராணுவ சேவையை திரும்ப கொண்டு வந்து பிரெஞ்சு ஆயுதப் படைகளின் மீள்ஆயுதமயப்படுத்தலைத் தீவிரப்படுத்த சூளுரைத்தார். அவர் இலக்கு, இராணுவத்தை மிகப்பெரிய வெளிநாட்டு போர்களுக்காக மட்டுமே தயார் செய்வதல்ல, மாறாக பிரான்சிற்கு உள்ளேயே கூட பாரிய தலையீடுகளுக்காக தயார் செய்வது என்பதை மாக்ரோன் சுட்டிக்காட்டினார்.

கருத்துக்கணிப்புகளின்படி தற்போது ஜனாதிபதி தேர்தலை ஜெயிக்க கூடியவராக உள்ள இந்த வேட்பாளரது அறிக்கை, பிரான்சிலும் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும். ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட போதிய துருப்புகளை ஆயத்தப்படுத்த வேண்டி இருப்பதாக ஸ்வீடன் பகிரங்கமாக அறிவித்து அவ்விதமான சேவையை மீள்அறிமுகப்படுத்தியதற்கு வெறும் இரண்டு வாரங்களில் இது வந்துள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டு நாசகரமான உலக போர்களுக்குப் பின்னர், ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் பிரதான சக்திகளுக்கு இடையிலான ஒரு புதிய போருக்கும் மற்றும் உள்நாட்டில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான நேரடி தாக்குதலுக்கும் தயாரிப்பு செய்து வருகின்றன.

மாக்ரோன் கூறினார், “அரசியலின் சாத்தியமான ஒரு விளைபொருளாக, மீண்டும் போர் ஏற்படக்கூடிய சர்வதேச உறவுகளின் ஒரு சகாப்தத்தில் நாம் நுழைந்துள்ளோம்.” இராணுவ நடவடிக்கையை "கருதிப் பார்ப்பதற்கும், முடிவெடுப்பதற்கும் மற்றும் செயல்படுத்துவதற்கும்" உரிய சுதந்திரமான தகைமைகளைப் பிரான்ஸ் கொண்டிருக்க வேண்டுமென அவர் முறையிட்டார்.

மாக்ரோனும் மற்றும் அரசு எந்திரத்தினுள் உள்ள அவர் ஆதரவாளர்களும் திட்டமிடும் போர்களுக்குத் தயாரிப்பு செய்ய, இராணுவம் ஒட்டுமொத்தமாக ஒரே வயதினரை ஒன்றுதிரட்டும். “இராணுவம் மற்றும் தேசிய துணைஇராணுவப்படை பொலிஸின் [gendarmerie] கட்டாய தேசிய சேவை, ஒரே ஆண்டில் பிறந்த அனைத்து இளைஞர்கள் மற்றும் யுவதிகளை உள்ளடக்கி இருக்கும், அதாவது ஆண்டுக்கு சுமார் 600,000 பேரைக் கொண்டிருக்கும்,” என்று மாக்ரோன் அறிவித்தார். “ஒவ்வொருவரின் 18 வது பிறந்த தினத்தை அடுத்து, மூன்றாண்டுகளில் கட்டாய இராணுவ சேவை காலகட்டம் இருக்கும்,” என்றார்.

மனிதயினம் மிகப்பெரும் போர்களின் ஒரு சகாப்தத்திற்குள் நுழைந்து வருகிறது என்று கூறுவதன் மூலமாக மீண்டும் அந்த வரைவை கொண்டு வருவதை மாக்ரோன் நியாயப்படுத்துகிறார் என்ற உண்மையானது, மக்களை இராணுவத்திற்குள் பலவந்தப்படுத்தும் அவர் முன்மொழிவுகளுக்கு ஒரு "ஜனநாயக" மற்றும் "முற்போக்கு" மூடுதிரையை வழங்குவதற்கான அவரது சிடுமூஞ்சித்தனமான முயற்சிகளை அம்பலப்படுத்துகிறது. இது ஒரு மாதத்திற்கு மட்டுமே இருக்கும் என்றவர் அறிவித்தார்: “ஒவ்வொரு பிரெஞ்சு இளைஞரும் யுவதியும் அவரது சக குடிமக்களைச் சந்தித்து, வெவ்வேறு சமூக அடுக்குகளுடன் கலந்து பழகி, ஒரு மாதத்திற்கு குடியரசின் நல்லிணக்க அனுபவத்தைப் பெறுவார்கள்,” என்றார். ஆனால் மிகப்பெரும் போர்களுக்கான தயாரிப்புக்கு இராணுவ சேவையில் ஒரு மாதத்திற்கும் அதிகமான காலம் இருக்க வேண்டியிருக்கும்.

