ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Dutch government bans Turkish ministers from speaking in Netherlands

துருக்கிய அமைச்சர்கள் நெதர்லாந்தில் உரையாற்றுவதற்கு டச்சு அரசாங்கம் தடை விதிக்கிறது

By Alex Lantier
13 March 2017

கடந்த வாரம் ஜேர்மனியில் பேசுவதற்கு உள்ளூர் ஜேர்மன் அதிகாரிகள் துருக்கிய அதிகாரிகளுக்குத் தடைவிதித்த பின்னர், இவ்வாரம் டச்சு அரசாங்கம் ஆத்திரமூட்டும் வகையில் இரண்டு துருக்கிய அமைச்சர்கள் நெதர்லாந்து நிகழ்வுகளில் பேசுவதற்குத் தடைவிதித்து, துருக்கி உடன் ஒரு மிகப்பெரிய இராஜாங்க எரிச்சலூட்டலை நடத்தியது.

ஜனநாயக உரிமைகள் மீதான இந்த தாக்குதல், புலம்பெயர்ந்தோர்-விரோத மற்றும் தீவிர வலது உணர்வுகளுக்கு முறையிடுவதன் மூலமாக தீவிர வலது வேட்பாளர் கீர்ட் வில்டர்ஸ் (Geert Wilders) தேர்தலில் வளர்ச்சியடைவதை தடுக்கும் முயற்சியாக, மார்ச் 15 தேர்தல்களுக்கு முன்னதாக பிரதம மந்திரி மார்க் ரூட்டே (Mark Rutte) இன் ஒரு பிற்போக்குத்தனமான முஸ்லீம்-விரோத நடவடிக்கையின் பாகமாக உள்ளது. இது நெதர்லாந்தில் துருக்கியர்களின் பேரணியைத் தடுக்க ரூட்டே "மிகவும் பலவீனமாக" இருப்பதாக வில்டெர்ஸ் குற்றஞ்சாட்டியதற்குப் பின்னர் வந்திருந்தது.

நெதர்லாந்து அதிகாரிகள் துருக்கியுடன் அதிகரித்த வார்த்தைச் சண்டை நடத்திய நிலையில், துருக்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் Mevlut Cavusoglu உம் மற்றும் குடும்பநல அமைச்சர் Fatma Betul Sayan Kaya உம் நெதர்லாந்திற்குள் நுழைவதிலிருந்தே தடுக்கப்பட்டனர். இவ்விரு அமைச்சர்களும் துருக்கிய ஜனாதிபதிக்கு முழு அதிகாரங்களையும் மாற்றியளிக்கும், ஏப்ரல் 16 இல் நடக்கவுள்ள, ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் அரசியலமைப்பு சம்பந்தமான சர்வஜன வாக்கெடுப்பில் நெதர்லாந்தில் வாழும் துருக்கியர்களை "ஆம்" வாக்களிக்க கோருவதற்காக கூட்டங்களில் பேச இருந்தார்கள். ஜேர்மனியில் உள்ள 1.4 மில்லியன் பேர் மற்றும் நெதர்லாந்தில் உள்ள பல நூறாயிரக் கணக்கானவர்கள் உட்பட ஐரோப்பாவில் உள்ள துருக்கிய வம்சாவளியினர் அந்த சர்வஜன வாக்கெடுப்பில் வாக்களிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர்.

சனியன்று ரோட்டர்டாமில் நடக்கவிருந்த ஆம் வாக்குகளுக்கு ஆதரவான ஒரு பேரணியில் Cavusoglu கலந்து கொள்ளவிருந்தார், ஆனால் அந்நிகழ்வின் உரிமையாளர் பாதுகாப்பு விடயங்களைக் காரணங்காட்டி அப்பேரணியை இரத்து செய்தார். இருந்தாலும் அங்கே அவர் வரவிருப்பதாக கூறி, அவர் நுழைவு மறுக்கப்பட்டால் நெதர்லாந்து மீது பொருளாதார தடை விதிக்க அதை Cavusoglu அச்சுறுத்திய போது, டச்சு மந்திரிசபை, துருக்கிய புலம்பெயர்ந்தோர் சமூகத்தில் எர்டோகனின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையிலான மோதல் அபாயங்கள் நிலவுவதாக காரணங்காட்டி, அவர் விமானம் தரையிறங்குவதைத் தடுத்தது. “டச்சு பொது இடங்கள் ஏனைய நாடுகளது அரசியல் பிரச்சாரங்களுக்கான இடமல்ல என்பதே எங்கள் கருத்து,” என்று ரூட்டே அறிவித்தார்.