அந்த வரைவைச் செயல்படுத்த ஆரம்ப செலவினமாக 15 பில்லியன் யூரோ தேவைப்படும், பின்னர் அண்ணளவாக பிரான்சின் அணுஆயுத தளவாடங்களுக்கான வரவுசெலவு திட்டம் அளவிற்கு ஆண்டுதோறும் 3 பில்லியன் யூரோ செலவு பிடிக்கும் என்று பத்திரிகை செய்திகள் குறிப்பிட்டன. மாக்ரோன் ஏற்கனவே பத்து பில்லியன் கணக்கில் சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க திட்டமிட்டு வருகிறார். அவர் திட்டமிடும் இராணுவ மீள்ஆயுதமயமாக்கலுக்கு நிதி வழங்குவது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மிகக் கடுமையான சமூக தாக்குதல்களை உள்ளடக்கி இருக்கும்.

வாஷிங்டன் அதன் அணுஆயுத தளவாடங்களை நவீனப்படுத்த 1 ட்ரில்லியன் டாலர் செலவிட்டு வரும் நிலையில், ஜேர்மன் ஊடகங்கள் பேர்லின் எவ்வாறு அதன் சொந்த அணுகுண்டை பெறுவது என்று விவாதித்து வருகையில், மாக்ரோன் பிரெஞ்சு அணுஆயுதங்களை மீளபலப்படுத்துவது குறித்தும் வலியுறுத்தினார். “நமது மூலோபாய தற்காப்பு என்பது முடிவெடுப்பதற்கான மற்றும் நடவடிக்கை எடுப்பதற்கான நமது சுதந்திரம் மற்றும் நமது மூலோபாய சுயஅதிகாரத்தில் ஒரு முக்கிய கூறுபாடாகும்,” என்று குறிப்பிட்ட அவர், “அது பலவீனப்பட நாம் அனுமதிக்க முடியாது,” என்றார்.

மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா என இரண்டு பிரதேசங்களிலும் இராணுவ நடவடிக்கைக்கான பெரும் எண்ணிக்கையிலான சாத்தியமான இலக்குகளை மாக்ரோன் சுட்டிக்காட்டினார். “இந்த விளையாட்டிலிருந்து நாம் வெளியில் நிற்க முடியாது,” என்றவர் சிரியா குறித்து கூறியதுடன், அங்கே இஸ்லாமிய அரசு (IS) போராளிகளை அழிக்க அவர் அழைப்புவிடுத்தார். “ஐரோப்பிய நாடுகளின் உறுதி மற்றும் ஐக்கியம் மட்டுமே, ரஷ்யாவுடன் அவசியமான மற்றும் வெளிப்படையான பேச்சுவார்த்தையை பேணுவதற்கு நம்மை அனுமதிக்கும்" என்று அறிவித்து, அவர் ரஷ்யா பற்றியும் குறிப்பிட்டார்.

மாக்ரோனின் இராணுவ ஆயத்தப்படுத்தலின் மிக முக்கிய இலக்குகளில், பிரெஞ்சு மக்களே, அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கமே, ஒரு இலக்காக இருக்கப் போகிறார்கள். பிரான்சிற்குள் இராணுவ நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டுள்ள (பாதுகாப்புத்துறை, உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை உட்பட) வெவ்வேறு அமைச்சகங்களை இணைத்து, “உள்நாட்டு நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட செயல்பாடுகள் மற்றும் திட்டமிடல்களின் ஒரு மையம்" உருவாக்க மற்றும் பிரான்சின் வெவ்வேறு உளவுத்துறை சேவைகளின் தரவுகளை ஒருங்கிணைக்க அவர் முன்மொழிந்தார்.