எர்டோகன் இஸ்தான்புல்லில் ஆதரவாளர்கள் கூட்டத்திடையே டச்சு அரசாங்கத்தின் முடிவைக் கண்டித்து அறிவிக்கையில், “அவர்கள் மிகவும் நடுக்கத்தோடு கோழைத்தனமாக இருக்கிறார்கள். அவர்கள் நாஜி எச்சசொச்சங்கள், அவர்கள் பாசிசவாதிகள்,” என்றார். இனி டச்சு இராஜாங்க விமானங்கள் துருக்கியில் தரையிறங்குவதை துருக்கி தடுக்கும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஒருசில மணி நேரங்களுக்குப் பின்னர், கயா, ரோட்டர்டாமில் உள்ள துருக்கிய தூதரகத்தில் (சர்வதேச சட்டங்களின்படி பார்த்தால், ரோட்டர்டாம் துருக்கியின் இறையாண்மை பிரதேசமாகும்) உரையாற்ற தரைவழி மார்க்கமாக ஜேர்மனியிலிருந்து நெதர்லாந்திற்கு பயணித்தார். ஒரு அசாதாரண நடவடிக்கையாக, கயாவை கைது செய்ய மற்றும் அவரை நெதர்லாந்தில் இருந்து மீண்டும் ஜேர்மனிக்கே திருப்பி அனுப்ப ஆயுதமேந்திய டச்சு பொலிஸ் அனுப்பப்பட்டது.

“ஒட்டுமொத்த உலகமும் இந்த பாசிச நடைமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்! ஒரு பெண் அமைச்சருக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளவே முடியாது,” என்று அறிவித்து கயா ஒரு அறிக்கை வெளியிட்டார். “என்னை உள்நுழைய அனுமதிக்காததன் மூலமாக,” நெதர்லாந்து "சகல சர்வதேச சட்டங்களையும், தீர்மானங்கள் மற்றும் மனித உரிமைகளையும் மீறி உள்ளது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

துருக்கிய அமைச்சர்கள் அவமானப்பட்டது அவரது நவ-பாசிசவாத சுதந்திர கட்சிக்கு (PVV) ஒரு வெற்றி என்பதாக வில்டர்ஸ் அறிவித்தார். “பிரமாண்டம்! டச்சு தேர்தல்களுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னதாக PVV கட்சி மீதான இந்த பெரும் அழுத்தத்திற்கு நன்றி, நமது அரசாங்கம் இங்கே இந்த மண்ணில் துருக்கிய அமைச்சர்களை அனுமதிக்காது!!” என்றவர் ட்வீட்டரில் குறிப்பிட்டார். “எர்டோகனுடன் உடன்படும் நெதர்லாந்தில் வாழும் துருக்கியர்கள் அனைவருக்கும் நான் கூறுவது இது தான்: துருக்கிக்கே சென்று விடுங்கள், ஒருபோதும் திரும்ப வராதீர்கள்.”

துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி, துருக்கி மற்றும் முஸ்லீம்களைக் கண்டிக்கும் ஒரு வீடியோவையும் வில்டர்ஸ் பதிப்பித்தார். “நீங்கள் ஐரோப்பியர்கள் இல்லை, நீங்கள் ஒருபோதும் ஐரோப்பியர்களாக முடியாது. துருக்கி போன்றவொரு இஸ்லாமிய அரசு ஐரோப்பாவைச் சேர்ந்ததல்ல,” என்றார். “எங்களுக்கு கூடுதலாகவோ இல்லை குறைவாகவோ கூட இஸ்லாம் வேண்டாம். ஆகவே துருக்கியே, எங்களிடம் இருந்து விலகி இரு. இங்கே உன்னை வரவேற்க மாட்டோம்.”