இது சோசலிஸ்ட் கட்சியால் 2015 இல் அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது அமுலிலுள்ள அவசரகால சட்டத்திற்கு உதவியளிக்கும். இச்சட்டம் தான், சோசலிஸ்ட் கட்சியின் சமூகரீதியில் பிற்போக்கான தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக கடந்த ஆண்டு இளைஞர் மற்றும் தொழிலாளர்களின் பாரிய போராட்டங்களைக் மூர்க்கமாக ஒடுக்குவதை நியாயப்படுத்த ஒரு சாக்குபோக்காக இருந்தது. ஐரோப்பிய ஒன்றிய மூலோபாயவாதிகள் அவர்களது உள்நாட்டு இராணுவ திட்டமிடலின் மைய இலக்காக, வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதைக் குறித்து குறிப்பிட தயங்குவதில்லை.

2014 இல் "ஐரோப்பிய பாதுகாப்பு 2020 க்கான முன்னோக்குகள்" என்று தலைப்பிட்ட பாதுகாப்பு ஆய்வுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு பிரசுரித்த ஒரு நூலை மீளாய்வு செய்து, ஜேர்மன் வானொலி Deutschlandfunk குறிப்பிடுகையில், “கூட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையின் கட்டமைப்பிற்குள், பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளின் பொறுப்புகள் அதிகரித்தளவில் ஒன்றுகலக்கின்றன, மேலும் சமூக போராட்டத்தைக் கையாள்வதற்கான தகைமைகள் அதிகரிக்கின்றன. … லிஸ்பன் உடன்படிக்கையின் 222 வது ஷரத்தின் [கீ]ழ், நெருக்கடியின் போது ஐரோப்பிய ஒன்றிய அரசுகளுக்குள் இராணுவம் மற்றும் துணைஇராணுவ படைப்பிரிவுகளை நிலைநிறுத்துவதற்கான ஒரு சட்டபூர்வ அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.”

நூல் ஆசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் தோமஸ் ரீஸ் எழுதுகையில், “உலக சமூகத்தில் சமநிலையற்ற சமூக-பொருளாதார வர்க்கங்களின் மோதல்" தான் ஐரோப்பிய பாதுகாப்பிற்கு பிரதான அச்சுறுத்தலாகும் என்று எழுதினார்.

மாக்ரோனின் முன்மொழிவுகள் உலகளாவிய அளவில் முதலாளித்துவத்தின் திவால்நிலைமைக்குச் சான்று பகிர்கிறது. ஐரோப்பிய மட்டத்தில் மில்லியன் கணக்கான அல்லது பத்து மில்லியன் கணக்கான சிப்பாய்களைக் கொண்ட போர்களால் ஏற்படுமென அது முன்கணிக்கும் பாரிய நாசங்களில் இருந்து இலாபமடைய அதற்கு இன்னும் அதிகமான போர்க்களப் பலி படைகள் அவசியப்படுகிறது என்று, ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில், நிதியியல் உயரடுக்கு ஆட்சிக்குழு தீர்மானித்து வருகிறது. 2014 இல் ஜேர்மனியின் பாரிய மீள்-இராணுவமயமாக்கல் அறிவிப்புக்குப் பின்னர், வாஷிங்டனும் டொனால்டு ட்ரம்ப் தேர்வானதற்குப் பின்னர் அதன் கொழுத்த இராணுவ வரவுசெலவு திட்டத்தில் 10 சதவீத அதிகரிப்பை அறிவித்துள்ளது.