எர்டோகனின் செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் கலின், “இஸ்லாம்-விரோத இனவாதிகள் மற்றும் பாசிசவாதிகளால் பாதிக்கப்பட்டிருப்பதற்காக, மற்றும் துருக்கி-நெதர்லாந்தின் நீண்டகால உறவுகளைச் சேதப்படுத்துவதற்காக டச்சு அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்,” என்று ட்வீட்டரில் எழுதி விடையிறுத்தார்.

இரண்டு அமைச்சர்கள் வெளியேற்றப்பட்டதற்காக ரோட்டர்டாமில் வசிக்கும் துருக்கிவாசிகள் போராடியதால் மோதல்கள் வெடித்தன, இஸ்தான்புல்லில் போராட்டக்காரர்கள் டச்சு தூதரகத்தின் மீது கற்கள் மற்றும் முட்டைகளை வீசி எறிந்தனர்.

பிரான்சில் மெட்ஸ் என்ற இடத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் Cavusoglu பேசுகையில் வருத்தம் தெரிவிக்க கோரியதுடன், துருக்கி பதிலடி கொடுக்குமென நெதர்லாந்தை எச்சரித்தார். எர்டோகனும் ஞாயிறன்று அதேபோன்ற எச்சரிக்கைகளை வெளியிட்டார். “புதன்கிழமை தேர்தலுக்காக உங்களால் துருக்கிய-டச்சு உறவுகளைத் தியாகம் செய்ய முடியுமானால், நீங்கள் அதற்கான விலையும் கொடுப்பீர்கள்,” என்றார். “நாஜிசம் செத்துவிட்டதாக நான் நினைத்திருந்தேன், ஆனால் அது என் தவறு தான். நாஜிசம் இன்னமும் மேற்கில் பரந்தளவில் உள்ளது. மேற்கு அதன் நிஜமான முகத்தைக் காட்டியுள்ளது,” என்றார்.

துருக்கி-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் நெருக்கடியானது இன்னும் தீவிரமடைய உள்ளது. நெதர்லாந்திற்கு எதிராக பொருளாதார தடைகளுக்கான சாத்தியக்கூறை உயர்த்திய துருக்கிய அதிகாரிகள், விடுப்பில் உள்ள துருக்கிக்கான டச்சு தூதர் "சில காலத்திற்கு" அங்காராவிற்குத் திரும்ப கூடாது என்று கூறினர். டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன் மற்றும் ஆஸ்திரியாவிலும் இப்போது துருக்கிய அதிகாரிகளது கூட்டங்கள் இப்போது இரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டேனிஷ் பிரதம மந்திரி லார்ஸ் ராஸ்முஸ்சென் (Lars Rasmussen) "ஹாலாந்து மீதான தற்போதைய துருக்கிய தாக்குதலின்" காரணமாக டென்மார்க்கிற்கான துருக்கிய பிரதம மந்திரி பினாலி யெல்ட்ரிம் இன் ஒரு திட்டமிட்ட விஜயத்தை நிராகரித்தார்.

ஞாயிறன்று காலை அவரது அரசாங்க நடவடிக்கைகளின் ஆத்திரமூட்டும் குணாம்சத்தை சூசகமாக ஒப்புக் கொள்ளும் விதத்தில் ரூட்டே கூறுகையில், துருக்கி உடனான பதட்டங்களை அவர் "தணிக்க" விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் எர்டோகனிடம் அவர் வருத்தம் தெரிவிப்பது மீதான என்ற எந்தவொரு கருத்தையும் அவர் "இயல்புக்கு மீறிய" கோபத்துடன் பின்வருமாறு கூறி நிராகரித்தார்: “நேற்று நம்மை பாசிசவாதிகள் என்றும், நாஜிக்களின் ஒரு நாடு என்றும் கூறிய மனிதர் இவர் தான். நான் தீவிரத்தைக் குறைக்க இருக்கிறேன் தான், ஆனால் வருத்தங்களைத் தெரிவித்து அல்ல. உங்களுக்கு என்ன புத்தி பேதலித்துவிட்டதா?” என்றார்.

புலம்பெயர்ந்தோர்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத உணர்வுகளுக்கு முறையிட்டு, துருக்கிய அதிகாரிகளின் பயணத்தையும் மற்றும் திட்டங்களைக் குறித்து பேசுவதையும் ஐரோப்பிய அரசாங்கங்கள் முடக்குவதானது, பேச்சு சுதந்திரம் மீதான ஒரு மூர்க்கமான தாக்குதலாகும். “கூடுதல் அதிகார ஜனாதிபதி பதவி" என்றழைக்கப்படுவதை அமைப்பதற்கான எர்டோகனின் சர்வஜன வாக்கெடுப்பு, ஐயத்திற்கிடமின்றி துருக்கியில் ஜனாதிபதியின் சர்வாதிகாரத்தை அமைப்பதற்கான ஒரு பிற்போக்குத்தனமான முயற்சி தான் என்றாலும், இது குறித்து முடிவெடுக்க வேண்டியது டச்சு அதிகாரிகளோ, டேனிஷ் அதிகாரிகளோ அல்லது ஏனைய ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளோ கிடையாது, அது துருக்கி மக்களின் விடயமாகும்.

தவறுக்கிடமின்றி ரூட்டேயின் தலையீடு அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அவரது சிக்கனக் கொள்கை மற்றும் போருக்கான கொள்கைகள் மீது ஆழ்ந்த மக்கள் வெறுப்பால் குறிக்கப்பட்ட தேர்தல்களுக்கு இடையே, அவர் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும் மற்றும் அரசியல் நிலவரத்தை தீவிர வலதிற்கு நகர்த்தவும் வில்டர்ஸைப் போலவே அதே மாதிரியாக பிற்போக்குத்தனமான தப்பெண்ணங்களை தூண்டிவிட்டு, அதிகரித்தளவில் முஸ்லீம்-விரோத வாய்சவுடால்களின் அடிப்படையில் சென்று கொண்டிருக்கிறார்.

ஜனவரியில் ரூட்டேயின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் கட்சி (VVD) வில்டர்ஸின் PVV கட்சியை விட முன்னணியில் இருந்த நிலையில், புலம்பெயர்ந்தவர்கள் டச்சு சமூகத்துடன் முழுமையாக ஒருங்கிணைய வேண்டும் அல்லது நெதர்லாந்தை விட்டு வெளியேற வேண்டுமென கோரி ஒரு அசாதாரண பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டார். “எங்களின் மதிப்புகளை விமர்சித்து, அவற்றை ஏற்க மறுப்பவர்கள் முறையாக நடந்து [கொள்ள வேண்டும்] அல்லது வெளியேறி விட வேண்டும்,” என்று ரூட்டே அறிவித்தார். “நீங்கள் இந்நாட்டை அடிப்படையிலேயே நிராகரிக்கிறீர்கள் என்றால், பின் நீங்கள் வெளியேறுவதையே நான் விரும்புவேன்,” என்றார்.

நெதர்லாந்தில் வில்டர்ஸ் மற்றும் பிரான்சில் மரீன் லு பென் போன்ற நவ-பாசிசவாதிகளுக்கு வாக்காளர்களிடையே பலம் அதிகரித்து வரும் முக்கிய தேர்தல்களை நெதர்லாந்தும் பிரான்சும் சந்திக்க இருக்கையில், ஐரோப்பிய முதலாளித்துவ அரசியலின் அனைத்து பக்கங்களும் தீவிர வலதை நோக்கி பரந்தளவில் மாறி வருவதையே இதுபோன்ற கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

ஜேர்மனியில் இடது கட்சி தலைவர் சாரா வாகன்கினெக்ட் (Sahra Wagenknecht) துருக்கி அரசாங்கம் மீதான ரூட்டேயின் பிற்போக்குத்தனமான தாக்குதலுடன் தன்னைத்தானே அணிசேர்த்துக் கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவர் அறிவிக்கையில், “ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்து அரசாங்கங்கள் அவற்றின் நாடுகளில் முடிவெடுத்ததைப் போலவே, சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சிங்மார் காப்ரியேலும் சர்வாதிகாரம் மற்றும் மரண தண்டனைக்கான எர்டோகனின் பிரச்சார பயணத்தை, குறைந்தபட்சம் ஜேர்மன் மண்ணிலாவது, நிறுத்த வேண்டிய பதவிகளில் உள்ளனர்,” என்றார்.