மாக்ரோன் முன்மொழிந்த இராணுவ தீவிரப்பாட்டை நடத்துவதன் மூலமாக, 1914 அல்லது 1939 ஐ போலவே, உலக போரை நோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கும் கீழ்நோக்கிய சுழற்சியில் பாரீஸ் அதுவே ஓர் உந்துசக்தியாக ஆகிவிடும். பிரான்ஸ் மிகப் பெரியளவில் இராணுவத்திற்காக அதன் மக்களை அணிதிரட்ட தயாரிப்பு செய்ய தொடங்கினால், இது ஐரோப்பாவின் ஏனைய நாடுகள் மீது அழுத்தத்தை மட்டுமே அதிகரிக்கும் என்பதோடு, அதை பின்தொடர்ந்து அவையும் அதேபோல செய்யும்.

மாக்ரோன் அழைப்பு விடுக்கும் இந்த வரைவு மற்றும் ஆயுத போட்டியானது, நேட்டோ மற்றும் ரஷ்யாவிற்கு இடையே "முழுமையான போர்" அபாயம் இருப்பதாக 2015 இல் ஒப்புக் கொண்ட ஹோலாண்டு மற்றும் ஒபாமாவின் கீழ், வெறுமனே நேட்டோ ரஷ்யாவின் மேற்கு எல்லைகளை ஒட்டி பாரியளவில் துருப்புகளை நிலைநிறுத்தி இருப்பதன் விளைவு மட்டும் அல்ல.

பிரதான சக்திகளுக்கு இடையிலான உறவுகள், இரண்டாம் உலக போருக்குப் பின்னரில் இருந்து அவற்றிற்கிடையே இருந்து வந்த உறவுகளிலேயே மிகவும் ஸ்திரமற்றதாக உள்ளன. மாக்ரோன் பிரான்சின் பிரதான கூட்டாளியாக்க விரும்பும் ஜேர்மனி, வட கொரியாவை மற்றும் அதேபோல மறைமுகமாக அதன் அண்டைநாடான சீனாவை போரைக் கொண்டு அச்சுறுத்தி வரும் ட்ரம்பால் வர்த்தக போர் கொண்டு அச்சுறுத்தப்பட்டு வருகிறது.

பிரான்ஸ் இளைஞர்களை எதற்குள் அனுப்ப பாரீஸ் தயாரிப்பு செய்து வருகிறதோ, உலகின் பிரதான அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான அந்த போர்களில் எத்தனை மில்லியன் அல்லது பில்லியன் மக்கள்  உயிரிழப்பார்கள் என்று மாக்ரோனை யாரும் கேட்கவில்லை. முதலாம் உலக போரின் போது Verdun இல், அல்லது இரண்டாம் உலக போரின் போது ஸ்ராலின்கிராட்டில் போரிட்டு உயிரிழந்த ஐரோப்பிய தலைமுறைகள் அனுபவித்ததோடு ஒப்பிடுகையில் இந்த இளைஞர்கள் அனுபவிக்கக்கூடிய இறப்பு விகிதங்கள் எவ்வளவாக இருக்கும்?

மாக்ரோனின் அறிக்கை பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் முட்டுச்சந்தை எடுத்துக்காட்டுகிறது. இத்தேர்தலில் நவ-பாசிசவாத வேட்பாளர் மரீன் லு பென்னை அல்லது பிற்போக்குவாத கோலிச வேட்பாளர்கள் அல்லது மாக்ரோன் போன்ற சோசலிஸ்ட் கட்சியுடன் தொடர்புபட்ட பல வேட்பாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையை பரந்துபட்ட மக்கள் முகங்கொடுக்கிறார்கள். அங்கு உண்மையில் எவ்விதமான மாற்றீடும் கிடையாது. மாக்ரோனின் கீழ் இருக்கக்கூடிய இத்தகைய ஒரு பிரான்ஸ் போருக்கு நிரந்தரமாக தயாராகவும் மற்றும் பொலிஸார், சிறப்பு படைகள், உளவாளிகள் மற்றும் தகவல் வழங்குபவர்களினதும் ஒரு நெருக்கமான வலையமைப்புகளால் கண்காணிக்கப்படும். பரந்த பெருந்திரளான தொழிலாளர்களின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், லு பென் கீழான ஒரு நவ-பாசிச அரசில் இருந்து ஏறத்தாழ வேறுபட்டதாக இருக்கப் போவதில்லை.